ஹிக்விட்டா (Higuita -ஸ்பானிஷில் இகீதா) என்ற பெயரே கிறுக்குத்தனம் என்பதற்கு இணைச்சொல்லாக ஆகுமளவுக்கு ஒரு சுவாரசியமான கிறுக்குத்தனத்துடன் ஆடியவர் கொலம்பியாவின் கோல்கீப்பர் ரெனே ஹிக்விட்டா. எல் லோகோ (El loco), பித்து பிடித்தவன் என்று ஃபுட்பால் ரசிகர்கள் அவரைச் செல்லமாக அழைத்தனர். ஆட்ட விமரிசகர்கள் ’மாஸ்டர் அஃப் தெ அன்ப்ரெடிக்டபில்’ என்று பட்டம் சூட்டினர். தோள் வரை நீண்ட, சுருண்ட தலைமுடியுடன் எண் ஒன்று என்று இலக்கமிட்ட ஜெர்ஸி அணிந்த இவர் ஆடும் எல்லா மாட்சுகளும் அதிரடியாய் இருக்கும். முன்னே பாய்ந்து பின்னங்கால்களை தேள்கொடுக்கு போல மடித்து ஸ்கார்பியன் கிக் என்ற முறையில் இவர் பந்தைத் தடுப்பது பார்வையாளர்கள் எத்தனை முறை பார்த்தாலும் அலுக்காத அபாரமான வித்தை. கோல்கீப்பர்கள் சாதாரணமாய் கோல்போஸ்டினருகே நின்றுகொண்டு கோல் வந்தால் தடுப்பதை மட்டுமே தம் வேலை என்று விலகி நின்று ஒரு சாட்சி போல ஆட்டத்தைக் கவனித்துக் கொண்டு இருப்பர். ஆனால் ஹிக்விட்டா தன்னை ஒரு ஸ்வீப்பர் கீப்பராய் பாவித்து, மற்ற கோல்கீப்பர்கள் மைதானத்துள் செல்லாத இடங்களுக்கெல்லாம் போவார். கதையில் சொல்வதுபோல:
“ஹிக்விட்டா எந்தவித கூச்சமும் இல்லாமல் நிகழ்ச்சிகளில் பிரவேசிக்கிறான். புதிய அட்சரேகைகளைக் கண்டுபிடிக்கும் மாலுமியைப் போல கோல்கீப்பர்கள் இதுவரை பார்த்திராத மைதானத்தின் மத்திய பாகத்துக்கு பந்தை இடவலமாக உருட்டி அவன் முன்னேறுகிறான்.”
மற்ற கோல்கீப்பர்கள் போலன்றி ஹிக்விட்டா ஃப்ரீ கிக்குகள், பெனல்டி கிக்குகளுக்கும் முன்வருவார்.
தன்னை ஒரு வரையறைக்குள் குறுக்கிக் கொண்டு தனக்குத் தரப்பட்ட அந்த ஒரு குறிப்பிட்ட வேலையை மட்டுமே கவனித்துக் கொண்டிருக்காமல், ஆட்டத்தில் முழுமையாய் பங்கெடுத்து, அதை தானும் முழுமையாய் அனுபவித்து, தான் பங்கேற்ற ஒவ்வொரு ஆட்டத்தையும் பார்வையாளர்களின் கற்பனையை மீறிய ஒரு அற்புத அனுபவமாய் ஆக்கியவர் ஹிக்விட்டா.
சரி, கண்டிப்பான விதிமுறைகள் கொண்ட பாதிரியார் வாழ்வுக்கும் ஹிக்விட்டா போன்ற கட்டுக்குள் அடங்காத ஒரு கிறுக்கனின் ஆட்டத்துக்கும் என்ன சம்பந்தம்? ஆட்ட களத்தின் விளிம்பில் ஒரு சாட்சி போல நின்று கொண்டு ஆட்டத்தின் போக்கைக் கூர்ந்து கவனிக்கும் கோல்கீப்பரின் தனிமை பாதிரியின் உத்தியோகத்திலும் உண்டு. கோல்கீப்பரின் சாத்தியங்களை பாதிரி கற்பனை செய்து பார்க்கிறார்:
“ஒரு தடவையல்ல, பல தடவை. மற்றவர்களால் காட்டிக்கொடுக்கப்பட்டு, இரண்டு கைகளையும் விரித்து, கோல்கீப்பர் பெனல்டி கிக்கிற்காக காத்திருக்கிறான்.
“முதல் சில நாட்கள் கோல்கீப்பர் மாற்றமில்லாமல் ஏசு கிருஸ்துவாயிருந்தான். ஒண்ணாம் நம்பர் ஜெர்ஸி அணிந்த கர்த்தா பல பந்துகளை அடித்து மாற்றினான். சில தினங்களுக்குப் பிறகு திடீரென்று கோல்கீப்பர் கோலியாத்தாக மாறினான். எதையாவது முணுமுணுக்கக்கூட அருகே ஆளின்றி, ஆகாயத்தை முட்டும் தனிமையில், கவணில் இருந்து பறந்து வரும் பெனல்டி கிக்கிற்காக காத்திருந்தான் கோல்கீப்பர். அவனுடைய பல்வேறு சாத்யதைகள் தினந்தோறும் வளர்ந்துகொண்டே இருந்தன.”
இக்கதையின் பாதிரியார் கிவர்கீஸும் முதலில் தன் அமைப்பின் விதிமுறைப்படி லூஸியின் துயரத்தைக் கேட்டு ஆறுதலாய் நாலு வார்த்தைகள் சொல்வது, அவருக்காக ஜெபிப்பது என்று மட்டுமே இருக்கிறார். விஷயம் கட்டுக்கடங்காமல் போய், அந்தப் பெண்ணுக்கும் தற்காப்புக்கு வேறுவழி இல்லாமல் போகையில் அவரை வெகுவாய் பாதித்த ஹிக்விட்டாவின் வழியில் களத்தில் இறங்கி அவளைக் காப்பாற்றுகிறார். இப்போது அவரின் இளம்வயது கால்பந்து பயிற்சி அவருக்குக் கைகொடுக்கிறது:
”கீவர்கீஸ் காலை உயர்த்தி உதைத்தார். அகன்ற மார்பில் பந்தை ஏந்தி தலையினால் முட்டினார். கால் உயர்ந்து அடுத்த அடி விழுந்தது. மீண்டும் மீண்டும், திரும்பவும் ஸ்லோமோஷனில் அடி தொடர்ந்தது.
”லூஸியை அவள் தங்கியிருந்த வீட்டின்முன் இறக்கி விட்டுவிட்டு ஃபாதர் தம் அறைக்குத் திரும்பினார்- அமைதியாக, எந்தவித பரபரப்பும் இல்லாமல்.”
ஹிக்விட்டா போல், மரபுக்கு முரணாக, தனக்கு விதிக்கப்பட்ட வேலையின் எல்லைகளை மீறி அனாவசியமான துணிச்சலுடன் செயல்படும் ஒரு ஆட்டக்காரரை கீவர்கீஸுக்கு அகத்தூண்டலாகக் காட்டுவதில் கதாசிரியரின் நோக்கம் என்னவாய் இருந்திருக்கக்கூடும்? அதே உலகக் கோப்பையில் வழக்கமான கோல்கீப்பருக்கு அடிபட்டதால் அவருக்குப் பதிலாய் ஆட வந்து பெனால்டி கிக்குகளை வெற்றிகரமாகத் தடுத்தே ஆர்ஜண்டினாவை இறுதி கட்டத்துக்குக் கொண்டு சென்ற கொய்கொச்சியா (Sergio Javier Goycochea) ஓரு ஹீரோவாகக் கொண்டாடப்பட்டவர். ஹிக்விட்டாவோ தன் அதிரடி ஆட்டத்தால் கொலம்பியா கோப்பையிலிருந்தே வெளியேறக் காரணமாக இருந்தவர்.
வாழ்விலும் இப்படித்தான். நம்மில் ஒவ்வொருவரும் நம் கடமைகளை முழு அர்ப்பணிப்புடன் சரியாய் செய்தாலே போதும் என்றுதான் நம்மில் பலரும் நினைக்கிறோம். ஆனால் ஹிக்விட்டா போன்ற சில கிறுக்கர்கள் தன் பாதுகாப்பு வளையத்தின் கதகதப்பைவிட்டு வெளியேறி வெறும் பரபரப்பான ஓட்டமாய் இருப்பதை ஒரு அற்புத நிகழ்வாக மாற்றி விடுகிறார்கள். அதனால்தான் ஆட்டத்தை விட்டு ஓய்வுபெற்ற பல வருடங்களுக்குப் பின்னும் அவர்களை ஒரு பிரமிப்புடனும், ஏக்கத்துடனும், ஒரு புன்சிரிப்புடனும் நாம் நினைவு கூர்கிறோம். நம்மில் சிலருக்கே அப்படி வாழும் ஊக்கமும், துணிச்சலும் இருக்கிறது. எனக்கெதற்கு என்றில்லாமல் நடு மைதானத்துக்குள் வந்து விளையாடவும், ஃப்ரீ கிக், பெனல்டி கிக்குக்கும் முன்வரும் கோல்கீப்பராய் இருக்கவும், வாழ்வின் மேல் ஈடுபாடு அல்லது சமயங்களில் மானுடத்தின் மீது கவலையும் பற்றும் தேவை. மேலோட்டமாகப் பார்த்தால் இதுதான் கதையின் மையம்.
தன்னுடைய மதத்திலிருந்து மட்டுமே தன் வாழ்நெறிக்கான வழியைத் தேடக்கூடிய ஒரு பாதிரியாருக்கு ஒரு கட்டத்தில் ஹிக்விட்டா போன்ற ஒரு மரபு மீறிய ஆட்டக்காரரின் பாணி முக்கியமான அறத் தேர்வுக்குத் திசைகாட்டியாகிறது என்பது சுவாரசியமான திருப்பம்.
இந்தக் கதை வாழ்க்கையையும் ஃபுட்பால் ஆட்டத்தையும் ஒரு ரொமாண்டிக் கண்ணாடியின் ஊடாக நோக்குவதாக சிலருக்குத் தோன்றலாம். ஹிக்விட்டாவின் அதிரடி ஆட்டம் கல்லூரி மாணவர்கள் மோட்டார் பைக்கில் வீலிங் செய்வது போன்ற ஒரு ஆபத்தான, அர்த்தமற்ற அத்துமீறலாகப் படலாம். பலன்களைப் பற்றிச் சிந்திக்காத சூதாட்டமாகக்கூடத் தோன்றலாம். தர்க்கரீதியில் பார்த்தால் வாழ்க்கைக்குத் தேவை கோய்கொச்சியா போன்றவரின் அணுகுமுறைதான் எனப்படும். ஹிக்விட்டாவின் அதிரடி ஆட்டம் கொலம்பியா ’90 உலகக்கோப்பையிலிருந்து வெளியேறக் காரணமானது. ஆனால் கதையில் அதே அணுகுமுறை கீவர்கீஸுக்கு ஆபத்தில் இருக்கும் ஒரு அபலை ஆதிவாசி பெண்ணின் வாழ்வை மீட்க தன் பாதுகாப்பு அங்கியை அவிழ்த்துவிட்டுக் களத்தில் குதிக்கத் தூண்டுகிறது. ஆட்டத்தில் தோற்ற ஒரு உத்தி இங்கே பாதிரியாருக்குக் கைகொடுக்கிறது.
கதையை வேறொரு கோணத்தில் நோக்குகையில், இங்கு ஆதிவாசிப் பெண்ணைக் காப்பாற்ற ஒரு கிருஸ்தவப் பாதிரியார் தன் மேலங்கியைக் களைவதில் லிபரேஷன் தியாலஜி சார்ந்த அணுகல் தெரிகிறது. சமூகத்தில் அவலநிலையில் இருப்பவர்களை அவர்களை ஒடுக்குபவர்களிடமிருந்து விடுவிக்க வேண்டிய அறப் பொறுப்பு சர்ச்சுக்கு உண்டு என்ற சிந்தனை இது. ஒரு பாதிரி, ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தைக் காட்டுபவராய் நம்மால் கருதப்படுபவர், மற்றவர்களின் துன்பத்தால் பாதிக்கப்பட்டு அடிதடியில் இறங்குவதில் பல தார்மீகச் சிக்கல்கள் இருக்கின்றன. இதற்கான விடையை அவர் எப்படிக் கண்டடைகிறார் என்பதை அவரது மனவோட்டங்களை அதன் அத்தனை குழப்பங்களோடும் விவரித்து அணுகுவதை சாமர்த்தியமாய்த் தவிர்த்து ஹிக்விட்டா என்ற கோல் கீப்பரை நம் கண் முன் நிறுத்தி, அவரை ட்ரோஜன் குதிரை போல பயன்படுத்தி கீவர்கீஸ் வன்முறையில் இறங்குவதை நாம் ஏற்கச் செய்கிறாரோ கதாசிரியர் என்றும் தோன்றுகிறது.
விவிலிய நூல், ஒரு டெலிவிஷன் காட்சி, விளையாட்டுக் குழு, மதம், ஒரு பெண்ணின் தனிவாழ்வுப் பிரச்சினை என்று பல தனிப்பாதைகளில் கதையை ஓட்டி ஒரு சமத்காரமான வாதத்தால் முடிவை ஏற்கக் கொணர்கிறார் மாதவன். இத்தகைய கதை சொல்லும் நுட்பம் இன்றைக்கு பழகிய ஒன்றானாலும் அன்றைய கட்டத்தில் புதுமையாக இருந்திருக்கலாம்.
இந்தக் கதையை இன்னொரு கோணத்திலும் வாசிக்க முடியும். அநீதியைக் கண்டு அற உணர்ச்சி மேலோங்கிய ஒரு கண நேர உந்துதலில் கீவர்கீஸ் இந்த தார்மீக உத்வேகத்தைப் பெற்றுவிடவில்லை. சிகரெட்டால் சுட்டு சித்திரவதை செய்யப்பட்ட பெண்ணுக்குக்கூட அவர் உதவ மறுக்கிறார். ஆனால் உண்மையில், தன் செயலின்மையை அவராலேயே தாங்க முடியாமல் போகிறது -அவர் போய் வற்புறுத்தினால் போலிஸ் வந்து இந்த ஜப்பாரை கெடுபிடி செய்து வழிக்குக் கொண்டு வந்திருப்பார்கள். ஆனால் லூஸி அவரைப் போலிஸிடம் புகார் கொடுக்க உடன் வரும்படி வேண்டுகையில் அதைத் தவிர்த்துவிடுகிறார்.
‘ஜப்பாரை விட போலீஸிடம் எனக்கு அதிக பயம்.’
‘அப்படிச் சொன்னால் வேற வழி?’
‘ஃபாதர் என்கூட…’
‘நீ பயப்படாதே. நான் போகிறேன்.’
அல்லது அந்த சமூகத்திலிருந்து அத்தனை பெரிய தில்லியில் அரசியல் அமைப்புகளோ, சமூக அமைப்புகளோ இராதா? அவர்களிடம் சொல்லி இந்த வில்லனை உதைக்க வழி செய்திருக்க முடியாதா இவரால்? சந்தால் சமூகத்தினர் நிச்சயம் தில்லியில் இருப்பார்கள். ஏன், தில்லியில் மலையாளக் கிருஸ்தவர்களுக்கா குறைவு? அவர்களிடம் போய் உதவி கேட்கவா முடியாது?அல்லது முஸ்லிம் மதப் பிரசாரகர்கள் யாரிடமாவது அல்லது ஜமாஅத்திடம் பேசியாவது இதற்கு ஒரு வழியை எப்போதோ அவர் தேடி இருக்க முடியும். வழி பிறக்கிறதோ இல்லையோ முயற்சியாவது செய்திருக்கலாம். அதெல்லாமில்லை. இவர் அந்தப் பெண்ணைப் பார்த்ததும் ஒளிந்து கொள்கிறார். அது நிச்சயம் உள்ளே குடையும். கதாசிரியர் அந்தக் குடைச்சலை சித்திரிக்கவோ, எந்த வழியிலும் காட்டவோ இல்லை.
லூஸிக்கு உதவ இத்தனை வழிகள் இருந்தும் கீவர்கீஸ் அங்கியை கழற்றி, தானே களத்தில் இறங்கத் தீர்மானித்ததன் காரணம் இளம்பிராயத்தில் பேரார்வமாய் இருந்து இடையில் அகாலமாய் அறுபட்டுப் போன ஃபுட்பால் பயிற்சியும், ஹிக்விட்டாவின் செயல்பாடு கொடுத்த ஊக்கமும் மட்டுமேவா? இல்லை. அவரது தந்தையுடன் இவருக்கிருந்த பிரச்சினைக்கு இந்தப் பெண் ஒரு தீர்வாகிறாளா?. இவருக்குஒரு முன்னகர்தலைக் கொணர்தல் மூலம், அவளும் பாவத்தில் விழாமல் காப்பதன் மூலம், பாதிரியார் தன் சிக்கல்களுக்கு ஒரு தீர்வு பெறுகிறார். அந்த தருணத்தில் பாதிரியார் இத்தனை காலம் சிலுவையில் அறைந்த மனிதனாகத் தன்னை செயலற்றதாக்கி இருந்த பல பழைய உளைச்சல்களிலிருந்தும் விடுபெறுகிறார். அப்பா கால்பந்தாட்டத்தைச் சூதாட்டமாக அணுகாமல் ஒரு தீர விளையாட்டாக அணுகச் சொன்னதை மறுத்து கிளர்ச்சிக்குப் பயன்படுத்தியதை, இளங்கலை வகுப்பில் தோற்றபோது தக்க தண்டனையாக உணர்கிறாரோ என்னவோ. ஆனால் அங்கு தான் பாதை தவறிய ஆடு என்று உணர்ந்து ‘பாதைக்கு’ ஒரு பிராயச் சித்தமாகத் திரும்புகிறார்.
“பழைய புகைப்படங்களின் மஞ்சள் நிற நினைவில் பி.டி.மாஸ்டர் தூரத்தில் ஒரு கமுகு மரத்தில் சாய்ந்து நிற்கும் காட்சி கண்களின் ஓரத்தில் ஆடைபடிந்து கிடக்கும்போதே கீவர்கீஸ் காலை உயர்த்தி உதைத்தார்.”
மலையாள சிறுகதைகளின் நூறாண்டுப் பயணத்தில் எழுதப்பட்ட மிகச் சிறந்த கதையாய் விமரிசகர்களாலும், இலக்கிய ஆர்வலர்களாலும் தெரிவு செய்யப்பட்ட கதை இது. இந்தக் கதையைப் பல கோணங்களில் வாசிக்க முடிகிறது. மரபை மீறிய அணுகல், பாதுகாப்பு வட்டம் பற்றிய அலட்சியம் கொண்ட ஒருவனை முன்னிறுத்தி செயலூக்கத்தைக் கொடுக்கும் கதை என்று வாசிக்க இடம் தருகிறது. இதனால்தானோ என்னவோ கேரளப் பள்ளிகளில் எட்டாம் வகுப்பிற்கு இச்சிறுகதை பாடமாக வைக்கப்பட்டுள்ளது. இன்னொரு கோணத்தில் நியாயமான வன்முறையும் தவறில்லை என்ற தென்னமெரிக்க லிபரேஷன் தியாலஜியை முன்னிருத்துவதாக வாசிக்க இடம் கொடுக்கிறது, வேறொரு கோணத்தில், கிறித்தவ அமைப்பினருக்கு இது அவர்களின் மதச் சடங்குகளையும் பாதிரிகளையும் சிறுமைப்படுத்தும் கதையாக வாசிக்கவும் இடம் தருகிறது. இந்தச் சிறுகதை சர்ச்சுக்கு எதிரானது என்று கேரளத்தில் பல சர்ச் நிர்வாகங்கள் கல்வித்துறைக்குத் தம் எதிர்ப்பை தெரிவித்து இக்கதையை நீக்கக் கோரின.
இவை போதாதென்று, ஒரு நண்பரிடம் இந்தக் கதையைப் பற்றி இத்தனையும் பேசினேன். பதிலுக்கு, “இந்தக் கதைக்கு இவ்வளவு செலவழித்திருக்கிறீர்களா? இதன் டெக்னிக் ஒரு வேளை அந்தக் காலத்தில் புதுமையாக இருந்திருக்கலாம். இப்போ அரதப் பழசு. கதை மாந்தரின் மனோதத்துவமும் சரியாய் இல்லை. ப்ரெடிக்டபிள், சாது மிரண்டு ஹீரோவாகும் கதை. ஜப்பார், பாதிரி என்கையில் ஒரு சிலுவைப் போர்? அங்கியைக் கழற்றிய பாதிரி அப்புறம் ஜப்பாரிடமிருந்து வாழ்நாளெல்லாம் லூஸிக்கு பாதுகாப்புக் கொடுக்கப் போகிறாரா? ராஜேஷ் குமார் கதைகள் இதைவிட நன்றாக இருக்கும்,” என்று சொல்லிவிட்டார்!
கதை சொல்லப்பட்ட நுட்பத்தின் புதுமை 22 வருடங்களுக்குப் பின் படிக்கையில் அரதப்பழசாகத தோன்றுவதற்குக் காரணம் பலரும் இந்தப் பாணியை கடைபிடிக்க ஆரம்பித்ததாகவும் இருக்கலாம். கதை மாந்தரின் முடிவுகளிலும், மனோதத்துவத்திலும் இத்தனை புதிர்கள் இருந்தும் கதை இப்படி பல கோணங்களிலும் அதைச் சிந்திக்க வைத்திருக்கிறது. இதுவுமே ஒரு புதிர்தான்.
எந்த ஒரு புனைவும் ஒரு புதிர். அவரவர் சார்பு நிலைகளுக்கு ஏற்ப அதைப் புரிந்து கொள்கிறோம், அதன் படிப்பினையை எடுத்துக் கொள்கிறோம். எது சரி எது தவறு எது பொருத்தம் எது பொருந்தாது என்று யோசிக்கும்போது குழப்பம்தான் மிஞ்சுகிறது. கதையை முழுமையாய் புரிந்து கொள்ள முற்பட்டு வெவ்வேறு கோணங்களில் அதை அணுகியும், ஹிக்விட்டா ஆட்டத்தை அணுகிய முறை வாழ்வில் பின்பற்றக்கூடியதா, கீவர்கீஸ் லூஸியின் பிரச்சினையைத் தீர்க்க தெரிவு செய்த வழிமுறை சரியானதா என்பது பற்றிய ஒரு நிச்சயமற்ற நிலையைத்தான் அடையமுடிகிறது. கதையில் வரும் வாக்கியம் போல “கோல்கீப்பர் பெனல்டி கிக் எல்லாம் பிடித்துவிட்டான் என்றாலும் ஒன்றன்பின் ஒன்றாக பந்துகள் அனைத்தும் அவனுடைய கையிலிருந்து நழுவி விழுந்தன.’ இதைப்போல ஒவ்வொரு கோணத்திலும் இதை அணுகுகையில் எதையோ பிடித்துவிட்டதாகத் தோன்றினாலும் கடைசியில் வாசகன் உணர்வது அது கை நழுவி விழுவதைத்தான்.
ஆனால் ஒரு உருவம் என் மனதில் தொடர்ந்து நிழலாடுகிறது – தன் பாதுகாப்பு வளையத்தை விட்டு வெளியே வந்து பந்தைச் சந்திக்கும் ஹிக்விட்டா. அவனது செயலின் பொருள் என்ன? கீவர்கீஸின் செயலின் பொருள் என்ன? ஒரு கதையை முழுமையாய் புரிந்து கொள்ள முற்பட்டு வெவ்வேறு கோணங்களில் அதை அணுகி, நிச்சயமற்ற ஒரு நிலையை அடைந்து, எந்த ஒரு முடிவோ நம்பிக்கையோ தரும் பாதுகாப்பு இல்லாமல் நானும் இந்தக் கதையுமாக தனித்து நிற்கிறோமே இதன் பொருள்தான் என்ன?
‘அமைதியாக, எந்தவித பரபரப்பும் இல்லாமல் கோல் போஸ்டுக்குத் திரும்புகிறான் ஹிக்விட்டா.”