வாசகர் மறுவினை

சொல்வனம் ஆசிரியருக்கு,
சொல்வனம் இதழ் 79-ல் திரு.பஞ்சநதம் எழுதியிருந்த “கொன்று தீர்க்கும் நுண்ணுயிர்கள் – வரமும், சாபமும்” என்ற அறிவியல் கட்டுரை படித்தேன். இரத்த வெள்ளையணுப் புற்றுநோய்க்கான புதுமையான சிகிட்சை முயற்சியால் உயிர் பிழைத்த அமெரிக்கச் சிறுமி பற்றிய முக்கியமான செய்தியை வாசகர்களுக்கு அறிமுகப்படுத்தியிருந்தார்.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் அந்தச் செய்தி அமெரிக்கப் பத்திரிக்கைகளில் வெளிவந்த உடனே கணினி மென்பொறியாளரான என் நண்பர் ஒருவர் மிகுந்த உற்சாகத்துடன், “கணிப்பொறிகளை வைரஸ் மூலமாக ‘ஹேக்’ செய்வதைப் போல உயிர் அறிவியல் விஞானிகள் ஒரு வைரஸைக் கொண்டு ஒரு மனித உடலையே ஒட்டுமொத்தமாக ஹேக் செய்துவிட்டனர்” என்றார்.
அவரது உற்சாகத்துக் காரணம், பெரும்பாலான பரப்பியல் அறிவியல் கட்டுரைகளிலும் -அதை இன்னும் கொஞ்சம் எளிமையாக்கி வெளியிடும் செய்தித்தாள் பத்திகளிலும் “உயிர்க்கொல்லியான எச்.ஐ.வி வைரஸைப் பயன்படுத்தி இரத்தப் புற்றுநோயை குணப்படுத்தி”யதாகவே எழுதப்பட்டிருந்தது தான். பரப்பியல் அறிவியல் கட்டுரைகளின் நோக்கம், கவர்ச்சியான கட்டுரைத் தலைப்புகள் மூலம் அறிவியல் துறை சாராத வாசகரையும் ஈர்த்து அறிவியல் செய்திகளைப் பரப்புவதே என்றாலும், சில நேரங்களில் அது முற்றிலும் தவறான புரிதலுக்கும் இட்டுச் சென்று விடும். அத்தகைய பிழையான புரிதல், எச்.ஐ.வி. கிருமியைக் கொண்டு இரத்தப் புற்றுநோயை குணப்படுத்தியதாக வந்த செய்தியில் என் நண்பர் உட்பட பலரிடமும் பரவலாக சென்று சேர்ந்தது. திரு.பஞ்சநதம் எழுதிய கட்டுரையிலும் அந்தத் தாக்கம் இருந்தது.
பஞ்சநதமும் //இவை நேரடியான எய்ட்ஸ் வைரஸ் (அதி நுண்ணுயிரி) அல்ல. அந்த அதி நுண்ணுயிரியைச் செயலிழக்கச் செய்து மறு அமைப்பு செய்யப்பட்ட அதி நுண்ணுயிரிகள். இவை புற்று நோய் உயிரணுக்களை உயிர்மரபணு அளவில் சென்று கொல்லும் என்று எதிர்பார்க்கப்பட்டது.// என்று எழுதி, ‘நுண்ணுயிரிச் சிகிச்சை’ என்றே குறிப்பிட்டிருந்தார். ஆனால், உண்மையில் அது அப்படி அல்ல.
அந்த சிகிச்சையின் சாகசம் உண்மையில் எச்.ஐ.வி. வைரஸ் பயன்படுத்தப்பட்டது அல்ல. அது புதுமையும் அல்ல. ரொம்ப காலமாகவே வைரஸ்கள் நமக்கு தேவையான மரபணுக்களை இன்னொரு செல்லுக்குள் செலுத்தப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. எச்.ஐ.வி உட்பட ரெட்ரோவைரஸ்கள்(Retroviruses), அடினோவைரஸ்கள் (Adenoviruses) போன்ற பல வைரஸ்கள் சர்வசாதாரணமாகப் பயன்படுத்தப்படுகின்றன. அந்த மருத்துவ சிகிட்சையில் மரபணுவைக் கொண்டு சேர்க்க வேண்டிய இலக்கு (T cells) T-வெள்ளை அணு என்பதால், இயற்கையாகவே அவற்றை மட்டுமே குறிப்பிட்டுத் தாக்கக்கூடிய எச்.ஐ.வி பயன்படுத்தப்பட்டது.
உயிரின் அடிப்படை அலகான செல்கள் புதிய செல்களைத் தோற்றுவிப்பதற்காகப் பிளந்து பெருகுவது ஒரு கட்டுப்பாட்டுக்குள் இருக்கிறது. புற்றுநோய்களில் செல்கள் இந்த ஆதாரமான கட்டுப்பாட்டை மீறி முடிவற்று பிளக்க ஆரம்பிக்கின்றன. இரத்தத்தில் உள்ள வெள்ளையணுக்களில் இந்த கட்டற்ற செல் பிளவு உண்டாகும் போது அது இரத்தப் புற்றுநோய் எனப்படுகிறது. இரத்த வெள்ளையணுக்கள் நோயெதிர்ப்பில் மிகமுக்கிய பங்கு வகிக்கின்றன. அதிகமும் B-செல்கள் எனப்படும் இரத்த வெள்ளையணு வகையில் தான் புற்றுநோய் உண்டாகிறது.
இந்தப் புதிய சிகிச்சை முறையில் இரத்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவரின் T-செல்கள் பிரித்து எடுக்கப்பட்டு, வெளியே ஆய்வகச் சூழலில் அவற்றினுள் ஒரு கலப்பு எதிர் புரத அணுவுக்கான மரபணு நுழைக்கப்படுகிறது (இதற்குத் தான் எச்.ஐ.வி வைரஸ் பயன்படுத்தபட்டது). பின்னர் இந்த T-செல்கள் நோயாளியின் இரத்தத்தினுள் செலுத்தப்படும். அந்தக் கலப்பு எதிர் புரதம் (Chimeric Antigen Receptor), புற்றுநோய் செல்களாக மாறிய B-செல்களில் மட்டும் வெளிப்படக்கூடிய ஒரு புரதத்தைப் போய்ப் பற்றிக்கொள்ளும். அவ்வாறு பற்றிக்கொண்ட பின் இந்த T-செல்கள் புற்றாகப் பெருகும் B-செல்களைக் கொன்று அழிக்கும். அதாவது மரபணு மாற்றம் செய்யப்பட்ட ஒருவருடைய சொந்த T-செல்கள், கான்சர் B-செல்களைக் கொல்லும்.
B-செல்களில் மட்டும் வெளிப்படக்கூடிய CD19 என்னும் புரதத்தை இலக்காகத் தேர்ந்தெடுத்ததும், அதை அடையாளம் கண்டு போய்ப் பற்றிக்கொள்ளும் கலப்பு எதிர்புரதத்தை வடிவமைத்ததும், இவற்றை சிகிட்சைக்கு சாத்தியமான வாசல்களாகப் பயன்படுத்திக்கொண்டதும் தான் உண்மையில் இந்தப் புதிய சிகிட்சை கண்டுபிடிப்பின் புத்திசாலித்தனமான அனுகுமுறை. இந்த செல்சிகிச்சை (Cell Therapy) செய்த பென்சில்வேனிய கான்சர் மருத்துவமனையின் வலைத்தளத்தில் மேலும் படிக்கலாம் http://www.penncancer.org/Tcelltherapy/.
நன்றி,
பிரகாஷ் சங்கரன்.

இந்த கடிதத்திற்கு பஞ்சநதத்தின் பதில் :
பிரகாஷ் சங்கரன் அவர்கள் விளக்கமாகப் பதிலெழுதியதற்கு நன்றி. அடுத்த தடவை இந்த வகை சிகிச்சைகளைப் பற்றி எழுத நேர்கையில் இன்னும் விளக்கமாகவும், விவரமாகவும் எழுத வேண்டும் என்று புரிந்தது. சொல்வனத்தில் அறிவியல் கட்டுரைகளைப் படிக்க, மேன்மேலும் ஆர்வலர்கள், துறை ஞானம் உள்ளவர்கள் போன்றார் கிளம்பி, இது போலக் கூர்மையாக விமர்சிக்கவும் ஆரம்பித்தால் எனக்கும் மிக மகிழ்ச்சியே.  இதன் விளைவாக, நல்ல அறிவியல் சிந்தனை தமிழில் மட்டும் இவற்றைப் படிக்கும் வாசகர்களைச் சென்று சேரும் வாய்ப்பு பெருமளவு கூடும். இங்கிலீஷில் படித்தாலுமே நல்ல புரிதல் கிட்டி விடாது என்றும் விளக்கியதால் பிரகாஷ் சங்கரன் இன்னொரு நல்வினையைச் செய்திருக்கிறார்.
பஞ்சநதம்