அந்தப் பெண் தன் வலது பெரு விரலை வைத்து சுட்டியிராவிட்டால் சம்பத் பார்வையைத்தாழ்த்தி அவரது இடது மார்பை பார்த்து இருக்க மாட்டான்.
குட்டிப்பெயர் பலகையில் மிஷைல் என்று எழுதியிருந்தது.
“இன்னும் இரண்டு மணி நேரம் கழித்து ஹெல்ப் டெஸ்க்கில் என்னைக் கேள், பச்சை மிளகாய்கள் வந்திருந்தால் சொல்கிறேன்” என்று சிரித்துக்கொண்டே ஆங்கிலத்தை உடைத்து, உடைத்துச் சொல்லும் போது பற்கள் பளிச்சிட்டன. உண்மையில் பற்களுக்கு பின்னால் சீரியல் பல்ப் இருக்கிறதோ என்று சந்தேகிக்க வைக்கும் விளம்பர “பளிச்”.
ரசிக்கும் மனநிலையில் சம்பத் இல்லை. இருந்தும் அவனது வழக்கப்படி போனில் மீராவிடம் மிஷைல் பெயர் தெரியவந்த விதத்தை சொல்லாமல் இருக்கமுடியவில்லை. மனதில் பட்டதை வாயைக் கட்டுப்படுத்த முடியாது அவனறியாமல் சொல்லிவிடுவது வழக்கம். யோசித்து சொல்லலாமா சொல்லக்கூடாதா என்று யோசித்து ஓரளவிற்கு கட்டு்ப்படுத்தி வைப்பான். ஆனால் அடுப்பில் பாலை வைத்துவிட்டு எதையோ யோசித்துக்கொண்டிருக்கையில் கண் முன்னாலேயே பால் பொங்குவது மாதிரி சொல்வது தெரிந்தே கட்டுப்படுத்த முடியாமல் சொல்லிவிடுவான்.
சகஜமாக பேசிக்கொண்டிருக்கும் வழுக்கை மண்டை மேலாளரிடம் போன வருடம் அணியிலிருந்தவரை நினைவுபடுத்த “வழுக்குப் பாறை” படிமம்தான் வந்துத் தொலைக்கும். சொல்லிவிட்டு மனதில் பல்லைக் கடிப்பான்.
ஸ்வீடன் வந்த புதிதில் பெரிய ஷாப்பிங் மால்களைத் தவிர வேறு எங்கும் மனித நடமாட்டம் மிக குறைவாக இருப்பதைப் பார்த்துவிட்டு “உங்கள் ஊரில் எங்கு குண்டு வைத்தாலும் ஒரு பத்து பேருக்கு மேல் சாக மாட்டார்கள் போல..ஹஹ..” பீக்கா(Fikka) எனப்படும் காபி பிரேக்கில் கிட்டதட்ட ஒரு பதினைந்து ஸ்வீட்டிஷ்காரர்களுக்கு மத்தியில் இப்படிக் கொட்டிவிட்டான். இத்தனைக்கும் உளறுகிறோம் என்று தோன்ற தோன்ற கட்டுப்படுத்த முடியாமல் சொல்லிவிட்டான்.காபி உறிஞ்சுவதை அனைவரும் நிறுத்தி இவனை வெறித்துப்பார்த்தார்கள்.
அலுவலத்தில் இவனிருக்கும் இடத்தில் யாராவது வந்து யாரையாவது தேடினால் “அந்த கருத்தவர் இருக்கிறாரே, அவரது பக்கத்தில் இருக்கும் வழியில் திரும்புங்கள்” என்று சொல்லும் முன் தேடுபவரின் நிறம் கண்ணில் படும். இருந்தும் என்ன பயன். பால் பொங்கினது பொங்கினதுதான்.
ஆனால் அன்று சண்டை போடும் மனநிலையில் மீரா இல்லை. மாலை செல்ல மகளின் பிறந்த நாள் பார்ட்டி. அதற்கு சமையலில் பிஸியாக இருந்தாள்.
இந்த கார் கம்பெனியின் ஏதோ ஒரு மகாபாவி தகவல் தொழில் நுட்பத்துறையின் ஒரு குறிப்பிட்ட போர்ட்போலியோ புராஜக்டுகளை இந்த ஊரில் வைத்துதான் நடத்தவேண்டும் என்று முடிவு செய்துவிட்டான். ஸ்டாக்ஹோம், லண்டன் அலுவலகங்களிலும் நிறைய புராஜக்ட்கள் நடக்கின்றன. இந்த போர்ட்போலியோ மட்டும் காதன்பர்க்கில்.
ஸ்வீடனின் இரண்டாவது பெரிய மாநகரம் என்றுதான் பெயர். இந்த காதன்பர்க்கில் கறிவேப்பிலை, பச்சை மிளகாய் போன்ற விஷயங்களுக்கு எல்லாம் சில சமயம் தேடவேண்டிய நிலை. வந்த புதிதில் கடுகைத் தேடி அலைந்தது நினைவிற்கு வந்தது.
சம்பத்தும் மீராவும் கூட இருக்கும் சொற்ப இந்தியக் குடும்பங்களும் இந்த மாதிரி புலம்புவதற்காகவே இந்திய பண்டிகைகளை, குழந்தைகள் பிறந்த நாள் விழாக்களை உபயோகிப்பார்கள்.
அந்த சமயங்களில் ஆளாளுக்கு புலம்பிக்கொண்டு புலம்பல்களுக்கு நடுவில் கொஞ்சம் சமைத்தவற்றையும் சாப்பிடுவார்கள். இப்படிப் புலம்பியே இரண்டு வருடங்களாகப்போகிறது. ஒரு உறைபனி காலத்தை சந்தித்தாயிற்று. இதோ, அடுத்ததும் ஆரம்பித்துவிட்டது.
வானத்தில் தேவதைகளின் தலையணைச் சண்டையில் கிழிந்து சிதறிய பஞ்சுத் துணுக்குகள் உலவ ஆரம்பித்துவிட்டன. இன்னும் சற்று நேரத்தில் ஊர் முழுவதும் உப்பு தூவினது போல காட்சியளிக்கும்.
மீராவிற்கு போன் செய்தான். ரிங் சில முறைகள் அடித்து பின் வாய்ஸ்மெயிலிற்குத் தாவிவிட்டது. துண்டித்து மீண்டும் அழைத்தான்.
இம்முறை, ஒருவழியாய் மீரா.
“ம். சொல்லுங்க, கிடைச்சுதா”
“ஏம்மா, இவ்வளவு லேட்”
“என்ன கேள்வி இது? உங்க பொண்ணை குளிக்க வச்சு ரெடியாக்கிறது சும்மாவா?”
“சரி, ஆரம்பிக்காத, பச்சை மிளகாய் இன்னும் வரலையாம். டூ அவர்ஸ் கழிச்சு போன் பண்ணிப்பாரு. பதினோரு மணி லோட்ல வந்தா சொல்றேன், வந்து வாங்கிட்டுப்போன்னு சொல்றாங்க.”
“சுத்தம், நான் இப்போ என்ன பண்ணுவேன்? வேற அந்த கூப்பில் (coop) போய் கேட்டிங்களா?”
“அதான் போகப்போறேன், வேற ஏதாவது வேணும்னா இப்பயே சொல்லிடு. அப்புறம் வீட்டுக்கு திரும்பி வரும்போது அது மறந்துட்டேன், இது மறந்துட்டேன்னு சொல்லி உயிரை எடுக்காதே”
“கொடுத்த லிஸ்ட்ல இருக்கிறதை ஒழுங்கா வாங்கிட்டு வந்தாலே போதும். முதல்ல அதை செய்யுங்க”
அன்று மாலை இருக்கும் பிறந்த நாள் விழா பதற்றம்தான் இது என்று இருவருக்குமே நன்கு தெரிந்தே இருந்தது.
அவர்களது வாண்டுவின் இரண்டாவது பிறந்தநாள் – உண்மையில் இரு நாட்களுக்கு முன்னரே வியாழன்று. வார நாட்களில் பிறந்தநாள் வந்தாலும் அதை வார இறுதியில் கொண்டாடுவதே வெளிநாட்டில் வாழும் இந்தியர் மரபு என்பதால் இன்று சனியன்றுதான் கொண்டாட முடிவு செய்து கூட வேலை செய்யும் சொற்ப இந்திய குடும்பங்களை அழைத்திருந்தார்கள்.
மெல்ல காரை நகர்த்தி பல்பொருள் அங்காடியின் கார்ப்பார்க்கிலிருந்து வெளியே வந்தான். சாலை முழுவதும் உப்புத்தூவல்தான். என்னத்தான் குளிர்கால டயர்களை மாட்டியிருந்தாலும் திக்திக் என்றே இருக்கும். ப்ரேக்கை அழுத்தினாலும் வழுக்கி நிற்பதுபோலதான் தோன்றும்.
பிரதான சாலை சுத்தமாக கழுவி விட்டதுபோல இருந்தது.இந்த உறைபனி காலத்தை அம்மாவிடம் போனில் விளக்கியது நினைவிற்கு வந்தது.
“அம்மா, ப்ரிட்ஜில் ப்ரீஸர் இருக்கில்ல, அதுக்குள்ள கையை விட்டுப் பார். அப்படித்தான் இருக்கும் இங்க”
பின்னர் கூப் போய் லிஸ்டின் படி பொருட்களை வாங்கிவிட்டு வீட்டருகே வரும்போது அலைபேசி ஒலி. வீட்டு கார்பார்க்கில் நிறுத்திவிட்டுதான் யாரென பார்த்தான். நாட் என்ற நடராஜன்.
என்ன கேட்பாரெனத் தெரியும்.அதையேதான் அவரும் கேட்டார்,
“சொல்லுங்க சம்பத், ஏதாவது ஹெல்ப் வேணும்னா சொல்லுங்க. ப்ரீயா தான் இருக்கேன்”
“பிரச்சனையில்லை நாட். நீங்க என்ன பெரிசா பண்ணிடமுடியும்”
அந்தப்பக்கம் அமைதி.
போட்டது போட்டபடி மகா குழப்பத்தில் இருந்தது வீடு. இன்னும் கொஞ்ச நேரத்தில் கிட்டதட்ட பத்து குடும்பங்கள், குழந்தைகளுடன் ஆக்ரமிக்கப்போகிற இடம். தலைச் சுற்றியது. வழக்கம்போல மீராவிடம் ஒரு கத்து கத்திவிட்டுதான் அடுத்த வேலையை கவனிக்கப்போனான். கிட்டதட்ட அதே குரூப்தான் எல்லா தடவைகளும் சந்தித்துக்கொள்வார்கள். கொஞ்சம் தமிழ், கன்னட, ஆந்திர, புனே, டெல்லி என்று ஒரு அவியல் விலாஸ்.
இந்த கூட்டத்தில் ஒரு சில குடும்பங்கள் இந்தியா போயிருக்கும். சில புதிதாய் சேர்ந்திருக்கும். இந்தக் கூட்டத்தில் பேசப்படும் கிசுகிசுக்களுக்கு குறைச்சலே இல்லை. யார் இல்லையோ அவர்களைப் பற்றி எல்லாரும் பேசுவார்கள். ஆரம்பிக்கும் போது ஆளில்லாமல் அவர்களைப் பற்றி பேசுவது முறையல்ல என்று மறக்காமல் சொல்லிவிட்டுதான் ஆரம்பிப்பார்கள்.
இந்த முறை புது வரவு தன்மீத் சிங், இந்த பஞ்சாபி புத்தம் புதிதாய் பர்மிங்ஹாமிலிருந்து போனமாதம்தான் காதன்பர்க்கிற்கும் சம்பத்தின் அணிக்கும் சேர்ந்திருக்கிறார். சிலரைப் பற்றிப் பொதுவாய் ஒரு அபிப்பிராயம் வைத்திருப்போம். ஆனால் நேரில் சந்திக்கும் போது அபிப்பிராயமே மாறிவிடும். ஆனால் இந்த சிங் எந்த எதிர்பார்ப்பையும் பொய்யாக்காமல் நினைத்தபடியே இருந்தார். அலுவலகத்தில் அவருக்குத் தெரியும் என்று சொன்ன பத்து விஷயங்களில் (டெக்னிக்கல்/ டெக்னிக்கல் அல்லாது) இரண்டு கூட தேறவில்லை.
அலுவலகத்திலும் எந்த குழுக்கூட்டத்திலும் முந்திரிக்கொட்டைதான். முன்னர் ஒரு காலத்தில் கண்டிப்பாய் அழகாய்தான் இருந்திருக்க வேண்டிய நாற்பது வயது ஸ்வீடிஷ் பெண் மேலாளரிடம் இன்று உங்கள் தலைமுடி அலங்காரம் பிரமாதம் என்றார். (அந்தம்மாவின் தலைமுடி மிக குட்டையாக கத்தரிக்கப்பட்டிருந்தது).
அவர் திருப்பி “நன்றி, ஆனால் என்னால்தான் உன் தலை அலங்காரத்தை பார்க்கமுடியவில்லையே என்று பளிச்சென்று சொல்லி விட்டார். சிங் சடுதியில் சமாளித்து வேறு பக்கம் தாவினார்.
ஒவ்வொரு குடும்பமாக வந்து சேர, இரவு ஏழு மணியாகிவிட்டது. பெண்களெல்லாம் சேர்ந்து அரட்டையும் சிரிப்பும் குழந்தைகள், சத்தமாக ஒருவரையொருவர் துரத்தி ஒரு மாதிரி களை கட்டிவிட்டது.
இது போன்ற தென்னிந்தியக்காரர்களின் கூடுகை கொஞ்சம் சாதுவானது. சிங்கிற்கு பார்ட்டியில் விஸ்கி இல்லாதது அதிர்ச்சியை விட ஆச்சரியம்தான் தூக்கலாய் இருந்தது.
திருமதி தன்மீத் வழக்கமான கோதுமை நிறத்தில். துருதுருவென்ற ஒன்றரை வயது குழந்தையுடன் பேசிக்கொண்டு இருந்தது காதன்பர்க்கில் இருக்கும் அனைத்துக்குழந்தைகளுக்கும் கேட்டிருக்கும்.
சும்மாச் சொல்லக்கூடாது. தன்மீத்தின் குடும்பமே நன்கு கழுவி தோல் உறிக்கப்பட்ட புத்தம் புதிய காரட்டாக இருந்தார்கள்.
இரு பெரிய காரட்டுகள், ஒரு பேபி காரட்.
பார்ட்டி – குழந்தைகள் ‘அவன் அடித்தான், கிள்ளினான்’ குறைகள், இசை சத்தமாக – குத்து பாட்டு கலெக்ஷன், கோக் சிந்தல், கிரிக்கெட், சினிமா – வழக்கமான பார்ட்டி.
தன்மீத்திற்கும் இன்னும் சிலருக்கும் நாட் எனப்படும் நடராஜன் சீரியஸாக கர்நாடக சங்கீதம், பரத நாட்டியம், பில்டர் காபி என்று என்ன என்னவோ எடுத்துவிட்டுக்கொண்டிருந்தார்.
நாட் நல்ல மனிதர். பாதி தெலுங்கு. ஆனால் பிரச்சனை என்னவென்றால் அவருக்கு கர்நாடக சங்கீதம் தெரியும் என்பது அவரது அபிப்பிராயம்.
அங்கே இருப்பவர்களில் எவராலும் இதைச் சரிபார்க்க முடியாது. ஏனெனில் யாருக்கும் கர்நாடக சங்கீதம் தெரியாது. எதைப் பற்றி பேசினாலும் கர்நாடக சங்கீதத்தில் கொண்டு வந்துவிடுவார். இந்த உலகத்தில் இருக்கும் மற்ற எல்லாமே அலட்சியம், வெளிநாட்டு வேலையைத் தவிர. வாயில் வெத்திலையை குதப்பினது போல டேவிட் அட்டன்பரோ மாதிரிதான் பேசுவார்.
“மமதா மோகன்தாஸ்” என்று நாட்டின் குரல் கேட்டது. ஆம், “ம்” மின் மேல் உள்ள புள்ளியை விட்டுவிடுகிறார். அன்றும் அப்படித்தான், “நயனதாரா” என்றார். ஆந்திரர்கள் இப்படித்தான் புள்ளியில்லாமல் உச்சரிப்பார்களா என்று யோசித்துக்கொண்டே சம்பத் பார்ட்டி பேப்பர்த் தட்டுகளைத் தேடி மாடியிலிருக்கும் படுக்கையறைக்குச் சென்றான்.
மாடியில் யாரும் இல்லையென்றாலும் எல்லா விளக்குகளும் எரிந்துகொண்டிருந்தன. எரிச்சலாக தேடியது வார்ட்ரோப்பிற்கு மேல் செருகியிருப்பது கண்டு எரிச்சல் இன்னும் அதிகமாகிவிட்டது. சேரை இழுத்து அதன் மேல் ஏறி எடுத்துவிட்டு திரும்பும் போது பாத்ரூமில் சத்தம் கேட்டது.
யார் இங்கே? எல்லாரும் கீழேதானே இருக்கிறார்கள்?
மெல்ல கதவைத்தள்ளி பார்த்தான்.
அந்த நீளமான பாத்ரூமின் கடைசியில் டாய்லெட் சீட்டின் அருகில் தன்மீத்தின் சுட்டிப்பெண். தரையில் உட்கார்ந்து சம்பத்தை நிமிர்ந்துப் பார்த்து சிரித்தாள்.
கொள்ளை கொள்ளும் அழகு. அதன் கையில் அழகாய் வாத்து வடிவில் இருந்த டாய்லெட்டைச் சுத்தப்படுத்தும் க்ளீனிங் பாட்டில். வாயில் வைத்துக்கொண்டிருந்த பாட்டிலை எடுத்துவிட்டுதான் சம்பத்தைப் பார்த்து சிரித்தது. பின்னர் மறுபடியும் வாயில் வைத்துக்கொண்டது. வாயின் ஓரத்தில் பச்சை நிறத்தில் வழிந்தது பாட்டிலில் உள்ள அந்த சுத்தப்படுத்தும் திரவமாகத்தான் இருக்கவேண்டும்.
சம்பத் பிரமித்துப் போனான். குழந்தையை நோக்கிப் பாய்வதற்கு சில கணங்களாகின.
தூக்கி வாயை முழுமையாகத் துடைத்துவிட்டு தடதடவென கீழே இறங்கிவந்தான். அனைவருக்கும் நிலைமை புரிவதற்கு சற்று நேரமானது. திருமதி தன்மீத் குழந்தையின் வாயைத் திறக்க முயன்றார். குழந்தையோ வாயைத் திறக்க மாட்டாமல் திமிறிக்கொண்டிருந்தது.
இதற்கிடையில் தன்மீத் குழந்தையின் தொண்டையில் கையை வைத்து அழுத்திப்பிடித்தார். பார்க்க சம்பத்திற்கு இன்னும் பகீரென்றது. எல்லாரும் சுற்றி நின்று கொண்டு ஆளாளுக்கு ஏதோ சொல்லிக்கொண்டிருக்க அந்த இடமே பாதியில் நிறுத்தப்பட்ட விளையாட்டு மைதானம் போல காட்சியளித்தது.
குழந்தையோ இப்போது வீறிட ஆரம்பித்தது. என்ன காரணம் – உள்ளே போன திரவமா அல்லது அம்மா கன்னங்களை அழுத்திபிடித்து வாயைத்திறக்க முயற்சிப்பதினாலா அல்லது அப்பா தொண்டையை நசுக்குவதா அல்லது விளையாட்டு தடைபட்டு போனதா என்னவென்று தெரியவில்லை.
சம்பத்திற்கு ஒருவேளை பசிப்பதால் அழுகிறதோ என்ற சந்தேகமும் வந்தது. நிறுத்த முடியாமல் அதையும் சொல்லிவிட்டான். மிக மெலிதாய் கேட்டதால் நிறைய பேருக்கு கேட்கவில்லை. முக்கியமாய் தன்மீத்திற்கு.
ஒருவழியாய் திருமதி தன்மீத் குழந்தை வாயைத் திறப்பதில் வெற்றி பெற்றார்.
நாக்கில் பச்சைப்படலமாக உறைந்திருந்தது.
நினைத்ததை விட விஷயம் விபரீதம் என்று எல்லாருக்குமே உறைத்தது.நாட் எமெர்ஜென்சி சர்வீஸிற்கு போன் செய்துவிட்டு “சம்பத் உங்க அட்ரஸ் சொல்லுங்க” என்று பதட்டமாய் கேட்டார்.
பின்னே எப்படி இங்கே வந்தார்!
“இங்க கொடுங்க, நானே அவன் கிட்ட சொல்லிக்கிறேன்”
இப்போது திருமதி தன்மீத்தின் வீறிடல் கேட்டது. சம்பத் திரும்புவதிற்குள் தன்மீத் குழந்தையை எடுத்துக்கொண்டு வெளியே பாய்ந்தார். திருமதியும் பின்னாலேயே ஓடி ஏறிக்கொண்டார். சம்பத் நிதானிப்பதற்குள் காரை எடுத்துவிட்டார்.
அவசர கால மருத்துவமனை அருகில்தான், பத்து நிமிட கார் பயணம்தான். தன்மீத்திற்கு கண்டிப்பாய் தெரிந்திருக்கும். சம்பத் வீட்டிற்கு வரும் வழி சொன்னபோது அது ஒரு லேண்ட்மார்க்.
ஆனால் இந்த நேரத்தில் கார் ஓட்டுவது அபாயகரமான அபத்தம்.
சம்பத் கார் கண்ணாடியின் அருகில் குனிந்து இதைச்சொல்ல முயற்சிக்க தன்மீத் பிரமாதமான இங்கிலாந்து உச்சரிப்பெல்லாம் போய் பஞ்சாபியில் (அதுவாகத்தான் இருக்கவேண்டும்) கூவினார். குழந்தையின் வீறிடல் இப்போது இன்னும் அதிகமாக கேட்டது.
பக்கத்து வீட்டிலிருந்து பார்த்தால் சிங் ஏதோ கோபித்துக்கொண்டு அவசரமாக கிளம்புவது போலிருக்கும்.
நாட்டும், அனுப்பும் சம்பத்தின் காரில் ஏறிக்கொண்டார்கள். சம்பத் காரை பின்நோக்கி எடுத்து திருப்பி வேகம் பிடிக்க எத்தனிக்கையில் நாட் “இரு, இரு” என்று பதறினார்.
மீரா ஓடோடிவந்தாள். “இதையும் எடுத்துட்டு போங்க, எமெர்ஜென்சியில் கேப்பாங்க” என்று அந்த டாய்லெட் க்ளீனிங் வாத்து பாட்டிலைக் கொடுத்தாள். கூடவே மூவரின் குளிர் கால மேல் கோட்டுகளையும்.
பின் இருக்கையில் இருந்து அனுப் “முன்அனுபவம் போல, ஹிஹி” என்றார்.
யாரும் சிரிக்கவில்லை. பால் பொங்குவது நமக்கு மட்டுமல்ல என்று நினைத்துக்கொண்டான் சம்பத்.
சாலை கிட்டதட்ட வெறுமையாகத்தான் இருந்தது. தன்மீத்தின் கார் படுவேகமாகவும் ரவுண்ட் அபவட்டுகளில் தாறுமாறாக திரும்புவதையும் பார்க்க பார்க்க வயிற்றில் பய அமிலம் சுரப்பதை சம்பத்தால் நன்றாகவே உணர முடிந்தது.
போலிஸ் கார் விளக்கு எரிய ஊளையுடன் துரத்தப்போவதை எந்த நேரமும் எதிர்பார்த்தான்.
நல்லவேளை, அப்படி எதுவும் நடக்கவில்லை.
அவசர மருத்துவனை வளாகத்திற்குள் கார் இதற்கு மேல் போகாது என்ற இடம் வந்தவுடன் தன்மீத்தின் கார் வழுக்கிக்கொண்டு நின்றது.
சம்பத்தும் பின்னால் நிறுத்திவிட்டு “நாட், ரண்டு கார்களையும் பார்க் பண்ணிடுங்க” என்றவாறே இறங்கி தன்மீத் பின்னால் ஓடினான்.
அவசர மருத்துவமனையின் ரிசப்ஷனை ஒரு குத்துமதிப்பாகத்தான் கண்டுபிடித்தார்கள். ஆங்கிலம் எங்குமே இல்லை.
தன்மீத் பஞ்சாபியில் இரைய, ரிசப்ஷனில் அமர்ந்திருந்த பெண் ஸ்வீடிஷ்ஷில் சொல்ல ஒரு குட்டி களேபரம்.
அந்த ரிசப்ஷன் பெண்ணின் பின்னாலிருந்து திடீரென இன்னொரு பெண் தோன்றினார். சின்னப்பெண்ணாகத்தான் இருந்தார். கதவிற்கு பின்னால் அப்போதுதான் செய்து அனுப்பியது போன்ற தோற்றம்.
சம்பத் “ஆங்கிலம் ப்ளீஸ், ஆங்கிலம்” என்று தண்ணீருக்கு உள்ளே ஒரு நிமிடம் இருந்துவிட்டு தலை தூக்கினவனைப்போல் மூச்சிரைத்தான்.
அந்தப் பெண் நிதானமான ஆங்கிலம் பேசினாள்.
‘முதலில் நீங்கள் நிதானமாகுங்கள். உங்கள் பெர்சன் எண், பெயர் போன்ற தகவல்களைத் தாருங்கள் ‘என்றார்.
தன்மீத்திற்கு ஆத்திரம் வந்துவிட்டது. நல்லகாலம் பஞ்சாபியில்தான் இரைந்தான். அதனால் யாருக்கும் புரியவில்லை. சம்பத், திருமதி தன்மீத்திடம் பெர்சன் எண் எனப்படும் SSN எண்ணை வாங்கிக்கொண்டு அந்தப்பெண்ணிடம் சொன்னான்.
அவர், அவரது கீபோர்டில் குட்டியாக விரல் நடனமாடிவிட்டு ‘இப்போது சொல்லுங்கள் என்னவாயிற்று? நெஞ்சுவலியா’ என்று ஆரம்பித்தாள்.
சம்பத் விளக்கியதும் ‘அந்த அறைக்கு போங்கள், நர்ஸ் குழந்தையைப் பார்ப்பார்’ என்றார்.
மூவரும் உள்ளே நுழைய முயன்றார்கள். குட்டி அறைதான். ஒரு நர்ஸ் வந்து சந்தேகமாக பார்த்து ஏதோ சொன்னார். சம்பத் மறுபடியும் “ஆங்கிலம், ஆங்கிலம்” என்று மூச்சிரைத்தான்.
உடனே இவர் மறுபடியும் சொல்லிவிட்டு விலகி இன்னொருவர் வர இரு நிமிடங்கள் கூட ஆகியிருக்காது. கணினி பூட் ஆகும் நேரம்தான். இருந்தும் தவிப்பாக இருந்தது. குழந்தை இப்போது அப்பா கையில் சமர்த்தாக அழுகையில்லாமல் அமர்ந்திருந்தது.
இந்த முறை நர்ஸ்ஸும் கூடவே மருத்துவரும் வந்தனர்.
விவரம் சொன்னவுடன் குழந்தையின் கன்னத்தைத் தட்டி திறக்க சைகை செய்ததும் ஒழுங்காக திறந்துவிட்டது. அட, என்ன விவரம் பார் இந்தக்குட்டி என்று நினைத்துக்கொண்டான்.
‘எங்கே அந்த பாட்டில்’ என்று மருத்துவர் கேட்டார். சம்பத் இதோ என்று பெருமையோடு கொடுத்துவிட்டு தன்மீத்தைப் பார்த்தான்.
தன்மீத் பார்த்த பார்வை சம்பத் பார்த்த சொற்ப ஹிந்தி படங்களில் உணர்ச்சி வசப்படும் சர்தார்ஜியை நினைவுபடுத்தியது.
டாக்டர் “கூட்…வெரி தாட்புல்” என்றார்.
நர்ஸ் உலக செஸ் சாம்பியனைப் பார்க்கும் பார்வையுடன் சம்பத்தைப் பார்த்து அதை வாங்கிக்கொண்டார்.
‘சரி உள்ளே வாருங்கள்’ என்று உள் கதவைத் திறந்து அவர்களை மட்டும் கூட்டிச்சென்றார்.
ரிசப்ஷன் ஹாலிற்கு திரும்ப வந்த சம்பத்தை ‘என்னாச்சு, என்னாச்சு’ என்றபடியே நாட்டும் அனுப்பும் சூழ்ந்துகொண்டனர்.
அவர்களை மெல்ல ஹால் மூலைக்கு தள்ளிச்சென்று நடந்ததைச் சொன்னான்.
துடித்த மொபலை அடக்கி மீராவிடமும் விஷயத்தை சொன்னான்.
மூவரும் சற்று நேரம் வெளியே வெறித்தபடியே இருந்தனர். வெளியே பனித்தூறல் நின்றுவிட்டது. நாளை அதிகப்பனி பெய்யக்கூடும் என்று மொபைலில் வானிலை அறிக்கை தெரிவித்தது. இந்தப் பனி வாரக்கணக்கில் அப்படியே படிந்து இருக்கும். நம்ம ஊரில் எங்கும் மணல் இருப்பது போல இங்கு இந்த குளிர் மாதங்களில் எங்கும் பனி மணல். ரசிக்கும் மனநிலையில் யாருமே இல்லை. அந்த மௌனத்தின் கனம் தாங்கமுடியாததாகவே இருந்தது.
அந்த க்ளீனிங் திரவம் எந்த அளவிற்கு உடலிற்குள் போயிருக்கிறது, குடல் என்னவாகும், குழந்தை தாங்குமா என்றெல்லாம் நினைக்கவே முடியவில்லை.
குழந்தை எப்படி மேலே மாடிக்கு போயிற்று? கீழே எல்லாரும் வேறு கவனங்களில் இருக்க இந்தக்குட்டி மட்டும் மேலே சத்தமில்லாமல் படிகளேறி வந்திருக்கவேண்டும்.
“என்ன தாய், இந்த வயதில் துறுதுறுவென ஓடியாடும் குழந்தைகளை கண்ணிலேயே வைத்திருக்க வேண்டாமா?” என்றார் நாட்.
“போன வாரம் எங்கள் வீட்டில் நடந்த பார்ட்டியிலும் இந்தக் குழந்தை விஷமமோ விஷமம்” தொடர்ந்தார்.
‘அப்பாடா, எங்க வீட்டு பார்ட்டியில் இந்த மாதிரி நடக்கலைன்னு திருப்தியா உங்களுக்கு’ என்று….இந்த முறை பாலை பொங்கவிடவில்லை, அதற்கு முன்னரே மனதில் அணைக்க முடிந்தது.
ஏற்கனவே இருந்த ஒரு சிலரும் போய்விட்டனர். சற்று நேரத்தில் ஒரு பையன் மற்றும் ஒரு இளைஞர் இருவருமே காலை நொண்டியபடி இன்னொருவரின் துணையோடு வந்தனர். கால்பந்தாகத்தான் இருக்கவேண்டும்.
சரியாக இருபது நிமிடங்கள் கழித்து தன்மீத்தும் திருமதியும் கதவைத் திறந்து பேசிக்கொண்டே வந்தனர். ஏதோ புடவைக்கடையிலிருந்து வெளி வருவது போல இருந்தது. அசதி, திருப்தி…கையில் துணிப்பையும் இல்லை, குழந்தையும் இல்லை.
இப்போது திருமதி தன்மீத் தெளிவான பர்மிங்ஹாம் ஆங்கிலத்தில் நடந்ததை சொல்ல ஆரம்பித்தார்.
உள்ளே கூட்டிப்போய் குழந்தையின் வாயை நன்கு கழுவியிருக்கின்றார்கள். இன்னும் ஏதோவெல்லாம் சோதித்திருக்கின்றனர் போல. இந்த இடத்தில் திருமதிக்கு ஆங்கிலத்தில் சரியாக சொல்லவரவில்லை.
அப்புறம் தன்மீத் தொடர்ந்தார் – முக்கியமாக அந்த க்ளீனிங் பாட்டிலில் எழுதியிருக்கும் விபரங்களைக் கொண்டு அந்த கம்பெனி இணையத்தளத்தை அடைந்து பின்னர் அங்கிருந்து தொடர்பு விவரங்களுக்கு போன் செய்து க்ளீனிங் திரவத்தில் இருந்த கெமிக்கல் விஷயங்களை கேட்டிருக்கின்றனர்.
குழந்தை திரவத்தை விழுங்கியதாக தெரியவில்லையாம் இன்னும் ஒரு மணி நேரம் அப்சர்வேஷனில் வைத்துப் பார்க்கலாம். எதுவும் அசாதாரணமாக நடக்கவில்லையென்றால் வீட்டிற்கு கூட்டிச் செல்லலாமாம்.
ஒரு மாதிரி யாருக்கும் திருப்தியே இல்லை.
“பச்சைத் திரவம் வாயில் ஓரமாக உண்மையிலேயே இருந்ததா, நீ மட்டும்தானே பார்த்தாய்?” என்று தன்மீத் சம்பத்தை விழித்துப்பார்த்தான். இப்போது சம்பத்திற்கே சந்தேகம் வந்தது. இல்லையே அவன் தான் துடைத்தானே, அந்த கசங்கிய டிஷ்யு பேப்பரைப் பார்த்தால் தெரிந்துவிடப்போகிறது. அஹ்… கையை வைத்துத்தான் துடைத்தான்…
சரி, நாக்கில் இருந்ததைத்தான் எல்லாருமே பார்த்தார்களே? இல்லையாம் நாட் பார்க்கவில்லையாம். அதற்குள் திருமதி தன்மீத்தோ மீராவோ துடைத்துவிட்டார்களாம். அதற்கு முன் குழந்தை விழுங்கவில்லை என்று எப்படித் தெரியும்?
ஒரு மாதிரி சுமாராக, நிம்மதியாக இருந்தது மாதிரி இருந்தது. ஆனால் இல்லை.
குழந்தை தற்போது உள்ளே குழந்தைகளுக்கான அறையில் இருக்கும் அனைத்துப் பொம்மைகளுடன் மிக உற்சாகமாக விளையாடிக்கொண்டிருக்கிறதாம்.
“அங்கு டாய்லெட் இருக்கிறதா” கேட்பதற்குள் இப்போதும் கவனமாக பாலை அணைத்துவிட்டான்.
ஒரு மணி நேரம் கழித்து குழந்தையை எடுத்துக்கொண்டு வீட்டிற்கு திரும்பியபோது பனிப்பொழிவு அதிகமாக இருந்தது.
சம்பத் கவனமாக, மெதுவாக காரை ஓட்டினான். தன்மீத் காரை நாட்டும் அனுப்பும் ஓட்டி வந்தனர்.
வீட்டில் கனமான அமைதி. நாட் மற்றும் அனுப் குடும்பத்தினரைத் தவிர மற்ற அனைவரும் போய்விட்டனர். சற்று நேரத்தில் நாட்டும் அனுப்பும் விடைபெற்று போன பின் மௌனத்தைக் கலைக்க ஏதாவது சாப்பிடுகிறாயா என்று மீரா தன்மீத்திடம் கேட்டாள்.
தன்மீத் குழந்தை ஒரு சோபாவிலும் சம்பத்தின் பிறந்தநாள் குழந்தை இன்னொன்றிலும் ஆழ்ந்த தூக்கத்திலிருக்க கொஞ்சம் சகஜ நிலை திரும்ப ஆரம்பித்தது.
கையிலிருந்த சமோசாவைத் தின்று கொண்டே சம்பத் “கண்டிப்பாய் வாய் ஓரம் நிறைய திரவம் வழிந்துகொண்டிருந்தது. எனக்கு நன்றாக தெரியும்” என்றான்.
“சொல்லப்போனால் கதவைத் திறந்தவுடன் அவள் தலையைச் சரித்து பச்சைவாயுடன் என்னை பார்த்தபோது எக்ஸார்ஸ்ட் படத்தில் அந்த குழந்தை போல…“ என்று சொல்ல வந்து…சொல்லாமல் விட்டதில் சம்பத்திற்கு பெருமை.
சற்று நேரம் கழித்து சம்பத் மறுபடியும் ஆரம்பித்தான் “எப்படி தன்மீத் இவ்வளவு நம்பிக்கையாக சொல்கிறார்கள் ஒன்றும் ஆகாது என்று. நீ கேட்காமல் விடமாட்டாயே?”
தன்மீத் சிரிப்புக் கண்களுடன் “அந்த க்ளீனிங் திரவத்தில் கலந்திருக்கும் கெமிக்கல்கள் மிகவும் மிதமாம். கம்பெனி காரர்களே சொன்ன விஷயம். மிஞ்சி மிஞ்சிப்போனால் வாந்தி எடுக்கலாம். அல்லது ஓரிரு முறை வயிற்றுப்போக்கு இருக்கும் அவ்வளவுதானாம். அவள் பாத்ரூம் போய் இரண்டு நாட்களாகின்றன. இப்படியாவது போனால் நல்லதுதான்” என்று இடித்து நகைத்தான்.
திருமதி தன்மீத்தும் மீராவும் கூட சேர்ந்து ஒரு அப்பாடா சிரிப்பு சிரித்தனர்.
சம்பத்தால் இந்த முறை பாலை அணைக்கமுடியாமல் போய்விட்டது.
“அடடா, மீரா, அந்த ப்ராண்டை இனிமேல் வாங்காதே, எபக்டே இல்லை, சுத்த வேஸ்ட்”