கவிதைகள்

vincent-van-gogh-the-starry-night-6311

இரவைச் சிந்தித்தல்

இரவைச் சிந்திக்கவேண்டும் என்றால்
முதலில் சூரியனை மறந்தாக வேண்டும்
பின்னர் அமைதியை வாசிக்க வேண்டும்
அதிகமான பறவைகள் ஊமையென கற்பனை செய்ய வேண்டும்
நாய் குரைக்கும் சத்தத்தைக் கிழித்து கதவில் ஒட்ட வேண்டும்
குறிப்பாக எல்லா அறைகளிலும் மின் விளக்கை எரியவிடக் கூடாது
தொலைபேசியில் அதிக நேரம் பேசிக்கொண்டிருப்பவனை நேசிக்க வேண்டும்
இப்போது உங்களை இனிய இரவுக்குள் அழைத்து வந்துவிட்டேன்

4

மழை பெய்யச் சிந்தித்தல்

முறையாக கடலைக் கற்பனை செய்ய வேண்டும்
கடல் கற்பனைக்குள் வரும்போது
நீர் வழியில் சிந்திவிடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்
இங்கு கடலைக் கற்பனை செய்வதற்கு
கடலை விட பெரிய
மூளையுள்ள தலை தேவையில்லை
நீரின் நிறத்தை மாற்றுதல்,
ஆவியாக்குதல்,
ஆகாயத்திற்கு கொண்டு செல்லுதல்,
நீர் இறங்க வேண்டிய இடங்களையும், நேரத்தையும் தீர்மானித்தல்
கடல் நீருக்கு “மழை”எனப் பெயரிடுதல் எல்லாம்
உங்கள் கற்பனை படிப்படியாக செய்திட வேண்டும்
இடி மின்னலை கற்பனை செய்யும்போது எச்சரிக்கையாக இருத்தல் வேண்டும்.
இறுதியாக மழை உங்கள் கண்களின் வழியாகத்தான் பெய்யும்

-ஃபைஸால் அஹமத்

CB

எப்போதும் போல்

நாளை நான்
இன்னொருவனின் கல்லறையில்
ஒளிந்திருக்கலாம்.
ஒரு குழந்தையின் கைப்பிடி மண்,
யாரோ ஒருவரின் கண்ணீர்,
அல்லது
காறித்துப்பும் எச்சில்
என் மேல் விழலாம்.
யாவையும் அல்லாது
யாருடைய கல்லறையில்
ஒளிந்திருக்கிறேன்
என்பதைத்
தோண்டி அறியும் நாயாக
நானே இருக்கலாம்.
இருந்தும்,
இறுதியாய்க் கல்லெறிவது
எனக்கு
எப்போதும் போல்
சுலபமாய் இருக்கிறது.

-பா.சரவணன்