இசைபட வாழ்…

நாம் எதிர்கொள்ளும் ஒவ்வொரு நிகழ்வும் காலம் வரையும் ஓவியம் என்று சொல்லலாம் இல்லையா? ஒரு முறை வரைந்த ஓவியத்தை காலம் பெரும்பாலும் மறுபடி வரைவதே இல்லை. மறுமுறை வரைந்தாலும் அதன் “வண்ணம்” முன்னர் வரையப்பட்ட ஓவியத்தின் வண்ணம் போல் இருப்பதே இல்லை. காலம் வரைந்த அத்தகைய ஓவியங்களை நாம் மீண்டும் மீண்டும் துடைத்து வாழ்க்கைச் சுவற்றில் அடிக்கப்பட்ட‌ வயதின் ஆணியில் மாட்டுவதுதான் நினைவு என்பதோ?

ஒரு பாடல் எப்பொழுது, எப்படி நம் மனதுக்குள் இறங்குகிறது? இந்த உலகை நிர்வகிக்கும் காலத்தின் ரகசியங்களில் இதுவும் ஒன்றோ? ஏதோ ஒரு நிகழ்வில் ஒரு பாடல் முழுதுமோ அல்லது அதன் ஒரு துளியோ நம் காதில் விழுகிறது. அதை நாம் கேட்ட நொடியில், பிறகு பலமுறை கேட்கும் நொடிகள் உரசி உரசி காலத்தின் இழை பாடலுக்குள் நுழைந்து மேலும் மேலும் நினைவுகளை கோர்த்துக் கொண்டே போகிறது இல்லையா? இதில் மனதுக்குள் இறங்கிய நொடி என்று எதை அடையாளப்படுத்துவது?

இப்படித்தான், நான் பி.எஸ்.சி. படித்துக் கொண்டிருந்தபொழுது, மதுரை பசுமலை பள்ளியில் பார்வையற்றோர் எழுதும் தேர்வுக்கு எங்கள் கல்லூரி மூலம் சென்றிருந்தேன். அவர்கள் விடை சொல்லச் சொல்ல‌ நாம் எழுத வேண்டும். செந்தில் குமார் என்பவருக்கு தேர்வு எழுத நான் அவர் அருகில் அமர்ந்தேன். அவர், பிறந்த பொழுதிலிருந்து மனதின் மூலமே உலகைப் பார்த்து வளர்ந்தவர். பசுமலையில், சாலையில் இருந்து நீண்டு அடிவாரத்தில் முடியும் அழகிய பாதையின் முடிவில் இருந்தது தேர்வு அறை.

செந்தில் குமார் என்னிடம் பேசிய முதல் வரி, “நான் சொல்வதை மட்டும்தான் எழுதவேண்டும்.எனக்கு உதவுகிறேன் என்று நீங்களாக எதுவும் எழுதுவது எனக்கு பிடிக்காது”. எனக்கு அவரை உடனே பிடிக்கத் துவங்கியது. இவரின் ஒன்பது தேர்வுகளை இரண்டாண்டுகள் நான் எழுதினேன். தேர்வு முடிந்து, அந்த வேப்பமரம் நிறைந்த, வேப்பம்பழங்கள் இறைந்த பள்ளியின் சாலை வழியே நாங்கள் பசுமலை பேருந்து நிறுத்தம்வரை நடந்து வருவோம். சரியான இடங்களில், தேவைக்கு ஏற்றவாறு வளைந்து, மேடுபள்ளங்களில் சரியாக கால் வைக்கும் அவரின் புலன்களின் நுண்ணறிவு என்னை வியக்க வைக்கும். இவர், பெரும்பாலும் ஏதேனும் ஒரு பாடலை “ஹம்” செய்வார். அதில் பெரும்பான்மை இளையராஜாவுடையதாக இருக்கும்.

அப்படிப்பட்ட தேர்வு முடிந்த வெயில் நிறைந்த மதிய வேளை ஒன்றில்தான் அவர் “ஊரெல்லாம் உன் பாட்டுதான்” (ஊரெல்லாம் உன் பாட்டு / 1991 / 3 வர்ஷன்கள் – யேசுதாஸ், ஸ்வர்ணலதா, இளையராஜா) – முணுமுணுத்தபடி மூன்றாக மடித்திருந்த தன் ஊன்றுகோலை பிரித்து நீட்டிக் கொண்டிருந்தார். இந்தப் பாடல் மூன்று பேரால், மூன்று வெவ்வேறு இசைத் தளங்களில், மூன்று முறை பாடப்படும். இந்த மூன்றும் மூன்று வெவ்வேறான உணர்வின் ரேகைகளை மனதில் வரையக்கூடியவை. எனக்கு இரண்டாம் ஸ்டான்ஸாவில் வரும் வயலின் மீது ஒரு அதீத பிடிப்பு. இளையராஜா பாடும் வர்ஷன் ஒரு ஸ்டான்ஸா மட்டுமே கொண்டது என்றாலும் அதிலும் இந்த வயலின் கோர்வை வரும்.

இசைக் கல்லூரியில் பயிலும் அவரிடம் இந்தப் பாட்டின் இரண்டாம் ஸ்டான்ஸா வயலின் எவ்வளவு அற்புதமாக இருக்கிறது அதை உங்கள் புல்லாங்குழலில் வாசியுங்களேன் என்றேன். லேசாக சிரித்தபடி தன் ஜோல்னா பையை தடவிக்கொண்டார். அதனுள் உறங்கிக் கொண்டிருந்த‌ குழலை எழுப்பினாரோ என்னவோ…

சற்று தூரம் நடந்தபின், அடிவேர்கள் பரந்திருந்த ஆலமரத்தின் அடியிலிருந்த சிமிண்ட் திட்டில் அமர்ந்து புல்லாங்குழலை வெளியில் எடுத்தார். காலத்தின் துளைகளில் நினைவை இட்டு நிரப்பக் காத்திருந்தது போல பேசாமல் இருந்தது அந்த புல்லாங்குழல். பெருகி வரும் காட்டருவியின் நீர் பிரிந்து, சிற்றோடை போல இரு கரைகளிலும் இருக்கும் சிறு சிறு பாறைகளின் நடுவே காலகாலமாக வழிந்தோடி வழிந்தோடி, பச்சை பூத்து ஒரு வாசம் வீசுமே..அந்த சூழலையும் அந்த வாசனையையும் நுகரும்பொழுது ஒரு உணர்வு தோன்றுமே…அதைப் போன்றதொரு உணர்வை பீறிட்டு கிளப்பியது அவர் வாசித்த “ஊரெல்லாம் உன் பாட்டு”.

அந்த இரண்டாம் ஸ்டான்ஸா துவக்கத்தில் வரும் வயலின் நடுவே, வயலினை வைத்தே ஒரு ஒற்றை ஸ்ட்ரோக் போட்டிருப்பார் இளையராஜா…அதை அப்படியே புல்லாங்குழலில், ஒரு காலத்துகளுக்குள் நினைவின் ஒரு சொட்டைத் தொட்டு எடுப்பது போல், குழலின் துளையில் விரலை வைத்தெடுத்து வாசித்தார் செந்தில் குமார். பாடலின் ஒரு மிக அற்புதமான நொடிக்குள் நம்மைத் தூக்கியெறியும் அந்த வயலின் நொடிகள்…ஒருவேளை அந்த இரண்டாம் ஸ்டான்ஸாவில் முழுவதுமே புல்லாங்குழலை வைத்திருக்கலாமோ இளையராஜா என்றேன் நான். இந்தப் பாடலில் வரும் கப்பாஸில் ஒரு மாயம் இருக்கிறது. நதியோ, அருவியோ ‍ ஏதோ ஒரு நீரோட்டத்தில் கால்களை ஆட்டியபடி இந்தப் பாடலை கேட்டுப் பாருங்கள். எத்தனை வேறுபட்ட வேகத்தில் கால்கள் ஆடத்துவங்கினாலும், பாடல் செல்ல செல்ல, தானாகவே அந்த கப்பாஸ் ஒலிக்கும் இடைவெளியின் லயத்திற்கேற்றவாறே நம் கால்கள் நீரில் அலையத்துவங்கும்!

செந்தில் குமார் அன்று “ஊரெல்லாம் உன் பாட்டுதான்” பாடலை குழலில் வடித்தபின், “உங்களுக்கு இந்த பாட்டில் எந்த வரி பிடிக்கும்?” என்றார். “ஆலம் விழுதுகள் போலே ஆடும் நினைவுகள் கோடி” என்றேன். சூழலுக்கு பொருத்தமாக நாங்கள் அமர்ந்திருந்த ஆலமரமும், தனது மகிழ்ச்சியை காட்டுவது போல் விழுதுகளை லேசாக அசைத்தபடி இருந்தது. அந்த வரியை ஒருமுறை பாடிப் பார்த்த அவர், “நீங்கள் நினைவுகளை விழுது போல பார்க்கிறீர்கள். நாங்கள் விழுதை நினைவாக பார்க்கிறோம்.” என்றார். நாக்கின் மேல் கல்லை வைத்தது போல நகர்த்த முடியாத‌ வார்த்தைகளுடன் நின்றேன் நான்.

இந்தப் பாடலை ஊன்றி கவனித்தால்,

மூன்றுவிதமாக பாடப்படும், மூன்று முறை வரும் இந்தப் பாடலில் ஒரே ஒரு சொல் மட்டுமே மாறுபடும். நினைவுகள் (நினைவுகளினால்?) வாடுவதற்கும் வாழ்வதற்கும் உண்டான வித்தியாசமே அது.

ஸ்வர்ணலதா பாடுவதில், உள்ளத்தில் ஆடும் உணர்வின் அண்மையும், ஜேசுதாஸ் பாடுவதில், நழுவிக் கொண்டிருக்கும் உணர்வில் நாட்டம் கொள்ளும் தன்மையும், இளையராஜா பாடுவதில் ஒன்றில் ஒட்டியிருந்தும் எட்டி நிற்கும் பன்மையும் வெளிப்படும். அதற்கு அச்சாரம் போடுவது போல, பாடலின் துவக்கத்தில் வரும் கிடார் ஸ்வர்ணலதாவுடனும் ஜேசுதாசுடனும் வெவ்வேறு “கனம்” தாங்கித் துவங்கும். இளையராஜாவிடம் இந்தத் துவக்கமே இராது.

இந்த‌ உணர்வுகளின் திரியை பிரித்துக் காட்டும்விதமாக, மூன்று பேரின் பாடல்களிலும் இசையின் அமைப்பு ஆங்காங்கே வேறுபடும்.

ஸ்வர்ணலதா மற்றும் ஜேசுதாஸ் பாடும் இரண்டு பாடல்களிலும், சரணங்களின் வரிகளுக்கு அடியிலும் இடையிலும் வயலின் அமைதி காத்து, “பாதச்சுவடுகள் போகும்” மற்றும் “ஆலம் விழுதுகள் போலே” ஆகிய வரிகளுக்கு முன் மீண்டும் தலை தூக்கி, இரண்டே வரிகளில் அடங்கி விடும்.

இளையராஜா பாடுவதைக் கேளுங்கள்…ஒரே சரணம்தான். அந்த சரணத்தின் துவக்கத்தில் வருவதும் மற்ற இருவர் பாடுகையில் வரும் அதே வயலின்தான். ஆனால் இப்போது புல்லாங்குழல் என்னும் “பாத்திரம்” வயலினிலிருந்து வழியும் உணர்வை, அதே வடிவில் தேக்கி வைத்துக்கொள்ள உடன் வருகிறது!

ஒரு அகலமான சாலையில் நாம் பயணம் செய்யும்பொழுது, ஒரு கீறலாக கிளம்பி, எங்கோ நீண்டு கொண்டு போகும் ஒற்றையடிப் பாதைகள் போல, அந்த பாதை எங்கு போகுமோ என்று நம்மை நினைக்க வைப்பது போல, ஒவ்வொரு வரியின் முடிவிலும் புல்லாங்குழல் நீண்டு புரள்கிறது…

மற்ற இருவர் பாடுகையில் “ஆலம் விழுதுகள் போலே” வரிகளின் வேரில் பொங்கி வழியும் வயலின், இளையராஜாவின் ஆலம் விழுதில் அமைதியாகி மறைந்துவிடும்! அந்த அமைதியின் ஆழத்தை மேலும் தோண்ட முயல்கிறது தபேலா. அதில் சிதறும் நினைவை கொத்தியெடுத்து நம் மீதே மீண்டும் பூசுகிறது அதனுடன் வரும் கப்பாஸ். அவ்வாறு மறைந்துபோன அதே வயலின், அந்த இரண்டு வரிகள் முடிந்தபின் மீண்டு வந்து காற்றில் நீந்துவது மற்ற இருவரின் அதே வரிகளில் கிடையாது!

செந்தில் குமார் வாசித்த புல்லாங்குழலின் வழியே காலம் வரைந்து போன அந்த மதியம் கடந்து சுமார் ஐந்து ஆண்டுகள் கழித்து, நான் எம்சிஏ இறுதி ஆண்டில் இருந்தேன். தினமும் பசுமலை பள்ளியை கடந்துதான் எங்கள் கல்லூரிக்கு போய் வர வேண்டும். ஒரு நாள் மாலை நான் திருப்பரங்குன்றத்திலிருந்து பேருந்தில் வந்து கொண்டிருந்தேன். பசுமலை பஸ் ஸ்டாப் அருகில் அவரைப் போன்ற‌ ஒருவர், ஒரு பெண்மணியுடன் நின்று கொண்டிருப்பது தெரிந்தது. நான் பேருந்திலிருந்து இறங்கி, அவர் அருகே சென்று “நீங்கள் செந்தில் குமார்தானே…” என்றேன். எனக்கு இருந்த சிறிதளவு சந்தேகம்கூட இல்லாமல் “என்ன குமரன் எப்படி இருக்கீங்க” என்றார் தாமதமின்றி. அவரின் மனைவியை அறிமுகப்படுத்தி, இருவருமே இசைபள்ளியில் பணிபுரிவதாக சொன்னார். செந்தில் குமாருக்கு இந்தப் பாடலில் மிகவும் பிடித்த வரி “விழி காணும் காட்சி யாவும் உந்தன் வண்ண கோலம்தான்”. அவர் மனைவிக்கும் அது பிடித்த வரியாக இருக்கக் கூடும் என்பது, அவர்களிடம் விடைபெற்று பேருந்தில் ஏறியபின், அவர்கள் ஒருவர் கையை மற்றொருவர் பிடித்தபடி தொலைவில் நடப்பதை பார்க்கையில் தோன்றியது.

“ஆலம் விழுதுகள் போலே ஆடும் நினைவுகள் கோடி”. அந்த விழுதுகளின் அர்த்தத்தைத் தானே நாம் நிகழ்காலத்தில் தேடி, எதிர்காலத்தை நோக்கி ஓடிக் கொண்டிருக்கிறோம்?