யாருக்குத் தெரியும்

ஏரோது ராஜாவின் நாட்களில் யோடேயாவிலுள்ள பெத்லகேமிலே இயேசு பிறந்தபொழுது, கிழக்கிலிருந்து சாஸ்திரிகள் எருசேலமுக்கு வந்து, யூதருக்கு ராஜாவாகப் பிறந்திருக்கிறவர் எங்கே? கிழக்கிலே அவருடைய நட்சத்திரத்தைக் கண்டு, அவரைப் பணிந்துகொள்ள வந்தோம், என்றார்கள். ஏரோது ராஜா அதைக் கேட்டபொழுது அவனும் அவனோடு கூட எருசேலம் நகரத்தார் அனைவரும் கலங்கினார்கள். (மத்.2.2 -4)

கர்த்தருடைய தூதன் சொப்பனத்தில் யோசேப்புக்குக் காணப்பட்டு ஏரோது பிள்ளைகளை கொலை செய்யத் தேடுவான். ஆதலால், இனி நீ எழுந்து பிள்ளைகளையும் அதன் தாயையும் கூட்டிக்கொண்டு எகிப்துக்கு ஓடிப்போய், நான் உனக்குச் சொல்லும்வரைக்கும் அங்கே இரு என்றான். (மத்.2.13)

அப்பொழுது ஏரோது மிகுந்த கோபமடைந்து ஆட்களை அனுப்பி பெத்ல்கேமிலும் அதன் சகல எல்லைகளிலுமிருந்த இரண்டு வயதுக்குட்பட்ட எல்லா ஆண் பிள்ளைகளையும் கொலை செய்தான். (மத் 2.16)

i1

படைவீரன் கதவைத் தள்ளித் திறந்துகொண்டு உள்ளே வந்தான். அவன் களைப்படைந்திருந்தான்.

தளர்ந்த கால்களுடன் ஒரு கட்டிலில் விழுந்து தன் கண்களை மூடினான்.

உள்ளே ஒரு கதவு சற்றுத் திறந்தது. அடைத்துக்கொண்டது. அதை யாரோ தாளிட்டார்கள்.

படைவீரனின் செருப்புகளில் உலர்ந்த இரத்தத்தின் மீது ஈக்கள் மொய்த்தன. எங்கோ ஒரு மூலையில் ஒரு குளவி தொடர்ந்து ரீங்கரித்தது. முற்றத்தில் கோழிகள் வெயிலில் சாய்ந்து சலசலத்தன. வெளியிலிருந்து அழுகை ஒலியின் தேய்ந்த சப்தங்கள் திறந்து கிடந்த ஜன்னல்கள் வழி அசரீரிகளைப்போல் கடந்து வந்தன. சிறிது நேரத்திற்குப் பின் கோழிகள் எங்கோ சென்றுவிட்டன. குளவிகள் நிசப்தமாயின. படைவீரன் உறங்கிய கட்டிலைச் சுற்றி அழுகை ஒலி மட்டும் வளையம் போல் கவிழ்ந்தது.

படைவீரன் விழித்தபோது வெயில் வெகுவாய் குறைந்திருந்தது. அவன் எழுந்தான். கைகளையும் உடைகளையும் பார்த்துக்கொண்டே, ‘எனக்குக் குளிக்க வேண்டும்’ என்றான்.

விபசார விடுதியின் தலைவி உள்ளே வந்தாள். “என்ன வாசனைத் திரவியம் இட வேண்டும்?” என்றாள்.

“ஏதாவது” என்றான் படைவீரன். இரு கைகளாலும் தலையைத் தாங்கியபடியே. பின்னர், “ரத்தத்தின் நாற்றம் சீக்கிரம் போவதில்லை” என்று முணுமுணுத்தான்.

விடுதியின் தலைவிக்கு ஐம்பது வயதிருக்கும். நல்ல உயரம். அழகின் நிழல்கள் இன்னும் மறையவில்லை. எந்த உணர்ச்சியையும் காட்டாத அவள் முகத்தில் தோன்றிய சிறு மாற்றம் அவன் தலையை உயர்த்தியதும் சட்டென மறைந்தது. “குறிப்பாகக் குழந்தைகளின் ரத்தம்” என்றாள் அவள்.

படைவீரன் தன் கைகளையே பார்த்துக் கொண்டிருந்தான்.

“நீங்கள் எந்தத் தெருவுக்குப் போயிருந்தீர்கள்?” என்று கேட்டாள் அவள்.

படைவீரன் பதில் கூறவில்லை.

விடுதித் தலைவி கம்பீரமாக நடந்து முன்னே வந்து படைவீரனின் எதிரே ஓர் இருக்கையில் அமர்ந்தாள்.

“நீங்கள் கொன்ற குழந்தைகளுக்கு, நீங்கள் அவர்களைக் கொல்லப் போகிறீர்கள் என்று தெரிந்திருக்குமா?”

படைவீரன் எதிர்பக்கச் சுவரையே பார்த்துக் கொண்டிருந்தான். அவள் அவன் முகத்தைப் பார்த்தபடி பதிலுக்காகக் காத்திருந்தாள்.

“எனக்குக் குளிக்க வேண்டும்” என்றான் அவன்.

தலைவி அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

“எனக்குத் தெரியாது” என்றான் படைவீரன்.

“குழந்தைகளுக்கு மரணமுண்டுமா? மரணத்தைப் பற்றி அவைகளுக்குச் சிந்திக்கத் தெரியுமா?”

அவள் ஒன்றும் சொல்லவில்லை.

“நான் கேட்டதெல்லாம் தாய்மார்களின் அலறல்களை மட்டுமே” என்றான் அவன்.

தலைவி எழுந்து உள்ளே சென்றாள்.

படைவீரன் தன் இடுப்பு வாரிலிருந்து இரத்தம் உறைந்த ஒரு வாளை எடுத்துத் தரையில் வைத்தான். இடுப்புப் பட்டையை அவிழ்த்து வாளின் அருகே வைத்தான். பிறகு கைகளில் உறைந்த இரத்தத்தை நகத்தால் சுரண்டத் தொடங்கினான்.

விடுதித் தலைவி திரும்ப வந்து மீண்டும் அவன் எதிரே அமர்ந்தாள். “வென்னீர் தயாராகிறது” என்றாள். பிறகு சற்று முன்னால் குனிந்து அவனிடம் கேட்டாள்: “நீங்கள் எத்தனை குழந்தைகளைக் கொன்றிருப்பீர்கள்?”

படைவீரன் ஒன்றும் கூறவில்லை.

முகத்தில் ஓர் அசட்டுச் சிரிப்பை வரவழைத்துக் கொண்டு அவள் கேட்டாள், “நீங்கள் ஒரு நல்ல படைவீரர்தான். பத்து நூறு குழந்தைகளைக் கொல்வதற்கும் அத்தனை படைவீரர்களைக் கொல்வதற்கும் ஏதாவது வித்தியாசம் இருக்கிறதா?”

படைவீரன் பதில் சொல்லவில்லை.

“குழந்தைகளுடன் உங்களுக்குச் சண்டையில்லையே. அதுதான் பிரச்சினை” என்றாள் அவள்.

அவன் சொன்னான்: “படைவீரர்களுக்கு யாரோடுதான் சண்டை?”

பின், சற்று முன்னே நகர்ந்து, முகத்தைப் படைவீரனின் அருகே கொண்டுவந்து, குரலைத் தாழ்த்தியபடி கேட்டாள்: “யார் அந்த ஏரோதின் விரோதி? அப்படிப் பிறந்தவன் யார்? ஒரு குழந்தையிடம் ஏன் ஏரொதுக்கு அவ்வளவு பயம்?”

“உனக்குத் தெரியாதா?” என்று கேட்டான் வீரன்.

‘தெரியாது” என்றாள் அவள்.

படைவீரன் கூறினான்: “யூதர்களின் ராஜா இங்கே பெத்லகேமில் பிறந்திருக்கிறார் என்று அவரைத் தேடி வந்த சாஸ்திரிகள் ஏரோதுவிடம் கூறினார்கள். ஏரோது பயந்துவிட்டான். அவர்கள் குழந்தையை ரகசியமாகப் பார்த்து ஆராதித்துவிட்டு ஓடிப் போய்விட்டார்கள். அந்தக் குழந்தையைத்தான் நாங்கள் தேடிக்கொண்டிருக்கிறோம். அவனைத்தான் நாங்கள் கொல்கிறோம்.”

அவன் தன் இரு கைகளையும் சேர்த்துக் குவித்து அதை நோக்கியபடியே கூறினான்: “யாருக்குத் தெரியும்? ஒருவேளை எனது இந்தக் கரங்களீல் தொங்கியபடியே யூதர்களின் ராஜா இன்று இறந்திருக்கலாம்.”

விடுதித் தலைவி கூறினாள்: “ஆம், யாருக்குத் தெரியும்.”

படைவீரன் முன்னே குனிந்து அவள் முகத்தைப் பார்த்துக் கேட்டான்: “இத்தனை ஆயிரம் குழந்தைகளின் இரத்தத்தின் வழியாகவா ஒரு ரட்சகன் வருகிறான்?”

அவள் ஒன்றும் சொல்லவில்லை.

படைவீரன் கைகளில் தலையைத் தாங்கியபடி விரல்களால் கண்களையும் முகத்தையும் தேய்த்துக் கொண்டு சொன்னான்: “உனக்குப் புரியாது. உனக்குத்தான் குழந்தைகள் இல்லையே. நான் கொலை செய்த குழந்தைகளின் முகத்தின் பதற்றத்தை நீ பார்க்கவில்லையே.”

சற்றுநேரம் இருவரும் ஒன்றும் பேசவில்லை. பின் விடுதித் தலைவி கூறினாள்: “பாவம்!”

படைவீரன் திடுக்கிட்டான். அவள் முகத்தை உற்று நோக்கிக் கொண்டு கேட்டான்: “யார்? யார் பாவம்?”

அவள் சொன்னாள்: “அந்தக் குழந்தை… யூதர்களின் வரப்போகிற ராஜா. யார் இந்த விதிகளை ஏற்படுத்தியது? நான் தாசியானதும், குழந்தைகளின் ரத்தத்தின் வழியாக அவரது வரவு அமைவதும் ஒரே விதியின் காரணத்தினாலா?”

சற்று நேரம் கழித்து அவள் மீண்டும் கூறினாள்: “ஒரு ரட்சகன் பெருமையோடல்லவா வரவேண்டும். அந்தக் குழந்தை இந்த ரத்தத்துக்கெல்லாம் பதில் சொல்ல வேண்டாமா? எப்படி இந்தக் கடனைத் தீர்க்கப் போகிறது அது?”

படைவீரன் சொன்னான்: “அவன் பிழைத்திருந்தாலல்லவா?”

இருவரும் மீண்டும் மௌனமானார்கள்.

“யாருக்குத் தெரியும்?” என்றான் படைவீரன் திரும்பவும். “ஒருவேளை யாரெனத் தெரிந்திருந்தால் நான் அவனைக் கொன்றிருக்க மாட்டேனோ என்னமோ?”

விடுதித் தலைவி கூறினாள்: “நேர்மாறாக, யாரென அறிந்திருந்தால், முதலில் நீங்கள் கொன்றது அவனாக இருந்திருந்தால், மற்றக் குழந்தைகள் எதுவும் இறந்திருக்காது.”

“ஆனால் அப்போது ரட்சகனின் வரவு நிகழவே முடியாதே. இப்போது அதற்கு ஒரு சாத்தியமாவது இருக்கிறதல்லவா?”

“உண்மைதான்” என்றாள் விடுதித் தலைவி. கைகளை நீட்டி அவன் கால் முட்டியை வருடினாள். “நமக்கு ரட்சகர்கள் வேண்டும். ரத்தத்தின் ஊடோ ஆரவாரத்தினூடோ அவர்கள் வரட்டும். படைவீரர்களுக்கும் வேசிகளுக்கும் ரட்சகர்கள் வேண்டும்.”

“ஆம்” என்றான் படைவீரன். “வென்னீர் தயாராகிவிட்டதா?”

உள்ளே தாளிட்டிருந்த அறையிலிருந்து ஒரு குழந்தையின் அழுகையொலி கேட்டது. உடன்தானே யாரோ அதை அமர்த்தினார்கள். படைவீரன் முகத்தில் ஒரு தளர்ந்த புன்னகை நிழலிட்டது.

“வேசிகள் விடுதியில் யாரும் ரட்சகனைத் தேடி வரவில்லை அல்லவா? எந்தப் பெண்ணின் குழந்தை அது? ஆண் குழந்தையா? இதுவரை பிச்சைக்காரர் யாருக்கும் விற்கவில்லையா?”

முகத்தில் எந்த உணர்ச்சியையும் காட்டாமல் விடுதித் தலைவி கூறினாள்: “அது எனது வீட்டிலுள்ள பூனைக்குட்டி. குழந்தையின் அழுகுரல் போலவே இருக்கிறது இல்லையா?”

படைவீரன் புன்னகைத்தான். “நீ பொய் சொல்ல சிரமப்பட வேண்டாம். அது யூதர்களின் ரட்சகனாயிருந்தால் எனக்கென்ன? குளிக்க வந்தவன் நான். வேலை முடிந்து ஒய்வெடுக்க வந்திருக்கிறேன். வென்னீர் தயாராகி விட்டதல்லவா?”

அவன் செருப்புக்களை கழற்றி ஓரமாக வைத்தான். விடுதியின் தலைவி உணர்ச்சியற்ற தன் முகத்தில் ஓர் அடங்கிய புன்சிரிப்பை வெளிப்படுத்தியபடி கேட்டாள்: “குளித்து முடித்ததும் என் புதிய பெண்ணை உங்களிடம் அனுப்பட்டுமா?’

“வேண்டாம்” என்றான் அவன். “குளிக்க வென்னிர் மட்டும் கொடு. இரத்தம் படாத ஓர் அங்கியும் வேண்டும். அது போதும்.” அவன் அவசரப்பட்டான். “குளிக்க வேண்டும்.”

விடுதித் தலைவி எழுந்து உள்ளே சென்றாள்.

படைவீரன் இரத்தம் படிந்த தன் அங்கியைக் கழற்றித் தரையில் எறிந்தான். குளிக்கும் அறையிலிருந்து பாத்திரங்களில் நீர் நிரப்பும் ஒலி கேட்டது. அவன் குளியலறைக்குச் சென்றான். அவனுடைய உடைகளையும் செருப்புகளையும் அவன் படுத்துறங்கிய விரிப்பையும் ஒரு வேலைக்காரி வெறுப்புடன் இழுத்துக்கொண்டு சென்றாள்.

நள்ளிரவு கடந்தபோது கட்டிலில் படைவீரன் குறட்டைவிட்டு உறங்கிக் கொண்டிருந்தான். உள்ளேயிருந்து தணீந்த பேச்சுக் குரல்கள் வெளிப்பட்டன.

ஒரு கதவு மெல்லத் திறந்தது. இருட்டில் இரண்டு பெண்களும் ஓர் ஆணும் படைவீரனின் கட்டிலைக் கடந்து சென்றனர். ஒரு பெண் தன் மார்போடு எதையோ சேர்த்துப் பிடித்திருந்தாள். அவர்கள் கதவைத் திறந்து தெருவில் நட்சத்திர ஒளியில் இறங்கினர். அங்கே ஒரு கோவேறு கழுதை அவர்களுக்காகக் காத்திருந்தது.

விடுதியின் தலைவி தன்னுடன் இருந்த பெண்ணிடமிருந்து அவள் மார்போடு அணைத்திருந்த குழந்தையை வாங்கினாள். அதன் முகத்தில் நட்சத்திர ஒளி விழும்படி இரு கைகளையும் உயர்த்தினாள். அதன் முகத்தை உற்று நோக்கியபடி, “பாவம்…பாவம் ராஜா” என்றாள். பின்னர் குனிந்து குழந்தையின் நெற்றியிலும் பிஞ்சுக் கால்களிலும் முத்தமிட்டாள். இதற்குள் அந்தப்பெண் கழுதையின் மேல் ஏறிவிட்டிருந்தாள். விடுதித் தலைவி குழந்தையை அவள் கையில் திரும்பிக் கொடுத்தாள். அவள் மீண்டும் அதை மார்போடு அணைத்துக் கொண்டாள். வீட்டில் உள்ளேயிருந்து மூன்று நான்கு பெண்கள் இருட்டில் நிசப்தமாக வெளியே வந்தனர். கழுதையின் மூக்குக் கயிற்றை அந்த ஆண் பிடித்திருந்தான். கழுதை மேல் இருந்த பெண் எல்லோரையும் பார்த்துக் கூறினாள்: “அடைக்கலம் தந்ததற்கு எங்கள் நன்றி. என் குழந்தையின் நன்றி. உங்களுக்கு எந்தப் பிரதி உபகாரமும் எங்களால் செய்யமுடியவில்லை.”

விடுதியின் தலைவி கூறினாள்: “உன் மகன் வளர்ந்து ராஜாவாகும்போது எங்களையும் ரட்சிக்கும்படி சொல். நாங்கள் தாசிகள்தான். ஆனால் அம்மா சொல்வதை அவன் கேட்பான்.”

கோவேறுக் கழுதை நடக்க ஆரம்பித்தது.

விடுதித் தலைவி முன்னால் விரைந்து வந்து சொன்னாள்: “அந்தப் படைவீரனையும். உங்களுக்கு நல்லதே நடக்கட்டும்.”

வீதியின் இடைவெளியில் திரும்பி ஆணும் கோவேறுக் கழுதையும் தாயும் குழந்தையும் இருட்டில் மறைந்தனர்.

வேசிகள் படைவீரனைக் கடந்து உள்ளே செல்லும்போது, அவன் உறக்கத்தில் முணுமுணுத்துக் கொண்டிருந்தான்: “வென்னீர் தயாராகிவிட்டதா?”

~~~0~~~