ஜெர்மனியின் மரத் திருடர்கள்
ஜெர்மனியர் பொதுவாகச் சிக்கனமாகவும், மிகவும் ஜாக்கிரதையாகவும் வாழ்க்கை நடத்துபவர்கள் என்று பொதுக் கருத்து உலகெங்கும் நிலவுகிறது. சட்டம் ஒழுங்கு போன்றனவற்றையும் ஜெர்மனியர் அதிகம் கறாராகக் கடைப்பிடிப்பவர்கள் என்று ஒரு அபிப்பிராயம் பொதுவில் உண்டு. [இது அத்தனை சரியானதல்ல என்பது அங்கு நிறைய பயணம் போனவர்கள் அல்லது வசிப்பவர்களுக்குத் தெரிந்திருக்கும். ஃபாஸ்பைண்டரின் படங்களை வைத்து ஜெர்மனி பற்றி ஒரு முடிவுக்கு வர முடியாது என்றாலும், கொஞ்சம் நேரடி அனுபவத்தில் ஜெர்மனியும் இதர மனித சமுதாயங்களின் பிறழ்வுகளிலிருந்து தப்பவில்லை என்பது நமக்குத் தெரியும். கிழக்கு ஜெர்மனி பெரும் ஊழல் சாம்ராஜ்யம் என்று சமீபத்தில் ஆவணங்களில் இருந்து தெரியவருகிறது. அது அரசின், அரசைச் சார்ந்த மக்களின் அறப் பிறழ்வில் எழுந்த ஊழல். முன்னாள் மேற்கு ஜெர்மனியில் வணிகம் சார்ந்த ஊழல் ஏராளம்; சமீபத்து வரலாற்றில் நாட்டில் நடந்த பெரும் அநீதிகளையும் ஜெர்மனி நேரடியாகச் சந்திக்கத் தயாரில்லை என்பதும் இருக்கிறது.]
இருந்தாலும், சிலருடைய அதிருஷ்டம் என்னவென்றால், அவர்கள் என்ன தவறு செய்தாலும் பழி அவர்கள் மேல் ஒட்டாது. தமிழகத்தில் ஆட்சியில் மாறி மாறி அமரும் பலர், எந்தக் களங்கத்தையும் பொருட்படுத்தாது தேர்தலில் நிற்பதும், மக்கள் பெரும் திரளாக வந்து அவர்களை ஆதரிப்பதும் இதற்கு வலுவான சான்றுகள். அடுத்தாற்போல, சில சமூகக் குழுக்களுக்கு அதிகாரத்திலிருந்து என்ன ஒதுங்கி இருந்தாலும் பழி தொடர்ந்து சுமத்தப்படும் நிலை தொடரும். அதையும் எளிதில் விளக்கி விட முடியாது.
இப்படித்தான்,ஜெர்மனியருக்கு ஒழுங்கு, நேர்த்தி, கறாரான நடத்தை, நேரம் தவறாமை போன்ற குணாதிசயங்கள் ஆழ ஊறிய சமூகப் பழக்கவழக்கங்கள் என்பதாகவும், ஒப்பீட்டில் தெற்கு யூரோப்பியர் எதற்கும் நம்பமுடியாதபடிக்கு ஊழல் பெருச்சாளிகள் என்றும் உலக அபிப்பிராயம் நிலவுகிறது. அது மட்டுமல்ல, ஜெர்மனியரே இப்படித்தான் கருதுகிறார்கள். தெற்கு யூரோப்பியர் என்கையில் ஸ்பெயின், போர்ச்சுகல், இடலி போன்ற நாடுகளைக் குறிக்கிறோம். பொதுவாகச் சொன்னால், கொஞ்சம் பழுப்புத் தோல், கருப்பு முடி இருந்தாலே அழுக்கு, ஊழல், பொய்மை போன்றன அம்மனிதர்களின் குணாதிசயங்களாக இருக்கும் என்பது வெள்ளைத் தோல், மஞ்சள் வெள்ளை (blond) முடி கொண்ட யூரோப்பியரின் மனச்சாய்வு.
இத்தனைக்கு நடுவில், சமீபத்தில் யூரோப்பில் பெரும் பொருளாதாரச் சரிவு நேரவும், கிரீஸ், இடலி, ஸ்பெயின், போர்ச்சுகல் ஆகிய நாடுகளின் பொருளாதாரங்கள் பாதாளத்தில் வீழ்ந்திருக்கின்றன. ஸ்பெயின், கிரீஸ் போன்ற நாடுகளில் வேலையில்லாத் திண்டாட்டம் சுமார் கால் பாக இளைஞர்களைப் பீடித்திருக்கிறது. அதாவது 25% வேலையில்லாத் திண்டாட்டத்தில் இருக்கின்றனர். ஜெர்மனியிலோ பொருளாதாரம் உச்ச கதியில் இயங்குகிறது. சோர்வில்லாத, பெரும் இயக்கத்திலிருக்கும் ஒரே யூரோப்பியப் பொருளாதாரம் ஜெர்மனி, ஒரு கட்டத்தில். கடந்த இரு வருடங்களில் நார்வே, ஸ்வீடன் போன்ற நாடுகள் சுதாரித்து மறுபடி மேலெழுந்து விட்டன. இருந்தும் ஜெர்மனியிலும் உலகப்போக்காகி விட்ட எரிபொருள் விலை உயர்வு என்பதற்குத் தாக்கம் இருக்கிறது.
இதனால் ஜெர்மனியர் அங்கு நிலவுகிற கடுங்குளிருக்கு எதிராக வீட்டை உஷ்ணப்படுத்த விறகுகளைப் பயன்படுத்தத் துவங்கி இருக்கின்றனராம். இந்த விறகுக் கட்டைகளை அவர்கள் நிறைய ஜெர்மன் காடுகளிலிருந்து திருடுவதாக ஜெர்மனியின் மாநில அரசுகள் இப்போது குறை சொல்லத் துவங்கி இருக்கின்றன. சில ஜெர்மன் வனப்பிரதேச நிர்வாகிகள் மரங்களைத் திருடுவோரைப் பிடிக்கும் நிமித்தமாக மரங்களில் RFID எனப்படும் கருவிகளைப் புதைக்கின்றனராம். இவை மரங்கள் எங்கிருந்தாலும், தேடினால் தாம் இருக்கும் இடத்தை ஒலி பரப்பிக் காட்டிக் கொடுத்து விடும். சட்டம், ஒழுங்கைக் கடைப்பிடிக்கும் ஜெர்மனியர், ‘பஞ்சம் வந்தால் பத்தும் பறந்து போம்’ என்ற பழமொழியை நிரூபிக்கின்றனரா?
-o00o-
இது முந்தைய பதிவோடு கொஞ்சம் தொடர்புடையது. ஆனால் விளைவு வேறு விதமாக இருக்கிறது. ஜப்பானிலும் கடந்த 20 ஆண்டுகளாகப் பொருளாதாரம் சரிவில் இருக்கிறது. பொருளாதாரம் என்பது ஒரு பொதுப்படையான சொல். அப்படிப் பேசுவது அதிகம் பலனில்லாத ஒரு அறிகுறியைப் பற்றிப் பேசுவதாக அமையும். அதை அடுக்கடுக்காக அல்லது கூறுகளாகப் பிரித்துப் பார்க்கையில்தான் உண்மை நிலை ஓரளவு புரியும்.
அப்படிப் பார்த்தால், ஜப்பானின் பெருநிறுவனங்களில் பல- குறிப்பாக 50களில் இருந்து 90களின் துவக்கம் வரை பெரும் வெற்றி அடைந்தவை இவை- சரியத் துவங்கியதும், 90களிலிருந்து 2000 வரை வேறு விதமான நிறுவனங்கள் உயர்ந்ததும் தெரியவரும். இந்த நிறுவனங்களிலும் பல 2000-2015 ஆண்டுகளின் இடைவெளியில் சறுக்கத் துவங்கி விட்டன. ஸோனி, பானஸோனிக் போன்ற நிறுவனங்கள் உதாரணமாக இப்போது ஒப்பீட்டில் மிகக் கீழ் நிலைக்கு வந்திருக்கின்றன. கார் போன்ற போக்குவரவு சாதனங்களைத் தயாரிக்கும் நிறுவனங்கள் இடையில் ஒரு 15 ஆண்டுகள் சரிந்து வீழ்ந்த பின், சமீபத்தில் மறுபடி பன்னாட்டுச் சந்தையில் ஓரளவு சமன நிலைக்கு வந்திருக்கின்றன. ஆனால் எல்லா நிறுவனங்களும் உயரவில்லை.
முழுதும் ஜப்பானியர் நிர்வாகத்தில் இருந்த நிறுவனங்களில், ஓரளவு வெளிநாட்டவரிடமும் அதிகாரத்தைப் பகிர்ந்து கொடுத்த பின்னர் சில நிறுவனங்கள் மறுபடி மேலெழுந்தன. (நீஸான், ஹாண்டா, டொயோடா போன்றவை). இவை அதிகாரப் பகிர்வைப் பரவலாக்கக் காரணம் அவற்றின் உற்பத்தியில் ஏராளமான பங்கு பல நாட்டுத் தொழிற்சாலைகளில் நடக்கத் துவங்கியது. குறிப்பாக அமெரிக்கா, சீனா, பிரேஸில் என்று பல நாடுகளில். ஆம் இந்தியாவிலும்தான். அந் நாடுகளில் நிலவும் அரசியல் பண்பாட்டுச் சூழலுக்கு ஜப்பானிய கட்டுப்பாட்டு அமைப்புகள், நிர்வாக முறைமைகள் அத்தனை உதவவில்லை. சமீபத்தில் இந்தியாவில் ஜப்பானியக் கார் நிறுவனம் ஒன்றில் தொழிலாளர் போராட்டம் நடந்து ஒரு மேலாளர் அடித்துக் கொல்லப்பட்டது குறித்துப் படித்திருப்பீர்கள்.
1950இலிருந்து ’90 கள் வரை உலகச் சந்தையில் பெரும் வெற்றி கண்ட ஜப்பானிய நிறுவனங்கள், உலகெங்கும் தமது உற்பத்திசாலைகளைத் துவக்க ஆரம்பித்த காலை, ஜப்பானில் உள்புறத்தில் வளர்ச்சி குன்றி, வேலை வாய்ப்புகள் சுருங்கி, பொருளாதாரத்தில் தேக்கம் துவங்கியது. உலகத் தொழிற்சாலையாக இருந்த ஜப்பானிடம் இருந்து பந்தயத்தின் அடுத்த பகுதிக்குத் தான் தயார் என்று சீனா கிளம்பி, ஜப்பானைப் பின் தள்ளி விடவும் ,ஜப்பானின் மக்கள் ஓய்வெடுக்கத் துவங்கி, சீக்கிரமே ஓய்ச்சலில் வீழ்ந்தனர். இந்த ஓய்ச்சல் நிலையின் ஒரு விளைவு, தற்கொலைகள் ஏகமாக அதிகரித்தன. அது குறித்த தகவலை கீழே உள்ள ஜப்பான் டைம்ஸின் செய்தி தெரிவிக்கிறது. சென்ற ஆண்டு, கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, தற்கொலைகள் வருடம் 30,000த்துக்கும் மேலிருந்த நிலையில் இருந்து ஓரளவு கீழிறங்கி 27,800 போல ஆகி இருக்கிறதாம். இந்தக் குறைப்புக்கு ஒரு காரணமாக, ஜப்பானிய அரசு தன் வழக்கமான மெத்தனத்திலிருந்து கொஞ்சம் நகர்ந்து தற்கொலைத் தடுப்பு முயற்சிகளுக்கு நிறைய நிதி செலவழித்து நாடெங்கும் அவற்றை அமல்படுத்தியது என இந்தப் பத்திரிகை கருதுகிறது. நாம் பார்க்க வேண்டியது என்னவென்றால், ஃபூகுஷிமா அணு உலை விபத்துக்குப் பிறகு, சூனாமியின் அழிப்புக்குப் பிறகு நாட்டில் பிரச்சினைகள் அடர்ந்த நிலையில் இந்தத் தற்கொலைகள் குறைந்திருக்கின்றன என்பதையே. இதை சமூக உளவியலாளர் எப்படி விளக்குவார் என்பதைக் கவனிக்கத் துவங்க வேண்டும்.
http://www.japantimes.co.jp/text/nn20130118a4.html
கீழே உள்ள தகவலில் ஸோனி நிறுவனம் அதன் நிதி நிலைமை மோசமானதால் தனது அமெரிக்கத் தலைமை அலுவலகக் கட்டிடத்தை விற்க நேரிட்ட செய்தி இங்கே உள்ளது.]
http://ajw.asahi.com/article/economy/business/AJ201301180052
இது ஹாண்டா நிறுவனம் இந்தியாவில் தன் தொழில்நுட்ப மையம் ஒன்றைத் துவக்குவது குறித்தது.
http://ajw.asahi.com/article/economy/biz_briefs/AJ201301180065
இது ஸுபரு நிறுவனம் சீனாவில் கூட்டு உற்பத்தி துவங்க உத்தேசித்திருப்பது குறித்தது.
http://ajw.asahi.com/article/economy/biz_briefs/AJ201301180062
-o00o-
ஜனத்தொகை சுருங்குவது என்பது ஜப்பானியரின் பிரச்சினையாகி 20 வருடங்களாகி விட்டன. ஆண் மையச் சமுதாயமாகவும், பெண்களைப் பொதுவிடங்களில் அதிகம் பொருட்படுத்தாமலும் இருந்த ஜப்பானியர்கள், 20ஆம் நூற்றாண்டில் பொதுக்கல்வி பரவலான பிறகு, 90களில் பெண்கள் தம் இரண்டாம் நிலையை ஏற்க மறுத்துத் தனியராக வாழ்வது மேல் என்று தேர்ந்தெடுக்க ஆரம்பித்தபோது நிலைமை மோசமாகி விட்டதை நன்கு உணரத் துவங்கினர்.
பொதுவாகப் பெரும் ஜனத்திரள் அளவில் மாறுதல்கள் தெரியத் துவங்குகையில் தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கத் துவங்கினால் அவற்றுக்கு விளைவு தெரிய ஆரம்பிக்க இன்னொரு 20 ஆண்டுகள் போல ஆகும். அதாவது அடுத்த தலைமுறை துவங்குகையில்தான் விளைவு தெரியும். அதன்படி ஜப்பானியர் தம் மனோபாவங்களையும், அமைப்பு முறைகளையும் ’70களில் மாற்றி இருந்தால் இன்று இந்த ஜனத்தொகைச் சுருக்கம் இன்னும் தொடர்ந்து கொண்டிராமல் ஆக்கி இருக்கலாம். ஜப்பானின் சமுதாயம் சமீப காலங்களில் விரைந்த மாறுதல்களை உடனடியாக ஏற்காத ஒரு தேக்க நிலையில் உள்ளதால், தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை, ஜனத்தொகைச் சுருக்கமும் நிற்கவில்லை.
இதன் பலப்பல விளைவுகளில் ஒன்றை முன்னொரு குறிப்பில் பார்த்தோம். தற்கொலைகள். பல முதியவர்கள் தம்மைப் பராமரிக்க யாரும் இல்லை என்று தற்கொலை செய்து கொள்கின்றனர் என்பது அந்தத் தகவலில் இல்லாத ஒன்று.
தற்கொலை செய்து கொள்பவர்களில் இளைஞர்களும் கணிசம். இதற்கு ஜப்பானின் பொருளாதாரம் சுருங்கியதும், நல்ல ஊதியம், நீடித்த கால வேலை உத்தரவாதம், ஓய்வூதியம் போன்ற நன்மைகளைக் கொடுக்கும் தொழிற்சாலை வேலைகள் இல்லாமல் ஆகிக் கொண்டிருப்பதும், புது வகை வேலைகளின் இயல்புக்கேற்ப இளைஞரகளைப் பயிற்றுவிக்க ஜப்பானியப் பல்கலைகளின் போதிப்பு மாறக் காலதாமதம் ஆனதால் சந்தையின் தேவைக்கு ஏற்ற தகுதிகளோ, வேலைப் பயிற்சியோ இல்லாத ஜப்பானிய இளைஞர்கள் நம்பிக்கை இழந்து தற்கொலை செய்யத் துவங்கினர் என்பதும் அந்தச் செய்தியில் கவனிக்கப்படவில்லை. இது இன்னமுமே கூடுதலாக முதியோரின் பராமரிப்புக்கு ஊறு விளைவிக்கிறது என்பதையும் நாம் உடனே அறிகிறோம்.
இந்த விபரீத விளைவுகளோடு இன்னொரு விளைவு, ஜப்பானில் அச்சுப் பத்திரிகைகளின் விற்பனை குறைந்து பல பத்திரிகைகள் மூடப்பட வேண்டிய நிலையில் உள்ளன என்பது. புத்தக விற்பனையும் குறைந்து வருகிறது. வருடத்துக்கு 1000 புத்தகக் கடைகள் மூடப்பட்டு வருகின்றனவாம். பத்திரிகைகளின் விற்பனை சுமார் 4 சதவீதம் சென்ற ஆண்டில் மட்டும் குறைந்து விட்டதாம். பல பத்திரிகைகள் தமிழ் வாரப்பத்திரிகைகள் வெகுகாலமாகப் பயன்படுத்திய உத்திகளைப் பயன்படுத்தி ஓரளவு தத்தளித்தபடி உயிரோடு இருக்கின்றன என்று செய்தி சொல்கிறது- அதாவது பிரபல எழுத்தாளர்களின் நாவல்களை வாராவாரம் தொடராகப் பிரசுரித்து விட்டுப் பின் புத்தகமாகப் பிரசுரிப்பது என்ற உத்தி. இதுவுமே சிறிது கால வெற்றிக்குப் பிறகு சலித்து விடும் என்பதால் அடுத்து என்ன செய்வது என்ற குழப்பத்தில் இருக்கிறது ஜப்பானியப் பத்திரிகை உலகு என்பது இந்தச் செய்தி.
http://www.japantimes.co.jp/text/fd20130113bj.html
ஜப்பானிய ஆண்கள் இப்போது காலம் தாழ்த்தித்தான் திருமணம் செய்து கொள்கின்றனராம். தன் பிழைப்பே பிரச்சினை என்றால் குடும்பத்தை வளர்த்துக் கொள்வதில் என்ன நாட்டம் இருக்கும்?
-o00o-
ஜப்பான் தன் நிலையை முன்னேற்றிக் கொள்ள பெண்களுக்குக் கூடுதல் வேலைவாய்ப்புகளைத் திறக்க வேண்டும் என்றும், குடியேறிகளை வரவேற்க வேண்டும் என்றும் ஒரு சிந்தனையாளர் கருத்து தெரிவித்ததை முந்தைய குறிப்பில் பார்த்தோம். இங்கு ஒரு கருத்துப் பரிமாறல் குழுமத்தில் இன்னொரு ஜப்பானியச் சிந்தனையாளர் குடியேறுதலையும், அன்னிய நாட்டுத் தொழிலாளர்/ சிந்தனையாளர்களையும் ஜப்பான் ஊக்குவித்து வரவேற்கவேண்டும் என்று கருத்து தெரிவிக்கிறார். யாரும் ஜப்பானிய முதலியம் உலகில் பல நாடுகளிலும் போய் மலிவு விலையில் வேலையாட்களைப் பெறுவதற்காக முதலீட்டை அங்கு எடுத்துப் போவதை நிறுத்தி, ஜப்பானிலேயே முதலீட்டைப் பெருக்கி, ஜப்பானியரின் வேலை வாய்ப்புகளைப் பெருக்க வேண்டும் என்று வலியுறுத்துவதாகத் தெரியவில்லை. முதலியத்துக்கு அப்படி ஒரு காவல்படை, அம்பு துளைக்காத இரும்புக் கவசம். இதுவும் உலகெங்கும் கிட்டும் ஒரு அபத்த நிலைதான்.
http://ajw.asahi.com/article/forum/politics_and_economy/east_asia/AJ201212310009
-o00o-
சீனா – தொழிற்சாலை வேலைகளும் பட்டதாரிகளும்
ஒரு புறம் யூரோப்பியர், ஜப்பானியர், அமெரிக்கர் போன்றாரெல்லாம் வேலைகளின்றித் திண்டாடுகின்றனர். பல பத்தாண்டுகளாக உழைத்துச் சேர்த்த பெருந்தனமும் ஜப்பானியரைப் பாதுகாக்கவில்லை. பல நூறாண்டுகளாக உலகில் பல வெள்ளையரல்லாத மக்களைக் கொன்று, மதம் மாற்றி, அடிமைகளாக்கி, கொடுங்கோல் ஆட்சி நடத்தி, எத்தி, சுரண்டிச் சேர்த்த பெரும் செல்வம் யூரோப்பியரைப் பாதுகாக்கவில்லை. உலகெங்கும் ஏகாதிபத்தியத் திமிரில் போர்களை நடத்தி, லத்தீன் அமெரிக்க மக்களைக் கொடுங்கோலர் ஆட்சியில் ஆழ்த்தி அந்நாடுகளின் இயற்கை வளங்களைச் சுரண்டிச் சேமித்த பெருந்தனம் அமெரிக்கர்களைப் பாதுகாக்கவில்லை. சீனாவிலோ இன்று வேலையில்லாத் திண்டாட்டம் அல்ல பெரும் பிரச்சினை. வேலைகள் ஒரு புறம் ஆட்களில்லாமல் கிடக்க, இன்னொரு புறம் இளைஞர்கள் தம் விருப்பமான வேலைகள் வந்தால்தான் வேலைக்குப் போவது என்று இருக்கிறார்கள். இதை ‘Sectoral imbalance’ என்று பொருளாதாரத்தில் சொல்வார்கள். மேம்போக்காகப் பார்த்தால் இது அத்தனை மோசம் இல்லையே என்று தோன்றும். உண்மையில் இந்த வகை அசமத்துவங்களைச் சீர் செய்வது கடினம். ஏனெனில் எந்த ஊக்குவிப்பு பெருவாரி மக்களைப் படித்தவர்களாக ஆக்குகிறதோ, அந்த ஊக்குவிப்பை அழிக்கவும் கூடாது, அதே நேரம் உடலுழைப்பே பிரதானமான வேலைகளுக்கும் ஆட்கள் வேண்டும். இது ஒன்றும் சுலபத்தில் தீர்க்கக்கூடிய பிரச்சினை இல்லை. ஒரு தீர்வு, தானியங்கி உற்பத்தி எந்திரங்கள். கருத்தியல் அளவிலேயே தானியங்கி எந்திரங்களைச் சீனக் கம்யூனிஸ்டு கட்சி எதிர்க்க வேண்டி இருக்கும். ஆனால் அது எதிர்ப்பதில்லை. அத்தகைய எதிர்ப்பு ஜனநாயக இந்தியாவில்தான் சாத்தியம்.
இந்தியாவில் இந்த பொருந்தா நிலைகள் பல பத்தாண்டுகளாக இருந்து வந்தன, இன்னும் இருக்கின்றன. இதை மறைக்கப்பட்ட வேலையில்லாத் திண்டாட்டம் என்றும் அறியலாம். ஏனெனில் படித்த படிப்புக்கு ஏற்ற வேலையில்லாது, ஏதோ எப்படியோ கிட்டிய வேலைகளில் மாட்டிக் கொண்டு பல வருடங்கள் உழலும் இளைஞர்களின் பிரச்சினை ஒரு புறம், இன்னொரு புறம் மேன்மேலும் படித்துக் கொண்டிருந்தாலும் எந்த வேலையும் கிட்டாத பிரச்சினை. படித்த படிப்புக்கு வேலை கிட்டாததால் உடலுழைப்பு வேலைகளுக்குப் போகத் தயங்கும் இளைஞர்களின் பிரச்சினை ஒரு புறம். தம்மிடம் இருக்கும் வேலைகளுக்கு நம்பத்தக்க, உழைத்து ‘முன்னேற’த் தயாராக உள்ள இளைஞர்கள் கிட்டவில்லை என்று குறை சொல்லும் நிறுவனங்கள் இன்னொரு புறம். இந்தப் பிரச்சினைகள் குறித்துத் தமிழிலேயே கடந்த பல பத்தாண்டுகளில் ஏராளமான சிறுகதைகள், குறுங்கவிதைகள், நாவல்கள் வந்திருக்கின்றன. அகில இந்திய அளவில் இன்னும் பெரும் எண்ணிக்கையில் இத்தகைய புதினங்கள் உண்டு. இந்த நிலை சீனாவில் பரவி வருகிறது என்று செய்தி.
இதெல்லாம் சந்தை சமுதாயத்தின் அடிப்படைப் பிரச்சினைகள், என்றுமே இருக்கும் என்று திறந்த பொருளாதாரத்தை முன்வைத்து வாதிடுவோர் சொல்கிறார்கள். மாறாக, இந்த வகைப் பிரச்சினைகள் பல நேரம் மூடிய பொருளாதாரங்களிலும் ஏராளமாகக் காணப்படும். இதை இந்தியா, கிழக்கு யூரோப் (சோவியத் அமைப்புகள்), சோவியத் ரஷ்யா போன்றவற்றில் எக்கச் சக்கமாகப் பார்க்க முடிந்திருக்கிறது. கையெழுத்துப் போட்டு விட்டு வேலைக்கு வராது தனியார் வியாபாரங்கள் செய்யும் அரசு ஊழியர்களை நாம் இந்தியாவில் பல பத்தாண்டுகளாக நிறையப் பார்க்க முடிந்திருக்கிறது. இதே இன்று சீனாவில் காணப்படுகிறது என்கிறார்கள்.
எல்லாப் பொருளாதாரங்களிலும் இந்த வகை ‘Structural imbalances’ என்பன தவிர்க்க முடியாதவை என்று ஒத்துக் கொண்டாலும், எத்தனை சீர்குலைவு ஏற்கத் தக்கது என்பது ஒரு கேள்வி. [இது குறித்து சொல்வனத்துக்கு யாரும் கட்டுரைகள் எழுதினால் பிரசுரிக்கத் தயாராக இருக்கிறோம்.]
இங்கே சீனாவில் தாம் படித்து கல்லூரிப் பட்டங்கள் வாங்கி இருப்பதால் தொழிற்சாலை வேலைகளுக்குப் போக புதுத் தலைமுறை இளைஞர்கள் தயங்குகிறார்கள் என்று செய்தி சொல்கிறது. படித்துப் பாருங்கள்.
-o00o-
லட்டைட்கள் எனும் மாஓயிச மூதாதைகள்
இதர குறிப்புகள் செய்திகளை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டவை. அடுத்தது ஒரு வரலாற்றுப் பின்னோக்குதல் கட்டுரையை அடிப்படையாகக் கொண்ட குறிப்பு. ஆனால் இன்றைய இந்தியாவுக்குப் பொருத்தமான கட்டுரைதான்.
இந்தியாவெங்கும் பெரும் தொழில் மாறுதல்கள் பல துறைகளிலும் நிகழ்ந்து வருகின்றன. நெடுங்காலமாக மாறாதிருந்த விவசாயத் துறையில் கூட பெரும் மாறுதல்கள். நெற்பயிரிடுதல், பொதுவாக எந்திர மயமாதலை அத்தனை ஊக்குவிக்காத ஒரு பயிர் முறை. அதில் கூட தஞ்சை மாவட்டத்திலேயே வயல்களில் எங்கும் பெரும் எந்திரங்கள் காணக் கிட்டுகின்றன. தென்னாற்காடு, வட ஆற்காடு மாவட்டங்களில் தொழிற்சாலைகளில் வேலை செய்யக் கிராமத்தில் உயர் நிலைப் பள்ளி வரை படித்திருக்கிற பெண்களை பஸ்களில் வந்து அழைத்துப் போகிறார்கள், அதனால் நாற்று நட ஆட்கள் இல்லை என்று விவசாய நிலங்கள் தரிசாகக் கிடக்கின்றன என்று கிராமத்து ஆண்கள் சாலையோரத்தில் அமர்ந்து அவர்களோடு உரையாடுகையில் குறை சொன்னார்கள். அவர்கள் நாற்று நடமாட்டார்கள், அது பெண்களின் வேலை என்றும் சொன்னார்கள். இது ஒரு மனச்சாய்வு. கால மாறுதல், தொழில் முறை மாறுதலை எதிர்த்து அடம் பிடிக்கும் மனோபாவம். இது என்னவோ பழைய பண்பாட்டில் ஊறிய ஆணாதிக்க இத்தியாதி அடைமொழிகளுக்குரிய மனிதர்கள் மட்டுமே கொண்டிருக்கும் மனோபாவம் அல்ல.
உலகெங்கும் இடது சாரியினருக்குத் தொழில் மாறுதல்கள் அத்தனை உவப்பானவை அல்ல. குறிப்பாக இந்திய மாவோயிசங்களுக்கு தொழில் மாற்றங்கள் சீனாவில் மட்டுமே நடக்க வேண்டும், இந்தியாவில் நடந்தால் அது ஏகாதிபத்திய சதி. அதனால் தொலைபேசி கூண்டுகள், ரயில் தண்டவாளங்கள், பள்ளிக் கூடங்களை எல்லாம் குண்டு வைத்துத் தகர்க்கும் அற்புத மனிதர்கள் அவர்கள். பழைய உலகை ஒழித்துப் புத்துலகு செய்வோம் என்று முழங்கிய ஒரு கருத்தியல், புதிதாக உருவாகி வரும் ஒரு உலகை எப்படியோ நொறுக்கிக் கற்காலத்துக்கு மக்களை அனுப்புவதே புரட்சி என்று மாறிப்போன விந்தைதான் என்ன? இதைத்தான் வரலாறு மறுபடி நிகழும்போது சோக நாடகமாகிறது என்று இவர்களின் பிதாமகர் சொன்னார் போலிருக்கிறது.
இந்தக் கட்டுரை இவர்களின் ஒரு காலகட்டத்து முன்னோடிகளைப் பற்றியது. லட்டைட்கள் எனப்பட்ட தொழிலாளர் பாதுகாப்பு இயக்கத்தினர் 19ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில் இங்கிலாந்தில் ஏற்பட்ட தொழிற்துறை மாறுதல்களை நிகழ விடாமல் தடுக்க உறுதி பூண்டு, தொழிற்சாலைகளை உடைத்தெறியவும், அப்படித் தொழில் மாறுதல்களைக் கொணர்வோரைக் கொலை செய்யவும் முனைந்தனர். அவர்களின் நோக்கம் மேலான நோக்கமாக இருக்கலாம், ஆனால் வரலாற்றில் தாம் எச்ச சொச்சங்களாக ஆன களிம்பு என்பது அவர்களுக்குத் தெரிந்திருக்கவில்லை. அவர்களை அரசும், ராணுவம். போலிஸ் ஆகிய ‘அடக்கு முறை’ அமைப்புகளும் ஒழித்துக் கட்டின. பிறகு ஏற்பட்ட பெரும் தொழிற் ‘புரட்சி’ இன்று என்ன நிலைக்கு உலகைக் கொண்டு நிறுத்தி இருக்கிறது என்று நமக்குத் தெரியும். இந்த லட்டைட்கள் யார், அவர் என்ன முயன்றனர், அந்த முயற்சி எப்படித் தோற்றது என்பன குறித்த ஒரு சிறு கட்டுரை இது. படித்தால் இன்றைய இந்திய சமுதாய நிலைகள் குறித்த ஒரு கண்ணாடிப் பிரதிபலிப்பு கிட்ட வாய்ப்புண்டு.
இது யூரோப்பில் வாழ்வுத் தரம் வீழ்ந்திருந்த இன்னொரு காலம் பற்றிய ஒரு கட்டுரை. ஆனால் இதிலும் வாழ்வுத்தரம் ஒரு சமூகத் தளத்தினருக்கு வீழ்ந்து வருகையில் இன்னொரு தளத்தினருக்கு வாழ்வுத் தரம் மிக உயர்ந்து வருவது நேர்ந்ததாலேயே பெரும்பிரச்சினை எழுந்தது என்று தெரிகிறது. இங்கிருந்துதான் கம்யூனிச சிந்தனைக்கு வித்து விழுந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.