மகரந்தம்

a1

ஆப்பிரிக்காவை அழிக்கும் போலி மருந்துகள்: ஆப்பிரிக்காவில் எய்ட்ஸ், ஆப்பிரிக்காவில் கடும் வறட்சி, ஆப்பிரிக்காவில் பெரும் பஞ்சம், ஆப்பிரிக்காவில் உள்நாட்டுப் போர் – என்று பெருமைப்படமுடியாத விஷயங்களின் பட்டியலில் முதன்மையாக இருக்கும் ஆப்பிரிக்காவில் போலி மருந்துகளின் எண்ணிக்கை கட்டுக்கடங்காமல் பெருகிவிட்டது. மலேரியா போன்ற தொற்று நோய்களுக்கான மருந்துகளில் கணிசமான எண்ணிக்கையில் சீன, இந்திய போலி மருந்துகள் பெருகிவிட்டன. சீனர்கள் இந்த விஷயத்தில் பணத்தைத் தவிர வேறெதுவும் கவலைப்படுவதாக இல்லை, ஆப்பிரிக்காவின் எல்லைகள் கண்காணிக்க முடியாத சல்லடைகளாக இருக்கின்றன. ஆப்பிரிக்க சுகாதார அமைப்பு ஒழுங்குபடுத்தப்படாததாக இருப்பதால் போலி மருந்துகளின் எண்ணிக்கையும் அதற்கு ஒவ்வொரு ஆண்டும் பலியாகும் துயரர்களின் எண்ணிக்கையும் துல்லியமாகக் கிட்டவில்லை. இருந்தாலும்கூட, உகாண்டா, தான்சானியா முதலான தேசங்களில் கிடைக்கும் மலேரியா மருந்துகளில் மூன்றுக்கு ஒன்று போலியானவை, தரக்குறைவானவை. இந்தியா மற்றும் சீனாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் இம்மருந்துகள் ஆப்பிரிக்க உயிர்களைக் கொல்கின்றன என்பது மட்டுமில்லை கவலை, இம்மருந்துகளை எதிர்க்கக்கூடிய ஆற்றல் மிகுந்த கிருமிகள் உருவாகவும் வீரியமற்ற இந்த போலிகள் காரணமாகிவிடக் கூடும் என்பது இன்னுமே பெரிய கவலை தருவதாகும். இது உலகெங்கும் உள்ள மனிதர்களையே அச்சுறுத்தும் பிரச்சினையாக பேருருப் பெறும் ஆபத்துள்ள ஒன்று. கார்டியன் செய்தித்தாளின் குறிப்பு இது :

http://www.guardian.co.uk/world/2012/dec/23/africa-counterfeit-medicines-trade

oOo

h1

அமெரிக்காவில் பெருகும் வைக்கோல் திருட்டு: திருடத்தான் திருடுகிறார்கள், வைக்கோலையா திருடுவார்கள். வைக்கோல் நிறம் தங்க நிறம் என்பதால் அதைத் திருடிக் கொண்டு போனார்களா என்று கேட்கத் தோன்றுகிறதா? அப்படித்தான் என்று வைக்கலாம். சமீபத்தில் அமெரிக்காவில் பரவலாக வறட்சி. அதனால் நிறையப் பகுதிகளில் பயிர் விளைச்சல் குறைந்ததோடு, வைக்கோலும் குறைந்து விட்டது. அமெரிக்காவோ உலகில் உள்ள சில நாடுகளில், மாடுகளைக் கசாப்புக் கூடங்களுக்காக வளர்ப்பதில் முதன்மையான நிலையில் உள்ள நாடு, இதை விட ஆர்ஜண்டீனாதான் அதிகம் மாமிசத்துக்காக மாடு வளர்ப்பதில் மேலிடத்தில் இருக்கும் என்று சொல்லலாம்.

வறட்சியால் மாடுகள் மேய நிலத்தில் ஏதுமில்லை, தீவனம் வாங்கி அவற்றை வளர்க்குமளவு விளைச்சல் இல்லாமையால் நொடித்திருக்கும் விவசாயிகளிடம் பணமும் இல்லை. மாடுகளை என்னதான் செய்வது? சாகவா விட முடியும்? அதுதான் வைக்கோல் திருட்டு.

அது மட்டும்தான் திருடுகிறார்களா? திராட்சைத் தோட்டங்களில் இருந்து உயர்தரத் திராட்சைகளைத் திருடுகிறார்கள். இவை மிக உயர்தர மது தயாரிக்கவென அரும்பாடுபட்டு வளர்க்கப்படுபவை. தவிர தேன் கூடுகளைத் திருடுகிறார்கள். அது தேனுக்காகவா? இல்லை. தேன் கூடுகளில் உள்ள தேனீக்களை அமெரிக்காவில் வாடகைக்கு விடுவார்கள். பழத் தோட்டங்களில் மகரந்தச் சேர்க்கை இல்லாது மரங்களில் பழங்கள் விளையாதாமே, அதற்குத் தேனீக்கள் தேவை. அந்தத் தேனீக்களை வாடகைக்கு விடுவதற்கென்று வளர்ப்பவர்கள் உண்டு. அவர்களின் தேனீக் கூடுகள் அவ்வப்போது புதுப் புது இடங்களுக்குப் போகத் தயாராக வண்டிகளில் இருக்கும். அப்படியே வண்டிகளோடு தூக்கிக் கொண்டு போக வசதி!

தவிர நம் ஊரைப் போல அமெரிக்காவிலும் இப்போது காயலான் கடையில் உலோகங்களைப் போடுவது லாபகரமாகி இருக்கிறதால் வயல்களில் நிற்கும் பழைய எந்திரங்கள், உடைசலோ இல்லையோ உலோகப் பொருட்கள் எல்லாமும் திருடப்படுகின்றனவாம்.

அதான், இந்தியா அமெரிக்காவாகிக் கொண்டிருக்கிறது, அமெரிக்கா இந்தியாவாகிக் கொண்டிருக்கிறது. என்ன செய்வது, ஓடம் வண்டியிலேறுவது ஒரு காலம், வண்டி ஓடத்தில் ஏறுவது இன்னொரு காலம் எனலாமா?

http://www.chron.com/news/nation-world/article/Hay-thieves-may-be-last-straw-for-farmers-4180658.php

oOo

d1

அமெரிக்காவின் வறட்சிப் பிரதேசங்கள்: தொடர்ந்த வறட்சியின் காரணமாக அமெரிக்காவில் ஒபாமா அரசு அதன் நான்கு மாகாணங்களில் பெரும்பகுதிகளை இயற்கைப் பேரழிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளாக அறிவித்தது. அதிக அளவில் கோதுமை பயிரிடப்படும் கான்ஸாஸ் மாகாணம் முழுவதும் கடும் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளது. ஒக்லஹாமா மாகாணம் கடந்த இருமாதங்களில் வழக்கமாகப் பெய்யும் மழையில் ஒரு சிறு அளவே பெற்றுள்ளது. கடந்த 118 ஆண்டு காலங்களில் மிக அதிகமான வெப்ப நிலை சென்ற வருடம் இப்பகுதிகளில் நீடித்தது என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாண்டு ஜூலை மாதங்களில் தேசத்தின் அறுபது சதவிகித நிலப்பகுதியில் சிறிது கூட மழை பெய்யவில்லை, ஆறு மாதங்களாகியும் அதுதான் நிலைமை. இந்த வறட்சியால் சோளம் மற்றும் சோயா பயிர்கள் கடுமையாகச் சேதமடைந்தன. இவற்றின் விலையும் முன்னெப்போதும் இல்லாத அளவு மிகுதியாக அதிகரித்திருக்கிறது.

மேலும் வாசிக்க http://www.guardian.co.uk/environment/2013/jan/10/drought-damaged-states-poor-outlook

oOo

g1உலகெங்கும் இயற்கைக் குளறுபடிகள்: வறட்சி மட்டுமா பிரச்சினை? இல்லை. 2012 அமெரிக்காவின் வரலாற்றில் கடந்த சில நூறாண்டுகளில் மிக உஷ்ணமான ஒரு வருடம் என்று சொல்கிறார்கள். தவிர சீனாவில் கடுங்குளிரில் ஆயிரக்கணக்கான வீடுகள் இடிந்தன- தொடர்ந்த பனிப் பொழிவின் சுமை தாங்காது மேல்தளம் இடிந்திருக்கிறது. ப்ராஸிலில் அதிசயமாக வறட்சி. அமேஸான் மழைக்காடுகள் நிரம்பிய நாடு இது. பிரிட்டனில் நச நசவென்று மழை பெய்யும், அடித்துப் பெய்யாது. சென்ற வருடம் கொட்டித் தீர்த்த மழையில் பல ஊர்கள் மூழ்கி, மக்களைப் படகுகளில் போய்க் காப்பாற்றினார்கள். மேற்கு ஆசியாவில் சுமாராகக் குளிரும் வழக்கமாக. இந்த வருடம் அடர் பனிப்பொழிவு. ஆஸ்திரேலியாவில் 40டிகிரி ஸெல்ஸியஸுக்கு வெப்பம் சிட்னி மாநகரருகே. பல்லாயிரக்கணக்கான ஏக்கர்களில் காட்டுத் தீ எரிந்து கொண்டிருக்கிறது. இன்னொரு புறம் நார்வே அருகில், கிரீன்லாந்தருகில், ஐஸ்லாந்தருகில் எல்லாம் ஆயிரமாண்டுகளாகக் கட்டிக் கிடந்த பனிப்பாளங்கள் உருகி நீராகின்றன. சில இடங்களில் அமெரிக்க ஐக்கிய நாட்டின் அளவுக்குப் பரந்த பனிக்கட்டித் தளங்கள் உருகி விட்டனவாம்.

முந்தைய குறிப்பில் சொன்னது போலத் தமிழ்நாட்டிலோ வறட்சி, தென் மாநிலங்களிலேயே வறட்சி. வட மாநிலங்களில் கடும் குளிர். போகப் போக இந்த தட்ப வெப்ப நிலை மாறுதல்கள் மேன்மேலும் சீற்றமடையவே வாய்ப்பு அதிகம் என்று வானிலை ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்களாம். இதை எல்லாம் சொல்வது நியூயார்க் டைம்ஸ் –
http://www.nytimes.com/2013/01/11/science/earth/extreme-weather-grows-in-frequency-and-intensity-around-world.html?hpw&_r=0&pagewanted=all

oOo