துயர்களில் இருந்து மீட்பு – மிஹாய் சீக்சென்ட்மிஹாயி

image1

ஒருவர் வாழும் காலகட்டமும், அவர் வாழ நேரும் சமுதாய சூழலும் அவருக்கு வாழ்க்கையில் வெற்றி என்பது குறித்த வரையறையை உருவாக்கி அளிக்கின்றன. அந்த வெற்றியை அடைவதிலேயே மகிழ்ச்சி இருப்பதாக கருதப்படுகிறது. இதை நோக்கியே அனைவரும் இயந்திர கதியில் ஓடுகின்றனர். பலருக்கும் இந்த வெற்றியை முழுவதும் அடைய முடிவதில்லை. வாழ்கையின் பேரிடர்கள் குறுக்கிடுகின்றன. வெற்றியை அடைய முடிந்த மற்றவர்களுக்கும் ஒரு ஏமாற்றம் மிஞ்சுகிறது. நடுவயது நெருக்கடியை எதிர்கொள்கின்றனர். அவர்கள் கற்பித்து கொண்ட இலக்கு மகிழ்ச்சியை அளித்ததா என்று ஐயப்படுகின்றனர். வாழ்வின் பொருள் கை நழுவிப் போனதாக உணர்கின்றனர்.

இது நிகழும்போது மனிதர்கள் வெவ்வேறு வகையான எதிர்வினையை ஆற்றுகிறார்கள். சிலர் எஞ்சி இருக்கும் தங்கள் வாழ்கையைச் சுற்றித் தடுப்பு அரண்களை அமைத்து, இருப்பதைக் காப்பாற்றிக் கொண்டு, தங்களுக்குள் ஒடுங்கியவர்கள் ஆகிறார்கள். சிலர் மனச் சோர்வினால் பீடிக்கப்பட்டு, அதில் அமிழ்ந்து போகிறார்கள். சிலர் மட்டுமே வாழ்க்கைக்கு வேறு அர்த்தம் கொடுத்து மீண்டு வர முயல்கிறார்கள். அவர்கள் தங்களுக்கான இலக்குகளை உருவாக்கிக் கொள்கிறார்கள்.அதை நோக்கிய தங்கள் பயணத்தில் நிறைவை தேடுகின்றனர். ஃப்ளோ- த க்ளாஸிக் ஒர்க் ஆன் ஹௌ டு அசீவ் ஹாப்பினெஸ் (Flow – The classic work on how to achieve happiness) என்ற இந்த புத்தகம், மனித மனதின் மகிழ்ச்சியான நிலை என்ன என்பதையும், அந்த நிலையை ஒருவர் பிரக்ஞையுடன் உருவாக்கிக் கொள்வதையும் ஆராய்கிறது. மனிதர்கள் தங்கள் துயர்களில் இருந்து மீண்டு வருவதற்கான திறவுகோல் அப்படி உருவாக்கிக் கொள்வதிலேயே இருக்கிறது என்கிறார், இருபது வருடங்களுக்கு மேல் மகிழ்ச்சி குறித்தும் படைப்பாற்றல் குறித்தும் ஆய்வுகள் மேற்கொண்டு வரும் ஹங்கெரிய-அமெரிக்கரான மனோத்துவ நிபுணர் மிஹாய் சீக்சென்ட்மிஹாயி (Mihaly Csikszentmihalyi)

mihaly-csikszentmihalyi

[Mihaly Csikszentmihalyi]

அனுபவங்கள் என்பவை புலன்கள் வாயிலாக ஒருவருக்கு வந்து சேர்வன. புலன்களால் உள்வாங்கக் கூடிய ஏராளமான நிகழ்வுகள் வெளியே நிகழ்ந்து கொண்டே இருக்கின்றன. ஆனால் இதில் ஒரு சிலவே மனிதனின் பிரக்ஞையில் நுழைகின்றன. கொட்டிக் கிடக்கும் ஏராளமான அனுபவங்களில் இருந்து சிலவற்றை மட்டுமே பிரக்ஞையில் கொண்டு வந்து சேர்ப்பவை  ஒரு மனிதரின் உள்ளார்ந்த இச்சைகளும், அந்த இச்சைகளினால் அவர் உருவாக்கி கொண்ட இலக்குகளும் மட்டுமே. இதனால் தாம் செய்யச் சாத்தியமான பல்வேறு செயல்களில் இருந்து மனிதர்கள் சிலவற்றை மட்டுமே தேர்ந்து எடுக்கின்றனர். இவ்வாறான இலக்குகளும், அனுபவங்களும் சேர்ந்தே ஒருவரது தன்னிலையை உருவாக்குகின்றன. இந்தத்  தன்னிலை மீண்டும் குறிப்பிட்ட வகையான அனுபவங்களை நோக்கிச் செல்கிறது. அனுபவங்கள் தன்னிலையை உருவாக்குவதும், தன்னிலை தன இலக்கிற்கு ஏற்ற அனுபவங்களைத் தேடுவதும் ஒரு சுழற்சி.

மகிழ்ச்சியற்ற நிலை என்பது இந்தத் தன்னிலை தன் இலக்குகளை அடைவதில் ஏற்படும் தடையே. வெற்றிகரமான வியாபாரி ஆக வேண்டும் என்ற இலக்கிற்கு நாட்டின் பொருளாதாரச் சூழல் தடையாகலாம். மகிழ்ச்சியான குடும்ப வாழ்வை ஒரு மரணம் புரட்டிப் போடலாம். இவ்வாறு நிகழும் போது தன்னிலை தன் ஒழுங்கை இழக்கிறது. கலைக்கப்பட்ட தேன்கூட்டின் தேனீக்களாக எண்ணங்கள் அலைந்து, பறந்து துன்பத்தில் ஆழ்த்துகின்றன. அவற்றை எப்படி மறுபடியும் கூட்டுக்குள் அடைப்பது. புறச்சூழல்களை மாற்ற முடியாது. ஆனால் ஒருவருடைய அகச் சூழலை மாற்றி அமைக்க முடியும். தன்னிலையை வேறு இலக்குகளைக் கொண்டு மாற்றிக் கட்ட முடியும். இதற்கு முதற்படியாக மனம் தான் அடையச் சாத்தியமான ஆகச்சிறந்த நிலையாகிய பிரவாக நிலையைக் (flow state) கண்டு கொண்டு, அதை வலிந்து உருவாக்குவதற்கான முயற்சியில் தொடங்க வேண்டும் என்கிறார் மிஹாய் சீக்சென்ட்மிஹாயி.

இந்தப் பிரவாக நிலை என்பது என்ன?இது ஒரு செயலை முழு கவனத்துடன் வேறு சிந்தனைகளே இல்லாது செய்யும்போது உருவாகக் கூடிய ஒரு ஆனந்த நிலை. ஒவ்வொருவருமே இந்த நிலையை ஏதாவது ஒரு தருணத்தில் உணர்ந்திருப்போம். ஒரு வேலையில் மூழ்கி இருக்கும் போது நேரம் போவதே தெரியாமல் இருப்பது மற்றும் அந்த வேலையை முடிக்கும் போது வரும் உற்சாகம் போன்றவை. கலைஞர்கள், ஓவியர்கள்,அறுவை சிகிச்சை நிபுணர்கள், மலையேறிகள்,விளையாட்டு வீரர்கள் போன்றவர்கள் இந்த நிலையை அதிகமும் அடைகின்றனர் என்கிறார் மிஹாய். மகிழ்ச்சியை உருவாக்கும் இந்தச் செயல்களை, வெறும் இன்ப நாட்டத்தினைக் கருத்தில் கொண்டு செய்யும் செயல்களில் இருந்து பிரித்துப் பார்த்தல் அவசியம். நாளெல்லாம் தொலைக்காட்சி முன் அமர்ந்து பொழுதைப் போக்கும் ஒருவர் ஒரு மேலோட்டமான இன்ப நிலையில் இருக்கிறார். ஆனால் ஒரு போதும் அவர் செயற்பிரவாகத்தின் ஆனந்த நிலையை அடைவதில்லை எனும் மிஹாய் இந்த நிலை குறித்த கீழ்க்கண்ட வரையறைகளை முன்வைக்கிறார்.

flow-1

௧) திறனும் சவால்களும் சந்தித்தல்

இங்கு திறன் என்பது உடம்பால் செய்யப்படும் உழைப்பை மட்டும் குறிப்பது இல்லை. ஒரு புத்தகத்தைப் படிப்பதும், ஓவியத்தை ரசிப்பதும் கூட திறனையும் உழைப்பையும் கோருகின்ற செயல்களே. செயல் அளிக்கும் சவால், திறனின் அளவை பொறுத்து அமைதல் அவசியம். இரு சமமான ஆட்டக்கார்கள் ஆடும் போதே ஒரு டென்னிஸ் ஆட்டம் மகிழ்ச்சியை தர முடியும். விளையாட்டுத் திறனில் எட்ட முடியாத இரு வேறு நிலைகளில் ஆடும் ஆட்டக்கார்கள் அதில் பிரவாக நிலையை அடைவது இல்லை.

௨) முழு உளசக்தியையும் கோரி நிற்றல்

செயலும் செய்பவனும் ஒன்றாகும் நிலையிலேயே பிரவாக நிலை சாத்தியமாகிறது. இந்த நிலையை அடைய ஒருவரது முழு உளசக்தியும் அதில் செலுத்தப்பட்டிருக்க வேண்டும். செயலின் போது ஏற்படும் கவன சிதறல்கள் இதை சிதறடிக்கின்றன. ஒட்டுமொத்தத் தன்னிலையும் செயல்களில் ஈர்க்கப்பட்டிருக்கும் போது கவலைக்கான இடம் இருப்பதில்லை.

௩) தெளிவான இலக்குகளும் பின்னூட்டுகளும்

செயல்களுக்குத் தெளிவான இலக்குகள் அவசியம். வெற்றியும் தோல்வியும் தெளிவாக வரையறை செய்யப்படுவது தேவை. ஆனால் இலக்குகள் எளிதாக இல்லாமல் சவாலை அளிக்க வேண்டும். ஒருவர் நாள் முழுதும் மெத்தையில் படுத்திருப்பேன் என்ற இலக்கை வைத்துக் கொள்வதில் எந்தப் பொருளும் இல்லை. அது எந்த வகையான சவாலையும் அளிப்பது இல்லை. சில செயல்களில் இலக்குகள் தெளிவில்லாமல் இருக்கும்.உதாரணமாக ஒரு பாடலாசிரியர் என்ன பாடலை எழுத வேண்டும் என்ற இலக்கை வைத்துக் கொண்டு செயல்படுவதில்லை.ஆனால் எழுதி முடித்ததும் அது அவர் நினைத்ததுதானா என்று அவரால் சொல்ல முடியும். அந்த செயலின் வெற்றி தோல்வியை அவரால் உணர முடியும்.

௪) தன்னிலை மறத்தல்

மகிழ்ச்சி அளிக்கும் செயல்களில் தன்னிலை மறக்கப்படுகிறது. தன்னிலை அழிவதில்லை அனால் அது குறித்த கவனம் இல்லாமல் போகிறது. செயலாக மாறி நிற்கும் ஒருவரின் மனது தன்னை மறந்து செயல் தரும் இன்பத்தில் திளைக்கிறது. இந்த அனுபவத்தை அடைய அந்த செயல் மனதிற்குகந்ததாக இருத்தல் அவசியம். பிரவாக நிலையில் இருந்து மீண்டு வருபவர் ஒரு பொழுதும் பழையவராக மீளுவதில்லை. அவரது தன்னிலை மேலும் செறிவாக, ஒருங்கிணைந்து, மேம்பட்ட திறன்களுடன் மீளுகிறார்.

௫) கால பிரக்ஞையில் மாற்றம்

இரவு பகல் சுழற்சியின் ஒழுங்கே காலமாக அளக்கப்படுகிறது. பிரவாக நிலையில் இருப்பவர்களுக்குக் காலம் வேறு கதியில் இயங்குகிறது. பல மணி நேரங்கள் சில நிமிடங்களாக தோன்றலாம். சில கணங்கள் பல மணி நேரமாகத் தோன்றலாம். பாலே நடனக்காரர்கள் சிலர் சில வினாடிகளே எடுக்க கூடிய ஒரு முழுச்சுற்று பல நிமிடங்கள் நீள்வதாக நினைப்பதும் கூட இவ்வாறு காலப் பிரக்ஞையில் ஏற்பட்ட மாற்றத்தின் விளைவே.

பிரவாக நிலையின் பல கூறுகளை விளக்கும் மிஹாய் ஒருவர் வாழ்க்கையின் முறிந்த கணங்களில் இருந்து வெளி வருவதற்கு இந்த நிலையை முயன்று அடைவதற்கான பயிற்சியை மேற்கொள்ள வேண்டும் என்கிறார். இது பல்வேறு செயல்களில் அடையப் பெறலாம்.விளையாட்டு, சிந்தனை, மேலான உறவுகள், கலைகள், வேலை என்று பல செயல்கள் இந்த நிலையை அளிக்கக் கூடியன. மேற்சொன்ன ஒவ்வொன்றிலும் பிரவாக நிலையை அடைவது எப்படி என்று எடுத்துகாட்டுகளுடன் கூடிய விளக்கங்கள் புத்தகம் எங்கும் விரவி இருக்கின்றன.

இறுதியாக வாழ்வை அர்த்தப்படுத்துவது எப்படி என்ற இடத்தில் புத்தகம் நிறைவுறுகிறது. இதற்கு விடையாக அவர் அளிப்பது முழு வாழ்க்கைக்கும் செல்லுபடியாகக் கூடிய ஒரு இலக்கை உருவாக்கிக் கொள்ளுதல். அது சமுதாயம் உருவாக்கி அளித்த இலக்காக இல்லாமல் ஒவ்வொருவரும் தனக்குத் தானே ஏற்படுத்திக் கொள்ளும் இலக்காக இருக்க வேண்டும். மேலும் அது ஒருவருடைய திறமையிலிருந்தும், தனித்தன்மையில் இருந்தும் உருவாகி வருவதாக இருக்க வேண்டுமே அன்றி பணம், பதவி, சமூக அந்தஸ்துகளைக் குறியாகக் கொண்டு உருவானதாக இருக்கக் கூடாது. தன் சுயத்திற்கு உண்மையான செயல்களைச் செய்யும்போது மட்டுமே கவனமும் அர்ப்பணிப்பும் கூடி பிரவாக நிலை சாத்தியமாகிறது. இப்படிப்பட்ட அன்றாடச் செயல்கள் வாழ்க்கைக்கான மொத்த இலக்கை நோக்கிய நகர்வாக இருக்கும்போது நாட்கள் பொருள் படுகின்றன.

வாழ்க்கை பிரச்சினைகளுக்கான மொத்தத் தீர்வாக, செயலையும் அதன் மூலமாக வரும் மகிழ்ச்சியையும் மட்டுமே முன்னிறுத்துவது ஒரு வகையில் எளிமைப் படுத்துவதாக தோன்றினாலும், மிஹாயின் இந்த கோணம் நிராகரிக்க கூடியது அல்ல. பல வருட ஆராய்ச்சியின் முடிவுகளை சாமானியனும் படிக்கும் வகையில் எழுதப்பட்ட நல்ல புத்தகம்.