[குறுநாவல்] ஒற்றாடல் – பகுதி 1

chola4

பாகம் – 1

காட்டூர்க் கோட்டை

காட்டூர்க் கோட்டை தரை மட்டமாகி இருந்தது..

பேச்சி மலையின் மேலிருந்து பார்க்கும் போது பெரும் புழுதிப் புகை கிளம்புவது தெரிந்தது..

என் உள்ளம் கொதித்தது. கைகள் நடுங்கின.

“போகலாமா? இப்பொழுது கிளம்பினால் பள்ளியூர் போகச் சரியாக இருக்கும்”, என்றான் வழுதி.

நான் அவனைத் திரும்பிப் பார்த்தேன். சற்றுத் தள்ளி, ஒரு பாறையின் மேல் சாய்ந்து அமர்ந்திருந்தான். வாயில் வெற்றிலை. நான் பார்க்கும்போது சத்தத்துடன் அதைத் துப்பினான்.

என் மனதில் எழுந்த கோபத்தை அடக்க முயன்று தோற்றேன்.

“என்னுடைய முதல் போர் இது”, என்றேன்.

அவன் என்னைத் திரும்பிப் பார்த்தான்.

“வாழ்த்துக்கள்” என்றான்.

“புறமுதுகிட்டு ஓடுகிறோம்”

அவன் எழுந்து குதிரையைத் தட்டிக் கொடுத்தான்.

“நல்ல வேளை குதிரை கிடைத்தது. இந்த மலைகளில் குதிரையில்லாமல் தப்பி ஓடுவது கஷ்டம்”, என்றான்.

“பல முறை ஓடிப்  பழக்கம் போலிருக்கிறது?” என்றேன் நான்.

அவன் ஏறிக் கொண்டான். என்னைப் பார்த்துக் கை நீட்டினான்.

நான் தயங்குவதைப் பார்த்துச் சிரித்தான்.

“ஒற்றர்கள் புறமுதுகிட்டு ஓடலாம். சாத்திரத்திலே சொல்லியிருக்கிறார்கள்”, என்றான்.

குதிரை தட்டுத் தடுமாறி காட்டுக்குள் நுழைந்தது.

***

இரண்டு நாட்களுக்கு முன்னால் நாங்கள் காட்டூர் வந்து சேர்ந்திருந்தோம். கோட்டையின் வாசல் மேல் புலிக்கொடி பறந்தது; சற்றுக் கீழே கங்கர்களின் கோழிக்கொடி.

மாட்டு வண்டியில் சேறு நிரம்பிய சாலைகளில் ஆடியவாரே சென்ற பொழுதும், என் மனதில் பெருமிதம் நிரம்பியது. புலிக்கொடி தெற்கே இலங்கையிலும், கிழக்கே வெகு தூரத்தில் உள்ள கடாரத்திலும் பறக்கிறது. ராஜ ராஜ சோழனின் அத்தையின் புகுந்த வீட்டு தூரத்துச் சொந்தமாக இருந்தாலும், எங்கள் வம்சத்தின் வெற்றியல்லவா?

நாங்கள் கோட்டை வரை செல்லவில்லை. என் அருகில் தூங்கிக் கொண்டிருந்த வழுதி திடீரென்று கண் விழித்துச் சுற்றி உற்றுப் பார்த்தான்.

“அண்ணே, பாட்டுச் சத்தம் கேட்கிறதே?” என்றான், வண்டிக்காரனிடம்.

நிஜமாகவே அருகில் யாழின் மெல்லிய ஓலியும், சலங்கைச் சத்தமும் கேட்டது.

வண்டிக்காரன், “கோட்டை வாசலில் இறக்கி விடச் சொன்னாயே அப்பா?” என்றான்.

வழுதி நன்றாக நிமிர்ந்து உட்கார்ந்தான்.

“வேண்டாம், இங்கேயே இறங்கிக் கொள்கிறோம்”

இருவரும் வண்டியில் இருந்து மூட்டை முடிச்சுக்களுடன் இறங்கினோம்.

“யார் இருக்கிறார்கள் இங்கே?” என்று கேட்டேன் நான்.

வழுதி என்னைப் பார்த்து புன்னகைத்தான். அவன் மஞ்சள் பற்கள் பளிச்சிட்டன.

“ஒற்றாடலின் முதல் பாடத்தை நீ கற்றுக் கொள்ளப் போகிறாய். எந்த ஊருக்குப் போனாலும், முதலில் பரத்தையர் தெருவுக்குத் தான் விஜயம் செய்ய வேண்டும்”, என்றான்.

நான் முகம் சுளித்தேன்.

“இங்கேயுமா?” என்றேன்.

நான் தஞ்சாவூரில் இருந்து கிளம்பி ஒரு மாதமாகிறது. என்னுடைய அண்ணன்மார்களும், மாமன்மார்களும் அராபியக் குதிரைகளில் ஏறி போர்க்களத்தில் வீரசாகசங்கள் பல புரியும் நேரத்தில், மாட்டு வண்டியிலும், ஓடத்திலும், சில சமயம் நடந்தும் காட்டூர் வந்து சேர்ந்திருந்தோம். குதிரை வாங்கக் காசில்லை என்பது வழுதியின் விளக்கம். ஆனால் சென்றவிடமெல்லாம் பரத்தையர் சமூகத்திற்கு அபரிமிதமாகவே அவனுடைய பங்களிப்பு இருந்தது.

புகை நிரம்பிய ஒரு நடன சாலையில் நான் ஓரமாக அமர்ந்து விதியை நொந்து கொண்டேன். வழுதியைக் காணவில்லை. என்னிடம் பணமும் இல்லை. குளித்துச் சில நாட்கள் ஆகியிருந்தன. அந்த நிலையில் சில காசுகளுக்காக வழுதியுடன் கூடும் பரத்தையரை நினைத்துப் பாவமாக இருந்தது. அவர்கள் எல்லோரும் தன்னைக் காதலிப்பதாக அவன் கூறியிருந்தான்.

நான் புகையினூடே சுற்றி இருந்தவர்களை உற்றுப் பார்த்தேன்.

கொங்கு நாட்டில் பழைய அரசனின் “உறவினன்” ஒருவன் சிம்மாசனத்திற்கு உரிமை கேட்டுக் கிளம்பி இருந்தான். அரசர்கள் ஒரு பத்தினியோடு நிற்காமல் காட்டில் வேட்டைக்குப் போகும் போதெல்லாம் இன்னும் பலரைக் களவு மணம் புரியும் வரை, இது போன்ற புதுப் புரட்சிகள் கிளம்பி கொண்டு தான் இருக்கும், என்று வழுதி சொன்னான்.

வழக்கமாக இப்புரட்சிகளைப் பற்றி தஞ்சாவூரில் யாரும் கண்டு கொள்வது கிடையாது. கப்பம் வந்தால் போதும் என்பதே அவர்களுடைய நிலை. ஆனால்  கொங்கு நாட்டில் ஏதோ விபரீதம் நடப்பதாகக் கேள்வி. என்ன விஷயம் என்று தெளிவாகத் தெரியவில்லை. என்னிடம் யாரும் சொல்லவில்லை.

வழுதி தள்ளாடித் தள்ளாடி நடந்து வந்தான். என்னருகில் வந்து படுத்துக் கொண்டான்.

நான் அவனைத் தட்டி எழுப்பினேன்.

“என்ன?” என்று குளறினான்.

“நாம் வந்த வேலையைப் பார்க்க வேண்டாமா?”

வழுதி சிரித்தான்.

. “கவலைப்படாதே. எல்லா ஒற்றர்களும் இங்கே தான் இருக்கிறார்கள்”, என்றான்.

அப்படியே தூங்கிப் போனான். நான் மூட்டையைத் தலைக்கு வைத்துக் கொண்டு படுத்தேன்.

***

chola1

“அடேய்” என்று ஒரு குரல் கேட்டது.

கண்ணை விழித்துப் பார்த்தேன். புகை மூட்டம் அடங்கி இருந்தது. என் முன்னால் இரு வீரர்கள் நின்றார்கள். கையில் தடி வைத்திருந்தார்கள்.

“எழுந்திரு”, என்றான் ஒரு வீரன். தடியை லேசாகத் தூக்கியும் சமிக்ஞை செய்தான்.

பக்கத்தில் வழுதி இல்லை. நடனப் பெண்களின் சத்தமும் கேட்கவில்லை.

இருவரும் என்னை அந்த வீட்டுக்கு வெளியே அழைத்து வந்தார்கள். உச்சி வெயில் கண் கூசியது. வெளியே ஒரு சிறு கூட்டம் என்னை வேடிக்கை பார்த்தது.

இரண்டு மூன்று வீரர்கள் வெளியே நின்றார்கள். அவர்களுக்கு நடுவே சில நடனப் பெண்களும், கலா ரசிகர்களான வாடிக்கையாளர்களும் சண்டை போட்டுக் கொண்டிருந்தார்கள்.

வழுதி அவர்களுடன் இருந்தான்.

என்னை வீரர்கள் படியில் தள்ளி விட்டார்கள். நான் தட்டுத் தடுமாறி இறங்கி, அந்தக் கூட்டத்தில் இருந்து விலகி நின்றேன்.

“அடேய், இங்கே வந்து நில்”, என்றான் வீரர்களின் தலைவன் போல இருந்தவன்.

நான் வழுதியைப் பார்த்தேன். அவன் என்னை பார்க்காதது போல இருந்தான்

“நான் என்ன தவறு செய்தேன்?” என்றேன் உரத்து.

“பரத்தையர் வீட்டுக்கு வந்து இப்படிக் கேட்கிறாயே தம்பி”, என்றான் தலைவன்.

“நான் தூங்கத் தான் வந்தேன்”, என்றேன்.

இதைக் கேட்டு எல்லோரும் விழுந்து விழுந்து சிரித்தார்கள். அந்தப் பெண்கள் சிலரும் சிரித்தார்கள்.

ஒரு வீரன் வீட்டின் உள்ளிருந்து வெளியே வந்து, “யாரும் இல்லை”, என்றான்.

“கிளம்புங்கள், கோட்டைக்குப் போகலாம்”, என்றான் வீரர் தலைவன்.

எனவே, ராஜ ராஜ சோழனின் தூரத்துத் தம்பி உறவாகிய நான் காட்டூர் கோட்டைக்குள் பரத்தையர் சிலருடன் கைதியாக நடத்திச் செல்லப்பட்டேன்.

கோட்டையின் உயர்ந்த சுவர்கள் எங்கள் மேலே எழும்பி நின்றன. பெரும் கதவுகளைத் தாண்டினோம். சாலையில் யாரும் என்னைக் கவனிக்கவில்லை, நல்லவேளை. அந்தப் பெண்களின் நளின நடையைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

சில தெருக்களைக் கடந்து போன பிறகு, ஒரு இரண்டு மாடிக் கட்டிடத்தின் வாசலில் போய் நின்றோம். அது தான் கோட்டையின் சிறை என்று கண்டு கொண்டேன். என்னையும் வழுதியையும் ஒரு அறையில் தள்ளினார்கள்.

வழுதி ஒரு மூலையில் போய் படுத்துக் கொண்டான்.

நான் சிறைக் கதவை பிடித்துக் கொண்டு சற்று நேரம் நின்றேன். அவமானமாக இருந்தது.

திரும்பி வழுதி அருகில் போய் நின்றேன்.

“உன் பெண் மோகத்தால் நமக்கு வந்த கதியைப் பார்த்தாயா?” என்றேன்.

அவனிடம் இருந்து பதில் இல்லை.

“நான் தஞ்சாவூர் போனவுடன் பிரமராயரிடம் பேசுகிறேன்”, என்றேன் உரத்து.

அவன் என்னைத் திரும்பிப் பார்த்தான்.

“காட்டூர் ஒரு படை வீடு”, என்றான்.

“அதனால்?”

அவன் பெருமூச்சு விட்டான்.

“யோசித்துப் பார். பெண்டாட்டியைப் பிரிந்து கோட்டைக்குள் முன்னூறு வீரர்கள் இருக்கிறார்கள். பரத்தையர் வீட்டுக்குப் போவதும் வருவதும் இங்கே சாதாரணம்.

நம்மை ஒரு காரணமாகத் தான் அழைத்து வந்திருக்கிறார்கள்”, என்றான்.

நான் மௌனமானேன்.

வெளியே ஆட்கள் நடந்து வரும் சத்தம் கேட்டது. பூட்டுத் திறக்கும் சத்தம் கேட்டது.

கதவைத் திறந்து கொண்டு ஒரு கரிய மனிதன் உள்ளே வந்தான்.

வந்தவன், என்னைக் கவனிக்கவில்லை. எழுந்து நின்ற வழுதியைக் கட்டித் தழுவிக் கொண்டான்.

“உன்னை மறுபடிப் பார்ப்பேனா என்று நினைத்தேன்”, என்றான்.

பிறகு என்னைத் திரும்பி பார்த்தான்.

“இது யார் இந்தப் பாலகன்?”

எனக்குக் கோபம் வந்து விழித்தேன்.

“என்னுடைய மாணவன். திருச்செல்வன் என்று பெயர். தஞ்சாவூரில் தலையில் கட்டி விட்டார்கள்”

வந்தவன் சிரித்தான்.

“சோழருக்கு உறவோ?”

இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து நமட்டுச் சிரிப்புச் சிரித்துக் கொண்டார்கள். எனக்கு முகம் சிவந்தது. தஞ்சாவூரில், சோழரின் உறவுக்காரர்கள் தொந்திரவு பிரசித்தம். இங்கும் அந்தப் புகழ் பரவி இருப்பது எனக்கு ஆச்சரியமாக இருந்தது.

“சரி, புதுக் கள் வந்து இறங்கி இருக்கிறது. சரியான நேரத்திற்கு வந்து விட்டாய்”, என்றான் வந்தவன்.

***

கோட்டைத் தலைவன் கஜேந்திரனின் அறை படை வீட்டு முருகன் கோவில் அருகே இருந்தது. பெரிய கூடாரம் போன்ற கட்டிடம். அதன் வாசல் திண்ணையில் அமர்ந்திருந்தோம்.

“யாரையும் நம்ப முடிவதில்லை”, என்றான் கஜேந்திரன். “எவனைப் பார்த்தாலும் சந்தேகமாக இருக்கிறது”, என்று உரத்துச் சொன்னான். சொல்லி விட்டுப் போய் வருபவர்களை முறைத்துப் பார்த்தான். நிறைய கள் அருந்தி இருந்தான்.

“கங்கர் எங்கே இருக்கிறார்?” என்றான் வழுதி.

“பரம ரகசியம்”, என்றான் கஜேந்திரன். “ஆளையே காணோம். நானும் தேடிக் கொண்டிருக்கிறேன்”.

காட்டூர் கோட்டை, கங்கர்களின் பழைய தலைநகரான காங்கேயத்தில் இருந்து வெறுமே எட்டு காதம் தொலைவில் இருந்தது. புதிய தலைநகரான தாராபுரம் ஒரு படை ஆறு நாள் நடக்கும் தூரம். அப்படி இருக்க காட்டூர் கோட்டைத் தலைவன் கங்கரை அலட்சியமாகப் பேசுவது எனக்குப் புரியவில்லை – அதுவும் வெளியாட்களிடம்.

கஜேந்திரன் சற்று நேரம் வானத்தைப் பார்த்துக் கொண்டிருந்தான்.

முருகன் கோவில் மணி அடித்தது.

வழுதி, “திருபுரத்தில் என்ன நடந்தது, சொல்லும்”, என்றான்.

திருபுரம் மேற்கே, சேரர்களின் மலை நாட்டின் அருகே இருந்த ஒரு படைவீடு என்பது எனக்குத் தெரியும்.

.”தெரியவில்லை. நான் போன பொழுது யாருமே உயிரோடு இல்லை”..

“கோட்டை எப்படி விழுந்தது?” என்றான் வழுதி.

கஜேந்திரன் அவனைத் திரும்பிப் பார்த்தான். “சுவர்கள் இரண்டாகப் பிளந்து கிடந்தன, வழுதி. புரிகிறதா? ஏதோ அசுரன் பிடித்து உலுக்கியது போல. அந்தச் சுவர்களின் உள்ளே நான் வாழ்நாளில் காணாத கோரக் காட்சியைக் கண்டேன். நூற்றுக்கணக்கானோர், ரத்தம் சிதற விழுந்து கிடந்தார்கள்”.

வழுதி, “எப்படி இறந்தார்கள்?” என்று கேட்டான்.

“தெரியவில்லை”

“இறந்தவன் உடலைச் சோதித்தீர்களா?”

நான் அருவருப்புடன் அவனைப் பார்த்தேன்.

“எனக்கு நேரமில்லை. திரும்பி இங்கே ஓடி வர வேண்டி இருந்தது”, என்றான் கஜேந்திரன்.

வழுதி பெருமூச்சு விட்டான்.

“உன்னிடம் ஏதாவது செய்தி உண்டா?” என்று கேட்டான் கஜேந்திரன்.

“வரும் பொழுது சில பேரிடம் பேசினேன். பேய்க்கதைகள் சொன்னார்கள். நரசிம்மம் மறுபடிக் கிளம்பி வருவதாகச் சொன்னார்கள். காவிரிக் கரையில் ஒரு அந்தணன் என்னிடம் அதற்குப் பரிகாரம் செய்வதாகச் சொல்லிப் பணம் கேட்டான்”.

கஜேந்திரன் சிரித்தான். ஆனால் அவன் உடம்பு லேசாக நடுங்கியது.

“அவனை அழைத்து வந்திருந்தால் நாளைக்கு பயன்படுமோ என்னவோ”, என்றான்.

***

மணல் பரப்பில் வீரர்கள் வாள் பயிற்சி செய்து கொண்டிருந்தார்கள். இருட்டிக் கொண்டு வரும் நேரம். நான் சற்று நேரம் அவர்களைப் பார்த்தேன்.

சிறு வயதில் வந்த பத்து நாள் காய்ச்சலில் இருந்து என் உடம்பும், வலிமையும் மீளவில்லை. நான் கத்திப் பயிற்சி கற்றவன் தான். ஆனால் நிஜ வாழ்வில் யாரையும் வெல்லும் திறன் என்னிடம் இல்லை. ஒரு வேளை அதனால் தான் பிரமராயர் என்னை ஒற்றர் படையில் சேர்த்தாரோ என்னவோ. ஒரு போர்க்களத்தில் நான் பத்து வினாடி கூடத் தாக்குப்பிடிக்க மாட்டேன்.

முதுகில் யாரோ தட்டினார்கள். திரும்பி பார்த்தேன்.

வழுதி இருட்டில் நின்று கொண்டிருந்தான்.

“என்னுடன் வா”, என்றான்.

நான் அவன் நின்ற தூண் அருகே போனேன்.

“வா, குதிரை தேடலாம்”, என்றான்.

அவனுடன் வீதியில் இறங்கி நடந்தேன்.

“என்ன கண்டுபிடித்தீர்கள்?” என்று கேட்டேன், ஆவலுடன்.

“இது போன்ற கோட்டைகளில் தப்பிச் செல்ல ரகசிய வழி ஏதாவது இருக்கும். நான் நினைத்தது போலவே தெற்குப் பக்கம் ஒரு சிறு கதவு இருக்கிறது. அதைப் பிடித்தால் போதும், ஓடி விடலாம்”.

நான் குழப்பத்துடன்,”எதற்கு ஓட வேண்டும்?” என்றேன்.

வழுதி ஒரு பெரிய கொட்டாரத்தின் முன்னே நின்றான்.

“இங்கே பார்க்கலாமா?” என்றான்.

நான் மறுபடி, “இங்கிருந்து எதற்கு ஓட வேண்டும்?” என்றேன்.

“நாளைக் காலை எதிரிப் படை வருகிறது. அவர்கள் வந்த பிறகு தேவையில்லாமல் எல்லோரும் சண்டை போடுவார்கள். நமக்கு எதற்கு வம்பு?” என்றான்.

கொட்டாரக் கதவைத் தட்டிப் பார்த்தான். உள்ளிருந்து எந்தச் சத்தமும் வரவில்லை.

“நாசமாய்ப் போனவன். குதிரையை எங்கே வைத்திருக்கிறான் தெரியவில்லை”, என்றான்.

“எதிரிப் படை வந்தால் நாம் எதிர்த்து நிற்க வேண்டாமா? ஓடுவது வீரர்களுக்கு அழகல்ல”, என்றேன் நான்.

“நாம் வீரர்களல்ல”.

நான் அதிர்ச்சியுடன், “ஏன் இப்படிப் பயப்படுகிறீர்கள்? கஜேந்திரரைப் பாருங்கள். அந்த வீரர்களைப் பாருங்கள்” என்றேன்.

வழுதி இருட்டில் சற்று நேரம் என்னை உற்றுப் பார்த்தான்.

“தம்பி, ஆபத்து வந்தால் யாராவது போய் என்ன நடந்தது என்று வெளியே சொல்ல வேண்டாமா? அது தான் நம் வேலை என்று நினைத்துக் கொள்”,  என்றான்.

மறுபடித் தெரு ஓரமாக நடக்க ஆரம்பித்தோம்.

“கோட்டையின் தெற்குச் சுவரில் ரகசிய வழி இருப்பது உங்களுக்கு எப்படித் தெரியும்?” என்று கேட்டேன்.

“தப்பிச் செல்ல வழி தெரியாமல் நான் எந்தக் கோட்டைக்குள்ளும் நுழைவதே கிடையாது. இன்று காலை அந்த நடன மணிகள் வீட்டுக்குச் சென்றோம் இல்லையா? அவர்களுக்கு எல்லாம் தெரியும். நடு இரவில் கஜேந்திரனுக்கு அவசரம் என்றால் அவ்வளவு பெரிய கோட்டை வாசலைத் திறக்க முடியாது பார்”, என்றான். சொல்லி விட்டு உரத்துச் சிரித்தான்.

“அந்தப் பெண்களுக்கு ரகசிய வழி தெரியுமா? நாளை எதிரிகளிடம் சொல்லி விட்டால்?”

“இந்நேரம் எல்லோரும் வீட்டைக் காலி செய்து ஓடி இருப்பார்கள். எதிரிப் படை வருவது நமக்கு முன்னால் ஊர் மக்களுக்குத் தான் முதலில் தெரியும்”.

எனக்குச் சற்று அவமானமாக இருந்தது. ஒற்றர் வேலை ரகசியங்களைக் கண்டுபிடிப்பது என்று நினைத்திருந்தேன். இவன் சொல்வதைப் பார்த்தால் சாதாரண மக்களுக்கு எல்லா விஷயங்களும் தெரிந்திருக்கும் போலும். இதில் என்ன பெருமையோ?

கடைசியில் சில குதிரைகள் இருக்கும் இடத்தைக் கண்டுபிடித்தோம். வழுதி அவற்றைச் சோதித்துப் பார்த்தான்.

என்னிடம் கருப்பு நிறக் குதிரை பிடித்திருப்பதாகத் தெரிவித்தான்.

இருவரும் அந்தக் குதிரை லாயத்தில் இருந்து வெளியே வந்தோம்.

“கஜேந்திரரிடம் இதைப் பற்றிப் பேச வேண்டாம்”, என்றான்.

“ஏன்? நாம் தப்பிச் செல்வது அவருக்குப் பிடிக்காதா?” என்று கேட்டேன்.

“தப்பிச் செல்வது பற்றி இல்லை. குதிரையைக் கூட எடுத்துச் சென்றால் பிடிக்காது. போருக்குச் சில சமயம் குதிரைகள் மிக முக்கியம்”.

“அவருக்குத் தெரியாமல் அதை எடுத்துச் செல்வது திருட்டல்லவா?”

“ஒற்றர்கள் தர்மப்படி திருடலாம்”.

வீதிகளில் யாருமில்லை.

“எல்லோரும் குடிக்கப் போய் இருப்பார்கள்”, என்றான் வழுதி. “இன்று காட்டூர் கோட்டையின் கடைசி நாள்”.

***

இரவு முழுதும் நான் தூங்கவில்லை. கொசுக்கடி. தெருக்களில் குடித்து விட்டு ஆடும் வீரர்களின் கூக்குரல்கள்.

அதிகாலையில் விடிவதற்கு முன்னால் மந்திரம் ஓதும் சத்தம் கேட்டது. தூக்கம் வராமல் நாங்கள் இருந்த கூடத்தின் வாசலில் வந்து நின்றேன். குளித்துவிட்டுத் திருநீறு அணிந்து, அந்த மங்கிய வெளிச்சத்தில் ஒரு சிறு ஊர்வலம் வந்து கொண்டிருந்தது. அதன் முன்னால் ஐயர் ஒருவர் மந்திரம் ஓதியவாறு சென்றார்.

வீரர்கள் பலர் அவர் பின்னால் சென்றார்கள்.

சற்று நேரம் அந்த ஊர்வலம் தாண்டிச் செல்லும் வரை பார்த்துக் கொண்டிருந்தேன்.

“நரசிங்கர் துதி”, என்று வழுதியின் குரல் கேட்டது.

திரும்பிப் பார்த்தேன். அவன் துண்டு ஒன்றைத் தோளில் போட்டவாறு நின்றான்.

“வடமொழியில் சங்கரர் எழுதியது. எவ்வளவு இனிமையாக இருக்கிறது பார்”, என்றான்.

வழுதி சமஸ்கிருதம் அறிந்தவன் என்பது எனக்குச் சற்று ஆச்சரியமாக இருந்தது.

“அந்த ஐயரை முதலில் பிடிக்க வேண்டும்”, என்று கிளம்பினான்.

நான் கோட்டையின் உள்ளே இருந்த குளத்திற்குக் குளிக்கப் போனேன். காட்டூர்க் கோட்டைப் பெரிது அல்ல, என்றாலும், புதிய முறைப்படிக் கட்டப்பட்டது.

தஞ்சாவூர்க் கோட்டையைக் கைப்பற்றிய பின்னர், விஜயாலய சோழன் அது மறுபடி கைமாறி விடுமோ என்ற கவலையிலேயே இருந்தான். அவன் பேரனான பராந்தக சோழன் காலத்தில் வட நாட்டில் இருந்து சில கட்டிடக் கலை நிபுணர்களை அழைத்து வந்தார்கள். அவர்களுக்கு வேலை வேண்டும் இல்லையா? எனவே அங்கேயும் இங்கேயுமாக பல புதுக் கோட்டைகளும், சில படை வீடுகளும் தோன்றின.

காட்டூர்க் கோட்டை பழைய மண் கோட்டை அல்ல. அதை முழுவதும் இடித்து இரு பக்கமும் கல் வைத்துக் கட்டி இருந்தார்கள். நடுவே மண்ணும் கல்லும் கலந்த கலவை. உயரமான மதில் சுவர்கள். கோட்டைக்குள்ளே இருந்து மறைந்து அம்பு விடச் சிறு துளைகள் இருந்தன. இதை விட முக்கியமாக, கோட்டைக்குள்ளே பெரும் பண்டக சாலை இருந்தது. நேற்று அந்தக் கட்டிடத்தைப் பார்த்திருந்தேன். இரு குளங்கள், குடிநீருக்கு ஒன்றும் மற்ற தேவைகளுக்கு ஒன்றும் தோண்டி இருந்தார்கள்.

ஒரு முற்றுகையை நெடு நாளுக்குத் தாங்கும் பலம் வாய்ந்த படைவீடு தான் இது. கஜேந்திரனின் கவலை தோய்ந்த முகம் எனக்குப் புரியவில்லை. சண்டை போட விருப்பமில்லை என்றால், இந்தக் கோட்டைக்குள் பல நாட்கள் தங்கலாம். யாரும் ஒன்றும் செய்து விட முடியாது.

சூரியன் மெதுவாக மேலே எழும்பி வந்தது. வழுதியைத் தேடிச் சென்றேன். கடைசியில் முருகன் கோவில் உள்ளே கண்டுபிடித்தேன். ஊர்வலம் சென்ற ஐயருடன் அமர்ந்திருந்தான். அவர் ஏதோ மந்திரம் ஓதிக் கொண்டிருந்தார். அவன் பக்திப் பரவசத்தில் இருந்தது போலத் தோன்றியது.

நேற்றுப் பரத்தையர் குடி. இன்று நரசிங்கர் துதி. என்ன ஒழுக்கமோ?

வெளியே ஒரு துந்துபி ஓசை கேட்டது. பிளிறி விட்டு அடங்கியது.

தெருக்களில் வீரர்கள் ஓடும் சத்தம். ஐயர் எழுந்து கொண்டார், “அப்புறம் பார்க்கலாம்”, என்றார்.

வழுதி வருத்தத்துடன் கோவிலுக்கு வெளியே வந்தான்.

இருவரும் சற்று நேரம் அங்கே நின்றோம்.

தூரத்தில் ஒரு முரசு முழங்கும் சத்தம் கேட்டது.

“வடக்கு வாசலுக்குப் போய் அங்கே என்ன நடக்கிறது, பார்”, என்றான் வழுதி.

நான் விடுவிடுவென்று வடக்கு வாசல் நோக்கி நடந்தேன். கோட்டை மதில் மேல் வீரர்கள் நிற்பது தெரிந்தது. தெருக்களில் யாரும் இல்லை. வடக்கு வாசலில் இரண்டு பேர் நின்று கொண்டிருந்தார்கள். மதில் சுவரின் மேல் சென்ற படிகளில் ஏறிப் போய்ப் பார்த்தேன்.

வெளியே ஊர் வெறிச்சோடி இருந்தது. வழுதி சொன்னது போலவே எல்லோரும் ஓடி விட்டார்கள் போலும்.

வாசலை நோக்கி வரும் பாதையை உற்றுப் பார்த்தேன். யாரும் இல்லை.

ஏன் எதிரியின் ஆட்கள் இங்கே வரவில்லை?

சற்று நேரம் காத்திருந்தேன். தஞ்சாவூர் அரண்மனையில் பழைய யுத்தங்களைப் பற்றி வரைந்த ஓவியங்களைப் பார்த்திருக்கிறேன். அவற்றில் பெரும் யானைகள் வந்து கதவுகளை உடைக்கும். மேலிருந்து வில் வீரர்கள் அவற்றின் மேல் அம்பெய்துத் தாக்குவார்கள். யானைகளின் தாக்குதலைத் தவிர்க்கக் கதவுகளின் முனையில் கூரான மரக் குமிழ்கள் இருக்கும்.

முற்றுகையிடும் படைகள் நீளமான மர ஏணிகள் வைத்திருப்பார்கள். வடநாட்டில் ஏணிகளுக்குப் பதிலாக மரக்கூடுகளை நகர்த்தி வருவார்கள். அவை கோட்டை வீரர்களின் அம்புகளிடம் இருந்து எதிரிகளைக் காப்பாற்றும். கோட்டைகளின் பாதுகாவலர்களும். அதனைக் கைப்பற்ற நினைக்கும் தளபதிகளும் விளையாடுவது ஒரு சதுரங்க ஆட்டம்.

சென்ற நூறு ஆண்டுகளாக இந்த ஆட்டத்தில் கோட்டைத் தலைவர்கள் வென்று விட்டதாகத் தான் பேச்சு.

கிழக்கே, கோட்டையின் பிரதான வாசலில் இருந்து எந்தச் சத்தமும் இல்லை.

நான் மதில் மேலிருந்து இறங்கி வந்தேன். எனக்கு வழுதியின் மேல் சந்தேகம் அதிகரித்தது. ஒரு வேளை நான் இல்லாத போது தப்பி ஓட நினைக்கிறானா என்ன? ஆனால் அவன் கோவில் வாசலில் தான் நின்று கொண்டிருந்தான்.

“வடக்கே யாரும் இல்லை”, என்றேன்.

அவன் எதுவும் சொல்லவில்லை. கிழக்கு வாசலைப் பார்த்துக் கொண்டிருந்தான். அந்தச் சாலையின் முடிவில் கோட்டையின் வாசல் தெரிந்தது. அருகே மதில் சுவரின் மேல் சிலர் நின்று கொண்டிருந்தார்கள். நடுவே நிற்பது கஜேந்திரன் என்று தெரிந்தது.

வழுதியிடம் , “எதிரிப் படை எவ்வளவு பேர் இருப்பார்கள்?” என்று கேட்டேன்,.

“இருநூறு-முன்னூறு பேர் என்று கேள்வி”.

நான் ஆச்சரியத்துடன்,”இவ்வளவு தானா? அவர்கள் வரும் வரை காத்திருப்பானேன்? இவ்வளவு சிறிய படைக்கு ஏன் பயப்படுகிறோம்?” என்றேன்.

அவன் பதில் சொல்லவில்லை.

சற்று நேரம் பெரும் மௌனம் நிலவியது. சிறு காற்றுக் கூட இல்லை.

கஜேந்திரன் உரத்துச் சிரிக்கும் சத்தம் கேட்டது. கோட்டையின் மேலிருந்து எங்களைத் திரும்பிப் பார்த்தான். கையைத் தூக்கி ஆட்டினான்.

நாங்கள் அருகில் வந்தவுடன், “வழுதி, வெறும் கவண் கற்கள்”, என்று உரத்துக் கத்தினான். “இதற்குத் தானா இவ்வளவு ஆட்டம்?”

வழுதியின் முகத்தில் இறுக்கம் குறைந்தது. மேலே பார்த்துப் புன்னகைத்தான்.

“சாக்கிரதை”, என்றான்.

அப்போது ஒரு விபரீதமான சத்தம் கேட்டது. காற்று பிளந்தது போல “வீல்” என்ற ஓலமிட்டது. என் கண் முன்னால் ஆயிரம் சூரியன்கள் பளிச்சிட்டன.

மஞ்சள் நிறப் பிடரியுடன் நரசிங்கம் உயர்ந்து எழும்போது நான் உணர்வற்று விழுந்தேன்.

***

நான் சில வினாடிகள் தான் மயங்கி இருந்தேன் என்று நினைக்கிறேன். கண் விழித்த போது ஏதோ குறைவது போலிருந்தது. அப்படியே படுத்திருந்தேன்.

எனக்கெதிரே வழுதி நின்றான். அவன் தலையில் இருந்து ரத்தம் சொட்டியது. என்னைப் பார்த்து ஏதோ சொன்னான். நான் அவனை உற்றுப் பார்த்தேன். என் காதில் எதுவும் கேட்கவில்லை.

வழுதி என் கையைப் பிடித்துத் தூக்கினான். திருப்பி நடத்திச் சென்றான். எங்களைச் சுற்றிக் கல்லும் மண்ணும் விழுந்து கிடந்தது. அருகில் நாலைந்து வீரர்கள் தரையில் கிடந்தார்கள். என் கால்களில் பலம் மெதுவாகத் திரும்பியது. காதில் ஒரு ரீங்காரம் கேட்டது.

அவன் என்னை வேகமாக அழைத்துப் போனான். முருகன் கோவிலைத் தாண்டிச் சென்றோம். தெற்கே, அந்தக் குதிரை லாயத்தை நோக்கித் திரும்பும் போது நான் ஒரு வினாடி நிதானித்து கோட்டை வாசலைப் பார்த்தேன்.

அந்த வாசலில் பாதியைக் காணோம். கஜேந்திரன் கடைசியாக நின்று எங்களிடம் கை காட்டிய மேடையே இல்லை. சுவர்கள் இருபக்கமும் பிளந்திருந்தன.

நான் இந்தக் காட்சியைப் புரிந்து கொள்ளும் முன்னால் வழுதி என்னை இழுத்துச் சென்றான். குதிரை லாயத்தை அடைந்த பொழுது நான் சற்று முரண்டு பிடித்தேன்.

ஆனால், நான் பார்த்த காட்சி என் மனத்தைக் கலக்கி விட்டது. என் வாழ்க்கையின் முதல் போர் பெரும் தோல்வியில் முடிந்தது.

வீழ்ந்து கிடந்த காட்டூர்க் கோட்டையில் இருந்து இருவரும் தப்பி வெளியேறினோம்.

***

பேச்சி மலையைச் சுற்றி இருந்த காடுகள் வழியே இருவரும் பயணம் செய்தோம். என் உடம்பு களைத்திருந்தது. குழப்பமான பல எண்ணங்கள் வந்து போயின.

அவற்றினுள் ஒரு கேள்வி என்னிடம் எழும்பி நின்றது.

வழுதி காட்டூர்க் கோட்டைக்கு வந்த காரணம் என்ன?

கோட்டைத் தலைவனைப் பார்த்தோம். அன்றே தப்பி ஓட ஆயத்தங்கள் செய்தோம். சண்டை தொடங்கிய ஒரு நாழிகைக்குள் தப்பி ஓடியாகி விட்டது.
இதற்கா தஞ்சாவூரில் இருந்து இங்கே வந்தோம்?

இல்லை, வழுதியின் விஜயத்திற்கு ஏதோ காரணம் இருக்க வேண்டும். எனக்குத் தெரியாமல் அந்தக் காரணம் நிறைவேறி இருக்கிறது.

காட்டில் இருந்த ஒரு மண்டபத்தில் முதல் நாள் இரவு தங்கினோம். சுற்றிலும் ஓநாய்கள் கூக்குரலிட்டன. அவை கோட்டையில் வேட்டையாடச் செல்வதாக வழுதி சொன்னான். போர் என்றால் ஓநாய்களுக்குக் கொண்டாட்டம்.

“இவை போய் அங்கே உடல்களை நாசம் செய்வதற்குள் நாம் இறந்தவர்களைச் சோதித்து விடுவது நல்லது”, என்றான்.

“என்ன சோதிக்கப் போகிறோம்?”

“சாவு எப்படி நடந்தது என்று தெரிய வேண்டாமா?”

“கவண் கற்கள் அடித்து மேலிருந்து கோட்டைச் சுவர் விழுந்ததைப் பார்த்தோமே?” என்றேன்.

வழுதி பழைய தினைமாவு வைத்திருந்தான். அதைப் பிசைந்தவாறே, “இருக்கலாம். ஆனால் அதன் பாதையில் இருந்து தள்ளி இருந்தவர்களும் விழுந்ததை நான் பார்த்தேன். அதோடு அவை கவண் கற்கள் என்று கஜேந்திரன் சொல்லித் தான் நமக்குத் தெரியும்”.

“அவர் ஏன் பொய் சொல்லப் போகிறார்?”

வழுதி சிரித்தான். “ஒற்று வேலையின் பாடம் இது தான். யார் சொல்வதையும் நம்பாதே. எவரையும் நம்பாதே”, என்றான்.

மறு நாள் காலையில் எங்கள் பாதையில் ஓர் சிறு குன்றைக் கடக்கும் போது அதன் உச்சியில் இருந்து ஒரு விநோதக் காட்சியைப் பார்த்தோம்..

தூரத்தில், நெளிந்து கிடந்த ஒரு நதியின் கரையில், பல வண்டிகள் ஊர்வலம் போலச் சென்றன. சற்று உற்றுப் பார்க்கும் போது மூட்டை முடிச்சுகளுடன் பலர் நடந்து போவதும் தெரிந்தது.

“திருபுராந்தகனிடம் இருந்து தப்பித்துத் தாராபுரம் போகிறார்கள்”, என்றான் வழுதி.

சற்று நேரம் அந்த மக்கள் கூட்டம் நகர்வதைப் பார்த்தோம். பிறகு வழுதி குதிரையைத் திருப்பிச் சென்றான்.

“நாம் எங்கே போகிறோம்?” என்று கேட்டேன்.

“நரசிங்கர் துதி, நான் இன்னும் முழுதும் கற்கவில்லை. பள்ளியூர்க் காட்டில் ஒரு பட்டர் இருக்கிறாராம். அவரிடம் கேட்கலாம் என்று போகிறேன்”.

நான் சற்று நேரம் சும்மா இருந்தேன்.

“சில நாள் கழித்துக் கற்றுக் கொள்ளக் கூடாதா?” என்றேன்.

அவன் உரத்துச் சிரித்தான்.

“உன்னை எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது”, என்றான்.

***

சலசலவென்று ஓடை ஒன்று சத்தமிட்டுக் கொண்டிருந்தது. கொடிகளும் செடிகளும் அதன் மேல் படர்ந்திருந்தன. செம்பருத்திப் பூக்கள் தண்ணீரில் மிதந்து வரும் பாதையில் கால் வைத்து நான் அமர்ந்திருந்தேன்.

இரண்டு நாட்கள் முன்னால் நான் பார்த்த கோரக் காட்சிகள் கனவு போலத் தோன்றின. இங்கே, இந்தக் காட்டில், சிவ பட்டரின் குடிலருகே வாழ்க்கையைக் கழித்து விடலாம்.

சற்றுத் தள்ளி இருந்த சிறு சிவன் கோவிலின் படிகளில் வழுதியும் கோவில் பட்டரும் அமர்ந்திருந்தார்கள். வழுதி குளித்து, திருநீறணிந்து பக்தி சிரத்தையுடன் மந்திரம் சொல்வது கேட்டது.

மந்திரம் முடிந்தது. அவர்கள் சற்று நேரம் மெளனமாக இருந்தார்கள். வழுதி ஏதோ கேட்டான். நான் எழுந்து கோவிலை நோக்கி நடந்தேன்.

“நான் உனக்குச் சொன்னது நரசிம்ஹ ஸ்தோத்திரம்”, என்றார் பட்டர். “இது பாய்ந்து வரும் சிங்கத்தை அடக்க வல்லது. மந்திரங்களில் ஒன்றுக்கு ஒன்று எதிரானவை உண்டு”.

“இதற்கு எதிர் மந்திரம் எது?” என்று கேட்டான் வழுதி.

“அது ரகசியம். எனக்குத் தெரியாது. தூங்கும் சிங்கத்தை எழுப்பி எதிரி மேல் ஏவும் சக்தி உள்ள மந்திரங்கள் இருக்கிறது. நம்மைப் போன்றவர்கள் அவற்றைக் கற்றால் நாடு தாங்காது”.

வழுதி சற்று நேரம் உள்ளே இருந்த சிவ லிங்கத்தைப் பார்த்தான்.

பட்டர், “திரிபுராந்தகன் நரசிங்கத்தை எழுப்பி விட்டான். நாம் அதன் பலனை அனுபவிப்போம்”, என்றார்.

“நீல மலைக் காடுகளில் ஒரு மந்திரவாதி இருக்கிறான். அவன் பல தந்திரங்கள் கற்றவன். மண்ணாசை கொண்ட திரிபுராந்தகன் கங்கனால் விரட்டப்பட்டு காட்டில் அலைந்து திரியும் போது அவனைத் தஞ்சம் அடைந்தான். அந்தத் தந்திரி வாம மார்க்கத்தில் நரசிங்கத்தைப் பூஜை செய்து, பல பலிகளும் கொடுத்து வரவழைத்தான். கட்டிப் போடப்பட்ட நரசிங்கம் திரிபுராந்தகனுடன் போகிறது. அவன் ஏவும் கோட்டைகளைப் பிளக்கிறது”, என்றார் பட்டர்.

“நரசிங்கரை யார் அடக்குவது”, என்றான் வழுதி.

“யாராலும் முடியாது”, என்றார் பட்டர்.

***

காட்டூர்க் கோட்டை விழுந்த இரண்டாவது நாள் மாலை நாங்கள் இருவரும் திரும்பி அங்கே வந்து சேர்ந்தோம்.

பள்ளியூரில் இருந்து கிளம்பி ஒரே நாள் பயணத்தில் எங்கள் குதிரை அயர்ந்து போனது.

நாங்கள் வந்த வழி திரிபுராந்தகனின் கையில் இருந்தது என்றாலும், வழுதி கவலைப்பட்டது போலத் தெரியவில்லை. கிராமங்கள் சூனியமாக இருந்தன. அவற்றின் பிரதானத் தெருக்களை மின்னல் வேகத்தில் கடந்து வந்திருந்தோம்.

காட்டூர் எல்லைக்கு வெளியே குதிரையை விட்டு வந்தோம். அந்தி சாயும் நேரம். ஊர் வெறிச்சோடி இருந்தது.

அந்தப் பெரும் கோட்டைக் கதவுகள் தரையில் சாய்ந்து கிடந்தன. சுவர்கள் இரண்டாக பிளந்து அகோரமாக நிற்பதைக் கண்டோம்

இருவரும் சற்று நேரம் நின்று அழிந்து கிடந்த கோட்டையைப் பார்த்தோம்.

“திரிபுராந்தகனின் ஆட்கள் எங்கே?” என்றேன் நான்.

“காங்கேயத்தை நோக்கிக் கிளம்பி இருப்பார்கள். உடைந்த கோட்டையில் அவர்களுக்கு வேலை இல்லை”, என்றான் வழுதி.

கீழே கிடந்த கதவுகளையும் பெரும் கற்களையும் தாண்டி உள்ளே நுழைந்தோம். உள்ளே ஒரு குன்றை போல கல்லும் மண்ணும் குவிந்து இருந்தது.

வல்லூறுகள் மேலே பறந்தன. அவ்வப்போது இறங்கி, கால்களில் உணவைப் பிடித்தவாறு சென்றன.

சற்று உற்றுப் பார்த்தால் கைகளும் கால்களும் வேறு பெயர் தெரியாத அங்கங்களும் தெரிந்தன. ரத்தம் அங்கங்கே தெறித்திருந்தது. கோட்டையின் உள்ளே இன்னும் கோரமாக இருந்தது. எங்கு பார்த்தாலும் சடலங்கள்.

வழுதி சற்று நேரம் அங்கே நின்றான்.

“வெறி பிடித்த நாய்கள். துரத்தித் துரத்திக் கொன்றிருக்கிறார்கள்”, என்றேன் நான்.

“அப்படியா நினைக்கிறாய்? நன்றாகப் பார்”, என்று கையால் சுற்றிக் காட்டினான்.

கோட்டைக் கதவை மையமாக வைத்து அரை வட்ட வடிவில் ஒரு கோடு போட்டால் அந்த உடல்கள் யாவற்றையும் சேர்த்து விடலாம்.

“இதற்கு என்ன அர்த்தம்?” என்றேன் நான்.

“தெரியவில்லை. இவர்கள் யாரும் துரத்திக் கொல்லப்படவில்லை”, என்றான் வழுதி.

கீழே விழுந்து கிடந்த உடல்களை பார்த்து அவன் நடந்தான். எனக்கு துர்நாற்றம் பிடுங்கித் தின்றது. அந்த உடல்களைப் பார்க்கும் போது வயிற்றைப் புரட்டியது.

வழுதி அந்த உடல்கள் அருகே போகும் போது, மேல்துண்டை எடுத்து மூக்கைச் சுற்றிக் கட்டிக் கொண்டான். அவற்றின் அருகே நின்று உற்றுப் பார்த்தான். ஒரு சடலத்தின் அருகே மண்டியிட்டு அமர்ந்தான்.

நான் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு அவன் அருகே போனேன்.

அந்த உடல் கெட்டுப் போகத் தொடங்கி இருந்தாலும் முகத்தின் அடையாளங்கள் தெரிந்தன.

“உடலில் காயங்கள் எதுவும் இல்லை”, என்றான் வழுதி.

வாயில் இருந்து சிறிது ரத்தம் வெளி வந்து உறைந்திருந்தது.

“திருப்பிப் பார்க்க வேண்டும்”, என்று சொல்லி விட்டு என்னைப் பார்த்தான்.

வேறு வழி இல்லாமல், அரச குலத்தவனாகிய நான் சடலத்தின் இடையில் கை வைத்து அதைப் புரட்டிப் போட்டேன்.

இறந்தவன் முதுகிலும் எந்த காயமும் பட்டது போல இல்லை.

வழுதி எழுந்து இன்னும் சில உடல்களைச் சோதித்தான்.

சூரியன் மேற்கே மறையும் நேரம் இருவரும் கோட்டையில் இருந்து வெளி வந்தோம்.

“யார் வீட்டிலாவது சோறு இருக்கிறதா பார்க்கலாம் வா”, என்றான்.

நான் ஓரமாகப் போய் வயிற்றைக் காலி செய்து வந்தேன்.

“ஒற்றன் உடல்களைப் பார்த்து அசரக் கூடாது”, என்றான் வழுதி.

“இந்தப் பாடத்திற்காகத் தான் இங்கே வந்தோமா?” என்றேன் நான்.

“இல்லை. வந்தது நல்லதாயிற்று”.

ஆளில்லாத ஒரு வீட்டின் திண்ணையில் அன்று இரவு படுத்துக் கொண்டோம். கோட்டையின் உள்ளே மிருகங்களுக்கு இன்னும் விருந்து நடந்து கொண்டிருந்தது.

உறுமல்களும் அலறல்களும் இரவு முழுதும் கேட்டுக் கொண்டிருந்தன.

நான் தூக்கம் வராமல் புரண்டேன். சற்று நேரம் சென்ற பின் இருட்டில் எழுந்து உட்கார்ந்தேன்.

“திரிபுராந்தகன் உண்மையில் நரசிங்கரை அழைத்து வந்திருக்கிறானா, என்ன? நம்புகிற மாதிரி இல்லையே” என்று வழுதியிடம் கேட்டேன். அவனும் தூங்கவில்லை போலும். இருட்டில் பதில் வந்தது.

“நரசிங்கரை அப்படி அழைக்க முடிந்தால், சோழர் இந்நேரம் எல்லா தேவர்களையும் கட்டிப் போட்டிருப்பார். தஞ்சாவூரில் சிவனும் விஷ்ணுவும் ஏவல் செய்து கொண்டிருப்பார்கள்”.

“எனக்குப் புரியவில்லை. அப்படி இருக்கையில் ஏன் சிவ பட்டரிடம் போய் வந்தோம்?”

அவனிடம் இருந்து உடனே பதில் வரவில்லை.

“இன்று இந்த உடல்களைப் பார்த்தோமே, அதில் நீ என்ன கற்றாய்?” என்று கேட்டான்.

நான் சற்று நேரம் யோசித்தேன்.

“இறந்தவர்கள் வெளியே காயம் பட்டு இறக்கவில்லை”, என்றேன்.

“உம்…மேலே சொல்”, என்றான்.

“கல்லால் அடிக்கப்பட்டோ, தீயால் எரிக்கப்பட்டோ இறக்கவில்லை”, என்றேன்.

“பிரமாதம். இதனால் நீ அறிவது என்ன?”

“மாய மந்திரமாக இருக்கலாம்”

“தவறு. ஒற்றன் கற்றுக் கொள்ள வேண்டிய மிக முக்கியமான பாடம் இது தான். நமக்குப் புரியாமல் நடக்கும் எதுவும் மாய மந்திரம் அல்ல. அதன் பின்னால் மனிதனின் கை இருக்கிறது என்று நினைப்பது தான் நம் வேலை”.

“அப்படி இருக்கையில் ஏன் சிவ பட்டரைத் தேடிப் போனோம்?”

“நல்ல கேள்வி. எந்த ஒற்றனையும் விட சாதாரண நாட்டு மக்களுக்கு நடப்பது என்ன என்று தெரியும். திரிபுராந்தகன் இந்த மண்ணைச் சேர்ந்தவன். அவனுடைய ரகசியங்கள் எல்லாவற்றையும் இவர்கள் அறிவார்கள். ஆனால், அந்த அறிவு அவர்களுக்குப் பயன்படுவதில்லை. அதை வைத்துக் கதை கட்டி மகிழ்வதுதான் அவர்களுடைய பொழுதுபோக்கு. சிவபட்டர் நம்மிடம் சொன்ன கதையில் பாதி உண்மை. பாதி கதை”.

“எது உண்மை? எது பொய்?”

“அது நீல மலையில்தான் தெரியும். அங்கு மந்திரவாதி இருக்கிறானா என்று தெரியாது. ஆனால் திரிபுராந்தகனின் சக்திக்கு அங்கே ஏதோ காரணம்

இருக்கிறது.”

[முதல் பகுதி முற்றியது]

இரண்டாவது பகுதி