[குறுநாவல்]ஒற்றாடல் – பகுதி 2

பகுதி 2

நரசிம்மாஸ்திரம்

chola6

மறு நாள் காலையில், வழுதி என்னை அழைத்துக் கொண்டு மறுபடிக் கோட்டை அருகே சென்றான். பெயர்ந்து கிடந்த கதவுகளின் பக்கத்தில் உற்றுப் பார்த்தவாறே நடந்தான்.

சிறு கறுப்புக் கற்கள் கீழே கிடந்தன. அவற்றைக் காலால் தள்ளிப் பார்த்தான்.

பிறகு அவற்றைக் கையில் எடுத்துக் கூர்ந்து கவனித்தான். என்னிடம் சிலவற்றைக் கொடுத்தான். பளபள என்று இருந்தன அவை.

“முகர்ந்து பார்”, என்றான்.

ஏதோ ஒரு வினோத வாசனை.

“கந்தகம்”, என்றான் வழுதி.

நான் கந்தகத்தைப் பார்த்ததில்லை என்றாலும் கேள்விப்பட்டிருந்தேன். யுத்தத்தில் சாதாரணமாகப் பயன்படுவது தான் அது. கந்தக அம்புகளை எதிரிக் கப்பல்களின் மேல் சோழ நாட்டு நாவாய்கள் பயன்படுத்தும் பழக்கம் உண்டு.

“இது எரிக்கும் தன்மை உடையது, இல்லையா?” என்றேன்.

“ஆமாம்”.

“ஆனால் இறந்த வீரர்கள் யார் மேலும் தீக்காயம் இல்லை”, என்றேன்.

வழுதி புன்னகைத்தான்.

“சரியாகச் சொன்னாய். இந்தக் கந்தகம் கோட்டையை எரிக்கப் பயன்படுத்தவில்லை”.

இதற்கு மேல் அவன் எதுவும் பேசவில்லை. ஊர் எல்லையில் விட்டிருந்த எங்கள் குதிரை பத்திரமாக இருந்தது. மேற்கு நோக்கிப் பறந்தோம்.

நீல மலையை நோக்கிய எங்கள் பயணத்தில், மிகச் சில இடங்களில் தங்கி இளைப்பாறினோம். வழியில் யாரும் எங்களைக் கண்டு கொள்ளவில்லை. ஒரு நாள் இரவு கல் மண்டபம் ஒன்றில் தங்கினோம். அங்கே சில வழிப்போக்கர்கள் புதிய செய்தி சொன்னார்கள். காட்டூரில் இருந்து காங்கேயம் நான்கு நாள் தொலைவு. எனவே, திரிபுரந்தகன் அதை இந்நேரம் கைப்பற்றி இருப்பான் என்று நான் நினைத்தேன். காங்கேயம் கோட்டையும் அவன் கையில் இருந்தால், அவனுக்கும், கங்கர்களின் தலைநகரான தாராபுரத்திற்கும் இடையே எந்தத் தடையும் கிடையாது.

ஆனால் அந்த வழிப்போக்கர்களோ, காங்கேயம் கோட்டை இன்னும் தாக்கப்படவில்லை என்று தெரிவித்தார்கள். திரிபுராந்தகனின் படை வழியில் எங்கோ தண்டு இறங்கி இருந்ததாகக் கேள்வி.
இது என்னை ஆச்சரியத்திற்கு ஆளாக்கியது. வழுதியைப் பார்த்தேன். அவன் முகத்தில் சலனம் ஏதும் இல்லை.

நான்காம் நாள் மாலை நீல மலையின் அடிவாரத்தில் இருந்த நரசிங்கபுரத்திற்கு வந்து சேர்ந்தோம். முன்னால் வயலூர் என்று பெயர் கொண்ட அந்தச் சிறு நகரம் திரிபுரந்தகனின் தற்காலிகத் தலைநகரமாக இருந்தது. அவனே அதற்கு நரசிங்கபுரம் என்று பெயர் சூட்டி இருந்தான் என்று பிறகு அறிந்தேன்.

மேற்கே சூரியன் அஸ்தமனமாகும் சமயத்தில் அந்த நகரத்தின் சிறு வீடுகள் தெரிந்தன. நடுவே பெரும் கோவில் கோபுரம் எழுந்து நின்றது. மன்னர்கள் நாடு கிடைக்கும் முன்னால் கோவில் கட்ட ஆரம்பித்து விடுகிறார்கள்.

நகரத்திற்குப் பின்னால் பெரும் மலைத்தொடர் ஒன்று கண்ணுக்கெட்டிய தூரம் வரை, மேற்கும் தெற்குமாக விரிந்து கிடந்தது. அதன் மறுபுறம் சேர நாடும் அழகிய வஞ்சிமாநகரும் இருப்பதாகப் படித்திருந்தேன்.

வழுதி குதிரையை விட்டு இறங்கினான்.

“உன்னைப் பிரியும் நேரம் வந்து விட்டது”, என்றான், அதனிடம்.

வாயில் நுரை தள்ளிய குதிரை இதைக் கேட்டு ஆனந்தமடைந்தது போலக் கனைத்தது.

“இதை இங்கே விற்றால் பணம் கிடைக்குமே?” என்றேன் நான்.

“படை வீடுகளில் குதிரையை யாரும் விற்க முனைய மாட்டார்கள். நினைத்தால் நம் உயிரையே பறிக்கும் அதிகாரம் இவர்களுக்கு உண்டு. குதிரையை வெறுமே பிடுங்கிக் கொள்வார்கள்”, என்றான் வழுதி.இருவரும் நகரத்தை நோக்கி நடந்தோம்.

***

நரசிங்கபுரம் அழுக்காக இருந்தது. வீடுகள் தாறுமாறாகக் கட்டப்பட்டிருந்தன. மழை பெய்ததனால் சேறும் சகதியுமாக தெருக்கள். நகரின் நட்ட நடுவே காய்கறிச் சந்தை ஒன்று கூச்சலும் குழப்பமுமாக இயங்கிக் கொண்டிருந்தது.

ஒரு புறத்தில் கோவில் கட்டும் வேலை அன்று முடிவுக்கு வந்து விட்டது. கோவிலுக்கு அருகே ஓலை வேய்ந்த ஒரு பெரும் கூடத்தில் வேலை செய்பவர்கள் கூடி இருந்தார்கள்.

“நாம் இப்போது எங்கே போகிறோம், சொல் பார்க்கலாம்?” என்றான் வழுதி. அவன் முகத்தில் இறுக்கம் சற்றுக் குறைந்து, பழைய குதூகலம் தெரிந்தது.

எனக்கு அந்தக் குதூகலம் ஏன் என்று புரிந்தது.

“பரத்தையர் வீடா?” என்று கேட்டேன்.

அவன் சிரித்தான். “நல்ல மூளை உனக்கு. ஆனால் என்னை மிகவும் தவறாகப் புரிந்து வைத்திருக்கிறாய். நண்பர்களின் ஊரில் பரத்தையர் வீடு செல்வது நல்லது. எதிரிகள் ஊரில் அங்கிருந்து தள்ளி இருக்க வேண்டும். சில நாட்களுக்கு இந்தக் கோவில் தான் நம் வாசம்”, என்றான்.

சில பண்டாரங்களும் பிச்சைக்காரர்களும் அந்த ஓலைக் கூடத்தின் ஓரத்தில் அமர்ந்திருந்தார்கள். வழுதி அவர்கள் அருகில் போய் உட்கார்ந்து கொண்டான். நான் என் விதியை நொந்தேன்.
அடுத்த மூன்று நாட்களுக்கு வெறுமே சாப்பிட்டுத் தூங்கினோம். வழுதி வந்த வேலையை மறந்தார்ப் போலத் தோன்றியது. கோவில் அருகே உணவிட்டார்கள். சில பக்தர்கள் அவ்வப்போது தோன்றி திருமால் புகழ் பாடினார்கள். வழுதி அவர்களுடன் சேர்ந்து கொண்டான். சில சமயம் பண்டாரங்களுடன் தாயம் விளையாடினான்.

ஒரு நாள் தரையில் ஒரு குச்சி வைத்து ஏதோ எழுதிக் கொண்டிருந்தான். நான் அருகே சென்று பார்த்தேன். நான்கு புள்ளிகள் வைத்திருந்தான். அவற்றின் அருகில்,

ஸ்ரீசுக்ரம்
திருப்புரம்
காட்டூர்
காங்கேயம்

என்று நாலு ஊர் பெயர்களை எழுதி இருந்தது.

சற்று நேரம் கழித்து ஸ்ரீசுக்ரம், ஆனி-பதினைந்து என்று குறித்தான்.

திருப்புரம் – ஆடி – இரண்டு.
காட்டூர் – ஆவணி – நான்கு

இது எனக்குப் புரிந்தது. காட்டூர் கோட்டை விழுந்தது ஆவணி நான்காம் தேதி.

காங்கேயத்திற்கு அருகில் அவன் குச்சி நின்றது.

“நல்ல நாள் பார்க்கிறானோ?” என்றேன் நான்.

வழுதி என்னை நிமிர்ந்து பார்த்தான்.

“திருப்புரம் விழுந்ததும் எனக்குச் சொல்லி அனுப்பினார்கள்”, என்றான். “நான் கிளம்பி வருவதற்கு ஒரு மாதம் ஆயிற்று. நாம் வருவதற்குள் காட்டூர் கோட்டை விழுந்து விடும் என்று நினைத்தேன். ஆனால் ஒரு மாதத்திற்குச் சும்மா இருந்திருக்கிறான் திரிபுராந்தகன்”.

“இதற்கு என்ன அர்த்தம்?” என்று கேட்டேன்.

“உன்னிடம் நரசிங்கம் இருக்கிறது என்று வைத்துக் கொள். கோட்டைகளைத் தரைமட்டமாக்கும் சக்தி இருக்கிறது. நீ ஏன் தயங்கித் தயங்கி போக வேண்டும்?”

நான் யோசித்தேன்.

“நரசிங்கம் உன்னிடம் இல்லை என்று தான் அதற்குப் பொருள் கொள்ள வேண்டும். அது இந்த மலையில் இருந்து போகிறது. திரிபுராந்தகன் அதன் வருகைக்காகக் காத்திருக்கிறான்”, என்றான் வழுதி. தரையில் வரைந்த கோடுகளை அழிக்கத் தொடங்கினான்.

எனக்கு ஏதோ புரிவது போலிருந்தது.

நீல மலை மந்திரவாதியைப் பற்றி ஒரிருவரிடம் கேட்டோம். அப்படி ஒருவன் இருப்பதாக யாருக்கும் தெரியவில்லை.

வந்த நான்காம் நாள் கோவிலின் வாசலில் பாசுரம் பாடுபவர்களுடன் வழுதியும் சேர்ந்து கொண்டான். நான் எதுவும் தெரியாதவன் என்பதால் ஓரமாக நின்று கொண்டிருந்தேன். முடித்து விட்டு எல்லோரும் சுடச் சுடப் பொங்கல் சாப்பிட அமர்ந்தார்கள்.

“எப்போது கும்பாபிஷேகம்?” என்று கேட்டான் வழுதி.

பாடியவர்களில் ஒருவர், “தாராபுரம் செயித்து சுக்ரேசுவரன் திரும்பி வர வேண்டாமா?” என்றார்.

“யார் அது சுக்ரேசுவரன்?”

அவர்கள் அவனை உற்றுப் பார்த்தார்கள்.

“நீ இந்த ஊர் இல்லையோ?” என்று கேட்டார் முதலில் பேசியவர்.

“இல்லை. பாண்டிய நாடு. திருத்தலங்களில் தீர்த்த யாத்திரை போகிறேன்”, என்றான் வழுதி.

“திரிபுரந்தகன் என்பது திருப்புரத்தின் கோட்டையை வென்ற பின் சுக்ரேசுவரன் சூட்டிக் கொண்ட பெயர். கங்கன் திருப்புரத்தை யாரும் ஒன்றும் செய்து விட முடியாது என்று மார் தட்டினான். அந்தக் கோட்டை இப்போது தரை மட்டமாயிருக்கிறது”.

இன்னொருவர், “நீல மலை மேலே சுக்ராச்சாரியின் மடம் இருக்கிறது. பழைய மடம்; ஆயிரம் வருடம் சரித்திரம் கொண்டது. அங்கே பிறந்து, மடத்தின் ஆசாரியார் வைத்த பெயர் சுக்ரேசுவரன்”, என்றார்.

“ஓஹோ”, என்றான் வழுதி.

“மேற்கே மலையில் மழைக் காலம் இல்லையா? வயலாறுக்கும் மேல் மலை ஆறு ஒன்று இருக்கிறது. அது கரை புரண்டு ஓடுகிறதாம். அந்த வெள்ளம் வடிந்தால் தான் சுக்ரேசுவரன் தாராபுரத்தைப் பிடிக்க இயலும். அதற்குப் பிறகு தான் கும்பாபிஷேகம்”, என்றார் மற்றொருவர்.

எனக்கு இது புரியவில்லை.

“மேற்கே மழை பெய்வதற்கும் கிழக்கே தாராபுரத்திற்கும் என்ன சம்பந்தம்?” என்றேன் குறுக்கே புகுந்து.

“நீ முதலில் ஆண்டாள் திருப்பாவை சொல்லிக் கொடுத்தபடி பாடக் கற்றுக் கொள். அப்புறம் சந்தேகம் கேட்கலாம்”, என்றான் வழுதி.

என் முகம் சிவந்தது. அந்தக் கூட்டத்தில் பலர் ஏளனமாக உரத்துச் சிரித்தார்கள். நான் எழுந்து விலகி வந்தேன்.

அன்று மாலை, வழுதி நீல மலையில் சுக்ராசாரியின் மடத்திற்கு வழி விசாரிக்கும் போதும் நான் அவனுடன் பேசவில்லை.

மறு நாள் அதிகாலை, கிழக்கு வெளுக்கும் முன்னால், எங்கள் மூட்டைகளைத் தூக்கிக் கொண்டு மலைப் பாதையில் கிளம்பினோம். முந்தின நாள் பேசியதை வழுதி மறந்தது போல் இருந்தான். நான் மறக்கவில்லை.

***

chola3

உயர்ந்த மலை மேல் ஏறுவது எனக்குப் புது அனுபவம். ஒரு பாதை இருந்தது; ஆனால் அது நடுநடுவே பாறைகளில் மறைந்தது. சில இடங்களில் சிறு ஓடைகள் குறுக்கே சென்றன. முதலில் நன்றாக குளிர்ந்தது. ஆனால் சீக்கிரத்தில் நடையின் சூட்டில் அந்த குளிர் தெரியவில்லை.

சூரியன் ஏற ஏற, என்னுடைய களைப்பு அதிகரித்தது. வழுதி அலுத்தது போலத் தெரியவில்லை. உச்சி வேளையில், ஒரு ஓடைக்கருகே அவன் இளைப்பாற நேரம் கொடுத்தான்.

இருவரும் சோற்று மூட்டையைப் பிரித்தோம். கேழ்வரகு மாவும், காய்ந்த மிளகாயும் எனக்கு அலுத்துப் போனது. சற்று நேரம் மூச்சு வாங்க அமர்ந்திருந்தோம். நான் வழுதியுடன் பேச்சுக் கொடுக்க முனையவில்லை.

சூரியன் இறங்கத் தொடங்கும் போது மறுபடிக் கிளம்பினோம். என் கால்கள் கெஞ்சின. இருந்தாலும் அவன் எதிரே என்னுடைய சக்தியின்மையை வெளிக்காட்ட நான் விரும்பவில்லை.

அந்தி சாயும் நேரம், மலையின் பாதி வழி ஏறியிருந்தோம். பாதையின் ஒரு வளைவில் ஒரு சிறு பள்ளத்தாக்குத் தெரிந்தது. அதில் மரங்கள் இல்லை – அங்கொன்றும் இங்கொன்றுமாகப் பாறைகளில் செடிகள் முளைத்திருந்தன. பாறைகளின் நடுவே, ஒரு கல் மாளிகை தெரிந்தது.

“சுக்கிரன் மடம்”, என்றான் வழுதி.

இருவரும் பள்ளத்தாக்கில் இறங்கி மடத்தின் வாசலை அடையும் போது இருட்டத் தொடங்கியிருந்தது. மடத்தின் சில அறைகளில் விளக்குகள் ஏற்றப்பட்டிருந்தன. கல் படிகளில் ஏறி பெரும் மரக் கதவுகளைத் தட்டினோம்.

சற்று நேரத்தில் சந்நியாசி ஒருவர் வந்து கதவைத் திறந்தார். எங்களை யார் என்று கேட்கவில்லை. மலையில் அரிதாக வரும் விருந்தினர்களை விசாரிப்பது அவர்கள் பழக்கம் இல்லை போலும். உள்ளே அழைத்துச் சென்று அமர வைத்தார்.

மாலை நேரத்து மணியோசையும் மந்திரங்களும் மாளிகையின் பல திசைகளில் இருந்து கேட்டன. எனக்கு நீட்டி நிமிர்த்திப் படுத்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றியது.

அறைக்குள் துறவி ஒருவர் வந்தார். நெடிய தேகம். பரந்த முடி. திலகமிட்டிருந்தார். எங்கள் எதிரே இருந்த மான் தோளில் வந்து அமர்ந்தார்.

“எங்கிருந்து வருகிறீர்கள்?” என்றார்.

வழுதி எழுந்து அவரை நமஸ்கரித்தான். நானும் அவ்வாறே செய்தேன்.

“பாண்டிய நாட்டில் இருந்து வருகிறோம். என் பெயர் வழுதி. இவன் என் சிஷ்யப்பிள்ளை”, என்றான்.

துறவி தலையாட்டினார்.

“சுக்ரநீதி பார்க்க வேண்டும் என்று வந்தோம். நான் அர்த்த சாஸ்திரம் பயின்றவன். தென்னகத்தில் உங்களிடம் மட்டுமே அந்தப் பெரும் நூல் இருப்பதாகக் கேள்வி”, என்றான்.

அவர் புன்னகைத்தார்.

“எங்கள் புகழ் அது வரை பரவியிருக்கிறதா என்ன?” என்றார்.

“ராஜ தந்திரம் வாழும் வரை சுக்ராசாரியார் பெயரும் வாழும்”, என்றான் வழுதி.

துறவி மறுபடித் தலையாட்டினார்.

“சுக்ர நீதி எங்களிடம் இருப்பது உண்மை தான். ஆனால் இரவு அந்தச் சுவடிகளைப் பார்க்க வேண்டாம். இப்பொழுது களைத்திருப்பீர்கள். உண்டு, ஓய்வு எடுங்கள். நாளைக் காலை பார்க்கலாம்”, என்றார்.

வழுதியைப் பற்றிய என்னுடைய மரியாதை பலமடங்கு உயர்ந்தது. ஆனால் என் மனதில் ஒரு கலக்கமும் உருவாகி வந்தது. அந்தக் கலக்கத்தோடு இரவு படுத்துத் தூங்கினேன்.

***

மடத்தில் விடிகாலையில் ஹோமங்கள் தொடங்கி விட்டன. நான் தூக்கக் கலக்கத்துடன் ஒன்றிரண்டு சாமியார்கள் மேல் முட்டிக் கொள்ளப் போனேன். பின் வாசலில் படிக்கட்டுக்கள் அருகில் வந்து நின்றேன்.

அந்தக் கல் மாளிகையின் பின்னால் அவ்வளவு அழகான குளம் ஒன்று இருக்கும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. சுற்றிப் பாறைச் சுவர்கள் எழும்பி நின்றன. அவற்றின் நடுவே சதுரமான குளம் பூமியில் ஆழ்ந்து இருந்தது. அதை நோக்கி ஒரு ஐம்பது அறுபது படிக்கட்டுக்கள் சென்றன.

இறங்கும் படிகளில் பாதி தூரத்தில் வழுதி அமர்ந்து இருந்தான்.

நான் அவனைக் கவனிக்காமல் இறங்கிப் போய் நடுங்கும் குளிரில் குளத்தில் முங்கி எழுந்தேன். சற்று நேரத்திற்கு மேல் அந்தத் தண்ணீரில் நிற்க முடியவில்லை. துடைத்துக் கொண்டு மேலே ஏறி வந்தேன்.

வழுதி, “இங்கே வா, இப்படி உட்கார்”, என்றான்.

நான் சற்றுத் தள்ளி அமர்ந்தேன்.

இருவரும் சுற்றி எழுந்த பாறைச் சுவர்களைப் பார்த்துக் கொண்டிருந்தோம்.

“மந்திரவாதி ஒருவனையும் யாருக்கும் இங்கே தெரியாதாம்”, என்றான். “நேற்று சாப்பிடும் போது சிலரிடம் கேட்டேன்”.

“நாம் வந்தது வீணா?” என்றேன்.

“ஆம். இப்போது தேவை இல்லாமல் சுக்ர நீதி வேறு படிப்பது போல நடிக்க வேண்டும். என் தலையெழுத்து”, என்றான்.

எனக்கு என்னையும் மீறிச் சிரிப்பு வந்தது.

“ஏன் நேற்று முகத்தைத் தூக்கி வைத்துக் கொண்டிருந்தாய்?” என்று கேட்டான் வழுதி.

“இந்த ஒற்று வேலை எனக்குப் பொருந்தாது என்று தோன்றுகிறது”, என்றேன்.

“அதை நான் அல்லவா முடிவு செய்ய வேண்டும்?”

“ஒற்றனுக்குத் தேவையான விரிவான அறிவு எனக்கு இருக்கிறதா என்று தெரியவில்லை. சுக்ர நீதி என்று ஒன்று இருப்பதே நேற்றுத் தான் எனக்குத் தெரியும். இந்த சமஸ்கிருதமும், நரசிங்கர் சரித்திரமும் எனக்குச் சுத்தமாகப் புரியவில்லை”.

“நீ சிறுவன். உனக்குள் ஒரு பொறி இருக்கிறது. கவலைப்படாதே”.

நான் அவனை நிமிர்ந்து பார்த்தேன். “இப்படி ஒளிந்து ஒளிந்து செல்வதும், சிறு விஷயங்களைத் தோண்டுவதும் எனக்கு வீரமாகத் தெரியவில்லை”.

வழுதி மெளனமாக இருந்தான். பிறகு, “கோவிலில் நான் உன்னைக் கண்டித்தது ஏன் தெரியுமா?” என்றான்.

நான் இல்லை என்று தலையாட்டினேன்.

“யோசித்துப் பார். நாம் இந்த ஊருக்கு வந்து நான்கு நாளாயிற்று. சாதாரணமாக சிலர் பேசிக் கொண்டிருக்கிறோம். அதில் ஒருவர் ‘மேற்கே, மலையில், மழை நின்ற பின்பு தான் எங்கோ கிழக்கே இருக்கும் திரிபுராந்தகன் தன் படையெடுப்பை நிகழ்த்த இயலும்’ என்று சொல்கிறார்: ஒரு சாதாரண வீரனோ, ஏன் சாதாரண ஒற்றனோ கூட இதைக் கவனித்திருக்க மாட்டான். கவனித்திருந்தாலும் அதன் அர்த்தம் அவனுக்குப் புரிந்திருக்காது. ஆனால் நீ அவர் சொன்னதன் அர்த்தத்தைப் புரிந்து கொண்டாய். இது எளிதான விஷயம் கிடையாது. நான் இது வரை பயிற்சி கொடுத்த ஒற்றர்கள் எவருமே இந்த வயதில் இப்படித் திறமை கொண்டவர்கள் அல்ல”.

வழுதி நிறுத்தினான்.

“நீ கேட்ட கேள்வியும் அதன் பின்னால் உள்ள அறிவும் அவர்களுக்குத் தெரியக் கூடாது. ஒற்றனின் முக்கியமான வேலை தன்னுடைய திறமையை மறைப்பது தான். அதை நீ கற்றுக் கொள்ள வேண்டும்”.

வழுதி எழுந்து நின்றான். என்னைக் கை கொடுத்துத் தூக்கி விட்டான்.

“போய் சாமியார்களுடன் பாராயணம் செய்யலாம் வா”, என்றான்.

நாங்கள் திரும்பி ஏறத் தொடங்கினோம்.

“நில்”, என்றான் வழுதி.

திரும்பிக் குளத்தை உற்றுப் பார்த்தான்.

நானும் சுற்றிப் பார்த்தேன்.

சற்று நேரம் பார்த்த பின் இருவரும் மறுபடி மேலேறிச் சென்றோம். வழுதியின் நடையில் ஒரு துள்ளல் இருந்தது.

***

காலைப் பொழுது முழுதும் பழைய சுவடிகளுக்கு நடுவே சென்றது. வழுதி உண்மையிலேயே சுக்ர நீதியில் ஆர்வம் கொண்டவன் போலத் தோன்றினான். துறவிகளில் சிலர் புதிய விருந்தினர்களைப் பார்க்க வந்தார்கள். பெரும்பாலும் அவர்கள் பாண்டிய நாட்டு அரசியலில் அதிக ஆர்வம் கொண்டிருந்தார்கள்.

நண்பகல் உணவுக்கு அமர்ந்த போது நாங்கள் முதலில் பார்த்த மடத் தலைவர் எங்கள் அருகே அமர்ந்திருந்தார்.

வழுதி, “பின்னால் உள்ள குளம் யார் கட்டியது?” என்றான்.

துறவி புன்னகைத்தார். “அது இயற்கையானது அல்ல என்று எப்படிக் கண்டுபிடித்தாய்?” என்றார்.

“இயற்கையாக இருந்தால் தண்ணீர் விழுந்து பக்கங்கள் சீராக இருக்கும். இந்தக் குளத்தின் பாறைச் சுவர்கள் அங்கங்கே கூராக இருக்கின்றன”, என்றான் வழுதி.

துறவி தலையாட்டினார். “சாத்திரம் கற்றவன் என்று தெரிகிறது”, என்றார்.

பிறகு அவரே, “எனக்கு முன்னால் இந்த மடத்தில் நாராயணர் என்பவர் இருந்தார். அவர் தொடங்கி வைத்தது. சுக்ரேசுவரன் முடித்து வைத்தான்”, என்றார்.

“நாராயணர் இப்போது எங்கே?”

“சில மாதங்களுக்கு முன்னால் மடத்தைத் துறந்து இந்த மலை மேலே வானப்ரஸ்தம் சென்று விட்டார். அவர் சென்ற பிறகு நான் வந்தேன்”, என்றார்.

இது தெரிந்த பின்னர் எனக்கு நேரம் போவது மிகச் சிரமமாக இருந்தது. மறுபடிப் போய் குளத்தைப் பார்த்து வந்தேன். வழுதி சொன்னது போலவே அதன் பக்கங்கள் கோணல்மாணலாகவும், கூராகவும் இருந்தன. நன்றாக உற்றுப் பார்த்தால், அதன் பக்கச் சுவர்கள், பிளக்கப்பட்ட காட்டூர் கோட்டைச் சுவர்களைப் போலத் தான் இருந்தன. கீழே தண்ணீர் அருகே இறங்கிப் பார்த்தேன். காட்டூரில் நாங்கள் பார்த்த கறுப்புக் கற்கள் போலவே சில கீழ்ப் படிகளின் பக்கங்களில் இருந்தன. தண்ணீருக்குள்ளும் தெரிந்தன.

வழுதியிடம் பேசவும் முடியவில்லை. துறவிகள் அவனைப் பெரிய அறிஞனாக கருதிப் பேசி வந்தார்கள்.

இரவு தூங்க முடியாமல் தவித்தேன். மறு நாள் காலை வழுதி என்னை வந்து எழுப்பினான்.

“போகலாம் வா”, என்றான்.

இருவரும் மூட்டைகளுடன் வெளியே வந்தோம். துறவியின் காலில் வழுதி மறுபடி நமஸ்கரித்தான்.

“அவ்வப்போது வந்து போ”, என்றார் அவர்.

“அவசியம்”, என்றான் வழுதி.

வெளியே வந்து காட்டுப் பாதையில் மறுபடி நடக்கத் துவங்கும் வரை என்னால் ஆர்வத்தை அடக்க முடியவில்லை.

“நாராயணரைப் பார்க்கப் போகிறோமா?” என்றேன்.

“ஆம்”, என்றான் வழுதி.

“குளத்தை வெட்டியது போலத் தான் காட்டூர் கோட்டையையும் வெட்டி இருக்கிறார்கள்”, என்றேன்.

வழுதி சிரித்தவாறே முன்னால் போனான்.

***

நீல மலையின் சிகரத்தைச் சுற்றிக் கொண்டு காட்டில் நடந்து சென்றோம். ஒரு தருணத்தில் மேற்கே இருந்த மலைத் தொடர் முழுதும் எங்கள் கண் முன்னால் விரிந்து கிடந்தது. வானத்தின் கோடி வரை மேகங்கள் கவிந்த மலைகள் தொடர்ந்தன. அவற்றின் நடுவே சில பெரும் சிகரங்கள்.

வழுதி, மடத்தில் யாரிடமோ நாராயணரின் குடிலுக்கு வழி கேட்டிருந்தான். இருந்தாலும் சற்றுத் திணற வேண்டியிருந்தது. சூரியன் உச்சியில் இருந்து சாயத் தொடங்கும் பொழுது, ஒரு பள்ளத்தாக்கை அடைந்தோம். அங்கங்கே காட்டு மிருகங்களின் உறுமல்கள் கேட்டன. தூரத்தில் யானைகளின் பிளிறல்.

ஒரு சிறு புல்வெளியின் நடுவே, சுற்றி இருந்த காட்டில் இருந்து தனியாக இருந்தது நாராயணரின் குடில். வாசலில் பத்மாசனத்தில் அவர் அமர்ந்து இருந்தார்.

காட்டு வாழ்க்கையில் கடினப்பட்ட உடல். வெளுத்த கேசம். வயது சொல்ல முடியவில்லை.

திண்ணையில் நானும் வழுதியும் உட்கார்ந்தோம். “நான் உங்களை எதிர்பார்த்திருந்தேன்”, என்றார் நாராயணர்.

“என் மார்பிலும் தோளிலும் வளர்ந்தவன் தான் சுக்ரேச்வரன். சிறு குழந்தையாக இருக்கும் போதே அந்த மடத்தில் சேர்க்கப்பட்டான். “அவனுடைய பிறப்பைப் பற்றி எனக்கு எதுவும் சொல்லப்படவில்லை. கங்கரின் வேண்டுகோளினால் அவனை ஏற்றுக் கொண்டோம். என்னைப் போன்ற துறவிகள் அந்தப் பிள்ளையுடன் விளையாடும் பாக்கியம் கிடைத்தது. அந்தக் காலத்தில் எனக்கு ரசவாதத்தில் ஆர்வம் இருந்தது. மடத்தின் பொறுப்பில், வடநாட்டிலும், தமிழ்நாட்டிலும், ஏன், பிற நாடுகளில் இருந்தும் பல சுவடிகளை வரவழைத்தேன். முதலில் மூலிகை, மருந்து என்று தான் இருந்தேன். சில வருடங்களுக்கு முன்னால் சுக்ர நீதியில் காலலாவணம் என்னும் ஒரு மருந்து பற்றிப் பார்த்தேன். வயிற்றுக்குக் கொடுக்கப்படும் மருந்து அது. மிகவும் பலம் வாய்ந்தது. அரசனின் சக்தியைப் பற்றியும், படை நடத்தும் விதத்தையும் பேசும் ஒரு சாத்திரம் தான் சுக்ர நீதி. அதில் அஜீரண மருந்தான லாவணத்தைப் பற்றி எழுத அவசியமில்லை. இன்னும் சற்று ஆழ்ந்து படித்தால், காலலாவணம் ஒரு ஆயுதத்தில் பயன்படுத்தப்பட்டது புரிந்தது.

“வேறு நூற்களில் படித்ததையும் வைத்து நான் சில சிறு சோதனைகள் செய்து பார்த்தேன். கந்தகம், கரி, காலலாவணம் இவை மூன்றையும் சேர்த்தால், அந்தக் கலவை வெடிக்கும் தன்மையுடையது. மடத்தில் சிறு விபத்துகளுக்குப் பின்னால், என்னுடைய ஆர்வம் அதிகரித்தது. சேர நாட்டில் படிக்கப் போயிருந்த சுக்ரேசுவரன் அவ்வப்போது என்னைப் பார்க்க வருவான். அவனிடம் என்னுடைய புது ஞானத்தைப் பகிர்ந்து கொண்டேன். இந்த லாவணத்தின் சக்தியை நான் புரிந்து கொண்டேன். நிறைய சேர்க்கச் சேர்க்க, அதன் சக்தி கூடி வந்தது. அது வெடிக்கும் போது, சுற்றி உள்ள காற்று அதிர்கிறது. சாதாரணமாகக் காற்றுக்கு உள்ள பலம் இதனால் ஆயிரம் மடங்கு அதிகரிக்கிறது. பாறைகளைப் பிளக்கும் சக்தி, அதற்கு வந்து விடுகிறது. மனிதர்களைக் கொல்லவும், கோட்டைகளைப் பிளக்கவும் இதே சக்தி பயன்படும் என்று நான் அப்போது உணரவில்லை.

“ஒரு பெரும் அசுர சக்தி என் கையில் கிடைத்தது போல எனக்குத் தோன்றியது. நரசிம்மாஸ்திரம் என்று அதற்குப் பெயரிட்டேன். மடத்தின் பின்னால் உள்ள பாறைகளை உடைத்து ஒரு குளம் வெட்டும் வேலையை அகந்தையுடன் தொடங்கினேன். காலலாவணம் எளிதில் கிடைப்பதல்ல. என்னுடைய ஆராய்ச்சிகளுக்குத் தேவையானதை முதலில் வெளியூர்களில் இருந்து தருவித்தேன். பழைய குகைகள் சில, மரங்கள் கவிந்த காடுகளுக்குக் கீழே இருக்கும். மழைத் தண்ணீர் மேலிருந்து குகைகளின் சுவர்களில் சுரக்கும் போது வரும் ஒரு கலவையில் இருந்து தான் காலலாவணம் தயாரிக்க வேண்டும். அப்படிப்பட்ட குகை ஒன்றைத் தேடிக் கண்டுபிடித்து அதை உபயோகப்படுத்தி லாவணம் தயார் செய்தேன். ஆனால் சீக்கிரமே அது முடிந்து போய் விட்டது.

“என்னுடைய இந்தப் புது வெறி, மடத்தில் சிலருக்குப் பிடிக்கவில்லை. துறவு நிலையை மீறி நான் இந்தப் புது ஞானத்தில் அதிகப் பற்று வைத்திருப்பதாகச் சொன்னார்கள். நான் அவர்களை புறக்கணித்தேன். சுக்ரேசுவரன் படிப்பு முடிந்து வந்த போது, அந்தக் குளம் பாதி வெட்டப்பட்டிருந்தது. அவனுக்கு நரசிம்மாஸ்திரம் என்ற பெயர் பிடித்திருந்தது. என்னிடம் அதை பற்றிய யுக்திகள் யாவற்றையும் கற்றுக் கொண்டான். சில மாதங்களுக்கு முன்னால், வயலூரை அவன் கைப்பற்றினான் என்று கேட்டதும் எனக்குப் பெரும் அதிர்ச்சியாகப் போனது. அவனுடைய பிறப்பைப் பற்றியும், கங்கரின் அரியாசனத்தில் அவனுடைய உரிமை பற்றியும் அவன் என்னிடம் பேசியதில்லை.

“வயலூருக்கு அடுத்து உள்ள சிறு படைவீட்டை அவன் வென்றான் என்று சொன்னார்கள். எனக்குப் பெரும் சந்தேகம் கிளம்பியது. பல நாட்களுக்குப் பின்னால், தைரியத்தை வரவழைத்துக் கொண்டு அந்தப் படை வீட்டைப் போய்ப் பார்த்தேன். அதன் பிளந்த சுவர்களுயும், உள்ளே இருந்த இடிபாடுகளும் உண்மையை உடனே எனக்கு உணர்த்தின. சுக்ரேசுவரன் நரசிம்மாஸ்திரத்தை போர்க்களத்தில் பயன்படுத்தத் தொடங்கி விட்டான் என்று எனக்குப் புரிந்தது. இந்த ஆயுதத்தின் முன்னால் யாரும் நிற்க முடியாது என்பது எனக்குத் தெரியும். சொல்ல முடியாத துக்கம் என்னை ஆட்கொண்டது.

“சுக்ரேசுவரன் என்னுடைய சாபத்திற்குப் பயந்து என்னைப் பார்க்க வருவதில்லை என்றார்கள். ஆனால் சபிக்கப்பட வேண்டியவன் நான் தான். அவனல்ல. என்னுடைய பாவத்திற்குப் பிராயச்சித்தமாக மடத்தின் பொறுப்பைத் துறந்து இங்கே வந்தேன். ஆனால் ஒரு நாள் என்னைத் தேடி உங்களைப் போல யாராவது வருவார்கள் என்று எதிர்பார்த்தேன்”.

லேசாகக் குளிர்ந்த காற்றடித்தது. என் உடல் நடுங்கியது.

வழுதி, “நீங்கள் நரசிம்மாஸ்திரத்தை நிறுத்த எங்களுக்கு வழி சொல்வது தான் சரியான பிராயச்சித்தம்”, என்றான்.

“அதை நிறுத்த எந்த யுக்தியும் கிடையாது. இன்று சுக்ரேசுவரன்; நாளை அவன் எதிரிகள் என்று அவிழ்த்துவிடப்பட்ட அசுர சக்தி அது”, என்றார் நாராயணர்.

“ஒரு வழி இருக்கிறது”, என்றான் வழுதி.

***

திருப்புரத்திலும், காட்டூர் கோட்டையிலும் கிடந்த உடல்கள் காயம் இல்லாமல் இறந்த மர்மம் எனக்கு இப்போது புரிந்தது. பாறையை உடைக்கப் பயன்பட்ட அந்த வெடி அவர்களையும் கொன்றிருக்க வேண்டும். எவ்வளவு கோரமான மரணம்.

“பெரிய உருண்டைகளாகக் கவண் கற்களைப் போல இறுக்கிச் செய்ய வேண்டும். அந்தக் கலவை சரியான விதத்தில் செய்தால், பற்ற வைக்கவே வேண்டாம். கோட்டைச் சுவரின் மேல் எறியப்படும் போது அந்த அதிர்ச்சியில் வெடிக்கும் தன்மையுடையது நரசிம்மாஸ்திரம். இங்கிருந்து வண்டியில் கொண்டு போகும் போது, மேடு பள்ளங்களில் கூட வெடிக்கலாம். சரியான ஆயுதமாக, கையாளுபவர்களைக் கொல்லாமல், எதிரியை மட்டும் கொல்லும் வகையில் அதைச் செய்ய சுக்ரேசுவரன் முயன்று வருகிறான். அவன் அதில் வெற்றியும் கொள்வான்”, என்றார் நாராயணர்.

வழுதி, முன்னால் நான் பார்த்தது போலத் தரையில் எழுதினான்:

ஸ்ரீசுக்ரம் – ஆனி – பதினைந்து
திருப்புரம் – ஆடி – இரண்டு
காட்டூர் – ஆவணி – நான்கு
காங்கேயம்

ஒவ்வொரு முறையும் சுக்ரேசுவரன் காத்திருந்ததிற்குக் காரணம் எனக்குப் புரிந்தது.

“காலலாவணம் தயாரிக்க நாளாகும். அது இல்லாமல் அவனால் கோட்டைகளை வெல்ல முடியாது. நிறைய சேர்த்தும் வைக்க முடியாது. நாளடைவில் பயன்படுத்தாமல் வைத்திருந்தால் அது நீர்த்து விடும்”, என்றார் நாராயணர்.

“இப்போது காங்கேயத்தின் அருகே காத்திருக்கிறார்”, என்றேன் நான்.

“மலைகுகை ஒன்றில் நீங்கள் லாவணத்தைத் தயாரித்ததாகச் சொன்னீர்கள். அவனுக்கு அங்கிருந்து தான் போகிறதோ?” என்றான் வழுதி.

“இல்லை. அந்தக் குகையின் பயன் அவ்வளவு தான். இனிமேல் அதில் எடுக்க முடியாது”, என்றார் நாராயணர்.

“பின், அவனுக்கு மட்டும் எங்கிருந்து கிடைக்கும்?”

“தெரியவில்லை. அவன் அந்தக் குளத்தை வெட்டும் போதே வேறு ஒரு இடத்தைக் கண்டுபிடித்து விட்டான் என்று எனக்குத் தோன்றியது”.

“இன்னொரு குகையா?”

“ஆம். அப்படித் தான் இருக்க வேண்டும். ஆனால் அது எங்கிருக்கிறது என்பதை ரகசியமாக வைத்திருக்கிறான்”.

வழுதி தலையாட்டினான். “அந்த இடத்தை நாம் கண்டுபிடிக்க வேண்டும்”, என்றான்.

நாராயணர் மெளனமாக இருந்தார்.

“இது தான் நீங்கள் எங்களுக்குச் செய்யக் கூடிய உதவி”, என்றான் வழுதி.

“நான் உலக வாழ்க்கையைத் துறந்தவன்”, என்றார் அவர்.

“நீங்கள் இந்த இடத்தில் இனி இருக்க முடியாது. நான் மடத்தில் வழி கேட்டதும், உங்களிடம் வந்ததும், இனிமேல் நடக்கப் போவதும் சுக்ரேசுவரன் காதுக்குக் கட்டாயம் போகும். அவன் உங்களை மன்னிக்க மாட்டான். எங்களுடன் வந்து விடுங்கள்”, என்றான் வழுதி.

“பாண்டிய நாட்டுக்கா?”

“ஆம்”, என்று அவன் புளுகினான்.

நாராயணர் எழுந்து வாசலில் நின்றார். நான் வழுதியைப் பார்த்தேன். அவன் வாயில் விரல் வைத்துச் சைகை காட்டினான்.

“ரகசியக் குகையை எப்படிக் கண்டுபிடிப்பது?” என்றார் நாராயணர். வழுதியின் முகத்தில் வெற்றிப் புன்னகை மலர்ந்தது.

“திருச்செல்வா, உனக்குத் தெரிகிறதா?” என்றான்.

“நரசிங்கபுரத்தில், மலை ஆறில் வெள்ளமும், மேற்கே மழையும் நின்ற பின் தான் காங்கேயம் விழும் என்று நினைக்கிறார்கள்”, என்றேன் நான்.

“பிரமாதம். அதற்கு என்ன அர்த்தம்?”

“சுக்ரேசுவரனின் குகை மலையாறின் அருகே இருக்கிறது என்று தோன்றுகிறது”, என்றேன் நான்.

“சரியாகச் சொன்னாய். நான் கேட்ட வரை மலையாறு ஒரு சிறிய காட்டாறு தான். அதன் கரையோடு சென்றால் நாம் குகையைக் கண்டுபிடிப்பது நிச்சயம்”, என்றான் வழுதி.

*

நாங்கள் கிளம்புவதற்கு முன்னால், வழுதி, நாராயணரிடம், “உங்களிடம் காலலாவணம் சிறிதும் இல்லையா?” என்று கேட்டான்.

நாராயணர் புன்னகைத்தார். “என்னால் ரசவாதத்தைக் கைவிட முடியவில்லை. அதோடு, புலிகள் வந்தால் உபயோகப்படும் என்று வைத்திருக்கிறேன்”, என்றார்.

“நமக்கு அது கை கொடுக்கும். சிறிது எடுத்து வாருங்கள்”, என்றான் வழுதி.

மறுபடி மலைப் பாதையில் பயணம். இரவில் காட்டில் மாட்டிக் கொள்ளக் கூடாது என்ற அவசரம். மலையாறு குடிலில் இருந்து தெற்கே ஒரு காத தூரத்தில், அடர்ந்த காட்டுப் பாதையில் இருப்பதாக நாராயணர் சொன்னார்.

காலும் கையும் புண்ணாக முகங்களில் முட்செடிகள் கீறி விட்ட காயங்களுடன் அயர்ந்து இருந்த போது, மாலை நேரம், மலையாறின் போக்கு எங்கள் கண்களில் பட்டது. “சோ” என்ற சத்தத்துடன் வெள்ளம் அந்தக் காட்டாற்றில் கரைபுரண்டு ஓடியது.

சற்று நேரம் அதன் கரையின் மேல் நின்று மேலும் கீழும் பார்த்தோம்.

“மேல் நோக்கிப் போகலாம். காட்டு மரங்கள் அடர்ந்திருக்க வேண்டும். அதன் கீழே குகை இருக்க வேண்டும்”, என்றார் நாராயணர்.

கரையோடு போவது அவ்வளவு எளிதாக இல்லை. ஆனால் சற்று தூரத்தில் ஒரு சிறு பாதை தெரிந்தது.

வழுதி பாதையின் அருகே நின்று உற்றுக் கவனித்தான்.

“சுக்ரேசுவரனின் ஆட்கள் வந்து போகும் பாதை என்று நினைக்கிறேன்”, என்றான்.

மங்கும் வெளிச்சத்தில் விரைந்து அந்தப் பாதையில் சென்றோம். வெள்ளத்தின் குறுக்கே ஒரு இடத்தில் ஒரு சிறு பாலம் கட்டி இருந்தார்கள். மறுகரையில், இன்னும் அகலமான பாதை சென்றது.
பாலத்தைத் தாண்டி, அந்தப் பாதையில் சென்றோம். அதில் வண்டிகள் வந்து சென்ற தடம் தெரிந்தது.

சற்று தூரத்தில் மரங்களுக்கு இடையே சிறு குடிசைகள் தென்பட்டன. நாங்கள் காட்டுக்குள் நுழைந்தோம். ஆற்றின் ஓசை சற்று மட்டுப்பட்டது.

வழுதி எங்களைக் காட்டுக்குள் சுற்றி அழைத்துச் சென்றான். ஈரமான வழுக்கும் பாறைகள் மேலேறிச் சாக்கிரதையாகச் சென்றோம். நெடிதுயர்ந்த மரங்கள் விலகின. நாங்கள் மலையாற்றின் பாதைக்கு மேலிருந்தோம். எங்களுக்கு நேர் கீழே ஆறு சுற்றிச் சுழித்துச் சென்றது. ஆற்றின் பக்கத்தில் சில மரங்களை வெட்டிச், சிலவற்றை எரித்து ஒரு திறந்த வெளி செய்திருந்தார்கள். அதில் பல குடிசைகள். நடுவே சில கல் பீடங்கள் இருந்தன. இரும்பு உலையைப் போல இருந்தது அந்த இடம்.

“குகை நமக்கு நேர் கீழே இருக்கிறது”, என்றார் நாராயணர். இந்த வயதில் இவ்வளவு தூரம் நடந்தும், அவர் தளரவில்லை.

இருட்டி வந்ததால் அங்கங்கே, தீப்பந்தங்கள் ஏற்றப்பட்டிருந்தன. நடுவில் உலை எரிந்தது. வெளியே இரண்டு மூன்று பேர் நின்றார்கள்.

வழுதி சுற்றிப் பார்த்தான்.

“வெள்ளத்தில் இந்த குகை முங்கி இருக்கும்”, என்றான்.

நாராயணர், “ஆம். தண்ணீர் குகைக்குள் போகாமல் இருக்க ஏதோ செய்திருக்கிறார்கள்”, என்றார்.

வழுதி லேசாகச் சிரித்தான். “நல்லது. நம் வேலை எளிதாயிற்று”, என்றான்.

“என்ன செய்யப் போகிறாய்?”

“இங்கேயே இருங்கள்”, என்றான் அவன். “திரு, என்னுடன் வா”.

இருவரும் பாறைகளில் பக்கவாட்டில் இறங்கினோம். ஆற்றின் மிக அருகில் இருந்தோம். குகையின் பக்கங்கள் எனக்குத் தெரிந்தன.

“அதோ பார்”, என்றான் வழுதி.

மலையாற்றின் கரையில் ஒரு கல் தடுப்புக் கட்டியிருந்தார்கள். அதன் மேல் சுண்ணம் வைத்துப் பூசி, அடைத்திருந்ததால் குகை வெள்ளத்தில் தப்பித்தது.

“அதை உடைக்க வேண்டும். செய்கிறாயா?”, என்றான் வழுதி.

என் உடல் நடுங்கியது. இந்தக் குகையை அழித்தால் ஒரு அரசனையும் ஒரு நாட்டையும், ஏன், சோழ நாட்டைக் கூடக் காப்பாற்றிய பெருமை எனக்கு வந்து சேரும். பல உயிர்களைக் காப்பாற்றும் ஒரு அரிய சாகசம். ஒரு கொடிய ஆயுதத்தை ஒழித்த புகழ்.

வழுதி ஒரு கையளவு உருண்டையை என்னிடம் கொடுத்தான்.

“நரசிம்மாஸ்திரத்தின் குட்டி. வேலை பார்க்கிறதா பார்”, என்றான்.

அவன் திரும்பி பாறையில் ஏறத் தொடங்கினான்.

நான் அந்த உருண்டையைத் திருப்பிப் பார்த்தேன். சற்றுத் தள்ளி நின்று கொண்டேன். ஆற்றின் கல் கரையைக் குறி பார்த்தேன். என் கையின் முழு வேகத்துடன் அதை வீசினேன்.

அடுத்த நொடி ஒரு பயங்கர வெடிச் சத்தம் கேட்டது. நான் தள்ளிப் போய் விழுந்தேன். ஆற்றில் என் கால்கள் வழுக்கின. “சோ” என்று சத்தம் அதிகமானது. புகையும் ஒரு பயங்கர துர்நாற்றமும் எழுந்தது. நீர்ப்பெருக்கின் சத்தம் அதிகமானது.

வெள்ளம் என் காலைப் பிடித்திழுத்தது.

வழுதியின் கை எங்கிருந்தோ வந்தது. என்னைப் கரையில் இழுத்துப் போட்டான்.

பலர் ஓலமிடும் சத்தம் கேட்டது. நாங்கள் இருவரும் தவழ்ந்து, பாறையில் ஏறி படுத்துக் கொண்டோம். கீழே அந்தத் திறந்த வெளியில் இப்போது நீர் வெள்ளம். குடிசைகள் அடித்துச் செல்லப்படுவது தெரிந்தது. உலை இப்போது முங்கி விட்டது. குகைக்குள் பெரும் சத்தத்துடன் தண்ணீர் விழுந்தது. இன்னும் பல நாட்களுக்கு, ஏன், அடுத்த கோடைக் காலம் வரையில் அந்த குகைக்குள் எவரும் போக முடியாது.

காங்கேயம் தப்பித்தது.

***

நானும், வழுதியும், நாராயணரும் பல நாட்கள் பயணம் செய்து சோழ நாட்டின் மேற்கு எல்லையான அமராவதி ஆற்றை அடைந்தோம். ஆற்றின் மேற்குக் கரையில் இரண்டு, மூன்று நாட்கள் தங்கியிருந்தோம். பெரிய நகரங்களை நாங்கள் சுற்றி கொண்டு வந்ததாலும், பெரும்பாலும் காட்டு வழியில் வந்ததாலும் வெளியுலகில் என்ன நடந்தது என்றே எங்களுக்குத் தெரியாது.

அமராவதி ஆற்றைக் கடக்கும் முன்னால் இளைப்பாறிச் செல்லலாம் என்பது வழுதியின் யோசனை. எனவே, கரூருக்கு அக்கரையில் சத்திரம் ஒன்றில் இடம் பார்த்துக் கொண்டு தங்கினோம்.

அங்கே இருந்த போது, சுக்ரேசுவரனின் சிறு படையை காங்கேயத்தின் அருகே கங்கர் படை விரட்டி அடித்ததாகக் கேள்விப்பட்டேன். சுக்ரேசுவரன் என்ன ஆனான் என்று தெரியவில்லை. அவன் இறந்தான் என்று சிலரும், மலைகளில் மறைந்து வாழ்கிறான் என்று இன்னும் சிலரும் அபிப்பிராயப்பட்டார்கள். துறவியானான் என்று ஒரு வதந்தியும் உலவியது.

காட்டூருக்கு நாங்கள் வந்ததில் இருந்து நடந்தது எல்லாம் எனக்குப் புரிந்தது – ஆனால் ஒரே ஒரு சந்தேகம் இருந்தது.

அதை நான் வழுதியிடம் கேட்க விரும்பவில்லை. நாராயணரிடம் பேசினேன். அவருக்கு இன்னமும் நாங்கள் சோழ நாட்டவர்கள் என்று தெரியவில்லை.

ஒரு நாள் இரவு, படுக்கையில் புரளும் போது எனக்கு உண்மை புரிந்தது.

மறு நாள் காலை வழுதியைத் தேடிக் கொண்டு போனேன். ஆற்றங்கரையில், படகுத் துறையில் நின்று கொண்டிருந்தான். நான் சற்று நேரம் அவனைப் பார்த்தேன். அவனுடைய திறமைகள் தெரியாத ஆட்களுக்கு அவனைக் கவனிக்கக் கூடத் தோன்றாது. நல்ல பகலில் தெருவில் நடக்கும் போதும் கண்ணில் படாமல் இருப்பது ஒற்றனின் தனித்திறமையல்லவா?

ஒரு வேளை நான் இந்த வேலைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டதும் அதனால் தானோ என்னவோ.

வழுதி திரும்பி நடந்து வரும் போது என்னைப் பார்த்தான். அருகில் வந்தான்.

“உங்களிடம் ஒன்று கேட்க வேண்டும்”, என்றேன்.

இருவரும் சற்றுத் தள்ளி இருந்த அரச மர மேடையில் அமர்ந்தோம்.

“காட்டூர் கோட்டைக்கு நாம் முதலில் போன காரணம் என்ன?” என்றேன் நான்.

அவன் முகத்தில் மாற்றம் எதுவும் இல்லை.

“முதல் நாள் இரவு போய், மறு நாள் தப்பி ஓடியது ஏன்?”

“ஏன் என்று நீ நினைக்கிறாய்?”

நான் விரல்களில் எண்ணினேன். “ஸ்ரீசுக்ரம், திருப்புரம் – இவை இரண்டும் விழுந்து விட்டன. அவற்றில் என்ன நடந்தது என்று தெரியவில்லை. புது அஸ்திரம் ஒன்று வந்திருக்கிறது என்று உங்களுக்கு முன்னமே தெரிந்திருக்க வேண்டும். ஆக, காட்டூருக்கு நாம் வந்து போன ஒரே காரணம், அந்தக் கோட்டை அழிவதைக் கண் முன்னால் பார்க்க வேண்டும்; அந்த ஆயுதத்தைப் பற்றிக் கண்டுபிடிக்க வேண்டும் என்பது தான், இல்லையா?”

வழுதி எதுவும் சொல்லவில்லை.

“கஜேந்திரனும் அந்த இறந்து போன படை வீரர்களும் ஒரு சோதனைக்காகத் தான் என்று எனக்குத் தெரிகிறது. ஒரு விதத்தில் அந்த ஆயுதத்தை அங்கே பயன்படுத்த வைப்பது தான் உங்கள் நோக்கம். அதனால் தான் கஜேந்திரன் வெளியே போய் எதிரிப்படையைத் தாக்கவில்லை”.

“அவன் நம் ஆணையை மீறக் கூடாது என்று தான் நாம் அங்கிருந்தோம்”, என்றான் வழுதி.

“மீறி இருந்தால்?”

“அவனைக் கொன்றிருப்பேன்”.

நான் அதிர்ச்சியில் மௌனமானேன்.

“காட்டூரில் நாம் நரசிம்மாஸ்திரத்தைப் பற்றித் தெரிந்து கொண்டது நமக்கு எவ்வளவு உதவியது? யோசித்துப் பார். ஒரு கோட்டையைக் கொடுத்து இன்னும் பெரிய வெற்றியைப் பெற்றிருக்கிறோம்”, என்றான் வழுதி.

“நாம் கோட்டையைக் கொடுக்கவில்லை. இருநூறு பேரைப் பலி கொடுத்து இருக்கிறோம்”.

அவன் அதற்குப் பதில் சொல்லவில்லை.

நான் சற்று நேரம் ஆற்றைப் பார்த்தேன். சிலுசிலுவென்று காற்றடித்தது.

“எனக்கு ஒரு பயம் இருக்கிறது”, என்றேன்.

“என்ன, என்னிடம் சொல்”.

“இந்த ஆயுதத்தை அழித்து விட்டதாகப் பெருமிதம் கொண்டேன். ஆனால், உண்மை அதுவல்ல. அதை அழிப்பது நம் நோக்கமே இல்லை. சுக்ரேசுவரனிடம் அது இருக்கக் கூடாது என்பது தான் நம்முடைய நிலை. இப்போது நாராயணரை சோழ நாட்டிற்கு அழைத்துப் போகிறோம். அவரை வைத்து நரசிம்மாஸ்திரம் மறுபடி உயிர் பெறும். ஆனால் இம்முறை நாம் அதைக் கையாளுவோம்”.

வழுதி சற்று நேரம் சும்மா இருந்தான்.

“கரூரில் நாராயணரை அழைத்துப் போக வீரர்கள் வந்திருப்பார்கள், இல்லையா?” என்றேன்.

அவன் ஆம் என்று தலையாட்டினான்.

நான் எழுந்து கொண்டேன்.

“காலையில் அவரைப் பார்த்தீர்களா?” என்று கேட்டேன்.

வழுதி சந்தேகத்துடன், “இல்லை, ஏன்?” என்றான்.

“அவரிடம் நான் நேற்றிரவே உண்மையைச் சொல்லி விட்டேன்”.

வழுதி மறுபடி சும்மா இருந்தான்.

“சோழ அரசின் கைகள் நீளமானவை”, என்றான்.

“உலகம் மிகப் பெரியது, குருவே”, என்றேன் நான்.