‘டாட்.. டாட்…’
பள்ளியில் இருந்து, அழுக்காக வந்து, மேலே விழுந்து பிராண்டிய மகனைப் பார்த்ததும் எரிச்சல் வந்தது. அழுக்குப் பாண்டை.
‘என்னடா அருணா?’
’உலகை மாற்றிய மூன்று ஆப்பிள்கள் எவை?’
’நீ, மொதல்ல போயி கைகால் கழுவிட்டு வா.’
‘மொதல்ல பதில் சொல்லுங்க’
‘தெரியாது.. சொல்லு.’ இவனிடம் வாதிடுவதை விட, சொல்வதைக் கேட்டுக்கொள்வது குறைந்த இம்சை.
‘மொத ஆப்பிள், ஏவாள் சாப்பிட்டது; இரண்டாவது நியூட்டன் தலைல விளுந்தது; மூணாவது, ஸ்டீவ் ஜாப்ஸ் கண்டு பிடிச்சது.’
‘கிரேட்.. போயிக் கைகால் மொகம் கழுவிட்டு வா,’ என்று துரத்தினேன். எனக்கும் அந்தக் கதை, மெயிலில் வந்திருந்தது. தெரியும் என்று சொல்லி அவனை ஏமாற்ற விரும்பவில்லை.
அன்றைக்குச் சில நாள் முன்புதான் ஸ்டீவ் ஜாப்ஸ் இறந்திருந்தார். மிக ரகசியமாக வைக்கப்பட்டிருந்த அவரது உடல் நிலை பற்றிய செய்தி, சில காலம் முன்பு வெளியிடப்பட்டிருந்தது. அவர் நிச்சயம் இறந்து விடுவார் என்று தெரியும் – எப்போது என்பதுதான் விடை தெரியாத கேள்வி. ஸ்டீவ் ஜாப்ஸ் நினைவுக்கு வரும் போதெல்லாம், மனதுள் ஜான் ஸ்கல்லியும் வந்து போவார். மருந்து சாப்பிடும்போது, குரங்கு நினைவுக்கு வரக் கூடாது என்னும் பத்தியம் நினைவுக்கு வரும். அமேடியுஸ் என்னும் மிக அற்புதமான க்ளாசிக் திரைப்படமும் வந்து போகும். அமேடியுஸ் மோட்ஸார்ட் ஒரு இசை உச்சம். அவரின் சமகாலக் கலைஞரும், அவர் அளவுக்குத் திறனில்லாத இசைக் கலைஞருமான சாலியேரி அவர் மேல் கொண்ட பொறாமையின் வழியாக உருவாக்கிய இடர்கள், துன்பங்கள் பற்றியது அத்திரைப்படம். மோட்ஸார்ட் வாழ்ந்து மறைந்த காலத்தில், அவரிடம் இருந்த இசைத் திறன் அளவுக்கு, அவர் போற்றப்பட்டிருக்கவில்லை. அவரை விட, குறைவான இசைத் திறம் கொண்டிருந்த, ஆனால் மன்னருக்கு மிக அருகில் இருக்கும் அரசியல் திறம் கொண்டிருந்த சாலியேரி அரசவை இசைக் கலைஞராக ஆக்கப் பட்டுப், போற்றப் பட்டிருந்தார். ஆனால், காலம் கொடிது. சாலியேரி வயதாகி இறக்கு முன்பே, மோட்ஸார்ட்டின் இசைக் குறிப்புகளும், ஸிம்ஃபனிகளும் மக்களால் போற்றப் பட்டு மேலெழ, சாலியேரி மறக்கப் பட்டதாக உணர்ந்து பைத்தியமாகிறார். ஸ்டீவ் ஜாப்ஸை நினைக்கும் போது, இப்புனைவு, கண் முன்னே, ஒரு இருபத்தைந்து கால அவகாசத்தில் மீண்டும் நடத்தப்பட்ட உணர்வு.
88-90 – ஊரக மேலாண் கழகத்தில் பயின்ற காலம். பாடத்தோடு பல விஷயங்களும் படிக்க நேர்ந்தன. ஐன் ரான்ட் (Ayn Rand) தாண்டி (அதெல்லாம் இளங்கலை படிக்கும் அமெச்சூர்களுக்கானது என்பது மேலாண் வட்டாரச் சொலவடை), மேலாண் கதைகள் பல படித்தல் அப்போது ஃபேஷன். அவற்றுள் காவியங்களும், பரப்பியல் கதைகளும் உண்டு. ஆல்ஃப்ரெட் ஸ்லோன் எழுதிய மை இயர்ஸ் வித் ஜெனெரல் மோடர்ஸ் (‘My years with General Motors’) எனும் புத்தகம் பெரும் மேலாண் காவியமாகப் போற்றப் படுகிறது. க்ரைஸ்லர் கார் நிறுவனத்தைக் காப்பாற்றிய லீ அயகோக்காவின் சுய சரிதமும், பெப்ஸியில் இருந்து ஆப்பிள் நிறுவனத்துக்குச் சென்று, அதைக் காப்பாற்றியதாக ஜான் ஸ்கல்லி எழுதிய சுய சரிதமும் மேலாண் வீர கதைகள். அதிலும் ஜான் ஸ்கல்லி, அந்த வருட ரிலீஸ்.
MBA என்னும், மேலாண் பட்டதாரிகளை, திருபாய் அம்பானி மனதார வெறுத்தார். MBA என்றால் என்ன அர்த்தம் எனில், மனே பஹூத் ஆவுச்சே என்று கிண்டலடிப்பார். தமிழில் சொல்ல வேண்டுமெனில் எல்லாம் தெரிந்த ஏகாம்பரம் அல்லது ஆல் இன் ஆல் அழகு ராஜா என்றும் சொல்லலாம். என்னிடம் பேசிய பலர் என்னைப் பற்றி இவ்வாறு ஒரு கருத்தைத் தெரிவித்தும் இருக்கிறார்கள். இவ்வாறு தனது தொழில் குணநலனுக்கேற்ப ஒரு அழகிய சுய சரிதை எழுதியிருந்தார் ஜான் ஸ்கல்லி. பெப்ஸி நிறுவனத்தில், அவரின் அலுவலகத்தை அவர் வர்ணிப்பதில் இருந்து துவங்குகிறது அந்த வீரகதை. சேர்மன் எப்படியான ஆள், அவருக்கு என்னென்ன உபரிச் சலுகைகள்(perks); ‘முக்கிய’ மேலாண் அலுவலர் (chief executive officer என்பதை இவ்வாறு மொழி பெயர்த்திருக்கிறேன். Pun Intended) – அவரின் அறையின் நீள அகலம். அலுவலகத்தில் உள்ள உடற்பயிற்சிக் கூடம் (Gymnasium), அதே போல், மாதாந்திரக் கூட்டத்தில் யார் முதலில் வரவேண்டும் என்பது வரையிலான சாங்கியங்களை அவர் வர்ணிக்கும் போது, நமது வலது கரத்தைக் கொடுத்தேனும் பெப்ஸி நிறுவனத்தில் சேர்ந்து விடவேணும் என்று தோன்றுவது செயற்கைதான். இவ்வாறாகத் தவமாய்த் தவமிருந்து, பெப்ஸியில் விற்பனை மேலாளராகச் சென்றான் சீனியர் ஒருவன். (Tall, fair and handsome என்னும் மூன்று முக்கியத் ’திறன்கள்’ அவனுக்கு, அவன் நோக்கம் நிறைவேற மிக உதவியாக இருந்தன என்று பொறாமைக்காரர்கள் சொன்னார்கள்.) இவர் காலத்தில்தான், பெப்ஸி, கோக்கை விட அதிகம் விற்பனையாகும் சர்க்கரைத்தண்ணீர் பிராண்டு ஆனது. இவர் நடத்திய கோக் Vs பெப்ஸி, விளம்பரப் போர்கள், மேலாண் பாடங்களில், கலிங்கத்துப் பரணி அளவுக்குப் போற்றப் படுகின்றன. இவரைப் பலமுறை திரும்பப் படித்து, பேச்சுவார்த்தைகளில் மேற்கோள் காட்டிக் கொள்வது, ஒரு நல்ல மேலாண் மாணவனுக்கு அழகு. ஸ்கல்லி, தன்னைப் பற்றி விவரங்கள் சொல்லும்போது, பெப்ஸி சேர்மனின் ஒரு காலத்திய மருமான் என்னும் விவரத்தையும் போகிற போக்கில் சொல்லிச் செல்வது, பல்லிடைப் பாக்குத் துகளாக இருந்தது.
இப்படியாப்பட்ட வீர தீரனாக இருந்த (ஆனாலும், ஜட்டி, பேண்டுக்குள்ளேதான்) ஜான் ஸ்கல்லிக்கு ஒரு நாள், ஒரு தலை வேட்டையாளரிடம் (Head hunter) இருந்து ஒரு தொலைபேசிச் செய்தி வந்தது. அதாவது, பிரபலக் கம்ப்யூட்டர் நிறுவனமான, ஆப்பிளுக்கு ஒரு தலைவர் தேவைப்படுகிறார் என்று. சக்கரைத் தண்ணிக்கும், கணினிக்கும் உள்ள தொடர்பு, அம்மாவாசைக்கும் அப்துல் கலாமுக்கும் உள்ள அளவு போல என்று நீங்கள் திகைத்து நிற்கலாம். என் போன்ற எ.தெ.ஏ (எல்லாம் தெரிந்த ஏகாம்பரங்கள்) அப்படித் திகைத்து நிற்பதில்லை. அன்பே வா திரைப்படத்தில் எம்,ஜி.ஆரிடம், நாகேஷ் சொல்வார். ‘சார், பணம் பத்தும் செய்யும். அது எங்கிட்ட இருந்துதுன்னா, நான் பதினொன்னும் செய்வேன்’ என்று. எனவே, ஸ்டீவ் ஜாப்ஸைச் சந்திக்கிறார் ஸ்கல்லி. ஜாப்ஸின் கனவில் மயங்கி, நனவில் தன் வங்கிக் கணக்கில் சேரும் தொகையையும் உணர்ந்து ஆப்பிளின் தலைவராகச் சேருகிறார்.
ஸ்டீவ் ஜாப்ஸ், அதற்குக் கொஞ்ச காலம் முன்பு, தன் தந்தையின் கார் காரேஜில் ஒரு கம்ப்யூட்டர் நிறுவனத்தை தனது நண்பர் ஸ்டீவ் வோஸ்னியாக்குடன் துவங்கியிருந்தார். ஜாப்ஸை ஒரு வாக்கியத்தில் விவரிப்பதெனில் இப்படிச் சொல்லலாம் – ‘தொழில்நுட்பம் மிகத்தெரிந்த, தொழில்நுட்பமும் கலையும் சந்திக்கும் தளத்தை நன்கறிந்த, நுகர்வோரின் உள் மனத் தேவைகளையும் தன் உள்ளுணர்வால் அறிந்த, முமூகா (முயலுக்கு மூன்று கால்) மன இளக்கம் கொண்ட, பெருங்கலைஞர்கள் திருடுவார்கள் என்னும் மேற்கோளைத் தன் வியாபார உத்திகளுக்குச் சப்பை கட்ட உபயோகிக்கத் தயங்காத, செருப்புப் போடாத, கல்லூரிப் படிப்பு முடிக்காத, தன் சொந்த உடல் நாற்றத்தையே வாசனைத் திரவியமாய்ப் பூண்ட, மரக்கறி உண்ணும், சிரியத் தந்தைக்கும் அமெரிக்கத் தாய்க்கும் பிறந்து கைவிடப் பட்ட, அதே போலவே, தன் முதல் மகளையும் கைவிட்டு வந்த, தன்னுடன் பணிபுரியும் சக ஊழியர்களை கீழ்த்தரமான வசைகள் என்னும் மனித வள மேம்பாட்டு உத்திகளை மிக உக்கிரமாக உபயோகித்து வழிநடத்தும் தலைமைப் பண்பு கொண்ட, கேட்போர் மனம் மயங்கும்படி பேசி மயக்கத் தெரிந்த ஒரு உயிரினம். மற்றபடி, எளிமையான மனிதர்; தொழிலதிபர்.
என் மகனுக்கு, ஸ்டீவ் ஜாப்ஸ் ஒரு பெரும் சூப்பர் ஸ்டார். எனவே அவன் பிறந்த நாளுக்கு, வால்டர் ஐசக்ஸன் எழுதிய ஸ்டீவ் ஜாப்சின் சரிதத்தை வாங்கிப் பரிசளித்தேன். அதன் தடிமனைப் பார்த்ததும், ஸ்டீவ் ஜாப்ஸ் ஆக வேண்டுமென்ற ஆசையையே விட்டு விட்டான். எனவே, வாங்கி விட்ட பாவத்துக்குப் படிக்கத் துவங்கினேன். ஆனால், அது ஜெயமோகன யட்சி போலப் பிடித்துக் கொள்ளும் என்று அப்போது தெரியவில்லை.
ஆப்பிள் நிறுவனத்தின் கணினிகள் விசேடமானவை. அவை, மற்றவர்களின் மென்பொருட்களில் வேலை செய்யாது. வன்பொருளையும், மென்பொருளையும் இணைத்தே ஆப்பிள் தயாரித்தது. அதாவது பில் கேட்ஸ் துவங்கிய, எல்லாக் கம்ப்யூட்டருக்குமான மென்பொருள்ப் புரட்சிக்கு எதிரானது. அதை வெறுத்தது என்று கூடச் சொல்லலாம்.
ஆப்பிள் கம்ப்யூட்டரின் துவக்க காலத் தந்தை ஸ்டீவ் வோஸ்னியாக்தான். அதை, சந்தைப் படுத்தி, பெருமளவுக்கு எடுத்துச் சென்றவர் ஜாப்ஸ். வோஸ்னியாக்குக்கு, தனது கணினி ஒரு பெரும் வியாபார வாய்ப்பாக வேண்டும் என்ற எண்ணம் இருக்கவேயில்லை. அது தொழில் நுட்பப் பொழுதுபோக்காளர்களுக்கான ஒரு கருவி என்கிற ரீதியில் தான் அதை அணுகி வந்திருந்தார். ஆனால், ஜாப்ஸ், அதைப் பெரும் நுகர்பொருளாக மாற்றிப் பல்வேறு தரப்பு மக்களுக்கும் பயனுள்ள ஒரு பொருளாக ஆக்க நினைத்தார்.
ஆப்பிள்-2 வடிவமைப்பின் போதுதான், ஜாப்ஸுக்கும், வோஸ்னியாக்குக்கும் மிகப் பெரும் வேறு பாடுகள் எழுந்தன. அப்போது கணினிகள், நுகர்வோர்களால், திறக்கப்பட்டு, அவரவர் திறனுக்கும், நோக்கத்துக்கும் ஏற்ப மாற்றிக் கொள்ளவோ, வேறு கருவிகளுடன் இணைத்துக் கொள்ளவோ தேவையான போர்ட் (port) களுடன் தயாரிக்கப் பட்டன. வோஸ்னியாக், இந்தப் பாரம்பரியத்தை மாற்ற விரும்பவில்லை. ஆனால், ஸ்டீவ் ஜாப்ஸ் இதை மிகக் கடுமையாக எதிர்த்தார். அவர் ஆப்பிள் கணினியை நுகர்வோர் தம் விருப்பத்திற்கேற்ப மாற்றும் / இணைக்கும் போர்ட் (Port) கள் கூடாதென்று வாதிட்டார். இருவருக்கும் இடையே நடந்த, மிகக் கடும் வாக்குவாதத்தில், வோஸ்னியாக் வென்றார்.
பின்னர், ஆப்பிள், ஒரு நுட்ப முதலீட்டாளரின் துணை கொண்டு, ஒரு பெரும் நிறுவனமாக உருவெடுத்தது. வோஸ்னியாக்குக்கு நிறுவனத்தில் ஒரு பெரும் ஆளும் சக்தியாக விருப்பமில்லை. ஒரு பொறியாளராக மட்டுமே இருக்க விரும்பினார். நிறுவனத்தில் இருவருக்குமே சம பங்கு இருந்தாலும், வோஸ்னியாக் நிர்வாகத்தில் இல்லாமல் விலகிக் கொள்ள, ஜாப்ஸின் தலைமையில், ஆப்பிள் நிறுவனம் பயணிக்கத் துவங்கியது.
திருமணம் தாண்டிய உறவில் பிறந்த தன் முதல் மகள் லிஸாவின் பெயரில் ஒரு கணினியை உருவாக்கத் துவங்கினார். அந்த உருவாக்கத்தில், அவரின் வேலை வாங்கும் வழி (style) மிகவும் தாறுமாறாக இருந்தது. தான் தோன்றித்தனமான மாற்றங்களை அவர் கொண்டு வந்தார். அவ்வுருவாக்கத்தில் குழுவை பலநேரங்களில் அவமதித்தார். தன் மனத்தில் இருந்த கனவை நனவாக்கும் முயற்சியில், நடைமுறைச் சங்கடங்களை அவர் உணர்ந்து கொள்ளவேயில்லை. எப்படியாகினும் தன் கனவு நிறைவேற வேண்டும். தனது வடிவமைப்பு செயல் படுத்தப் படவேண்டும் என்னும் வழியில், குழுவின் ஆளுமைகளைச் சிதைத்தார். கடுஞ்சொற்களால் அவமதித்தார். நிறுவனத்தை நடத்தும் மற்ற மூத்த இயக்குநர்களுக்கும், உயர் நிர்வாகத்தினருக்கும் இது அழிவை நோக்கி இட்டுச் செல்லக் கூடும் என்ற அச்சம் பிறந்தது. இக்காலகட்டத்தில், ஆப்பிள் நிறுவனத்தின் மிக முக்கிய வருமானம் (75%) கொண்டு தரும் ஆப்பிள்-2 கம்யூட்டர் குழுவையும், உற்பத்திக் குழுவையும், ஓரங்கட்டி விட்டு, அடுத்த மாடலை வடிவமைக்கும் குழுவை ஜாப்ஸ் முன்னிறுத்திக் கொண்டிருந்தார். ஆப்பிள்-2 ல் வேலை செய்தவர்கள் போஸோஸ் (Bozo) என்று கேலி செய்யப் பட்டனர். அதாவ்து, தொழில்நுட்பம் அறியாப் பாமரர்கள் என்பதாய். இது ஜாப்ஸின் வேலை வாங்கும் ஸ்டைல். மென்மையான மனம் கொண்டவர்களோ, பாரம்பரியப் பார்வை கொண்டவர்களோ அவருடன் வேலை செய்வது மிகக் கடினம்.
பல்வேறு முரண்களைக் கொண்டே எந்த நிறுவனமும், சமூகமும் முன் செல்லும் என்றாலும், முரண்கள் பெரும் உணர்வழுத்தப் போராட்டங்களை ஏற்படுத்தும் போது, அந்நிறுவனத்தில் வேலை செய்யும் மனிதர்களை அது பாதித்து, அது பெரும் முன்னேற்றத் தடையாக இருக்கும் என்று அஞ்சி, ஜாப்ஸை, அவர்கள், லிஸா கணினிக் குழுவில் இருந்தே அகற்றி விட்டனர். அது ஜாப்ஸை மேலும் வெறியேற்றியது.
ஒரு கட்டத்தில், இம்முரண்களைச் சாதாரண தொழில் நிபுணர்களால் தாங்க முடியாமல் போகவே, அவர்கள் ஜாப்ஸிடம், இப்பிரச்சினைகளைப் பற்றிப் பேசி, நிறுவனத்தின் தொழிலை நடத்திச் செல்ல ஒரு தலைமை நிர்வாக அதிகாரி வேண்டும் என்று வற்புறுத்தி ஒப்புக் கொள்ள வைக்கின்றனர். புதிது புதிதாய் கணினிகளும், தொழில் நுட்பங்களும் அவசியம்தான் ஆனால், அதற்கான நிதியாதாரங்கள் ஏற்கனவே இருக்கும் கணினி மாடல்களின் விற்பனை வழியாகவே வரும். தொழில் முனைப்பும், அறிவியற் திறனும் எவ்வளவு முக்கியமோ, அவ்வளவு முக்கியம், நிறுவனத்தின் நிதி நிலையும், ஏற்கனவே நடந்து கொண்டிருக்கும் தொழிலும். எனவே ஆப்பிளின் அந்தப் பகுதியையும் ஒரு முக்கிய அங்கமாக மதித்து, அணைத்துச் செல்ல வேண்டும். தாங்கள் ஒதுக்கப் படுவதாக அவர்கள் நம்பினால், அது அவர்களின் செயற்திறனைப் பாதிக்கும் எனச் சொல்லி அவரை ஒத்துக் கொள்ள வைக்கிறார்கள்.
வால்டர் ஐசக்ஸன், ஆப்பிளின் இந்தக் கட்டத்தை மிகத் துல்லியமாக எழுதியிருக்கிறார். ஆப்பிள் ஒரு ஃபார்ச்சூன் 500 நிறுவனமாவதற்கான முக்கிய காரணம் ஜாப்ஸ். ஆப்பிளின், நிர்வாகம் தடுமாறுவதற்குக் காரணமும் அவரே. இக்கருத்தை முன் வைக்க, ஐசக்ஸன் அனைத்து முக்கிய ஆப்பிளின் மிக முக்கிய அதிகாரிகளிடமும் பேசி, அவர்களின் கோணத்தையும் ஆராய்ந்து, ஆப்பிள் நிறுவனத்தை, ஒரு பெரும் வெற்றிகரமான தொழில் நிறுவனமாக்கத் தடை, ஜாப்ஸின் முரட்டுத்தனமான, கோணலான நோக்குக் கொண்ட மேலாண் வழிமுறை என்னும் வாதத்தை மிக வலுவாக வைக்கிறார். அதைச் சரி செய்ய அப்போதைய ஆப்பிள் நிறுவனத்தில் ஆட்கள் யாரும் இல்லாத பட்சத்தில், அவர்கள் வெளியில் இருந்து ஒரு முக்கிய நிர்வாக அதிகாரியை நியமிக்கச் செய்த முடிவும் சரியே எனவும் தோன்றுகிறது
ஜாப்ஸை வழிநடத்தி, அவரை ஒரு நல்ல மேலாண் அதிகாரியாக மாறும் வரை, அவருக்கு ஒரு மூத்த சகா வேண்டும் எனத் தீர்மானித்து, ’தலை வேட்டை’யாளர்களிடம் சொல்ல, அவர்கள் ஸ்கல்லியைச் சென்றடைந்து, அவரைக் கொய்து, ஆப்பிளின் முக்கிய நிர்வாக அதிகாரியாக்கி விடுகிறார்கள். பணியின் துவக்க காலம், தேனிலவுக்கு ஒப்பானது. உண்மையான முகமும், திறனும் முழுக்கத் தெரியாதபோது, இருவருமே ஒருவருக்கொருவர் அன்புடனும், காதலுடனும் இருப்பதுதானே உலக வழக்கு.
கார்ப்பரேட் நிறுவன ஆச்சாரங்களுக்கு உட்பட்டு, உடையணிந்து, ப்ரசெண்டேஷன்கள் கொடுத்து, சரியான மதுவகைகளை அருந்தி, அரசியலில் திளைத்து, மரியாதைகள் கொடுத்து வாங்கி, ஒரு சிற்றரசனாக வாழ்ந்து வந்த ஸ்கல்லிக்கு, நிறுவனக் கூட்டங்களில், நடுக்கூடத்தில் தரையில் சப்பணங்கால் போட்டு உட்கார்ந்து கொண்டு, வெற்றுக் கால் நகங்களை நோண்டிக் கொண்டிருக்கும் ஜாப்ஸ் முதல் கலாச்சார அதிர்ச்சி. கூட்டங்களில் எல்லோரும் எல்லோரையும் திட்டிக்கொள்வதும், ஜாப்ஸ் மாற்றவர்களைத் திட்டுவதும், மற்றவர்கள் ஜாப்ஸைத் திட்டுவதும் – என மீன் சந்தையாய் இருக்கும் ஆப்பிள் பிடிபட நாளாகிறது. அவர்கள் பேசிக் கொள்ளும் தொழில்நுட்ப வார்த்தைகளும் புரியவில்லை. இக்கட்டத்தை ஸ்கல்லி மிக நேர்மையாக எழுதியிருக்கிறார். அவர்கள் பேசிக் கொள்ளும் வார்த்தைகளைக் குறிப்பெடுத்துக் கொண்டு, டிக்ஷனரியில் அர்த்தம் புரிந்து கொண்டு ஒரு தொழில் நுட்ப நிறுவனத்தை நடத்த, பாமரத் தனமாக முயற்சிக்கிறார்.
தான் நடத்தும் தொழில் என்ன, உருவாக்கும் பொருட்கள் என்ன செய்யும், அவற்றின் நிறைகுறைகள் என்ன என்பது பற்றிய முழு அறிவு இல்லாமல், அத்தொழிலை நடத்துவது கடினம். இது, இயற்கையாகவே ஒரு வித பயத்தைக் கொடுக்கத்தான் செய்யும். எனவே, ஸ்கல்லி, தனது முயற்சிகளுக்கு ஜாப்ஸின் அங்கீகாரத்தை நாடத் துவங்குகிறார். ஜாப்ஸ் ஒரு destructive genius. தனது வசீகரத்தை மெல்ல மெல்ல ஸ்கல்லியின் மீது செலுத்தத் துவங்குகிறார். இக்கட்டத்தை ஐசக்ஸன் மிகச் சரியாகப் பிடித்து, நுண்ணோக்கியின் துணை கொண்டு ஆய்ந்து வெளிக்காட்டுகிறார். ஒரு வழிகாட்டியின் இடத்தில் இருந்து, ஒரு குருவின் பீடத்தில் இருந்து, ஜாப்ஸை வழிகாட்ட வேண்டிய ஸ்கல்லி, ஜாப்ஸின் அங்கீகாரத்தை வேண்டும் நபராக மாறியது ஒரு பெரும் பிறழ்வு. ஜாப்ஸ், ஸ்கல்லியையும் டாமினேட் செய்யத் துவங்க, ஆப்பிள் நிறுவன மேலாண்மை – மீண்டும் பரமபதக் கட்டத்தின் முதலிடத்தில்.
நிறுவன மேலாண்மையில், இன்று சாதாரணமாகப் பயன்படுத்தப் படும் சொல் – உணர்வுஜீவித்தனம் (Emotional quotient). அதாவது, நிறுவனத்தில், ஒரு குழுவில் தனது திறனை வெளிப்படுத்தி செயல்களைச் செய்வது. பெப்ஸி போன்ற நிறுவனங்களில் செயல்பட்டு வெற்றி பெற இது மிக முக்கியம். அதில், மிகப் பெரும் வெற்றியடைந்தவர்தான் ஸ்கல்லி எனினும், ஜாப்ஸ், வெறும் புத்திசாலி மனிதர் மட்டுமல்ல. மிக அதீத புத்திசாலித்தனமும், பிடிவாதமும், குழுக்களை influence செய்யும் திறனும் கொண்டவர். இவரை ஸ்கல்லி சமாளிக்க முடியாமல் திணறினார்.
வேறு வழியின்றி, ஜாப்ஸை ஆப்பிளை விட்டு வெளியேற்றும் முடிவுக்கு வருகிறார் ஸ்கல்லி. அம்முடிவை, ஆப்பிளின் நிறுவனர் குழுவையும் ஏற்க வைக்க, காய்களை நகர்த்தி, ஜாப்ஸை வெளியேற்றுகிறார். தனது நடவடிக்கைகள் அத்துமீறிப் போனதை உனர்ந்த ஜாப்ஸ், ஆப்பிளில் இருந்து வெளியேற்றப் படாமல் இருக்க எல்லாப் போராட்டமும் நடத்துகிறார். வாதம், அழுகை, தூற்றுதல் என தான் தோற்றுவித்த நிறுவனத்தில் இருந்து, தன்னால் நியமிக்கப்பட்ட தலைவராலேயே வெளியேற்றப் படுவது ஜாப்ஸுக்கு பெரும் துயரமாகவே இருந்திருக்கும். வெளியேறிய பின்பு, ஆப்பிளில் தனக்குப் பிடித்த சிலரை எடுத்துக் கொண்டு, NeXt என்னும் கம்ப்யூட்டர் நிறுவனத்தை உருவாக்கத் துவங்குகிறார். ஆப்பிளுக்கும், ஜாப்ஸுக்கும் பல வழக்குகள் துவங்குகின்றன.
நெக்ஸ்ட் பெரும் பணம் விழுங்கிக் கொண்டேயிருக்கிறது. ராஸ் பெரோ (Ross Perot- இவர் அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட்டவர்) என்னும் பெரும் முதலீட்டாளரை மயக்கி, நெக்ஸ்ட்டில் பெரும் முதலீடு செய்ய வைக்கிறார் ஜாப்ஸ். இதே சமயத்தில், பிக்ஸார் (Pixar) என்னும் அனிமேஷன் நிறுவனத்தில் 10 மில்லியன் முதலீடு செய்கிறார் ஜாப்ஸ். தொழில்நுட்பமும் நுகர்வோர் மனமும் சந்திக்கக் கூடிய இடம் அனிமேஷன் படம் தயாரித்தல். பிக்ஸாரின் எட் கேட்மல் (Ed Catmull) மற்றும் ஜான் லாஸெட்டர் – இவர்கள் இருவரும் பிக்ஸாரின் அனிமேஷனில் மிக முக்கிய படைப்பாக்கங்களை உருவாக்கும் முயற்சியில் இருக்கிறார்கள்.
ஒரு கட்டத்தில், பிக்ஸாருக்கு அதிக நிதி தேவைப்படுகிறது. அது திரும்ப வருமா வராதா என்ற நிலையில், லாஸெட்டர், ஜாப்ஸுக்கு, தான் உருவாக்கிய டின் டாய் அனிமேஷனைத் திரையிட்டுக் காட்டுகிறார். அதன் சாத்தியங்களைக் கணித்த ஜாப்ஸ், பிக்ஸாரில் மேலும் அதிக நிதியைக் கொட்டுகிறார். இந்த முடிவே ஒரு பெரும் தொழில் முனைவோரை ஒரு சாதாரண தொழில்துறை அதிகாரியிடமிருந்து வேறுபடுத்தி,அடையாளம் காட்டுகிறது. சாதாரணத் தொழில்துறை அதிகாரியாக இருந்திருந்தால், அவர் ஒரு நிறுவனத்தில் முக்கிய நிர்வாக அதிகாரியாகவே இருந்தாலும், ஏற்கனவே போடப்பட்ட பணம் திரும்ப வருமா, வராதா என்று நிச்சயமில்லாத நிலையில், இன்னும் அதிகமப் பணம் முதலீடு செய்யத் தயங்குவார். அவருக்கு தொழிலில் உதவ வேண்டிய நிதி வல்லுநர்களின் நிதி வரவு-செலவு கணிப்பு திட்டங்கள் எதுவும் தொழிலைத் தொடரவோ, முன்னெடுத்துச் செல்லத் தேவையான முதலீடு பற்றியோ முடிவெடுக்க உதவாது. உள்ளுணர்வின் துணையோடு, இது வரை போடப்படாத பாதையை, ஒரு அடர்ந்த கானகத்துள் செய்யும் பயணம் போன்ற ஒன்றைக் கற்பனை செய்ய, வெறும் மாதச் சம்பளம் வாங்கும் அதிகாரிகளால் முடியாது. ஆனால், தீர்க்க தரிசனம் கொண்ட தொழில் முனைவோரால், தடைகளைத் தாண்டி, தாங்கள் அடையப் போகும் பொன்னுலகைத் தரிசிக்க முடிகிறது. அத்தகைய கனவுகளே, மானிடர் வாழ்வின் மிகப் பெரும் மாற்றங்களை உருவாக்கி இருக்கின்றன. மதிய உணவுத் திட்டத்தை யோசித்த காமராசருக்கும், இந்தியப் பொருளாதாரத்தைத் திறந்து விட முயன்ற நரசிம்ம ராவ் / மன் மோகன் சிங் கூட்டணிக்கும், தங்க நாற்கரத்தை யோசித்த வாஜ்பாயிக்கும், அதிகாரிகள் கொடுத்த பதில் – நிதிப் பிரச்சினை. இதைச் செய்யப் போனால் ஆபத்து.
சுருங்கச் சொன்னால், சாதாரண மனிதர்கள், ஆட்ட விதிகளின் படி, ஆடுகிறார்கள். தலைவர்கள் ஆட்ட விதிகளை, ஏன் சில சமயங்களில் ஆட்டத்தையே மாற்றுகிறார்கள்.
ஜாப்ஸ், அனிமேஷன் துறையின் ஜாம்பவான்களாகிய வால்ட் டிஸ்னியைச் சந்தித்து, அவர்களைக் கம்ப்யூட்டர் அனிமேஷன் படங்களைத் தயாரிக்க ஒத்துக்கொள்ள வைக்கிறார். அவர்களுடன் இணைந்து டாய் ஸ்டோரி (Toy story) என்னும் திரைப்படத்தைத் தயாரிக்கிறார். இதில் துவங்கி, பிக்ஸாரும், டிஸ்னியும் தொடர்ந்து 10 மாபெரும் வெற்றிப் படங்களைத் தருகிறார்கள். சினிமா உலகில் இந்தச் சாதனை மிகப் பெரிது. இதில், லாஸெட்டரின் படைப்பூக்கமும், ஜாப்ஸின், தொழில் நுட்ப உச்சங்களை அடையத் தேவையான மூர்க்கத் தனமான பிடிவாதமும் முக்கியப் பங்கு வகித்தன.
அதே சமயத்தில் ஆப்பிளின் பாதையில் பல ஸ்வாரஸியமான மாறுதல்கள் ஏற்படுகின்றன. ஜாப்ஸ் வெளியேற்றப் பட்ட அடுத்த சில ஆண்டுகளில், ஆப்பிள் நிறுவனம் தொடர்ந்து பெரும் லாபத்தை ஈட்டுகிறது. இதை வைத்து, சந்தைகளும், நிதி வல்லுநர்களும் ஆப்பிள் ஒரு திடமான பாதையில் நடை போடுவதாகக் கணிக்கிறார்கள். (ஜாப்ஸ் வெளியேற்றப் பட்ட செய்தி வெளியானவுடன், பங்குச் சந்தையில், ஆப்பிளின் பங்குகள் 7% உயர்ந்தன) நியூட்டனின் முதல் விதி இவ்வாறு சொல்கிறது. ”ஒரு பொருளின் மீது வெளிப்புறவிசையொன்று செயல்படும் வரை எந்த ஒரு பொருளும் தனது ஓய்வு நிலையையோ அல்லது நேர்க்கோட்டில் அமைந்த சீரான இயக்க நிலையையோ மாற்றிக் கொள்ளாது.” மிகக் குறுகிய காலப் பார்வையில் பார்க்கும் போது, நிறுவனத்தில் எல்லாம் சரியாகப் போய்க்கொண்டிருப்பதாக ஒரு தோற்றம் இருக்கும். ஆனால், சந்தை, தொழில்நுட்பம் என்னும் வெளிப்புற விசைகள் ஒரு நிறுவனத்தைத் தாக்கத் துவங்கும் போதுதான், அந்நிறுவனத்தின், முன்னோக்கிச் செல்லும் திறனும், அதைச் செலுத்தும் தலைவனின் திறனும் வெளியில் தெரியும்.
மூன்றாண்டுகள் தொடர் நிதி நிலை வெற்றி எவருக்குமே போதை தரக்கூடியதுதானே. ஸ்கல்லி, ஒரு பெரும் தலைவராக மாறி, பெரும் பிரகடனங்களை விடுக்கிறார். ஜாப்ஸின் கனவான, உயர் தொழில்நுட்பத்தை நுகர்வோருக்கு எடுத்துச் செல்லும் திட்டத்தை மறுக்கிறார். உயர் தொழில்நுட்பம் ஒரு போதும், ஒரு நுகர்வுப் பொருளாகாது என. ஒரு விஷயத்தைப் பற்றி அதிகம் தெரியாத போது அதைப் பற்றிப் பெரும் பிரகடனங்களை வெளியிடுவதுதான் எவ்வளவு எளிதாக இருக்கிறது. ஆனால் அடுத்த சில ஆண்டுகளில், ஆப்பிள் நிறுவனம் சரியத் துவங்குகிறது. ஏனெனில், மிக விரைவாக மாறிவரும் தொழில்நுட்ப வியாபாரத்தில், சந்தைக்கு அடுத்து அடுத்துக் கொடுக்க ஆப்பிளில் புது விஷயங்கள் இல்லை. ஸ்கல்லி, ஆப்பிளில் இருந்து வெளியேற்றப் படுகிறார்.
இது ஜாப்ஸுக்கு மிகக் கடும் சினத்தை உருவாக்குகிறது. ஸ்கல்லி, ஊழல் மனிதர்களை உள்ளே அழைத்து, ஊழல் விழுமியங்களை உருவாக்கி, ஆப்பிளை அழித்து விட்டார் என்று குமுறுகிறார். அவர்கள் செய்ததெல்லாம், தங்களுக்கும், ஆப்பிளுக்கும் மேலும் பணத்தை மட்டுமே சேர்த்ததுதான். ஆப்பிளை மேலே மேலே எடுத்துச் செல்லும் பொருட்களை உருவாக்க அவர்கள் ஒன்றுமே செய்யவேயில்லை. பொருட்களின் தரத்தை, சாத்தியங்களை அதிகரித்து, அவற்றை நுகர்வோருக்குச் சரியான விலையில் தராமல், ஸ்கல்லி அதீத லாப நோக்கில், கையில் இருக்கும் ஆப்பிள் பொருட்களின் விலையை மட்டும் அதிகரித்து, சந்தையில் ஆப்பிள் பொருட்களின் விற்பனைச் சதவீதத்தைக் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைத்து, அதை வீழ்ச்சிப் பாதையில் போக விட்டார் என்கிறார்.
இது தொழில்துறையில் ஊடுருவியிருக்கும் பெரும் நச்சுக்களை. ஒரு பத்தாண்டுகள் எந்த ஒரு துறையையும் உற்று நோக்கினால் தெரிய வரும். உதாரணமாக, இந்தியாவின் பெரும் நுகர்வுப் பொருள் நிறுவனம் ஒன்று, பெரும் பனிக்கூழ் (ice cream) தொழிலை, ஒரு இந்தியத் தொழில்முனைவோரிடம் இருந்து வாங்கியது. வெளியில் இருந்து, ஒரு அழகான தொழிலாகத் தோன்றும் பனிக்கூழ் வியாபாரம், மிகக் குறைவான லாப சதவீதம் கொண்டது. பனிக்கூழை உறைநிலையில் வைத்திருக்கத் தேவையான கட்டமைப்புக்குப் பெரும் நிதி முதலீடு தேவை. பனிக்கூழ், பால் கொண்டும், பால் க்ரீம் கொண்டும் தயாரிக்கப் படுகிறது. இது மிக விலை அதிகமான ஒரு கச்சாப் பொருள். இதை வாங்கியவுடன், அந்த நிறுவனத்தின் மேலாளர்கள் முதலில் செய்த ஆராய்ச்சி, பனிக்கூழ் பொருளின் லாபத்தை எப்படி அதிகரிப்பது என்பதுதான். பாலுக்குப் பதிலாக, சமையல் எண்ணெயில் செய்த கொழுப்பை உபயோக்கித்தால், லாப சதவீதம் அதிகமாகும் என்ற ஆராய்ச்சி செய்து கண்டுபிடித்த அவர்கள், பனிக்கூழில், வனஸ்பதி என்னும் ஹைட்ரஜெனேடட் எண்ணெய்க் கொழுப்பை உபயோகிக்கத் துவங்கினார்கள். ஆனால், அதை, சட்டப் படி, பனிக்கூழ் என்று அழைக்க முடியாது. அதை உறைபனி இனிப்பு (frozen Dessert) என்றுதான் அழைக்க முடியும். இது சாதாரணப் பனிக்கூழ் போலல்லாமல், கெட்டியாக இருக்கும். இதைத் தான் ஜாப்ஸ் ஊழல் விழுமியம் என்கிறார். காந்தியும் தனது ஏழு பாவங்கள் பட்டியலில், இதை, ’நன்னெறியில்லாத வணிகம்’ என்று அழைக்கிறார். ஏனெனில், இம்மாற்றத்தை, பனிக்கூழ் வாங்கி உபயோகிக்கும் நுகர்வோருக்கு அந்நிறுவனம் அறிவிக்கவேயில்லை. அறிவிக்க அவர்கள் முட்டாள்களும் இல்லை.
ஒரு சாதாரண மேலாண் பட்டதாரியின் செய்முறை என்னவென்றால் – ஒரு நிறுவனத்தில் 3-5 ஆண்டுகள் பணிபுரிவது. அதற்குள், அந்நிறுவனத்தின் மேலாளர்களுக்கு அதிக லாபம் சம்பாதித்துக் கொடுத்து, பதிலாகத் தனக்குத் தேவையான ஊதிய ஊட்டத்தைப் பெறுவதும், உயர்நிலைக்குச் செல்வதுமே அவர் நோக்கமாக இருக்கிறது. ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு, இன்னொரு நிறுவனத்துக்கு, அதிக ஊழியத்துக்கு, உயர்நிலைக்குத் தாவுதல். இதற்காக, அவர் எந்தக் குறுக்கு வழியையும் கடைபிடிக்கத் தயார். ஒரு பொருள், நுகர்வோரின் உண்மையான தேவையைத் தொடர்ந்து பூர்த்தி செய்கிறதா என்பது இரண்டாம் பட்சம் தான். சொல்லப் போனால், ஒரு மேலாளனுக்குத் தேவையேயில்லை என்பதான ஒரு கலாச்சாரம் இன்று தொழில்களைப் பீடித்துக் கொண்டிருக்கிறது.
1985ல் ஜாப்ஸ் வெளியேற்றப்பட்டவுடன், முதல் மூன்று நான்காண்டுகள் வரை லாபத்தில் இருந்த ஆப்பிள் மெல்ல மெல்ல சரியத் துவங்கியது. ஸ்கல்லி, 1993 ல் மோசமான வியாபாரம் நட்டம் காரணமாக வெளியேற்றப் பட்டார். அதைத் தொடர்ந்து வந்த மைக்கேல் ஸ்பின்ட்லர், ஆப்பிளை, பல நிறுவனங்களுக்கு விற்க முயன்றார். அது தோல்வியில் முடிய, அவரும் வெளியேற்றப் பட்டு, அடுத்ததாக கில் அமேலியோ என்னும் ஆராய்ச்சி நிபுணர் தலைமைப் பொறுப்பேற்றார். ஆப்பிளின் வீழ்ச்சி தொடர்ந்தது.
நிறுவனத்தை நடத்தத் திணறும் அமேலியோ, ஜாப்ஸின் ஆலோசனையை நாடுகிறார். மெல்ல மெல்ல ஸ்டீவ் ஜாப்ஸ், மீண்டும் ஆப்பிளின் உள்ளே நுழைகிறார் – அமேலியோவின் ஆலோசகராக. நுழைந்த சிறு காலத்திலேயே, அமேலியோ வெளியேற்றப்படுகிறார். காரணம் – ஸ்டீவ் ஜாப்ஸ். ஆப்பிள் நிறுவனத் தலைவராக ஜாப்ஸ் விரைவில் முழுப் பொறுப்பேற்றுக் கொள்கிறார். ஆனால், சம்பளம் வாங்க மறுத்து விடுகிறார். வருடத்திற்கு, ஒரு டாலர் மற்றுமே ஒரு அடையாள ஊதியம். ஆனால், திரும்ப ஆப்பிளுக்கு வந்த ஜாப்ஸ், கொஞ்சம் மாறிய மனிதராக இருந்தார். ஆப்பிளில் இருந்து வெளியேற்றப் பட்ட பின்பு, மீண்டும் இரண்டு நிறுவனங்களை நடத்திய அனுபவம் அவரைக் கொஞ்சம் பண்படுத்தியிருந்தது எனச் சொல்லலாம்.
தனது முதல் மேலாண் பரிசீலனைக் கூட்டத்தில், ஆப்பிளின் வருங்காலத் திட்டத்தைப் பற்றிப் பேசுகிறார். எத்தனை புது கம்யூட்டர் வகைகளை ஆப்பிள் வருங்காலத்தில் உருவாக்க இருக்கிறது என்று ஒரு பலகையில் எழுதச் சொன்ன போது, பலகையை நிறைத்துவிட்டது ஆப்பிளின் வருங்கால கம்ப்யூட்டர் லிஸ்ட். அதை அப்படியே அழித்து விட்டு, ஒரு 2×2 லிஸ்ட் போடுகிறார். ஒரு மடிக் கணினி (lap top). ஒரு மேசைக் கணினி (desk top). ஒன்று தொழில்நுட்ப உபயோகிப்பாளருக்கு; ஒன்று வீடுகளில், சாதாரண உபயோகத்துக்கு. மொத்தமே நான்கு வழிகள் என ஆப்பிளின் பாதையை எளிமையாக்குகிறார். இது ஒரு பெரும் அடிப்படை மாற்றம்.
வழக்கமாக, மேலாளர்கள், தங்களின் பலவீனங்கள் வெளியில் தெரியக் கூடாதென்பதற்காக, வேலையை வேண்டுமென்றே செடுக்கு நிறைந்ததாகச் (complicate) செய்வார்கள். நான்கு மாடல்களுக்குப் பதிலாக, நாற்பது மாடல்களை வெவ்வேறு காரணங்கள் சொல்லி உருவாக்குவார்கள். நாலில் ஒன்றிரண்டு வெற்றி பெறுவதை விட, நாற்பதில் ஒன்றிரண்டு வெற்றி பெரும் வாய்ப்பு அதிகம் தானே? ஏனெனில், தோல்விகள் மேலாளர்களின் வேலை வாய்ப்பைப் பாதிக்கும். எனவே அவர்கள் முடிந்தவரை தோல்வியடையக் கூடும் என்று தோன்றும் செயல்களைச் செய்ய மாட்டார்கள். அப்படியே தோல்வியடைந்தால், அதற்கு வேறு யாரோ காரணம் என்பது போல் மடை மாற்றி விடுவார்கள். இதை ஆங்கிலத்தில் ’throwing a red herring’ என்று சொல்வார்கள். அப்படி யார் மீதும் பழிபோட முடியாவிட்டால், அதை அப்படியே அமுக்கி விடுவார்கள். அதையும் செய்ய முடியாவிட்டால், வேறு வேலை தேடிக் கொண்டு போய்விடுவார்கள். ஆனால், ஒரு தொழில்முனைவோர் இதை வேறு விதமாக அணுகுவார். அவர் தன்னிடமுள்ள முதலீட்டை, மிக முக்கியமான எதிர்காலப் பொருட்களாகத் தான் நம்பும் சில விஷயங்களில் முதலீடு செய்வார். தோல்வி இரண்டு தரப்பிலும் உண்டு என்றாலும், பெரும் வெற்றியை அடையும் வழி, நிறுவனத்தின் பொருளாதாரத்தை சில நோக்கங்களில் குவித்து, அதன் பின்னர் மக்களை ஒருங்கிணைத்து நடத்துவதுதான். இதில் பெருந்தோல்வி வரும் சாத்தியமும் உண்டு. ஒரு மேலாளர், தோல்வி வரும் என்று தோன்றும் விஷயங்களில் முடிவெடுக்கத் தயங்குவார். வேலை போய்விடும் என்னும் பயம் மட்டுமல்ல, தான் ரிஸ்க் எடுப்பது இன்னொருவரின் பணத்தில் என்னும் தயக்கமும் கூட ஒரு காரணம்.
சுருக்கமாகச் சொன்னால் – Complication Vs Simplification என்று சொல்லலாம். தன் வாழ்க்கைப் பயணத்தில் பல்வேறு சோதனைகளையும், உரையாடல்களையும் செய்து கொண்டிருந்த காந்தி, காங்கிரஸை நடத்தும் போது, மிக எளிமையான போராட்டங்களைத்தான் முன்னெடுத்துச் சென்றார் – உப்புச் சத்தியாக்கிரகம், அன்னிய துணி பகிஷ்கரிப்பு என. இது ஒரு பெரும் தலைவரின் வழி.
ஆப்பிளின் தொழில் நோக்கங்களை எளிதாக்கி, அதை லாப வழியில் திருப்பிவிட்ட பின் தனது அடுத்த பெரும் நோக்கத்தைச் செயல்படுத்தும் முயற்சியில் இறங்கினார். அந்த முயற்சி, ஆப்பிளை இது வரை காணாத உயரத்துக்கு இட்டுச் சென்றது. அது தொழில்நுட்பத்தை நுகர்வோர் பொருட்களாக மாற்றி அமைத்த, நடப்பு நிலையை நிலைகுலைய வைத்த முன்னெடுப்பு (disruptive innovation). ஐ.பாட், ஐ.பேட் மற்றும் ஐ.ஃபோன் என்னும் பொருட்கள்.
கிராமஃபோன் இசைத் தட்டுகளில் இருந்து இசை பெரும் டேப் ரிக்கார்டர்களுக்கு மாறியது. அது நிலைகுலைய வைத்த தடம் மாறுதல், முன்னெடுப்பு. அதிலிருந்து அடுத்த படியாக, சிறிய வாக் மேனுக்கு மாறியது. இது முன்னெடுப்பை நீட்டித்தது, தொடர்ந்தது (continued improvement). பெரிய பொருள் அளவில் சிறியதானது. அது சோனி என்னும் நிறுவனத்தைப் பெரும் உச்சத்துக்குக் கொண்டு சென்றது. இசை, மனிதனோடு பயணம் செய்யும் வாய்ப்பை அளித்தது. ஆனால், சோனி நிறுவனத்துக்கு வாக்மேனுக்கு அடுத்த படியான பரிணாமத்தை யோசிக்க முடியவில்லை. பாக்கெட்டில் ஆயிரம் பாடல்கள் என்னும் எண்ணத்தில் உருவானது ஆப்பிளின் ஐ.பேட். Disruptive innovation. அதற்கான பாடல்களை தரவிறக்கிக் கொள்ள ஐ.ட்யூன்ஸ் என்னும் இசை அங்காடி.
அடுத்த பொருள் – கம்ப்யூட்டரை விடச் சிறிய ஐ.பேட். அளவிலும் திறத்திலும் குறைந்த, ஆனால், சாதாரண உபயோகிப்பாளருக்குத் தேவையான அம்சங்கள் நிறைந்த ஒரு பொருள். இறுதியாக, ஐ.போன் –கைபேசியின் அனைத்துச் சாத்தியங்களையும் கொண்டு, மிக எளிமையான அழகுடன் உருவாக்கப் பட்டது இந்தப் பொருள். சந்தையில் இறக்கிய ஓராண்டிலேயே, ஆப்பிள் நிறுவனத்தின் பொருளாதாரத்தைp பல மடங்கு அதிகரிக்க வைத்தது.
இந்தப் பொருட்களின் வடிவமைப்பில் இரு முக்கிய தனித்துவ அம்சங்கள் உள்ளன. ஒன்று, ஆப்பிள் கம்ப்யூட்டர்களின் கச்சிதமான வெளி வடிவமைப்பு போலவே, அவற்றின் உட்புறங்களும் வடிவமைக்கப் பட்டிருப்பதே. சிறு வயதில், தன் தந்தை பால் ஜாப்ஸிடம் இருந்து அவர் கற்றுக் கொண்டது அது. வீட்டிற்கான, மர வேலியை அமைக்கும் போது, ஸ்டீவ் ஜாப்ஸ், சரியான வடிவங்கள் கொண்ட மரத்துண்டுகளை வீட்டின் முன்புறமும், கொஞ்சம் வடிவம் சரியில்லாத துண்டுகளை, வீட்டின் பின்புற வேலிக்குப் பயன்படுத்தலாம் என்று சொல்கிறார் ஸ்டீவ். தந்தை பால் அதன் காரணம் கேட்க, ஸ்டீவ், ‘பின்னாடி யாரும் பார்க்கப் போவது இல்லையே என்று பதில் சொல்கிறார். அதற்கு அவர் தந்தை சொன்ன மறுமொழி, அவர் வாழ்க்கையின் மிக முக்கிய கொள்கைகளில் ஒன்றாகிறது. “பின்னால் வடிவம் சரியில்லாத துண்டுகள் இருப்பதை யாரும் பார்க்காமல் போகலாம். ஆனல், உனக்குத் தெரியுமே.” ஆப்பிள் கணினிகளின் ஸ்ர்க்யூட் பலகைகள் கூட மிக நேர்த்தியாக வடிவமைக்கப் படவேண்டும் என்று அதை கொஞ்சமும் சமரசமின்றி, நடைமுறைப் படுத்தியவர் ஜாப்ஸ். மாக்கின்டாஷ்- (McIntosh- என்றுதான் முதல் கட்ட ஆப்பிள் கணினிகள் அழைக்கப்பட்டன. மாக்கின்டாஷ் என்பது ஆப்பிள் பழத்தில் ஒரு வகையின் பெயர்.)- கணினியின் சர்கெட் (Circuit) பலகையில், அதை வடிவமைத்த அனைவரும் கையெழுத்திட்ட பட்டை பொருத்தப் பட்டிருக்கும்.
இரண்டாவது தனித்துவ அம்சம் – ஆப்பிளின் வெளி வடிவமைப்பு. ஆப்பிள் பொருட்களின் வடிவமைப்பு எல்லாமே ஒரு எளிமையான அழகுடன் மிளிர்கின்றன. இதை ஜாப்ஸ் என்னும் தனிப்பெரும் ஆளுமையின் தாக்கம் என்றே சொல்ல வேண்டும். வெளிப்புற வடிவமைப்பிற்கென்றே ஒரு ஐரோப்பிய வடிவமைப்பு நிறுவனத்துடன் ஒப்பந்தம் ஏற்படுத்திக் கொண்டு, அதை ஆப்பிள் தயாரிப்பின் மிக முக்கிய அங்கமாக்கினார். பின்னால், ஆப்பிள் பொருட்களை விற்பனை செய்ய, ‘ஆப்பிள் ஸ்டோர்’களையும் இதே கொள்கையுடன் வடிவமைத்தார். ஆப்பிள், வெறும் கணினியோ / நுகர்வோர் சாதனமோ அல்ல. அது ஒரு அனுபவம் என்பதைத் திரும்பத் திரும்ப வலியுறுத்தினார். நுகர்வோரின் அனுபவத்தைத் தம் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க வேண்டும் என்பதை, ஒரு தொழில்நுட்பத்துக்கான முக்கியத்துவத்துடன் கடைப் பிடித்தார்.
ஆனால், இவ்வளவு நுணுக்கமாகத் தொழிலை தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்த அவர், ஆப்பிள் தொழிற்சாலைகளை சீனாவுக்குக் கொண்டு சென்றார் என்னும் புள்ளியில் முரண் தெரிகிறது. உற்பத்திச் செலவைக் குறைப்பது என்பது எல்லோரும் சொல்லும் காரணம்தான், அதில் உண்மை உள்ளது என்று கொண்டாலும், ஒரு கலைஞனுக்கே உரித்தான அணுகுமுறை கொண்ட ஜாப்ஸின் மனத்தில் லாபம் என்னும் குறிக்கோளும் ஓடிக் கொண்டேயிருந்தது ஒரு முரண்.
ஜாப்ஸின் வாழ்க்கை வரலாற்றைப் படிக்கும் போது, அவரின் அந்த அர்ப்பணிப்பு, தொழில்நுட்பங்களை நுகர்வோருக்கான தேவையோடு இணைக்கத் தெரிந்த ஒரு தீர்க்கதரிசனம், வடிவமைப்பில் எளிமையான அழகியல் நேர்த்தி என்னும் பெரும் விஷயங்களைக் கற்றுக் கொள்ளும் அதே சமயம், எப்படி நிறுவனக் குழுக்களை நடத்தக் கூடாது என்னும் முக்கிய நிறுவன நிர்வாகக் கலையையும் கற்றுக் கொள்ளலாம். மொத்தத்தில், ஜாப்ஸின் வாழ்க்கை, கலைஞர்கள், மேலாளர்கள் என்று பல தரப்பினரும் படித்துணர வேண்டிய ஒரு உயர் காவியம். உண்மைச் சம்பவங்களினூடே வெளிப்படும் ஒரு பெரும் வாழ்க்கையின் தரிசனங்கள் மிக அற்புதமானவை. எழுதிய வால்டர் ஐஸக்சன், இது வரை ஐன்ஷ்டைன், பெஞ்சமின் ஃப்ராங்க்லின் போன்றவர்களின் வரலாறுகளை எழுதியவர். டைம் பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர்.