1951 ல் ஒடிஷாவின் கட்டக் நகரில் பிறந்த பிபூ பாதி, தான் படித்த ரெவன்ஷா கல்லூரியிலேயே பணியாற்றி 2007 –ல் பணியிலிருந்து ஓய்வு பெற்றார். 1975-ல் இவர் தீவிரமாய் எழுத ஆரம்பித்த பின் பல இந்திய இலக்கியப் பத்திரிக்கைகளில் இவரது படைப்புகள் பிரசுரமாயுள்ளன. ஆங்கிலத்தில் எழுதும் இவரது கவிதைகள் Poetry Review, Poetry Wales, Stand, Rialto, The New Criterion, Poetry, TriQuarterly, Southwest Review, Antigonish Review and Queen’s Quarterly. என உயர் கவிதைத் தரம் கொண்ட பல சர்வதேச பத்திரிகைகளிலும் பதிப்பிக்கப்பட்டுள்ளன. பல கவிதைத் தொகுப்புகளிலும் இவரது கவிதைகள் இடம்பெற்றுள்ளன. இவரது கவிதைகள் மட்டுமே இதுவரை ஏழு புத்தகங்களில் வெளிவந்துள்ளன. ஆங்கிலத்தில் எழுதினாலும் இவரது கவிதைகள் முழுதும் இந்தியக் கலாசாரம், சிந்தனையில் ஊறியவை.
சுவர்ப் பல்லிகள்
பிபூ பாதி
வெப்பமண்டலத்தின்* இவ்வீடுகளில்
அவை நிறைய
ஆனால் பெரும்பாலும் தம் இனத்துடனே தனித்திருக்கும்
நன்றியுடன் தம்மை அர்ப்பணிக்கும் பூச்சிகளை மட்டும் உண்டு.
அவை அனைத்திடமும் ’சரி’ என்றொரு நம்பிக்கை.
நாம் வேறுபடும் பொழுதுகளில்,
பழைய செய்தித்தாள் கட்டிலிருந்து வரும் அந்தச் சொல்
ட்ரூ, ட்ரூ**
எண்ணவோட்டத்தின் ஒரு நெருக்கடியில்
எல்லாம் எத்தனை முயன்றும் அவிழாத முடிச்சாய்
கட்டுண்டு போகையில் அல்லது
கற்பனை வறட்சியின் கடைமூலையில்
நமக்கே நாம் தொலைவாய் ஆகையில்
நமக்குக் கேட்கும்
ட்ரூ, ட்ரூ.
ஊர்வன. பழுப்பு வெள்ளையும், புகைச் சாம்பல் வண்ணத்தில்
தீங்கற்றவை.
பண்டைய நினைவுகளின் பாதுகாவலர்
பொறாமையூட்டும் மாற்றுருவில்
விவேகம் மிக்க நம் முன்னோர்.
*வெப்பமண்டலம் – Tropical
** ட்ரூ, ட்ரூ (true, true) -சரி சரி. [கௌளி சொல்லும் பல்லிகளின் கெக்கலிப்பையும் இந்த ஒலிப்பில் சுட்டுகிறது கவிதை.]
இத்தகைய விஷயங்கள் உண்டு
பிபூ பாதி
‘அந்தக் காலடி சத்தத்தைத் திரும்பவும் கேட்டேன்’ என்றான் அவன்,
அண்டைவீட்டவரின் குட்டிப்பெண்ணிடமிருந்து திரும்பி வந்ததும். ‘என்னைத் தொடர்ந்து, என் காலடிக்குப் பின்னேயே, பாதுகாப்பாய் தெரியும் நம் கதவருகே நான் வரும்வரையில்.’
யாருக்கு அவ்வளவு அக்கறை என் குழந்தையைப் பற்றி, அத்தனை அண்மையில் காலடி கேட்க? இது முன்பனிக்காலம், மாலைப் பொழுது, அசையாத மரங்கள், அவற்றின் இலைகள்.
அது காற்றாய் இருக்காது, எனக்குத் தெரியும். ’அது என்னவாயிருக்கும்’ என்று தனித்திருக்கையில் என் குழந்தை யோசிக்கையில் மட்டும் அவனுடனேயே இருக்கும், அவன் மனதுக்கு மிகவும் பிரியமான ஒன்றா?
அவனிடம் சொன்னேன்:’அதை மறந்துவிடு. நீ கற்பனை செய்ததுதான் அது. வேறொன்றுமில்லை.’ அவன் நம்பவில்லை. அவன் கண்களில் கசியும் மெய்யான கண்ணீர், வருங்காலத்துக்குரிய ஒரு மௌனம், அவநம்பிக்கை.
அக்காலடிகள் மட்டும் என்னைத் தொடர்ந்திருப்பின், நான் பின்னே திரும்பி அங்கிருந்தது, என் குழந்தை மட்டுமே அவருக்கு அளிக்கக்கூடிய ஒரு அன்புப் பார்வைக்குக் காத்திருக்கும் என் தந்தைதான் அது எனப் பார்த்திருப்பேன். அல்லது ’உன் குழந்தையைப் பார்த்துக்கொள், பார்த்துக்கொள்’ என எப்போதும் சொல்லும் என் பாட்டி.
ஒரு அன்புப் பார்வையோ, வார்த்தையோ பரம்பரையாய் இறங்கும் என்று நானறிவேன். எப்படித் தலைமுறைகள் எல்லாம் ஒரே இடத்தில், ஏககாலத்தில் உடனிருப்பைப் பகிர்ந்து ஒன்றோடொன்று கூடி வாழ்கின்றன என்பதையும்.
ஆனால் முன்பனிக்கால அந்தியில் அவனைத் தொடரும் சில அயல் காலடிகளில் மட்டுமே வாழும் இவ்வாண்டாண்டு கால வினோத உறவை எப்படி என் குழந்தைக்கு விளக்குவேன்?
——————–
பிபேக் ஜேனா (1937 – 1985): ஒடியாவின் சிறந்த கவிஞர்களுள் ஒருவராய் கருதப்பட்டாலும் பிபேக் ஜேனா அவரது தாய்மொழிக்கும், மாநிலத்துக்கும் வெளியே பெரிதும் அறியப்படாதவர். இவரது கவிதைகளை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து பிபூ பாதி புத்தகமாய் வெளியிட்டுள்ளார்.
கவிதை
-பிபேக் ஜேனா
திரும்பிவரும்வரை மலர்ந்திரு
என்று நீ அந்தப் பூவிடம் சொல்கையில்
நான் முதல்முறை அழுவேன்..
வசந்தக்காற்றில் அதிரும் பூ
பூத்திருக்கையிலே வாடும் ஒரு நினைவைப் போல்
நீ இல்லாத வெம்மையில் வாடிப் போகும்.
அந்தி சாய்வதைப் பார்த்திருக்கும்
சோகம் பிணிந்த அம்மலருடன்,
நீ வரக் காத்திருக்கையில்
சாய்ந்த பொழுதின் பிரேதத்துடன்
இருக்கும் என் இரண்டாம் அழுகை
பின்பு வரும் இருட்டில் ஒரு வேளை
அந்த மலர் மரத்தைவிட்டு மெல்லக் கீழிறங்கி
ஏனோ எங்கோ சென்று மறையும்.
காரிருளில் நீ திரும்பாதிருப்பாய்,
அப்போதிருக்கும் என் கடைசி அழுகை.