ஒழிமுறி – உறவெனும் புதிர்

இந்தியாவில் திரைப்படங்கள் உருவாக்கப்பட ஆரம்பித்து இவ்வருடத்தோடு நூறு வருடங்கள் ஆகின்றன. இதை முக்கியப்படுத்தும் வகையில் தொடர்ந்து முக்கியமான இந்தியத் திரைப்படங்கள் குறித்த கட்டுரைகள் சொல்வனத்தில் வெளியாகும். அவ்வரிசையில் முதல் கட்டுரை இது.

வாழ்வின் கணங்களிலேயே சிக்கலானது மனித மனங்களை வாசிப்பதும், புரிந்து தெளிந்து கையாள்வதுமே. உறவிலும்,நட்பிலும் பூரணத்துவம் பெற்ற புரிதல்கள் மிக அரிதாகவே சாத்தியமாகின்றன.

கூடவே வாழும் உறவுகள் சார்ந்த புரிதல்கள் இன்னும் கூடச் சிக்கலானவை.சிண்டும்,சிடுக்குமான மனக்குகை ஆழங்களில் பொதிந்திருப்பது என்னவென்பதை இனங்கண்டு முடிப்பதற்குள் ஒரு ஆயுட்காலமே நம்மிலிருந்து நழுவிப்போய் விடுகிறது.நெருக்கம் என நினைத்துக் கொண்டிருப்பது, ஏதோ ஒரு புள்ளியில் விலக்கமாக மாறிப்போவதும், விலக்கம் என எண்ணிக்கொண்டிருப்பது எதிர்பாராத ஒரு நொடியில் நெருக்கமாக மாயம் காட்டுவதும் மானுட வாழ்வின் விளங்காப் புதிர்களில் ஒன்று. மதுபால் இயக்கத்தில்,எழுத்தாளர் ஜெயமோகனின் கதை,திரைக்கதை,வசனத்தில் வெளிவந்திருக்கும் ஒழிமுறி-மலையாளத் திரைப்படத்தை [ஒழிமுறி-மணவிலக்கு கோரும் விண்ணப்பம்[A DOCUMENT OF SEPARATION] இந்தப் புதிர்களின் ஆவணமாகவே கொள்ளலாம்.

ozhimuri-puthiyacinema-13

தந்தை-மகன்,தாய்-மகன்,கணவன்-மனைவி,மாமியார்-மருமகள் ஆகிய உறவுகள் எல்லோருக்கும் பரிச்சயமானவை, பழகிப்போனவை;ஆனால் அந்த உறவுகளின் அடியாழம் வரை சென்று அங்கே புதையுண்டு கிடக்கும் சில அழகுகளை, அவலங்களை,மேன்மைகளை, அருவருப்புக்களை, மகத்துவங்களை, மனக்கோணல்களை அகழ்ந்து எடுத்து வந்து அப்பட்டமாகக் காட்சிப்படுத்தி மனித மனச்சாட்சியின் உச்சிமுடி பிடித்து உலுக்கியிருக்கிறது இந்தப்படம். இது தரும் வெவ்வேறான தரிசனங்கள்,அச்சமா…பரவசமா எனப் பிரித்துக் காட்ட முடியாத மன எழுச்சிகளையும்,சிலிர்ப்புகளையும் கிளர்ந்தெழச் செய்யக்கூடியவை; ஆழமும், அழுத்தமுமான கட்டங்களின் காட்சிப்படுத்தல்கள், அவற்றை கூர்மையாகக் கொண்டு சேர்க்கும் வசனங்கள் ஆகியவற்றின் ஒருங்கிணைப்பே மேற்குறித்த மன உச்சங்களைப் பார்வையாளர்களுக்கு சாத்தியப்படுத்தியிருக்கிறது. இதன் வழி முக்கியமான இந்தியத் திரைப்படங்களில் ஒன்றாகியிருக்கிருக்கும் ஒழிமுறி,கோவா திரைவிழாவுக்கும் திருவனந்தபுரம் திரைவிழாவுக்கும் இந்தியன் பனோரமாவுக்கும் தேர்வாகியிருக்கிறது.

கதைகளிலும்,கதைக்குள் வரும் உரையாடல்களிலும், கதையல்லாத பிற எழுத்துக்களிலும் ஜெயமோகனின் அபாரமான வீச்சும் திறனும் பலருக்கும் பரிச்சயமானவைதான். ஆனால் இந்தத் திரைப்படத்தில் திரைக்கதை ஆசிரியராகவும் பங்களிப்புச் செய்திருக்கும் ஜெயமோகன், வணிகப்படத்துக்கான மலிவான பரபரப்புக்கள் அற்றதும், அதே வேளையில் ஒரு கட்டத்திலும் தொய்வே இல்லாததுமான விறுவிறுப்பான திரைக்கதை அமைப்பால் நம்மை வியப்பில் ஆழ்த்தியிருக்கிறார். பார்வையாளர்களின் ஆர்வத்தைத் தொடர்ந்து தக்கவைத்துக் கொள்ளும் வகையில் தொடுக்கப்பட்டிருக்கும் முன்னும் பின்னுமான காட்சிகள்- துண்டுதுண்டான கதை இழைகளைச் சீராக நெய்திருக்கும் செய்நேர்த்தி இவற்றால் மிகச்சிறந்த திரைக்கதை ஆசிரியர் என்னும் பரிமாணத்தையும் இந்தப்படத்தின் வழி ஜெயமோகன் பெற்று விடுகிறார். நீதிமன்ற நடுவருக்குக் குரல் தந்திருப்பதும் கூட ஜெயமோகன்தான்; அந்தப்பாத்திரம் பேசும் எள்ளலும் மெல்லிய நகைச்சுவையும் இழையோடும் பல வசனங்களுக்குத் தன் குரலாலேயே உயிரும் தந்திருக்கிறார் அவர்.

தொழில்நுட்ப உத்திகள் மலிந்த இன்றைய திரை உலகிலும் கூடக் கதையும், திரைக்கதை அமைப்பும், கூர்மையான உரையாடல்களும் வலுவாக இருந்தால் ஒரு படத்தால் மொழி கடந்தும் ஒரு பார்வையாளனைக் கட்டிப்போட முடியும் என்பதை மெய்ப்பித்திருக்கும் ஒழிமுறி, ஒரு கதையின் படம்; ஒரு கதாசிரியனின் படம்; உரையாடல்களாலும் அவை முன் வைக்கும் எளிய தருக்கங்களாலும்,வாழ்வியல் உண்மைகளாலும் தொடுக்கப்பட்டிருக்கும் படம். ‘ஒழிமுறி’, நானெழுதிய நான்கு அனுபவக்கட்டுரைகளின் திரைவடிவம் எனலாம்’என்கிறார் ஜெயமோகன். [பாஷாபோஷிணி வார இதழில் வந்த ஜெயமோகனின் நினைவுக்குறிப்புகளின் தொகுப்பான உறவிடங்கள் என்ற நூலில் உள்ள எந்நிரிக்கிலும் என்ற கட்டுரையே இந்தத் திரைப்படத்துக்கு அடிப்படையாகியிருக்கிறது]. மூலக் கதை சொல்லியே அதன் திரை வடிவத்தையும்,திரைக்கதை அமைப்பையும் தீர்மானிக்க முடியும்போது அதன் தாக்கம் எத்தனை வலுவானதாக முடியும் என்பதை மெய்ப்பித்திருக்கும் படம் ஒழிமுறி.

ஐம்பத்தைந்து வயது நிறைந்த மீனாட்சியம்மா, எழுபத்தோரு வயதான தன் கணவர் தாணுப்பிள்ளையிடமிருந்து மணவிலக்கு கேட்பதில் தொடங்கும் படம், இறுதியில் அந்த பந்தத்திலிருந்து மனக்கசப்பு இல்லாமல் அவள் கழன்று கொள்வதாக இயல்பாக முடிகிறது. திரைப்படத்தின் அடித்தளமான இந்த இரு கட்டங்களுக்கும் இடையே சுழலும் கதையையும், அதற்கான பின்புலங்களையும் மீனாட்சியம்மாவின் மகனும், எதிர்த்தரப்பில் வாதாடும் பெண் வழக்குரைஞர் பாலாவும் கிரேக்க நாடகங்களின் கோரஸ் போல நகர்த்திச் செல்கிறார்கள் .

மொழிவாரிமாநிலங்கள் பிளவுபடாமலிருந்த காலகட்டத்தைச் சேர்ந்த திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் தாய்வழிச்சமூக அமைப்பே மேலோங்கியிருந்த ஒரு சூழலில் பிறந்தவர் தாணுப்பிள்ளை; ஒரு மகாராணி போன்ற பீடு கொண்டவளும், அரசி போன்ற கம்பீரம் மிக்கவளுமான தனது தாயின் ஆளுமை அவரை அச்சுறுத்த,தந்தை வழிக்குடும்ப அமைப்புக் கொண்ட குடும்பத்தை வலியத் தேடிப்போய்ப் பெண்ணெடுத்து மீனாட்சியை மணக்கிறார். அவளும் அவர் கைக்கு அடங்கியவளாக – அவர் விரும்பும் குடும்ப அடிமையாக மட்டுமே இருந்தபடி முன்கோபமென்ற பெயரில் அவர் இழைக்கும் அத்தனை வன்முறைகளையும் பொறுமையோடு சகித்துக் கொள்கிறாள். தந்தையின் சாவுக்குக் கூடப் பிறந்தகம் செல்லாமல் கணவனின் காலடி நிழலில் மட்டுமே வாழ்ந்து பழகி விடும் அவள் 60 வயதை எட்டும் நிலையில் மணமுறிவு கேட்பதற்கான காரணம் ஒரு வரியிலோ, ஒற்றைச் சொல்லிலோ சொல்லி விடும் அளவுக்கு அத்தனை எளிதானதல்ல. அதற்கான தேடலே துண்டு துண்டான முன்னிகழ்வுகளாக மீனாட்சியம்மாளின் மகன் சரத்தின் தேடல்களாகத் திரையில் வளர்ந்து விரிகின்றன.

ozhimuri

எதிர்த் தரப்பு வழக்குரைஞராக இருந்தாலும் முதலில் தோழியாக வந்து பிறகு காதலியாக மாறிப்போகும் பாலாவே சரத்துக்குள் அந்தத் தேடலை விதைக்கிறாள். அதுவரை அம்மாவுக்கும்,அவள் தொடுத்த வழக்குக்கும் உறுதுணையாக சரத் இருந்தாலும் பாலா எழுப்பும் கேள்விகளும்,அவளோடு நிகழ்த்தும் உரையாடல்களும், அவை தரும் தூண்டுதல்களுமே அம்மாவின் ‘ஒழிமுறி’மனுவுக்கான அடிப்படைக் காரணத்தை நோக்கி சரத்தை செலுத்துகின்றன. அதுவரையிலும் வழக்கு பற்றி அவன் கொண்டிருந்த புரிதல் இளமையிலிருந்து அவன் கண்டு பழகிய தந்தையின் மூர்க்காவேசக் கோபத்தையும், அடிதடி ஆரவாரக்கூச்சல்களையும் மட்டுமே அடிப்படையாகக் கொண்டதாக, மேலோட்டமானதாக மட்டுமே இருக்கிறது. தன் தாயின் வாழ்க்கையை தந்தையின் ஆளுமையை பாலாவிடம் விவரித்துக் கொண்டு போகிறபோதுதான் அவனுக்குள் தன் பெற்றோரின் வாழ்க்கை பற்றிய மறுவாசிப்பு ஒன்றே நிகழ ஆரம்பிக்கிறது. அவனுள்ளும் கூட அவ்வப்போது தலை காட்டுவது அவனது தந்தையின் ஆளுமையே என்பதைக் கோயில் தேங்காய்க்கு அவன் கோபப்படும் சந்தர்ப்பத்தில் பாலா அவனுக்கு உணர்த்த, அதே காட்சியின் தொடர்ச்சியாக அவன் தாயும்”அப்படியே அப்பா மாதிரி.”என்று சொல்ல அந்த நேரத்தில் ஆவேசம் கொண்டாலும் ஒரு தலைமுறையின் நீட்சியே அடுத்ததடுத்ததாக வருவதை அவன் படிப்படியாகப் புரிந்து கொள்கிறான்.

ஒரு பக்கம் ஒழிமுறிக்கான வழக்கைத் தொடுத்து விட்டு, மற்றொரு பக்கம் எதிர்த்தரப்பு வக்கீலின் ஒரு கேள்விக்கு விடை தரும்போது தன் கணவர் அன்பானவர், அவர் மீது தனக்கு அன்பு இருக்கிறது, அவரைப்போன்ற அன்பான தந்தை இல்லை என்றெல்லாம் அம்மா சொல்லுவது அவனை ஆச்சரியப்படுத்துகிறது.”வாக்தேவியின் உறைவிடமான – உண்மையின் தலமான நீதிமன்றத்தில் பொய் சொல்லலாகாது’ ’என்கிறாள் அம்மா. பின் ஏன் இந்த ஒழிமுறி….? சரத் குழம்ப புதிர் தொடர்கிறது.

முதல்முறை கணவரைப் பிரிந்து பிறந்தகத்தில் இருந்தபோது சரத்துக்குக் கடுமையான வயிற்று நோய் கண்டுவிட, தன் சகோதரனுடன் பல மருத்துவமனைப்படிகளிலும் ஏறி இறங்குகிறாள் மீனாட்சி; எல்லோரும் கை விரித்து விட, இந்த அலைச்சலிலேயே தன் தொழில் முடங்கிப்போய் விட்டதாக அலுத்துக் கொள்ளும் சகோதரன், எத்தனையோ குழந்தைகள் சர்வசாதாரணமாக இறந்து கொண்டுதானே இருக்கின்றன என்கிறான்; அப்போது தற்செயலாக அவர்களைப்பேருந்தில் சந்திக்க நேரும் தாணுப்பிள்ளை தன் குழந்தையின் நிலை கண்டு பதறித் துடிக்கிறார். மகனை அள்ளிச் சுமந்தபடி மருத்துவரின் காலைப் பிடித்துக் கொண்டு அவனுக்கு உயிர்ப்பிச்சை தர மன்றாடுகிறார்.ஒரு தந்தையாக அவர் காட்டும் அந்தக்கரிசனமே மீனாட்சியை மீண்டும் அவரிடம் கொண்டு வந்து சேர்க்கிறது.

அந்தக்கட்டத்தில்,”பத்து மாதம் குழந்தையை வயத்திலே சுமந்தா போதும்; எந்தப்பெண்ணும் தாயாகிடலாம். ஆனா ஒரு தகப்பனாகணும்னா உள்ளே கனியணும்..” என்கிறது ஜெயமோகனின் வசனம். அப்படி உள்கனிந்த தகப்பனாகத் தன் கணவன் இருப்பதாலேயே மகனுக்காக சமரசம் செய்து கொள்கிறாள் மீனாட்சி இன்னொரு முறை. சிறுவன் சரத்துக்குக் கையில் வாதநோய் தாக்கியபோதும் பொறுப்புள்ள ஒரு தந்தையாகத் தாணுப்பிள்ளை எடுத்த முயற்சிகள், பட்ட அலைக்கழிவுகள், அவனைப்போலவே தானும் பத்திய உணவைச் சாப்பிட்டபடி காலம் கழித்த அவரது தியாகம் ஆகியவற்றை மீனாட்சி சரத்திடம் விவரிக்கும்போது படிப்படியாக அவரை ஒரு நல்ல தந்தையாக உணர ஆரம்பிக்கிறான் அவன்.

அன்னைக்குத் தந்தை மீது வெறுப்பில்லை, கோபமுமில்லை… அவரது சினத்துக்கு வடிகாலாய் அடங்கிப்போவதிலும் அவளுக்குப் பெரிய மன வருத்தங்கள் ஏதுமில்லை! ஆனாலும் ஏன் இந்த ஒழிமுறி? புதிரை நீட்டிக்கும் அந்தக் கேள்விக்கான பதில், தாணுப்பிள்ளைக்கும் அவரது தாய்-தந்தைக்கும் இடையேயான உறவிலும், மீனாட்சிக்கும் அவளது மாமியாருக்கும் இடையிலான உறவிலும் அடங்கியிருக்கிறது. அது ஒரு புதிர் போல அருமையான திரைக்கதை மூலம் காட்டப்படுகிறது.

தாய்வழிச்சமூக அமைப்பில் வந்த மீனாட்சியின் மாமியார் காளிப்பிள்ளை, பெண்ணை முதன்மைப்படுத்தும் சுதந்திரமான வாழ்வமைப்பின் வழி வந்தவள். அதிலேயே ஊறித் தோய்ந்த அவள் , சொத்துரிமையும்,அதிகார பலமும் படைத்தவள்; தனக்கு விருப்பமில்லாத கணவனை நிராகரிக்க அவள் வழக்கு மன்றப்படிகளில் ஏறி ஒழிமுறி தர வேண்டியதில்லை; ஒரு வெற்றிலைப்பெட்டியை எடுத்து வீட்டு வாயிலில் வைத்தாலே போதும்,அவனோடான உறவுமுறிவுக்கான அந்த சமிக்ஞையை ஏற்று அவளது பாதையை விட்டு அவன் விலகியாக வேண்டும்; தன் கணவனான மல்லனை அவள் விலக்குவதும் அவ்வாறே.

தன் அனுமதியோ,ஒப்புதலோ இன்றி மகன் திருமணம் செய்து கொண்டாலும் மகனை விட, அவனால் ஒரு அடிமையை விடவும் இழிவாக நடத்தப்படும் தன் மருமகள் மீதே வாஞ்சையைப்பொழியும் அவள், தன் வீட்டையும்,சொத்துக்களையும் உடமைகளையும் அவளுக்கே அளிக்கிறாள். தன்னைப்போன்ற தனித்தன்மை பெற்றவளாக அவளும் இருக்க வேண்டுமென்றும், தன் மகனாகவே இருந்தாலும் அவன் இழைக்கும் வன்முறைகளுக்கும், கடுஞ்சொற்களுக்கும் அவள் பதிலடி தர வேண்டும் என்றும் மருமகளைத் தூண்டுகிறாள் அவள்.தன் தாயைப்போல மனைவியும் ஆகி விடக்கூடாது என்ற அச்ச உணர்வினால் தாயை வீட்டை விட்டே துரத்தி விடுகிறார் தாணுப்பிள்ளை. ஆனாலும் ஒரு பெண்ணுக்கு இருந்தாக வேண்டிய தன்மானம், சுயமதிப்பு ஆகியற்றைக் குறித்த சிந்தனை விதைகளை மீனாட்சியின் உள்ளத்தில் தெளிக்கும் முதல் நபராக அவளது மாமியாரே இருக்கிறாள்.

வாழ்வின் இறுதிக்கட்டத்தில் நோய்வாய்ப்பட்டு மகனை நாடி வரும் நிலையிலும் அவன் தன்னை ‘உள்ளே வா’என அழைத்தால் மட்டுமே வீட்டுக்குள் நுழைவேன் என சுயகௌரவம் காட்டுகிறாள் காளிப்பிள்ளை; அந்தத் தாயின் தவிப்பைப்புரிந்து கொண்டு அவளை உள்ளே அழைக்குமாறு கணவரைத் தூண்டுவதோடு மரணப்படுக்கையிலிருக்கும் தன் மாமியாரை ஒரு குழந்தையைப்போலப்பேணுகிறாள் மீனாட்சி. காளிப்பிள்ளையின் இறுதிக்கட்டம் நெருங்குகிறது; மகனிடம் ஏதோ ஒரு வார்த்தை சொல்ல வேண்டுமென்ற ஆதங்கத்தோடு தாணுவைக்கூட்டிவரச்சொல்கிறாள் அவள்; மீனாட்சி பதட்டத்தோடு அவரை அழைக்க, வழக்கமான அலட்சியத்தோடு அவர் அதை நிராகரித்து விடுகிறார். அந்தக்கட்டத்தில் மகன் மீதான் கோபம் மருமகள் மீதானதாக மாறிப்போகிறது காளிப்பிள்ளைக்கு. தன் மகனை அழைத்து வராததற்கு அவள் மீது பழியைச்சுமத்துவதோடு அவளது நன்றிகெட்டதனம்தான் தன்னை மகனிடமிருந்து பிரித்து விட்டது என்ற பழியையும் அவள் மீதே சுமத்தி விட்டுக் கோயில் வளாகத்திற்கருகே விழுந்து இறந்து போகிறாள்.

2012-09-07_ozhimuri

வழக்கு நடந்து கொண்டிருக்கும் கட்டத்திலேயே தாணுப்பிள்ளைக்கு இரண்டாவது முறையாக மாரடைப்பு நோய் தாக்குகிறது. அந்தக்கட்டத்தில் மருத்துவமனையில் உடனிருந்து எல்லாப் பணிவிடைகளையும் செய்யும் பொறுப்பை எந்தக் கசப்புணர்வும் இன்றி வலிய ஏற்றுக்கொள்கிறாள் மீனாட்சி. அவருள்ளும் நெகிழ்ச்சி பரவுகிறது…இனி அந்த வழக்குக்குத் தேவை எதுவும் இருக்காது என அனைவரும் நினைக்கும் அந்தக்கட்டத்திலும் கூட- ஒழிமுறி வேண்டும் என்ற தன் கோரிக்கையில் மீனாட்சி திடமாகவே நிற்கிறாள். மகன் திகைத்துப்போய் நிற்கும் அந்தக் கட்டத்திலேதான் கணவன் – மனைவிக்கிடையிலான உறவுப்புதிரின் அந்த இறுதி முடிச்சு அவிழ்க்கப்படுகிறது.

’கணவர் மீது வெறுப்பும் இல்லை, பகைமையும் இல்லை, இத்தனை ஆண்டு பழகிய தோஷத்துக்காக எப்போது உதவி தேவையென்றாலும் வரவும் தயார். ஆனாலும் நான் இனி எவருக்கும் மனைவியில்லை’ என்ற பிரகடனத்தோடு குடும்ப அமைப்பிலிருந்து தன்னை விலக்கிக் கொள்கிறாள் மீனாட்சி.

பெரிதும் வசனங்களின் வலுவிலேயே ஆன இந்தத் திரைப்படம் அவரவர் வாழ்வின் சில தருணங்களையாவது நினைவுகூர வைத்து விடுவதால் மொழியையும், உரையாடல்களையும் வார்த்தைக்கு வார்த்தை புரிந்து கொள்ள முடியாதவர்களுக்கும் கூட அந்த உணர்வுகளைக் கொண்டுபோய்ச் சேர்த்து விடுகிறது.

நடுநிலையான பெண்ணிய நோக்கை மிக இயல்பாக முன் வைத்திருக்கும் நோக்கிலும் கவனம் பெறும் படமாகிறது ஒழிமுறி.

திரைப்படம் தொடங்கும்போது, அந்தண இனத்தைச் சேர்ந்த பாலா வீட்டிலிருக்கும் ஆண் முதன்மை தெய்வங்களின் பழங்கால ஓவியங்களும், ஆண் நின்று கொண்டிருக்க அவன் காலடியில் மனைவி ஒடுங்கி அமர்ந்திருப்பது போலவும், கணவன் இரு மனைவியரோடு காட்சி தருவது போலவுமான பழுப்பேறிய பழைய குடும்பப்படங்கள் திரையில் விரிகின்றன; ஆண் முதன்மை பெற்றிருந்த அந்தக் குடும்ப அமைப்பைக் குறியீட்டால் அவை சுட்டுகின்றன.

அடுத்த காட்சி, பாலா எடுத்திருக்கும் வழக்கின் வழியாக அவள் அறியாத பிறிதொரு உலகமான ‘பெண்மலையாள’த்திற்குள் நுழைகிறபோது அதற்கேற்றபடி சிம்மவாகினியாக, காளி அசுரனை வதம் செய்வதாக விரிந்து கொண்டு போகும் காளிப்பிள்ளை வீட்டின் ஓவியங்கள் பெண் முதன்மை பெற்றிருந்த காலகட்டத்தின் குறியீடுகளை மனதிற்குள் பதிக்கின்றன.

தொடக்கக் காட்சியில் குடும்பம் என்ற அமைப்பின் கதவை என்றென்றக்குமாய் அடைத்து விடுவதன் குறியீடாகத் தன் வீட்டின் கதவை மூடுகிறாள் மீனாட்சி. இறுதிக் காட்சியில் தனது ’தன்மதிப்பு’க்கான பாதை திறந்து விட்டதை உணர்த்தும் குறியீடாகக் கதவை விரியத் திறக்கிறாள்.

படம் தொடங்கும்போது குழந்தைகள் பெறுவதும்,வீட்டைப்பேணுவதும்,சுமங்கலி அந்தஸ்தை நிலை நாட்டிக் கொள்வதுமே பெண்ணின் வாழ்வாக இருக்கிறது என்ற யதார்த்தத்தை முன்வைக்கிறாள் பாலா.”நான் இனி எவருக்கும் மனைவியில்லை” என்ற பிரகடனத்தோடு படத்தை முடித்து வைக்கிறாள் மீனாட்சி.

மீனாட்சியின் எதிர்த்தரப்பு வழக்கறிஞராக பாலா இருந்தபோதும் வழக்கை நீதிமன்றத்துக்கு வெளியிலேயே சமரசமாகத் தீர்த்துக்கொண்டு விடுமாறு சரத்திடம் சொல்வதற்கு அவள் ஒரு பெண்ணாக இருப்பதே காரணமாக இருக்கிறது. நீதிமன்றப்படியை மிதித்து விட்டாலே பெண்ணின் நடத்தை குறித்த சேற்றை வாரி இறைக்க அங்கிருக்கும் எல்லோரும் எப்போதும் ஆயத்தமாக இருப்பார்கள் என்னும் யதார்த்தத்தை அவள் வாயிலாகவே அறிந்து திடுக்கிடுகிறான் சரத். அப்பாவியான தன் தாய்க்கு அவ்வாறான இழிசொற்களும் அபவாதங்களும் தேவையா என்ற எண்ணமே அவளது பின்புலத்தைத் தேடிச் செல்ல அவனுக்கு உந்து சக்தியாகின்றன.

யானைக்குத் தன் பலம் தெரியாததாலேயே மனிதன் அதை அடக்கி ஆள்கிறான், பெண்ணும் கூட அப்படித்தான் என்று சொல்லப்படும் உலகியல் வாக்கு தாணுப்பிள்ளையின் யானைப்பாசம் வழி படத்தில் காட்டப்படுகிறது.யானை தன் கட்டுக்குள் இருப்பதில் அவர் குதூகலித்துப் பாட்டுப்பாடிக் கொண்டாடிக் களிக்கிறார். தன் தாயின் காலத்தில் ஆணின் வசத்துக்குள் அகப்படாமல் இருந்த பெண்ணைத் தன் கட்டுக்குள் கொணர்ந்து விட்ட ஆனந்தமும் கூட அதனுடன் சேர்ந்தே வெளிப்பாடு கொள்கிறது.

திரைப்படம் காட்டும் முதன்மையான மூன்று பெண்களும் வேறான மூன்று தலைமுறைகளைச் சேர்ந்தவர்கள் மட்டுமல்ல; வெவ்வேறு காலகட்டங்களின் வேறுபட்ட வாழ்க்கை முறைகளுக்குப் பழகிப்போன பெண்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் மாதிரிகள் அவர்கள்.

ஆணையிடும் இடத்தில், அதிகாரம் செலுத்தும் இடத்தில் பெண் இருக்க வேண்டும், அதை ஆண் கேட்க வேண்டும் என்ற வாழ்முறைக்குப் பழகிப்போயிருப்பவள் காளிப்பிள்ளை. கதகளிக்காரர்களும்,மல்யுத்தக்காரர்களும் அவள் வீட்டு முற்றத்துக்கு வந்து ஆட்டம் நிகழ்த்தி விட்டு அவள் தரும் சன்மானத்தைப் பெற்றுக்கொண்டு போகிறவர்கள். காலி செய்யாமல் காலம் நீட்டித்துக் கொண்டு போகும் தன் நிலத்துக் குத்தகைக்காரனைத் தாக்கி விட்டுக் காவல்நிலையத்தில் இன்ஸ்பெக்டரிடம் அவள் பேசும் தோரணை…,அங்கே அவள் அமர்ந்திருக்கும் அந்த கம்பீரம்..’இங்கே இருந்த இந்திரா காந்தி படம் எங்கேடா….அவ இந்த நாட்டுக்கே ராணிடா..’என்று சொல்லும் வார்த்தை – நிமிர்ந்த நன்னடை, நேர்கொண்ட பார்வையுடனேயே பெண் நடக்கவேண்டும் என்று சாகும்கணம் வரை நம்பும் உள்ளம் இவை காளிப்பிள்ளையின் தனித்துவங்கள்.

மீனாட்சியம்மாவின் பாத்திரப்படைப்பு காளிப்பிள்ளையிடமிருந்து முற்றிலும் வேறானது. தாய்வழிச் சமூக அமைப்பின் சரிவில், ஆண் மேலாண்மை பெற்று விட்ட சூழலில் தன் இருப்பையும் குரலையும் தொலைத்து விட்டு வீட்டு அடிமையாகி-எதற்கும் எதிர்வினையாற்றாமல் அடங்கியே பழகிப்போன பெண் குலத்தின் பிரதிநிதி அவள்.

பாலா, கல்வி வழியாகச் சுதந்திரம் பெற்ற இன்றைய புது யுகத்தின் பெண். ஆணின் ஆதிக்கத்துக்கு அவள் கட்டுப்படுவதுமில்லை; அவனைத் தன் ஆதிக்கத்துக்குள் கொண்டு வர எண்ணுவதுமில்லை. அவனைத் தன் சம தோழனாக-கூட்டாளியாகக் கருதியபடி தன் நினைப்புக்கள்,நிலைப்பாடுகள்,சமூகத்தின் மீதான விமரிசனங்கள் என சகலத்தையும் அவளால் எந்த மனத்தடையுமின்றிப் பகிர்ந்து கொள்ளமுடிகிறது. பாலா-சரத்தின் தோழமை வழியே ஆண் -பெண்ணுக்கு இடையேயான ஆரோக்கியமான இத்தகைய உறவு மேம்பட வேண்டுமென்பதையே படம் முன்வைக்கிறது.

ஜெயமோகனின் தெளிவான திரைக்கதையைப் பழுதில்லாமல் பார்வையாளர்களிடம் கொண்டு சேர்க்கும் செம்மையான பணியைத் தன் இயக்கத்தின் வழி செய்திருக்கிறார் மதுபால்.

பெரும்பாலும் கதையை நகர்த்திச் செல்லும் பார்வையாளர்களாகவே வருவதால் அதற்கேற்ற அளவான – மிகையற்ற நடிப்பை சரத்தாக வரும் ஆசிப் அலி, பாலாவாக வரும் பாவனா ஆகிய இருவருமே தந்திருக்கிறார்கள். ஏதோ ஒரு ஐயத்தையும் குழப்பத்தையுமே சுமந்து திரியும் தொடக்க கட்ட சரத், குதூகலமான,கலகலப்பான வாலிபனாவது இலகுவான மனநிலை கொண்ட பாலாவுடனான பழக்கம் நேர்ந்த பின்பே. இந்த மாற்றத்தை ஆசிப் நன்றாக உள்வாங்கிப் பதிவு செய்திருக்கிறார்.

காளிப்பிள்ளையாக வரும் ஸ்வேதாமேனன், பெண் ஆதிக்கத்தின் அட்டகாசமானதொரு முகத்தைத் தன் நடிப்புப் பாணியின் மூலம் தொட்டுக் காட்ட முற்பட்டிருந்தபோதும் ஒரு சில இடங்களில் மிகை என்ற கோட்டை அந்த நடிப்பு தொட்டு விடுகிறது. மாறாக மிகச்சிறந்த எதிர்வினையாற்ற வேண்டிய சில கட்டங்களிலும் கூட மல்லிகா மிகக்குறைவான நடிப்பையே தந்திருப்பது ஏமாற்றமளித்தாலும் மகனோடு உரையாடும் பல காட்சிகளில் தன் உச்சபட்சப் பங்களிப்பைத் தர அவர் முயன்றிருக்கிறார்.

இந்தத் திரைப்படத்தைப் பொருத்தவரை, தாணுப்பிள்ளை என்னும் மனிதனின் ஆளுமையை, மன அவசத்தை, அவன் படும் அக, புற உளைச்சல்களைத் தன் தன் நடிப்பால் வாழ்ந்தே காட்டியிருக்கும் லால்தான் நடிப்பில் முதலிடம் பெறுகிறார்; அதிகம் பழகியிராத தந்தை மீது கொண்ட அபரிமிதமான ஸ்நேகம், பெற்ற பிள்ளை மீது ஒரு தகப்பனுக்கே உரிய பாசத்தோடு கூடிய தவிப்பு, ஆதிக்க மனம் கொண்ட தாய் மீதான பாசம் கலந்த வெறுப்பு, மனைவி மீது செலுத்தும் அன்புடன் கூடிய ஆதிக்கம் என்ற பலவகைப் பரிமாணங்களுக்கும் இடமளிக்கும் அந்தப்பாத்திரத்தோடு ஒன்றி உட்கலந்து தாணுப்பிள்ளை என்னும் எதிர்நிலைப் பாத்திரத்தையும் கூட நேசிக்க வைத்து விடும் மாயத்தை நிகழ்த்தி விடுகிறது லாலின் நடிப்பு.

வசனங்களின் அடித்தளத்திலேயே கட்டமைக்கப்பட்டிருக்கும் இந்தப்படத்தில் குறிப்பிட்ட வசனம் என்று பிரித்துப்பார்க்க முடியாதபடி எல்லா உரையாடல்களுமே பாத்திரப்பண்புகளைப் படம் பிடித்துக்காட்டி மனித மனச் சிடுக்குகளை அவிழ்த்துக்காட்டுகின்றன என்றபோதும் ஒரு சிலவற்றையாவது குறிப்பிடாமல் கட்டுரையை நிறைவு செய்வது கடினம்.

தன் பெற்றோரின் முன்கதையை பாலாவிடம் சரத் சொல்லிச் செல்லும் ஒரு கட்டத்தில்,”இந்த மனிதர்களால் ஏன் சந்தோஷமாகவே வாழ முடிவதில்லை?”என்று கேட்கிறாள் பாலா. “சந்தோஷமா? அது யாருக்கு வேண்டும்? ஒருவரை ஒருவர் ஜெயிப்பது எப்படி, முந்துவது எப்படி என்பதல்லவா மனித வாழ்க்கையின் குறிக்கோள்”என்கிறான் சரத். கன்னியாகுமரி விவேகானந்தர் பாறையின் அருகே இருந்தபடி அவர்கள் பேசும் அந்தக்கட்டத்தில்”மனிதனின் மிக முதன்மையான பிரச்சினை பயம் ஒன்றுதான். அடுத்தவரை வெல்ல அவன் துடிப்பதும் அந்த பயத்தினாலேதான்”என்ற விவேகானந்தரின் வாக்கும் கூடவே வருகிறது. படத்தின் இறுதிக்கட்டத்தில் தாணுப்பிள்ளை அளிக்கும் ஒப்புதல் வாக்குமூலமும் இந்தக்கருத்தையே உறுதிப்படுத்துகிறது.

“நம் பார்வைகளும்,கோணங்களும் எல்லை கட்டியவைகளாக மட்டுமே இருப்பதால்…பல நேரங்களில் நம் அருகிலேயே இருப்பவர்களையே கூடச் சரியாகப் புரிந்து கொள்ள நாம் தவறி விடுகிறோம்” என்று தன் தந்தை பற்றிய சரத்தின் புரிதல் குறித்துப் பாலா சொல்லும் கட்டம், “வெறுப்பினால் அல்ல மகனே…சிநேகத்தினாலேயே மனிதர்கள் கொடூரமானவர்களாக, குரூரமானவர்களாக ஆகிறார்கள். வெறுப்பு வேண்டாம் என்று புறக்கணிக்க முற்பட்டால் சிநேகமும் வேண்டாம் என்று துறந்தாக வேண்டும் – அது அத்தனை சுலபமானதல்ல” என்று மீனாட்சி சரத்திடம் பேசும் இடம், என்று பல இடங்களில் வசனகர்த்தாவாக மட்டுமன்றித் தேர்ந்த அகமொழி வல்லுநராகவும் வெளிப்படுகிறார் ஜெயமோகன்.

குடும்ப உறவுகளுக்கு இன்னும் கூட மேலதிக முக்கியத்துவத்தை அளித்து வரும் இந்தியப் பண்பாட்டுத் தளத்தில் உறவுகளின் அடியாழத்தில் மண்டிக்கிடக்கும் கலவையான உணர்வுகளை வெளிச்சமிட்டுக் காட்டியிருக்கும் ’ஒழிமுறி’ தவிர்க்க முடியாத ஒரு வரலாற்று ஆவணமாகிறது.