உழைப்பாளி எறும்பு : செதேஷ்வர் பூஜாரா
இந்த கட்டுரையின் நாயகர் புஜாரா – உழைப்பாளி எறும்பு அல்லது வேலைக்காரத் தேனி என்பது நல்ல உதாரணம்தான்.
இவர் டிராவிட் மற்றும் லஷ்மண் கலவை மாதிரி இருக்கிறார். ஆனால் நமது நாட்டில் இவர் போல அருமையாக ஆரம்பித்தவர் பலர் அடுத்த நிலைக்கு போகாமலேயே மறைந்துவிட்டார்கள். காரணம் பல இருக்கலாம் – ஆசியாவிற்கு வெளியே பிரகாசிப்பின்மை, தனிப்பட்ட காரணங்கள், “அரசியல்” போன்ற பல்வேறு. அப்படி இல்லாமல் இவர் நின்று பிரகாசிக்க மனமார எதிர்பார்க்கிறேன்.இந்த கடிதம் இவரைப் பற்றி அல்ல.
பல வருடங்களுக்கு முன் இந்திய நாளிதழ்களில் ஒரு இன்ஷூரன்ஸ் விளம்பரம் (அல்லது பைனான்ஸ்) நினைவிற்கு வருகிறது. ஒரு வளர்ந்தவரும் ஒரு சிறுவனும் கிரிக்கெட் மைதானத்தில் சாய்ந்து கொண்டு அல்லது கிட்டதட்ட படுத்துக்கொண்டு கிரிக்கெட் ஆட்டத்தைப் பார்த்துக்கொண்டிருப்பார்கள். பள்ளி/அலுவலக பரபரப்பில்லாமல் – ஞாயிறு மதிய வேளையாக இருக்கலாம்!
கிரிக்கெட்டை இந்தமாதிரி மந்தஹாசமாக பார்த்துக்கொண்டிருப்பதே ஒரு அனுபவம்! கிரிக்கெட் புரியாதவர்கள்/பிடிக்காதவர்களுக்கு முழு சோம்பேறித்தனமாகவே படும்! இந்த மாதிரிதான் இருந்தது சித்தார்த் வைத்தியநாதன் அவர்களின் வாங்கடே மைதான கிரிக்கெட் மாட்ச் அனுபவம்.
நான் இங்கிலாந்தில் பார்த்த கிளப் மாட்சுகளிலும் செம்ஸ்போர்ட் மைதானங்களிலும் இந்த மாதிரி காட்சிகள் ஏராளமாக காணக் கிடைக்கும். கையில் புத்தகங்கள், சூரிய ஒளி க்ரீம்கள் பூசிக்கொண்டு, வழிய வழிய பீர் கோப்பைகள், குடும்பத்துடன் மாட்ச் பார்க்க வருவார்கள். தாத்தாக்களும் பாட்டிகளும் மதிய உணவு இடைவேளை பின் ஆட்டத்தில் அரைக்கண் மூடி… கிரிக்கெட் பார்ப்பது என்பது ஒரு நாள் அனுபவம். இந்த கட்டுரையின் மூலம் சித்தார்த் வைத்தியநாதன் மிகவும் நெருக்கமாகிவிட்டார், அவருக்கு எனது அன்பைத் தெரிவியுங்கள்!
அசோகமித்திரனின் `ஒரு நாள் நூலகத்திற்கு போகும் வழியில்” என்ற சிறுகதை நினைவிற்கு வருகிறது. அவர் நூலகத்திற்கு போகும் வழியில் வழியில் கிரிக்கெட் மாட்சை நின்று பார்ப்பார். ஏனே அந்த சிறுகதை நினைவிற்கு வந்தது…
சச்சின் ஒரு நாள் போட்டிகளிலிருந்து ரிடையர் ஆகியிருக்கிறார். சித்தார்த் அடுத்த கட்டுரையை படிக்க ஆவலாக இருக்கிறேன்!
சிவா கிருஷ்ணமூர்த்தி
அன்புடையீர், வணக்கம். திரு பாரதி மணி அவர்களின் பல நேரங்களில் பல மனிதர்கள் புத்தகம் பற்றிய ஒரு கட்டுரையை சொல்வனத்தில் படித்தேன். அப்புத்தகம் பற்றி பலரும் எழுதியுள்ளார்கள். நானும் எழுதியுள்ளேன். அது உயிர்மையின் உயிரோசை இணைய இதழில் வந்தது. திரு பாரதி மணி அவர்களும் தொலைபேசியில் கூப்பிட்டுப் பாராட்டினார். நேரில் ஒரு முறை மதுரையில் ஒரு திருமண நிகழ்வில் சந்தித்தபோதும் தன் அன்பை நெருக்கமாக வெளிப்படுத்தினார். எல்லாவற்றிற்கும் மேலாக அவரது ப்ளாக்கில் வெளியிட்டுள்ளார் கட்டுரையை.
நன்றி.
அன்பன்,
உஷாதீபன்
ஆசிரியருக்கு,
சொல்வனம் இணைய இதழானது ஒவ்வொரு பதிப்பிலும் பயனுள்ள, தரமான பல கட்டுரைகளை ஒவ்வொரு பதிப்பிலும் வெளியிடுகின்றது. இவ்விதழின் தகவல் செறிந்த கட்டுரைகள் அனைத்தையும் கணினியில் வைத்து படிப்பதை விட சில portable கருவிகளில் வைத்து படிப்பதை சில வாசகர்கள் விரும்பக்கூடும்.
தற்போது வெளியிடப்படும் HTML வடிவம் கணினியில், browserஇல் வைத்து இதழைப் படிப்பதற்கு உகந்ததாக இருந்தாலும், ebook reader போன்ற இணைய இணைப்பு அற்ற portable கருவிகளில் வைத்து படிப்பதற்கு மிகவும் அசௌகரியமாக உள்ளது.
எனவே, இனிவரும் இதழ்களை (முடிந்தால், இதுவரை வெளிவந்த இதழ்களையும்) HTML ஆக வெளியிடும் அதேவேளை, PDF வடிவத்தில் ebook standard இலும் வெளியிட்டால், வாசகர்கள் படிப்பதற்கு இன்னும் வசதியாக இருக்கும் என்பது எனது அபிப்பிராயமாகும்.
நன்றி,
அபராஜிதன்அன்புள்ள அபராஜிதன்,
தங்கள் அன்புக்கு நன்றி. இந்த யோசனை பரிசீலனையில் இருக்கிறது. விரைவில் இது குறித்து முடிவெடுக்கிறோம்.
அன்புடன்,
ஆசிரியர் குழு