மகரந்தம்

தேன் கடத்தல்

என்னென்னவோ விசித்திரங்கள் நடக்கின்றன. தங்கத்தைக் கடத்தினார்கள், கடத்துகிறார்கள் உலகெங்கும். சாராயத்தை உள்நாடெங்கும் கடத்திக் கொண்டிருந்தார்கள். தடை செய்யப்பட்ட பொருட்களை நுகரவும் ஆட்கள் உண்டு, விற்கவும் ஆட்கள் உண்டு. இடைத்தரகர்களும், சட்டத்தை அமுல்படுத்தாமல் கண் மூடி அந்தப் பக்கம் பார்க்கவும் (கையூட்டுக்காகத்தான், வேறென்ன?) ஆட்கள் உண்டு. சில நேரம் சட்டத்தைப் பாய்ச்சாமல் இருப்பது கருத்தியல் சார்புக்காகவும், தர்ம நோக்கோடும், அறவுணர்வோடும் கூட இருக்கலாம். இவை மிகச்சில நேரங்களிலேயே காரணமாக இருப்பதுதான் மனிதத்தின் பொதுவான இழிவு. அதே நேரம் மனிதத்தின் விலங்கு இயல்பு தொடர்ந்து வெல்வதற்கு ஒரு சான்று இத்தனை பொருட்கள் ஏதேதோ காரணங்களுக்காகக் கடத்தப்படுவதுதான். மனிதரே கடத்தப்படுகிறார்- பொருளாக. ஆஃப்ரிக்கர்கள் யூரோப்புக்கும், சீனர்களும், இந்தியர்களும், இலங்கைத் தமிழர்களும், இரானியரும், சமீபத்தில் சிரியர்/லிபியர்/ பல அரபியர்கள் பல நாடுகளுக்கும் கடத்தப்படுவதும் நடக்கிறது. இவை பொருளாதார நலம், மேம்படுதல் தேடி என்பது ஒரு பக்கம் இருந்தாலும், இன்னொரு பக்கம் ஏமாற்றப்பட்டுக் கடத்தப்படுபவர்கள்தான் அதிகம். அடிமைகளாக வாழ்வதற்குத் தாமே கட்டணம் கட்டி மக்கள் பல நாடுகளுக்கும் போகிறார்கள் என்பதுதான் என்னவொரு பயங்கரம். வேறென்ன கடத்தப்படுகின்றன? உலகில் அதிகம் கடத்தப்படும் ஒரு பொருள்- ஆம், அது பொருளாகத்தான் பாவிக்கப்படுகிறது- பெண்கள். இவர்கள் முன்பெல்லாம் ஆசிய/ ஆஃப்ரிக்க நாடுகளில் இருந்து கடத்தப்பட்டுக் கொண்டிருந்தது போய், சமீபத்தில் முன்னாள் சோவியத் நாடுகளிலிருந்தும், சமீபத்தில் இரான்/இராக் போன்ற நாடுகளிலிருந்தும், என்றும் போல பல லத்தீன் அமெரிக்க நாடுகளிலிருந்தும் கடத்தப்படுவது நடக்கிறது.

10774honey-laund1

இந்தக் குறிப்பில் சொல்லப்படும் பொருளோ விசித்திரத்தின் எல்லை. சீனாவில் இருந்து தேன் அமெரிக்காவுக்குக் கடத்தப்படுகிறதாம். அதுவும் அதை இந்தியாவிலிருந்து கொணரப்படும் தேன் என்று பொருளின் மூலத்தை மாற்றி, மறு முத்திரையிட்டு, கடத்தப்படுகிறது. எதற்கு, தேனை திறந்த சந்தையில் விற்கத்தான் அனுமதி இருக்கிறதே, இதிலென்ன கடத்தல்? சீனாவிலிருந்து வரும் பொருட்களுக்கு அமெரிக்கா இப்போது வரி விதிக்கிறது. இறக்குமதி வரியைக் கொடுக்க அமெரிக்க வியாபாரிகளும் தயாரில்லை, ஏற்றுமதியின் விலையை இப்படி அதிகரிக்க சீனர்களும் தயாரில்லை. விளைவு இந்தியாதானே ஏமாளி, அதன் பெயரைப் பயன்படுத்தி இந்தியாவின் தேனாக அமெரிக்கச் சந்தையில் சீனத் தேனை விற்க ஏற்பாடு. இதில் பெரும் பங்கெடுத்தவர்கள் சீனர் மட்டுமல்ல, பன்னாட்டு உணவுப் பொருள் ஏற்றுமதி இறக்குமதி செய்வதில் சந்தையை ஆக்கிரமிக்கும் அமெரிக்க/ மேலை நாட்டு நிறுவனங்களும் உண்டு.

சமீபத்தில் இப்படி ஒரு பன்னாட்டு நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டபோது இந்த விவகாரம் வெளியில் தெரிய வந்திருக்கிறது. இதை நாம் இன்னமுமே பொதுச் செய்தித்தாள்களில், ஊடகங்களில் கண்டு விட முடியாது. அதென்ன ரகசியம் என்பதுதான் தெரியவில்லை.

http://www.openthemagazine.com/article/international/honey-laundering

0o0o0o0o0o0o0o0o

மரபணுத்தொகைத் தொகுப்பு சுட்டிக்காட்டும் நோய்களின் தோற்றுவாய்

அறிவியலின் சாதனைகள் விந்தையானவை. மரபணுத்தொகைத் தொகுப்பு (Genome sequencing) முன்னைக்காட்டிலும் தற்போது குறைந்த விலையில் மேற்கொள்ளப்படும் சாத்தியங்கள் உருவாகியுள்ளதால் உலகெங்கும் உள்ள அறிவியலாளர்கள் இத்துறையில் புதிய பாய்ச்சல்களை நிகழ்த்தியவண்ணம் உள்ளனர். இரண்டாயிரத்து ஒன்று மற்றும் அதைத் தொடர்ந்த ஆண்டுகளில் எதிர்உயிர்மிகளால் அழிக்கப்பட முடியாத நச்சுயிர்களாய் Clostridium difficile மருத்துவர்களிடையே அறிமுகம் பெற்றது. மனிதனின் வயிற்றில் வாழும் நுண்ணுயிரியான இதை, அங்கு வாழும் ஏனைய நுண்ணுயிரிகள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கின்றன. ஆனால் நோய்வாய்ப்பட்ட மனிதனின் நோய்க்கிருமிகளை மருத்துவர்கள் எதிர்உயிர்மிகளால் தாக்கும்போது, அந்த மருந்துகள் இவற்றின் சக நுண்ணுயிரிகளைத் துடைத்தெறிந்து இவை வளர இடம் ஏற்படுத்தித் தருகின்றன. எதிர்உயிர்மிகளால் அழிக்கப்பட முடியாதவை என்ற ஒரு ஆற்றலுடன் இவற்றுக்கு இன்னொன்னும் உண்டு – இவை உண்ண உணவு கிட்டாத நிலையில் வித்து வடிவில் மருத்துவமனைகளின் மேற்பரப்பில் காத்திருக்கின்றன.

stoke-mandeville-hospital-0101

அண்மைக்காலங்களில் பலபத்தாயிரம் பேர்களை ஒவ்வொரு ஆண்டும் இவை பலி கொள்வதைப் பழக்கப்படுத்திக் கொண்டிருக்கின்றன. நோய்வாய்ப்பட்டு மருத்துவமனைக்குச் செல்லும் துயரர்களை மருந்துகளால் அழிக்கமுடியாத இ’ந்த நுண்ணுயிரி பீடிப்பது மருத்துவத்துறைக்கு ஒரு சவாலாக இருந்து வருகிறது. இவை குறித்த ஆய்வின் ஒரு புதிய சாதனையாக, இந்த நுண்ணுயிரிகள் எங்கு உருவாகின, எப்படி பரவின என்பதை மரபணுத்தொகைத் தொகுப்பைக் கொண்டு கண்டறிந்துள்ளனர். ஆப்பிரிக்காவின் சூழலாலும் ஏழ்மையாலும் விலங்கண்ண மாக்களையும் மூன்றாம் உலகங்களின் மிதமிஞ்சிய மக்கட்தொகையின் ஆரோக்கியமற்ற வாழ்வுமுறையையும் புதுப்புது நோய்களுக்கான காரணிகளாகக் குற்றம் சாட்டி அவமானப்படுத்துவதை வழக்கமாகக் கொண்டுள்ளது மேற்குலகு. இதன் இறுமாப்பைக் குலைக்கும் வகையில் இந்த நுண்ணுயிரி மேற்குலகின் மையத்தில், பிட்ஸ்பர்க் மற்றும் மான்ட்ரியல், பிறந்து உலகெங்கும் பயணிக்கிறது என்பதைக் கண்டுபிடிக்க மரபணுத்தொகை ஆய்வுகள் உதவியுள்ளன. இது குறித்த ஒரு செய்தி இங்கிருக்கிறது.

0o0o0o0o0o0o

கழுவித் தீர்க்க முடியாத நோராவைரஸ்கள்

அமெரிக்க உணவு விடுதிகளுக்கு தட்டுகளை, பாத்திரங்களை எப்படிக் கழுவுவது என்பது குறித்து அதிகார பூர்வமாகக் கொடுக்கப்பட்டுள்ள முறைகளால் நோரோவைரஸ்களை அழிக்க முடியாது என்று தெரிகிறதாம். இது உண்மையானால் உணவு விடுதிகளில், உல்லாசப் பயணக் கப்பல்களில் என்று பல பொது இடங்களில் உண்பது ஆபத்தானதாக இருக்கும். வீட்டில் சமைக்காமல் வெளியில் உண்பது என்பது மேலை நாடுகளில் ஏகமாகப் பரவியுள்ள ஒரு வாழ்வு முறை என்கையில் இந்தப் பிரச்சினை மேலை மக்களின் வாழ்க்கை முறையை அதிகமாகப் பாதிக்கக் கூடிய ஒன்று. கட்டுரை இங்கே.