நிசப்தத்தில் பிறந்த இசை

sokout1

“நேற்று நடந்ததைப் பேசாதே
நாளையை எண்ணி வருந்தாதே
கடந்ததையும் வரப்போவதையும்
நம்பிக் காலத்தை வீணாக்காதே
இந்தப் பொழுதை இறுகப் பிடி”


என்னும் உமர் கய்யாமின் கவிதை வரிகளைப் போல் வாழ்பவன் சிறுவன் குர்ஷித். பிறவியிலேயே பார்வைத் திறன் கிடையாது. ஆனால், மலர்களில் தேன் சேகரிக்கும் தும்பியையும், மலத்தில் அமரும் வண்டையும் அவற்றின் சிறகடிப்பின் ரீங்காரத்தை வைத்தே கண்டுபிடிக்கும் அளவுக்கு செவிக் கூர்மை உண்டு.

மழைத் துளி மண்ணைத் தீண்டும் முன் வானிலேயே வாய்திறந்து அதைப் பருகித் தாகம் தணிந்து இசைபாடும் சாதகப் பறவை போல, எங்கும் எப்போதும் இசைக்காக மனம் திறந்து காத்திருந்து அதைச் செவிகளால் அள்ளிவிடும் குர்ஷித்தின் அகத்திற்குள் விதையாக வந்து விழும் ஒரு ஒலியும், அது மெல்ல வளர்ந்து மாபெரும் இசையாகப் பரிணமித்து அவனையும் மீறி இந்த உலகத்தை நிறைக்கும் தருணத்தையும் காட்சிப்படுத்தி இருக்கும் ஈரானித் திரைப்படம் – The Silence (ஃபாரசீக மொழியில் سکوت )‎

***

பார்வை உள்ளவர்களின் கவனத்தைக் கண்கள் சிதறடிப்பது போல, நுண்ணிய செவிப்புலன் கொண்ட குர்ஷித்தின் கவனத்தை அவனது காதுகள் கலைக்கின்றன. அவன் வீட்டைவிட்டு இறங்கினால் காதுகளைப் பஞ்சை வைத்து அடைத்து விரல்களால் அழுத்திக் கொள்ளவேண்டும். இல்லாவிட்டால், அன்று மலர்ந்த மலர்களில் ஊறியிருக்கும் புதுத்தேனும், மகரந்தமும் தேனீயைத் தன் திசை நோக்கிக் கவர்ந்து இழுப்பது போல, தெருவில் எங்காவது கேட்கும் இசை அவனை ஈர்த்து இழுத்துக் கொண்டு போய்விடும். இசை வரும் திசையில் போய் அதன் இனிமையில் மூழ்கி மயங்கியிருப்பான். இதனால் ஒவ்வொரு நாளும் வேலைக்குச் செல்ல தாமதமாகிவிடும்.

vlcsnap-2011-02-23-17h15m20s166

குர்ஷித்துக்கு இசைக்கருவிகள் தயாரிக்கும் ஒரு சிறிய தொழிற்கூடத்தில் விற்பனைக்கு அனுப்பும் முன் இசைக்கருவிகளைச் சுருதி கூட்டிப் பார்த்து சரி செய்யவேண்டிய வேலை. அப்பா இல்லாமல் அம்மாவுடன் இருக்கும் சிறிய வீட்டிற்கும் வாடகை தரமுடியாமல் ஏழ்மையில் கழியும் சிரமமான வாழ்க்கை. வீட்டு உரிமையாளர் மாத இறுதிக்குள் பணம் தரச்சொல்லி கெடு விதித்திருக்கிறார். பணம் தராவிட்டால் வீட்டைக்காலி செய்து சாமான்களைத் தெருவில் வீசிவிடுவார். மாத இறுதிக்கு இன்னும் ஐந்து நாட்கள் தான் உள்ளன. ஆனால் குர்ஷித்தின் மனம், வீட்டுக்காரர் தினமும் அதிகாலையில் வீட்டுக் கதவை ‘ப.ப.ப.பம்ம்…’ என்று தட்டும் சத்தத்தில் உள்ள சந்தத்தில் லயித்துக் கிடக்கிறது.

அம்மா தினமும் முதலாளியிடம் முன்பணம் வாங்கிவரச் சொல்லி ஞாபகப்படுத்துகிறாள். குர்ஷித்துக்கு ஐந்து நாளைக்குப் பின் வீட்டை விட்டு இறக்கி விடப்படும் நிலையை விட அன்று காலையில் கேட்கும் கதவைத் தட்டும் சத்தத்தில் துவங்கி, தெருவில் கேட்கப் போகும் இனிமையான குரல்களும், இசையும் தான் மனதை ஆக்ரமித்து இருக்கிறது. நாளையைப் பற்றிய கவலைகளினால் அன்றைய நாளின் இனிமையைத் தவறவிட மாட்டான்.

குர்ஷித்துக்கு ஒரு தோழி இருக்கிறாள். அவனுடன் வேலை பார்க்கும் நதீரா என்னும் அனாதைச் சிறுமி. வண்ணமயமான அழகான ஆடையை நேர்த்தியாக அணிந்திருப்பாள், பூக்களின் இதழ்களைக் கிள்ளியெடுத்து தன் நகங்களில் நகப்பூச்சாக ஒட்டி அலங்கரித்துக் கொள்வாள், சிவந்த செர்ரிப் பழங்களைக் காம்புடன் எடுத்துக் காதுகளில் தொங்கவிட்டு லோலாக்கு போல ஆட்டிப் பார்த்துக் கொள்வாள், தண்ணீர் எடுக்கக் குளத்துக்குப் போனால் தன் ஆடையினுள் மறைத்து வைத்திருக்கும் சிறிய கண்ணாடியை வெளியில் எடுத்து யாரும் கவனிக்காமல் தன் அலங்காரங்களையும், முக அழகையும் தானே ரசித்துப் பார்ப்பாள். ஒளியால் துலக்கம் பெறும் காட்சிகளின் அழகில், மலர்களின் வண்ணங்களில், பழங்களின் சுவையில் மனம் கரைபவள். குர்ஷித் ஒலியின் காதலன் என்றால், நதீரா ஒளியின் காதலி.

அவன் இசைக்கருவிகளை ஸ்ருதி சேர்த்து இசைக்கும் போது அவள் தன்னை மறந்து ஒயிலாக நடனமாடுவாள். அவள் மென் கரங்கள் தென்றல் ஏரி மீது வருடி எழுப்பும் மென் அலைகள் போல நெளிந்தாடும். தலையசைவில் காதில் தொங்கும் செர்ரிப் பழங்கள் லயமுடன் அசைந்தாடும். அவளின் நடனம்தான் ஒலிபுகாத கண்ணாடித் தடுப்புக்கு அந்தப் பக்கம் இருக்கும் முதலாளிக்கு ஸ்ருதி சரியாக சேர்ந்திருக்கிறது என்பதற்கு அடையாளம். அவள் அசைவு சரியில்லையென்றால் அவர் முகம் எரிச்சலில் சுருங்கும்.

“மலத்தில் அமரும் வண்டுகளுடன் பேசினால், உன் ரீங்காரம் கெட்டுவிடும். அவைகளுடன் பேசாதே’ என்று தும்பிகளிடம் சொல்லும் குர்ஷித், இசையை ரசிக்காத – பணத்திலேயே குறியாக உள்ள கரகரக் குரல் முதலாளியுடன் நேரடியாகப் பேசமாட்டான். நதீரா தன் இனிமையான் குரலில் முதலாளி சொல்வதைச் திரும்பிச் சொல்ல வேண்டும், அவளிடம் தான் அவன் பதில் கூறுவான்.

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமாக இசை அவனை அலைக்கழித்து இழுத்துச் சென்று விடுகிறது. அப்படி ஒரு நாள் ஒரு மாணவனின் இசையைத் தொடர்ந்து சென்று இசைப்பள்ளி ஒன்றை அடைகிறான். இசை ஆசிரியர், குர்ஷித் வேலை பார்க்கும் இடத்தில் வாங்கிய இசைக்கருவிகள் நன்றாக இல்லை, எதிலும் சரியான ஸ்ருதியே இல்லை என்று குறை சொல்கிறார். ஒரு மாணவனின் இசைக்கருவியை குர்ஷித்தின் கையில் கொடுத்து முதலாளியிடம் கொண்டு போய் திரும்பக்கொடுக்கச் சொல்கிறார். குர்ஷித் ஆசிரியரின் கைகளைத் தொட்டுப் பார்க்கிறான், அவர் கை ஏறி இறங்கி அசைவதற்கேற்ப மாணவர்களிடமிருந்து இசை அலையலையாகப் பொங்கி வருவதை உணர்கிறான். மௌனமாக இசைக் கருவியைச் சுமந்தபடி திரும்புகிறான்.

இங்கே ஒரு முக்கியமான கேள்வியைக் கேட்டுக்கொள்ள வேண்டியிருக்கிறது. ஒசைகளின் கலவையிலிருந்து இசைத் துளிகளை மட்டும் துல்லியமாகத் தனியாகப் பிரித்து அனுபவிக்கும் அன்னப்பறவை குர்ஷித். ஸ்ருதி, லயம் சார்ந்த நுண்ணுணர்வும், கூர்மையான ரசனையும் உடைய அவன் ஸ்ருதி சேர்த்த இசைக்கருவிகள் அபஸ்வரமாக ஒலிக்கின்றன என்கிறார் ஒரு இசை ஆசிரியர். அப்படியானால் குர்ஷித்தின் மனதில் நிரம்பித் தளும்புவதாக நாம் நினைக்கும் இசை என்பது குழந்தை கிறுக்கிய வெற்றுச் சுழிப்புகள் மட்டும் தானா? அதற்கு ஒரு நேர்த்தியும், பொருளும் இல்லையா?

தொடர்ந்து வரும் காட்சி இந்தக் கேள்விகளுக்கு பதிலாக இருக்கிறது. இது படத்தின் பொருள் பொதிந்த கவித்துவமான காட்சிகளில் ஒன்று. இசைக்கருவியை எடுத்துக்கொண்டு அவன் நடந்து போகயில் தூரலுடன் ஆரம்பிக்கிறது மழை. இசைக்கருவி மழையில் நனைந்துவிடாமல் காக்க குர்ஷித் ஓடும் போது கால் தடுமாறி குப்புற விழுகின்றான். அவன் கையில் இருந்து தவறிய இசைக்கருவி தள்ளித் தரையில் மல்லாந்து கிடக்கிறது. மழை வலுக்கிறது. மழைத்துளிகள் இசைக்கருவியின் தந்திகளின் மேல் விசையுடன் விழுகிறது. தந்திகள் அதிர்ந்து மீட்டப்பட, இசைக்கருவி சிலிர்த்துக்கொண்டு ஒலிகளை எழுப்புகிறது. இயற்கை தன் நூற்றுக்கணக்கான கரங்களால் மீட்டும் – மனித மனம் கற்பனையே செய்திட முடியாத முற்றிலும் புதுமையான இசை அங்கே நிகழ்கிறது. குர்ஷித் சேர்த்திருந்த ஸ்ருதி இயற்கையின் பேரிசைக்கு பொருத்தமாக இருக்கிறது. குர்ஷித் அந்த இசையின் திசையை நோக்கி மெல்லத் தரையில் ஊர்ந்து, கைகளால் தடவிச் சென்று இசைக்கருவியை அடைகிறான். காட்சியின் முடிவில் தந்திக்கருவியை இசைத்த மழைத்துளிகள் சென்று கலந்த ஏரியில், இசைக்கருவி மிதக்க, கழுத்தளவு மூழ்கி குர்ஷித் இருக்கிறான். மழை ஓய்ந்த ஏரி சூரியனின் வெள்ளி ஒளி பட்டு தகதகக்கிறது. இதுவே அவனும், இசையும் அதைத் தந்த இயற்கையும் ஒன்றாகக் கலக்கும் இடம். குர்ஷித் மனிதர்களின் ஸ்ருதிக்கு அப்பாலுள்ள தன் மனதின் இசையை இயற்கையில் கண்டுகொள்ளும் மிக முக்கியமான தருணம்.

ஒன்று, இரண்டு, மூன்று என வாடகைக் கெடு நாள் நெருங்குகிறது. வீட்டுக்காரன் தினமும் காலையில் தவறாமல் “ப.ப.ப.பம்ம்…” என்று கதவை தட்டும் சத்தம், பணம் வாங்கிவரச் சொல்லி அம்மாவின் ஞாபகப்படுத்தல்கள் என்று நாட்கள் ஓடுகின்றன. குர்ஷித் தரையிலிருந்து பறந்து எழும் புறாக்கூட்டத்தின் சிறகடிப்பின் லயத்திலும், ‘ப.ப.ப.பம்ம்..’ என்ற கதவைத் தட்டும் ஓசையின் சந்தத்திலுமே ஆழ்ந்திருக்கிறான். வழியில் கேட்ட நாடோடியின் இசையில் மயங்கி அவனைத் தொடர்ந்து போய் நான்காம் நாளும் வேலைக்கு தாமதமாகப் போகிறான். முதலாளி வேலையில் இருந்து போகச் சொல்லிவிடுகிறார்.

அவனைச் சமாதானப்படுத்தும் நதீரா, குளத்துக்கு நீர் எடுத்துவர கூட்டிக்கொண்டு போகிறாள். அவளுடைய சிறிய கண்ணாடியை எடுத்து வழக்கமான தன் அலங்காரங்களை ரசித்துப் பார்க்கும் போது குர்ஷித்துக்கு கண்ணாடியைப் பற்றிச் சொல்லி, அதில் அவனை வரைந்து காட்டுகிறாள். அப்போது ஒரு தேனீயின் ரீங்காரம் சட்டென்று நின்றுவிட கவனம் சிதறிய குர்ஷித் கண்ணாடியைத் தவற விடுகிறான்.

இதுவும் படத்தில் குறியீடுத் தன்மை வாய்ந்த இன்னொரு முக்கியமான காட்சி. இரண்டாக உடைந்த கண்ணாடியில் குர்ஷித் உருவம் தெரியும் பாதியை நதீராவும், நதீராவின் உருவம் தெரியும் பாதிக் கண்ணாடியை குர்ஷித்தும் எடுத்துக்கொள்வதாக இயக்குனர் காட்சியமைத்திருக்கிறார்.

image3

மனிதர்களில் மெய், வாய், கண், மூக்கு, செவி என்னும் ஐம்புலன்களின் அனுபவங்கள் வழியாக அறிதல் நிகழ்கிறது. மெய் வழியாக தொடுதல் உணர்வையும், வாய் மூலம் ருசியையும், மூக்கின் நுகர்தல் வழி வாசனையையும், கண்களால் ஒளியையும், செவியால் ஒலியையும் உணர்கிறோம். இவற்றில் முறையே கண் மற்றும் செவியால் உணரப்படுவதாகிய ஒளியும், ஒலியும் தான் மனிதனால் மிக ஆழமாகவும், விரிவாகவும் வளர்த்தெடுக்கப்பட்டு மாபெரும் கலைகளாக மேம்படுத்தப்பட்டுள்ளன. துயரமான முரணாக இந்த இரண்டு புலன்களை மட்டும்தான் மனித இனத்தில் பிறவியிலேயே இழக்கும் சாத்தியத்தை இயற்கை விதித்துள்ளது. பிற மூன்று புலன்களிலும் பிறவிக் குறைபாடு விதிக்கப்படவில்லை. (நுகர்வு, ருசி ஆகிய உணர்வுகளும் கலையாக மேம்படுத்தப்படாலும் ஒளி, ஒலியின் கலைவடிவங்கள் போன்று மிகவிரிவானவை இல்லை). குர்ஷித், நதீரா தங்களது கண்ணாடி பிம்பங்களை பரிமாறிக் கொள்வதை மனிதரின் இந்த இயற்கைக் குறைபாட்டுடன் புரிந்துகொள்ளும் போது அற்புதமான திறப்பு நிகழ்கிறது. ஒலியும், ஒளியும் ஒன்றை ஒன்று முழுமை செய்து கொள்கிறது. ஆனால் பக்கத்தில் இந்தக் குறைகளற்ற இயற்கையில், தேனீயின் ரீங்காரத்தோடும், பறவையின் இசையோடும் கலந்து அலைகளற்ற அமைதியான குளம் சுற்றியுள்ள அழகை அப்படியே பிரதிபலித்தபடி முழுமையாக இருக்கிறது.

கடைசிநாள் முதலாளி கடையைப் பூட்டிவிட்டு வேலைக்கு வேறு ஆள் பார்க்கச் சென்று விடுகிறான். மறுநாள் காலை, ஏரிக்கரையின் ஒரு கரையில் நாடோடிப் பாடகர்கள், குர்ஷித், நதீரா இருந்து கொண்டு மறுகரையிலிருக்கும் குர்ஷித்தின் வீட்டைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். படகில் ஒரு ஆள் குர்ஷித்தின் வீட்டை நோக்கிச் செல்கிறான். நாடோடிகள் தங்கள் இசையால் வீட்டுக்காரனை மகிழ்வித்து சமாதானப்படுத்தலாம் என்று நினைத்து இசைக்கிறார்கள். அவனுக்கோ இசை பிடிக்காது, பணம் மட்டும் தான் பிடிக்கும். அங்கே நடப்பதை எல்லாம் நதீரா குர்ஷித்துக்கு விவரிக்கிறாள். வீட்டுக்காரன் குர்ஷித்தின் அம்மாவிடம் கோபமாகப் பேசுகிறான். இக்கரையில் நாடோடிகளின் நாய் ஒரு வெள்ளைக் குதிரையைப் பார்த்துக் குரைக்கிறது. அங்கே வீட்டுக்காரன் சாமான்களைத் தூக்கி வெளியில் வீசுகிறான். குர்ஷித் நாடோடியிடம் குதிரையின் குளம்பொலியின் சந்தத்தில் அமைந்த இசையை மீட்டும்படி சொல்கிறான். அப்படியே இசைக்கிறான். குர்ஷித் குதிரை போல துள்ளிக் குதித்துப் பாய்ந்து ஓடுகிறான். குர்ஷித்தின் அம்மா ஒரு படகில் இவர்களை நோக்கி, சூரிய ஒளியை கண்கூசும் அளவுக்கு மேலும் பிரகாசமாக பிரதிபலிக்கும் ஆளுயரக் கண்ணாடியுடன் வருகிறாள்.

குதிரை போல ஓடியபடி கடைத்தெருவில் பாத்திரங்கள் செய்யும் ஒரு பெரிய கொல்லர் பட்டறையை வந்துசேர்கிறான். குழப்படியான உலோகச் சத்தங்கள் எழும்பும் அந்தப் பெரும் பட்டறைக்குள் நுழைகிறான். இரண்டு பிரிவாக பெரிய – சிறிய பாத்திரங்களைச் சுத்தியால் தட்டி உருவாக்கும் கொல்லர்களைத், தான் சொல்லும் சந்தத்தில் தட்டச் சொல்கிறான். சிறிய பாத்திரங்கள் ‘ப.ப.ப.’ என மூன்று முறை தட்ட, பெரிய பாத்திரம் ‘பம்ம்..’ என்று ஒரு முறை தட்டவேண்டும். இசை ஆசிரியன் செய்தது போல இரு பிரிவினைரையும் நோக்கி கைகளை நீட்டி அசைக்கிறான், சத்தம் ஒருசேர எழுகிறது -“ப.ப.ப.”, “பம்ம்..”, “ப.ப.ப.-பம்ம்..” “ப.ப.ப.பம்ம்..” ….. கைகளை அசைத்துக் கொண்டே வந்து ஓரிடத்தில் நிற்கும் குர்ஷித் மீது மேலிருந்து ஒரு ஒளிக் கற்றை பளிச்சென விழுகிறது.

தன் வீட்டிலேயே மிகப்பெரிய கண்ணாடி இருப்பதை அறிந்திராத குர்ஷித், தன்னுள்ளேயே இருக்கும் இசைப் பிரவாகத்தை அவனறியாமலேயே கட்டவிழ்த்து வெளியே விடுகிறான். தொடர்ந்து பீத்தோவனின் ஐந்தாவது சிம்ஃபனி துள்ளிப் பாய்ந்து கொண்டு பெருகி வந்து செவிகளை நிறைப்பதுடன் படம் நிறைவடைகிறது.

***

பிறவியிலேயே செவிப்புலன் இல்லாதவர்களுக்கு நிசப்தம் என்ற ஒரு நிலையே தெரியாது, ஏனென்றால் அவர்கள் சப்தம் என்கிற ஒன்றையே அறிந்திருக்கமாட்டார்கள். கேட்கும் திறனைப் பாதியில் இழந்தவர்களுக்கே ஒலிகள் ஓய்ந்த நிசப்தம் அனுபவமாகிறது.

மண்ணில் புரட்டியெடுக்கப்படும் காந்தத் துண்டு மற்ற அனைத்தையும் உதறி இரும்புத் தூசியை மட்டும் உடலெங்கும் அப்பியெடுத்துக் கொண்டு வருவது போல, இரைச்சலான ஓசைகள் மிகுந்த புற உலகில் இருந்து இனிய இசைக்கான தூய ஒலிக்குறிப்புக்களை மட்டும் தனியாகப் பிரித்து எடுக்கும் நுண்மையான செவித் திறன் கொண்ட குர்ஷித்தின் இசை எப்படி நிசப்தத்தில் இருந்து பிறந்த இசையாக இருக்க முடியும்?

குர்ஷித்தின் மனதுள் ஒலித்துளியாக விழுந்து பின்னர் பெருகிப் பெருகி மாபெரும் இசைப் பிரவாகமாக பொங்கிப் பரவும் ‘ப.ப.ப.பம்ம்…’ என்னும் இந்த ஒலிக்குறிப்பு தான் படத்தின் ஆன்மா. படம் முழுவதும் வெவ்வேறு வகையிலாக வந்து கொண்டே இருக்கும் இந்த இசைக் குறிப்பு ஐரோப்பிய செவ்வியல் இசைமேதை பீத்தோவனின் உலகப்புகழ் பெற்ற ஐந்தாவது சிம்ஃபனியின் தொடக்கம். அதைவிட முக்கியமான விஷயம் இந்த சிம்ஃபனியை பீத்தோவன் தனது காதுகேட்கும் திறனை கொஞ்சம் கொஞ்சமாக இழந்த பிறகு இசையமைத்தது என்ற தகவலை அறிந்தால் “நிசப்தத்தில் பிறந்த இசை” என்பது இன்னும் பொருத்தமானதாக தெரியும்.

மூன்று குறுகிய ஒலி (‘ப.ப.ப’), அதைத் தொடர்ந்து வரும் ஒரு நீண்ட ஒலி (‘பம்ம்..’) என்னும் இசைக்குறிப்பு தொடர்ந்து இரண்டு முறை இசைக்கப்படுவதுடன் பீத்தோவனின் ஐந்தாம் சிம்ஃபனி ஆரம்பமாகும். நான்கு கட்டங்களாக ஒருமணி நேரம் நீளும் இந்த சிம்ஃபனியில் ஆங்காங்கே தொடர்ந்து மேற்சொன்ன இசைக்குறிப்பு வந்து கொண்டே இருக்கும். இந்தப் புதுமையான (3+1) தொடக்க இசைக்குறிப்புடன் துவங்கும் பாணிக்காகவே இந்த சிம்ஃபனி மேற்கத்திய செவ்வியல் இசை வல்லுனர்களால் மகத்தான படைப்பாகப் போற்றப்படுகிறது.

இந்தப் புகழ்பெற்ற (3+1) ‘ப.ப.ப.பம்ம்..’ இசைக்குறிப்பு எழுதுவதற்கு பீத்தோவனுக்கு தூண்டுகோலாக இருந்ததாக இரண்டு விதமான கருத்துக்கள் உண்டு. ஒன்று பீத்தோவனுடைய மனதில் ‘விதி வாசல் கதவைத் தட்டும் சத்தம்’ என்ற படிமத்தில் இருந்து இந்தக் இசைக்குறிப்பு கிடைத்ததாக அவரது உதவியாளர் தனது புத்தகத்தில் கூறுகிறார். இன்னொன்று பீத்தோவனின் மாணவர் கூற்றுப்படி அது ஒருவகை மஞ்சள் குருவியின் சத்த்த்திலிருந்து தூண்டப்பட்டு உருவானது. இந்தப் படத்தில் ‘விதி வாசல் கதவைத் தட்டுதல்’ என்னும் படிம்மே கையாளப்பட்டுள்ளது. அது வறுமையில் வாடும் ஒரு சிறுவனின் வீட்டு வாசலை விதி தட்டி ’ப.ப.ப.பம்ம்…’ என்னும் ஒலி மூலம் அவனுள் இருக்கும் இசையுணர்வைத் தூண்டி, நாளை வரப்போகும் துன்பத்தை நினைக்காமல் இன்று கேட்கும் இசையில் லயித்து, கடைசியில் ஒரு இசைக்கலைஞனாக மாற்றுவதாக படத்தை விவரிக்க மிகப் பொருத்தமானதாகவே இருக்கிறது.

படத்தின் ஆன்மாவான நிசப்தத்தில் பிறந்த இசை பீத்தோவனுடையது என்றால் அதைத் தன் அகத்தின் இசையாகக் கண்டுகொண்ட அந்த சிறுவன் யார்? அது இந்தப் படத்தின் இயக்குனர் மோஹ்சென் மக்மல்பாஃப் தான். ஆம், அவரது இளமைக் கால அனுபவமே இந்தப் படம் உருவானதற்குக் காரணம். மிகுந்த இஸ்லாமிய மத நம்பிக்கையாளரான அவரது பாட்டி சிறுவனான மோஹ்செனை, “வீட்டிலிருந்து வெளியே செல்லும் போது காதுகளை இறுக்கமாகப் பொத்திக்கொள்ள வேண்டும். இசையைக் கேட்டால் நரகத்திற்குப் போவாய்,” என்று சொல்வாராம். இசைக்கு நிசப்தமாக்கப்பட்டிருந்த மோஹ்சென்னின் காதுகள் முதன் முதலாகக் கேட்ட மேலை இசை பீத்தோவனின் ஐந்தாவது சிம்ஃபனி தான். ஒரு நேர்காணலில் “முதன் முறை கேட்ட கணத்திலிருந்து அந்த தொடக்க இசையின் ‘ப.ப.ப.பம்ம்..’ என்னும் நான்கு இசைக்குறிப்புகள் என் தலைக்குள் சுற்றிச் சுற்றி வந்தன” என்கிறார். ஸ்வாதி நட்சத்திரத்தன்று பொழியும் மழையில் ஒரே ஒரு துளியை மட்டும் ஒரு சிப்பி மெல்ல வாய் திறந்து வாங்கிக் கொள்ளும். மழைத்துளியை தன்னுள் அடக்கிக் கொண்டு கடலாழத்தில் சென்று மௌனத்தில் ஆழ்ந்து காத்திருக்கும். கடல்நீரின் அழுத்தத்தால் சிப்பிக்குள் இருக்கும் அந்த நீர்த்துளி மெதுவாக இறுகி ஒருநாள் மிகச்சிறந்த மாசற்ற வெண் முத்தாக மாறும். அதைப்போல, 1808ஆம் வருடம் பீத்தோவன் என்னும் மாபெரும் கலைஞன் பெருமழையாய் பொழிந்துவிட்டுச் சென்ற இசையின் ஒரு துளி 190 வருடங்கள் காத்திருந்து மோஹ்சென் என்னும் இன்னொரு சிறந்த கலைஞனின் யதேர்ச்சையாகத் திறந்த காதுகள் வழியாக மனதில் சென்று தங்கி, இசையை வெறுக்கும் சமயச்சூழல், அரசியல், சமூகம், குடும்பம் போன்றவை கொடுத்த அழுத்தத்தால் இறுகி ஒரு சிறந்த கலைப்படைப்பாக உருப்பெற்று வந்துள்ளது.

படத்தில் இனிய (ஒலி) இசைக்கு உள்ள அளவு (ஒளி) அழகான காட்சிகளுக்கும் முக்கியத்துவம் உள்ளது. பெண்களின் முகத்தை முக்காடிட்டு முழுவதும் மூடிமறைத்துவிட்டால் இயற்கை அழகு எவ்வாறு முழுமை பெறும்? எனவே பெண்களுக்கு முகத்திரை கட்டாயமாக்கப்பாடாத தஜிகிஸ்தானில் முழுப்படத்தையும் எடுத்தார் மோஹ்சென். தஜிகிஸ்தான் ஃபார்ஸி மொழி பேசும் நாடு என்பதும் கூடுதல் அனுகூலம். 1997ல் வெளியான இந்தப் படம் ஈரானில் அடுத்த மூன்று வருடங்களுக்குத் தடை செய்யப்பட்டிருந்தது. வழக்கமாக பின்னணி இசையை மிகக் குறைவாகவே பயன்படுத்தும் மோஹ்சென் மக்மல்பாஃப் இந்தப் படத்தில் சூஃபி இசை, நாடோடி இசை, மேற்கத்திய இசை என்று பின்னணி இசைக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுத்து எடுத்துள்ளார். படத்தின் ஆன்மாவே இசை தான். படத்திலேயே சூசகமாக, மனிதர்களை இரண்டு வகை வண்டுகளாக உருவகித்து, இசை ரசனை மிக்கவர்களை மலர்களில் தேன் அருந்தும் தும்பியுடனும், இசையை விரும்பாத- பணத்தை மட்டும் தேடும் ரசனையற்ற மனிதர்களை மலத்தில் அமரும் வண்டுகளுடன் ஒப்பிடகிறார்.

இசை என்ன செய்துவிட முடியும்? என்னும் கேள்விக்கு பீத்தோவனின் இசையும், மோஹ்சென் மக்மல்பாஃபின் அனுபவமும் – அதன் விளைவான ‘நிசப்தத்தில் பிறந்த இசை’ (The Silence) படமும் சாட்சி.