துக்கடா

f-carnatic

ஏதோ ஒரு வெளிநாட்டு ஸ்பீக்கரின் உபயத்தால் “க்ஷீர ஸாகர ஸயனா” தேவகாந்தாரியில் நிரம்பியிருந்தது. மேடையில் சுகந்தி கிருஷ்ணன் பாட்டுக்கு ஏற்றார் போல ராமர் கலர் பட்டு புடவையும், அதற்கு ஏற்றார் போல் நெக்லஸ். பச்சை நூலில் கட்டப்பட்ட மல்லிகை சரம் ஒன்று ஸ்பான்ஸர் விளம்பரத்தையும் இன்னொன்று முன்னாடி வந்து மைக்கை பார்த்தது. அரங்கிற்கு வெளியே போஸ்டரில் இருப்பது போல் அச்சு அசலாக குங்கும பொட்டும் அதற்கு மேல் சின்ன கீற்றாக வீபூதியும் இருபதாம் வரிசை வரை தெரிந்தது. அடுத்த மாசக் கச்சேரியில் கூந்தல் முழுவதும் நரைத்துவிடும் அறிகுறிகள் தெரிந்தது. சரணத்தில் கண்ணை மூடிக்கொண்டு

|தா- – ரக நா – – மா – – – – – தியா – க– ரா– ஜ- – நுத|
|தா- – ரக நா – – மா – – – – – தியா – க– ரா– ஜ- – நுத|

என்று பாடிக்கொண்டிருக்கிறார்.

இந்த கதை இவரை பற்றியது இல்லை. மேலே உள்ள சங்கதியில் “நாமா…. “என்று மேல் ஸ்தாயிக்கு போய்விட்டு மூச்சுவிடும் போது மெல்லிசாக “தியா – க– ரா– ஜ- – நுத” என்று பின்னாடி தம்பூரா போடும் பெண் குரல் கேட்கிறது இல்லையா? அவரைப் பற்றியதுதான் இந்த கதை. பெயர் வத்ஸலா சங்கர். சுகந்தியுடைய நீண்ட நாள் சிஷ்யை. சுகந்தியின் ஒரே மகள். வஸ்தலாவுக்கு சில வருஷம் முன் கல்யாணம் ஆகி குழந்தையும் இருக்கிறது.

சுகந்தி கிருஷ்ணனை சங்கீத உலகில் பலருக்கு இன்று தெரிவது ஆச்சரியம் இல்லை. சின்ன வயசிலேயே அவர் பாட்டனாரிடம் சங்கீதம் கற்று பதினெட்டு வயதில் மேடை ஏறி தோடியையும், கரகரப்பிரியாவையும் தன்னுடைய கல்பனையில் அலையவிட்டு பலரை டிக்கெட்டுக்காக அலையவிட்டவர். இருபத்திரெண்டு வயசில் அகடமியில் சாயந்திரக் கச்சேரி. இன்று அகடமி வெராண்டாவில் லால்குடிக்கு பிறகு கொஞ்சம் தள்ளி இவருடைய படத்தையும் பார்க்கலாம்.

சுகந்தியின் கணவர் கிருஷ்ணனைப் பற்றி இந்த கதையில் சொல்ல விஷயம் அவ்வளவாக இல்லை. ஐ.ஓ.சியில் ஆடிட்டராக சேர்ந்து, வரவு செலவு கணக்குகளை ஒழுங்காக கவனித்து, கம்பெனி செகரட்டரி படித்து, படிப்படியாக தலை வழுக்கை விழும் போது சி.ஃப்.ஓவாகி, ரிடையர் ஆனா பின் வீட்டுக்கு முன் இருக்கும் தோட்டத்துக்கு டியூபில் தண்ணீர் பாய்ச்சிக்கொண்டும், ஊஞ்சல் ஆடிக்கொண்டும் இருக்கிறார். சுகந்தியின் பேட்டி பத்திரிக்கையில் வரும் போது ‘சுகந்தி – கிருஷ்ணன்’ என்று சுகந்தியுடன் கூட நிற்பதை தவிர இவருக்கும் சங்கீதத்துக்கும் அவ்வளவாக தொடர்பு இல்லை. போன மாசம் ஏதோ ஒரு பக்தி பத்திரிக்கையில் சுகந்தியுடன் கிருஷ்ணனின் பழைய படத்தை பார்த்திருப்பீர்கள். இன்று ஆர்.கே.லக்ஷ்மணின் ‘காமென் மேன்’ ஜாடை வந்துவிட்டது.

பத்திரிக்கையில் வந்த அந்த படம் டெல்லியில் கல்யாணம் ஆகி ஒரு வருடத்தில் எடுத்தது. டெல்லியில் நடந்த ‘ஸ்பிரிட் ஆப் யூனிட்டி’ கச்சேரியில் பிரதமர், குடியரசு தலைவர் முன் ஜஸ்ராஜ், பீம் சென் ஜோஷி என்று வடகத்தியர்கள் ஆக்கிரமிக்கும் சூழலில் பாலமுரளி, சுகந்தி மட்டும் தான் தெற்கிலிருந்து. ‘எந்தரோ மாகானு பாவலு’ம் அதிகம் வாசிக்கப்படும் பாடலான ‘ரகுவம்ச சுதா’வையும் பாடி கைத்தட்டல் பெற்ற ஆறு மாசத்தில் வத்ஸலா பிறந்தாள்.

சுகந்தியின் பாட்டிகள் இரண்டு பேரும் ஷிப்ட் சிஸ்டத்தில் வஸ்தலாவை பார்த்துக்கொண்டதால் சுகந்தி அந்த வருட டிசம்பர் சீசன் கச்சேரிகளுக்கு போக முடிந்தது. அம்மாவுக்கு கிடைத்த ஜீன் வத்ஸலாவிடம் ஓவர் டைம் செய்து, ஐந்து வயதில் பாட்டுக்கு ஸ்வரம் சொல்ல ஆரம்பித்தாள்.

“அப்படியே அவ தாத்தாவை கொண்டு வந்திருக்கு” என்று பாட்டி சொன்னது சுகந்திக்கு பிடிக்கவில்லை. ஏன் என்னுடைய ரத்தமாக இருக்க கூடாதா ? என்று நினைத்துக்கொண்டாள்.

வீட்டுக்கு வருபவர்கள் குழந்தையை பாட சொல்லி கேட்க “என்னமா பாடறா… இன்னும் கொஞ்ச நாளில் உன்னை எல்லாம் தூக்கி சாப்பிட்டுவிடுவா” என்பதை வெளியே புன்னகையுடன் எதிர்கொண்டாள். கூட அம்மவுடன் சேர்ந்து காத்தால சாதகம் செய்வாள். நிறைய பாட்டு கேட்பாள், என்ன பாடினாலும் ஸ்வரப்படுத்துவாள்.

“நீங்க வேணுமுனா பாருங்க மாமி ஒரு நாள் ஜி.என்.பி மாதிரி வர போறா” பக்கவாதியம் வாசித்தார்கள்.

பாவாடை போடும் வயசில் வஸ்தலா மேடை ஏற வேண்டும் என்று ஆசைப்பட்டு

“அம்மா இன்னிக்கு நானும் ஒரு நிரவல் பாடவா ?”

“இன்னிக்கி வேண்டாம்… கவர்னர் எல்லாம் வர .. இன்னொரு நாள் கட்டாயம் பாடலாம்”

அந்த இன்னொரு நாள் வரவே இல்லை. அதற்குள் வத்ஸலா தாவணி போட்டு கச்சேரிகளில் அம்மாவுக்கு தம்பூரா போட ஆரம்பித்தாள்.

“இன்னிக்கு மெயின் தோடி ’கத்தன வாரிகி’ … .. கூட பாடு, ரொம்ப சத்தமா பாடாதே மைக்கில இரட்டையா விழும்” போன்ற அறிவுரைகளும் “இன்னிக்கு நான் மஞ்சள் கலர் புடவை… நீயும் மஞ்சள் உடுத்திக்காதே … காபிக்கொட்டை கலரில் போன மாசம் வாங்கினோமே அதை போட்டுக்கோ.. இரண்டு பேரும் மஞ்சளா இருந்தா ஏதோ சிஸ்டர்ஸ் பாடராப்புல இருக்கும்” என்று எல்லாமே சுகந்தியின் இஷ்டம் தான்.

music13கேஸட் காலம் முடிந்து சிடி காலம் வந்த பிறகும் அட்டையின் பின்னாடி நிரந்திரமாக வஸ்தலாவுக்கு சின்ன இடம் கிடைத்தது “Vocal Support: …”. கச்சேரியிலும் முன் சீட்டில் உட்காந்திருக்கும், கதரோ, கோட்டோ கச்சேரி முடிந்த பின் மேடை ஏறி சுகந்தியை வாழ்த்தவோ அல்லது குசலம் விசாரிக்கும் போது வஸ்தலா தம்பூராவையோ, அம்மாவின் சாப்பிட்ட பிளாஸ்யோ பேக் செய்துக்கொண்டு இருப்பாள். அவளுக்கு இந்த முன் சீட்டுக்காரகளின் அறிமுகமே கிடைத்ததில்லை. பொன்னாடை கூட ஃபேன் காற்றில் பறக்கும் படி தான் கிடைத்தது. எந்த கான சபா கச்சேரிக்கு போனாலும் காரிலிரிந்து முதலில் சுகந்தி தான் இறங்க வேண்டும். வாசலில் இருக்கும் சபா செகரேட்டரியோ அல்லது கும்பலாக வரும் நல்லி மாமிகளின் கண்களில் முதலில் சுகந்தி தான் பட வேண்டும்.

வத்ஸலாவுக்கு இருபது வயதாகும் போது, கிருஷ்ணனின் கூட படித்த நண்பர் குடும்பத்துடன் ஒரு முறை வீட்டுக்கு வந்த போது அவர்களின் பையன் சங்கருக்கு பாதுஷாவுடன் வத்ஸலாவையும் பிடித்து போக “நல்ல இடம்… காலா காலத்தில கல்யாணம் செய்தா நாங்க உயிருடன் இருக்கும் போதே பேரன் பேத்திகளை பார்த்துடலாம்” என்று வீட்டில் இருந்த தா.பாட்டிகள் கோரிக்கை வைக்க “என்ன அவசரம் தனியா ஒரு கச்சேரி செய்யட்டும்” என்று சுகந்தி சொன்னாலும் கல்யாணம் செய்துவிட வேண்டும் நினைத்துக்கொண்டாள்.

கல்யாணத்துக்கு சங்கீத கூட்டமும், கார்பரேட் கூட்டமும் ஒன்றாக வந்து வாழ்த்திவிட்டு போனார்கள். கல்யாணம் ஆன ஒரு வாரத்தில் சுகந்திக்கு லண்டனில் இருக்கும் பல்கலைக்கழகம் இந்திய இசை பற்றிய கருத்தரங்கத்துக்கு சென்ற போது,
“சுகந்தியை அழைசுண்டு நீங்களும் வாங்க, ஹனி மூன் மாதிரி இருக்கும்” என்று போன இடத்தில் மழையும் குளிரும் ஒன்று சேர, கருத்தரங்கதுடன் கருத்தரிப்பும் கூடவே சேர்ந்தது. ஒன்பதாவது மாசத்தில் பெண் குழ்ந்தை பிறந்தது. பெயர் நிர்மலா.

“நான் குழந்தையை பார்த்துக்கிறேன்… நீ அம்மாவுடன் கச்சேரி போய்விட்டு வா… ” என்று மாமியார் நல்லவளாக கிடைத்தது வஸ்தலாவின் அதிர்ஷ்டம்.

நிர்மலாவிற்கு எங்கோ துளியூண்டு ஜீன் ஒட்டிக்கொண்டிருந்ததால் சரியான ஸ்ருதில் பாடினாள். பள்ளியில் நடக்கும் நிகழ்ச்சிகளில் முதலில் மீரா பஜன் அல்லது ‘பிரம்மம் ஒக்கட்டே’ பாடலை நல்ல பாவத்துடன் பாடுவாள்.

இவளுக்கு பதினைந்து வயசாகும் போது சுகந்தி பாட்டிக்கு பீபி அதிகமாகி சாதாரண ஜூரம் என்று ஆஸ்பத்திரிக்கு போய் எல்லா டெஸ்ட் எடுத்து ரிசல்ட் வருவதற்குள் நிமோனியா வந்து ஐசியூ, சிசியூக்கு பிறகு ஐஸ்பெட்டிக்குள் போனார். வித்வான்கள் எல்லோரும் வீட்டுக்கு வந்தார்கள். பார்லிமெண்டில் கூச்சலுக்கு மத்தியில் இரங்கல் தெரிவித்தார்கள். அமுதசுரபி, கலைமகளில் கட்டுரை வந்த பிறகு எல்லோரும் மறந்து போனார்கள். டிசம்பர் மாசம் எஸ்.கே பெயரில் விருது கொடுத்தார்கள்.

“வஸ்தலா எப்படி அம்மா இல்லாமல் தனியா மேடை ஏறுவா ?”

“அவளுக்கு எல்லாமே அவ அம்மா தான். பாவம் அம்மா போனப்பறம் வஸ்தலா பாடுவதையே நிறுத்துவிட்டாள்” என்று யாரோ புரளி கிளப்ப அதுவே நிரந்திரமாகிவிட்டது.

அதன் பிறகு வஸ்தலாவின் வாழ்க்கையில் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த சம்பவம் எதுவும் நடக்கவில்லை.

போன வருஷம் புதிதாக சினிமாவுக்கு வந்த இசை அமைப்பாளர் ஒருவர் தன்னுடைய முதல் படத்தில் கர்நாடக சாயலில் ஒரு பாட்டு இருக்கு என்று வஸ்தலாவை கூப்பிட்டனுப்பினார். மாலை ஆறு மணியிலிருந்து காத்திருக்க வைத்துவிட்டு, இரவு ஒரு மணிக்கு பாட சொன்னார்.

“மேடம் நாட்ட குறிஞ்சி ராகம், உங்க சங்கதியை போட்டு பாடுங்க.. நான் ஒட்ட வைச்சிக்கிறேன்”

இவர் பாடிய அந்த பாட்டை டிராக்காக உபயோகப்படுத்திக்கொண்டு அதன் மீது பாடியவர் ஒரே நாளில் எல்லா டிவியிலும் புகழ்பெற்றார்.

யார் வீட்டுக்கு வந்தாலும் இவளுடைய அம்மாவை பற்றியே விசாரித்தார்கள். டீவியில் தற்போது நடைபெறும் வாண்டுகளுக்கான இசை நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்ட போது கூட “மேடம் உங்க அம்மா குன்னக்குடி சார் இசையில் பாடிய அந்த அம்பாள் பாட்டை எங்களுக்காக ஒரு முறை பாட வேண்டும்” என்று பாடிய பட்டு தான் வஸ்தலா தனியாக பாடிய பாட்டு. அது கூட நிகழ்ச்சிக்கு கடைசியில் பெயர்கள் ஓடும் வரை தான் வந்தது.

நாற்பத்தி ஐந்து வயசில் சுதாவுடனும், சிஸ்டர்ஸுடனும் போட்டி போட முடியாமல், வீட்டில் குழந்தைகளுக்கு பாட்டு சொல்லிக்கொண்டுத்தாள். அமேரிக்க டாலர் பட்டாளம் சுகந்தி பிராண்டுக்கு ஸ்கைப்பில் கற்றுக்கொண்டார்கள். தீபாவளி மலரில் அம்மா பற்றி கட்டுரை வந்தால் அவர்கள் வீட்டு ஆல்பத்திலிருந்து போட்டோக்களை உருவிக்கொண்டு போகவருவார்கள்.

போன வாரம் ஏதோ ஒரு சபா திடீர் என்று முழித்துக்கொண்டு கச்சேரி புக் செய்ய வந்தார்கள். “கச்சேரியில அதுல வர முழு பணமும் கேன்சர் குழந்தைகளுக்கு தான்..” என்று ஒரு தட்டு ஆப்பிள் கொடுத்துவிட்டு போனார்கள்.

வஸ்தலாவுக்கு சந்தோஷமாக இருந்தது. வஸ்தலா டெலிப்போன் புஸ்தகத்தில் இருப்பவர்களுக்கு போன் செய்து சொன்னாள். கச்சேரி அன்று வஸ்தலா பரபாரப்பானாள்.

“நிம்மி தம்பூராவை எடுத்து வை… பிளாஸ்கில் பால் ரொம்ப சூடா வேண்டாம்… இரண்டு பேரும் ஒரே கலர்ல டிரஸ் பண்ணிக்கலாம்”

நாட்டையில் “மகா கணபதிம்” பாடலுடன் கச்சேரி களைகட்டியது. அடுத்த இரண்டு பாடலில் தாத்தாக்கள் நிமிர்ந்து உட்கார்ந்தார்கள். “சுகந்தி பாணி அப்படியே இருக்கு” என்று அடுத்த பாடல் ஆரம்பிக்கும் முன் பேசிக்கொண்டார்கள். பைரவியில் மெயின் எடுத்துக்கொண்டு மேலேயும் கீழேயும் போய்விட்டு வருவதற்குள் வயலின் வித்தாவனுக்கு வேர்த்துக்கொட்டியது.

கச்சேரி முடிந்த பின் கூடுதலாக இரண்டு நிமிஷம் கைத்தட்டினார்கள்.

“இன்னும் கூட ஒரு துக்கடா பாடியிருக்கலாம்”

“அடுத்த கச்சேரி எப்போது” என்று சிலர் கேட்டுவிட்டு கேண்டீன் பக்கம் போனார்கள்.

வஸ்தலா பொருமையாக தம்பூராவையும் , பிளாஸ்கயும் பேக் செய்துக்கொண்டு இருந்தாள். அவளுக்கு இது பழக்கம் தான்.