சச்சினுடன் வளர்ந்தோம்

tendulkardoubleton595

சச்சின் டெண்டுல்கர் ஒருநாள் கிரிக்கெட் ஆட்டங்களிலிருந்து ஓய்வெடுத்துவிட்டார்.

இது உங்களை எந்தவிதத்திலாவது பாதிக்கிறதா?

அவர் ஓய்வுபெற்ற நாளன்று மரத்துப் போன உணர்வு தோன்றியதா? இறப்பதற்கு முன் தோன்றும் என்கிறார்களே அதுபோல், உங்கள் வாழ்வின் பல தருணங்கள் உங்கள் மனக்கண்ணில் பளிச்சிட்டனவா?

23 வருடங்களுக்கு முன்பான ஒரு நாள் ஆட்டங்கள் உங்களுக்கு நினைவிருக்கிறதா? காலத்தில் பின்னோக்கிப் போய்ப் பாருங்கள்… என்ன தெரிகிறது? சிவப்புத் தோல் பந்துகள், வெள்ளை ஆடை அணிந்த வீரர்கள், இங்கிலாந்தில் அவ்வப்போது நடத்தப்படும், நடுவர்கள் தேநீர் குடிப்பதற்காக ஆட்டத்தை நிறுத்தும் சில ஒரு நாள் பந்தயங்கள்.

sachins-debut-match-stills-6

வேறென்ன தெரிகிறது? அவ்வப்போது தொடர்பு அறுந்து தொங்கி பின் தொடரும் தூர்தர்ஷனின் நேரடி ஒளிபரப்புகள், கலங்கலான திரையை நிறைக்கும் குறுந்தாடிகளும், புஸுபுஸு மீசைகளும், ஒரு ஒவரில் மட்டைக்காரரையும் அடுத்த ஓவரில் பந்து வீச்சாளரையும் காட்டும் கேமெரா, “that’s hit up in the air” என்று அலறும் வர்ணனையாளர்கள்.

கொஞ்சம் கொஞ்சமாய் காட்சியின் தன்மை மாறுகிறது. கலர் சட்டைகளும், பளீரென்ற லைட்டுகள் நிறைந்த பகல் இரவு ஆட்டங்களும் சகஜமாகின்றன. ஃபீல்டிங் விதி மாற்றங்களால் ‘safe total’ என்பதன் விளக்கம் மாறிப்போகிறது. டக்வர்த், லூயிஸ் போன்ற பெயர்கள் அடிபடுகின்றன; Power Play, Super subs, Super over என்று புதிதுபுதிதாய் சொற்றொடர்கள் சிலவருஷங்கள் பளபளத்துப் பின் மங்கிப் போகின்றன. Pinch hitters சில வருடங்கள் புதுமையாய் இருந்தார்கள். இன்று எல்லோரும் அடித்து ஆட வேண்டும்.

gallery_0_1998_31606

இத்தனை மாற்றங்களையும் டெண்டுல்கர் பார்த்திருக்கிறார். இவற்றினூடே அவர் விளையாடியிருக்கிறார். சில மாற்றங்களை அவர் துவக்கி வைத்திருக்கிறார், மற்றவைகளுக்குத் தன்னைப் பழக்கிக் கொண்டிருக்கிறார். 90களின் மத்தியில் அவர் கிரிக்கெட்டின் தன்னிகரற்ற மாஸ்டர், 2011-லும் அவர் மாஸ்டர்தான். படுவேகமாக மாறிக்கொண்டேயிருந்த கிரிக்கெட் உலகில் நிலையாய் இருந்த ஒரே விஷயம் அதுதான். ஒருநாள் ஆட்டங்கள் செழித்திருந்தபோது அவர் இருந்தார், அவை இறந்துகொண்டிருப்பதாய் சொல்லப்பட்டபோதும் அவர் இருந்தார்.

நீங்களும் இவற்றையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்திருக்கிறீர்கள். நீங்கள் 80-களில் பிறந்தவரா? அல்லது 90களிலா?

இரண்டுமில்லை, டெண்டுல்கர் பிறந்த வருடமே பிறந்து 80கள், 90கள் இரண்டையும் பார்த்தவர் என்றால் செயற்கைக்கோள்களின் செழுமைக்குள் பாய்வதற்கு முன்பிருந்த தூர்தர்ஷனை அனுபவித்து இருக்கிறீர்கள். ஷாரூக் கானை, அவர் வெள்ளித்திரையில் உயரங்களை எட்டுவதற்குமுன் ஃபௌஜி தொலைக்காட்சித் தொடரில் பார்த்திருக்கிறீர்கள். இணையத்திற்கு முன்பான வாழ்க்கையை உங்களுக்குத் தெரியும். ஆயினும் படுவேகமாக தொழில்நுட்பத்தின் அற்புதங்களை சுவீகரித்துக் கொண்டவர் நீங்கள். கறுப்பு வெள்ளையைப் பார்த்திருந்தாலும் நீங்கள் வண்ணத் தொலைக்காட்சி காலத்திய குழந்தை.

வேறென்ன பார்க்கிறீர்கள்?

வெள்ளை தலைக்கவசம் அணிந்து, மார்புப்பகுதி வரை சட்டைப் பித்தான்கள் திறந்திருக்கும் டெண்டுல்கர் பெஷாவரில் ஒரு கண்காட்சி ஆட்டத்தில் அப்துல் காதிரின் பந்துகளை அநாயசமாக எதிர்கொண்டது. அதுவரைக்கும் உங்களுள் தெளிவற்ற கருத்துருவமாய் இருந்த கிரிக்கெட்டுக்கு டெண்டுல்கர் உருவம் கொடுத்து, அர்த்தம் கொடுத்து, வண்ணக் காகிதத்தில் சுற்றி அதன் மேல் ரிப்பனையும் கட்டிக்கொடுக்கிறார். உங்கள் வாழ்வில் கிரிக்கெட்டுக்கான இடத்தையும், அதன் முக்கியத்துவத்தையும் உங்களுக்குப் புரியவைக்கிறார்.

டென்னிஸ் பந்து கிரிக்கெட் ஆட்டங்களில் அவுட் ஸ்விங்கர்கள் போட்டுப் பழகுகிறீர்கள். கண்ணாடி முன்னே நிற்கும் உங்கள் கற்பனை சிறகடித்துப் பறக்கும்: எதிர் அணிக்குக் கடைசி ஆறு பந்துகளில் 6 ஓட்டங்கள் தேவைப்படுகிறது. மைதானமே தளதளவென்று கொதிக்கிறது. ஒரு லட்சம் பார்வையாளர்கள். பேட்டிங் செய்பவர்களை உங்களால் கட்டுப்படுத்த முடியுமா?

1994-ல் ஒரு அதிகாலையில், இந்தியாவின் பலபகுதிகள் இன்னும் உறக்கத்தில் ஆழ்ந்திருக்கையில், நீங்கள் வாழ்க்கைக்கும், சுதந்திரத்துக்கும் விழித்தெழுவீர்கள். ஆக்லந்தில் என்ன ஒரு எதிர்ப்புப் போராட்டம்! 49 பந்துகளில் 82 ஓட்டங்கள். மனத்தளைகளையெல்லாம் விடுவித்த பெரும்திறமையின் துளி வெளிக்காட்டல். நீங்கள் பார்த்தவற்றிலேயே மகத்தான ஒருநாள் இன்னிங்க்ஸ். இதைத் தாண்டிச் செல்ல யாரால் முடியும்?

டெண்டுல்கர் சூறாவளியோடு நீங்களும் அடித்துச் செல்லப்படுகிறீர்கள். மும்பை வானத்தை ஒளியூட்டிவிட்டு மார்க் வாவின் பந்துக்கு அவர் ஆட்டம் இழந்தபோது ஆட்டம் கைவிட்டுப் போவதை உணர்ந்திருப்பீர்கள் அவரது அபார ஆட்டத்திற்குப் பின்னும் இந்தியா ஆட்டம் இழக்கும். சில நாட்களுக்குப் பிறகு டெல்லியில் ஸ்ரீலங்காவிற்கு எதிரான அவரது சதம் தோல்வியில் முடிகிறது. அவரது விரயமான முதல் சதம். அது இயல்பு மீறிய எப்போதோ நடக்கும் ஒரு விதி விலக்கு என்று நீங்கள் நம்புவீர்கள். அப்படியே இருக்கட்டும் என்று விரும்புவீர்கள்.

அவரது ஒவ்வொரு அசைவையும் கவனிப்பீர்கள். 1996-ல் ஷார்ஜாவில் சக்லைனின் சுழலும் யார்க்கரை களத்திலிருந்து விரட்டி ஒரு கெட்ட வார்த்தையை சத்தமின்றி வாயசைத்ததைப் பார்த்து வெட்கத்தில் உங்கள் முகம் சிவக்கும். நைரோபியில் சேம்பியன் கோப்பையின்போது க்ளென் மக்க்ராத்தை அதே வாயசைப்புடன் வெளியேற்றும்போது, ஏதோ நியாயத்தை நிலைநாட்டிய பெருமையில் உங்கள் நெஞ்சம் விரியும்.

1998 – தீர்மானங்களுக்கான சமயம். படிப்பா, விளையாட்டா? கலைகளா, விஞ்ஞானமா? உயிரியலா, கணினியியலா? தொலைபேசியிலேயே பேசிக்கொண்டிருப்பதா இல்லை நேரில் அவளைப் பார்த்து விடுவதா? டெபோனேர் பத்திரிகையை வாங்குவதா இல்லை ரகசியமாய் புரட்டிப் பார்த்து விட்டுவிடுவதா? இவைதான் உங்களை நிரப்பும் அதி முக்கியமான கேள்விகள்.

இதெல்லாம் ஒரு பொருட்டா? டெண்டுல்கர் ஃப்ளெமிங், வார்ன், காஸ்ப்ரோவிச் எல்லோரையும் ஷார்ஜாவில் கிழித்துக்கொண்டிருக்கிறார். ஒரு பாலைவனப் புயல், ஒரு பிறந்தநாள் சதம், உற்சாகத்தில் பட்டை கிளப்பும் டோனி க்ரெய்க். வார்ன் விக்கெட்டைச் சுற்றி பந்து வீச ஆரம்பிக்கையில் ஒரு  நேர் ஆறு, காஸ்ப்ரோவிச்சின் வீச்சில் இன்னொரு நேர் ஆறு ரன், க்ரெய்க்கின் உரத்தகுரலில் ஒலித்த “Whaddaplayaa”. இதெல்லாம் உங்கள் தலைக்குள் பதிந்து போகும்.

உங்களது தெரு மாட்ச்களில் ஒரு கூடுதல் மூர்க்கத்துடன் மட்டையடிப்பீர்கள். பந்து வீச்சாளருக்கு நீங்கள் தயார் என்பதைத் தெரிவிக்க ஒரு தலை அசைவு, அப்புறம் ஃபாலோ த்ரூவின் போது நிற்கும் அந்த போஸ், ரிவர்ஸ் ஸ்வீப்புகள், துடுப்பு போல் நேராக அடிப்பது இவற்றை எல்லாம் முயற்சி செய்வீர்கள். ஷார்ஜாவில் டெண்டுல்கர் ஹென்றி ஒலங்காவை சின்னாபின்னமாக்கும்போது, முஷ்டியால் காற்றைக் குத்துவீர்கள்.

நீங்கள் காலேஜில் சேருவீர்கள். அசட்டுத்தனமாக ராக் செய்யப்படுவீர்கள். சில பாடங்களில் உங்களுக்கு சுவாரசியம் இருக்காது. வகுப்பில் சக மாணவர்கள் பேசும் பல விஷயங்கள் உங்களுக்குப் புரியாது.

கேன்டீனில் டீ குடித்துக்கொண்டிருக்கையில், யாரோ டிவியைப் போடுகிறார்கள். இந்தியா நமீபியாவுக்கு எதிராய் உலகக் கோப்பையில் விளையாடிக் கொண்டிருக்கிறது. இது உங்களுக்குத் தெரிந்த உலகம். டெண்டுல்கர் சதத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறார். இது உங்களைப் பாதுகாப்பாய் உணர வைக்கும் சூழல். அடுத்த பத்து நாட்களும் உங்கள் வாழ்வின் மிக சந்தோஷமான நாட்களைச் சேர்ந்தவை. கேடிக்குக்கு எதிரான அந்த ஆறு, அக்ரம், ஷொயபுக்கு எதிரான நான்குகள். வாழ்வின் கடினமான கட்டத்தைத் தாண்டியது போல உணர்வீர்கள்.

உங்கள் வேலையை வெறுக்கிறீர்கள். அந்த சம்பளச் செக்கைத் தவிர வேறொன்றும் பிடிக்கவில்லை. படிப்பை முடித்தபோது இப்படி இருக்கும் என நினைக்கவில்லை. வேலை சுவாரசியமாய் இருக்கும் என அனுமானித்தீர்கள். எவ்வளவு தவறான அனுமானம்? டெண்டுல்கர் இன்னும் விளையாடிக் கொண்டிருக்கிறார், தன் ஆட்டத் திறனின் மேலுள்ள வெறியோடு. ஒரு க்ஷீண தசைக்குப் பின்பும், தொடர்ந்து முன்னேற வேண்டும் என்கிறார். அவருக்கு வெறெந்த வழியும் தெரியாது.

உங்களுக்கு கல்யாணம் நிச்சயமாகி, மணமும் முடிகிறது, வாழ்க்கை ஓட்டம் பிடிக்கிறது – வீடு, கார், தினப்படி வேலைகள். ஸிட்னியில் டெண்டுல்கர் ப்ரெட் லீயை இரக்கமில்லாமல் வருத்திக்கொண்டிருக்கிறார். ஒரு மேலே பறக்கும் கவர் டிரைவ். பின் பந்து வீச்சாளரைத் தாண்டி புல்லட் போல் செல்லும் அடி. லீ ஒரு தெய்வீகமான புன்னகையை உதிர்க்கிறார். டெண்டுல்கர் அசைவில்லாமல் நிற்கிறார். ஜென் துறவி போல, கடந்ததும் வருவதும் பற்றிய சிந்தனையற்று, அந்தக் கணத்தில் அமிழ்ந்து போய்.

நீங்கள் வேலை மாறுகிறீர்கள். உங்கள் வேலை உங்களுக்குப் பிடிக்கிறது ஆனால் உங்கள் மேலதிகாரி கொடுங்கோலன். அடிமை போல் விரட்டி வேலை வாங்குபவன். ஹைதராபாத்தில் இந்தியா ஆஸ்திரேலியாவின் 351 ஓட்டங்களைத் துரத்துகையில், கணினித்திரையில் ஓடிக்கோண்டிருக்கும் ஸ்கோர் விபரங்களை அவ்வப்போது ரகசியமாய் பார்க்கமட்டுமே முடிகிறது. டெண்டுல்கர் பறந்து ஆடிக்கொண்டிருக்கிறார். ஆனால் பார்க்க டிவி இல்லை. வீட்டுக்குப் போவோமா? ஆனால் அதற்கு முன் அவர் ஆட்டம் இழந்து விட்டால்? உங்களை உங்களால் மன்னிக்க முடியுமா? இந்திய அணி தோற்றுப்போகிறது. மறுநாள் நீங்கள் விடுப்பு -உடல்நிலை சுகமில்லை என்று.

வெளிநாட்டுக்கு புலம்பெயர்கிறீர்கள். கிரிக்கெட் ஆட்டங்கள் வேறு நேர மண்டலத்தில் நடக்கின்றன. தடை செய்யப்பட்ட இணையத் தொடரோடிகளில் ஆட்டத்தைப் பார்க்க முனைந்து, அது விறைத்துப் போய் நிற்கையில் தலையில் அடித்துக்கொண்டு முன்னாள் தூர்தர்ஷன் நாட்களை நினைவுபடுத்திக்கொள்வீர்கள். உங்கள் ஜன்னலுக்கு வெளியே இன்னும் சூரியன் உதிக்கவில்லை; டெண்டுல்கர் க்வாலியரில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராய் 190ல் ஆடிக்கொண்டிருக்கிறார். இணையதளம் hang ஆகி நிற்கிறது. டெண்டுல்கர் அவரது கிரிக்கெட் ஆட்டத்தைத் துவங்கியபோது இந்த இணையதளம் துவங்கி இருக்கவில்லை. ட்விட்டரும் தூக்க மாத்திரை சாப்பிட்டதுபோல் இருக்கிறது. அவர் 200 அடித்துவிட்டார்.

இந்தியாவில் உலகக்கோப்பைத் தொடரின் ஒவ்வொரு பந்தையும் நீங்கள் பார்ப்பீர்கள், பார்க்காமல் எப்படி இருப்பது? பெங்களூரில் ஒரு 100, நாக்பூரில் ஒரு 100. மோஹாலியில் உங்களுக்கு எதிர்மூச்சு வாங்கும். பிறகு மும்பாயில் எரிமலை வெடிப்பு. வெற்றி பெற்றபின் விராட் கோஹ்லி அவரை மேலே தூக்கி, டெண்டுல்கர் மேல் உள்ள சுமையைப் பற்றிப் பேசுகிறார். அவர் நம் எல்லோர் சார்பிலும் பேசுகிறார். நாம் எப்படி உணர்கிறோம் என்பது அவருக்குப் புரிகிறது. பிறகு கண்ணீர் வழிகிறது, எல்லா இடங்களிலும், உங்கள் கன்னங்களையும் சேர்த்து.

‘கேனரி ரோ’ என்ற நாவலில் ஜான் ஸ்டெய்ன்பெக் சொல்வார்:

’ஃபோர்ட் மாடல் டி கார் அமெரிக்காவில் விளைவித்த மனநிலை, உடல்நிலை, அழகியல் விளைவுகளைப் பற்றி யாரேனும் ஒரு புத்தகம் எழுத வேண்டும். இரண்டு தலைமுறை அமெரிக்கர்களுக்கு பெண்களின் க்ளிடொரிஸ்களை (clitoris) விட ஃபோர்ட் சுழலைப் பற்றியும், சூரிய நட்சத்திரங்களை விட கியர்களைப் பற்றியும் அதிகமாகத் தெரிந்திருந்தது…’

இதை நீங்கள் உங்கள் தலைமுறையைப் பற்றியும் சொல்லலாம். உங்கள் ஃபோர்ட் மாடல் டி சச்சின். ஒருநாள் ஆட்டத்திலிருந்து அவர் ஓய்வெடுக்கையில் நீங்கள் உணரும் வேதனை, அவருடன் சேர்ந்து வளர்வது என்றால் என்ன என்பதைப் புரிந்து கொண்டதற்கான அறிகுறியாகும்.

நீங்கள் அதிர்ஷ்டசாலிகள்.

(நன்றி: க்ரிகின்ஃபோ)