கொன்று தீர்க்கும் நுண்ணுயிர்கள் – வரமும், சாபமும்

மனிதருக்கும் நுண்ணுயிரிகளுக்குமான தொடர்ந்த இழுபறியில் உலகம் ஓடிக் கொண்டிருக்கிறது. சரியான சொல், இயங்கிக் கொண்டிருக்கிறது. இல்லை, இன்னும் சரியான சொல், உயிர்த்துக் கொண்டிருக்கிறது. ஓரளவு உடனேயே மரித்துக் கொண்டும், நசித்துக் கொண்டும், மக்கி மண்ணாகிக் கொண்டும், மறுபடி ஜனித்தும், துளிர்த்தும், நெடுநெடுவென வளர்ந்தும், முதிர்ந்தும், உதிர்ந்தும், மரித்தும்…. உங்களுக்குத் தெரியும், சுழற்சி என்பது உயிர் வாழ்தலின் அடிப்படை என்று.

எதார்த்தம் என்பது இணக்கமாகவோ, வசீகரமாகவோ, எந்நேரமும் பாதுகாப்புணர்வைக் குடையாகக் கொடுப்பதாகவும் இல்லை என்பதால், உயிரின் தோற்றுவாயையும், ‘முடிவையும்’ குறித்து மதங்கள் வனப்பான கனவுகளைக் கருத்துகளாகப் பரப்புகின்றன. அல்லது பீதியைக் கொடுத்து உயிரை, நம் உயிரைவிட மேலாக மதிக்கச் சொல்லிக் கொடுக்கின்றன. இதைக் கொஞ்சம் கருக்காகச் சொன்னால், உயிர் பற்றிய கனவை எதார்த்தமான உயிரை விட மேலாக மதிக்கச் சொல்லி வற்புறுத்துகின்றன.

எம்மா ஒய்ட் ஹெட் என்னும் ஆறுவயதுச் சிறுமி, ஃபிலிப்ஸ்பர்க் என்னும் சிறு நகரில், பென்சில்வேனியா மாநிலத்தில் ஆறு வயதாகிற போது மரணத் தருவாயில் நின்று கொண்டிருந்தாள். வழக்கமான பாஷாணங்களைக் கொண்ட சிகிச்சைகள் தோற்று விட்ட நிலை. லுகீமியா என்கிற புற்று நோய் அவளைத் தின்று, கொன்று கொண்டிருந்தது.

ஃபிலடெல்ஃபியா மாநகரத்தின் குழந்தைகள் மருத்துவ மனையில் நடத்தப்பட்டுக் கொண்டிருந்த ஒரு சோதனை சிகிச்சை முறையில் சேர்க்கப்பட்ட எம்மாவின் உடலுக்குள், எய்ட்ஸ் என்று சில பத்தாண்டுகளாக உலகம் பூராவும் பேரச்சத்தைப் பரப்பிக் கொண்டிருந்த ஒரு நோயின் காரணியான அதி நுண்ணுயிரிகள், செலுத்தப்பட்டன. இவை நேரடியான எய்ட்ஸ் வைரஸ் (அதி நுண்ணுயிரி) அல்ல. அந்த அதி நுண்ணுயிரியைச் செயலிழக்கச் செய்து மறு அமைப்பு செய்யப்பட்ட அதி நுண்ணுயிரிகள். இவை புற்று நோய் உயிரணுக்களை உயிர்மரபணு அளவில் சென்று கொல்லும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

மூலவடிநீர் உயிரணுக்களில் வெள்ளை அணுக்கள் மிகுதியாகி விடுவதால் (lymphoblastic leukemia) எம்மாவின் உயிர் ஆபத்தான நிலையில் இருந்தது. இதுவரை இந்த நோயின் இறுதிக் கட்டத்தில் எலும்பு ஊண் அல்லது எலும்புச் சோற்றை வேறு ஒருவரிடம் இருந்து நோயாளிக்குள் செலுத்தி அந்த ஆரோக்கியமான எலும்பு ஊணிலிருந்து நோயெதிர்ப்பு சக்தியைப் பெற்றுத் தர முயலும் சிகிச்சையே பயன்படுத்தி வந்தனர். அதுவும் வெல்லும் வாய்ப்பு மிகக் குறைவான சிகிச்சையாகவே இருந்தது.

இந்த நுண்ணுயிரிச் சிகிச்சையும் எம்மாவை அனேகமாகக் கொன்று விட்டிருக்கும் நிலை இருந்ததாகச் செய்தி சொல்கிறது. ஆனால் இன்று எம்மா முழுதும் தேறி ஓடி விளையாடுகிறாள். இது வரை மூலவடிநீர் உயிரணுக்களிலோ, வேறெங்குமோ புற்று நோய் திரும்பவில்லையாம்.

10leukemia1-articlelarge

உலகிலேயே முதல் குழந்தை, முதல் தடவை இப்படிப் பட்ட சிகிச்சைக்கு ஆளாக்கப்பட்டவளும் இந்தப் பெண். இது புற்று நோய் சிகிச்சையில் மனிதருக்குச் சமீப காலத்தில் கிடைத்து வரும் சில வெற்றிகளின் துவக்கம். இங்கிருந்து மனித குலம் பல வகைப் புற்று நோய்களைத் தோற்கடிக்கும் காலத்துக்கான பாதை தெரியத் துவங்கி இருக்கிறது என்று மருத்துவ ஆய்வாளர்கள் சொல்கிறார்கள்.

நுண்ணுயிரிகள் இதனால் தோற்று விட்டனவா என்றால், மனிதருக்கும் முந்தைய தோற்றம் அவற்றுடையது. மனிதரைத் தோற்றுவித்தவையே இவை என்றும் சொல்லப்படுகிறது. நம் மூதாதையே நம்மை அழிக்க முற்பட்டு அதில் பெரு வெற்றியும் காணத் துவங்கி இருக்கும் இந்த யுகத்தில், மனிதர் மறுபடி மூதாதையரின் தொடர்ச்சிகளான இன்றைய நுண்ணுயிரிகளிடம் சற்றே விலகி நில்லும் பிள்ளாய் என்று சொல்ல முடிந்திருக்கிறது ஒரு சிறு அதிசயம்தான்.

மேற்படி விவரங்களுக்கு இந்த நியூயார்க் டைம்ஸ் கட்டுரையைப் படித்துப் பாருங்கள் .

நுண்ணுயிரிகள் பற்றிய இன்னொரு செய்தி கொஞ்சம் திகிலூட்டுவது.

மனிதர்கள் உலகெங்கும் அனேகமாக ஒரே மாதிரிதான் இருக்கிறார்கள். குறைந்த நேரம்தான் அவர்களால் எதையும் கவனிக்க முடிகிறது. பிறகு மறுபடி அன்றாட சுகங்கள், அவசர நுகர்வு, தற்சமய உளைச்சல்கள் என்று அவர்கள் கவனம் சிதறி விடுகிறது.

இதற்கு ஒரு காரணம் நாம் மண்ணோடு இணைந்த வாழ்விலிருந்து விடுபெற்று பெரு நகரங்களில் இயற்கையை அனேகமாக ஒழித்துக் கட்டிய ஒரு வாழ்வில் அடைந்து விட்டோம். இப்போது நமக்கு இயற்கை ஒரு உபாதை என்றுதான் தெரிகிறது. அல்லது ஒரு நுகர் பொருள். வார இறுதியில் மட்டும் நமக்கு பூங்காக்களும், வனங்களும், பறவைகளும் கேளிக்கைக்கு உபயோகப்பட்டு விட்டு, வார நாட்களில் கண்ணுக்குத் தெரியாது போய்விடுகின்றன. ஆனால் நம் கண்ணுக்குத் தெரியாத இன்னொரு பேரியக்கம் அனாதிகாலத்திலிருந்து நம்மோடும், நம்மைச் சுற்றியும் நடந்து கொண்டு வருகிறது. அதைப் பற்றிய கட்டுரையை இங்கு படிக்கலாம்.

121219_pan_chytridfrogcroprectangle3-large

பூசணம் எனப்படும் ஃபங்கஸ் (fungus) உயிரினங்களின் தோற்றுவாய்க் காலத்திலிருந்து உள்ளவை. ஒரு புறம் மிருகங்களாகப் பிரிந்து எழுந்த உயிரினங்கள், இன்னொரு புறம் பூசணங்களாகவும் அவை தொட்டு எழுந்த தாவரங்களாகவும் இன்னொரு வகை உயிரினங்கள்.

பூசணங்கள் சில நேரம் மனிதர்களுக்கும், மிருகங்களுக்கும் உதவுகின்றன. பெனிஸிலின் என்கிற ஒரு மருந்து ஒரு பூசணத்திலிருந்து உருவான மருந்துதான். ஆனால் பெருநேரமும் அவை உயிரினங்களை அழிக்கவும், இறந்த உயிர்களை மறுபடி இயற்கையின் சுழற்சியில் சேர்க்க உதவும் உத்திகளாகவும் இருக்கின்றன.

இன்று உலகெங்கும் இயற்கையின் சுழற்சியும், தட்ப வெப்ப நிலைகளும், கூடதிகமான உயிரினத் தேவைகளுமாக பூமி ஒரு பெரும் கிளர்ச்சியில் சிக்கி இருக்கிறது. இதனால் காலம் காலமாக வாழ்ந்து வந்த தாவரங்கள், பல வகை பூச்சிகள், சிறு மிருகங்கள், நீர்வாழ் உயிரினங்கள் போன்ற பலவும் தம் இயற்கைச் சூழலை இழந்து திணறிக் கொண்டிருக்கின்றன. இவற்றை இந்தப் பூசணங்கள் எளிதே தாக்கி பெரும் எண்ணிக்கையில் அழித்துக் கொண்டிருக்கின்றன என்கிறது இந்த அறிக்கை. படித்து, அச்சம் கொள்வோமாக.

அப்படியாவது நாம் இயற்கையோடு இசைந்த வாழ்க்கையை நாடுவோமா என்றால் அது குறித்து ஐயம்தான் கொள்ள வேண்டி இருக்கிறது.