கவிமொழியைக் கைமாற்ற முடியுமா? டெப்ரா ஏய்கர் கவிதையை முன்வைத்து…

‘மிகச் சிறந்த மொழிபெயர்ப்புகூட ஒரு எதிரொலி, மட்டுமே’ என்கிறார் ஜார்ஜ் ஹென்ரி பாரோ என்னும் ஆங்கில எழுத்தாளர். மொழிபெயர்ப்பின் மிகப்பெரிய சாபம், அது என்றுமே மூலப்பிரதியாக முடியாது என்பதுதான். மூலத்தின் ஆசிரியரே அதை மொழிபெயர்க்கும்போதுகூட. ஒரு திறமையான மொழிபெயர்ப்புக்குப் பின் இருப்பது மிகக் கடுமையான உழைப்பு. மூலம் எளிமையாய் இருக்குமானால் அதே அளவு எளிமையை மொழிபெயர்ப்பிலும் கொண்டுவருவதற்குத் தனித் திறமையும், நீண்ட அனுபவமும் தேவை. மொழி லாகவம் மட்டுமேயன்றி, ஒரு படைப்பின் சமூக, சரித்திரப் பின்னணிகளின் புரிதலும் வேண்டும். இல்லையென்றால் பலவிதமான அனர்த்தங்களையும் அபத்தங்களையும் நாம் படிக்க நேரிடும். இது பற்றி நபகாவ் எழுதிய கட்டுரை ஏற்கனவே சொல்வனத்தில் பிரசுரமாகி இருக்கிறது.

கவிதை மொழிபெயர்ப்பு இன்னும் சங்கடமானது. கட்டுரைகளிலும், கதைகளிலும் அதன் படைப்பாளி சொல்ல வருவதை புரிந்துகொள்ள நமக்குக் கிடைக்கும் ஒரு விரிவும், பரப்பும், கவிதையில் இல்லை. வெகுசில வரிகளிலேயே சொல்லவருவதை சொல்லியும் சொல்லாமலும் குறிப்பது கவிதை. இதனாலேயே கவிதையை ஒரு மொழியிலிருந்து இன்னொரு மொழியில் சொல்வது இயலாத விஷயம் என்று வாதிடுபவர்கள் உண்டு. ஒரு மக்களின் கலாச்சாரத்தையும் வாழ்க்கைமுறையையும் எப்படி அதை வாழாமல் அறியமுடியாதோ அதே போலத்தான் கவிதையை அனுபவிக்க அதை எழுதியவரின் மொழி தெரியவேண்டும், இன்னொரு மொழியில் அதை அனுபவிக்க முடியாது என்பது இவர்களின் வாதம்.

language_arts_website_picture

”கவிதையை மொழிபெயர்க்கவே முடியாதுதான்: இதனாலேயே, மொழிகளை பாதுகாப்பவர்கள் கவிஞர்களே. ஏனெனில், மொழிபெயர்ப்பில் ஒரு படைப்பை மூலத்தின் அளவே சிறப்பாய் எழுதமுடியுமெனில், நாமெல்லாம் ஒரு மொழியை சிரமப்பட்டு கற்கமாட்டோம். ஆனால், கவிதையின் அழகுகளை அது எழுதப்பட்ட மொழியைத் தவிர இன்னொரு மொழியில் அப்படியே கொண்டுவர முடியாது என்பதினால்தான், இன்னொரு மொழியை நாம் பயில்கிறோம்.”

(Poetry, indeed, cannot be translated; and, therefore, it is the poets that preserve the languages; for we would not be at the trouble to learn a language if we could have all that is written in it just as well in a translation. But as the beauties of poetry cannot be preserved in any language except that in which it was originally written, we learn the language.)

இப்படி சொல்பவர் ஆங்கில அகராதியை முதலில் தொகுத்த ஸாமுயெல் ஜான்ஸன் என்பவர் . இவரே ஒரு கவியும் கூட.
ஒவ்வொரு மொழியிலும் சொற்களுக்கு அதன் மக்களின் கலாச்சாரம், வாழ்வு, சமுதாயக் கண்ணோட்டம் இவற்றுடன் மிக நெருங்கிய தொடர்பு இருப்பதால் இவ்வகைகளில் மிகவும் வேறுபட்ட மொழிகளினிடையே சிலவார்த்தைகளை அவற்றின் பயன்பாட்டு நுணுக்கங்களுடன் மொழி பெயர்ப்பது கடினமாகிறது. உதாரணமாய் தமிழில் பயன்படுத்தும் கற்பு , பத்தினி போன்ற பதங்களை சரியாய் அதே அர்த்தம் வரும்படி வேற்றுநாட்டு மொழிகளில் சொல்ல முடியுமா? கால்க் (calque), கடன் சொல் (loanword) போன்ற நுட்பங்கள் இச்சமயங்களில் மொழிபெயர்ப்பாளருக்குக் கைகொடுக்கும். உட்பொருள் கருதாமல் உள்ளபடியே மொழிபெயர்ப்பது கால்க்- facebook – முகநூல் web வலை tweet – கீச்சு scheduled castes – அட்டவணை சாதிகள் போன்றவை இவ்வகைச் சொற்கள். கடன்சொற்கள் என்பவை ஒரு அன்னியமொழிச்சொல்லை இன்னொருமொழியில் அப்படியே உபயோகப்படுத்துவது. பாண்ட், ஷர்ட் என்பதுபோல.

கவிதையின் படிமங்களில் பல சமயங்களில் பண்பாட்டுக் குறியீடுகள் உபயோகப்படுத்தப்படும். ஆனால் ஒரு பண்பாட்டில் ஒன்றைக் குறிப்பது இன்னொரு பண்பாட்டில் நேர் எதிர்மறைக் குறியீடாகலாம். வெள்ளையுடையணிந்த ஒரு பெண்ணுக்கு தமிழ்பண்பாட்டில் இருக்கும் அடையாளம் கிருத்துவப் பண்பாட்டில் முற்றிலும் வேறானது. அதே போல வாரணமாயிரம் சூழ வலம் வந்து நாரணன் நம்பி கைப்பிடிக்கக் கண்ட கனாவையோ, தலைவனைப் பிரிந்த தலைவியின் வளை கழன்று போவதும், தோலில் பசலை படிவதும் மேற்கத்திய மொழிகளில் அப்படியே சொன்னால் அது எந்த அளவுக்கு சிருங்காரத்தையோ விரகத்தையோ வெளிப்படுத்தும் என்பது கேள்விக்கிடமானது. அது கவிதையின் உளநிலையையே (மூட்) மாற்றிக்காட்டலாம். ‘For whom the bell tolls ‘ என்பதை ‘யாருக்காக ஆலயமணி ஒலிக்கிறதோ? என்று மொழி பெயர்ப்போமேயானால் அதன் அர்த்தம் அடிபட்டுப் போகும். அந்த ஐந்து ஆங்கில வார்த்தைகளில் சொல்லப்படும் விஷயத்திற்கு நம் மொழியில் சொல்ல சரியான வார்தைகளுடன் அந்தக் கலாச்சாரத்தில் அந்த சடங்கின் முக்கியத்துவத்தையும் மொழிபெயர்க்கவேண்டும், இதற்கு ஐந்து வாக்கியங்களாவது தேவைப்படும்.. கவிதையின் இறுக்கத்தை இது தளர்த்திவிடும்.

சில கவிதைகளின் அனுபவத்தில் வார்த்தைகளின் ஒலியும் முக்கியமானது. என்பதினால் கவிதையை முழுமையாய் மொழிபெயர்க்க பொருளில் இணையான வார்த்தைகள் மட்டுமே அல்லாமல் அவற்றின் ஒலியையும் கவனத்தில் கொள்ள வேண்டிய அவசியம் வருகிறது. இதனாலேயே கவிதையை மொழிபெயர்ப்பவரும் சிலசமயம் ஒரு கவியாகவே மாற நேரிடுகிறது. நபகோவின் கட்டுரையில் அவர் குறிப்பிடும் கவிதை எட்கார் ஆலன் போ வின் மணிகள். அந்தக் கவிதையில் வரும் பல சொற்களுமே மணியின் ஓசைகளை நினைவுபடுத்தும் – பெல், ஜிங்கில், டிங்கில், ரிங், என்பதுபோல. மேலும் அவர் விவரிக்கும் ஒவ்வொரு வித மணிஒசையையும் படிக்கையிலேயே கேட்கக்கூடிய விதத்தில் வார்த்தைப் பிரயோகம் இருக்கும். இதை வேற்று மொழிகளில் கொண்டு வருவதற்கு அசாத்திய மொழி லாகவம் வேண்டும், முதலில் அந்த மொழியில் இதைப் போன்ற வார்த்தைகள் இருக்கவேண்டும்.: சலசலவென்று ஓடும் ஆற்றையும், தரதரவென்று கொட்டும் அருவியையும் , சோவெனப் பெய்யும் மழையையும் ஆங்கிலத்தில் எப்படி சொல்வது?

சொல்வனத்தின் முந்தைய இதழொன்றில், தமிழ்க் கவிதைகளின் ஆங்கில மொழி பெயர்ப்புப் புத்தகமொன்றின் விமரிசனத்தில் திரு.வெங்கட் சாமிநாதன் இப்படிச் சொல்கிறார்:

’நாட்டுப்பாடல் வகையில் தாலாட்டுப் பாடல்கள் அவ்வளவாக ஆங்கிலத்தில் சுகமான வாசிப்பு தருவதில்லை. அவர்கள் தொட்டிலிலோ ஊஞ்சலிலோ குழந்தையை இட்டுத் தூங்கச் செய்யும் வழக்கம் என்றுமே இருந்ததில்லை போலும். தாலாட்டுப் பாடல்களின் தமிழ் ஓசை நயத்தைக் கொணராவிட்டால் பின் அவை எப்படி தாலாட்டு ஆகும்?’

கவிதையை வரிக்கு வரி அப்படியே மொழி பெயர்ப்பதா, அல்லது அது வாசகனுக்கு என்ன சொல்கிறதோ அதை தாக்கத்துடன் வெளிப்படுத்தும் சொற்களைப் போடுவதா என்பது இன்னொரு தடுமாற்றம். ஒரு மொழிபெயர்ப்பாளர் கவிதையின் அடிப்படை உருவத்துக்கும் உள்ளீட்டுக்கும் நியாயம் செய்யவேண்டுமா அல்லது வார்த்தைக்கு வார்த்தை படிமத்துக்குப் படிமம் மொழிபெயர்க்கவேண்டுமா என்பதும் வாதத்துக்குட்பட்டது. கவிதை ஒவ்வொரு வாசகரிடம் ஒவ்வொரு விதத்தில் பேசுமென்றால் மொழிபெயர்ப்பாளர் தன் புரிதலை மட்டும் வாசகனிடம் கொண்டு சேர்ப்பது சரியாகுமா? கவிதையின் அடிப்படை உணர்வு சரியாய் வெளிவரும்வகையில், தான் கவிதையில் உள்வாங்கியதை முடிந்த அளவு மூல மொழியில் சொல்வதுதான் மொழிபெயர்ப்பாளர் எதிர்கொள்ளவேண்டிய மிகமுக்கியமான பந்தயம். இதில் மூலக்கவிதையின் சில சொற்களை நீக்குவதோ செறிவுக்காக புதுச் சொற்களைச் சேர்ப்பதோ தவிர்க்கமுடியாதது.

டெப்ரா ஏய்கர் (Deborah Ager) என்ற அமெரிக்கக் கவியின் கவிதை இது:

photo-on-2012-10-10-at-1550-4-300x225

Morning

We are what we repeatedly do.

—Aristotle

You know how it is waking
from a dream certain you can fly
and that someone, long gone, returned

and you are filled with longing,
for a brief moment, to drive off
the road and feel nothing

or to see the loved one and feel
everything. Perhaps one morning,
taking brush to hair you’ll wonder
how much of your life you’ve spent
at this task or signing your name
or rising in fog in near darkness
to ready for work. Day begins
with other people’s needs first
and your thoughts disperse like breath.

In the in-between hour, the solitary hour,
before day begins all the world
gradually reappears car by car.

மேலோட்டமாய் பார்க்கையில் மிக எளிமையான கவிதை. கடினமான சொற்பிரயோகங்களோ புரிந்துகொள்ள முடியாத படிமங்களோ இல்லாதது. அதிகாலையில் வேலைக்குக் கிளம்பும் முன் ஜன்னல்வழியே வெளியே பார்த்துக் கொண்டிருக்கும் பெண்ணின் சிந்தனையோட்டம்.

மொழிபெயர்க்கத் தொடங்கினால் முதல் வரியிலேயே பிரச்சினை: ‘ you know how it is’ என்பது ஒரு சாமான்யமான அமெரிக்க உபயோகம். எல்லோரும் அனுபவித்திருக்கக்கூடிய ஒரு அனுபவத்தையோ, ஏதும் விசேஷமாய் இல்லாத ஒரு சாதாரண விஷயத்தை சொல்லுகையிலோ அவர்கள் சொல்வது. அர்பன் டிக்‌ஷனரி இதை இப்படி விவரிக்கிறது: A phrase used whenever you have nothing better to say or you just want someone’s approval for no real reason.

தமிழிலோ இதர இந்திய மொழிகளிலோ இப்படி ஒரு பயன்பாடு கிடையாது. மூலத்தின் சொற்களுக்கு நியாயம் செய்யும்படி ‘உனக்கும் தெரிந்ததுதான்’ என்று சொன்னால் இது பொதுவாய் தெரிந்தது என்பது வெளிவருமா?

அதை சமாளித்து மேலே போனால் ஐந்தாவது வரியில் ‘ to drive off the road and feel nothing” என்ற சொற்றொடர். ’சாலையிலிருந்து விலகிச்சென்று, எதையும் உணராதிருக்க ’ என்று மிகச்சாதாரணமாய் இதைச் சொல்லிவிடலாம். ஆனால்இது குறிப்பது வெறுமே வண்டியை சாலையை விட்டு அகன்று ஓட்டுவது மட்டுமே இல்லை. தினமும் காலையில் வேலைக்கோ அல்லது குழந்தைகளை பள்ளிக்கோ வெகுதூரம் நெரிசல் போக்குவரத்தில் ஓட்டிச்செல்பவருக்கு ஒருநாள் அலுப்பில், வெறுப்பில் வரக்கூடிய ஒரு உணர்வு நிலை. தமிழ்நாட்டில் ஒரு பெரிய ஊரில்கூட அப்படிச்செய்வது வண்டியை பாதசாரிப் பாதையில் மோதி காரை சற்றே நசுக்கி நிறுத்தலாம். அமெரிக்கா போன்ற நாட்டில் அதன் அகன்ற 6 பாதை சாலைகளில் இத்தகைய எண்ணம் செயல்பட்டால் அதன் விளைவே வேறே. இதை அந்தத் தாக்கம் வெளிப்படும்வகையில் சொல்லவேண்டுமானால் ’தடம் புரண்டு எல்லாம் மறப்பதுவும் ’ என்றோ அல்லது மூலவார்த்தைகளுக்கு இன்னும் சற்று நெருக்கமாய் ’சாலை விலகி ஓட்டிப் போய் ஏதும் உணராது அழியவோ’’ என்று சொல்லவேண்டும். மூலத்தின் ‘feel nothing’ வெறும் மயக்க நிலை அல்ல, மொத்த அழிவு என்பதை விளக்க மூலத்தில் இல்லாத ஒரு சொல்லை சேர்க்கவேண்டும்.

தலையில் சீப்புடன் அவ்வளவு குறைந்த நேரமே தனக்காக செலவழித்தோம் என்று யோசிக்கிறாரா அல்லது கையொப்பமிடுவது, பணிக்கு ஆயத்தமாவது போன்ற அற்ப விஷயங்களிலேயே தன் வாழ்வில் எத்தனை கழிந்துபோனது என்று நொந்து கொள்கிறாரா? இல்லையெனில் கவிதையின் ஆரம்பத்தில் இருக்கும் அரிஸ்டாடிலின் வரியைப் போல, கடைசியில் கூட்டிக்கழித்துப்பார்த்தால் நாம், நம் வாழ்வு என்பதெல்லாம் இதுபோல் திரும்பத் திரும்பச் செய்யும் செயல்கள்தான் என்கிறாரா? உணர்ச்சியை வெளிப்படுத்தும் குரல் இல்லாமல் எழுத்தில் படிக்கையில் இந்தக் கவிதை பேசும் சூழலில் இவ்வனைத்துமே சாத்தியம்தான். அதனால் இவ்வரிகளை நம் புரிதலுக்குத் தக்கபடி வளைக்காமல் முடிந்த வரையில் இருப்பது போலவே சொல்லி வாசகரின் பொருள்விளக்கத்துக்கு விட்டுவிடுவது மேல்.
மீண்டும் ஒரு விடியலில், அப்பெண்ணின் உலகம் முழுதும் காரின் பின் காராய் திரும்பத் தோன்றுவதும் நமக்கு அன்னியமான விஷயம். ஆனால் கற்பனை செய்யமுடியாததல்ல.

இதுபோல் அன்னிய சூழலில் விவரிக்கப்படும் பொதுவான உணர்வுகளை தமிழில் நம் ஊரின் மக்களுக்கு அருகில் கொண்டுவரவேண்டுமானால் மொழிபெயர்ப்பில் நம் நிலத்து, பண்பாட்டு இயல்புகளுடன் மூலத்தின் அந்நியத்தனத்தையும், அதன் இயல்பையும் சேர்த்துப் பரிமாற வேண்டும். இது கயிற்றின் மேல் கம்புடன் நடக்கும் வித்தைக்கு இணையானது. வெற்றியுடன் தாண்டலாம் இல்லை தலைக் குப்புற விழலாம்.

காலை

(திரும்பத்திரும்ப எதைச் செய்கிறோமோ அதுவே நாம்

– அரிஸ்டாடில்)

பரிச்சயமான உணர்வுதான் அது
பறக்கமுடியும் என உறுதியுடன்
கனவிலிருந்து விழிக்கையில்
என்றோ பிரிந்த அவர் திரும்ப வந்ததும்

உன்னுள் அடையும் ஏக்கம்
சற்றே ஒரு கணம், சாலை
விலகிப்போய் எதையுமே உணராது அழியவோ
நேசிக்கும் அவரைக் கண்டு அனைத்தும் உணரவோ.

ஒரு காலையில், தலையருகே சீப்புடன்
நீ யோசிக்கலாம்
உன் வாழ்வில் எத்தனை இதில் கழிந்தது,
உன் பெயரை ஒப்பமிடுவதில், அல்லது

மூடுபனியில், அரையிருளில் விழித்து
பணிக்குத் தயாராவதில். பொழுது புலர்கிறது
பிறரின் தேவைகள் முதலில்
உன் சிந்தனை கலைகிறது மூச்சுக்காற்று போல்.

இடைப்பட்ட வேளையில், தனித்த மணியில்
நாள் துவங்குமுன் அனைத்துலகும் மீளும்
படிப்படியாய்
காரின் பின் காராய்.

கவிதை மொழிபெயர்ப்பும் ஒரு படைப்பனுபவம்தான். கவிதைகள் நிறைய தளர்வும், இறுகலும் கலந்து இடைவெளிகளில் அர்த்தம் கசிந்து உருமாறும் ரசவாதம் நிறைந்திருப்பதால் வழுக்கலும் கூடுதலாக இருக்கும். அதன் பல அர்த்தங்களில் சிலவற்றையாவது கைப்பற்றி ஒரு வடிவில் ஊற்றிக் கொடுக்க, அக்கவிதையை உருக்கித் திரவமாக்க வேண்டி வரும். அந்த உருகிளம் நிலையில்அதைப் பார்க்கையில் இந்த நிலையில்தான் மூலக் கவிதையை அந்தக் கவிஞர் தரிசித்திருப்பாரோ என்று வியப்பு எழும். மறுவார்ப்பாக அதை ஊற்றுகையில் ஒரு தயக்கம், ஒரு வருத்தம் எழும். ஒரு மிதந்து அலைந்த பட்டாம்பூச்சியை, தேனுறிஞ்சிப் பறவையைக் கைப்பற்றி ஒரு சிறு கூண்டுக்குள் பூட்டி வைத்த உணர்வு ஏனோ எழுகிறது. அவ்வுணர்வுடன், அது அடைபட்டதோ இல்லை தப்பிச் சென்றதோ என்ற சந்தேகமும் நீங்காது நிற்கிறது.