இந்தியக் கவிதைகள் பெரும்பாலும் தமிழ் குஜராத்தி தவிர மற்ற மொழிகளில் எதிர்க்குரல்கள் நிரம்பியவையாகவே உள்ளன. கவிதையின் குரல் உரத்ததாயிருக்கிறது. இதற்கு நிறைய உதாரணங்களைச் சொல்லலாம். கிஷோர் கல்பனாகாந்த், நாம்தேவ் தாசல் பைராகி, நாராயணரெட்டி(நகைச்சுவையோடு), கோபாலகிஷ்ண அடிகா,ஜகன்னாத ப்ரசாத தாஸ்(ஒரியா), ஸ்ரீகாந்த் வர்மா, ஜெயந்த் ரெவ்லானி(சிந்தி). இந்தப் பின்னணியில் பின்வரும் இரு கவிதைகளும்.
இந்த இரு கவிதைகளும் ராஜஸ்தானி கவிஞர் ப்ரேம்ஜி ப்ரேமின் ‘வேர்களும் இதர கவிதைகளும்’ (Roots and other poems) என்ற கவிதைத் தொகுப்பிலிருந்து அருண் ஸெட்வால் அவர்களால் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டவை. இது சாகித்ய அகாதமியால் 2007ல் பிரசுரிக்கப்பட்டது. ப்ரேம்ஜி ப்ரேம் (1943-1993) ராஜஸ்தானி(ஹடோடி) மொழியின் முக்கியமான கவிஞர். 12 கவிதைத்தொகுப்புகள்,புதினங்கள், நாடகம் என விரிவானது இவரின் படைப்புலகம்.’சத்ரங் சமால்’ என்ற ஹடோடி மொழியின் முதல் இலக்கியப் பத்திரிகையின் ஆசிரியரராயிருந்தவர். ‘என் கவிதைகள்’ என்ற நூலுக்காக 1991ல் சாகித்ய அகாதெமி பரிசு பெற்றவர்.
வலிமை
தொங்கிக் கொண்டிரு
என்னைப்போல
தலைகீழாக
பின்னங்கால்கள்
கசாப்புக் கடைக்காரனால்
கயிறால் கட்டப்பட்டு
மிருதுவான உன் தோல்
உரிக்கப்பட
பார்க்காதே
ஊதாநிற சதையை
வீணாக்காதே
உன் எச்சிலை
கசாப்புக்கடைக்காரனை
சுற்றிவந்து
உன் வாலை ஆட்டாதே
எப்படியும்
மிச்சங்களைப் பெறவே
நீ விதிக்கப்பட்டாய்
வெட்டப்படுவது
தலை தனியாக்கப்படுவது
தேவலாம்
குழைந்து
உன் வாலையாட்டுவதைவிட
இல்லையேல்
துணிவிருந்தால்
உன் கொம்புகளால்
குடல்களை
குத்தி வெளியே எடு
ஆடாகவோ
நாயாகவோ இரு
சூட்சும்மென்னவெனில்
வலிமை.
காலம்
பேசாதே
மௌனமாயிரு
காலத்தைப் பார்
நிகழ்பவைகளைக் கவனி
உனக்குத் தெரியும்
எப்படிப் பேசுவதென்று
ஆனால்
பேசுவதற்கு
ஒரு நேரமுண்டு
பேசு
உன் முறை வரும்போது
என்னைப் பார்
நான் மௌனமாயிருந்தேன்
தலைமுறைகளாக
காத்திருந்தேன்
என் முறை வரவில்லையென்று
என் முறை வரும்
எனக்குத் தெரியும்
இன்று
ஆணையிடுபவர்களின் சொல்
பலவீனமடையத்
துவங்குகிறது
அங்கே நிற்கிறது ஒரு வேப்பமரம்
கோயிலுகககெதிரில்
கூடுகட்டவருகின்றன பறவைகள்
அவை நிறைய சளசளக்கின்றன
நீ அவற்றைக் கேட்கிறாய்
விடியலில் விழிக்கையில்
மீண்டும்
படுக்கைக்குச் செல்கையில்.
வேப்பமரம் பேசாமலிருக்கிறது
அது துளிர்க்கிறது
வளர்கிறது
பூக்கிறது
பழங்களால் நிறைகிறது
காய்ந்து போகிறது
உலர்ந்த வேப்பமரம்
டக்-டக்-டக்-டக்கென
சப்திக்கிறது
விறகுவெட்டி
இடைவிடாது கொத்தினாலும்
கசப்பை விடாது
மரணம்
தவிர்க்கவியலாது
பட்சிகளுக்கு
வேம்புக்கு
சலிப்பூட்டுமளவு
அது பேசுவதில்லை
ஆனால்
எவராலேனும்
வெட்டப்படும்பொழுது
அது குரலெழுப்புகிறது
டக்-டக்-டக்-டக்
வா
பேசுவதை நிறுத்து
என்னைப்போல
இப்போது
உன் முறையல்ல
பிறகு பேசு
கசப்பான பேச்சை
உன் அடுத்த பிறவியில்
டக்-டக்-டக்-டக்
ஒருபோதும் விட்டுவிடாதே
உன் மரபணுவின இயல்பை
கோடாரி
கூரிழக்கும் போதும்
ஆங்கிலவழி தமிழாக்கம் : லாவண்யா