1912இல் திருச்சி மாவட்டம் வராஹனேரியில் ஜூன் மூன்றாம் தேதி பிறந்த ஒரு கர்நாடக சங்கீத வித்வானின் நூற்றாண்டு நினைவு விழாவிற்கு நேற்று மாலை சென்றிருந்தோம். சென்னை போக்குவரத்தை எங்கள் வாகனத்தில் கலந்தாலோசித்துக் கதைத்துக் கலைந்து சற்று தாமதமாக சபாவை அடைகையில், ஐந்தரை மணி என்று சொன்ன நேரத்திற்கு விழாவை தொடங்கிவிட்டிருந்தனர் என்பது தெரிந்தது. அவ்விழாவின் சொற்பமான நேர்த்தியான நிகழ்வுகளில் அது முதன்மையானது.
அரங்கினுள் ரசிகர்களாய் நாங்கள் எதிர்பார்த்ததைவிடவே நல்ல கூட்டம். அடாணா, கருடத்வனி, கௌரிமனோஹரி, வாகதீஸ்வரி, மான்ஜி, நீலாம்பரி என்று கச்சேரி மேடைகளில் அரிதான ராகங்களின் ஆலாபனைகளில் சிறந்த நூற்றாண்டு விழா நாயகரின் இன்றும் மனத்தில் நிறையும் இசையின் ஆகர்ஷணம் என்றே எடுத்துக்கொள்வோம். விழா நாயகரின் கொடை பற்றி ஒரு கானொளி பிரஸண்டேஷன் ஓடிக்கொண்டிருந்தது. தோடி மற்றும் கல்யாணி ஆலாபனைகளை அவர் கையாண்ட விதத்திற்கு உதாரணங்களாய் அடுத்தடுத்து ஒலித்த இசைத்துண்டுகள் மனதை நிறைத்தது. ஒரு ராகத்தின் சுருதி பேதம் கேட்டது போலவும் உற்சாகமாகவே இருந்தது.
தொடர்ந்து இப்படித்தான் ‘இசை’ந்து வரப்போகிறது என்று நினைக்கையில், ஏமாற்றம். அடுத்து சில பிரபலங்கள் விழா நாயகனைப் பற்றிக் கூறிய கருத்துக்களின் தொகுப்பு என்று தொடங்கி, ஒருவரின் நேர்காணல் திரையில் ஒளிர்ந்தது. விழா நாயகனின் இசையின் உருக்கங்கள், நுணுக்கங்கள் பற்றிய நினைவுகளைத் தன்னைப் பற்றி நிறைய பேசிக்கொள்வதன் மூலம் விளக்கினார்.
அடுத்த ஐந்து நிமிடத்திற்குள் மடிக்கணினிக்கே பொறுக்காமல் மெமரீ ஓவர்ஃப்ளோவில் படுத்துவிட்டது. தொகுப்பாளர் எப்படிக் குலுக்கிப்பார்த்தும் மேற்படி நேர்காணலை கணினி பேசவிடவில்லை. இது அந்நிகழ்ச்சியின் சொற்பமான நேர்த்தியான நிகழ்வுகளில் இரண்டாவது.
தொகுப்பாளர் பதட்டப்படாமல் கணினியை மூடிவிட்டு நிகழ்ச்சிப்பட்டியலில் அடுத்ததைப் பார்ப்போம், இறுதியில் மீண்டும் காணொளியை முயல்வோம் என்றார். காம்பியர் செய்பவர் இப்போது மேடையிலிருப்போர்கள் உரையாற்றுவார்கள் என்றார்.
முதலில் விழா நாயகரின் தூரத்து உறவினர். எழுதிவைத்திருந்ததை சுத்தமான ‘இந்தியாங்கிலத்தில்’ கணீரென்று சுரத்தின்றி வாசித்தார். இறுதியில் அதே வடக்கத்தி வழக்கில் தமிழில் ‘தெய்வத்தின் குரலில்’ இருந்து இசை எப்படி மனத்தைத் தொடும் சங்கதி என்பது பற்றி ஒரு ‘கோட்டு’ போட்டார். முடித்ததும் ஞாபகமாய் ’அன்-கோட்டும்’ போட்டார். இதெல்லாம் எப்படிங்கானும் விழா நாயகரின் சங்கீதக் கொடையில் பொருந்தும் என்று யோசித்து, இருக்கையில் அப்படி இப்படி நாம் நெளிகையில், முடித்துவிட்டார். அரங்கம் கைதட்டியது பேச்சை முடித்ததற்கே.
இவர் பேசியது புரியாமல் காதைத் தீட்டிக்கொண்டு கவனித்ததில், இடையில் அவர் ‘நொஸ்டால்ஜிக் மெமரீஸ்’ என்க, என்னடா இது எஸ்.வி.கே. பாணி ஆங்கிலமாயிருக்கிறதே என்று நாம் நினைக்கையிலேயே பின்சீட்டுக்காரர் அடுத்தவரிடம் அதை ’நொஸ்டால்ஜிக் மாமரீஸ்’ என்று விவரித்துக்கொண்டிருந்தார். காதுகளைத் தீட்டுவதை அத்துடன் அவசரமாய் நிறுத்திக்கொண்டோம்.
அடுத்து பேச வந்தவர் வித்வான். விழா நாயகருடன் கச்சேரிகளில் கலந்துகொண்டவர். மனதில் பல நல்ல அனுபவங்கள் தேங்கியிருப்பது பேசுகையில் அனுமானிக்கமுடிந்தது. நாயகன் அஷ்டபதி பாடும் நிதானத்தையும், ஜெயந்தஸேனா ராகத்தில் இயற்றிய தில்லானாவையும் அதற்கு வாசித்ததையும் ஓரிரு வரிகள் பாடிக்காட்டி நினைவுகூர்ந்தார். பக்கவாத்தியக்காரர்களை மிகுந்த மரியாதையுடன் நடத்திய நூற்றாண்டு விழா நாயகரின் குணத்தை மெச்சினார். நாம் உணரவேண்டிய உட்கருத்து, சில பல பிரபலங்கள் அவ்வாறு அன்றும் இன்றும் செய்வதில்லை என்பதே. மற்றபடி, ஞாபகமறதி மற்றும் மேடைப்பேச்சில் பழக்கமின்மையில் அவர் பேசியது சோபிக்கவில்லை. “பெரியவர் வந்திருக்கார், கதவத் திறக்காம இப்படி தூங்கிட்டேளேடா பயல்களா” என்று விழா நாயகர் தங்களை ஒருமுறை கடிந்ததை, அது விழா நாயகனின் ‘ஜோவியல்’ உணர்வை எடுத்துக்காட்டுகிறது என்றார்.
முடித்துவிட்டார் என்றிருக்கையில் அருகிலிருந்தவர் காதில் ஏதோ சொல்ல, ‘சபாஷ்டா சிஷ்யா’ என்று மைக்கில் மெச்சி, மீண்டும் ஒரு அனுபவத்தைப் பகிர்ந்தார். ஆல் இந்தியா ரேடியோ கச்சேரியில் விழா நாயகர் பாடுகையில், கல்யாணி ஆலாபனையை உடன் வந்திருந்த தன் சிஷ்யனை செய்யச்சொல்லி, பின்னரே தான் செய்தாராம். சிஷ்யர்களை அவ்வளவு போஷித்து வளர்த்தார் என்றார். சிஷ்யர்களை திட்டம் போட்டுத் தடுப்பதில் நிபுணத்துவமுள்ள சில வித்வான்களைக் கண்டிருக்கும் நமக்கு, இவ்வகை வித்வான்கள் சங்கீத உலகில் இருந்திருப்பதும், இருப்பதும் நிறைவைத் தருவதே.
அடுத்துப் பேசியவர் நாயகனின் வயது முதிர்ந்த சிஷ்யர். அவரை பேச அழைத்ததற்கே ‘இப்படி தாகத்துக்கு தண்ணி கேட்டா அமிர்தம் தரயே’ என்று தியாகராஜரின் கீர்த்தனத்தில் இருந்து உதாரணம் கொடுத்து சிலிர்த்துக்கொண்டார். முதலில் பேசிய, எழுதிவைத்து ஆங்கிலத்தில் படித்தவரிடம் சொல்ல ஏதுமில்லை. இவரிடம் இருந்தது. ஆனால் எழுதிக்கொள்ளாமல் தூய, எழுத்துத் தமிழில் பேசமுயன்று இடையிடையே கொச்சைகள் உதிர தடுமாறி, திருத்திப் பேசினதில், உள்ளடக்கத்தின் சுவாரஸ்யங்கள் சிறுத்தன. விழா நாயகரிடம் தான் சிஷ்யராய் சேர்ந்தது எப்படி என்பதை விளக்கினார். இதற்கும் மறைந்த வித்வானின் சங்கீத கொடைக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லையென்றாலும்.
இவரது பேச்சில் தேறிய கருத்து: வித்வானிடம் கற்கையில் அவர் பாடுவதைக் கண்டு பிரமித்து, தான் உடன் பாடுவதை விட்டு, கண்களில் ஆனந்த பாஷ்பம் பொங்க கேட்டுக்கொண்டிருந்தாராம்; வித்வான் இதைக் கவனித்து, “நீ ரசிக்க ஆரம்பிச்சுட்டே; இனிமே கத்துக்க முடியாது… ரசிக்காதே, கத்துண்டு பாடு…” என்கிற வகையில் அறிவுறுத்தினாராம். உபாசனையாளர்களை ரசிக-மந்தைகளாக கொம்புசீவி வளர்க்கும் தமிழிணையவுலகில், வாசகர்கள், ரசிகர்கள் கலையை/ அறிவுத்துறையைப் பயில்வதற்கு அவசியமான இவ்வகை கருத்துக்களை யோசித்துப்பார்க்கலாம்.
அடுத்துப் பேசியவர் இசை போதகர். கட்டுரையின் தொடக்கத்தில் குறிப்பிட்ட ‘சொற்பமான நேர்த்தியான நிகழ்வுகளில்’ இவர் பேச்சு மூன்றாவது. அதுதான் நேர்த்தியான நிகழ்வுகளில் இறுதியானதும் கூட.
அமர்க்களமான இரண்டு கருத்துக்களை மட்டும் சொன்னார். இரண்டு அரிய கிருதிகள் நூற்றாண்டு விழா நாயகர் பாடுவதில் மட்டுமே கேட்டிருப்பதாய் சொன்னார். கருடத்வனி ராகத்தில் அரிதான ஆனந்த சாகர எனத் தொடங்கும் தியாகராஜரின் கீர்த்தனை ஒன்று. மற்றொன்று பைரவி ராகத்தில் அமைந்த த்ரிபுர சுந்தரி எனத் தொடங்கும் பல்லவி கோபால ஐயரின் கிருதி. நூற்றாண்டு நாயகனின் பாணியில் பாடும்வகையில் இந்தக் கிருதியின் இசைக்குறி வடிவம் (நொட்டேஷன்) இப்போது யாரிடமாவது இருக்கும் என்பதே சந்தேகம்தான் என்கிறார். “இப்டி எவ்ளவோ தொலச்சாச்சு, இது ஒரு மேட்டரா,” பாவம், இசை போதகரல்லவா, அவருக்கு மனது அடித்துக்கொள்கிறது. சரியாப்போய்டும்.
ஒலிக்கோப்பு: டி. கே. ஆர். ஆனந்த சாகர, ராகம் கருடத்வனி
விழா நாயகர் கச்சேரியில் அரிய விஷயங்கள் வருகையில், அது ஆலாபனையோ, கிருதியின் நடுவிலோ, எங்கே இருந்தாலும் சற்று நிறுத்தி, அதைப் பற்றி சுருக்கமாய் ஒரு சொல் விவரித்துவிட்டு (அந்த நிஷாதம், எப்படி இருக்கு பார்த்தேளா!) மேலும் பாடுவார். இசையை புரிந்து ரசிகர்கள் கேட்கவேண்டும் என்கிற அக்கறை. இது அவரது அபாரமான குணம். நடுவில் ஓரிரு வரி பேசினாலே “இது லெக்சர் டெமான்ஸ்ட்ரேஷனா என்ன?” என்று விமர்சிக்கிறோம். ஆனால் இப்படிச் செய்வது மிகவும் தேவை என்று எடுத்துரைத்தார் இசை போதகர்.
இன்னும் கொஞ்சம் இவரே பேசமாட்டாரா என்று நினைக்கையில் இந்த இரண்டு கருத்துகளுடன் முடித்துக்கொண்டார்.
இவ்வகை சங்கீதம் சார்ந்த விழாக்களில் நல்ல மைக்கும், சிக்குண்ட சிண்டுகளையும் கண்ட சந்தோஷத்தில் பலரும் தெரிந்ததையெல்லாம் பொளந்துகட்டுவார்கள். இதில் இசை பற்றி ஒரளவு பரிச்சயம் உள்ளவர்கள் பேச்சு லவலேசமாவது இசைக் கருத்துக்களையும் நமக்கு அளிக்கும். இசை பற்றி அவ்வளவாகத் தெரியாத சிலர், எடுத்தவுடனே இரண்டு கைகளையும் தூக்கித் தான் அம்பேல் என்று ஒப்புக்கொண்டுவிட்டு, தங்கள் சமத்கார மேடைப் பேச்சால் அவையோரை மகிழ்விப்பர். மன்னித்துவிடலாம். இசை பற்றி ஒன்றும் சொல்வதற்கில்லாதவர், சமத்காரமும் அற்றவர், அனுபவப் பகிர்வாய் விழா நாயகனை எனக்கு மூன்று வயதிலிருந்தே தெரியுமாக்கம், அவர் அம்மாவை இரண்டு வயதிலிருந்தே தெரியுமாக்கம், அவர் கச்சேரிகள் என்றும் சோடை போனதே இல்லை, அதோட முக்கியமான விஷயம் அவர் க்ளீவ்லாண்டு வரும்போதெல்லாம் எங்காத்துலதான் தங்குவார், என்னமா போளி போடுவார் தெரியுமா, என்பது போன்ற பொதுவான தேய்வழக்குகளில் சஞ்சரிப்பர். ‘போளியா, பேஷ் பேஷ், ரொம்ப நன்னா இருக்குமே’ என்று அதன் நினைவுகளில் திளைத்து இப்பேச்சையும் பொறுக்கலாம்.
இசை, மேடைப்பேச்சு சமத்காரம், கலைஞனுடன் நேரடி அனுபவம், இப்படி எதுவுமே கைவராத, ஆனால் மேடை முக்கியஸ்தர்களாய் அழைக்கப்படுபவர்கள் பேசுகையில், தப்பிக்க வேறுழியே இல்லை. அவர் உட்பட சபையில் அனைவருக்கும் அவஸ்தையே. மியூஸிக் அகாடமி துவக்கவிழாக்களில் துணை ஜனாதிபதியை கூப்பிட்டு ‘சிறப்புரை ஆத்தச்’ சொல்லி கேட்பதைப்போன்ற அவஸ்தை. இப்படி ஒரு பேச்சும் அன்று கேட்டது. நல்லவேளை, இப்பேச்சிற்கு பின்னர் நூற்றாண்டு விழா நாயகரின் பெயரில் வருடாந்திரம் உரிய கலைஞர்களுக்கு கொடுக்கப்படவேண்டிய ஒரு அவார்ட்டை விழா அமைப்பாளர்கள் நிறுவி அதன் செக்கை பேசியவரிடம் கொடுத்து கைதட்டல் ஒலிக்கப்பெற்று ஒருவகை நியாயம் செய்தனர்.
ஆனால் விழா மொத்த பேச்சுக்களையும் கேட்டுக்கொண்டிருந்ததில் மனதுள் திரண்ட ஒரு கருத்து: விழா நாயகர் பற்றி தனிப்பட்ட ரெக்கார்டிங்கிலோ, விழா மேடையிலோ பேசச்சொல்கையில் கிடைத்த அவகாசத்தில் தன்னைப்பற்றியே முக்கால்வாசி நேரம் பேசிவிட்டு, “என்னை அவர் (விழா நாயகர்) நிறைய என்கரேஜ் பண்ணினார்” என்பது போல பொத்தாம்பொதுவாய் சொல்லிவிட்டு நகர்வது என்று அடங்குமோ தெரியவில்லை. இவ்வகை பேச்சுகளுக்கு சிலர் காசு வேறு கேட்டு வாங்கிக்கொள்வார்கள். சலூனுக்கு சென்று நம் முடியையும் கொடுத்து விட்டு, காசையும் கொடுப்பதை விட மோசமான ஏற்பாடு இது.
நினைவு விழாவின் முடிவில் ஒரு பிரபல வித்வானின் கச்சேரி.
பிரபலம் என்றால் சாதாரண பிரபலம் அல்ல. விழா நாயகரின் நினைவில் தோயும் நிகழ்வுக்கு வரும் கூட்டத்தை விட, இரண்டு பங்கு கூட்டம் கச்சேரிக்கு வரும் அளவிற்கு பிரபலமான வித்வான்.
பேச்சுகள் முடிந்ததும் திரை மூடப்பட்டது. வித்வான்கள் மேடையேறி ‘சீக்கிரம்’ தயாரானார்கள்.
திரை விலகிய போது ஒரு பெரிய அப்ளாஸ். வித்வான் இப்படி எத்தனை அப்ளாஸ்களைப் பார்த்திருப்பார்? 20 நிமிடங்களுக்கு திரையின் பின்னால் ஸ்ருதி சேர்த்த போது கேட்காத தம்புரா ஸ்ருதி விலகல் கூட அவருக்கு அந்த அப்ளாஸில்தான் கேட்டது. பின்னாலிருந்த தம்புராகளில் ஒன்றை அணைத்து அந்தக் களேபரத்துக்கிடையிலும் துல்லியமாய் ஸ்ருதி சேர்த்து கன்னிகாதானம் செய்வது போல் சிஷ்யரிடம் திரும்பக் கொடுத்தார்.
எலெக்ட்ரானிக் பொட்டியில் ஸ்ருதி வருதே, எதுக்காக்கும் ஒன்றுக்கு ரெண்டாய் தம்புரா என்ற எண்ணமெல்லாம் அப்ளாஸில் விழுந்த அப்பளம்தான்.
முகத்தை கடுகடுவென வைத்த படி சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு தார ஷட்ஜத்தில் சேர முயன்றார். பளிச்சென நிஷாதம் கேட்டது. நினைக்கும் போதே உணர்ந்து ப்ளாஸ்கில் வெந்நீர் ஊற்றிக் கொடுக்கும் அளவுக்கு இன்னும் வித்வான் சீனியர் ஆகாத படியால் அவரே ஊற்றிக் கொண்டார். மீண்டும் பாடிய போது சேர்ந்தது போலத்தான் தோன்றியது. எதற்கும் இருக்கட்டுமே என்று கோப்பையிலிருந்து (வெந்நீரைத்தான்) இன்னொரு விழுங்கு விழிங்கியபின் மீண்டும் ஒருமுறை சேர்த்துக் கொண்டார். கச்சேரியில் ஒரு முறையாவது ஸ்ருதி துல்லியமாய் சேர்ந்து இருந்துவிட்டுப் போகட்டுமே என்று அவர் நினைத்திருக்கலாம்.
ஒரு மணி நேர பேச்சுகளை கேட்ட பின், அரை மணி நேரம் காத்துக் கொண்டிருந்த ரசிகர்களுக்கு விறுவிறுப்பா தேவைப்படும்? ஆண்டவன் கருணைக் கடல் என்றால். இசை ரசிகர்கள் பொறுமைக் கடல்கள் அன்றோ! மெதுவாக அடாணாவை ஆரம்பித்தார். பாட நினைத்த சங்கதி சரியாக வரவில்லை போலும். கண்ணை மூடிக்கொண்டே கண்ணாடியை அவசரமாய் கழட்டியபடி ராகத்தைத் தொடர்ந்தார். அதனால் பாட்டில் எந்த மாறுதலும் நேர்ந்ததாய் தெரியவில்லை. அவர் பாடிய ராகத்தை இரண்டொரு இழையில் காட்டும் ஸ்கெட்ச் என்று வகைப்படுத்த முடியாது. முழுமையான ஆலாபனை என்றும் வகைப்படுத்த முடியாது. இரண்டுக்கும் இடைப்பட்ட ஒன்றை பாடிவிட்டு ‘பாலகனகமய’ என்று அனுபல்லவியைத் தொடங்கினார்.
வழக்கமாய் கேட்கக் கிடைப்பதை விட சவுக்கமான காலப்ரமாணம். ‘ராரா தேவாதி தேவா’ என்ற வரியில் நிறைய சங்கதிகளை. ராமனை விதவிதமான பாவங்களோடு அழைப்பது போல பலர் பாடிக் கேட்டிருக்கிறோம். நம் வித்வானும் அந்த வரியை பல முறை பாடினார். ஒவ்வொரு முறையும், ‘ங்கொப்பன் மவனே! வரியா முதுகுல ரெண்டு வெக்கட்டுமா’ என்று அழைத்தார் போலவே இருந்தது. பாடகர் ரொம்ப சென்ஸிடிவான ஆசாமி. ஆதலால் அவருக்கும் சங்கதியில் சரியான பாவம் வரவில்லை என்று உணர்ந்திருப்பார். வராத பாவங்களை நிரவலிலாவது நிறுவிவிட வேண்டும் என்ற உத்வேகத்துடன் நிரவத் தொடங்கினார்.
உத்வேகம் உற்சாகமாகி பாடகர் காலப்ரமாணத்தை ஓட்டியது. உடன் வாசித்த மிருதங்கக்காரரோ தர்மபத்தினி. ஓட்டத்துக்கு ஏற்றவாறு வாசிப்பை விரட்டிவிட்டு சேர்ந்துகொண்டார். வாங்கி வாசித்த வயலின் வித்வானின் புன்னகை பார்க்க அழகாக இருந்தது. பாடகர் வாசித்த போது எழுந்த உணர்வுகளை கொஞ்சம் கூட மாற்றாதபடிக்கு அமைந்தது அவர் வாசிப்பு. ராக ஸ்வரங்களில் மேலும் கீழுமாக சறுக்கு மரம் ஆடிய பின்னும் நினைத்ததை கொடுக்க முடியாத கோபத்துடன் இரண்டாம் கால ஸ்வரங்களுக்குத் தாவினார் பாடகர். நிரவலில் கேட்பவருக்கு மூச்சுமுட்டி ஆக்ஸிஜன் சிலிண்டருக்கு சொல்லி அனுப்பும் வரை ஒரு நெடிய ரவுண்டாய் பாடுவார், பாடி முடித்ததும் பெரியதொரு அப்ளாஸாய் அறைந்து ஆசுவாசப்படுத்திக் கொள்ளலாம் என்று நினைத்த பாடகரின் ரசிகர்களுக்கு பெரியதொரு ஏமாற்றமாய் அமைந்தது.
மறைந்த விழா நாயகரின் சிறப்பு குணம் ஒன்று உண்டு. உடன்வாசிப்பவர்களை எப்போதும் உற்சாகப்படுத்துபவர் என்பதை விழாவில் பேசியவர் குறிப்பிட்டுச் சொன்னதை முற்பகுதியில் விவரித்தோம். நம் பாடகரும் அதற்கு பேர் போனவர்தான். சமயத்தில் பாடுவது பத்து நிமிஷம் உற்சாகப்படுத்துவது கால் மணி நேரம் என்று கூட அவர் கச்சேரிகளில் நடந்துவிடுவதுண்டு. நேற்றைக்குப் பாவம் உடன் வாசித்தவருக்கு அவ்வளவு அதிர்ஷ்டம் இல்லை. தன்னிச்சையாய் வராத பாராட்டு சமயத்தில் ஃபுல்டாஸான யார்க்கராகிவிடுவதுண்டு. பாடகர் பாடிய ஸ்வரத்தை உடனே கிரகித்துக் கொள்ள முடியாமல் திணறி எடுப்பை குத்துமதிப்பாய் அணுகி சற்றே தப்பி சாஹித்யத்தை அவர் எடுக்கும் போது துல்லியமாய் எழுந்தது பாடகரின் ‘பலே’.
ஸ்வரம் முடிவதற்கும் பாடகரின் படைப்பூக்கம் பொங்கி வழிவதற்கும் சரியாக இருந்தது.
அது ஊக்கமல்ல, பத்து நிமிடங்களுக்கு மேல் ஆகியும் ‘புதுமை’ ஒன்றை நாம் செய்யாவிட்டால் ரசிகமகாஜனம் நம்மைப் பற்றி பேசாமல் இருந்துவிடுவார்களோ என்ற பயம், என்று தீனமாய் அங்கு ஒலித்த குரலை நாம் பொருட்படுத்தத் தேவையில்லை. இரண்டாம் கால ஸ்வரத்தை தொடர்ந்து முதல் காலத்தில் இழுத்து இழுத்து ‘ஸாரதரஸுதா’ என்ற இடத்தில் மீண்டும் ஒரு முறை ஸ்வரப்ரஸ்தாரம் செய்ய ஆரம்பித்தார். ஒன்றுக்கு ரெண்டாய் புதுமைகள் புகுந்ததை நினைத்து ரசிகர்களும் கைவலிக்கும் வரை தட்டித் தீர்த்தனர்.
அன்றாடம் இணையபிரபலங்கள், “ஹலோ, நான் இங்கத்தான் இருக்கிறேன், மறந்துடாதீங்க, நானும் பிரபலம்தான், இதோ என் கருத்து, கேட்டுக்கோங்கோ, என்ன ஒன்னும் சொல்லமாட்டேங்கறீங்க, இப்படி என்னையவே எதிர்வினையும் போட்டுக்கிட வைக்கிறீங்களே…” என்று அலட்டுவதை நாம் பொறுப்பதில்லையா. அதன் ஒரு வகைதான் மேற்படி பாடகரின் அநேக ‘படைப்பூக்க புதுமைகளும்’. உபாசனை கூட்டம் ஒன்று தலையை ஆட்டிக்கொண்டே இருக்கும், எட்டரைமணிவரை (அதற்குமேல் இரவில் வீட்டிற்குச் செல்ல ஆட்டோ சகாய பேரத்தில் தகையாது).
ஒருவழியாய் அடாணாவை ஏறக்கட்டிவிட்டு ‘ஸுஜன ஜீவனா’ தொடங்கினார்.
அதற்குமுன் வழக்கமாய் அவர் கச்சேரிகளில் நேரும் மைக், ஃபீட்பேக், அக்கௌஸ்டிக்ஸ் கோளாறுகள் என்று துக்கடாக்கள் வந்துபோனது. கடந்த ஐந்து வருடங்களாவது கவனித்துவருகிறோம்; இவருக்கு சில சபாக்களில் மட்டும் நிச்சயம் கச்சேரிக்கு நடுவே இவ்வகை கலந்துரையாடல்கள் சம்பவிக்கிறது. அதுவும் சிலமுறை ஆலாபனையின் சஞ்சாரத்தில் திடீரென்று மைக்செட்-காரருடன் உரையாடல் தொடங்கும். இவருக்கு முதலிலோ அடுத்தோ, அல்லது முதல் நாளோ, அடுத்த நாளோ அதே சபையில் பாடும் பிரபலங்கள் எவருக்கும் இவ்வகையில் மைக் கோளாறுகள் ஏற்படுவதில்லை.
இதற்குப் பிறகு ஏது ஸுஜன ஜீவனம்? வழக்கமாய் கச்சேரியை தொய்வடையா வண்ணம் தூக்கி எழுப்பும் பாடல்தான். வெள்ளியாததலால் மின்னிற்றோ தெரியவில்லை. ஏனோ நேற்று பாடகரின் குரலின் விரிசல்களே முன்னின்றன. நிச்சயம் கமாஸ் ராகத்தில் அமைந்த இந்த கீர்த்தனையை இன்னமும் நேர்த்தியாக ரம்மியமாக நளினமாக பாடமுடியும். பாடியிருக்கிறார்கள். அவருக்கு அன்று வாய்த்த வகையில் பாடி பாட்டை முடித்ததும், பாடகர் ஆலாபனையில் இறங்கினார். இன்ன ராகம் என்று சட்டெனப் புரியவில்லை. ஹரிகாம்போஜியின் ஸ்வரங்களை பாடியதாகவே தோன்றியது.
கமாஸும் ஹரிகாம்போஜியும் அடுத்தடுத்து பாடுவதும் ‘புதுமை’யில் சேர்த்தியா என்று நண்பரிடம் விவாதத்தைத் தொடங்கும் போது கன்னத்தில் அறைந்தது போல ஒரு விவாதி ஸ்வரம் விழுந்தது. மீண்டும் வருமா என்று காத்திருந்தால் வந்த சுவடே தெரியாமல் டேக்கா கொடுத்து, நேக்காய் மறைந்து, பாச்சா காட்டியது. ராகம் இன்னெதென்று புரியாமல் குழப்பம் மனத்தை நிறைத்தது.
சற்று நேரம் கழித்துதான் குழப்பம் எங்களுக்கு மட்டுமல்ல அரங்கில் இருந்த அனைவருக்குமே என்று புரிந்தது. இந்த ‘அனைவரில்’ ரசிகர்கள் மட்டுலல்ல; பாடகரும் அடக்கம். தன்னை மறந்து பாடிக் கொண்டிருந்தவருக்கு, மறந்தது தன்னை மட்டுமல்ல பாட நினைத்த ராகத்தையும்தான் என்று நினைவுக்கு வந்தது போலும். ஆலாபனையின் நடு சஞ்சாரத்தில் பளாரென்று கன்னத்தில் அறைவதுபோல ‘வாகதீஸ்வரி’ என்று மைக்கில் அதிர்ந்தார். அவர் தனக்கே சொல்லிக் கொண்டது போலத்தான் தோன்றியது. அப்பாடா அதான் ஞாபகம் வந்துவிட்டதே என்று நம்மை நிம்மதியடைய விடவில்லை. கமாஸிலிருந்து, ஹரிகாம்போஜி வழியாக வாகதீஸ்வரியை அடைந்துவிட்டேனாக்கம் என்று வெளிப்படையாக சொல்லிவிட்டாலும், ஆலாபனையில் தொடர்ந்து தேடிக்கொண்டுதான் இருந்தார்.
முந்தைய ராகத்தின் தாக்கத்திலிருந்து வெளி வந்து வாகதீஸ்வரியை அவர் ஒரு முறையாவது நேற்று பாடியிருக்கக் கூடும். கேட்பதற்குள் நமக்குப் பொறுமை போய்விட்டது. தனியில் எழுந்து சென்றால்தானே பாடகருக்கு கோபம் வரும், பாடும் போது எழுந்து சென்றால் பரவாயில்லை என்று அரங்கை நீங்கினோம்.
வீட்டிற்கு வந்து விழா நாயகரின் கச்சேரி ரெக்கார்டிங்கை இரவு முழுவதும் கேட்டு விழாவில் அமர்ந்திருந்த சங்கடத்தை களைய முயன்றோம். 1960-களில் பதிவாகியுள்ள அவர் கச்சேரியை கேட்டுக்கொண்டிருக்கையில், தஞ்சாவூர் உபேந்திரன் தனி ஆவர்த்தனத்தை தட்டிக்கொடுத்து, துவங்கும் முன் மைக்கில் “தனி-ம்போது ஆரும் எழுந்துபோகக்கூடாது…” என்றார் நூற்றாண்டு விழா நாயகர். அட, இப்படிக் ‘கறாராக’ பக்கவாத்யக்காராளுக்கு சப்போர்ட்டா விண்ணப்பிப்பது நேற்று நூற்றாண்டு விழாவில் பாடிய பிரபலத்தின் இன்றைய ‘புதுமை’ இல்லையா; தேவுடா.
அன்றிலிருந்து இன்று வரை தனி-யில் எழுந்து செல்லும் ரசிகர்களும் மாறவில்லை. கருடத்வனி, வாகதீஸ்வரி ராகங்களை நூற்றாண்டு விழா நாயகர் அளவு நேர்த்தியாகப் பாடும் பாடகரும் மேடையேறவில்லை.
***
1912 இல் திருச்சி மாவட்டத்தின் வராஹனேரியில் பிறந்து, சிறுவயதில் ‘தவில் ரங்கன்’ என்று அழைக்கப்பட்ட தண்டலம் கிருஷ்ணமாச்சாரி ரங்காச்சாரி, கொடகநல்லூர் சுப்பையா பாகவதரிடம் சங்கீத அப்யாஸம் பெறத்தொடங்கினார். சுப்பையா பாகவதர், ப்ராபல்யமான கோனேரிராஜபுரம் வைத்தியநாத பாகவதரின் சிஷ்யர். கேட்கவேண்டுமா, டி.கே.ரங்காச்சாரி அவர்களின் சங்கீத குருகுலக் கல்வியின் அடித்தளத்திற்கு. தொடர்ந்து 1929-ல் அண்ணாமலைப் பல்கலைகழகத்தில் நேரடியாக இரண்டாவது வருடம் ‘சங்கீத பூஷணம்’ பயிற்சிவகுப்பில் சேர்ந்து, திருவையாறு சபேஸ ஐயர், டைகர் வரதாச்சாரியார் போன்றோரின் அருகாமையில் தன் சங்கீதத்தை புடமேற்றிக்கொண்டார். தண்டபாணி தேசிகருடன் ‘பண்’ ஆராய்ச்சிகளில் ஈடுபட்டார். இருவரும் சேர்ந்து கச்சேரிகள் செய்திருக்கின்றனர். ஓதுவார் பரம்பரையில் வந்த தேசிகர் தேவாரம் பாட, ரங்காச்சாரியார் நெக்குருகி திவ்யபிரபந்தம் பாடிய நிகழ்வுகள் அக்காலத்தில் பெரும் வரவேற்பை பெற்ற போதிலும், டி.கே.ரெங்காச்சாரி நம் நினைவுகளில் இன்றும் நிறைந்திருப்பது அறுபது மற்றும் எழுபதுகளில் (1966-1976) அவர் அளித்த கச்சேரிகள் வழியேதான். சம்பிரதாய பாராட்டுச் சொற்களை விடுத்து யோசித்தால், அவரது இசையை தெளிவு, கௌரவம், நுணுக்கம், மனோதிடம், புதுமை எனலாம், மேடையில் நிகழ்-படைப்பூக்கம் நிரம்பியது, ரசிகர்களை மதிக்கும் வித்வானின் பாட்டு என்றெல்லாம் எழுதிவைக்கலாம். நூற்றாண்டு விழாவில் பேச்சில் பகிரமுடியாததை, மனத்தை நிறைக்கும் டி.கே.ஆர். இன் இசையை, எழுத்திலேயே மட்டும் பரிமாறிவிடத்தான் முடியுமா என்ன?
அல்லது இரண்டு ஒலிக்கோப்புகளில்தான் தொட்டுக்காட்டமுடியுமா
வாகதீஸ்வரி ஆலாபனை
அம்ருதவர்ஷிணி-ஆனந்த பைரவி இரட்டை-ராக(மாலிகை) பல்லவி
[கட்டுரையின் படங்கள், நன்றி: tkrcentenary.com, அஷோக் மாதவ், மைசூரில் ‘பார்வதி ஹெரிடேஜ்’ கச்சேரிகள் நடத்தும் கே. ஸ்ரீகாண்டைய்யா]
2 Replies to “2012 டிசெம்பர் சங்கீத விழா: ஒரு நூற்றாண்டு நினைவு விழா அனுபவம்”
Comments are closed.