விஞ்ஞான முட்டி மோதல்

பாலஸ்தீன், பாக்தாத் போன்ற இடங்களில் மனிதர்களும், அவர்களுடைய அழிவு எந்திரங்களும் ஒவ்வொரு நாளும் மோதி என்ன கண்டுபிடிக்க முயற்சிக்கிறார்கள் என்று தெரியவில்லை. ஆனால், அணு ஆராய்ச்சியாளர்கள், அதிலும் அணுநுண்துகள் (particle physics researchers) ஆராய்ச்சியாளர்கள், பல ஆண்டு காலமாக இஸ்ரேலிய டாங்க் முன்னர் கல்லெறியும் இளைஞர்கள் போலத்தான் இருந்தார்கள். இவர்கள் ஏகத்துக்கும் உற்சாகமடையக் காரணம், அணுக்களை முட்டி மோதிப் பார்க்க உதவும் ஒரு ராட்சச எந்திரம் கடந்த சுமார் 15 ஆண்டுகளில் உருவாகி இருப்பதுதான்!

image-1

சொல்வனத்தில் “விஞ்ஞானக் கணினி” என்ற தலைப்பில் உலகின் மிகப் பெரிய விஞ்ஞான முயற்சிகளில் ஒன்றாக “பெரிய ஹேட்ரான் கொலைடர்” (Large Hadron Collider or LHC) என்று மேல்வாரியாக இம்முயற்சியைப் பற்றி எழுதியிருந்தேன். 2012 -ல் இந்த சோதனைகளை நடத்தி வரும் CERN என்ற யூரோப்பிய அமைப்புக்கு பட்ஜெட் நெருக்கடி வந்து கொஞ்சம் அடக்கி வாசிக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது. யூரோப்பிய நாடுகள் பொருளாதாரப் பிரபு என்ற நிலமையிலிருந்து பிரபுதேவா என்ற நிலைக்கு இன்று மாறியதே முக்கியக் காரணம். இன்று பட்ஜெட் தேவைகளுக்கு ஜெர்மனியை பெரும்பாலும் யூரோப்பிய நாடுகள் நம்பி இருக்கின்றன. விஞ்ஞான ஆராய்ச்சிக்கும் இது பொருந்தும். CERN அமைப்பு யூரோப்பிய நாடுகளைத் தாஜா பண்ணி இதுவரை சமாளித்து வருகிறது.

பொதுவாக, வளர்ந்த மேற்கத்திய நாடுகள், பொருளாதாரக் காரணங்களால், விஞ்ஞான முயற்சிகளை, சற்று அடக்கி வாசிப்பது விஞ்ஞான ஆராய்ச்சியாளர்களுக்கு துரதிருஷ்டமான விஷயம். அமெரிக்காவில் பல்வேறு விஞ்ஞான முயற்சிகள் இன்று பண நெருக்கடி காரணமாக நிறுத்த/குறைக்கப்படுவதுமாக இருப்பது ஆராய்ச்சியாளர்களுக்கு கவலையளிக்கிறது. நாசா (NASA) ஃபெர்மி லாப் (FERK-Fermilab), ப்ரூக்ஹேவன் (Brookehaven) போன்ற அமைப்புகள் பட்ஜெட் குறைப்பின் விளைவாக பெரிய முயற்சிகளில் இறங்கத் தயங்குகிறார்கள். இதனால், அமெரிக்க விஞ்ஞானம் பின்தங்கி வருவது பல விஞ்ஞானிகளுக்குள்ள பெரும் குறை. வளரும் நாடுகளான சீனா, இந்தியா, ரஷ்யா போன்ற நாடுகளுக்கு அன்றாடப் பிரச்னைகளை சமாளிக்கவே நேரம் சரியாக இருக்கிறது, இந்த அளவு முதலீட்டை அடிப்படை அறிவியல் சோதனைகளில் செய்ய அவை அத்தனை தயாராக இல்லை.

இக்கட்டுரைத் தொடரில், CERN -னின் ராட்சச விஞ்ஞான சோதனை முயற்சியைப் பற்றிய சின்ன அறிமுகம் மூலம், இதைப்பற்றிய பல்வேறு குழப்பங்களை நீக்க முயற்சிப்போம். முதலில், அப்படி என்ன ராட்சசத்தனம் இதில்? இதைப்பற்றி இப்படி மெனக்கிட்டு தமிழில் எதற்கு எழுத வேண்டும்? சாதாரண மனிதனுக்கும், இம்முயற்சிக்கும் என்ன தொடர்பு? இப்படி, பல கேள்விகள் உங்களின் மனதில் எழலாம். முதல் பகுதியில் பல கேள்விகளை முன் வைக்க முயற்சிக்கிறேன். அதைத் தொடரும் பகுதிகளில் இந்த கேள்விகளுக்குப் பதில்கள் தர முயற்சி செய்வேன்.

  • சென்னை நகரின் ஒரு நாளைய மின்சார தேவை 2,000 மெகாவாட் (2011-ல்). பெரிய நகரம் என்றால் பல தேவைகள் இருப்பது சகஜம். நியூயார்க் நகரத்திற்கோ, ஒரு நாளைக்கு 15,000 மெகாவாட் வரை (2008-ல்) தேவைப்படுகிறது. யூரோப்பில் உள்ள ராட்சச LHC -ஐ இயக்கத் தேவை, நாளொன்றுக்கு 150 மெகாவாட். அதாவது, CERN இருக்கும் ஜெனிவா மாவட்டத்தின் 5-ல் ஒரு பங்கு மின்சாரம் இதற்கே செலவாகிறது. அதாவது, ஒரு 150,000 பெரிய அமெரிக்க வீடுகளுக்கு இந்த மின்சாரம் போதுமானது. கண்ணுக்கே தெரியாத ஒன்றைப் பற்றிய ஆராய்ச்சிக்கு இத்தனை சக்தித் தேவை என்ன?
  • 2012 -ல் CERN -ஐ நடத்த 1 பில்லியன் யூரோவை (ஏறக்குறைய 1.5 பில்லியன் டாலர்கள்) விட சற்று அதிகம் செலவாகிறது .) பல யூரோப்பிய நாடுகள் இதற்கு உதவுகின்றன. இங்குள்ள ராட்சச LHC – ஐ உருவாக்க, 6 பில்லியன் டாலர்களை விடச் சற்று அதிகம் செலவாயிற்று. அப்படிச் செலவு செய்வதால், யாருக்கு என்ன பயன்? பல நாடுகளின் சாதாரணக் குடிமக்களின் வரிப்பணத்தை ஏன் அரசாங்கங்கள் இப்படி செலவழிக்கின்றன?
  • ஸ்விஸ் நாட்டிற்கும், ஃப்ரான்ஸ் நாட்டிற்கும் இடையே பூமிக்கு அடியில் (100 மீட்டருக்கு கீழே) ஒரு 27 கி.மீ. தூரத்திற்கு ஒரு பெரிய சுரங்கம் தோண்டப்பட்டு, அதில் ராட்சச எந்திரங்களை எதற்காகப் பொறியாளர்களும், விஞ்ஞானிகளும் நிறுவியுள்ளார்கள்? உலகிலேயே மிக சிக்கலான எந்திரம் இதுதான் என்று உறுதியாகச் சொல்ல முடியும். ஏன் இந்த பெருமுயற்சி?
  • இந்த சோதனையில் உபயோகப்படுத்தப்படும் காந்தங்கள் உலகின் மிகப் பெரிய/சக்திவாய்ந்த காந்தங்கள். இந்த ராட்சச காந்தங்களுக்கு ஏராளமான உபசாரம். பயங்கரமாக குளிர்விக்கப்படுகின்றன. இவை, பெரும் மின்சார உறிஞ்சிகள். அத்துடன், மிகவும் விசேடமான பொருட்களால் தயாரிக்கப்படுகின்றன. உலகின் பல்வேறு உயர் தொழில்நுட்ப நிறுவனங்களால், பிரத்யேகமாய் CERN – க்காக உருவாக்கப்பட்ட காந்தங்கள் இவை. எதற்காக இத்தனை பெரிய/விசேட காந்தங்களை உபயோகிக்க வேண்டும்?
  • இங்குள்ள குளிர்சாதன எந்திரங்கள் உலகின் மிகப் பெரிய குளிர்விக்கும் எந்திரங்கள். அப்படி என்ன சகாராவிலா சோதனை நட்த்துகிறார்கள்? நமக்குத் தெரிந்த பிரபஞ்சத்தில் மிகவும் குளிரான ஸ்தலம் LHC தான். உலகின் மிகக் குளிரான இடத்தில் (அண்டார்டிகா) -90 டிகிரி செல்சியஸ் பதிவாகி இருப்பது சப்பை செய்தி. விமானத்தில் 30,000 அடிக்கு மேலே பறக்கும் போது உள்ள வெப்பநிலை -40 டிகிரி. நட்சத்திர மண்டலங்களுக்கு இடையே உள்ள வெட்ட வெளியில் உள்ள வெப்பநிலை ஏறக்குறைய -270 டிகிரி செல்சியஸ். LHC – ல் இதைவிடக் குளிர் அதிகம். பெளதிக விதிகள்படி, -273 (0 டிகிரி கெல்வின்) டிகிரியில் எல்லா அசைவுகளும் நின்று விடும். எதற்காக இந்த பயங்கரக் குளிர்?
  • முதல்கட்ட காந்தங்களை குளிர்விக்க தேவையான திரவ நைட்ரஜன், சொன்னால் நம்ப மாட்டீர்கள் – 12 மில்லியன் லிட்டர்கள். அத்துடன் 7 லட்சம் லிட்டர் திரவ ஹீலியமும் சேர்த்துக் கொள்ளுங்கள்! இந்த கொலைடரில் குளிர்விக்கப்பட்ட திரவங்கள் வெளியேறாமல் பாதுகாக்க 40,000 குழாய் இணைப்புகளை பொறியாளர்கள் கண்காணிக்கிறார்கள். எதற்கு இத்தனை கஷ்டப்படுகிறார்கள்?
  • சுவிஸ் நாட்டிற்கும், ஃப்ரான்ஸ் நாட்டிற்கும் இடையே பூமிக்கு அடியே 100 மீட்டர் ஆழத்தில் ராட்சச குழாய் ஒன்று ஓடுகிறது. இந்த குழாயில்- சொன்னால் நம்ப மாட்டீர்கள் – ஒன்றுமே இல்லை. பொறியாளர்கள் உயர் அழுத்த வெற்று இடத்தை (vacuum) உருவாக்க இத்தனை உழைத்துள்ளார்கள். எதற்காக 27 கி.மீ. -க்கு வெற்றிடம், அதுவும் பூமிக்கு 100 மீட்டர் ஆழத்தில்?
  • சூரியனின் மத்தியில் உள்ள வெப்பநிலை 15.7 மில்லியன் டிகிரிகள். இது, நம் அருகாமையில் உள்ள மிக அதிக வெப்பஸ்தலம். LHC -ல் இதைவிட 100,000 மடங்கு அதிக வெப்பத்தை உருவாக்கிறார்கள். எதற்காக இத்தனை வெப்பம் தேவை? இந்த வெப்பநிலையில் சுற்றியுள்ள எல்லாப் பொருள்களும் கருகிவிடாதா?
  • சுருங்கச் சொன்னால், LHC -இல் பிரபஞ்சத்தின் மிகக் குளிரான, மற்றும் மிக வெப்பமான நிலைகளைத் தாற்காலிகமாக உருவாக்க முடியும். இன்று பிரபஞ்சத்தில் அப்படிப்பட்ட நிலைகள் எங்கும் இல்லை என்று விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.

image-2

விளக்கங்களை அளிக்குமுன், விஞ்ஞானிகள் எந்த மாதிரி பிரச்சினைகளுக்கு விடை தேடுகிறார்கள் என்று பார்க்கலாம். முதலில், இவர்களின் தேடல், இயற்கையின் அடிப்படை அமைப்பைப் பற்றியது. குறிப்பாக, அதிலும், பொருட்களின் அமைப்பைப் பற்றியது. பிரபஞ்சத்தில் உள்ள யாவும் அணுக்களால் உருவாகியவை என்பது மிகப் பழைய செய்தி. அணுவின் கட்டுமானம் எப்படிப்பட்டது என்று ஆராய்வதில் மனிதனுக்கு மிகவும் சவாலான விஷயம். நம்முடைய அறிவிற்கு எட்டியவரை, ஒரு பொருளின் பிரிக்க முடியாத நுண் அமைப்பை அணு என்று முதலில் சொல்லி வந்தோம். அணுக்களைப் பற்றிய புரிதல் 20 -ஆம் நூற்றாண்டில் பல வித சோதனைகள் மூலம் கிட்ட ஆரம்பித்தது.

ஓரளவிற்கு பொருட்களின் கட்டுமானத்தைப் (basic structure of matter) பற்றிய அறிவு வளர வளர, அணுக்களுக்குள் என்ன இருக்கின்றது என்ற கேள்வி தோன்றவே அதையும் ஆராயத் தொடங்கியது விஞ்ஞான உலகம். இயற்கையின் செயல்பாடு ஓரளவிற்கு அணு அறிவினால் புரிந்தாலும், ஏராளமான இயக்க ரகசியங்கள் இன்னும் புதைந்து கிடப்பது தெளிவாகியது. முதல் கட்டமாக, அணுவிற்குள் நுண்துகள்கள் (sub atomic particles) இருப்பது பல சோதனைகள் மூலம் உறுதி செய்யப்பட்டது. ஆனாலும், இவற்றை புரிந்து கொள்ள பலவித புதிய உத்திகளும், கோட்பாடுகளும் தேவைப்பட்டன. 20-ஆம் நூற்றாண்டின் பெரும் விஞ்ஞான முன்னேற்றம் அணு நுண்துகள்களைப் பற்றிய புரிதலில் ஏற்பட்டது. ஆனால், இன்றுவரை, இயற்கையின் அணு அளவு இயக்கம் முழுவதும் மனிதனுக்கு புரியவில்லை. அத்துடன், மேலும் நமது அன்றாட வாழ்க்கையில் நிகழும் இயக்கங்களுக்கும், அணு அளவு இயக்கங்களுக்கும் பெரும் வித்தியாசம் இருக்கிறது. அத்துடன், வான்வெளியில் நட்சத்திரத் திரள்களின் இயக்கம் மூன்றாவது ஒரு பிரிவாக உள்ளது.

பெளதிகத்துறையில் என்றும் ஒரு தீராத தேடல், இந்த மூன்று இயக்கத்தையும் ஒரே கோட்பாட்டில் விளக்குவது. தனித்தனியாக நடந்து வந்த இம்முயற்சிகள் ஒரே சீரான பாதையில் ஆராய்ந்தால், இது கிட்டுமா? அப்படி ஒரு முயற்சி பலனளிக்குமா என்பது மிகவும் சர்ச்சைக்குரிய விஷயம். ஆனால், பல விஞ்ஞானிகள் இப்படித் தேடுவதைத் தவிர வேறு வழியில்லை என்கிறார்கள். இப்படி மூன்று சிந்தனையையும் இணைக்கும் ராட்சச முயற்சி CERN நடத்தும் ஆராய்ச்சி என்று தாராளமாக சொல்லலாம்.

image-3

அணுவின் கருவில் என்ன உள்ளது என்று ஓரளவிற்கு நமக்கு இன்று புரிந்திருந்தாலும், அந்தக் கருவினுள் உள்ள நுண்துகள்களை பிரிப்பது என்பது சாதாரண விஷயமல்ல. எப்படி ஒரு பெரிய பாறையை உடைப்பது சரியான கருவிகள் உருவாகும் வரை கடினமாக இருந்ததோ அதைவிட பல மடங்கு கடினமானது இயற்கையின் இந்த ராட்சச இணைப்பு சக்திகளைப் பிரிப்பது. கண்ணிற்கு தெரியாத மிக மிகச் சிறிய அளவில் இருந்தாலும், அணுக்கருவிற்குள் ராட்சச சக்திகள் இந்த நுண்துகள்களை இணைத்து வைத்துள்ளன. அந்த சக்திகளை கட்டுப்படுத்தி, துகள்களை விடுவித்து ஆராய்வது மனிதனின் விஞ்ஞான முன்னேற்றத்தின் உச்சி என்று சொல்லலாம்.

அணுக்களோ, கண்ணுக்கு தெரியாத அளவு சிறியவை. ஆனால், அதனுள் உள்ள அபார சக்தி (energy) மற்றும் எடை (mass) பற்றிய ரகசியங்களை அவ்வளவு எளிதில் அறிந்து கொள்வது முடியாத காரியம். இவ்வளவு சிறிய அணு துகள்களை எப்படிப் புரிந்து கொள்வது? அவற்றைப் பற்றிய பல கோட்பாடுகள் (scientific theory) இருந்தாலும், விஞ்ஞான உலகில், எதையும் சோதனை (experimental evidence) முறையில் நிரூபிக்க வேண்டும். அணு துகள்களை உடைத்துப் பார்ப்பது ஒன்றுதான் வழி. இப்படி, அணு துகள்களை உடைப்பது என்பது பிரபஞ்சம் தொடங்கிய சில மைக்ரோ நொடிகளில் நிகழ்ந்த ஒன்று. அதற்கு பின் இப்படி அந்த நிகழ்வுகள் ஏற்படவில்லை. ஆகவே, LHC – ல் நாம் பயணிப்பது, 15 பில்லியன் வருடங்கள் பின்நோக்கி. ஏனென்றால், பிரபஞ்சம் தோன்றி அத்தனை வருடங்கள் ஆகிவிட்டன.

சில நுண்துகள்கள் மிக அதிக வெப்பமான சூழ்நிலையில் உருவாகும். பிரபஞ்சம் தொடங்கிய சில வினாடிகளில் இப்படிப்பட்ட துகள்கள் உருவாகியிருக்கும் என்று விஞ்ஞானிகள் கணக்கிட்டுள்ளார்கள். அப்படிப்பட்ட சூழலை உருவாக்கவே LHC போன்ற எந்திரங்கள் இத்தனை கவனத்துடன், பெருட்செலவுடன், பிரம்மாண்டமாய் உருவாக்கப்பட்டுள்ளன.

பாகம் – 2
தவறான எண்ணங்கள் (myths)

யூரோப்பிய அணு ஆராய்ச்சிக் கழகம் சமீபத்தில் உருவான அமைப்பு.

image-4

LHC பற்றிய செய்திகள் சமீபத்தில் அதிகம் வெளிவருவதால் ஏற்பட்ட தவறான கருத்து இது. 1954 -இல் உருவான அமைப்பு CERN. உதாரணத்திற்கு, 1965 -இல் நோபல் பரிசு பெற்ற அமெரிக்க விஞ்ஞானி ஃபைன்மேன், (Richard Feynman) உடனே ஜெனீவா சென்று, CERN -ல் விஞ்ஞான உரையாற்றிவிட்டுத் தான் அமெரிக்கா திரும்பினார். CERN பற்றிய சரித்திர விடியோ இங்கே…

http://www.youtube.com/watch?v=Wk5mdMSvjvY

ஜெனீவாவில் உள்ள LHC ஒரு புத்தம் புதிய கண்டுபிடிப்பு.

மார்க்கெடிங் உலகில் ‘புத்தம் புதிது’ எல்லாம், எதற்கெடுத்தாலும் சகஜம். விஞ்ஞான உலகில் எப்பொழுதும் படிப்படியான முன்னேற்றம்தான். LHC எந்திரத்தில் பல உத்திகள் புதியவை. இந்த அமைப்பின் அளவும் முன்னைவிட மிகப் பெரியது. ஆனால், புத்தம் புதிய கண்டுபிடிப்பு என்று முழங்குவது எல்லாம் கொஞ்சம் ஊதிப் பெருக்கல்.

CERN இதுவரை என்ன சாதித்துள்ளது என்று சரியாக யாருக்கும் தெரியவில்லை.

அணு ஆராய்ச்சியின் மிக முக்கிய அமைப்புகளில் CERN -ம் ஒன்று. இது ஒரு பன்னாட்டு அமைப்பாக இருப்பதால், உலக அணு விஞ்ஞானிகளை ஈர்க்கும் ஒரு காந்தமாய் திகழ்கிறது. பல நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானிகள் வேலை செய்த/செய்யும் அமைப்பு இது. அணு ஆராய்ச்சியின் சரித்திரத்தில், 1950 -க்கு பிறகு CERN -னின் பங்கைக் குறிப்பிடாமல் யாராலும் பதிவு செய்ய முடியாது. இன்றைய அணு அமைப்பைப் பற்றிய அறிவில் CERN -க்கு பெரும் பங்கு உண்டு.

இந்த ஆராய்ச்சியிலிருந்து சமுதாயத்திற்கு உருப்படியாக எதுவும் கிடைத்த்தாகத் தெரியவில்லை.

image-5

பொதுவாக, அடிப்படை விஞ்ஞானம் (fundamental science) சாதாரண மனிதர்களின் பார்வையில், தொலை தூரத்தில் இருக்கும் விஷயம். இதனால் பலர் விஞ்ஞான ஆராய்ச்சியின் செலவைக் கண்டு அலுப்பாகச் சொல்லும் கமெண்ட் இது. எல்லா அடிப்படை விஞ்ஞான ஆராய்ச்சிகளும் சமுதாயத்திற்கு உடனே பயன் தருவதில்லைதான். இக்கட்டுரையை நீங்கள் படிப்பதற்குக் காரணமே CERN -ன் 1990 முயற்சி தான். விஞ்ஞானிகள் இடையே கருத்துப் பரிமாற்றத்தை எளிதாக்க உருவாக்கப்பட்ட உத்திதான் இணைய அமைப்பு. இன்று இதுவே உலகெங்கும் ராட்சச உருவெடுத்து, அடுத்த ரஜினி படத்தைப் பற்றிய நிமிடத்திற்கு நிமிட கருத்துப் பரிமாற்றம் செய்து கொள்கிறோம். ஃபேஸ்புக்கில் வழுக்கையை மறைக்க மொட்டையடித்துக் கொண்டது போன்ற உப்பு சப்பில்லாத சமாச்சாரத்தை உலகிற்குப் பறை சாற்றுகிறோம். சொல்வனத்தில் ‘விஞ்ஞான கணினி’ என்ற தலைப்பில் எழுதிய கட்டுரையில், எப்படி CERN ஏராளமான தகவலை (டேடாவை) கையாளுகிறது என்று எழுதியிருந்தேன். இது போன்ற உத்திகளை, ஒளிவு மறைவின்றி உலகில் யார் வேண்டுமானாலும் தெரிந்து கொள்ள வழி செய்கிறார்கள்.

சரி, இப்படி ஒன்றிரண்டு கண்டுபிடிப்புக்காக இப்படி ஏராளமாக செலவழிக்க என்ன தேவை?

image-6

நியாயமான கேள்விதான். ஆனால், சில பெரிய கண்டுபிடிப்புகள், சின்ன முதலீட்டினால் உருவாக்க முடிந்தவை அல்ல. உதாரணத்திற்கு, தொலைபேசி ஆராய்ச்சியில் எத்தனை முதலீடு செய்திருந்தாலும்
இணையத்தைக் கண்டுபிடித்திருக்க முடியாது. CERN -இல் உள்ள ஒரு விஞ்ஞானப் பிரச்சினையின் தீர்வு, இணையமானது. அதே போல, மிக அதிக தகவல் கையாளுதல் (big data handling) என்பதும் ஒரு CERN பிரச்சினைதான். இதன் தீர்வு உலகின் பல்வேறு வியாபார அமைப்புகளுக்கு இன்று உதவியாக உள்ளது. சிறு கணினி நிறுவனங்கள் எவ்வளவு முதலீடு செய்திருந்தாலும் இவ்வகைத் தீர்வுகளை உருவாக்கியிருக்க முடியாது. (சிலநேரமாவது) பெரிய தீர்வுகளுக்குப் பெரிய முதலீடுகள் தேவை. இன்று, நாம் மடிக்கணினி, செல்பேசி போன்ற கருவிகளை உபயோகப் படுத்த முக்கிய காரணம் அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சியில் முதலீடு என்றால் மிகையாகாது. உயரே செல்லும் ராக்கெட்டில் உள்ள ஒவ்வொரு விஷயமும் எடை குறைவானதாக இருக்க வேண்டும் என்ற உந்துதலில் உருவானதுதான் இன்றைய மின்னணுவியல். இன்று நம் அன்றாடப் புழக்கத்தில் உள்ள ஏராளமான இலேசான பொருட்கள் இந்த வகை முயற்சிக்காகப் பலப் பல உறுதியான, நாள்பட உழைக்கும், எளிதில் சேதமாகாத, ஆனால் மிக இலேசான மூலப் பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டதால் நமக்குக் கிட்டுகின்றன. பொருள் அறிவியல் (Material Science) என்ற துறைக்கே வலுவான உந்துதல் கொடுப்பவை இத்தகைய பெரும் முயற்சிகளே, முதலீடுகளே.

சரி, குவாண்டம் பெளதிகத்தினால் இன்னும் சமுதாயம் முழுவதும் பயன் பெற்றதாகத் தெரியவில்லை. அதற்குள், ஏன் இது போன்ற வீண் ஆராய்ச்சிகள்?

image-7

குவாண்டம் பெளதிகம் என்பது ஒரு நூறாண்டுக்கு மேல் விஞ்ஞானிகளின் உழைப்பினால் உருவாக்கப்பட்டத் துறை. இதனால், நம் நுண் அளவு புரிதல் (understanding of the small) வளர்ந்துள்ளது. மின்னணுவியல் துறையின் வளர்ச்சியால் இன்று கணினி, செல்பேசி, தட்டை திரை டிவி, டிஜிட்டல் காமிரா, தொலைத்தொடர்பியல் யாவும் வளர்ந்து சமுதாயத்திற்கு உதவியுள்ளன. 20 -ஆம் நூற்றாண்டின் பெரும் மனித வளர்ச்சிக்கு உதவியது குவாண்டம் பெளதிக துறையை அடிப்படையாய் கொண்ட பல துறைகள் என்றால் மிகையாகாது. இந்த ஆய்வுகள், கண்டுபிடிப்புகளிலிருந்து நமக்குக் கிட்டக் கூடிய பயன்கள் ஏதோ தீர்ந்து போய்விடவில்லை. அதே நேரம் இத்தகைய ஆய்வுத் துறைகளில் செலவழிக்கப்படும் அனைத்தும் நமக்குப் பலன்களை அளிக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பதும் எதார்த்தமாகாது, நியாயமும் இல்லை. மனித முயற்சியில் எதிர்காலத்துக்கான முன்னெடுப்புகள் அனைத்தும் பூரண நல்விளைவுகளையே தர வேண்டும் என்பது ஒரு முன் நிபந்தனையாக இருந்தால் மனித குலம் இத்தனை தூரம் முன்னேறிய வாழ்வைப் பெற்றிருக்குமா என்பது ஐயம்தான். கணினிகளுக்கு இன்னும் அதிக சக்தியும், புதிய செயல்முறைகளும் இன்றும் தேவை. இதற்கென்று உலகில் பல்வேறு ஆராய்ச்சிகள் நடந்த வண்ணம் உள்ளன. உதாரணத்திற்கு, கனடாவில் உள்ள குவாண்டம் கணினியியல் கழகம் அடுத்த கட்ட கணினி தேவைகளை குவாண்டம் முறைகளை கொண்டு எப்படி உபயோகிப்பது என்று ஆராய்ச்சி செய்து வருகிறது. இதனால், இன்றைய கணினிகளைவிட மிகச் சக்தி வாய்ந்த, பாதுகாப்பான, மற்றும் சிறிய கருவிகளை எதிர்காலத்தில் சமூகம் உபயோகிக்க உதவும் என்பதில் சந்தேகமில்லை. பொதுவாக, பயன்பாட்டு அறிவியல் (applied science) வளர, அடிப்படை அறிவியல் வளர்ச்சி (fundamental science) அவசியம். ஓரளவிற்கு மேல், அடிப்படை அறிவியல் வளரவில்லையெனில். பயன் எதுவும் யாருக்கும் இருக்காது.

CERN -ல் நடக்கும் ஆய்வுகள் நம் பூமியை அழித்துவிடும். இவர்களை உடனே தடுக்க வேண்டும்.

1932-ல் ஜான் காக்கிராஃப்ட் (John Cockcroft) மற்றும் எர்னஸ்ட் வால்டன் (Ernest Walton) முதன் முறையாக அணுவை பிளந்து காட்டிய பொழுது, இங்கிலாந்தின் செய்திதாள்கள், இதே பல்லவியைத்தான் பாடின. ”உலகையே அழித்துவிடும் சக்தி, இதோ லண்டனில்” என்று சர்ச்சையைக் கிளப்பினார்கள். அதன் பின், பல மடங்கு சக்தி வாய்ந்த அணுத்துகள் பிளவு சாதனங்கள் (atomic particle accelerators) உருவாக்கப்பட்டுள்ளன. இடைப்பட்ட காலத்தில் குவாண்டம் பெளதிகத்துறை பெரிதும் முன்னேறி சமுதாயத்திற்கு நல்ல முன்னேற்றத்தைத் தந்துள்ளதே தவிர உலகை அழித்துவிடவில்லை. மேலும், CERN அமைப்பு, அருமையான பாதுகாப்பு முறைகளை கட்டுமான முறைகள் மற்றும் இயக்க முறைகளில் (structural and operational measures) பின்பற்றி வருகிறது. பல அரசாங்கங்கள் இதில் சம்பந்தப்பட்டுள்ளதால், இந்தக் கேள்விகளை முதலீடு செய்யும் அரசாங்கங்கள் கேட்டு சரியான பதில் கிடைத்ததாலேயே தொடர்ந்து முதலீடு செய்து வருகின்றன.

CERN – ல் விஞ்ஞானிகள், கருந்துளைகளை (black holes) உருவாக்க முடியுமாம். வானியல் ஆராய்ச்சியில் கருந்துளைகள் எல்லாவற்றையும் (அதாவது எல்லா பொருட்களையும்) விழுங்கிவிடும் என்று விஞ்ஞானிகள் சொல்கிறார்களே. ஏன், இந்த விஷப்பரிட்சை?

கருந்துளைகளை LHC -ல் உருவாக்க முடியும் என்பது உண்மைதான். ஆனால், இவை மிகச் சிறிய அணு அளவு சமாச்சாரம். விண்வெளியில் உருவாகும் ராட்சசக் கருந்துளையுடன் இவற்றைக் குழப்பிக் கொள்ளக் கூடாது. அத்துடன், அணு அளவு கருந்துளைகள் தாற்காலிகமானவை.

இவ்வகை ஆராய்ச்சியில் மிக அதிக அளவு சக்தியுடன் அணுத் துகள்கள் மோதுவதால், கதிரியக்க அபாயம் உள்ளது. கதிரியக்க அபாயத்தால், மனிதர்களுக்கு புற்றுநோய் போன்ற சமாச்சாரங்கள் வர பெரும் வாய்ப்பு உள்ளது.

முதலில், இவ்வகை மோதல்கள் பூமிக்கு அடியில் 100 மீட்டர் ஆழத்தில் நடக்கின்றன. மேலும் ஏராளமான கான்கிரீட் இதன் கட்டுமானத்தில் உள்ளது. மேலும் முழு அமைப்பிலும் பல வகை பாதுகாப்புகள் உள்ளன. கடைசியாக, அணுத்துகள் மோதல் நடக்கும் சமயத்தில் யாரும் சுரங்கத்திற்குள் அனுமதிக்கப்படுவதில்லை. எல்லா சோதனை அளவுகளையும் கணினிகள் பார்த்துக் கொள்கின்றன.

இந்த வித அணுப் பரிசோதனைகள் மிகப் பெரிய அழிவு ஆராய்ச்சியின் ஒரு அழகான வெளிப்பூச்சு. ஏதாவது புதிய அணு ஆயுதத்தை மேற்குலகம் தயாரிப்பதற்கான ஏற்பாடு இது.

image-8

அணு ஆராய்ச்சி என்றவுடன் வழக்கமாக ஏற்படும் சந்தேகம்தான் இது. CERN ஒன்றும் ஈரான்/வட கொரியா போன்ற மூடுமந்திர அணு ஆராய்ச்சியல்ல. 1954 முதல் அணு ஆராய்ச்சியில் வெற்றிகள் பல கண்டுள்ள அமைப்பு இது. அத்துடன், மிக முக்கியமாக எந்த ஒரு நாட்டிற்கும் சொந்தமான அமைப்பில்லை இது. UNESCO -வினால் 2-ஆம் உலகப் போருக்குப் பிறகு ஏற்படுத்தப்பட்ட அமைப்பு, CERN. 20 ஐரோப்பிய நாடுகள் CERN -ன் வருடாந்திர ஆராய்ச்சி செலவை ஏற்கின்றன). இவை முதல் தட்டு நாடுகள். அடுத்தபடியாக, பார்வையாளர் தகுதி பெற்ற நாடுகளில், அமெரிக்கா, இந்தியா, ஜப்பான், ரஷ்யா மற்றும் டுர்க்கி அடங்கும். உறுப்பினர் அல்லாத பல நாடுகள் அடுத்தபடியாக உள்ளன. ஒரு CERN வெளியீடுபடி உலகின் அணுத்துகள் ஆராய்ச்சியாளர்களில் பாதி விஞ்ஞானிகள் (ஒரு 10,000 விஞ்ஞானிகள்) ஆராய்ச்சி சம்பந்தமாக வருகை தருகிறார்கள் (visiting scientists) . இவர்கள் 608 பல்கலைக்கழகங்களிலிருந்து, வருகிறார்கள். – ஏறக்குறைய 113 நாட்டவர்கள். இதைப்போன்ற ஒரு பன்னாட்டுக் கூட்டு முயற்சி இன்றைய விஞ்ஞான உலகில் இருப்பதாகத் தெரியவில்லை. இத்தனை அமைப்புகளையும் மீறி, ரகசிய அணு ஆயுதம் என்பது மிகவும் தொலைவான விஷயம்.

ஏதோ “கடவுள் அணுத்துகளாமே” – எதற்காக இதை விஞ்ஞானிகள் விடாப்பிடியாக தேடுகிறார்கள்?

image-9

1962 -ல் பீட்டர் ஹிக்ஸ் என்ற விஞ்ஞானி, ஹிக்ஸ் மண்டலம் (Higgs field) என்ற ஒன்றை உலகிற்கு அறிமுகப்படுத்தினார். இந்த மண்டலம் பிரபஞ்சம் முழுவதும் உள்ளதாம். இந்த மண்டலத்தின் அடிப்படை பண்பு என்னவென்றால், பொருட்களுக்கு திணிவைக் (Mass) கொடுக்கினறது. அதாவது, ஹிக்ஸ் போஸான் என்ற அணுத்துகள் மிக முக்கியமான மனித கேள்விக்கு பதிலளிக்கும் என்று நம்பப்படுகிறது – அதாவது, பொருட்களுக்கு எப்படி திணிவு உண்டாகிறது? லியான் லெடர்மேன் (Leon Lederman) என்ற நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி, தன்னுடைய உரையில், ”விஞ்ஞான உலகின் மிகப் பெரிய சவால் இந்த ஹிக்ஸ் போஸானைக் கண்டுபிடிப்பது. பிரபஞ்சத்தின் அடிப்படை வடிவமைப்பு பற்றிய நம்முடைய அறிவு இந்த கடவுள் அணுத்துகளை கண்டு பிடிப்பதில் அடங்கியுள்ளது. கடவுளைப் போல விஞ்ஞானிகளும் இதை பல வருடங்களாக தேடித்தேடி பிரமித்து போயுள்ளார்கள். உண்மையில் இதை சாத்தான் அணுத்துகள் என்றுதான் சொல்ல வேண்டும். ஏனென்றால், விடாமல் விஞ்ஞானிகளுக்கு கையில் கிட்டாமல் நழுவிவிடும் வில்லன் இது” என்றார். இவர் சொன்ன மற்ற விஷயங்கள் எல்லாம் மறக்கப்பட்டு, ஊடகங்களில் ’கடவுள் அணுத்துகள்’ பெயர் மட்டும் நிலைத்து விட்டது. விஞ்ஞானிகளைப் பொறுத்த வரையில் அது, இன்னொரு அணுத்துகள் – அவ்வளவுதான்! ஜூலை 2012 -ல் விஞ்ஞானிகள் LHC – யில் இதை முதன் முதலாக உணர்விகளில் (particle detectors) கண்டுபிடித்துள்ளதாக CERN அறிவித்துள்ளது. இன்னும் இதன் முழு இயல்புகளும் கண்டறியப்பட வேண்டும்.

http://www.youtube.com/watch?v=649iUqrOKuE

(தொடரும்)