வாசகர் மறுவினை

அறிவியலும், சந்தை அறிவியலும்

அண்மையில் சொல்வனம் இதழில் நான் படித்தவற்றில்  ஆகச்சிறந்த கட்டுரைகளில் ஒன்று. இணையம் மற்றும் அச்சு ஊடகங்களால் பரபரப்பிற்காக திரிக்கப்பட்டு வெளியிடப்படும் அறிவியலின் தற்கால நிலையையும், அறிவியல் துறையில் இல்லாமலேயே அறிவியலைப் பற்றி எழுதும் அரைபண்டிதர்களைப் பற்றியும் அறிவியல் இயங்கும் விதம் பற்றிய அறிவு இல்லாமல் அங்கலாய்ப்பவர்களைப் பற்றியும் நகைச்சுவையுடன், அண்மைய உதாரணங்களோடு சாட்டையடியாக எழுதியிருக்கிறார் அருண்.

இதில், கடவுள் துகள் மற்றும் ஒளியை மிஞ்சும் நியூட்ரினோ செய்திகளின் பின்விளைவுகள் என்னைப்போன்ற அரைவேக்காட்டு அறிவியல் ஆதரவாளர்களைப் படுத்திய பாடு கொஞ்சநஞ்சமல்ல…எங்கு போனாலும், “என்னப்பா, உங்க ஐன்ஸ்டீன் அம்பேலாமே?” ரீதியான எள்ளல் துள்ளும் துக்க விசாரிப்புக்களைத் தாங்கிக்கொண்டு, எமக்குத் தெரிந்த அரைகுறை பரப்பு அறிவியலை வைத்து விஷயத்தை விளக்க (?!) முயல்வதற்குள் தாவு தீர்ந்துவிடும்… ஹிக்ஸ் போஸான் துகளுக்கு ‘கடவுள் துகள்’ என்று புனைபெயர் வைக்கப்பட்டதே இந்த சந்தை அறிவியலில்தான் என்றும் சொல்கிறார்கள்.

உலகின் முக்கிய நாடுகள், ஆராய்ச்சிக்கென்று ஒதுக்கும் பண ஒதுக்கீட்டை குறைத்துவரும் இவ்வேளையில், அதிக ஒதுக்கீட்டுக்காக ஆராய்ச்சி முடிவுகளை பரபரப்பாக வெளியிடும் ஆராய்ச்சி நிறுவனங்களின் நிலையையும், மிகையாக பிரபலப்படுத்தப்பட்ட ஆய்வுகளின் முடிவுகள் தவறாகுமிடத்து, ஆய்வாளர்கள் எதிகொள்ளும் மிகையான பிரச்சனைகளையும் சொல்லியிருக்கிறார்.

இவ்வாறான சந்தை அறிவியலை நம்பி பலரும் ஏமாறும் பிறரையும் ஏமாற்றும் காலத்தில், இவ்விடயத்தை தெளிவாக விளக்கி கட்டுரை வெளியிட்ட சொல்வனத்திற்கு எனது நன்றிகள். இவ்வாறான கிலியூட்டும் பரபரப்பு அறிவியல் மெயில்களை கிண்டல் செய்து ‘Ban Dihydrogen Monoxide’ எனும் தலைப்பில் Dihydrogen Monoxide என அழைக்கப்படக்கூடிய தண்ணீரின் தீமைகள் பற்றிய கட்டுரையொன்று 1988 இலிருந்தே இணையத்தில் அனுப்பப்படுவதாகவும் அறியமுடிகின்றது. அண்மையிலும் 2012 உலக அழிவைப் பற்றி நாசா வெளியிட்டதாக ஒரு செய்தி (?!) விவாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது.

– அபராஜிதன்.

o000o

அறிவியலும், சந்தை அறிவியலும் அருண் நரசிம்மன் கட்டுரை:

//சந்தை அறிவியலில் பகிரப்படும் ஒரு விஷயத்தின் உண்மை நிலை என்ன என்பதை எப்படி அறிவது? நேரடியாக ஆராய்ச்சிக் கட்டுரையைப் படித்துப் பார்த்துத் தெளிவதுதான் சிறந்த வழி//

ஆம். ஆனால் சில வேளைகளில் ‘பொய்யுடைக்கும்’ சில வலைத்தளங்களிலும் சென்று பார்த்து சோதிக்கலாம்.  இவற்றில் ஒன்று. ‘சீனப் பெருஞ்சுவர் ஒன்றுதான் வானவெளியிலிலிருந்து பார்க்கக்கூடிய ஒரே மனிதக் கட்டுமானம்’ மாதிரியான அபத்தங்களை விளக்கும்.

ரெ.கார்திகேசு.

o000o

அன்புள்ள சொல்வனம் ஆசிரியர்களுக்கு,

சுகா எழுதிய ‘தேவனின் கோயில்‘ அனுபவக் கட்டுரை பிரமாதம். மிகவும் ரசனையான பதிவு. இப்படியாக ஒவ்வொரு பாட்டுக்கும் அவர் ஒரு கட்டுரை எழுத வேண்டும் எனும் பேராசை எழுகிறது. நினைவில் தொலைந்து போன இவ்வகைப் பாடல்கள் நம்முன் இசையை மட்டும் நிறுத்துவதில்லை என மீண்டும் மீண்டும் தோன்றச் செய்யும்படியான எழுத்து. மிக்க நன்றி.

நன்றி,

கிரிதரன் ராஜகோபாலன்

o000o

அருண் நரசிம்மன் எழுதிய அறிவியலும் சந்தை அறிவியலும் என்ற கட்டுரையைப் படித்தேன்.

மிகவும் அற்புதமான கட்டுரை. சந்தை அறிவியல் என்றுமே இருந்திருக்கும் என்றுதான் கருதுகிறேன். ஆனால் இந்த தகவல் யுகத்தில் அதன் வீச்சு அதிகம்.அது குறித்து ஒரு பார்வையை உருவாக்கிய அருண் நரசிம்மனின் கட்டுரை உண்மையிலேயே மிகவும் அருமையாக உள்ளது.

அவரது பணி தொடரட்டும்.

சொல்வனம் தமிழில் அறிவியல் சம்பந்தமான விசயஙகளை, வேறு எந்த இணைய தளங்களிலும் இல்லாத அளவுக்குத் தெளிவுடனும், கூர்பார்வயுடனும், தனித்தன்மையுடனும் தருகிறது. உங்களது பணிக்குத் தமிழ் சமூகம் கடமைப் பட்டுள்ளது.

இவண்
சொ.பிரபாகரன்

o000o

letter-writing-envelopes-and-stamps1