மகரந்தம்

‘அனானிமஸ்’

m1

காஸா போரில் பல கடும் பிரச்சினைகளின் உண்மை முகங்கள் தெரிய வருகின்றன. உலக நாடுகளின் பல சாய்வுகளும் புலப்படுகின்றன. சில நாடுகள் இரண்டு பக்கமும் பங்கெடுக்கும் நிலையில் உள்ளனர். இவற்றின் நடுவே, எங்கும் வெடிகுண்டுகளும், ராக்கெட்டுகளும் வெடித்துக் கொண்டிருக்கையில் அதிகம் வெளித் தெரியவராத போர் ஒன்றும் நடக்கிறது. உலகில் இப்போது நாடுகள், அவற்றின் ராணுவங்களைத் தவிர வேறொரு சக்தியும் உருவாகி உலவுகிறது. நிஜமாகப் பார்த்தால் இப்படி நாடுகளின் வடிவுகளைத் தாண்டிய பல சக்திகள் சில பத்தாண்டுகளாக உலக அரசியல் இழுபறிகளில் பங்கெடுத்து வந்திருக்கின்றன, அதை விவரிக்க நெடிய கட்டுரை தேவைப்படும் என்பதால் இந்தப் போரில் பங்கெடுக்கும் ஒரு உலக சக்தியை மட்டும் பார்க்கலாம். அனானிமஸ் எனப்படும், அதாவது அனாமதேயம் என்று பொருள்படும் இங்கிலீஷ் சொல்லைத் தம் கூட்டத்தின் பெயராகக் கொண்ட, ஒரு இயக்கம் தற்போது பெருமளவும் மேலை நாடுகளிலும், மேலை நாடுகளின் அரசியல் நடவடிக்கைகள் அதிகம் நடைபெறும் நாடுகளிலும் செயல்பட்டு வருகிறது.

இந்தப் போரில் ’அனானிமஸ்’ குழுவைச் சார்ந்தவர்கள் உலகெங்கிலும் இருந்து இஸ்ரேலின் பல தகவல் தொடர்பு சாதன நிறுவனங்களையும், ராணுவக் கணினிகளையும், இதர கணினிகளையும் தாக்கி வருவதாகச் செய்தி வெளியாகி இருக்கிறது. பல மிலியன் தாக்குதல்களைச் சில நாட்களாக இந்தக் குழுவின் பன்னாட்டு உறுப்பினர்கள் நடத்துவதாக கார்டியன் பத்திரிகை சில நாட்கள் முன்பு தெரிவித்தது.

சமீபத்தில்,அமெரிக்காவின் ’சலோன்’ பத்திரிகையில், இந்தக் குழு சமீபத்தில் அமெரிக்காவின் மோசமான வலது சாரி இயக்கங்களுக்கு கருத்தியல் ஆலோசகராகவும், நடைமுறையில் சகுனியாகவும் பல பத்தாண்டுகளாகச் செயல்பட்டு வரும் கார்ல் ரோவ் என்ற ஒரு அரசியல் சூதாடியின் தந்திரங்களை முறியடிதது தேர்தலில் வாக்குப் பதிவு எந்திரங்கள் மூலம் திருட்டு வேலை நடக்க விடாமல் தடுத்ததாக ‘அனானிமஸ்’ குழு தெரிவித்ததைப் பற்றிய செய்தி வெளியாகி இருக்கிறது. சமீபத்து நாடு தழுவிய தேர்தலில் குறிப்பாக அதிபர் தேர்தலில் வலது சாரி வேட்பாளரான மிட் ராம்னிக்கு ஆதரவாகத் தேர்தலைத் திருப்ப கார்ல் ரோவ் மற்றும் இதர பின்னிருந்து இயக்கும் அரசியல் ஆலோசகர் கூட்டத்தின் பல வாக்குகளைத் திருடும் முயற்சிகளைத் தாம் முறியடித்ததாக அனானிமஸ் தெரிவித்திருப்பதைப் பற்றிய செய்தியில் சலோன் பத்திரிகை பல சந்தேகங்களைத் தெரிவித்திருக்கிறது. அவை என்னவென்று இந்தச் செய்தியில் பாருங்கள்.

http://www.salon.com/2012/11/20/did_anonymous_stop_rove_stealing_the_election/

OoO


பன்னாட்டு நிறுவனங்களின் நிதியாதாரங்கள்

பன்னாட்டு நிறுவனங்களைத் தீவிர அச்சத்துடன் பார்ப்பவர்களின் சந்தேகங்களை உறுதி செய்யும் தகவல் இது : உலகில் உள்ள 43,000 பன்னாட்டு நிறுவனங்களின் நிதியாதாரங்களை ஆராய்ந்த ஆய்வுக்குழு ஒன்று அதிர்ச்சியளிக்கும் முடிவுக்கு வந்திருக்கின்றது : இந்த நாற்பதாயிரம் பன்னாட்டு நிறுவனங்களும் அவற்றின் மையத்தில் உள்ள 1318 நிறுவனங்களுக்கு உரிமையானவை.

இந்த 1318 நிறுவனங்களுக்கே நாற்பதாயிரம் பன்னாட்டு நிறுவனங்களின் மொத்த வருவாயில் 80% போய் சேருகிறது. இந்த 1318 பன்னாட்டு நிறுவனங்களும்கூட 147 நிறுவனங்களின் கட்டுபாட்டில் உள்ளன.

இந்த 147 நிறுவனங்களும் கூட ஒன்றோடொன்று இறுக்கமாகப் பிணைக்கப்பட்டிருக்கின்றன. இவை ஒன்றிலொன்று முதலீடு செய்திருக்கின்றன. பன்னாட்டு நிறுவனங்களின் சொத்தில் 40% இவற்றின் கையில் உள்ளது – பன்னாட்டு நிறுவனங்களில் நாற்பது சதவிகித நிறுவனங்களை ஒரு சதவிகிதத்துக்கும் குறைவான நிறுவனங்களே நிர்வகிக்கின்றன. இது உலக பொருளாதாரத்துக்கு ஒரு மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருக்கிறது – இந்த ராட்சத நிறுவனங்களில் ஒன்று பாதிக்கப்பட்டாலும்,  அதன் சீர்கேடு துணை நிறுவனங்களுக்குத் தொற்றி உலகப் பொருளாதாரத்தையும் அழிக்கக் கூடும் என்று பொருளாதார நிபுணர்கள் கருதுகிறார்கள்.

இது குறித்த விரிவான கட்டுரை இங்கே இருக்கிறது :

http://www.alternet.org/world/no-conspiracy-theory-small-group-companies-have-enormous-power-over-world?paging=off

OoO


கூகுளின் புதிய புத்தக வருடி

ஒரு வாக்குவம் கிளீனர், கடையில் கிடைக்கும் கானன் ஸ்கானர், சிலபல உலோகத் தகடுகள் – இவை போதும். கிர்டாஸ், ட்ரெவண்டஸ் போன்ற நிறுவனங்களின் பல ஆயிரம் டாலர் விலையுள்ள உயர் ரக ஸ்கானர் செய்யும் வேலையை இந்த1500 டாலர் மதிப்புள்ள ஸ்கான்னர் செய்து கொடுத்துவிடும். ஒன்றரை மணி நேரத்தில் ஆயிரம் பக்க அளவுள்ள புத்தகத்தின் பக்கங்களைத் திருப்பி பைண்டிங்கை சேதப்படுத்தாமல் பத்திரமாகத் திருப்பித் தந்துவிடும். இந்த ஸ்கான்னரை வடிவமைத்தவர் கூகுள் நிறுவனத்தைச் சேர்ந்த ஒரு பொறியாளர். இதுவரை எழுபது லட்சம் புத்தகங்களை ஸ்கான் செய்துள்ள கூகுள், இதற்கென்றே ஒரு கருவியை வடிவமைத்தது – அதில் இன்ஃப்ரா ரெட் ப்ரொஜக்டர், இன்ஃப்ரா ரெட் காமரா போன்ற உயர் அறிவியல் சங்கதிகளும் உண்டு. அதை அனைவரும் பயன்படுத்த இயலாது என்பதால் இந்த எளிய மாற்றுக் கருவியை வடிவமைத்துள்ளது கூகுள். இதன் வடிவமைப்பு, செயல்பாடு போன்ற அனைத்து விவரங்களும் ஒப்பன் ஸோர்ஸ் என்று சொல்லப்படும் தொழில்நுட்பப் பிரிவில் கிட்டுகின்றன – இது அனைவர்க்கும் சொந்தம். இதை வடிவமைத்துப் பயன்படுத்தவோ விற்பனை செய்யவோ நாம் யாருக்கும் கட்டணம் கொடுக்க வேண்டியதில்லை. இது குறித்த விவரங்கள் இங்கே :

http://www.wired.com/wiredenterprise/2012/11/google-book-scanner/

OoO


உயிர்களின் ஏழு அடிப்படை கோட்பாடு

இயற்பியல் விதிகள் அனைத்தையும் ஒரே சமன்பாட்டில் மூட்டை கட்டிவிட வேண்டும் என்பது ஐன்ஸ்டீன் காலம்தொட்டு இயற்பியல் அறிவியலாளர்களின் லட்சியமாக இருந்திருக்கிறது, இதிலேதும் பெரிய வெற்றி பெற்றதாக இதுநாள் வரை தெரியவில்லை.

அண்மையில் ஹிக்ஸ் போசோன் எனும் துகளைக் கண்டுபிடித்தபோது அதன் மூலம் இந்த மாபெரும் ஒருங்கிணைப்புக் கோட்பாட்டின் நிழலையாவது தொட்டு விட்டோமோ என்று சந்தேகத்துடன் நம்பத் தொடங்கியிருக்கின்றனர்.

அறிவியல் என்பதே சிக்கலான விஷயங்களுக்கு எளிமையான துவக்கங்களைத் தருவதாக இருக்கிறது – இன்னும் இன்னும் என்று எளிமையை நோக்கிச் சென்று கொண்டிருக்கின்றனர். மரபியல், மக்கள்தொகை, பரிணாம வளர்ச்சி, கற்றல், மூளையின் செயல்பாடு, பண்பாடு என்று உயிர் சம்பந்தப்பட்ட சகல விஷயங்களையும் விளக்கத்தகுந்த ஏழே ஏழு அமைப்புக் கோட்பாடுகளைதான் இயற்கை பயன்படுத்துகிறது என்று எழுதுகிறார் என்ரிகோ கோய்ன். வேறுபாடு (ம்யூடேஷன்), பாரம்பர்யம் (டிஎன்ஏ ரெப்ளிகேஷன்), கூட்டமைப்பு (எந்த ஒரு மக்கள்தொகையிலும் மாற்றங்களை சமாளிக்கும் மரபணுக்களின் எண்ணிக்கை காலப்போக்கில் அதிகரிக்கும்), போட்டி, கூட்டுறவு (புரதங்கள் டிஎன்ஏ பேஸ்களின் கூட்டுறவில்தான் உருவாகின்றன), செழுமை (நான்கு டிஎன்ஏ பேஸ்களும் இருபது அமினோ ஆசிட்களும்தான் உலக உயிர்த்தொகை அனைத்துமாய் விரிந்திருக்கிறது), மீளுருவாக்கம் (இயற்கைத் தேர்வும் பரிணாம வளர்ச்சியும்) – இவையே அந்த ஏழு அமைப்புக் கோட்பாடுகள் என்கிறார் கொய்ன். இதிலும்கூட இயற்கையில் போட்டிக்கும் கூட்டமைப்புக்கும் ஏற்படும் முரணியக்கம்தான் முக்கியமானது என்கிறார் அவர். இங்கு துவங்கி உயிர் வாழ்வின் ரகசியத்தை விவரிக்கும் இப்புத்தகம் குறித்து சொல்வனம் வாசகர்களாலும் எழுத முடியும் – ஆனால் டைம்ஸ் ஹையர் எஜுகேஷன் என்ற இதழில்தான் வந்திருக்கிறது.

http://www.timeshighereducation.co.uk/story.asp?sectioncode=26&storycode=421161

OoO


ஒரு நாட்டை உடைக்க பத்து வழிகள்

நாடு என்ற கருத்து இந்தியாவில் பன்னெடுங்காலமாக இருந்து வருகிறது. ஆனால் இதை  ‘நேஷன்’ என்ற வார்த்தையாகவும், நிலப்பரப்பின் வருணனையாகவும் தாங்கள் கண்டுபிடித்து  உலகுக்குக் கொடுத்ததாக மேற்கின் வரலாற்றாளரும், பல சமூக ஆய்வாளர்களும் சொல்கிறார்கள். அதை மேற்கின் சமூக ஆய்வுத் துறைகளில் பயின்ற இந்திய ஆய்வாளர்கள் ஆமோதிக்கிறார்கள்.

m2

ஆனால் வரலாறு என்பது பல வகைத் திருகல்கள் கொண்டது. காலனியத்தில் பிடிபட்ட நாட்டினருக்கு அறிவுப் பாரம்பரியம் என்பதே இல்லை, அவர்கள் வெறும் களியாட்டக் கூட்டத்தினர், நாகரீகமே அற்ற காட்டுவாசிகள், வன்முறையாளர், மனித மாமிசம் தின்னும் வெறியர், கருப்பர், சாத்தானின் கையாட்கள், தவிர வரலாற்றுணர்வும், இலக்கியமும், தத்துவமும் அற்ற சதைப்பிண்டங்கள் என்றெல்லாம் வருணித்துத் தம் சுயப்பிரதாபத்தில் மகிழ்ந்து கொண்டிருந்த மேற்கின் சிந்தனையாளர்களும், பிரஜைகளும், ஆள்வோரும் சமீபத்தில் அடிவயிற்றில் நெருப்போடு உலவத் துவங்கி இருக்கிறார்கள். ஏன்? அசைக்கமுடியாத, கரையாத, எந்த ஆபத்தாலும் நெருங்க முடியாத நாகரீகங்கள், வளமான மக்கள் சமுதாயங்கள், பொறியியல் சிகரங்கள், அறிவியல் மலைகள், தத்துவ சிகாமணிகள் என்றெல்லாம் கருதப்பட்ட மேற்கின் ‘நாடுகள்’ பல இன்று பண்டை சமுதாயத்தில் நிரம்பி வழிந்த சிறுகுழு மனோபாவத்தால் பீடிக்கப்பட்டு மொழி, இனக்குழுக்களாக உதிரத் துவங்கி இருக்கிறார்கள். யூகோஸ்லாவியாவில் சில பத்தாண்டுகள் முன்பு துவங்கிய ஒரு பிரிவினை நோய் இன்று மேற்கு யூரோப்பில் பரவலாக எங்கும் தெரிவதோடு, உச்சத்திற்கே வரத் துவங்கி இருக்கிறது. பிரிவினை நோய் பீடிக்காத நாடுகள் மிகச் சிலவே. கிரீஸ், ஸ்பெயின், பெல்ஜியம், பிரிட்டன், ஏன் ஜெர்மனியில் கூட, ரஷ்யா பற்றிச் சொல்லவே வேண்டாம். என்றிப்படி நோய் பரவிக் கொண்டிருக்கிறது. பழைய கிழக்கு யூரோப்பில் இது பரவி பல பத்தாண்டுகள் ஆகி விட்டன. சமீபத்தில் உலக ஏகாதிபத்தியங்களில் ஆகச் சிறந்த, வலுவான இரும்புக் கோட்டை எனும் அமெரிக்காவில் இந்த நோய் பரவத் துவங்கியாயிற்று.

ஆசிய ஆஃப்ரிக்க நாடுகளில் எல்லாம் பிரிவினை வாதத்தை விதைக்கவோ, வளர்க்கவோ உதவிய அமெரிக்கா, இன்று தானே இந்தப் பிரிவினை வாதத்தைச் சந்திக்கத் துவங்கி இருப்பது செய்த கர்மம் துரத்தும் என்ற கருத்துக்கு வலு சேர்க்கிறது.

யூகோஸ்லாவியா, ரஷ்யா, இந்தியா, இலங்கை, சூடான், என்று பல நாடுகளில் பிரிவினையை ஊக்குவித்த அமெரிக்காவில் பிரிவினையை ஊக்குவிக்க பாதிக்கப்பட்ட அந்த நாடுகள் கைகோர்த்து இயங்கினால் என்ன ஆகும் என்று கேட்கத் தோன்றுகிறது.  அத்தனை முன்யோசனை இந்த நாடுகளுக்கு இருந்தால் இவை ஏன் மூன்றாம் உலக நாடுகளாக இன்னும் இருக்கப் போகின்றன? எப்படி அந்த இயக்கத்தைப் பெரிதாக வளர்ப்பது என்று  கீழே அமெரிக்கப் பிரிவினைவாதிகளுக்கு ஒருவர் ஆலோசனை சொல்கிறார்:

http://www.psmag.com/politics/a-secessionists-guide-10-tips-for-making-a-breakaway-state-49983/

***