பனுவல் போற்றுதும் – மும்மணிக்கோவை

இடைக்காலத்தில் எழுந்து முக்கியத்துவம் பெற்ற சிற்றிலக்கிய வகைகளில் மும்மணிக்கோவையும் ஒன்று. வீரமாமுனிவர் பட்டியலிட்ட 96 பிரபந்தங்களில் எட்டாவது வகை இது.

நேரிசை ஆசிரியப்பா, நேரிசை வெண்பா, கட்டளைக் கலித்துறை எனும் பாவினங்கள் முறையாக மூன்றாக அடுக்கிவர, முப்பது செய்யுள்கள் அந்தாதித் தொடையில் அமைந்தால் அது மும்மணிக்கோவை. முறையாகத் தமிழ் கற்றவருக்கே மூலத்திலிருந்து குருதி கொப்பளிக்கும் இவ்வகை இலக்கண வரையறைகளுக்குள் இயங்க. நாம் எம்பாடு? நமக்கு விதித்தது சந்தம் இல்லாத, இலக்கணம் இல்லாத , எதுகை மோனை இல்லாத, இசைக் கணக்குகள் இல்லாத, தொடைகள் இல்லாத, சீர்தளை இல்லாத, எழுத்து எண்ணி பாப்புனையும் இறுக்கம் இல்லாத புதுக்கவிதை. ஆலை இல்லா ஊருக்கு இலுப்பைப்பூ சர்க்கரை. தட்டிக் கேட்க ஆளில்லாவிட்டால், தம்பி சண்டப் பிரசண்டன்.

அந்த அரசியலுக்குள் புகாமல், மும்மணிக்கோவை நூல்களுள் நாம் கேள்விப்பட்ட சிலவற்றை மட்டும் பார்ப்போம்.

திருவாரூர் மும்மணிக்கோவை

சைவத் திருமுறைகள் பன்னிரண்டினுள், பதினோராம் திருமுறையின் நாற்பத்தோரு நூல்களில் ஏழாவது நூல் இது. இயற்றியவர் சேரமான் பெருமாள் நாயனார். அகவல், வெண்பா, கட்டளைக் கலித்துறை என்னும் அடுக்கில் முப்பது பாடல்கள் அந்தாதித் தொடையில். அந்தாதித் தொடை என்பது ஒரு செய்யுளின் அந்தமாகிய இறுதிச்சொல், அடுத்த செய்யுளின் ஆதிச்சொல்லாக முதற் சொல்லாக வருவது. அந்தம் + ஆதி = அந்தாதி. “ஆதியும் அந்தமும் இல்லா அருட் பெரும் சோதி’ என்பதோர் ஒரு பாடல்வரி. அதாவது ஒரு பாடல் அடி என முடியுமானால் அடுத்த பாடல் அடி எனத் தொடங்கும். அந்தாதி எனும் சிற்றிலக்கிய வகையில் இதனை விரிவாகக் காணலாம்.

சேரமான் பெருமாள் நாயனார் எனும் சைவ நாயன், திருச்சிலம்பு வழியே சென்று நடராசனை வணங்கிய பேறு பெற்றவர் என்றும் இறைவனின் திருமுகம் கண்ட அருளுடையவர் என்றும் சுந்தரரின் இனிய தோழர் என்றும் கயிலைக்கே சென்று இறைவனின் இன்னருள் பெற்றவர் என்றும் கூறுகிறார்கள்.

சுந்தரர் காலம் எட்டாம் நூற்றாண்டு என்று அறிகிறோம், அதனால் சேரமான் பெருமாள் நாயனார் காலமும் அதுவென்றே அறியப்படும். பின்னர் இவர் இஸ்லாம் மார்க்கத்தைத் தழுவினார் என்றொரு கருத்தும் உண்டு. கயிலையை அடைந்து கயிலைநாதனின் திருவடி சேர்ந்தவர் எப்படி இஸ்லாம் மார்க்கத்தைத் தழுவி இருக்க முடியும் என ஒரு எதிர்பேச்சும் உண்டு. அது ஆய்வாளர் கவலை. என் கவலை, முன்பு நான் குடியிருந்த பகுதியில், சிறியதோர் சிவாலயக் குடமுழுக்கின் போது, ஒலி பெருக்கியில் ஒருவர் பாடினார். அவர் ஓதுவாராக இருக்க நியாயமில்லை. “அப்பரும் சுந்தரரும் அருள்மணிவாசகரும்” என்று திரும்பத் திரும்ப இழைத்தார். இருபது வருடங்கள் ஆகியும் என்னால் மறக்கவும் மன்னிக்கவும் முடியவில்லை. நல்ல பாடல் அது. அப்பரும் சுந்தரரும் அருள்மணிவாசகரும் ஆவுடைப்பிள்ளையும் எப்படிப் பாடினரோ அப்படி உன்னைப் பாட நான் ஆசைகொண்டேன் சிவனே என்று போகும் பாடல். ஆசைதான் படமுடியும், அப்படிப் பாட முடியுமா என்று ஏங்குகிறது புலவர் உள்ளம். ஆனால் பாட முயற்சித்தனர். சேரமான் பெருமாள் நாயனார் அருளிய நூல்கள் சில அதற்குச் சான்று. பொன் வண்ணத்து அந்தாதி, திருவாரூர் மும்மணிக் கோவை, திருக்கயிலாய ஞான உலா என்பன அவரது நூல்கள். முதல் நூலை சிதம்பரத்திலும், இரண்டாவது நூலை சுந்தரருடன் திருவாரூர் தியாகேசனை வழிபட்ட போதும் மூன்றாவதைத் திருக்கைலாய மலையிலும் அருளினார் என்பர். இவரது இன்னொரு பெயர் கயறிற்றறிவார். நான்கு றகரங்கள் சேர்ந்துவரும் இன்னொரு சொல் என் சேமிப்பில் இல்லை. கண்டவர் சொல்லலாம்.

”கடிமலர்க் கொன்றையும் திங்களும்
செங்கண் அரவும் அங்கே
முடிமலர் ஆக்கிய முக்கண நக்கன்
மிக்க செக்கர் ஒக்கும்
படிமலர் மேனிப் பிரமன்
அடி பரவாதவர் போல்
அடிமலர் நோவ நடந்தோ
கடந்தது எம் அம்மானையே!”

என்றொரு பாடல். கட்டளைக் கலித்துறை. எழுதப்பட்ட வடிவம் இதுவன்று. பொருள் உணர வேண்டி, நான் பிரித்து எழுதியுள்ளேன். எனவே இந்த வடிவத்தின் எழுத்து எண்ணவோ, யாப்பு ஆராயவோ வேண்டா. இந்தத் தொடர் எழுதி முடிப்பதற்கு முன்பாகவேனும், கட்டளைக் கலித்துறை இலக்கணம் உங்களுக்குக் கற்பித்துவிட ஆசைதான். அதற்கு முதலில் நான் கற்றுக்கொண்டாக வேண்டும். எனவே தற்போது அதுபற்றிக் கவல வேண்டாம்.

பாடலின் பொருள் மணமிக்கக் கொன்றை மாலையும், நிலவும், செங்கண் பாம்பும், அங்கே திருமுடியின் மலர்கள் ஆக்கிய முக்கணன் ஆடைகள் அற்றவன். அவன் செவ்வானத்தை ஒத்திருக்கும் மலர்மேனி உடையவன். அவன் திருப்பாதங்களைப் பரவாதவர் போல், தனது மலர்பாதங்கள் நோவ நடந்து கடந்தாளோ எம்மகள்!

செவிலியின் கூற்றாக அமைந்தது இந்தப்பாடல். செக்கர் வானம் என்று நாம் சாலையில் புகைபிடித்து நடந்து போகிறவரைக் காண்பது போல கடந்து போனதுண்டு. ஆனால் நக்கன் என்று ஒரு சொல்லுக்குப் புதிதாய் அறிமுகம் ஆகிறோம். நக்கன் எனில் ஆடையற்றவன், நிர்வாணன், அம்மணம். திக்குகளை ஆடையாகக் கொண்டவர்களை திகம்பரன், திகம்பரம் என்பார்கள். திக்கு+அம்பரம் = திக்கம்பரம், திகம்பரம். அம்பரம் எனில் ஆடை. அகத்துறை இலக்கியம் என்பதால் ‘அடிமலர் நோவ நடந்தோ கடந்தது எம் அம்மானையே’ எனும் வரி போலும்.

chidambaram_nataraja_temple_fresco

வெண்பா ஒன்றும் மாதிரிக்காகப் பார்த்து விடுவோம்:

“நீ இருந்து என்போது நெஞ்சமே! நீள் இருள்க் கண்
ஆயிரம் கை வட்டித்து அனல் ஆடி – தீ அரங்கத்து
ஐவாய் அரவு அசைத்தான் நன் பணைத்தோள்க்கு அன்பமைத்த
செய்வான் நல்லூரான் திறம்.”

பொருள்; நெஞ்சமே, நீ இங்கே இருந்து எனக்கு என்ன பயன்? நீள் இருளில் ஆயிரம் கைவீசி எரியும் அனலில் நின்று ஆடுகிறவன் அவன். அந்தத் தீ அரங்கத்தில் ஐந்து வாய்களை உடைய அரவத்தை – பாம்பை, அரையில் கச்சாக அணிந்தவன் அவன். நல்ல பணைத் தோள்களை உடையவன் அவன். ஆனால் அவனது அன்பான செயல்களையும் வல்லமைகளையும் நீ அறியமாட்டாய். நெஞ்சமே, நீ இங்கே இருந்து எனக்கு என்ன பயன்?

தமிழில் அபூர்வமான சில சொற்கள் உண்டு. அவற்றுள் ஒன்று ஐவாய். ஐந்து வாய்களை உடைய, அதாவது ஐந்து தலைகள் கொண்ட, நாகம். கையை உடைய – தும்பிக்கையை உடைய விலங்கு, கைம்மா, யானை. வாயில் புல்லுடைய விலங்கு புல்வாய், மான் என்ற படி.

திருவலஞ்சுழி மும்மணிக்கோவை

பதினோராம் திருமுறையினுள் தொகுக்கப்பட்ட நூல்களைப் பாடிய புலவர்கள் பன்னிருவர். அவர்களில் ஒருவர் நக்கீர தேவ நாயனார். அவர் இயற்றிய மும்மணிக்கோவை இது. இவரையோ, மற்ற பதினொன்று பேரையோ வெறுமனே புலவர்கள் என்று சொன்னால் சைவர்களுக்குக் கோபம் வரும். சைவர்களுக்குக் கோபம் வந்தால் என்ன செய்வார்கள் என்பது வரலாறு! ஆகவே நக்கீர தேவப் புலவர் என்று சொல்லாமல், நக்கீரதேவ நாயனார் என்று எல்லோரையும் போல நாமும் சொல்லிப் போவோம். அவர் இயற்றிய, அதாவது அருளிய நூல்களாவன: கயிலை பாதி காளத்தி பாதி அந்தாதி, திரு ஈங்கோய் மலை எழுபது, திருவலஞ்சுழி மும்மணிக்கோவை, திரு எழு கூற்றிருக்கை, பெருந்தேவ பாணி, கோபப் பிரசாதம், கார் எட்டு, போற்றித் திருக் கலிவெண்பா, திருக் கண்ணப்பதேவர் திருமறம்.. சங்க இலக்கிய நூலான திருமுருகாற்றுபடையையும் இவரது பத்தாவது நூலாக சேர்த்துக் கொள்கிறார்கள். இந்தக் காலம் பற்றிய கணிப்பில் சைவர்களுக்கு உடன்பாடும், தமிழறிஞர்களுக்கு முரண்பாடும் உண்டு. அதில் தீர்ப்பு சொல்லும் வல்லமை நமக்கு இல்லை. எனினும் சங்க கால நக்கீரருக்குப் பல நூற்றாண்டுகள் பிந்தியவர் நக்கீர தேவ நாயனார் எனும் கருத்தே வலுவாக உள்ளது.

முன்பே சொன்னபடி, இதுவும் அகவல், வெண்பா, கட்டளைக் கலித்துறை எனும் வாய்ப்பாட்டில் உள்ள நூல்தான். ஆனால் மொத்தம் பதினைந்து பாடல்களே உள்ளன.

திருவலஞ்சுழி என்பது சோணட்டுக் கும்பகோணத்துக்கு மேற்கில் அமைந்திருக்கும் ஊர். தேவாரப் பாடல் பெற்றத் திருத்தலம். அங்கு உறையும் சிவபெருமான்மீது பாடப்பெற்றது இந்நூல். காவிரி இவ்வூரை வலமாக சுழித்துப் போவதால் திருவலஞ்சுழி எனப் பெயர் பெற்றது என்பர். திருவலஞ்சுழி இறைவரைப் பாட்டுடைத் தலைவராகக் கொண்டு, அவர் பேரழகில் ஈடுபட்டு, காதல் கொண்டு, காம வருத்தம் உற்ற, தலைவியின் நீங்கா அன்பை வெளிப்படுத்தும் கோவை இது.

முதற்செய்யுள் ஆசிரியப்பா எனும் அகவற்பா:

’வணங்குதும் வாழி நெஞ்சே! புணர்ந்து உடன்
பெருகடல் முகந்து கருமுகில் கணம் நல்
பட அரவு ஒடுங்க மின்னிக் குடவரைப்
பொழிந்து கொழித்து இழி அருவி குண கடல்
மடுக்கும் காவிரி மடந்தை வார் புனல்
உடுத்த மணிநீர் வலம்சுழி.
அணி நீர்க்கொன்றை அண்ணல் அது அடியே.’

பொருள்: வணங்குவோம் வாழி நெஞ்சே! மேகக்கூட்டமானது கடலுடன் புணர்ந்து அலை பொருதும் கடல் முகந்து, கருமுகிற் கணங்களாகி, நல்ல படம் கொண்ட பாம்புக் கூட்டம் ஒடுங்க மின்னி, மேற்கு மலையில் மழையாகப் பொழியும். அந்த மழை நீர் கொழித்து இறங்கி அருவியாக இழியும். அந்த அருவியானது கிழக்குக் கடல் வந்து சேரும் முன் வார்புனல் உடுத்த காவிரி மடந்தையாகி, மணி நீர் கொண்டு வலம் சுழியில் உறையும் அணிநீர் கொன்றை அண்ணலது அடியை வணங்கிச் செல்லும். அந்த அண்ணலின் அடியை நாமும் வணங்குதும் வாழி நெஞ்சே!

மும்மணிக்கோவை அந்தாதித் தொடை எனப் பார்த்தோம். இந்தப் பாடல் ‘அடி’ எனும் சொல்லில் முடிந்ததால், அடுத்து வரும் வெண்பா ‘அடி’ எனும் சொல்லில் தொடங்குகிறது.

‘அடிப்போது தம் தலை வைத்து அவ்வடிகள் உன்னிக்
கடிப்போது கைக்கொண்டார் கொண்டார் – முடிப்போதா
வாணாகம் சூடும் வலஞ்சுழியர் வானோடும்
காணாத செம் பொற் கழல்.’

அடிப்போது என்பது திருவடிமலர். கடிப்போது என்பது வாசமுள்ள மலர். முடிப்போது என்பது திருமுடிமலர். அரும்பு, போது, மலர் என்பன பூவின் பருவங்கள்.

‘காலை அரும்பிப் பகலெலாம் போதாகி
மாலை மலரும் இந்நோய்’

என்பது காமத்துப் பால் திருக்குறள். போது எனில் மலரத் தலைப்படும் மொக்கு என்று புரிந்து கொள்ளலாம். மொக்கு எனில் மொட்டு. கொங்கு நாட்டில் முட்டையைக் கூட மொக்கு என்பார்கள்.

வாணாகம் எனும் மூன்றாமடி எதுகை வாள்+நாகம் எனப் பிரியும். வலஞ்சுழியாரின் திருப்பாத மலர்களை வானோர்களும் கண்டிலர் என்பது பாடலின் ஒருவரிப் பொருள்.

‘பாதாளம் ஏழினும் கீழ் சொற்கு அழிவு பாத மலர்
போதார் புனைமுடியோ எல்லார் பொருள் முடிவே’

என்பார் மாணிக்க வாசகர். ஏழு பாதாளங்களின் கீழே இருப்பது இறைவனின் பாதமலர். அங்கு சொல் அழிந்து போகும். போது ஆர்க்கின்ற புனைந்த திருமுடியோ எல்லாப் பொருளும் முடிந்து போகும் இடம். பாத மலரில் சொல் அழிந்து படும், போதார் புனை முடியில் பொருளும் அழிந்து படும். திருவாசகப் பாடலின் நுட்பம் அது.

தலைமுடியின் மலராக ஒளிபொருந்தும் நாகத்தைச் சூடிய வலஞ்சுழியான் செம்பொன் கழலணிந்த திருவடியை வானோர்களும் கண்டதில்லை. ஆனால் அண்ணலின் திருவடி மலர்களை சிந்தையில் வைத்து, அந்தத் திருவடிகளையே எண்ணியெண்ணி, நறுமண மலர்களைக் கைக்கொண்டவர் கண்டுகொண்டார் என்பதே பாடலின் பொருள்.

மூன்றாவது பாடல் கட்டளைக் கலித்துறை. இரண்டாம் பாடல் ‘கழல்’ எனும் சொல்லில் முடிந்ததால் , அந்தாதியாக, ‘இந்தப்பாடல் ‘கழல்’ என்று தொடங்குகிறது.

‘கழல் வண்ணமும் சடைக் கற்றையும் மற்றவர் காணகில்லார்
தழல் வண்ணம் கண்டே தளர்ந்தார் இருவரம் தாமரையின்
நிழல்வண்ணம் பொன் வண்ணம் நீர்நிற வண்ணம் நெடிய வண்ணம்
அழல்வண்ணம் முந்நீர் வலஞ்சுழி ஆள்கின்ற அண்ணலையே!’

வண்ணம் எனும் சொல்லுக்கு நிறம், அழகு, ஒப்பனை, குணம், வகை முதலாய பொருள்கள் உண்டு. ‘இவ்வண்ணம் நிகழ்ந்த வண்ணம்’ என்று தொடங்கும் கம்பனின் வண்ணப்பாடலையும் பொன்வண்ணத்து அந்தாதி வண்ணப் பாடல்களையும் நாம் எடுத்து ஆண்டுள்ளோம்.

முந்நீர் திருவலஞ்சுழி ஆள்கின்ற அண்ணலின் திருவடிக் கழல் வண்ணமும் சடைக்கற்றையும் பிறசமயத்தார் காணமாட்டார்கள். அவனது மேனியின் தீவண்ணம் கண்டே தளர்ந்து போனவர்கள் அவர்கள். இருவரம் தாமரையாகிய திருவடிகளின் நிழல் வண்ணம், பொன்வண்ணம், நீர் நிற வண்ணம், நெடிய வண்ணம், அழல் வண்ணம் அல்லவா?

திருமேனியின் தீப்போல் ஒளிரும் சிவந்த நிறம் கண்டு தளர்ந்து போன ஊழ்கொண்ட சமயத்தார் எங்ஙனம் அவனது திருவடித் தாமரையின் வண்ணம் அறிய இயலும் என்பது கருத்து.

இது ஒருவகை சமயப்பொறை அற்ற நிலைதான். ஆனால் இதுதான் நக்கீரதேவ நாயனாரின் நிலைப்பாடு.

மேற்கண்ட மூன்று பாடல்களிலும் அவரது செய்யுள் நடை, மொழி நடை கண்டோம். இனி, ஒரு மாதிரி எனக்கொண்டு, சங்கப்புலவர் நக்கீரனின் திருமுருகாற்றுப்படையின் செய்யுள் நடையைப் பார்க்கலாம். இதற்கு நான் பொருள் எழுத மாட்டேன். ஒரு ஒப்பீட்டுக்காக மட்டுமே!

’உலகம் உவப்ப வலனேர்பு திரிதரு
பலர்புகழ் ஞாயிறு கடற்கண் டாஅங்கு
ஓவற இமைக்கும் சேண்விளங்கு அவிரொளி
உறுநர்த் தாங்கிய மதனுடை நோன்தாள்
செறுநர்த் தேய்த்த செல் உறழ் தடக்கை
மறுவில் கற்பின் வாணுதற் கணவன்
கார்கோள் முகந்த கமஞ்சூல் மாமழை
வாள்போழ் விசும்பில் வள் உறை சிதறித்
தலைப்பெயல் தலை இய தண்ணறுங் கானத்து
இருள்படப் பொதுளிய பராரை மராஅத்து

உருள்பூந் தண்டார் புரளும் மார்பினன், –
மால்வரை நிவந்த சேணுயர் வெற்பில்
கிண்கிணி கவைஇய ஒண்செஞ் சீறடிக்
கணைக்கால் வாங்கிய நுசுப்பிற் பணைத்தோள்,
கோபத் தன்ன தோயாப் பூந்துகில்,
பல்காசு நிரைத்த சில்காழ் அல்குல்,
கைபுனைந்து இயற்றாக் கவின்பெறு வனப்பின்,
நாவலொடு பெயரிய பொலம்புனை அவிரிழைச்
சேணிகந்து விளங்கும் செயிர்தீர் மேனித்
துணையோர் ஆய்ந்த இணையீர் ஓதிச் ’

என்று போகும் வரிகளை கவனியுங்கள். காட்டு நெல்லிக்காய் கடித்துத் தின்று பச்சைத் தண்ணீர் குடிப்பது போல் இல்லையா? அந்த இனிப்பு நெல்லியிலா, நீரிலா?

இரு புலவர்களின் மொழிக்குள் ஏதும் தொடர்பு உண்டா? ஆசைக்கும் ஒரு அளவில்லையா?

திருமும்மணிக்கோவை

shiva_mural

இளம் பெருமாள் அடிகள் இயற்றிய முப்பது பாடல்களைக் கொண்ட நூல் இது. இவர் எழுதிய நூல் இது ஒன்றுதான் என அறிகிறோம். இதனை ’சிவபெருமான் திரு மும்மணிக் கோவை’ என்றும் கூறுகிறார்கள். இப்புலவரது அல்லது அடிகளது ஊர், குளம் எதுவும் அறியக் கிட்டிலோம். இவரது பெயர் கூடப் புனைபெயராக இருக்கலாம். இறைவனைக் காமுறும் தலைவியின் துயர்பாடும் அகத்துறைப் பாடல்கள்.

அகவல்:

சடையே, நீரகம் ததும்பி நெருப்புக் கலிக்கும்மே
மிடறே, நஞ்சகம் துவன்றி அமிர்து பிலிற்றும்மே
வடிவே, முளி எரி கவை இத் தளிர் தயங்கும்மே!
அடியே, மடங்கல் மதம் சீறி மலர்பழிக் கும்மே
அஃதான்று, இனைய என்று அறிதிலம் யாமே முளை தவம்
தலை மூன்று வகுத்த தனித்தாள்
கொலையூன்று குடுமி நெடுவேலோயே!’

பொருள்: கூர்மையான மூன்று கவடுகளை உடைய முத்தலை கலமான தனித்தாளையும் கொலை ஊன்று குடுமியையும் உடைய நெடுவேலோய்! உனது சடையோ, நீர்ததும்பும் ஆனால் நெருப்புக் கலிக்கும்.
கழுத்தோ, கருநீல நஞ்சு பொருந்தி அமிர்து பிலிற்றும்
வடிவமோ, மூண்டு எரியும் தீ கிடை விட்டுத் தளிர் தயங்கும்
பாதமோ, கூற்றுவன் செருக்கைச் சீறி மலரைப் பழிக்கும்
அஃதல்லாமல், அவை போன்று வேறு என்ன இருக்கிறது உன்னிடம் என்று அறியோம் யாமே.!

அடுத்த பாடல் வெண்பா

’வேலை முகடும் விசும்பகடும் கைகலந்த
காலைநீர் எங்கே கரந்தனையால் மாலைப்

பிறைக்கீறா கண்நுதலா பெண்பாகா ஐயோ
இறைக்கூறாய் எங்கட் கிது.’

மாலையின் பிறைக்கீற்றையும், நெற்றிக்கண்னையும், பாகத்தில் பெண்ணையும் கொண்டவரே! கடலின் உச்சியும் ஆகாயத்தின் வயிறும், கை கலந்த ஊழிக் காலத்தில், நீர் எங்குக் கரந்திருந்தீர்? ஐயோ, இறையே, எங்களுக்கு இதைக் கூறுவாயாக.

இந்த அடுக்கின் மூன்றாவது பாடல் கட்டளைக் கலித்துறை.

’இது நீர் ஒழியின் இடை தந்து
உமை இமயத்து அரசி
புது நீர் மணத்தும் புலி அதளே
உடை பொங்கு கங்கை
முதுநீர் கொழுத்த இளமணல்
முன்றில் மென்றோட்ட திங்கள்
செது நீர் ததும்பத் திவளம் செய்.
செஞ்சடைத் தீ வண்ணரே’

வர்த்தமான் பதிப்பக வெளியீடான பன்னிரு திருமுறைகளுக்கும் உரை எழுதி உள்ள வித்துவான் எம் நாராயண வேலுப் பிள்ளை, இப்பாடலுக்கு எழுதிய உரை பின்வருமாறு:

உமாதேவி உம்மை மணந்த காலத்தும், இடையில் இந்தப் புலித்தோல், ஆடையையா அணிந்திருந்தீர்? பொங்கு கங்கை முதுநீர் கொழித்த இளமணல் முன்றிலில் மென்றோட்டத் திங்கள் நீர்ததும்பத் திவளம் செய் செஞ்சடையையும் தீ வண்ணத்தையும் உடையவரே! இந்த ஆடை வேண்டாம், நீக்கி விடுங்கள்.

பாடலில் ’பொங்கு கங்கை முதுநீர் கொழித்த இளமணல் முன்றில்’ என்பது எனக்குப் புரிகிறது ‘செஞ்சடைத் தீவண்ணரே” என்பதும் புரிகிறது. ’மென்றோட்டத் திங்கள் செது நீர் ததும்பத் திவளம் செய்.’ என்பது புரியவில்லை. உரையாசிரியர் அதையேதான் திரும்பச் சொல்கிறர். பாதிப்பாடலை இப்படித் திரும்பச் சொல்கிறாரே என்று உங்களுக்குத் தோன்றுவதுதான் எனக்கும் தோன்றியது. ஒத்துப் பார்க்க வேறெதும் உரையும் இல்லை என் கைவசம். பெரும்பொருள் செலவு செய்து, அருட்செல்வரிடம் நன்கொடை வாங்கி சிறப்பு வெளியீடாகக் கொண்டு வரப்படும் பதிப்பு இப்படிப் பொருள் தருகிறது. இந்தக் கர்மத்தை நாம் எங்கு கொண்டு போய் தொலைக்க, செஞ்சடைத் தீவண்ணரே!

(தொடரும்)