கவிதைகள்

தைலங்கள்

warhol_marilyn_monroe_stencil_on_newsprint_collage_by_x1139-d4kgw62

பல நாட்கள், மாதங்கள், ஏன்
பல ஆண்டுகள்கூட
காலையிலுதிக்கும் பரிதியை
கருத்த கூந்தல் பந்தாய்
அவர்கள் கண்டிருக்கக் கூடும்
மனக்கடலோரம் அமர்ந்து
மதுவருந்துகிறபொழுது
பார்த்த பணமும்
சேர்த்த புகழும்
காதற்ற ஊசியென்று
கடல் அலைபாய்ந்திருக்க்க்கூடும்
உடலுக்கும் உடைகளுக்கும்போல
மனதுக்கு மணமளிக்கும் தைலங்கள்
மார்க்கெட்டில் கிடைக்காத வறுமைதீர
காது கேட்காத கடவுளிடம்
அவர்கள் கையேந்தியிருக்கலாம்
பாலைவனச்சோலையாக
ஆணின் அந்தரங்கம்
தொடுவானமாகப் பெண்ணின் காதல்
அவர்களை தணல்சுடும் அப்பளமாய்
சுட்டுச் சுருக்கியிருக்கலாம்.
எவருமறியாமல் கண்ணுக்குத் தெரியாமல்
உடல்விட்டு உயிர்பிரியும் எளிமை
அவர்களின் நினைவூற்றாகியிருக்கலாம் அதனால்
இருத்தல் இறத்தல் இரண்டுக்கும் பொருளில்லையென
அவர்கள் அமைதியடைந்திருக்கலாம்.

அணில்களும் தவிட்டுக்குருவிகளும்

கருவேலமுள் ஒரு காகிதம் ஒரு
சோளத்தட்டையில்
தாத்தா தயாரித்த காற்றாடியோடு
நான் சுழன்று திரிந்த வீடு.

விடியலில் உழுது விதைத்து
நாற்றுநட்டு நடுப்பகலில்
மூன்றுதலைமுறைகள்
வட்டமாயுட்கார்ந்து
கம்பங்களியும் கத்தரிக்குழம்பும்
உண்ட தென்னந்தோப்பு

கன்னத்தை வருடும்
கம்பங்கருதுகளும்
காற்றின் பாட்டைத்
தலையாட்டி ரசிக்கும்
நெற்கதிர்களைக் கொஞ்சும்
சுகம் தந்த வயல்

அறுபதாண்டு உறவு சொந்தம் இன்றுடன்
அறுந்து போகிறது முதுமையில்
நாளை நகரம் சேர்கிறேன் பிள்ளைகளோடு

கயிற்றுக்கட்டிலின்கீழ் விளையாடும்
நாயும் பூனையும் என்னைத்தேடும, பாவம்.

கொல்லையில் முறங்களில் காயும்
கடலைக்கும் தான்யங்களுக்கும்
வீடுதேடிவரும் அணில்களும்
தவிட்டுக்குருவிகளும் ஏமாந்துபோகும் பாவம்

அதுதான்.

–லாவண்யா

மழை

ஓயாதோ என்று
விடாது பெய்யும் மழை
சற்று முன்
ஓய்ந்திருக்கும்.

மழையின்
முதலிலும் நனைந்திருக்கும்.

மழையின்
இடையிலும் நனைந்திருக்கும்

மழையின்
கடைசியிலும் நனைந்திருக்கும்.

மரத்திற்குத் தெரியும்
மழை
மழையென்று.

மழையின்
முதலிலும் நனையவில்லை.

மழையின்
இடையிலும் நனையவில்லை.

மழையின்
கடைசியிலும் நனையவில்லை.

எனக்கென்ன தெரியும்
மழை
மழையென்று?
பேனாவில்
மழையூற்றி
மழை பற்றி எழுதினாலும்
’மழை’
மழையில்லையே.

எப்படி உதிர்வது?

56619358

மரம்
சொல்லித் தரும்
இலைகளுக்கு
காற்றில்
எப்படி அலைவதென்று.

காற்று
சொல்லித் தரும்
இலைகளுக்கு
எப்படி உதிர்வெதென்று.

உதிரும் இலைகள்
சொல்லித் தரும்
உதிராத இலைகளுக்கு
எப்படி
பயமில்லாமல் உதிர்வதென்று.

— கு.அழகர்சாமி


title1

displaced_children_mugunga_camp1

நீ எனக்காக
எழுதிக்கொண்டிருக்கும்போதே
உன் முகவரியைப் படித்துவிட்டேன்
தலைகீழாய்.

அவசரமாய் அந்த
முகவரிக்குச் சென்று
உன்னைக் கண்டு
பேச வந்தேன்.

உன் தாடை
புருவங்கள் உயர்வதுபோல
பேசியது.

சிரிப்பும் அழுகையும்
உதட்டின் இருபுறமும்
வளைந்துகொண்டிருந்தன.

உன் கண்கள்
அந்துப்பூச்சிகளென
அசைவற்று உன்
கன்னங்களின் கீழ்
அமர்ந்திருந்தன.

நீ பேசும்போது,
உன் முகம்
சுவாசிக்கும் மலர்போல
சுருங்கி விரிந்தது.

எழுதி முடித்ததும்
எனக்காக உன் முகவரியைத்
திருப்பினாய்.
அதுவரை,
நாம் பேசிக்கொண்டிருந்தோம்,
நினைவிருக்கிறதா?
உன் தலைகீழ்
முகவரியில்.

— ச.அனுக்ரஹா