எதையோ கனவுகிற விளையாட்டு

something_gaming1

அது சுய-கிளர்ச்சிக்கான மூச்சுத் திணறல்தான், ஆனால் அதை யாரும் ஒப்புக் கொள்ள மாட்டெனென்கிறார்கள்,

குழந்தைகளுக்கு தாண்டும் கயிறுகள், கழுத்துப் பட்டிகள், காலணிக் கயிறுகள் என்று ஏதாவது கிட்டுகின்றன, அல்லது அவர்கள் ஒருவர் மற்றவருக்குச் செய்கிறார்கள், கட்டை விரல்களை குழந்தைக் கொழுப்புக்குள் பதித்து, தாடைக்குக் கீழே புதைத்து அழுத்தி. குழந்தைகளுக்கே உரிய வெள்ளை மொழியில் அதை ஒழிந்து போகும் விளையாட்டு என்று அழைக்கிறார்கள்,அல்லது மயங்கும் விளையாட்டு, சுரீர்த் துடி விளையாட்டு. ஏதோ கனவும் விளையாட்டு, அதுவும் ஒரு பெயர்தான்.

செய்தித்தாள்களில் இதைப் பற்றிப் பேச நேர்ந்தால், பத்திரிகையாளர்கள் உண்மையைப் பூசி மெழுகி விடுகிறார்கள். இரண்டு நூற்றாண்டு முந்தைய கட்டுப்பெட்டித்தனத்தோடு, குழந்தைகள் ‘கிறுகிறுப்பு’ வேண்டுமென்று ஒருவரை ஒருவர் கழுத்தை நெறித்துக் கொள்கிறார்கள் என்று எழுதுகிறார்கள். ஒன்பது, பத்து வயதுக் குழந்தைகள் மிகச் சிறிய வயதினர், அவர்களுக்குப் பாலுணர்வுக் கிளர்ச்சி தேவையாய் இராது என்று சமூகம் நினைப்பதால் இப்படி அடக்கி வாசித்தல். உண்மை என்னவோ வேறு, சிறுவர் ஒரு போதும் அவர்கள் என்ன செய்ய வேண்டுமோ அதையே செய்துகொண்டிருப்பதில்லை- நான் மட்டும்தான் பதின்ம வயதுக்குச் சற்று முந்தைய பாலுணர்வுகளின் குழப்பங்களை நினைவு வைத்திருக்கிறேனா?- என்ற அனுபவ அறிவு எங்குமே அதிசயிக்கக் கூடிய விதத்தில் தொடர்ந்து உதாசீனப்படுகிறது.

உண்மை என்னவோ, அவர்கள் தம் ரத்த நாளங்களில் கிர்ரென்ற உணர்வுக்காக, கிளர்ச்சிக்காக, தலையில் ஏற்படும் கிறுகிறுப்புக்காக, அவர்களுடைய முதிர்வடையாத உடல்களில் ஏற்படும் உஷ்ணமான உணர்வுக்காக இதைச் செய்கிறார்கள் என்பதுதான். நாம் செய்கிற ஒவ்வொன்றையும் போலவே- தனி நபர்களாகவோ, ஒரு ஜீவராசியாகவோ- எல்லாம் பாலுணர்வோடு சம்பந்தப்பட்டதுதான். சாவோடும். யின்-யாங், ஓளி-நிழல் ஊடாட்டம். என்ன நடந்தது என்பதை நாம் ஒத்துக் கொண்டால், ஒரு வேளை மேலும் பலர் சாவதற்கு முன் இதை நாம் நிறுத்த முடியலாம்.

நாம் எதையெல்லாம் பேசக் கூடாது என்று நினைக்கிறோமோ அதெல்லாம்தான் இருளுக்குள் பேயாக மாறுகின்றன.

அந்த விளையாட்டு சுய கிளர்வுக்கான மூச்சுத் திணறல். புத்திசாலிக் குழந்தைகள் இதைத் தனியாக இருந்து செய்ய மாட்டார்கள் என்று நீங்கள் நினைப்பீர்கள், ஏன் செய்யவே மாட்டார்கள் என்று கூடத்தான் நம்புவீர்கள்.

ஆனால் என் தாரா எல்லாப் புத்திசாலிக் குழந்தைகள் போலத்தான்.

மருத்துவ மனையில் அந்த விளையாட்டை தாரா கற்றிருக்க வேண்டும். உடலில் அந்தக் கருவியைப் பொதிப்பது பற்றி முடிவெடுத்த போது. எஃப் டி ஏ (FDA) அனுமதித்த ஒரு சிகிச்சை[1], ’நாளை’க்கான சிகிச்சை போல அத்தனை புதுக்கருக்குள்ளது, ஒரு சோதனை முயற்சி, அவளுக்கு அதிர்ஷ்டமிருந்தது, சிகிச்சையில் பங்கெடுக்கத் தேர்ந்தெடுக்கப்பட்டாள்.

என் கட்டைவிரலில் கடைசிக் கணு அளவே உள்ள ஒரு சூபர் கணினி, என் மகளின் மூளையில் பொதிக்கப்பட்டது. தாராவுக்கு தன்னிச்சைப் பரிவு மறிவினையின் சிதைவு நோய்(RSD- Reflexive Sympathetic dystrophy), ஆழ்ந்த, கட்டுக்கடங்காத நரம்பு வலியில் முடியும் ஒரு நோய். சுருங்கச் சொன்னால், அவளுடைய நரம்புகள் வலித்துக் கொண்டே இருக்கும். எல்லையற்ற அளவில். எல்லா நேரமும்.
இந்தப் பொதிவு, வலியுணர்வுக்கான மின் சமிக்ஞைகள் மூளையில் சேராமல் தடை செய்கிறது. இதன் க்வாண்டம் கணிக்கும் திறன், போஸ்-ஐன்ஷ்டைன் ஒடுக்கப்பாட்டுப் பொருளால் (Bose-Einstein condensate) சாத்தியமாகிறது, எனக்கு அதன் அர்த்தம் என்னவென்று தெரியாதுதான், அது எப்படி வேலை செய்கிறது என்றும்தான் தெரியாது. எனக்கு சிலிகான் சில்லு, அல்லது வெற்றிடக் குழாய் (vaccum tube) போன்றன எப்படி வேலை செய்கின்றன என்பது எப்படித் தெரியாதோ அதே போலத்தான் இதுவும்.

எது எப்படியானால் என்ன, அது வேலை செய்தது.

இரண்டு வாரம் கழித்து, தாரா பள்ளிக்குத் திரும்பப் போனாள். ஸில்கி மைண்டரின் அம்மா என்னை ஃபோனில் கூப்பிட்டாள். நான் வேலை பார்க்கப் போன இடத்தில் இருந்தேன்.; தாரா பள்ளி முடிந்த பின் மேலும் கூடுதலாகக் கற்பிக்கும் இடத்தில் இருந்தாள், அவளை அங்கிருந்து திரும்ப அழைத்து வரும் முறை அவளுடைய அப்பாவுடையது. இரவுச் சாப்பாட்டுக்குப் பிறகு தாரா என்னிடம் சேர்வாள்.

அசல் குடும்பஸ்தரென்றால் இப்படித்தான் குறிக்கப்படுகிறோம். நீங்கள் யாருக்கோ அம்மாவாகிறீர்கள், அல்லது அப்பாவாகிறீர்கள். ஒரு பெற்றவர், ஒரு நபரே இல்லை.

இருந்தும் வேலை பார்க்கிற இடத்தில், நான் ஃபோன் அழைப்புக்குப் பதிலளிக்கவே செய்தேன்,”டாக்டர் சாண்டர்ஸன்.”

”ஜிலியன். இது வாலண்டினா. நாம் பேசவேண்டுமே.”

அந்தக் குரலிலேயே தெரிந்து போகிறது, மிகக் கவனமாக பீதியடையாமல் இருக்க முயற்சி நடப்பது. மிகவும் பயந்து போயிருக்கிற ஒரு தாய், தன்னிடம் உள்ள அத்தனை அலசலறிவையும் பயன்படுத்தி, தன் மூளையின் வேதிப்பொருட்களின் உத்வேகத்தை மீறித் தன் கட்டுக்குள் வைத்துக் கொண்டு, தன் குழந்தைக்கு ஏற்பட்டுள்ள அபாயத்தைப் பல்லாலும் நகத்தாலும், ஆக்ரோஷத்துடன் எதிர்கொள்ளாமல், புத்திசாலித்தனத்தால் எதிர் கொண்டிருக்கிறாள் என்பது. “ஏதாவது மோசமாக நடந்து விட்டதா?”

அவளுடைய மூச்சு ஃபோனின் ஒலிப்பெருக்கி வழியே சீறலாகக் கேட்டது. இது செல்ஃபோனால்தான், நான் நினைத்தேன், அங்கே பின்னணியில் நிறைய சத்தம் கேட்டது. மனித அவசர ஓட்டங்கள், ஒரு இண்டர்காம், மெருகேறிய கல் தளத்தில் கிடுகிடுத்த எதிரொலிகள். நான் உள மருத்துவப் பயிற்சி நாளிலிருந்து தனியே தான் என் சிகிச்சை நிலையத்தை நடத்தி வருகிறேன். ஆனாலும் மருத்துவ மனைகளில் ஒலிகள் மறக்கவில்லை. “வால், ஸில்கி சரியாக இருக்கிறாளா?”

“சரியாகி விடுவாள்,” வால் சொன்னாள். ஒரு விம்மல் அவள் தொண்டையில் சிக்கி நின்றது, அவள் அதை வெளியேறாமல் தடுத்து உள்ளே நிறுத்தினாள். “டாக்டர் சொல்கிறார், அவள்- ஜிலியன், ஆஹ்ஹ், அவள் சரியாகி விடுவாள் என்று-”

பிறரை என்னிடம் மனம் விட்டுப் பேச வைப்பதில் எனக்குத் திறமை உண்டு. “வால், சொல்லி விடேன். நீ ஒன்றும் மென்று விழுங்க வேண்டாம், சரியா?”

அவள் திணறியதைக் கேட்டேன். மூக்கைச் சிந்தினாள், ஒரு நீண்ட மூச்சை இழுத்தாள், தன் தலைமுடியோடு ஃபோனை அழுத்தியபோது ஃபோனின் ஒலி சில்லுகளாக வெடித்தது. “ஸில்கி சொல்கிறாள், தாரா அவளுக்கு எப்படித் தூக்கு மாட்டிக் கொள்வது என்று சொல்லிக் கொடுத்தாளாம்.”

| |

முதலில், அந்த அழுத்தம்.

ஒரு விசேஷமான அழுத்தம், தாராவின் தாடைக்குக் கீழே ஆனால் மேல் பகுதியில். அது அவளைக் கனமாகவும், இலேசாகவும் ஒரே சமயம் உணர வைக்கிறது. அவள் நாற்காலிக்கு அருகில் மண்டி இடுகிறாள், விளிம்புக்குக் குறுக்கே சாய்கிறாள், ஏனெனில் அவள் மயங்கினால் நாற்காலி உருண்டு நகர்ந்து விடும், அவள் மூச்சுத் திணறிப் போகாமல் இருப்பாள்.

அவள் எப்போதுமே ஜாக்கிரதையாகத்தான் இருக்கிறாள்.

அழுத்தத்திற்குப் பிறகு அவளுக்குத் தலை சுற்றலாக இருக்கிறது, பார்வை ஒரு மாதிரி….குறுகிப் போய், ஓரங்களில் இருண்டு போகிறது. மூச்சு விடக் கஷ்டமாகிறது, தொண்டையில் ஏதோ அடைத்துக் கொண்டு விட்ட மாதிரி இருக்கிறது. அவளுடைய முதுகில் மேலும் கீழும் ஏதோ ஊசிக் குத்தல்கள் ஓடுகின்றன, கைகள் மேலெல்லாமும். முன்பு அந்தக் கைகளில்தான் வலியாய் வலித்துக் கொண்டிருந்தது. இப்போது ஒரு சூடான திரவம் போன்ற உணர்வு அவளுக்குள் தளும்புகிறது. அவள் மெல்ல வழுக்கி அமர்கிறாள், எல்லாம் இருண்டு போகிறது, அப்போது அவள் கனவு காணத் துவங்குகிறாள்.

ஆனால் இரவு நேரக் கனவுகள் போலில்லை இவை. இவை விசேஷமானவை.

தாரா இப்படி விசேஷமான கனவுகள் காணும்போது, அவளுக்குக் குரல்கள் கேட்கின்றன. அது சரியா, இல்லை, குரல்கள் இல்லை. கச்சிதமாகச் சொல்வதானால், அவை குரல்கள் இல்லை. ஆனால் எதோ விஷயங்கள். அல்லது என்னவற்றையோ காண்கிறாள். அல்லது அவற்றை உணர்கிறாள். அதெல்லாம் ஏகமாகக் கலந்து கட்டிக் கிடக்கின்றன.

ஆனால் அங்கு ஒரு வானம் இருக்கிறது, அவள் அதன் கீழ் நடக்கவும் செய்கிறாள். அவள் பார்த்த எந்த வானம் போலவும் இல்லை அது. பெரியதாக, வெளிறி இருக்கிறது, மேலும் பார்ப்பதற்கு….தட்டையாகவும், மிக மிக உயரவும் இருக்கிறது. மேகங்களேதும் இல்லை, ஒரு பெரும் சிவந்த சூரியனின் கீழ் எங்கும் ஒரே புழுதியாகத் தெரிகிறது.

அது ஒரு பாலைவனமோ என்னவோ. பாலைவனத்தில் ஆகாயம் இப்படி இருக்கும் என்று எங்கோ படித்திருக்கிறாள். அது வெறும் படமில்லை. அவளால் அதன் ருசியை உணர முடிகிறது, அவளுடைய காலணி அடிகளின் கீழ் கூழாங்கற்களை உணர முடிகிறது, அங்கு வெடித்திருக்கிற தார் அல்லது காங்க்ரீட் சாலை உஷ்ணத்தில் வெந்து கொண்டிருக்கிறது. ஆனால் அது நிஜமான சாலை இல்லை; சாலை போல இருக்கிறது, ஆனால் சாக்லேட்-பழுப்பு, ஒருவேளை அந்த சிவப்புப் புழுதியால் அப்படித் தெரிகிறதோ என்னவோ.
மேலும் அவள் விமானங்களில் போய்ப் பார்த்திருக்கிற பாலைவனங்களில், ஆல்பர்ட் மாதிரி ஆட்கள் இருப்பார்களா என்பதில் தாராவுக்கு ஐயமே.

ஆல்பர்ட்டோ, ஒரு ராட்சத அளவு நூறுகால் பூச்சி போல கணுக்கணுவாக இணைந்தவனாகத் தெரிந்தான். ஆனால் தலைகீழ் சதுர விதியின் படிப் பார்த்தால், அவன் ஒரு கணுக்கணுவான ஆளாக இருக்க வாய்ப்பில்லை. ஒரு காற்றுத் துவாரம் வழியே மூச்சு விடுகிற ஜீவராசியாக இருந்தால், அவ்வளவு பெரிய உடலை வைத்துக் கொண்டு, ஒரு கணுக்கணுவான நபர் மூச்சு விட முடியாது என்று அந்த விதி சொல்கிறது. ஆனால்….

…. அவன் என்னவோ பூமியின் பலகால் உயிர் அல்ல. அவனை அவள் பார்க்கையில், அவனுடைய எல்லா கணுக்களும் உப்பியும், சுருங்கியும் போவது, அதுவும் ஒவ்வொரு கணுவும் மற்றவற்றோடு தொடர்பேதும் இல்லாத மாதிரி, தனித்தனியே உரு மாறுவது, அவளுக்குத் தெரிகிறது. ஒவ்வொன்றுக்கும் மேலேயும், கீழேயும் ஒரு தகடு போல இருக்கிறது, அது வழுக்கி நகர்கிறது, பலகால் உயிரினத்துக்கு இருப்பது போல ஒரு கடினமான மேல்பரப்பாக இல்லை. எனவே அது ஏதோ மேல்பரப்பு கவசம், புற உடற்கூடு இல்லை. ஆல்பர்ட் என்பது அவன் பெயரும் இல்லை, எப்படியுமே. ஆனால் தாராவுக்கு அவனுடைய நிஜப் பெயர் தெரியாது, ஏனெனில் அவளால் அவனோடு பேச முடியவில்லை.

அவனுக்கு நிறைய கால்கள் இருப்பது என்னவோ உண்மை, மேலும் நிறைய வளைந்த சிறு சிறு நகங்களும் இருக்கின்றன, ஒரு இறால் போலத்தான், நண்டு போல இல்லை. பறவை போல துரிதமாகக் கூவல்களை வீசுகிறான், முதல் சில தடவைகள் அது அவளை மிகவும் கலவரப்படுத்தியது, முண்டும் முடிச்சுமான கருவி போன்ற ஒன்றால் அவள் கையைப் பிடிக்கிறான். அதனால் பரவாயில்லை. அவளுமே ஏற்கனவே அவனை நோக்கிக் கரம் நீட்டத் துவங்கி இருக்கிறாள்.

| |

நான் தாராவின் அப்பாவைக் கூப்பிடவில்லை. அவளை அழைத்துக் கொண்டு வர வழக்கமான நேரத்துக்குப் போனேன். தாராவோடு முதலில் பேசி விட்டுப் பிறகு ஜெர்ரியிடம் என்ன சொல்வதென்று பார்க்கலாம் என்று முடிவு செய்தேன். அவர் நல்லவர், நல்ல உழைப்பாளி, தன் குழந்தையிடம் நிறைய பிரியம் கொண்டவர்.

அவர் அதிகமாகப் பீதி அடைபவர். உங்களுக்குத் தெரிந்திருக்கும், இப்படிச் சிலர் உண்டு. தாரா கலவரப்படுவதில்லை, வழக்கமாக அப்படிக் கிடையாது, அதனால் அவளிடம் முதலில் பேச முடிவு செய்தேன்.
அவள் பின் இருக்கையில் உட்கார்ந்தாள், குழந்தைகளை உயர்த்தி உட்கார வைக்கும் ஆசனம் இப்போது தேவைப்படவில்லை, ஆனால் முன் இருக்கையில் அமருமளவு பெரியவள் இல்லை- அதில் ஏர்-பாக் இருப்பது ஆபத்தாகலாம். இப்போது ஒரு வேகமாக வளரும் கட்டத்தைத் தொட்டிருக்கிறாள்; அதனால் இன்னும் கொஞ்ச நாள்தான் இப்படி இருக்கும். [2]

த ப ம சி (RSD) நோய்க்கு என்னென்னவோ கூடுதல் விளைவுகள் உண்டு. சிலர் இதை உளநிலை நோய் எனவும், பாசாங்கு என்றும் உதறித் தள்ள நினைக்கிறார்கள். குறிப்பாக இந்த அறுவை சிகிச்சை செய்ய நான் முடிவெடுத்தபோது, என் அம்மாவிடமிருந்தும், சகோதரியிடமிருந்தும் எதிர்ப்பைச் சந்தித்தேன். அவள் நிறைய கவனம் பெறுவதற்காக இதைச் செய்கிறாள், அவள் கொஞ்சம் வளர்ந்தால் இதை நிறுத்தி விடுவாள் என்பன போன்ற வாதங்கள் முன்வைக்கப்பட்டன.

என் தாரா தைரியமான பெண், மிகவும் உறுதியானவள். அவளுடைய எட்டாம் வயதுக்கான பிறந்த நாளைத் தாண்டி சில நாட்களில் அவளுடைய கையை விளையாட்டு மைதானத்தில் உடைத்துக் கொண்டாள். அதில் வேறு ஏதோ பிரச்சினைகளும் இருக்கின்றன என்பதை நான் உடனே அறியவில்லை. கைக் கட்டை அவிழ்த்த பின்னும் அவள் இன்னும் கை வலிக்கிறது என்றே புகார் சொன்னாள். அப்புறம், அது அதிகமாக வலிக்கிறது என்று சொன்னதோடு, வலி கையைத் தாண்டி மேலேறி தோள்பட்டையிலும், உடலின் பக்க வாட்டிலும் வலிக்கிறது என்று சொன்னாள். அவளுடைய வலது கை சுருட்டிக் கொண்டு பறவைக் கால் போல ஆகி விட்டது, இதை என்ன என்று கண்டு பிடிக்க ஒன்பது மாதங்கள் ஆகி விட்டன. அதற்கப்புறம் ஒரு பத்து மாதங்களாயின, அவளை இந்தச் சோதனை முயற்சி சிகிச்சையில் சேர்க்க. அந்தக் கால இடைவெளி பூராவும் அவள் வலியைக் கொல்லும் மருந்துகள் மூலமும், உடல் பிடித்து விடும் சிகிச்சை மூலமும் அவதிப்பட்டாள்.

அவள் தோள் பெல்ட்டின் கீழ் வசதியில்லாமல் நெளிந்ததையும், கதவின் மேல் சாய்ந்து கூனி இருந்ததையும், கடிக்கப்பட்டிருந்த நகங்களைப் பார்த்துக் கொண்டதையும் என் முன்னால் இருந்த கண்ணாடியில் பார்த்துக் கொண்டிருந்தேன். “பள்ளிக்கூடம் எப்படி இருந்தது?”

“நன்றாக இருந்தது,” அவள் சொன்னாள், திரும்பி ஜன்னல் வழியே வெளியே விரையும் இரவைப் பார்த்திருந்தாள். மழை இலேசாகப் பெய்து கொண்டிருந்தது, அவள் தன் ஜன்னல் கண்ணாடியைக் கீழே இறக்கி இருந்தாள், ஈரமான காற்று அடிப்பதை உணர்வதற்காக. விரலால் கண்ணாடியின் மேலிருந்த பிளவைத் தடவிக் கொண்டிருந்தாள்.

”கையை உள்ளே வைக்கணும்,” விளக்குக்காக நிற்க நேர்ந்தபோது சொன்னேன். இருட்டில் அவள் கண்கள் ரத்தச் சிவப்பாக இருந்தனவா என்று என்னால் பார்க்க முடியவில்லை, அவளுடைய தாடைக்குக் கீழே இருந்த நிழல் ஒருவேளை சிராய்ப்புகள்தானா என்பதும் தெரியவில்லை.

தாரா பெருமூச்சு விட்டுக் கொண்டு விரல்களை உள்ளே இழுத்தாள்,” வேலை எப்படி இருந்தது அம்மா?”

“என்ன நடந்தது என்றால், திருமதி. மெண்டெஸ் என்னை ஃபோனில் அழைத்தார்.”

நான் ஒரு நிறுத்தப் பலகையைத் தாண்டி வேகமெடுத்துக் கொண்டிருந்த போது, அவளுடைய கண்கள் விரிந்தன. ”நான் ஏதாவது சிக்கலில் மாட்டிக் கொண்டிருக்கிறேனா?”

“நீ ஸில்கீக்குச் சொல்லிக் கொடுத்தது ரொம்ப ஆபத்தானது என்று உனக்குத் தெரியுமா, இல்லையா?”

“அம்மா?” தீனமான கேள்வி, துழாவும் முயற்சி, எனக்கு எத்தனை தெரியும் என்று பார்க்க.

“மயங்கும் விளையாட்டு. அது ஆபத்தானது. வளர்ந்தவர்கள் கூட இதைச் செய்து இறந்து போகிறார்கள்.” இன்னொரு நிறுத்தச் சொல்லும் பலகை, அவள் தன் கைகளை உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தாள். “ஸில்கி எமெர்ஜென்ஸி வார்டுக்குப் போனாள்.”

தாரா தன் கண்களை மூடிக் கொண்டாள். “அவள் சரியாக இருக்கிறாளா?”

“சரியாகி விடுவாள்.”

“நான் எப்பவும் ஜாக்கிரதையாத்தான் இருக்கேன், அம்மா-”

“தாரா,” இரண்டாவதிலிருந்து மூன்றாம் கியருக்கு மாறினேன், ஒரு இருண்ட தெருவில் முன்னேறிப் போனோம், தெரு முனை திரும்பியதும் எங்கள் வீடு, முகப்பு விளக்கு மாடிப்படிகளருகே எதிர்பார்ப்புடன் மின்னியது, ஒளி வீட்டு முன்னால் இருந்த மேபில் மரத்தில் மழையில் நனைந்து, ஈர- கனத்துடன் தொங்கிய இலைகளூடே ஒளி நடனமாடியது. “ இனிமேல் எப்பவும் இப்படிச் செய்ய மாட்டேன்னு நீ எனக்கு சத்தியம் பண்ணனும்.”

அவள் தாடை இறுகியது.

அதிசயம்தான். அவளுடைய அப்பாவின் பிடிவாதமான வாய், அவளுடைய மெல்லிய கோடான உதடுகள். அவள் தலை முடி இப்போதுதான் வளர்ந்து கொண்டிருந்தது, குட்டை முடிகள் வளையங்களாக அவளுடைய காதைச் சுற்றியும், கண் புருவங்கள் மீதும் ஆடின.

“நிறைய சிறுவர்கள் செய்கிறார்கள். யாரும் எங்கேயும் ஆபத்தில் மாட்டல்லை.”

“தாரா?”

”என்னால சத்தியம் பண்ண முடியாது.”

“தாரா.” சில குழந்தைகள் இருக்கிறார்கள், அவர்களோடு நாம் வாதம் செய்ய முடியும். தாரா அவர்களைச் சேர்ந்தவளல்ல. ஆனால் அவளிடம் நாம் விளக்கிப் பேச முடியும். “ஏன் முடியாது?”

“நீங்க என்னை நம்ப மாட்டீங்க.” அவள் இதை நாம் எதிர்பார்க்கக் கூடிய, குழந்தையின் அடம் பிடித்தலாகவோ, வீறாப்பான எதிர்ப்பாகவோ சொல்லவில்லை, மாறாக, சாதாரணமாகப் பிடுங்கலாக ஏற்றுக் கொள்ளப்பட்டதைப் பற்றிய தெளிதலாகச் சொன்னாள்.

“சொல்லித்தான் பாரேன்.”

“என்னால சத்தியம் பண்ண முடியாது,” அவள் சொன்னாள், “ஏன்னா, வேற்று உலகத்தவர்களுக்கு என் உதவி தேவை.”

| |

ஆல்பர்ட் மறுபடி பன்னிப் பன்னிக் கூவுகிறான். மிகவும் உஷ்ணமாக இருக்கிறது, தாராவுக்குத் தண்ணீர் வேண்டும்போல இருக்கிறது. ஆனால் அங்கேயோ ஒருபோதும் தண்ணீரே இருப்பதில்லை போலத் தெரிகிறது. ஆல்பர்ட் அவள் கையைப் பிடித்து இழுக்கிறான். அவளை அவனோடு வரச் சொல்கிறான். அவள் அவனோடு போகிறாள், அவன் வழக்கமாகப் போகிற வழியிலேதான் அழைத்துப் போகிறான். அந்தப் பெரிய இரும்புக் கதவுகளை நோக்கி, பின் கீழ் நோக்கிக் குளிர்ந்த இருட்டுக்குள், பெரிய விசிறிகளின் ரீங்காரம் எங்கும், அவளைத் தரையடிக்கு அழைத்துப் போகிறான், அங்கே மைக்ரொஃபோன் போல ஒன்று இருக்கிறது, அவளுடைய உயரத்தில் வைக்கப்பட்டிருக்கிறது, வளர்ந்தவர்களுக்காக இல்லை. அவள் அதைப் பார்த்துப் பேசுவாள், பாடுவாள், ஏனெனில் அதைத்தான் அவள் செய்ய வேண்டுமென்று ஆல்பர்ட் விரும்புகிறான், அப்போது அவன் அணிந்துள்ள கவசத் தகடுகளில் மெல்லிய ஒளி ஊடுருவிய கற்றைகளின் வடிவில் பிரகாசமான வண்ணங்கள் ஓடுகின்றன.

ஆல்பர்ட்டைத் தவிர வேறு எந்த ஜீவனையும் அவள் இதுவரை இங்கு பார்த்ததில்லை.

அவள் மைக்ரொஃபோனைப் பார்க்கப் பேசுகிறாள், பாடுகிறாள். அவளென்னவோ வேடிக்கைப் பாட்டுகளைத்தான் பாடுகிறாள். தன் அம்மா, அப்பா, அப்புறம் மணமுறிவு பற்றிப் பேசுகிறாள். மருத்துவமனையில் இருந்த நாட்கள் பற்றி, அங்கே தான் கண்ட நண்பர்கள் பற்றி. பூச்சிகள், பலகால் ஜீவன்கள், இரு சக்கர சைக்கிள்கள், சீட்டு விளையாட்டுகள் பற்றியெல்லாம். அவளுடைய நண்பர்கள், ஆசிரியர்கள், அப்புறம் ஒரு நிஜமான பள்ளிக்கூடத்தில் மறுபடி சேர்ந்தது பற்றித் தான் அடைந்த சந்தோஷம்- இப்படிப் பலதையும் பற்றிப் பேசுகிறாள்.

அவனுடைய மேல் ஓட்டில் எங்கும் வண்ணங்கள் பொறுமையில்லாது ஓடுகின்றன, ஆல்பர்ட் காத்திருக்கிறான். அவர்கள் இதைப் போல முன்பும் செய்திருக்கிறார்கள்.

| |

நான் அந்தப் பொதிவின் மீதுதான் குறை கண்டேன். தன் குழந்தைக்கு வகைப்படுத்த முடியாத மனச்சிதைவு இருக்கிறதென்று நினைக்க யாருக்குதான் ஏற்கும்? என் அடுத்த நாளைய சந்திப்புகளை ஒத்தி வைத்தேன், காலையில் வேலையிலிருந்து விடுப்பு எடுத்துக் கொண்டேன், டாக்டர் அல் மன்ஸூருடன் ஒரு அவசர சந்திப்புக்கு ஏற்பாடு செய்து கொண்டேன்.

நான் டாக்டருடன் பேச உள்ளே போனபோது தாரா வெளியில் காத்திருந்தாள். அவருடைய தலை முடிக்கு மேலே முக்காட்டுத் துணி கட்டியிருந்தது, கண்கள் நீர் மல்கி, சிவந்திருந்தன, கன்னத்து எலும்பின் மேல் தோல் தளர்ந்திருந்தது, கண்களின் கீழே நிழல் படர்ந்து தெரிந்தது. எனக்கு டாக்டர் அல் மன்ஸூரைப் பிடிக்கும். காலை 7 மணிக்கு எங்களைப் பார்க்க வேண்டியிருக்குமென்று அவர் சிறிதும் எதிர்பார்த்திருக்கவில்லை என்பது தெளிவாகவே புரிந்தது, என்றாலும் அவர் அங்கு வந்து சேர்ந்திருந்தார்.

நான் அவருடைய மேஜை மீது ஒரு கோப்பை காஃபியை வைத்து விட்டு, உட்கார்ந்தேன். அவர் அதை நன்றியோடு எடுத்துக் கொண்டார், தன் மெல்லிய விரல்களை அந்தக் கோப்பையின் கதகதப்பான காகிதத்தைச் சுற்றிப் பிணைத்தபடி. ஆவியின் மீது அவர் தலையைக் குனிந்த போது விரலில் திருமண மோதிரம் மின்னியது. “ஏதாவது கவலைப்படும்படியாக இருக்கிறதா, ஜில்?” எனக் கேட்டார்.

அவருடைய சொந்தப் பெயர் ஹாதீயா, ஆனால் அதைப் பயன்படுத்த வேண்டும் என்று எப்போதும் நானே எனக்கு நினைவுபடுத்திக் கொள்ள வேண்டி இருந்தது. இத்தனைக்கும் கடந்த நான்கு மாதங்களில் போல, நாங்கள் இருவரும் நல்ல நண்பர்களாகி இருந்தோம். அவர் நான் கேட்கும் கேள்விகளை மதித்தார் என்று நினைக்கிறேன். மற்ற பெற்றோர்களில் யாரும் மருத்துவத் தொழிலில் இல்லை.

நான் என்னுடைய காஃபி கோப்பையைக் குனிந்து பார்த்து விட்டு, தொண்டையைக் கனைத்துக் கொண்டேன். நேரே சொல்வதுதான் மேல். “தாராவின் பொதிவில் ஏதோ பிரச்சினை இருக்கிறதென்று நான் நினைக்கிறேன்.”

| |

இங்கே அதை முயன்றால் அவர்கள் அவளைக் கண்டு பிடித்து விடுவார்கள். அதனால் தாரா உட்கார்கிறாள், கைகளை மடக்கி வைத்துக் கொள்கிறாள், அதிகமாக பொறுமையின்றி ஆடாமல் இருக்க முயல்கிறாள், முதலில் காத்திருக்கும் அறையிலும் சரி, பின்னர் அம்மாவும் டாக்டர் அல்-மன்ஸூரும் பேசுகையிலும் சரி, அவர்கள் பேசுகையிலோ அவளைப் பொருட்படுத்தாமல் பேசுகிறார்கள். ஜன்னல் தடுக்கில் ஒரு பொம்மை வீடு இருக்கிறதா, அதோடு வேறு சில பொம்மைகளும் இருக்கின்றன. அவற்றில் பெரும்பாலானவற்றோடு விளையாடும் வயதைத் தாரா எப்போதோ தாண்டி விட்டாள், ஆனாலும் தனக்குச் சலிப்பு வரும் வரையிலும் தாரா அந்த பொம்மைகளோடும், இதர தட்டு முட்டுப் பொருட்களோடும் ஏதோ செய்து பார்க்கிறாள். சிவப்பு தீயணைக்கும் எஞ்சின் ட்ரக் பொம்மையை ஜன்னல் விளிம்பில் முன்னும் பின்னும் ஓட்டிப் பார்க்கிறாள். ஒரு பெரிய தீ எரிவது போலவும், மாட்டியவர்களைக் காப்பது போலவும் பாவித்து ஒரு விளையாட்டு. அதில் அந்த பொம்மை வீட்டில் ஏணிகளோடும், கொக்கி உள்ள கயிறுகளோடும் அந்த காக்கும் முயற்சி, பொம்மைகள் பொருந்தாத அளவுகளில் இருந்தாலும் நாடகம் அரங்கேறுகிறது. பொம்மைகளெல்லாம் இரண்டாவது மாடியில் இருந்து சாவிலிருந்து தப்புவதற்காக குதிக்க வேண்டிய நிலை, ஏணியின் மேல்படியில் உள்ள தீயணைப்புக்காரர், இவரோ மற்ற பொம்மைகளின் அளவில் பாதிதான் இருக்கிறார், அவற்றை எல்லாம் பிடிக்க வேண்டியிருக்கிறது.

வளர்ந்தவர்கள் என்ன பேசுகிறார்கள் என்பதைப் பற்றி எதுவுமே தெரியாத அளவு விளையாட்டில் மூழ்கி இருக்கிறாள். எப்படியுமே அவர்கள் இவளைப் பற்றி ஏதும் பேசவில்லை, அந்த சோதனை சிகிச்சையில் உள்ள வேறு பெண்ணைப் பற்றித்தான் பேசுகிறார்கள், ஆனால் டாக்டர் அல்-மன்ஸூர் கவனமாக அந்தப் பெண்ணின் பெயரைக் குறிப்பிடாமல்தான் பேசுகிறார். “அவளுக்கு இது போன்ற திட்டமிடும் யோசனைகளெல்லாம் இருக்கவில்லை, ஆனாலும்…”

பேச்சு நிற்கிறது, தாரா நிமிர்ந்து பார்க்கிறாள், அம்மாவும் டாக்டர் அல்-மன்ஸூரும் அவளையே உற்றுப் பார்க்கின்றனர் என்பதை உணர்கிறாள். ”நான் ஏதாவது தப்பாப் பண்ணினேனா?”

“தாரா,” டாக்டர் அல்-மன்ஸூர் தன் தலை முக்காட்டை முடியின் மீது சுருக்கமில்லாமல் இழுத்துக் கொண்டபடி சொல்கிறார்,”இந்த மயங்கும் விளையாட்டை எப்போது விளையாடக் கற்றுக் கொண்டாய்?”

தாரா உதட்டைக் கடித்துக் கொள்கிறாள். அவளுடைய முடி கண்களை மறைத்து விழுகிறது, அதைப் பின்னே தள்ளிக் கொள்கிறாள். அவள் அதைச் சொல்ல மாட்டேனென்று சத்தியம் பண்ணியிருக்கிறாளே. “ ஆஸ்பத்திரியில்,” அதை விருப்பமில்லாமல் வெளியே இழுத்து வந்தபடி, சொல்கிறாள். பொம்மை வீட்டைப் பார்க்கத் திரும்பிக் கொண்டு இன்னொரு கென் பொம்மையை நெருப்பிலிருந்து காப்பாற்றுகிறாள்.

“உனக்கு யார் சொல்லிக் கொடுத்தார்கள்?”

இந்த கென் பொம்மை அத்தனை தூரம் தாண்டவில்லை. ஏணியிலிருப்பவரின் அருகே தாண்டவில்லை, அதனால் குள்ளமான தீயணைப்புக்காரர், படு அவசரமாக எம்பிப் பிடிக்கப் பார்க்கிறார். கென்னுடைய நீட்டிய கைகளில் ஒன்றை அடைந்து கெட்டியாகப் பிடிக்கிறார். தீயணைப்புக்காரர் கைகளில் கையுறைகள் உண்டு, பெரிய ரப்பர் கையுறைகள், அந்த கையுறைதான் வியர்வையால் வழுக்க ஆரம்பித்திருக்கும், கென்னுடைய கைகள் இல்லை. கென் ஆபத்தான விதத்தில் தொங்குகிறான், அந்த தீயணைப்புக்காரர் தன் கால்களை ஏணியின் படிகளில் நன்றாக இடுக்கிக் கொண்டு, கென்னுடைய கையைப் பிடித்து இழுக்கிறார். தாரா கென்னுடைய உதவி கேட்கும் தீனக் குரலையும், தீயணைப்புக்காரரின் சமாதானங்களையும் மாறி மாறி நடித்துப் பேசுகிறாள்.

பெரியவர்கள் மௌனமாகக் கவனிக்கிறார்கள். கடைசியில், தாராவின் அம்மா, தொண்டையைக் கனைத்து விட்டு, ஜாக்கிரதையாகக் கேட்கிறாள், “தாரா, அந்தக் கேள்வி உன் காதில விழுந்ததா?”

“மத்தவங்கள்லே ஒரு பொண்ணு,” தாரா சொல்கிறாள், கென்னை அங்கும் இங்கும் ஊசலாட விட்டபடி, கைகள் நழுவுகிற மாதிரி பாவித்து. அவனைக் கவனமாகப் பார்த்துக் கொண்டிருக்கிறாள். ஒரு வேளை தீயணைப்புக்கார் ஏணிப்படிகள் அவர் வயிற்றில் உறுத்துமளவு கொஞ்சம் மேலே ஏறினால், அவர் தன் பிடியை விடாமல் காக்கலாம். ஐயோ, வேண்டாம், கென் திணறுகிறான். பயப்படாதீங்க! நான் உங்களைப் பிடிச்சிட்டேன்! தீயணைப்புக்காரர் கூவுகிறார்.

“எந்தப் பெண்?”

தாரா தோள்களைக் குலுக்குகிறாள். அவள் நினைவுபடுத்திக் கொள்ள மாட்டாள். அது பொய் இல்லை, அவர்கள் அவளை நினைவுபடுத்திக் கொள்ளச் செய்யவும் முடியாது. இப்போது அவர்களுடைய இழுபறி அத்தனை சுவாரசியமாக இல்லாததால், தீயணைப்புக்காரர் கென்னை இழுத்து விடுகிறார்.

தாராவுக்கு மகிழ்வான முடிவுகள் பிடிக்கும்.

“தாரா,” அம்மா அமைதியாகச் சொல்கிறாள்,”அவள் நிறைய ஆபத்தில் இருப்பாள். நீ எங்களுக்குச் சொல்லியே ஆக வேண்டும்.”

அதற்கு நிறைய நேரம் பிடிக்கிறது. ஆனால் கடைசியில், அவள் சொல்லி விடுகிறாள்.

| |

ஜோடி கார்ட்டரை எனக்கு ஏதோ கொஞ்சமாகத்தான் தெரியும். தாராவை விட வயது கூடுதலானவள், பனிரெண்டு, பதின்மூன்று வயது இருக்கும், அவர்கள் ஒரே அறையிலும் இருந்திருக்கவில்லை. ஆனால் கொஞ்ச நேரம் சேர்ந்து இருந்திருக்கிறார்கள், எல்லாருக்குமான பொது அறையிலோ, அல்லது சிறுமிகளின் குளியலறையிலோ.

எத்தனை சிறுமிகளுக்கு ஜோடி இந்த மயங்கும் விளையாட்டைச் சொல்லிக் கொடுத்திருப்பாள் என்று யோசித்தேன். டாக்டர் அல்-மன்ஸூர் சொன்னதைப் பார்த்தால், அவளுக்கு ஏதும் இப்படி பிரமைகள் இல்லை என்று தெரிந்தது. இந்த இரண்டு கேள்விகளுக்கும் பதில் காண வேண்டியது என் வேலை இல்லை என்பதில் எனக்கு இருந்த மகிழ்ச்சி குறித்து எனக்குக் குற்ற உணர்வு எழுந்தது.

டாக்டர் அல்-மன்ஸூரும் நானும் அவசரமாகக் கலந்து பேசினோம், தாராவோ இன்னும் கொஞ்சம் பார்பி பொம்மைகளோடும், தீயணைப்பு ட்ரக் பொம்மையோடும் விளையாடினாள். அத்தனை குழந்தைகளில் தாரா ஒருத்திதான் இப்படி பிரமைகள் இருப்பதாகச் சொல்கிறாள் என்பதை நினைக்கவும் என் கைகளெல்லாம் சில்லிட்டுப் போயின.

தாராவை மறுபடி மருத்துவ மனையில் அனுமதித்தோம்- அவளுடைய பழைய அறையே கிட்டியது- டாக்டர் அல்-மன்ஸூர் அவளைக் கண்காணிக்க ஏற்பாடு செய்தார். அவளைக் கட்டிப் போடவில்லை, ஆனால் ஒவ்வொரு 15 நிமிடமும் அவளை மேற்பார்வையிட ஏற்பாடு, அந்த அறையில் ஒரு ஒரு பக்கம் மட்டுமே தெரியும் கண்ணாடி ஜன்னல் இருந்தது, அதனால், தனியாகத் தான் இருப்பதான நினைப்பு அவளுக்கு இருக்கும்.

காத்திருக்கும் அறையில் தூங்குகிறேன் என்று நான் வாதிட்டுப் பார்த்தேன். டாக்டர் அல்-மன்ஸூர் தன் அலுவல் அறையிலேயே ஒரு சோஃபாவைக் கொடுத்து மறுவழி சொன்னார். தாராவும் நானும் வீட்டுக்கு ஒரு தரம் போய் அவளுடைய மாற்று உடைகளை எடுத்து வந்தோம், அவளுக்கு மதிய உணவும் கொடுக்க ஏற்பாடு செய்தேன். இடையில் டாக்டர் அல் மன்ஸூரும், திருமதி கார்ட்டரும் நீண்ட நேரம் ஜோடியோடு பெசினார்கள். அவளுமே ஏற்கனவே பிரமைகள் இருந்ததற்காக மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டிருந்தாள்.

பிறகு, டாக்டர் அல்-மன்ஸூரும், நானும் அமர்ந்து இன்னும் கொஞ்சம் காஃபி குடித்தோம்- இந்த தடவை இன்னும் மோசமான காஃபி, மருத்துவ மனை ஊழியர்களின் பொது காஃபிக் குடுவையில் இருந்து. செயற்கை க்ரீம் பொடி சேர்த்து, ரொம்பவே இனிப்பாக, ஏனெனில் வேறெப்படியும் அதைக் குடித்து வைக்க முடியாது என்பதால்- அங்கங்கே செதிளாக உடைந்திருந்த கோப்பைகளில் ஊற்றி.

மருத்துவ மனை ஊழியர் ஒருவர் தாராவை அவளை அந்த அறையில் தங்குவதற்குத் தயார்படுத்திக் கொண்டிருந்தார். அவள் அங்கே தங்க வேண்டும் என்று நான் சொன்னதற்காக அவளுக்குப் பயங்கரக் கோபம், நிறைய அழுது ஆகாத்தியம் எல்லாம் செய்து ஓய்ந்து, அப்புறம் இரண்டு தடவை முகத்தைத் தூக்கி வைத்துக் கொண்டது எல்லாம் முடிந்த பின், அவளுக்கு எஞ்சிய சீற்றம் அடங்குவதற்குக் கொஞ்சம் நேரம் தனியாக இருக்கட்டும் என்று நான் பின் வாங்கி இருந்தேன். என்ன இருந்தாலும், தாரா வன்மம் பாராட்டுகிற குழந்தை இல்லை.

“இந்த மயங்குகிற விளையாட்டு பற்றி எனக்கு எதுவும் தெரிந்திருக்கவில்லை,” என்றார் டாக்டர் அல்-மன்ஸூர், காஃபியை ஊதி ஆற வைத்தபடி.

“இது புதிது அல்ல.” குழந்தைகள் மனநல வைத்தியத்தில் எனக்குப் பயிற்சி இல்லை, ஆனால் தொழிலில் பேச்சுகளில் கேட்பதிலும், மருத்துவ சஞ்சிகைகளில் ஆங்காங்கே படிப்பதிலும் தகவல் கிட்டும். ”இன்ஹேலர்களைத் தவறாகப் பயன்படுத்துவது போல. ஒவ்வொரு தலைமுறையும் எதையாவது புதிதாகக் கண்டு பிடிக்கும், அல்லது அதில் சிலர் இப்படி இருக்கிறார்கள். என்ன யோசிக்க வேண்டி இருக்கிறது என்றால்-”

அவர் தலையசைத்து ஆமோதித்தார். “இந்தப் பொதிவு பிரமைகளை உருவாக்குகிறதா என்பது ஒரு பிரச்சினைதான், அது குறித்து நாம் யோசிக்கத்தான் வேண்டும்.”

“அவள் முழுதும் நினைவு தப்புகிற நிலைக்கு வரும்போதுதான் இந்தப் பிரமைகள்…”

“உறக்கம் வருவதற்கு முந்தைய நிலையிலோ, உறக்கத்திலிருந்து விழிக்கும் நிலையிலோ(ஹிப்னொகாகிக்) இது வருவதில்லை. தூக்கத்தால் இது மாறுவதில்லை. இது பிராணவாயு குறைவதால்தான் (ஹைபாக்ஸியா) நேர்கிறது.”

இப்போது காஃபியை உற்றுப் பார்ப்பது என் முறையாயிற்று. “அப்படித்தான் தோன்றுகிறது. அந்தப் பிரமையின் தன்மை பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?”

“யாரோ வேற்று கிரகத்தவர் அவளோடு தொடர்பு கொள்ள முயல்கிறார் என்பதா? மனச்சிதைவு நிலையில் இது பரவலாகக் காணப்படும் ஒரு விவரம்.”

“ஆனால், அது ஒரு அறிகுறிதான் அவளிடம் தென்படுகிறது. மனநிலை ஊசலாடுவது எல்லாம் இல்லை. அவள் தெளிவாக யோசிக்கிறாள்-”

டாக்டர் அல்-மன்ஸூர் புன்னகைத்தார்.”புதிர்தான், இல்லையா?” உடனே எதையோ கேட்கிற மாதிரி தலையை ஒரு புறம் சாய்த்துக் கொண்டு, ஒரு விரலை உயர்த்தினார், என்னை மௌனமாக இருக்கச் சொல்வது போல. “ஓ,” என்றார், “உங்களுக்குத் தெரிகிறதா, இங்குதான் ஏதோ இருக்கிறது என்று நினைக்கிறேன்.”

என் உடலை மாற்றிப் பொருத்தியதில் ப்ளாஸ்டிக் நாற்காலி கிறீச்சிட்டது. இன்னும் ஏதும் நேரமாகி விடவில்லை, பகலுணவைத் தாண்டிச் சிறிதே நேரமாகி இருந்தது, இருந்தும் ஏதோ இரவில் ஆறு அல்லது ஏழு மணி ஆகிவிட்டது போலிருந்தது எனக்கு. கைக்கடிகாரத்தை ஒவ்வொரு முறை பார்க்கும்போதும் எனக்குச் சிறு அதிர்ச்சி ஏற்பட்டது. மிகவும் வேலை நிறைந்த தினம். “சரி, என்னை சஸ்பென்ஸில் வைக்காதீர்கள்.”

”பொதிவுகளில் க்வாண்டம் சில்லைப் பயன்படுத்துகிறார்கள்.”

“எனக்குத் தெரியாததாக ஏதாவது சொல்லுங்கள்.”

“பாருங்க, இந்தச் சில்லுகளெல்லாம் ஒரே நேரத்தில் உற்பத்தி செய்யப்படுகின்றன, அப்படித்தானே? அந்த இடமும் ஒன்றேதான். ஒருவேளை எல்லாமே ஒரே ஒடுக்கப்பாட்டுப் பொருளில் இருந்து கூடத் தயாரிக்கப்பட்டிருக்கலாம். அப்போது, க்வாண்டம் இடைமறித்தல் இருந்தால் என்ன ஆகும்? நான் என்ன சொல்கிறேன் என்றால்-”தன் நீண்ட, நேர்த்தியான கையைத் தன் முகத்தருகே அசைத்தார், அவருடைய வைரம் மின்னியது- “இந்தச் சில்லுகள் தம் மின் கோலங்களை இந்தப் பெண்களிடையே ஒலிபரப்பினால் என்ன ஆகும்? மிக மெலிவான பரப்பலாக இருக்கலாம். ஏற்கனவே பிராணவாயுக் குறைபாட்டால் அவர்களுடைய நரம்புத் தொடர்புகள் சரிவர இணைக்காமல் தவறுகளோடு பொறி வீசிக் கொண்டிருக்கையில், இந்தக் கோலங்கள் மேலே பதிகின்றன, மேலும் தாராவின் ஆழ்மனது அவற்றைக் குறியீடுகளாக மொழி பெயர்க்கிறது, கனவில் நடப்பது போல- “

“அந்தக் குறியீடு ஒரு அயல் கிரகத்தார் நம்மோடு தொடர்பு கொள்ள முயல்வதாக, உருமாற்றி வருகிறது. இது சாத்தியமா? இந்த ஒலிபரப்பு மூலம் இடம் மாறுவதைச் சொல்கிறேன்.” க்வாண்டம் மெகானிக்ஸ் பற்றி எனக்குத் தெரிந்தது கையளவுதான், ஆனால் இது எனக்கு எப்படிப் பட்டதென்றால்….

மோசம்தான், தாராவால் சாதாரண வாழ்க்கை நடத்த முடிவதற்கு ஒரே வழியாக இப்போது தெரியும் அந்தப் பொதிவை அவளிடமிருந்து வெளியே எடுக்காமலிருக்கச் சொல்லப்படும் ஒரு சாக்கு போலிருந்தது இது. இது ஒரு சிறு கீற்று நம்பிக்கை, ஆனால் அப்படி ஒன்றும் ஒதுக்கக் கூடியது இல்லை.

அவர் தன் முகத்தைக் கோணிக் கொண்டார், தன் கீழ்த் தாடையைப் பின்னிழுத்து, கீழுதட்டை மெல்லிய கோடாக்கி, தன் மூக்கையும் சுளித்தார். “நான் அப்படித்தான் ஊகிக்கிறேன்?”

“ஆனால் இது தாராவுக்கு மட்டும் ஏன் நடக்கிறது?”

“அவளுடைய சில்லில் ஏதோ குறை இருக்கிறதா? அல்லது ஏதோ மிகச் சரியாக இருக்கிறது. இதுதான் நடக்கிறது என்றால், இது செயல்படுகிற தொலை நுண்ணுணர்வு (functional Telepathy).”

“அப்படி என்றால் நிஜமாக ஏதும் பிரச்சினை இல்லைதானே?”

“அதாவது இந்த கிளினிக்கில் பாதிப் பேர் வேடிக்கையாக இருக்கிறதென்று நினைத்துத் தங்களைத் தாங்களே கழுத்தை நெறித்துக் கொள்வதைத் தவிர வேறொன்றும் இல்லை என்று சொல்கிறீர்களாக்கும்?”

“ஆ, அதை…”என் நாற்காலியில் பின்னால் இடித்து உட்கார்ந்தேன். ஏதோ ஒரு கட்டத்தில் மிக முன்னால் நகர்ந்து வந்திருக்கிறேன், நானறியாமல். “அது பற்றி தாரா ஏதும் உறுதி கொடுக்க மாட்டேனென்கிறாள். அவளுடைய அயல்கிரகத்து நபருக்கு உதவி தேவை என்று நினைக்கிறாள்.”

“அவள் உறுதி கொடுத்தால், நீங்கள் அவளை நம்ப முடியுமா?”

”தாராவையா? ஆமாம். ஆனால் ஜோடியை என்ன சொல்வது?”

“திருமதி கார்ட்டரை அவர் என்ன நினைக்கிறார் என்று கேட்கிறேன். இதை எல்லாக் குழந்தைகளிடமும் வைத்துப் பேசத்தான் வேண்டும். ஒரு மருத்துவ மனை ஊழியர் எல்லாரையும் தொலைபேசி மூலம் கூப்பிட்டுப் பேசிக் கொண்டிருக்கிறார். தாரா விஷயம் ஒரு தனியான நிகழ்வாக இருக்கலாம். என் ஊகம் சரியாக இருந்தால், நாம் அந்தச் சில்லின் மின் அழுத்தத்தைக் கொஞ்சம் கீழிறக்கினால் அவளுக்குப் பிரமைகள் ஒருவேளை போய்விடலாம். என் ஊகம் அனேகமாகச் சரியாயிராது. ஆனால் அப்படிக் கீழிறக்குவது அவளுடைய வலியைச் சமாளிக்கும் திட்டத்தைப் பாதிக்கும்.”

“சரி,” நான் சொன்னேன். என் பாதிக் காலியான கோப்பையை டாக்டருடைய மெஜையின் விளிம்பின் அருகே வைத்தேன். “நான் போய் அவளிடம் பேசுகிறேன். நல்லபடியாகப் பேசுவது வேலை செய்யவில்லை என்றால், பயமுறுத்தியே ஆக வேண்டி இருக்கும்.”

| |

இரவுச் சாப்பாட்டிற்கு முந்தி அம்மா திரும்ப வருகிறாள், தாராவைக் கஃபெடேரியாவுக்குச் சாப்பிட அழைத்துப் போகிறாள். தாராவுக்கு கஃபெடேரியா பிடித்திருக்கிறது. வீட்டில் அடிக்கடி கிடைக்காத ஏதாவது எப்போதும் கஃபெடேரியாவில் கிடைக்கும். இன்று மீட்லோஃபும், ஆப்பிள் பையும், பழுப்பு க்ரேவியோடு கிட்டின. மீட்லோஃபுக்குக் க்ரேவி, பை – க்கு இல்லை.

அம்மா கவலையோடு அவளைப் பார்த்துக் கொண்டே, கிட்னி பீன்களையும் காட்டேஜ் சீஸையும் இப்படி அப்படித் தள்ளியபடி-வேறேதோ தட்டில் இருக்கின்றன, அதெல்லாவற்றையும் ஏன் மனிதர் சாப்பிடுகிறார்கள் என்பது தாராவுக்குப் புரிவதில்லை- தன்னுடைய பச்சை இலை, கீரை வகைகள் இருக்கிற தட்டில் சும்மா அளைந்து கொண்டிருக்கிறாள். “டாக்டர் அல்-மன்ஸூர் நீ பார்க்கிற விஷயங்களெல்லாம் அந்தப் பொதிவிலிருந்து கிட்டுகிற மின் பின்னூட்டத்தின் விளைவுகள் என்று நினைக்கிறார்,” என்கிறாள், இதற்குள் தாரா மீட்லோஃபில் பாதியைச் சாப்பிட்டிருக்கிறாள்.

“அது பொதிவின் விளைவு என்று நானும் நினைக்கிறேன்,” தாரா ஒத்துக் கொள்கிறாள். தன் கழுத்தில் இருக்கிற உராய்வுகளை மறைக்கும் விதத்தில் அவள் ஒரு கழுத்து உயரமான சட்டையை அணிந்திருக்கிறாள். அம்மா அதைப் பார்த்து முகம் சுளிக்கிறாள். “ஆனால் மின்பின்னூட்டமாய் இராது. நான் ஆல்பர்ட்டைப் பற்றிச் சொல்கிறேன்.”

”ஆல்பர்ட்டா, யார்?”

“அந்த அயல் கிரகத்து ஆள்.” தன் முள் கரண்டியால் வெட்டுவது போல அசைக்கிறாள். “ அது ஒரு நபர் இல்லை. அது மொத்த ஜீவராசி என்று நினைக்கிறேன்.”

அம்மா சிறிது முன்னே குனிகிறாள், கைகள் அவளுடைய அளையப்பட்ட தட்டின் பின்னே மடிந்திருக்கின்றன. “அவன் உன்னிடம் தன் பெயரைச் சொன்னானா?”

“இல்லை.” தாரா முள் கரண்டியைக் கீழே போட்டு விட்டு, தன் தலையருகே கைகளை முன்னும் பின்னும் அசைக்கிறாள். “அவன் நிறங்களில் பேசுவது போலத் தெரிகிறது. அவன் ஏன் ஆல்பர்ட் என்றால், ஆல்பர்ட் ஐன்ஸ்டைனின் நினைவில் அந்தப் பெயர்.” கொஞ்சம் பாலைக் குடிக்கிறாள், மறுபடி முள்கரண்டியை எடுத்துக் கொள்கிறாள். “ஆனால் அவன் நான் ஒரு மைக்ரொஃபோனில் பேசுவதற்காக ஒவ்வொரு தடவையும் காத்திருக்கிறான். அது ஒரு கணினியோடு இணைக்கப்பட்டிருக்கிறது. நான் எப்படிப் பேசுகிறேன் என்று கற்க அவன் முயல்வதாக எனக்குத் தோன்றுகிறது. எப்படியுமே, அவன் பெரிய ஆபத்தில் இருப்பதாக எனக்குத் தோன்றுகிறது. அவனுக்கு உதவி தேவை.”

“என்ன மாதிரி உதவி?” அம்மா மறுபடி அந்த கிட்னி பீன்களைத் தட்டில் துழாவத் துவங்குகிறாள், தான் மரியாதை காட்டுவதாகப் பாசாங்கு செய்து கொண்டு.

“எனக்குத் தெரியாது,” தாரா சொல்கிறாள். அவள் திடீரென்று நிறுத்துகிறாள், அம்மா அவளைக் கண்டிக்கு முன், வாயில் நிறைந்துள்ள நசுக்கிய உருளைக் கிழங்கை அசை போட்டு விழுங்குகிறாள். கையை நீட்டி, அம்மாவின் தட்டிலிருந்து கல்லாக இருக்கிற, உருண்டையான ஒரு திராட்சைப் பழத்தைப் பொறுக்குகிறாள், அம்மாவின் அனுமதிப்புத் தலையசைப்புக்குக் காத்தபடி. அது அவளுடைய பற்களிடையே நசுங்கித் தித்திப்பாக சாறை வழிய விடுகிறது. அவள் இன்னொன்றை எடுக்கிறாள். “நான் கொஞ்சம்…. அது நிஜமாகவே முக்கியமானதாகத் தெரிகிறது.”

”உனக்கு எப்படித் தெரியும்?”

“எனக்குத் தெரியும், அவ்வளவுதான்.”

அம்மா தன் முள் கரண்டியின் முனையால் ஒரு கிட்னி பீனை எடுக்கிறாள், அதை உற்றுப் பார்க்கிறாள். அதைத் தன் வாயில் போட்டுக் கொண்டு, மெல்ல அரைக்கிறாள். “தாரா,” அவள் சொல்கிறாள், “ஆபத்தான இந்த மயங்குகிற விளையாட்டை நீ இனிமேல் விளையாடாமல் இருப்பது மிக முக்கியம். ஆல்பர்ட் நிஜமானவன் என்றாலும், அவன் ஒரு வளர்ந்த மனிதன், விஞ்ஞானி. வேற்று கிரகத்தவன் ஆனாலும் சரி, அவன் என்னோடு இதில் ஒத்துக் கொள்வான். இதை நீ ஒத்துக் கொள்வாயா?”

”நான் எப்போதுமே ஜாக்கிரதையாக இருக்கிறேன். அதுதான் பிரச்சினை. அவனோடு இன்னும் கொஞ்சம் நேரம் இருந்தேனானால், நாங்கள் பேச முடியும்.”

“நீ எவ்வளவு ஜாக்கிரதையாக இருக்கிறாய் என்பது விஷயமில்லை, அது ஆபத்தானது.”

“அம்மா–”

“தாரா.” அம்மா முள்கரண்டியைக் கீழே வைக்கிறாள், அந்தக் குரலில் பேசுகிறாள், “எனக்குச் சத்தியம் பண்ணு.”

தாரா தன் சாப்பாட்டை முடிக்கையில் மௌனம் சாதிக்கிறாள், அம்மா அவளை முறைத்துப் பார்க்கிறாள் ஆனால் எதையும் சாப்பிடவில்லை. அவளை இன்று இரவு மருத்துவ மனையில் தூங்க வைக்கப் போகின்றனர், விளக்குகள் அணையாது, அந்த ஒருவழிக் கண்ணாடிக்குப் பின் எப்போதும் நிழலாடும்.
அது இருக்கட்டும். அவளால் எங்கே வேண்டுமானாலும் தூங்க முடியும். அவளிடம் ஒரு திட்டம் இருக்கிறது.

| |

நான் சோஃபாவில் உறங்குவதாகத்தான் இருந்தது. முன்னாடியே சொல்லி இருக்க முடியும், நான் மொத்த நேரமும் கண்காணிப்பு அறையில்தான் இருப்பேன் என்று. தாரா உறங்குவது போல இருந்தது, அந்த வெளிர் நீல விளக்கொளியில் அவளுடைய தலைமுடி தலையணையில் விரிந்து இருந்தது, அவளுடைய முழங்கால்கள் எப்போதும்போல் மார்புக்கருகில் இழுக்கப்பட்டு இருந்தன. நான் கண்காணிக்கும் அறையில் அமர்ந்து அவளைப் பார்த்துக் கொண்டிருந்தேன், விளக்குகள் இங்கு அணைக்கப்பட்டிருந்தன. அதனால் ஒவ்வொரு தடவை டாக்டர் அல்-மன்ஸூர் அல்லது வேறு யாரோ ஒரு ஊழியர் ஒரு சோதனைக்கு வரும்போது, தரையில் ஒரு துண்டு வெளிச்சம் விழும், ஒரு நிமிடம் என் கண்கள் கூசும்.

ஒவ்வொரு தடவையும், கதவருகில் அவர்கள் சிறிது தாமதிப்பார்கள், ஜன்னல் வழியே ஒரு கணம் பார்ப்பார்கள், என்னைப் பார்த்துச் சிரிப்பார்கள், பின் அகல்வார்கள். டாக்டர் அல்- மன்ஸூர் நான் அங்கேயே பெஞ்சில் உறங்கி விடுவேன் என்று எதிர்பார்த்தார் போலிருக்கிறது. அது என்ன சாத்தியமா.

காலை இரண்டு மணி, தாரா துடிக்க ஆரம்பித்தாள்.

அவள் படுக்கையிலிருந்த மேல்போர்வைகளை உதைத்துத் தள்ளினாள், படுக்கையிலிருந்து உருண்டு கீழே விழுந்தாள், நான் அங்கிருக்கும் ஊழியர்களை அழைக்கும் பொத்தானை அழுத்தி விட்டு, அறைகளிடையே இருந்த கதவைத் திறந்து அந்த அறைக்குள் போவதற்குள், படுக்கைக்குக் கீழே உருண்டு போய் விட்டாள். நான் அவள் பெயரைக் கூவி அழைத்தபடி அவளுக்குப் பின்னே போக முயன்றேன். கைகளாலும் முழங்காலாலும் தவழ்ந்து போனேன், படுக்கையின் உலோகத் தடுப்புக் கம்பி என் தோளில் இடித்து என்னை முழங்காலில் இருந்த நிலையிலிருந்து உருட்டித் தள்ளி விடவும், என் வயிற்றின் மேல் விழுந்தேன். நான் அவள் பின்னே நெளிந்து சென்றேன். அவள் படுக்கையின் தலைமாட்டுப் பலகையருகே தன்னை இடித்துக் கொண்டு பக்கவாட்டில் சுருண்டு கொண்டாள். முழங்கால்களை உயர இழுத்துக் கொண்டாள், கைகளால் என்னைப் பின்னே தள்ளியவள், என்னை தூரத் தள்ளினாள். என்னோடு சண்டை போட்டுக் கொண்டிருந்தவளின் கைகள் திடீரென வலுவிழந்தன, அவள் கால்கள் உதைத்தன அல்லது நடுங்கி உதறின என்று சொல்லவேண்டும்.

எனக்கு அவள் மூச்சு விடுவது கேட்கவில்லை.

அவளுடைய மெல்லிய வளையக் கூடிய குதிகால் எலும்புகளைப் பற்றி அவளை வெளியே இழுத்தேன். அவளை வெளியே கொண்டு வருவதற்குள் அவள் துவண்டு போயிருந்தாள். முதலில் அவள் வேண்டுமென்றே தன்னைக் கனமாக்குவதற்காகத் துவண்டிருக்கிறாள் என்று நினைத்தேன், அவளை வெளிச்சத்தில் கொணர்ந்த போது, அவள் எத்தனை துவண்டு போயிருந்தாள் என்று கவனித்தேன். விளக்கொளி நிறம்தான் அவளை நீலமாக்குகிறது என்று நினைத்தேன். ஆனால் கதவு தடாலெனத் திறந்து வெளியிலிருந்து ஓளி உள்ளே வீசியபோது அவளுடைய தோல் நீலமாகிக் கொண்டிருந்ததைப் பார்த்தேன்.

முதலில் சுவாசப் பாதையைச் சோதிக்கவேண்டும் என்பது பாடம். அவளுடைய வாய் திறந்து கொண்டது, தொங்கலாகத் தெரிந்தது, என் விரல்களை அதனுள் செலுத்தினேன். நாக்கு பின்னே விழுந்திருக்கவில்லை, ஆனால் தொண்டையின் பின்புறத்தில் என் விரல்களில் ஏதோ வழுவழுப்பாக, தொடுகைக்கு அழுத்தமானதாகப் பட்டதாகத் தோன்றியது.

“ஜிலியன்,” டாக்டர் அல்-மன்ஸூர் சொன்னார், அவர் கை என் தோள் மீது தொட்டது.

“இவள் மூச்சுத் திணறிக் கொண்டிருக்கிறாள்,” நான் சொன்னென், என்னை அவர் தள்ளி அகற்ற அனுமதித்தேன். “அவள் சாப்பாட்டின் போது ஒரு திராட்சைப் பழத்தைக் கைக்குள் எடுத்துக் கொண்டிருந்திருக்கிறாள். எனக்கு யோசிக்கத் தெரியவில்லை-”  முட்டாள். முட்டாள். நான் யோசிக்கவே இல்லை.

டாக்டர் அல்-மன்ஸூர் தன் விரல்களிலிருந்து மோதிரங்களைப் பிடுங்கி உருவினார். தரையில் அவை விழுந்து அதிர்ந்தன, தங்கமும் வைரமும் சட்டை செய்யப்படாமல் உருண்டு ஓடின, அவர் என் பெண்ணின் இடுப்பின் குறுக்கே அமர்ந்தார், அவளுடைய கழுத்தை நிமிர்த்தினார். தன் உள்ளங்கைகளின் அடிப்புறங்களைப் பிணைத்து அவளுடைய மார்பு எலும்புக்குக் கீழே அழுத்தினார். அவரை என் முழு மனதோடு நான் நேசித்தேன்.

தாரா என்னிடமிருந்து விலகிப் படுக்கை அடியில் மூலையில் ஒடுங்கியதை நினைத்துப் பார்த்தேன், அவளுடைய விழிகள் விரிந்தும், குவிப்பின்றியும் இருந்தன. எனக்குத் தெரிந்த குழந்தைகளில் தாரா மிகச் சாமர்த்தியமானவள். அவள் நீச்சல் பயிற்சிகள் எடுத்துக் கொண்டிருந்தாள், முதலுதவி வகுப்புகளில் பயின்றிருந்தாள். அவளுக்குப் பத்து வயது. குழந்தை இல்லை, வேண்டுமானால் அவளையே கேளுங்கள். அவளுக்குப் பூச்சியியலும், டைனொசார்கள் பற்றியும், விண்மீன் வானியல் பற்றியும் எனக்கு எந்த நாளும் தெரியக்கூடிய அளவை விட அதிகம் தெரியும்.

நான் அவளை விடாமல் பின்னேயே வருவேன் என்று அவளுக்குத் தெரியும். நான் அவளைக் காப்பாற்றி விடுவேன் என்றும் தெரியும். அவள் படுக்கையை விட்டுக் குதித்து விழுந்தது நான் அவள் துன்பத்தில் இருக்கிறாள் என்பதைப் பார்ப்பதற்காகத்தான். என்னிடம் இருந்து உதைத்துப் பின்னே போனது இன்னும் கொஞ்சம் நேரம் அவளுக்குக் கிட்டுவதற்காகத்தான்.

பேய் பிடிக்கிறதென்பதைப் பற்றிச் சொல்வார்கள், கேட்டிருப்பீர்கள். பெரிய சிக்கல்களில் தப்பி வெளிவந்தவர்கள் அப்புறம் சொல்வார்கள், தாம் அப்போது என்ன செய்தோம் என்பதே அவர்களுக்குத் தெரியாது என்று.

எனக்கு இப்போது நான் என்ன செய்கிறேன் என்று தெளிவாகத் தெரிந்திருக்கிறது. நான் கீழே குனிந்தேன், டாக்டர் அல்-மன்ஸூரின் மணிக்கட்டுகளைப் பற்றினேன். கெட்டியாகப் பிடித்துக் கொண்டேன். “ஜிலியன், விடுங்கள்,” என்றார் அவர். “இது ஹைம்லிஹ் செயல்முறைதான்.”

அவர் முகம் என் முகத்திலிருந்து சில அங்குலங்களே தள்ளி இருந்தது, கண்கள் தூக்கமில்லாததால் சிவந்து இருந்தன, மூச்சு அடைத்ததால் இல்லை. அவருடைய தலை முக்காடு பின்னே விழுந்திருந்தது, தலை முடி தோளெங்கும் கலைந்து கிடந்தது. அதனால் பரவாயில்லை, இங்கு இருந்தவர்கள் அனைவரும் பெண்களே.

“முப்பது வினாடிகள்,” நான் சொன்னேன்.

அவர் என்னைப் பார்த்து திகைப்பில் உற்று நோக்கினார். என் கைகள் மீது சாய்ந்தார், ஆனால் நான் அவர் மணிக்கட்டுகளை விடாமல் பிடித்தேன். கெட்டியாக.

”மூளைச் சேதம்,” அவர் சொன்னார்.

கனவுகள் வெகு வேகமாக நிகழ்ந்து விடும். துரிதக் கண் அசைவுச் சுழற்சியின் (REM Cycle) நீளம் அவற்றைப் பாதிக்கும் என்பது உண்மைதான், ஆனால் சில சமயங்களில், நிறைய நேரம் நீடிக்கும் கனவுகள் கூட, பலமணிகள், நாட்கள் நீடித்தது போலத் தோன்றும் கனவுகள் கூட, சில வினாடிகளில் முடிந்து விடும்.  மூளைத் தண்டிலிருந்து மேலெழும்பும் ஒழுங்கில்லாத சமிக்ஞைகளால் மூளையில் பீறி எழும் மின்சாரக் குழப்படியிலிருந்து சில குறியீடுகளைப் பிரித்தெடுத்து அர்த்தப்படுத்த முயலும் முன் மூளையின் நடவடிக்கைதான் அவை. “ஹாடியா, முப்பது வினாடிகள். இருபது வினாடிகள். அவள் ஆல்பர்ட்டோடு பேசட்டும்.

அவர் தன் உதடுகளை ஈரப்படுத்திக் கொண்டார். பிறகு தன் தாடையை சட்டெனெ உயர்த்தினார், நான் அவர் எண்ணத் துவங்கியதைப் பார்த்தேன். பதினைந்து, பதினான்கு, பதின்மூன்று-

| |

ஆல்பர்ட் காத்திருக்கிறான். அவனுக்கு பெரும் அவசரமும் கூட. இந்த முறை அவன் எந்த முன் தயாரிப்புமில்லாமல், தாராவின் கையைத் தன் பயன்படு கரத்தில் பிடித்துக் கொண்டு கிட்டத்தட்ட தர தரவென்று அந்த சுரங்கப் பாதைக்குள் இழுத்துப் போகிறான், அவனுடைய பல கால்களில் ஊதாவும், பச்சையும், தங்கமும் அலைபாய்கின்றன, அவர்கள் தரையடி அறைக்கு ஓடுகிறார்கள். இந்த முறை எல்லாம் மாறி இருக்கிறது. மாறிய-கனவாய், மைக்ரொஃபோனைக் காணவில்லை, அதனிடத்தில் ஒரு கட்டுப்பாட்டுத் தகடு இருக்கிறது, அதுவும் தாரா தன் கைகளைப் பயன்படுத்த ஏற்ற அளவுடையதாக இல்லை.   வளைவான வாயிலைத் தாண்டி சிறிது உள்ளே வந்ததும் குழப்பத்திலிருப்பதால் அவள் நின்று விடுகிறாள். ஆல்பர்ட் வந்து அவள் என்ன செய்யவேண்டும் என்று காட்டுவதற்காகக் காத்திருக்கிறாள். அவள் சிறிது யோசிக்கையில் சிறிது விசித்திரமாகவே இருக்கிறது, அந்த நுழைவாயில் அவளுக்கு வசதியாக உயரமாக இருக்கிறது, இத்தனைக்கும் ஆல்பர்ட் என்னவோ இரண்டடிதான் உயரம்.

அவன் தன் பயன்படு கரத்தைக் கட்டுப்பாட்டுத் தகட்டின் மீது வைக்கிறான். அந்த தட்டுப்பலகை மீது அவனுடைய கரங்கள் லாகவமாக ஒரு பூச்சியின் நளினத்தோடு நகர்கின்றன. “தாரா,” என்று காற்று பேசுகிறது.

“ஆல்பர்ட்?” அவளுடைய குரல் ஒலித்ததும், அவனுக்கு எதிரில் உள்ள பல தகடுகளில் வண்ணங்கள் நெளிந்து அலைவாக ஓடுகின்றன. அவன் திரும்புகிறான்,  அவற்றைப் பார்க்கும் அவனுடைய பந்து மூட்டுக் கழுத்தின் மீது உயர்ந்த, உணர்ச்சிகளைக் காட்டாத முகம் சாய்ந்த கோணத்தில் நிச்சயமாக சிந்தனையின் தோற்றம் இருக்கிறது. அவன் என்ன உணர்கிறான் என்பதை அவள் ஊகிக்கக் கூடாது. அது அவளுக்குத் தெரியும்.

இருந்தாலும் அதையே அவள் செய்கிறாள். ”என்னோடு எப்படிப் பேசுவது என்பதை நீ கண்டு பிடித்து விட்டாய்.”

“ஆமாம், நான் கண்டு பிடித்து விட்டேன்,” அவன் சொல்கிறான். “இங்கே வா. இந்தத் தகட்டில் உன் கையை வை. நமக்கு அதிக அவகாசம் இல்லை.”

“ என் அம்மா நம்மை நிறுத்துவதற்குள்ளாகவா?”

அவன் அவளைப் பார்த்துத் துரிதமாகக் கூவுகிறான், அவனுடைய உணர் இழைகள் சிலிர்க்கின்றன. “இந்த ஏற்பாடு முடிவதற்குள். இது ஒரு ஒத்திகை, பாவனைதான். நான் எஞ்சி இருக்கும் கடைசி நபர், உன்னோடு தொடர்பு கொள்ள எங்களிடம் எஞ்சி இருக்கும் சக்தியை எல்லாம் பயன்படுத்தி இருக்கிறோம். நாங்கள் எங்கும் தேடி அலைந்தோம், நீதான் நாங்கள் கண்ட முதல் நபர்.

“நீ இறக்கப் போகிறாயா?”

”எங்களுடைய சூரியன் இறந்து கொண்டிருக்கிறது,” அவன் சொல்கிறான், அவளுடைய முகம் துன்பத்தில் சுருங்குகிறது. அவள் சூடான துயரத்தை உள்ளுறுஞ்சுகிறாள். “சீக்கிரம், இந்தக் கணினிகள் செயலிழந்து விடும். இவற்றில் நாங்கள் வெகு நீண்ட காலம் வாழ்ந்து விட்டோம். மற்றவர்கள் எல்லாம் முன்பே போய் விட்டார்கள், சக்தியை மிச்சம் பிடிப்பதற்காக. நான் மட்டும் பின் தங்கினேன், இருந்து தேடுவதற்காக. “

“நீ போகக் கூடாது- நான் உன்னோடு இப்போதுதானே பேச ஆரம்பித்திருக்கிறேன் -”

“எங்களுடைய வரலாற்றை உன்னிடம் தர அனுமதிப்பாயா?”

“நிச்சயமாய்,” அவள் கை நீட்டுகிறாள். முன்பு எத்தனை அவசரமாக அவளை இழுத்து வந்தானோ அதே அளவு அவசரத்தோடு அவன் அவளைத் தடுத்து நிறுத்துகிறான். அவனுடைய பயனாளக் கரம் அவளுடைய கையின் தசையில் பள்ளமேற்படுத்துகிறது.

“இரு,” அவன் சொல்கிறான். “ நான் அதை உன் புத்தியிலேயே சேர்த்து விடுகிறேன். அது உன்னையே மாற்றும், அதற்கு நீ அனுமதி தரவேண்டும்.”

அவள் நிறுத்திப் பார்க்கிறாள். அவனுடைய பயனாளக் கரம் குளுமையாக, கடினமாகத் தெரிகிறது, அதன் மேல்பரப்பு சாணைத் தாள் போல சொரசொரப்பாக இருக்கிறது. “மாற்றுமா?”

“உன்னை சற்று கூடுதலாக எங்களைப் போல ஆக்கும்.”

அவனைப் பார்க்கிறாள். அவனுடைய உணர் இழை முடிகள் தொங்கி இருக்கின்றன, அவனுடைய முதுகுப்புறத் தளத்தில் படிந்து இருக்கின்றன, ஒரு கவலைப்படும் நாயின் காதுகள் போல. அவன் அசைவற்று நிற்கிறான். காக்கிறான் போலும், அவளுக்கு அவன் என்ன நினைக்கிறான் என்று தெரியவில்லை. “நான் ஒத்துக் கொள்ளவில்லை என்றால் நீ இறந்து விடுவாய்.”

”நாங்கள் இறக்கப் போகிறோம்,” எப்படியுமே.”

அவள் அவனைப் பார்த்து விழித்து நிற்கிறாள். அவளுடைய கண்களில் சுடுநீர் இன்னும் கூடுதலாகப் பொங்குகிறது, அவளுடைய மூக்குக்குள் புழையில், தலைக்குள் அழுத்தம் கூடுகிறது. அவள் அவனுடைய பயனாளக் கரத்திலிருந்து தீர்மானமாகத் தன் கையை இழுத்து விடுவித்துக் கொள்கிறாள், இரண்டு உள்ளங்கைகளையும் அந்த உஷ்ணமான மஞ்சள் உலோகத்தின் மீது வைக்கிறாள், அவளுடைய கன்னத்தில் கண்ணீர்த் துளி எரிந்து இறங்குகிறது.

“துக்கப்படாதே.” குரலில் ஒரு ஏற்ற இறக்கமும் இல்லை, ஆனால் அவனுடைய பரிசம் அவளுடைய காலைத் தீண்டி தடவிக் கொடுக்கிறது. “நீ எங்களை நினைவு வைத்திருப்பாய்.”

| |

நாங்கள் ஒன்பது வரை வந்து விட்டோம். நான் என் கைகளைப் பின்னே இழுத்துக் கொண்டு விட்டேன். ஹாதியா அவளுடைய கரங்களைக் கீழ் நோக்கி அழுத்தினாள். முதல் அழுத்தத்தில் ஏதும் நடக்கவில்லை. அவள் சிறிது நகர்த்தி சரியாக வைத்துக் கொண்டாள், உதடுகள் முணுமுணுத்தன, ஏதோ பிரார்த்தனை செய்கிறாள் போலும், திடீரென்று கீழ் நோக்கி வலுவாக அழுத்தினாள், அவளுடைய தோள் வலு பூராவும் அதில் இறங்கியது.

பளபளத்த எதுவோ தாராவின் உதடுகள் வழியே தெறித்து ஹாதியாவின் தோளுக்கு மேல் தாண்டி விழுந்தது. தாரா ஒரு நீண்ட, பெரும் ஒலியோடு கூடிய மூச்சை இழுத்தாள், இருமத் துவங்கினாள், அவளுடைய கண்கள் இறுக்கி மூடிக் கொண்டன, கண்ணீர் அவள் கன்னங்களில் இறங்கி ஓடியது.

அவளுக்கு மூச்சு திரும்பியதும் சொன்னாள், “ அவன் போய் விட்டான்.”

அவள் புரண்டு என் கைகளைப் பற்றினாள், என் தோள்மீது சாய்ந்து ஒரு சிறு குழந்தை போல விம்மிப் புலம்பி அழுதாள், என்ன தேறுதலும் பயனளிக்கவில்லை.

| |

தாராவின் பொதிவில் மூன்று அல்லது நான்கு மக்களவை நூலகங்களுக்கு இடம் இருந்தது.[3] அது இப்போது நிரம்பி விட்டது போலத் தோன்றியது. அந்தத் தகவல்களும் அவள் ஒருத்தியால்தான் புரிந்து கொள்ளப்படக் கூடியதாகத் தெரிந்தன, அதிலும் எல்லாமே புரியக் கூடியதாகவோ, எல்லா நேரத்திலும் புரியக்கூடியதாகவோ இல்லை.

அவள் மாறி இருக்கிறாள். அமைதி கூடி இருக்கிறது. உள்ளொடுங்கியில்லை, ஆனால்… சோகமாக இருக்கிறாள். தன்னுடைய அமைதியான, அன்னியத்தனம் நிறைந்த கண்களால் என்னைப் பார்க்கிறாள், எனக்கு ஏதோ அவள்தான் என்னுடைய அம்மா போல உணர்வு வருகிறது.

அவளை நான் முன்னதாகவே தடுத்திருக்க வேண்டும். நான் சரியாக யோசிக்கவில்லை.

குறைந்தது, தன்னைத் தானே கழுத்து நெரித்துக் கொள்ள முயலவில்லை இதற்குப் பிறகு.

ஹாதியா நாம் இதைப்பற்றி யாரிடமும் சொல்ல வேண்டாம் என்று ஆலோசனை சொன்னாள். குறைந்தது இப்போதைக்கு வேண்டாம். நானும் ஒத்துக் கொண்டேன். என் மகள் ஏதோ ஒரு அரசாங்கக் கூடத்தில் அடைக்கப்பட்டு, தகவலுக்காக, அயல் கிரகத்துத் தொழில் நுட்பம், அறிவியலுக்காக குடைந்து நோக்கப்படுவதை நான் விரும்பவில்லை,

நான் சொல்ல மாட்டேன்.

அவளுக்குப் பத்து வயதுதான் ஆகிறது. அவள் இன்னும் பள்ளிப் படிப்பை முடிக்க வேண்டும். மிச்சத்தை காலப்போக்கில் எங்கள் வசதிப்படி நாங்கள் தீர்மானிப்போம். காலம் செல்லச் செல்ல அவள் ஒருவேளை தான் முன்னிருந்தது போல ஆகி விடுவாளோ என்னவோ.

ஆனால் அவள் முழுதும் தேறியதும் செய்த முதல் வேலை, ஒரு நீர்ச்சாய ஓவியத்தை வரைந்ததுதான். அது ஒரு கவிதை என்று என்னிடம் சொன்னாள்.

அது அவளுடைய பெயர் என்று சொன்னாள்.

____________________________________***___________________________

[1] Food and Drug Administration; U.S. Federal Government’s regulatory body – அமெரிக்காவில் விற்கும் உணவு மற்றும் மருந்துகளை நெறிப்படுத்தும் அமைப்பு.

[2] இந்த வாக்கியத்துக்கு, அவள் இன்னும் கொஞ்சம் உயரமாக வளர்ந்து விட்டால் air bag உள்ள முன் இருக்கைகளில் அமர முடியும், பின்னால் இருக்க நேர்வது இன்னும் கொஞ்ச நாட்கள்தான் தொடரும் என்று பொருள்.

[3] மக்களவை நூலகம்= Library of Congress. அமெரிக்காவின் மிகப்பெரிய நூலகம். இதில் உலகெங்குமிருந்து புத்தகங்களும், ஆவணங்களும், பல ஊடகப் பொருட்களும் பல பத்தாண்டுகளாகச் சேகரிக்கப்படுகின்றன. உலகத் தகவல் மையம் என்று ஒன்றைக் கருதினால் இந்த அமைப்பு அதில் முக்கியப் பங்கு வகிக்கும். அதன் அளவு எத்தனை பெரியதாக இருக்கும் என்பதை நாம் ஊகிப்பது கூடக் கடினம், அத்தனை பிரும்மாண்டம்.

____________________________________

கதாசிரியர் பற்றிய குறிப்பு:

எலிஸபெத் பெ(ய்)ர் எழுதிய ’ஜென்னி கேஸி’ முப்புதினங்கள் (ஹாமர்ட், ஸ்கார்டௌன், வொர்ல்ட் ஒயர்ட்) பற்றி நிறைய கவனிப்பு எழுந்தது. இவர் 2005 ஆம் வருடத்தின் சிறந்த புது எழுத்தாளர் ஒருவருக்குக் கொடுக்கப்படும் ஜான் காம்ப்பெல் விருதைப் பெற்றவர்.  இவர் தன்னைப் பற்றி எழுதிக் கொடுத்துள்ளதாகத் தெரியும் ஒரு குறிப்பு சுவையாக இருப்பதால் அதையே இங்கு சுருக்கித் தருகிறேன்.

ஃப்ரோடோ, பில்போ பாகின்ஸ் ஆகியோரின் பிறந்த தினமே இவருடையதும். [அவர்கள் யார் என்று கேட்பீர்களாயின், உங்களுக்கு உலக அதிபுனைவு இலக்கியத்தில் இன்னும் ஒழுங்காக முக்குளியல் நடக்கவில்லை என்றும், அதைச் செய்வது அவசியம் என்றும் தெரிந்து கொள்வீர்களாக. விக்கியில் தேடினால் கிட்டாதா? ] குழந்தையாக இருந்தபோது அகராதியைப் படிக்கும் வழக்கம் படிந்ததால், சீக்கிரமே வறுமை, சண்டித்தனம், நண்பர்களில்லாமை, அப்புறம் ஊகப் புனைவுகள் எழுதுவது என்று வாழ்க்கை அமைந்து விட்டதாம். கனெக்டிகட் மாநிலத்தில் ஹார்ட்ஃபோர்ட் என்னும் ஊரில் பிறந்தவர், அந்த மாநிலத்திலேயே வளர்ந்தார். இரண்டு வருடம் வர்மாண்ட் மாநிலத்தில் கனடிய எல்லைக்கு அருகில் இருந்த மின்சாரம் இருந்த கடைசி வீட்டில் இருந்ததாகச் சொல்கிறார். [ஏதோ கனடாவில் மின்சாரமே இல்லாதது போல இருக்கிறது இந்தக் குறிப்பு.]

சமீபத்தில் நெவாதா மாநிலத்தில் லாஸ்வேகாஸ் நகருக்கருகில் மொஹாவி பாலைவனத்தில் வாழ்ந்தாராம். அங்கிருந்து தப்புவதற்கு வழி தேடியதாகச் சொல்கிறார். இப்போது இவர் மாஸெச்சூஸெட்ஸ் மாநிலத்தில்தான் ஒரு சிற்றூரில் வாழ்கிறார். இலையுதிர் காலம் அல்லது பனிக்காலம் வந்திருப்பதாலா என்று தெரியவில்லை, நிறைய பரங்கி/ பூசணிக்காய்களை அவனில் சுட்டு வேகவைத்துச் சாப்பிடுகிறார். தினம் பல மைல்கள் ஓடுகிறார். நிறைய சமையல் குறிப்புகள் எழுதுவதோடு ஒரே நேரம் பல நாவல்கள், சிறுகதைகளை மாற்றி மாற்றி எழுதுகிறார்.

தான் இரண்டாம் தலைமுறை ஸ்வீடியர், மூன்றாம் தலைமுறை யுக்ரெய்னியர், மூன்றாம் தலைமுறை ட்ரான்ஸில்வேனியர், கொஞ்சம் ஐரிஷ், இங்கிலீஷ், செரோகி, மேலும் ஜெர்மன் மூதாதையரும் தன் வம்சாவளியில் கலந்திருக்கிறார் என்று தன் வழிமுறையைப் பற்றிச் சொல்கிறார். எலிஸபெத் பெ(ய்)ர் என்பது இயல்பெயர்தான், ஆனால் அது பகுதிப் பெயர்தான்.  சாரா பெ(ய்)ர் எலிஸபெத் விஷ்னெவ்ஸ்கி என்பது முழுப் பெயர் போலிருக்கிறது.

இவரைப் பற்றியும் இவரது இலக்கியம் பற்றியும் பிறிதொரு சமயம் பார்ப்போம். கீழே உள்ள மொழி பெயர்ப்புக் கதை ‘ஃபாஸ்ட் ஃபார்வார்ட்’ என்கிற அதிபுனைவுக் கதைகளின் தொகுப்புப் புத்தகத்தில் இருக்கும் ‘’த ஸம்திங் – ட்ரீமிங் கேம்’ என்கிற சிறுகதையின் தமிழாக்கம்.