எங்கிருந்து அழைக்கிறேன் நான்?

1354295094-pic0505-carver001

ரேமண்ட் கார்வர் (1938-1988) . உலகின் முன்னோடிச் சிறுகதை எழுத்தாளர்களில் ஒருவர். உலகின் பல பகுதிகளைச் சேர்ந்த எழுத்தாளர்கள் மீது தாக்கத்தை ஏற்படுத்தியவர். தமிழின் பல முன்னோடிச் சிறுகதையாசிரியர்களும்  ரேமண்ட் கார்வர் மீது நன்மதிப்பு கொண்டவர்கள். அவர்களில் ஒருவரான திரு. எம்.கோபாலகிருஷ்ணன் மொழிபெயர்த்திருக்கும் ரேமண்ட் கார்வரின் சிறுகதை இது.

பிராங்க் மார்டினின் குடிமறதி விடுதியின் முகப்பு வராந்தாவில் நாங்கள் இருந்தோம், பிராங்க் மார்டினில் இருந்த எங்களைப் போலவே ஜே.பியும் முதன்மையாக ஒரு குடிகாரன். அவன் புகைப்போக்கி துப்புரவாளனும் கூட. இப்போதுதான் அவன் இங்கு முதன்முறையாக வந்திருக்கிறான். எனவே பயந்துபோயிருக்கிறான். நான் முன்பே ஒருமுறை இங்கு வந்திருக்கிறேன், சொல்வதற்கு என்ன? மறுபடியும் வந்திருக்கிறேன். ஜே.பியின் அசல் பெயர் ஜோ பென்னி, ஆனால் நான் அவனை ஜே.பி என்றே அழைக்கவேண்டும் என அவன் சொல்லிவிட்டான். அவனுக்கு வயது முப்பது இருக்கும், என்னைவிட இளையவன். அவ்வளவு இளையவனில்லை என்றாலும், கொஞ்சம் சின்னவன். அவன் இந்தத் தொழிலுக்கு எப்படி வந்தான் என்பதைப் பற்றி என்னிடம் சொல்லிக் கொண்டிருந்தான். பேசும்போது அவன் கைகளை ஆட்டியபடியே பேச விரும்பினான், ஆனால் அவனுடைய கைகள் நடுங்கின, அதாவது அவை உறுதியாக நிற்கவில்லை. “முன்பு எனக்கு இப்படி ஆனதேயில்லை“ என்றான் அவன். அவன் நடுக்கத்தைப் பற்றி சொன்னான். அதற்காக நான் வருந்துகிறேன் என்று அவனிடம் சொன்னேன். நடுக்கம் குறைந்துவிடும் என்றேன். அவை குறையும். ஆனால் நாளாகும்.

பிராங்க் மார்டினின் குடிமறதி விடுதியின் முகப்பு வராந்தாவில் நாங்கள் இருந்தோம். பிராங்க் மார்டினில் இருந்த எங்களைப் போலவே ஜே.பியும் முதன்மையாக ஒரு குடிகாரன். அவன் புகைப்போக்கி துப்புரவாளனும் கூட. இப்போதுதான் அவன் இங்கு முதன்முறையாக வந்திருக்கிறான், எனவே பயந்துபோயிருக்கிறான். நான் முன்பே ஒருமுறை இங்கு வந்திருக்கிறேன். சொல்வதற்கு என்ன? மறுபடியும் வந்திருக்கிறேன். ஜே.பியின் அசல் பெயர் ஜோ பென்னி. ஆனால் நான் அவனை ஜே.பி என்றே அழைக்கவேண்டும் என அவன் சொல்லிவிட்டான். அவனுக்கு வயது முப்பது இருக்கும். என்னைவிட இளையவன், அவ்வளவு இளையவனில்லை என்றாலும், கொஞ்சம் சின்னவன். அவன் இந்தத் தொழிலுக்கு எப்படி வந்தான் என்பதைப் பற்றி என்னிடம் சொல்லிக் கொண்டிருந்தான். பேசும்போது அவன் கைகளை ஆட்டியபடியே பேச விரும்பினான், ஆனால் அவனுடைய கைகள் நடுங்கின, அதாவது அவை உறுதியாக நிற்கவில்லை. “முன்பு எனக்கு இப்படி ஆனதேயில்லை“ என்றான் அவன். அவன் நடுக்கத்தைப் பற்றி சொன்னான். அதற்காக நான் வருந்துகிறேன் என்று அவனிடம் சொன்னேன். நடுக்கம் குறைந்துவிடும் என்றேன். அவை குறையும், ஆனால் நாளாகும்.

சில நாட்களாகத்தான் நாங்கள் இங்கே இருக்கிறோம். இன்னும் நாங்கள் மனக் கலக்கத்திலிருந்து விடுபட்டிருக்கவில்லை. ஜே.பிக்கு நடுக்கம் இருக்கிறது. எனக்கு அவ்வப்போது தோளில் ஒரு நரம்பு, அது நரம்பாகவும் இருக்கலாம் அல்லது வேறு ஏதாவதாகவும் இருக்கலாம், துடிக்கத் தொடங்குகிறது. சிலவேளைகளில் அது என் கழுத்தின் பக்கவாட்டில் துடிக்கிறது. அவ்வாறு நேரும்போது என் வாய் உலர்ந்து விடுகிறது. அந்த நேரத்தில் எதையாவது விழுங்குவதற்கு சிரமமாக இருக்கும். என்னவோ நடக்கப் போகிறது என்று எனக்குத் தெரியும், அதை பொருட்படுத்தலாகாது என விரும்பினேன், அதிலிருந்து நான் தப்பித்திருக்க விரும்பினேன், அவ்வாறிருக்கவே நினைத்தேன், கண்களை மூடிக் கொண்டு அது கடந்துபோகக் காத்திருந்தேன், அது அடுத்தவனை போய்ச் சேரட்டும், ஜே.பி கொஞ்ச நேரம் காத்திருக்கலாம்.

நேற்றுக் காலையில் வலிப்பு நோயாளி ஒருவனைப் பார்த்தேன். அவனை டைனி என்றழைத்தனர். குண்டாக இருந்த அவன் சாண்டா ரோசாவைச் சேர்ந்த ஒரு மின்சார பணியாளன். கிட்டத்தட்ட இரண்டு வாரங்களாக அவன் இங்கே இருக்கிறான் என்றும் அவன் இப்போது சோர்விலிருந்து மீண்டுவிட்டான் என்றும் சொன்னார்கள்.ஓரிரண்டு நாட்களில் அவன் வீடு திரும்பிவிடுவான். புத்தாண்டு தினத்தை அவன் தன் மனைவியுடன் தொலைகாட்சி நிகழ்ச்சிகளை பார்த்தபடி கழித்திருப்பான். அன்றைய தினம் அவன் சூடான சாக்லேட் பானத்தை அருந்தவும் பிஸ்கட்களை தின்னவும் திட்டமிட்டிருந்தான். நேற்று காலை அவன் காலை உணவுக்காக வந்தபோது நன்றாகத்தான் இருந்தான். வாத்துக்களை எப்படி கூப்பிடுவான் என்று அவன் ஒருவனிடம் செய்துகாட்டியவாய் வாயில் சத்தமெழுப்பிக்கொண்டிருந்தான் அவன். “பிளாம் பிளாம்“ என்றான் டைனி, டைனியின் ஈரமாயிருந்த தலைமயிர் தலையின் இரண்டு பக்கங்களிலும் படிய வாரப் பட்டிருந்தது. அப்போதுதான் குளித்துவிட்டு வந்திருந்தான், சவரம் செய்யும்போது தாடையில் வெட்டிக் கொண்ட காயம் இருந்தது. அதனால் என்ன? பிராங்க் மார்டினில் உள்ள எல்லோருடைய முகத்திலும் வெட்டுக் காயம் இருப்பதுபோலத்தான் அவனுக்கும் உள்ளது. அப்படி நடக்கத்தான் செய்கிறது. மேசையின் முனையில் சரிந்துகொண்டு டைனி தன்னுடைய குடிவெறியாட்டம் ஒன்றைப் பற்றி சொல்லத் தொடங்கியிருந்தான். மேசையிலிருந்தவர்கள் தங்களுக்கான முட்டைகளை அள்ளித் தின்றபடியே சிரித்துத் தலையாட்டிக் கொண்டிருந்தார்கள். டைனி ஏதாவது ஒன்றை சொல்லிவிட்டு முகத்தை சுருக்குவான். தான் சொன்னதை ஆமோதிக்கிறார்களா என்று பார்ப்பதைப் போல எல்லோரையும் பார்ப்பான். நாம் அனைவருமே ஏதாவது ஒரு காரியத்தை மோசமாகவும் பைத்தியக்காரத்தனமாகவும் செய்திருப்போம். நிச்சயமாக, அதனால்தான் நாம் சிரிக்கிறோம். டைனியின் தட்டில் முட்டைப் பொரியலும், தேனும், பிஸ்கட்களும் இருந்தன. நான் அங்கே உட்கார்ந்திருந்தபோதும் எனக்கு பசியிருக்கவில்லை. கொஞ்சம் காபியை மட்டும் குடித்துக் கொண்டிருந்தேன். திடீரென்று டைனி அங்கிருந்து காணாமல் போயிருந்தான். பெருத்த சத்தத்துடன் அவன் நாற்காலியோடு பின்னால் சரிந்து விழுந்திருந்தான். அவனது கண்கள் மூடியிருக்க தரையில் விழுந்திருந்த அவனுடைய குதிகால்கள் தரையில் அடித்துக் கொண்டிருந்தன. எல்லோரும் பிராங்க் மார்டினை கூவி அழைத்தார்கள், ஆனால் அவர் அதற்குள் அங்கிருந்தார். டைனிக்கு பக்கத்தில் இருவர் தரையில் உட்கார்ந்திருந்தனர். அவர்களில் ஒருவன் டைனியின் வாய்க்குள் தன் விரலை நுழைத்து அவனுடைய நாக்கைப் பிடித்துக் கொள்ள முயன்றான், “எல்லாரும் தள்ளி நில்லுங்க“ என்று கத்தினார் பிராங்க் மார்டின். நாங்கள் எல்லோரும் கூட்டமாகக் குனிந்து நின்றபடி டைனியை விட்டு பார்வையை விலக்க முடியாமல் அவனையே பார்த்துக் கொண்டிருப்பதை நான் கவனித்தேன். “அவனுக்கு காத்து வரட்டும், தள்ளுங்க“ என்றார் பிராங்க் மார்டின். பிறகு அவர் தன் அலுவலகத்துக்கு விரைந்து சென்று ஆம்புலன்ஸ் வருவதற்கு ஏற்பாடு செய்தார்.

டைனி இன்று மீண்டும் இங்கே வந்திருக்கிறான். பழைய நிலைக்குத் திரும்புவதைப் பற்றி பேசிக் கொண்டிருக்கிறான். இன்று காலையில் பிராங்க் மார்டின் மருத்துவமனையிலிருந்து அவனை அழைத்து வர தன்னுடைய வாகனத்தை எடுத்துச் சென்றிருந்தார். தாமதமாக வந்ததால் டைனிக்கு முட்டைகள் கிடைக்கவில்லை. இருப்பினும் கொஞ்சம் காப்பியை ஊற்றிக்கொண்டு அவன் சாப்பாட்டுக் கூடத்துக்கு வந்து மேசையில் உட்கார்ந்தான். சமையலறையிலிருந்த யாரோ ஒருவர் அவனுக்காக ரொட்டியை வாட்டித் தந்தார். ஆனால் அவன் அதை சாப்பிடவில்லை. காப்பிக் கோப்பையோடு உட்கார்ந்திருந்த அவன் அதையே பார்த்துக் கொண்டிருந்தான், அவ்வப்போது கோப்பையை முன்னும் பின்னுமாக நகர்த்திக் கொண்டிருந்தான்.

அவ்வாறு நடப்பதற்கு முன்பு அவனுக்கு ஏதும் அறிகுறிகள் தெரிந்தனவா என நான் கேட்க விரும்பினேன். அவனுடைய இதயத் துடிப்பு நின்று துடித்ததா அல்லது வேகம் கூடியதா என்று அறிந்துகொள்ள விரும்பினேன். கண்ணிமைகள் வெட்டியிழுத்ததா? ஆனால் நான் ஒன்றும் கேட்க முயலவில்லை. அதைப் பற்றி பேசவும் அவன் ஆர்வமாயிருப்பதுபோலவும் தெரியவில்லை. ஆனால் டைனிக்கு அன்றைக்கு நடந்தததை நான் ஒருபோதும் மறக்கமாட்டேன். குதிகால்கள் தரையில் அடிக்க வயதுமுதிர்ந்த டைனி தரையில் கிடந்த காட்சி. எனவே, ஒவ்வொரு முறையும் எங்காவது இந்தத் துடிப்பு ஆரம்பிக்கும்போது நான் மூச்சை இழுத்துக் கொண்டு எனக்குப் பின்னால் யாராவது இருக்கிறார்களா? எனது வாய்க்குள் விரலை வைக்க யாராவது இருக்கிறார்களா என்று காத்திருப்பேன்.

முன்பக்க வராந்தாவில் தனது இருக்கையில் உட்கார்ந்திருந்த ஜே.பி கைகளை மடியில் வைத்திருந்தான். சிகரெட் புகைத்தபடியிருந்த நான் ஒரு பழைய கரியள்ளும் வாளியை சாம்பல் கிண்ணமாக உபயோகித்திருந்தேன். ஜே.பி தன்போக்கில் சொல்லிக் கொண்டிருந்ததை கவனித்துக் கொண்டிருந்தேன். மணி காலை பதினொன்று. மதிய உணவுக்கு இன்னும் ஒன்றரை மணிநேரம் இருக்கிறது. இருவருவருக்குமே பசிக்கவில்லை, அதேவேளையில் உணவுக் கூடத்துக்குள்ளே சென்று மேசையில் உட்கார்வதற்கும் சமயம் பார்த்துக் கொண்டிருந்தோம். ஒருவேளை எங்களுக்கு பசியெடுக்கலாம்.

ஜே.பி எதைப் பற்றி சொல்லிக் கொண்டிருந்தான்? தனக்கு பனிரெண்டு வயதாக இருக்கும்போது அவன் வளர்ந்துவந்த பண்ணையருகில் இருந்த ஒரு கிணற்றுக்குள் எப்படி விழுந்தான் என்பதைப் பற்றி சொல்லிக் கொண்டிருந்தான். அவனுடைய அதிர்ஷ்டம், அந்தக் கிணறு வறண்டு போயிருந்தது, “அல்லது துரதிர்ஷ்டவசமாக“ என்றான் அவன் சுற்றுமுற்றும் பார்த்து தலையாட்டியபடியே, அன்றைக்கு பிற்பகலுக்கு பிறகு, அவன் கிணற்றுக்குள் இருப்பதைக் கண்டுபிடித்து, அவனுடைய அப்பா கயிறு வழியாக அவனை எவ்வாறு மேலே கொண்டுவந்தார் என்பதைப் பற்றி சொன்னான். கிணற்றுக்குள் ஜே.பி மூத்திரம் போயிருந்தான், கிணற்றுக்குள் அவன் எல்லாவிதத்திலும் பயந்துபோய் உதவிக்காக குரலெடுத்துக் கத்தி, காத்திருந்து மறுபடியும் குரலெழுப்பி நொந்துபோயிருந்தான். எல்லாம் நடந்து முடிவதற்கு முன்பாகவே கத்திக் கத்தி அவன் தொண்டை கட்டிப் போயிருந்தது. கிணற்றின் ஆழத்தில் இருந்தது அவனுக்குள் மறக்க முடியாத ஒன்றாக அவனுக்குள் உறைந்துபோயிற்று என்று என்னிடம் சொன்னான். ஆழத்தில் அங்கே அவன் உட்கார்ந்து மேலே கிணற்றின் வாயை பார்த்திருக்கிறான். மேலே வெகு உயரத்தில் வட்டமாக வானத்தை காண முடிந்திருக்கிறது. அவ்வப்போது வெண் மேகங்கள் கடந்து போயின. பறவைக் கூட்டங்கள் கடந்து போயுள்ளன. அவைகளின் சிறகசைப்பே இதுபோன்றவொரு வினோதமான கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கவேண்டும் என்று ஜே.பிக்கு தோன்றியிருக்கிறது. பிறவற்றையும் அவன் கேட்டிருக்கிறான். அவனுக்கு மேலாக கிணற்றுக்குள் சன்னமாக உரசல்களைக் கேட்டபோது என்னவாவது தன் தலையில் வந்து விழப் போகிறது என்று அவன் அஞ்சினான். பூச்சிகளைப் பற்றியும் அவன் யோசித்தான். மேலே கிணற்றின் வாயில் காற்று வீசியடித்த ஓசையும் அவனுக்குள் பதிந்துபோயிருந்தது. சுருக்கமாக சொல்லப்போனால் கிணற்றின் அடியாழத்தில் அவனது வாழ்க்கையே வேறுமாதிரியாகியிருந்தது. ஆனால் எதுவும் அவன் மீது விழவில்லை, அந்த சிறு நீல வளையத்தை எதுவும் மூடிவிடவுமில்லை. அதன் பிறகு அவனுடைய அப்பா நீளமான கயிற்றைக் கொண்டுவந்தார். ஜேபி தான் எப்போதுமே வாழ்ந்திருந்த இந்த உலகத்திற்கு திரும்ப பிறகு வெகு நேரமாகிவிடவில்லை.

“சொல்லு ஜேபி, அப்பறம் என்னாச்சு“ என்றேன் நான்.

அப்போது அவனுக்கு பதினெட்டு அல்லது பத்தொன்பது வயதிருக்கும், உயர்நிலைப்பள்ளி படிப்பு முடிந்திருந்தது. அதன்பிறகு வாழ்க்கையில் அவனுக்கு செய்வதற்கு ஒன்றும் இருக்கவில்லை. நகரத்தில் இருக்கும் தன் நண்பனைப் பார்க்கச் சென்றிருந்தான். அந்த நண்பன் கனப்படுப்புடன் கூடிய வீட்டில் வசித்தான். ஜேபியும் அவனுடைய நண்பனும் கனப்படுப்பின் அருகில் அமர்ந்து நெருப்பை விசிறியபடியே பீர் குடித்துக் கொண்டிருந்தார்கள். இசைத்தட்டை ஓடவிட்டிருந்தார்கள். அப்போது அழைப்பு மணி ஒலித்தது. நண்பன் கதவைத் திறந்தான். புகைப்போக்கியை துப்புரவு செய்யும் அந்த இளம்பெண் அதற்கான கருவிகளோடு வந்திருந்தாள். அவள் தலையில் அணிந்திருந்த தொப்பியைப் பார்த்ததுமே ஜேபிக்கு பரவசமாக இருந்தது. கனப்படுப்பை சுத்தம் செய்யச் சொல்லி அழைப்பிருப்பதாக அவள் ஜேபியின் நண்பனிடம் சொன்னாள். நண்பன் அவளை உள்ளே அனுமதித்து சிரம் தாழ்த்தினான். அந்த இளம்பெண் அவனைப் பொருட்படுத்தவில்லை. கனப்படுப்பின் மீது ஒரு துணியை விரித்து கருவிகளை அடுக்கினாள். அவள் கருப்பு நிறத்தில் சட்டையும் பேண்டும் காலுறையும் ஷூவும் அணிந்திருந்தாள். இப்போது அவள் தொப்பியை கழற்றியிருந்தாள். அவளை பார்க்கையில் பைத்தியம் பிடிப்பது போலிருந்தது என்றான் ஜேபி. ஜேபியும் அவனது நண்பனும் இசை கேட்டபடி பியர் குடித்துக் கொண்டிருக்கையில் அவள் தன் வேலையில் ஈடுபட்டிருந்தாள். புகைப்போக்கியை துப்புரவாக்கிக் கொண்டிருந்தாள். ஆனால் அவர்கள் அவள் என்ன செய்கிறாள் என்பதை கவனித்தபடியிருந்தார்கள். அவ்வப்போது ஜேபியும் அவனது நண்பனும் ஒருவருக்கொருவர் பார்த்துக் கொண்டனர். முறுவலித்தனர் அல்லது கண் சிமிட்டினர். அவளது மேல்பாதி உடல் புகைப்போக்கிக்குள் மறைந்த வேளையில் அவர்கள் புருவம் உயர்த்தினர். அவள் பார்ப்பதற்கு லட்சணமாகவே இருந்தாள் என்றான் ஜேபி. அவளுக்கு அவனுடைய வயதுதான் இருக்கும்.

அவள் தன் வேலை முடிந்தவுடன் கருவிகள் அனைத்தையும் துணியில் சுற்றியெடுத்துக் கொண்டாள். ஜேபியின் நண்பனிடமிருந்து அவனுடைய பெற்றோர் அவளது பெயருக்கு எழுதி வைத்திருந்த காசோலையை பெற்றுக்கொண்டாள். பிறகு அவள் அந்த நண்பனிடம் அவளை அவன் முத்தமிட விரும்புகிறானா என்று கேட்டாள். “அதிர்ஷ்டத்தைக் கொண்டு வரும் அது“ என்றாள். அது ஜேபிக்கு கொண்டுவரவும் செய்தது. அவனுடைய நண்பன் திருதிருவென முழித்தான். இன்னும் கோமாளிபோல தோற்றமளித்தான். பிறகு வெட்கத்தோடு அவன் அவளது கன்னத்தில் முத்தமிட்டான். அந்த ஒரு கணத்தில் ஜேபி ஏதோவொன்றை தீர்மானித்திருந்தான். தன்னுடைய பியரை அவன் கீழே வைத்துவிட்டு. சோபாவிலிருந்து எழுந்தான், அவள் கதவைத்தாண்டி வெளியே செல்ல முனையும்போது அவளைக் குறுக்கிட்டான்.

“நானும்“ என்றான் ஜேபி அவளிடம். அவள் அவன் மீது பார்வையை ஓடவிட்டாள். தனது இதயம் துடிப்பதை அவனால் உணரமுடிந்தது அப்போது என்று ஜேபி சொன்னான். அந்த இளம் பெண்ணின் பெயர் ராக்ஸியென்றுத் தெரியவந்தது.

“நிச்சயமாக“ என்றாள் ராக்ஸி, “ஏன் இல்லாம? எங்கிட்ட கூடுதலா முத்தங்கள் இருக்கு“ என்றாள். அவள் கச்சிதமாக ஒரு முத்தத்தை அவனது உதடுகளில் பதித்துவிட்டு செல்வதற்காகத் திரும்பினாள்.

அதுபோலவே கண்ணிமைக்கும் நேரத்தில் ஜேபி அவளை பின்தொடர்ந்து முன்வராந்தாவுக்குச் சென்றான். வராந்தாவின் திரைச் சீலைக் கதவை அவளுக்காக அவன் திறந்துவைத்தான். அவளுடன் படிகளில் இறங்கி அவள் தன்னுடைய டிரக்கை நிறுத்தியிருந்த இடத்துக்குச் சென்றான். அவனுடைய கட்டுப்பாட்டில் இல்லாத ஒன்றாக இருந்தது அது. உலகத்தில் வேறு எதுவுமே ஒரு பொருட்டாகத் தெரியவில்லை. கால்களை நடுநடுங்கச் செய்யும் ஒருத்தியை அவன் சந்தித்திருக்கிறான் என்பதை அவன் அறிந்துகொண்டான். அவளது முத்தம் இன்னும் அவன் உதடுகளில் எரிந்துகொண்டிருப்பதை உணர்ந்தான். இன்னும் என்னென்னவோ, அப்போது ஜேபியால் எதையும் பிரித்தறிந்து கொள்ள முடியவில்லை. அவனை எல்லா திசைகளிலும் சுழற்றியடிக்கும் உணர்ச்சிகளால் அவன் நிறைந்திருந்தான்

அவளுக்காக டிரக்கின் பின்புறக் கதவைத் திறந்துவைத்தபடி நின்றான் அவன். அவள் தனது கருவிகளை உள்ளே வைக்க உதவினான். “நன்றி“ என்றாள். பிறகு அவளை மறுபடியும் சந்திக்க விரும்புவதாக உளறிக் கொட்டினான். தன்னுடன் சினிமாவுக்கு எப்போதாவது வரமுடியுமா? என்று கேட்டான். தனது வாழ்வில் இனி என்ன செய்ய வேண்டும் என்பதையும் அப்பொழுது அவன் உணர்ந்துகொண்டான். அவள் செய்வதையே தானும் செய்யவேண்டும். தானும் ஒரு புகைப்போக்கி துப்புரவாளனாக இருக்க வேண்டும் என விரும்பினான். ஆனால் அப்போது அதை அவன் அவளிடம் சொல்லவில்லை.

அவள் தன் இடுப்பில் கைகளை வைத்தபடி அவனை ஏற இறங்கப் பார்த்ததாய் ஜேபி சொன்னான். பிறகு டிரக்கின் முன் இருக்கையிலிருந்து ஒரு முகவரி அட்டையை எடுத்தாள். அதை அவனிடம் தந்தாள். “இன்றிரவு பத்து மணிக்குப் பிறகு இந்த எண்ணிற்கு கூப்பிடு, பதிலளிக்கும் வசதி அப்போது அணைக்கப்பட்டிருக்கும். நாம் பேசலாம். இப்போது நான் போகவேண்டும்“ என்று சொன்னாள் அவள். தொப்பியை தலையில் போட்டுக் கொண்டு அவள் புறப்பட்டாள். அவள் ஜேபியை இன்னுமொரு முறை பார்த்தாள். பார்த்தது அவளுக்குப் பிடித்திருக்க வேண்டும். ஏனெனில் இந்த முறை அவள் முறுவலித்தாள். அவளது வாயருகில் கரி படிந்திருக்கிறது என்று சொன்னான் அவன். பிறகு அவள் டிரக்கில் ஏறி, ஹாரனை ஒலிக்கச் செய்துவிட்டு, ஓட்டிச் சென்றாள்.

“அப்பறம் என்னாச்சு“ என்று கேட்டேன் நான். “இப்ப நிறுத்தாதே ஜேபி“ எனக்கு ஆவலாக இருந்தது. ஆனால் அவன் தான் எப்படி ஒரு நாள் குதிரை லாடம் அடிக்கத் தொடங்கினேன் என்று அவன் சொல்லிக் கொண்டு போயிருந்தாலும் நான் அதைக் கேட்டுக்கொண்டுதான் இருந்திருப்பேன்.

நேற்றிரவு மழை பெய்திருந்தது. பள்ளத்தாக்குகளில் மலைகளுக்கு முன்னால் மேகங்கள் திரண்டிருந்தன. ஜேபி தொண்டையை செருமிக்கொண்டு மலைகளையும் மேகங்களையும் நோக்கினான். தாடையை நீவினான். பிறகு சொல்லத் தொடங்கினான்.

ராக்ஸி குறிப்பிட்ட நாட்களில் அவனோடு வெளியே செல்ல ஆரம்பித்தாள். கொஞ்சம் கொஞ்சமாக அவளோடு வேலைக்கு தன்னையும் அழைத்துச் செல்லவேண்டும் என்பதைக் குறித்துப் பேசினான். ஆனால் ராக்ஸி தன்னுடைய அப்பாவுடனும் சகோதரனுடமே இந்த வேலையில் ஈடுபட்டிருந்தாள். இருக்கிற வேலை அவர்களுக்கே போதுமானதாக இருந்தது. வேறு யாரும் அவர்களுக்கு தேவையாக இருக்கவில்லை. எல்லாவற்றையும்விட யார் இந்த ஜேபி? ஜேபி என்றால் என்ன? ஜாக்கிரதையாக இரு என்று அவர்கள் எச்சரித்தார்கள்.

ஜேபியும் அவளும் சேர்ந்து சில சினிமாக்கள் பார்த்தார்கள். நடனநிகழ்ச்சிகளுக்கும் சென்றனர். ஆனால் இருவரும் ஒன்றுசேர்ந்து புகைப்போக்கிகளை சுத்தம் செய்வதிலேயே அவர்களது நட்பு மையம் கொண்டிருந்தது. வெகு சீக்கிரத்திலேயே அவர்கள் திருமணம் குறித்து பேசத் தொடங்கியிருந்தனர் என்றான் ஜேபி. கொஞ்ச நாட்களுக்குப் பிறகு அவ்வாறே நடந்தது. அவர்கள் மணந்துகொண்டனர். ஜேபியின் புதிய மாமனார் அவனை முழுமையான பங்குதாரராக ஏற்றுக்கொண்டு விட்டார். ஒரு வருடத்திற்குள்ளாக ராக்ஸிக்கு குழந்தை பிறந்தது. புகைப்போக்கி துப்புரவுத் தொழிலை அவள் விட்டுவிட்டாள். சொல்லப் போனால் அவள் வேலை செய்வதையே விட்டுவிட்டாள். மிக விரைவிலேயே அவள் இன்னொரு குழந்தைக்கும் தாயானாள். இப்போது ஜே பிக்கு வயது இருபதைக் கடந்திருந்தது. அவன் ஒரு வீட்டை வாங்கினான். அவன் தன் வாழ்வில் மகிழ்ச்சியாக இருந்ததாக சொன்னான். “நடந்தவற்றைக் குறித்து நான் மகிழ்ச்சியாகவே இருந்தேன்“ என்றான். “நான் விரும்பியதெல்லாம் கிடைத்தது. நான் நேசிக்கிற மனைவி குழந்தைகள், என் வாழ்க்கையில் நான் என்ன செய்ய விரும்பினேனோ அதை செய்து கொண்டிருந்தேன்.“ ஆனால் ஏதோ ஒரு காரணத்திற்காக, என்ன செய்கிறான் ஏன் செய்கிறான் என்று புரியாமலேயே அவனது குடிப்பழக்கம் வளர்ந்தது. நெடுநாட்கள் வரை அவன் பீர் மட்டுமே குடித்து வந்தான். ஏதாவது ஒரு வகை பீர், எதுவாக இருந்தாலும் சரி. ஒரு நாளில் இருபத்தி நான்கு மணி நேரமும் தன்னால் பீர் குடிக்க முடியும் என்று சொல்வான் அவன். இரவில் தொலைகாட்சி பார்த்துக் கொண்டிருக்கையில் அவன் பீர் குடிப்பதுண்டு. எப்போதாவது அவன் விஸ்கி, பிராந்தி போன்றவற்றையும் குடித்திருக்கிறான். அதுவும் அடிக்கடி இல்லை , எப்போதாவது அவர்கள் நகரத்துக்கு செல்லும் சந்தர்ப்பங்களிலோ, அல்லது குடிப்பதற்கு நண்பர்கள் யாரும் உடனிருக்கும்போதோதான். பிறகு ஒரு நேரம் வந்தது, ஏனென்று அவனுக்கு தெரியாது, பீர் குடிப்பதிலிருந்து அவன் ஜின்னோ டானிக்கோ குடிக்கத் தொடங்கிவிட்டான். அதுவும் ராத்திரி சாப்பாட்டுக்குப் பிறகு தொலைக்காட்சியை பார்த்தபடி நிறைய ஜின்னையும் டானிக்கையும் குடிப்பான். எப்போதும் அவன் கையில் ஒரு கோப்பையில் ஜின்னும் டானிக்கும் இருக்கும். அதனுடைய ருசி அவனுக்குப் பிடித்திருந்தது என்று அவன் சொன்னான். வேலையை முடித்துவிட்டு வீட்டிற்கு செல்வதற்கு முன்பே குடித்தான். வீட்டிற்கு சென்று மேலும் குடித்தான். பிறகு இராத்திரி சில நாட்கள் சாப்பிடாமல் இருந்தான். வீட்டில் தலையே காட்டமாட்டான். அப்படியே வீட்டிற்கு வந்தாலும் அவனுக்கு சாப்பிட எதுவும் தேவையிருக்காது. மதுவிடுதியில் நொறுக்குத் தீனியால் வயிற்றை ரொப்பிக் கொண்டிருப்பான். சிலவேளைகளில் கதவைத் திறந்துகொண்டு உள்ளே வந்ததும் காரணமேயில்லாமல் தனது மதிய உணவு கேரியரை கூடத்தில் விசிறி எறிவான். ராக்ஸி திட்டும்போது அவன் மறுபடியும் வெளியில் போய்விடுவான். இப்போது மதியத்துக்கு முன்பே குடிக்கத் தொடங்கினான். அந்த நேரத்தில் அவன் வேலை செய்து கொண்டிருக்கவேண்டும். அப்போதெல்லாம் அவன் காலை நேரத்தையே இரண்டு ரவுண்டு மதுவோடுதான் தொடங்கினான் என்று சொன்னான். பல் துலக்குவதற்கு முன்பே குடித்துவிடுவான். பிறகு காபி குடிப்பான், மதிய உணவு பாத்திரத்தோடு பிளாஸ்கில் வோட்காவோடுதான் வேலைக்குச் செல்வான்.

depressed-artist1

ஜேபி பேச்சை நிறுத்திவிட்டான். அவன் வெறுமனே வாயை இறுக மூடிக்கொண்டான். என்ன நடக்கிறது? என நான் கவனித்திருந்தேன். ஒருவகையில் நான் என்னை ஆசுவாசப்படுத்திக் கொள்ள உதவிற்று. அது என்னை என்னுடைய சொந்த பிரச்சினையிலிருந்து விலக்கியிருந்தது. சிறிது நேரத்திற்குப் பிறகு “என்னாச்சு ஜேபி, பேசு”. அவன் தாடையை சொரிந்தான். ஆனால் சீக்கிரத்திலேயே அவன் பேசத் தொடங்கினான்.

ஜேபிக்கும் ராக்ஸிக்கும் உண்மையிலேயே இப்போது சண்டை, உண்மையான சண்டை. ஒரு முறை அவள் விரல்களை மடக்கி அவன் முகத்தில் ஒரு குத்துவிட்டு மூக்கை உடைத்துவிட்டதாக சொன்னான் ஜேபி, “இதப் பாரு, இந்த இடத்துல“ என்று அவன் சொன்னான். மூக்கில் ஒரு தழும்பு இருந்தததை காட்டினான். “உடைஞ்ச மூக்கு“, அவனும் பதிலுக்குத் திருப்பி தந்துவிட்டான். அப்போது அவளுடைய தோள்பட்டையை உடைத்துவிட்டான் அவன். இன்னொரு சந்தர்ப்பத்தில் அவளுடைய உதடுகளை கிழித்துவிட்டான். குழந்தைகள் இருக்கும்போதே இருவரும் அடித்துக் கொண்டனர். விஷயம் எல்லை மீறி போய்விட்டது. ஆனால் அவன் குடித்துக் கொண்டேதான் இருந்தான். அவனால் நிறுத்தமுடியவில்லை. அவனை எதுவொன்றினாலும் நிறுத்த முடியவில்லை. ராக்ஸியின் அப்பாவும் சகோதரனும் அவனை கொன்று போட்டுவிடுவதாக மிரட்டியும் பலனில்லை. குழந்தைகளை அழைத்துக்கொண்டு அவள் போய்விடவேண்டும் என்று அவர்கள் ராக்ஸியிடம் அறிவுறுத்தினார்கள். ஆனால் ராக்ஸி அது அவளுடைய பிரச்சினை என்று சொல்லிவிட்டாள். அவளேதான் பிரச்சினையை வரவழைத்தாள் என்பதால் அவளே அதை தீர்த்துக் கொள்வதாகவும் சொல்லிவிட்டாள்.

இப்போது மீண்டும் ஜேபி அமைதியாகிவிட்டான். தோள்பட்டையை தளர்த்தி நாற்காலியில் சரிந்துகொண்டான். இந்த இடத்திற்கும் மலைகளுக்கும் நடுவிலிருந்த சாலையில் சென்ற காரை கவனித்திருந்தான்.

“மீதியையும் எனக்கு கேக்கணும், ஜேபி, நீ சொல்லிட்டேயிரு“ என்றேன்.

“எனக்குத் தெரியலை“ என்றான். தோள்களை குலுக்கிக்கொண்டான்.

“பரவாயில்லை“ என்றேன். அவன் மேற்கொண்டு சொல்வது பரவாயில்லை என்பதாக நான் சொன்னேன், “சொல்லு ஜேபி“.

பிரச்சினைகளை முடிவுக்குக் கொண்டுவர முயற்சித்த வகையில் ஒன்றாக அவள் ஒரு காதலனைத் தேடிக்கொண்டாள் என்றான் ஜேபி. வீட்டையும் குழந்தைகளையும் பார்த்துக் கொண்டு அவளுக்கு இதற்கு எங்கிருந்து நேரம் கிடைத்தது என அறிய விரும்பினான் ஜேபி.

அவனைப் பார்த்து ஆச்சரியப்பட்டேன். அவன் வளர்ந்த ஒரு மனிதன், “அப்படி செய்ய விரும்பினால் உனக்கு நேரம் கிடைக்கும். நேரத்தை ஏற்படுத்திக் கொள்வாய்“ என்றேன் அவனிடம்.

ஜேபி ஆமோதிப்பவனாய் தலையை ஆட்டினான், “அப்படித்தான் இருக்கவேண்டும்“ என்றான்.

எப்படியோ அவனுக்கு அது தெரிந்துவிட்டது. ராக்ஸியின் காதலனைப் பற்றி அறிந்ததும் அவன் ஆத்திரமடைந்தான். ராக்ஸியின் விரலிலிருந்த அவளது திருமண மோதிரத்தை அவன் கழற்றிவிட்டான். அப்படி கழற்றியதும் அதை வெட்டுக்குறடால் துண்டு துண்டாக நறுக்கிப் போட்டான். அருமையான வேடிக்கை, இந்த சந்தர்ப்பத்தில் ஏற்கனவே அவர்களுக்குள் இரண்டொரு முறை சண்டை முடிந்திருந்தது. மறுநாள் காலை அவன் வேலைக்குப் போகும்போது குடித்துவிட்டு வண்டி ஓட்டிய குற்றத்திற்காக கைது செய்யப்பட்டான். அவனது ஓட்டுநர் உரிமம் பறிமுதல் செய்யப்பட்டது. அவனால் இனி டிரக் ஓட்ட முடியாது. ஏற்கனவே அப்படித்தான் என்றான். ஒரு வாரத்துக்கு முன்னால் கூரையிலிருந்து விழுந்து கட்டைவிரலை ஒடித்துக் கொண்டிருந்தான். அவன் தன் கழுத்தை ஒடித்துக் கொள்வதென்பது சீக்கிரத்திலேயே நடந்துவிட்டிருக்கலாம் என்றான்.

குடிப்பழக்கத்தை மறப்பதற்காகவும் தனது வாழ்க்கையை மீண்டும் எவ்வாறு சீர்படுத்துவது என்று யோசிப்பதற்காகவும் அவன் பிராங்க் மார்டினின் விடுதியில் இருக்கிறான். என்னைப் போலவே அவன் இங்கே தன் விருப்பத்திற்கு மாறாக இருக்கவில்லை. நாங்கள் விரும்பினால் எந்த நேரமும் இங்கிருந்து வெளியேறிவிடலாம். ஆனால் குறைந்தபட்சம் ஒரு வாரம் தங்கியிருக்க வேண்டும் என்று அவர்கள் பரிந்துரைக்கிறார்கள். இரண்டு வாரங்கள் அல்லது ஒரு மாதம் தங்கினால் நல்லது என்பதை அவர்கள் “வலுவாக பரிந்துரைக்கிறார்கள்“.

நான் முன்பே சொன்னதுபோல, பிராங்க் மார்டினுக்கு நான் வருவது இரண்டாவது முறை. ஒரு வாரம் தங்குவதற்கான காசோலையை முன்னமே செலுத்த முற்பட்டவனாய் நான் கையெழுத்திட்டபோது பிராங்க் மார்டின் என்னிடம் சொன்னார், “விடுமுறை நாட்கள் எப்போதும் மோசமானவை, இந்த முறை கூடுதலாய் சில நாட்கள் இங்கிருப்பதைப் பற்றி யோசிக்க வேண்டும். சில வாரங்கள் இருக்க முடியுமா என்று யோசி, சில வாரங்கள் இருக்க முடியுமல்லவா? யோசித்துச் சொல், இப்போதே தீர்மானிக்கவேண்டும் என்று கட்டாயம் இல்லை.“ அவர் தன் கட்டை விரலால் காசோலையை அழுத்திக் கொள்ள நான் கையெழுத்திட்டேன். பிறகு நான் என் காதலியுடன் முன்புற கதவருகில் சென்று அவளிடம் “போயிட்டு வா“ என்றேன். அவளும் “வர்றேன்“ என்று சொல்லிவிட்டு வாசற்கதவின் நிலையருகே தடுமாறி முற்றத்திற்கு சென்றாள். பின் மதிய நேரம், மழை பெய்துகொண்டிருந்தது. கதவருகிலிருந்து நான் ஜன்னலருகே சென்றேன். திரையை நகர்த்திவிட்டு அவள் வாகனத்தில் செல்வதை பார்த்து நின்றேன், அவள் என்னுடைய காரில் சென்றாள். குடித்திருந்தாள். நானும்தான் குடித்திருந்தேன். நான் செய்வதற்கு ஒன்றுமில்லை. ரேடியேட்டருக்கு அருகிலிருந்த பெரிய நாற்காலியில் நான் உட்கார்ந்தேன். தொலைகாட்சி பார்த்துக் கொண்டிருந்த சிலர் திரும்பி பார்த்தனர். பிறகு மெதுவாக தாங்கள் பார்த்துக் கொண்டிருந்த நிகழ்ச்சியை தொடர்ந்து பார்க்கலாயினர். நான் வெறுமனே உட்கார்ந்திருந்தேன். அவ்வப்போது திரையில் நடப்பதை பார்த்துக் கொண்டிருந்தேன்.

அன்று மதியம் முன்பக்க கதவு பெருத்த சத்தத்துடன் திறந்துகொள்ள, ஜேபியை அவனுடைய மாமனாரும் மைத்துனனும் தூக்கிக் கொண்டு வந்தார்கள். பிற்பாடு நான் தெரிந்துகொண்டேன், ஜேபியை அவர்கள் அறையின் குறுக்காக இழுத்துக் கொண்டு வந்தார்கள். வயதான ஆள் ஒரு காசோலையில் கையெழுத்திட்டு பிராங்க் மார்டினிடம் தந்தான். பிறகு அவர்கள் இருவரும் ஜேபியை மாடிக்கு தூக்கிச் சென்றார்கள். அவனை படுக்க வைத்திருப்பார்கள் என்று நான் ஊகித்தேன். வெகு சீக்கிரத்திலேயே வயதான ஆளும் இன்னொருவனும் கீழே வந்து வாசல் கதவை நோக்கிப் போனார்கள். எவ்வளவு சீக்கிரம் இந்த இடத்திலிருந்து வெளியேற முடியுமோ அவ்வளவு விரைவாக போய்விட நினைத்தது போலிருந்தது. தங்களது கைகளை கழுவிக் கொள்ளக்கூட அவர்கள் தயாராக இருக்கவில்லை, அவர்களை நான் குறைசொல்ல மாட்டேன். நரகம் இல்லையா, அவர்கள் இடத்தில் நான் இருந்தால் நான் எப்படி நடந்துகொள்வேன் என்று எனக்குத் தெரியவில்லை.

ஒன்றரை நாட்களுக்குப் பிறகு நானும் ஜேபியும் முன் வராந்தாவில் சந்தித்தோம். கைகுலுக்கிக் கொண்டு அன்றைய வானிலையைக் குறித்து பேசினோம். ஜேபியிடம் சிகரெட் பெட்டி இருந்தது. நாங்கள் உட்கார்ந்துகொண்டு கால்களை கம்பித் தடுக்குகளின் மீது போட்டுக்கொண்டோம். சாவகாசமாக அங்கே உட்கார்ந்து கொண்டு எங்களுடைய நாய்களைப் பற்றி பேசுவதற்காக தயாரானவர்கள் போல நாற்காலிகளில் நாங்கள் சாய்ந்து உட்கார்ந்திருந்தோம். அப்போதுதான் ஜேபி இந்தக் கதையை சொல்லத் தொடங்கினான்.

குளிராக இருந்தது. ஆனால் ரொம்பவும் குளிரவில்லை. சற்றே மேகமூட்டமாயிருந்தது. ஒரு தடவை பிராங்க் மார்டின் தன் சுருட்டை குடித்து முடிக்க வெளியில் வந்தார். கழுத்துவரைக்கும் மூடிய ஸ்வெட்டரை அணிந்திருந்தார். பிராங்க் மார்டின் குள்ளமானவர். கனத்த சரீரம் கொண்டவர். நரைத்த சுருள்முடியும் சிறிய தலையும் அவருக்கு. அவருடைய தலை. உடலுக்கு சற்றும் பொருத்தமில்லாத அளவு சிறியதாக இருந்தது அவருடைய தலை. பிராங்க் மார்டின் சுருட்டை வாயில் வைத்துக் கொண்டு மார்பின் குறுக்காக கைகளைக் கட்டிக்கொண்டு நின்றிருந்தார். வாயில் இருந்த சுருட்டை மென்றபடியே அவர் பள்ளத்தாக்கின் குறுக்காக பார்த்துக் கொண்டிருந்தார். வெற்றி உறுதி என அறிந்த குத்துச்சண்டை வீரனைப் போல. அங்கே அவர் நின்றிருந்தார்.

ஜேபி மீண்டும் மௌனமானான். அதாவது அவன் மூச்சுவிடக் கூட இல்லை, கரியள்ளும் வாளியில் என்னுடைய சிகரெட்டை சுண்டி எறிந்துவிட்டு, தன்னுடைய நாற்காலியில் மேலும் சரிந்து உட்கார்ந்திருந்த ஜேபியை தீவிரமாகப் பார்த்தேன். ஜேபி தனது காலரை மேலிழுத்துக் கொண்டான், என்ன எழவுதான் நடக்கிறது என்று வியந்தேன், பிராங்க் மார்டின் குறுக்கே கட்டியிருந்த கைகளை தளர்த்திக் கொண்டு சுருட்டுப் புகையை ஒரு முறை உள்ளிழுத்தார். வாய் வழியாக புகையை வெளியே விட்டார். பிறகு தன் தாடையை மலைகளை நோக்கி உயர்த்தியபடி சொன்னார் “இந்தப் பள்ளத்தாக்கின் மறுபக்கத்தில் ஜேக் லண்டனுக்கு ஒரு இடம் இருந்தது. நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கும் பசுமையான அந்த மலைக்கு பின்னால், ஆனால் மது அவரைக் கொன்றுவிட்டது. அது உங்களுக்கு ஒரு பாடமாக இருக்கட்டும். நம் எவரையும்விட அவர் சிறந்த மனிதன். ஆனாலும் அவராலும்கூட அந்த விஷயத்தைக் கையாள முடியவில்லை“. சுருட்டின் எஞ்சிய பகுதியை அவர் பார்த்தார், தீர்ந்துபோயிருந்தது. அதை வாளிக்குள் சுண்டியெறிந்தார். “இங்கே இருக்கும்போது நீங்கள் எதையாவது படிக்க நினைத்தால், அவருடைய “காட்டின் அழைப்பை“ படியுங்கள். நான் எந்தப் புத்தகத்தைப் பற்றி சொல்கிறேன் என்று உங்களுக்கு தெரிகிறதல்லவா? நம்மிடம் அது உள்ளது. ஏதேனும் படிக்க விரும்பினால் அதை படியுங்கள். பாதி நாயும் மீதி ஓநாயுமாக உள்ள இந்த விலங்கைப் பற்றியதுதான் அது. அது போன்ற புத்தகங்களை இனி யாராலும் எழுதமுடியாது. நாம் அந்த நாட்களில் இங்கிருந்திருப்போமானால் ஜேக் லண்டனுக்கு நாம் உதவியிருக்க முடியும். அவர் நம்மை அனுமதித்திருந்தால், நம்முடைய உதவியை அவர் நாடியிருந்தால், காதில் விழுகிறதா? நாங்கள் உங்களுக்கு உதவுவதுபோல, உங்களுக்கு தேவையானால், வேண்டும் என்று நீங்கள் கேட்டால் மட்டுமே, நீங்கள் காது கொடுத்து கேட்டால் மட்டுமே. சொற்பொழிவு முடிந்தது, ஆனால் “வேண்டுமென்றால்“ என்பதை மறந்துவிடாதீர்கள்“. அவர் மறுபடியும் சொன்னார், பிறகு அவர் தன் பேண்டை மேலே இழுத்துவிட்டு ஸ்வெட்டரை சரிசெய்து கொண்டார். “நான் உள்ளே போகிறேன், மதிய உணவின்போது பார்க்கலாம்,“ என்றார்.

“அவர் பக்கத்தில் இருக்கும்போது நான் பூச்சிமாதிரி உணர்கிறேன்“ என்றான் ஜேபி. “என்னை ஒரு பூச்சி போல உணரச் செய்கிறார். நீ மிதித்து நசுக்குகிற ஒன்றாக“, ஜேபி தலையை ஆட்டிக் கொண்டான். பிறகு அவன் சொன்னான், “ஜேக் லண்டன், என்ன ஒரு பெயர்? அதுமாதிரி ஒரு பெயர் எனக்கும் இருந்திருக்கலாம், இப்போது இருக்கும் என்னுடைய பெயருக்கு பதிலாக,“.

பிராங்க் மார்டின் அந்த “இருந்தால்“ என்பதைப் பற்றி நான் முதன்முறையாக இங்கு வந்தபோது பேசினார். அப்போது என்னுடைய மனைவி என்னை இங்கே அழைத்து வந்திருந்தாள். நாங்கள் இருவரும் ஒன்றாக வாழ்ந்தபோது எல்லாவற்றையும் சரிசெய்ய முனைந்த சமயம் அது. அவள் என்னை இங்கே அழைத்து வந்திருந்தாள். ஒன்று அல்லது இரண்டு மணி நேரம் இங்கிருந்த அவள் பிராங்க் மார்டினிடம் தனியாக உரையாடினாள். பிறகு அவள் போய்விட்டாள். மறுநாள் காலை பிராங்க் மார்டின் என்னிடம் வந்து சொன்னார், “எங்களால் உனக்கு உதவ முடியும், உனக்கு உதவி தேவையானால், நாங்கள் சொல்வதை உன்னால் கேட்க முடியுமானால்“. ஆனால் அவர்களால் எனக்கு உதவ முடியுமா இல்லையா என்று எனக்கு தெரியவில்லை. என்னில் ஒரு பகுதி உதவியை நாடியது. ஆனால் அதன் இன்னொரு பகுதியும் இருந்தது. அதுவொரு மிகப் பெரிய “இருந்தால்“தான்.

முதல் தடவை இங்கிருந்த ஆறு மாதத்திற்கு பிறகு இங்கு என்னை அழைத்து வந்தவள் என் காதலி, அவள் என்னுடைய காரை ஓட்டினாள். காற்றும் மழையுமான நாளில் நாங்கள் வந்தோம். வழி முழுக்க சாம்பெய்ன் குடித்துக்கொண்டே வந்தோம். வாகனத்தை நிறுத்துமிடத்தில் எங்கள் காரை அவள் நிறுத்தியபோது நாங்கள் இருவரும் முழு போதையில் இருந்தோம். என்னை இறக்கி விட்ட பிறகு அவள் வீடு திரும்புவதாக திட்டம். அவளுக்கு நிறைய வேலை இருந்தது. அவள் செய்வதற்கு இருந்த ஒன்று மறுநாள் காலை அவள் வேலைக்கு போகவேண்டும் என்பது. அவள் ஒரு காரியதரிசி. மின்னியல் சாதனங்களை தயாரிக்கும் நிறுவனத்தில் ஓரளவு சுமாரான வேலை. அவளுக்கு வாலிப வயதில் ஒரு வாயாடிப் பையன் வேறு. நகரத்தில் ஒரு விடுதியில் இரவு தங்கியிருந்துவிட்டு பிறகு வீட்டுக்குச் செல்லவேண்டும் என்று நான் விரும்பினேன். ஆனால் அவளுக்கு விடுதியில் அறை கிடைத்ததா இல்லையா என்று எனக்குத் தெரியாது, அன்றைக்கு வாசல் படிகளின் வழியாக பிராங்க் மார்டினின் அலுவலகத்துக்குள் “இங்க யார் வந்துருக்காங்க பாருங்க“ என்று என்னை அழைத்துச் சென்றதற்கு பிறகு அவளிடமிருந்து எந்த தொடர்பும் இல்லை.

ஆனால் அவள் மீதும் நான் பைத்தியமாகவும் இல்லை. என்னை என் மனைவி வீட்டை விட்டு வெளியேற்றியப் பிறகு அவளுடன் நான் தங்கிக் கொள்ளலாம் என்று என்னிடம் சொன்னபோது அவளுக்கு தான் எதை அனுமதிக்கிறோம் என்பதைப் பற்றி எந்தவொரு தெளிவுமே இருக்கவில்லை. அவளுக்காக நான் வருந்தினேன், நான் வருந்தியதற்கு காரணம் கிறிஸ்துமசுக்கு முந்திய நாளன்று அவளது மார்புக் காம்பின் திசுவைக் குறித்த பரிசோதனை அறிக்கை வந்திருந்தது. சந்தோஷப்படும்படியான செய்தி இல்லை. வெகு சீக்கிரத்தில் அவள் மருத்துவரிடம் செல்லவேண்டும், நாங்கள் இருவரும் குடிக்கத் தொடங்குவதற்கு அதுமாதிரியான ஒரு செய்தி போதுமான காரணமாக அமைந்தது. எனவே நாங்கள் இருவரும் சேர்ந்து குடித்தோம். கிறிஸ்துமஸ் தினத்தன்றும் நாங்கள் குடித்துக் கொண்டேயிருந்தோம். அவள் சமைக்க பிடிக்கவில்லை என்றதால் சாப்பிடுவதற்கு ஏதேனும் ஒரு உணவு விடுதிக்கு செல்ல வேண்டியிருந்தது. நாங்கள் இருவரும் அவளுடைய வாயாடி வாலிபப் பையனும் பரிசுகளை சிலவற்றை பிரித்துப் பார்த்துவிட்டு அவளுயை அடுக்கு மாடிக் குடியிருப்புக்கு அருகில் இருந்த இந்த அசைவ உணவகத்துக்கு சென்றோம். எனக்கு பசியிருக்கவில்லை. கொஞ்சம் சூப் குடித்துவிட்டு சூடான ஒரு ரோலைத் தின்றேன். சூப்புடன் ஒரு பாட்டில் வைன் குடித்தேன். அவளும் கொஞ்சம் வைன் குடித்தாள். பிறகு நாங்கள் “பிளட்டி மேரி“ காக்டெய்லைக் குடிக்கத் தொடங்கினோம். அடுத்த இரண்டு நாட்களுக்கு உப்புக் கடலையைத் தவிர நான் வேறெதையுமே சாப்பிடவில்லை. ஆனால் நான் நிறைய போர்பர்ன் விஸ்கி குடித்தேன். இருபத்தியெட்டாம் தேதி காலையில் அவளிடம் நான் சொன்னேன், “செல்லமே நான் இங்கிருந்து போய்விடுவதுதான் நல்லது, நான் திரும்பவும் பிராங்க் மார்டினுக்கு போவதுதான் உத்தமம், மீண்டும் ஒரு தடவை அந்த இடத்தில் இருந்து பார்க்கவேண்டும், நீ என்னை அழைத்துப் போக முடியுமா?“

அன்று மாலையும் இரவும் தன்னால் வீட்டுக்கு வர முடியாது என்றும் இரவு உணவை அவனே சமாளித்துக் கொள்ளவேண்டும் என்றும் அவள் தன் மகனிடம் விளக்கம் சொல்ல முயன்றாள். ஆனால் நாங்கள் வாசலுக்கு செல்லும் நேரத்தில் அந்தப் படுபாவி பையன் எங்களைப் பார்த்துக் கத்தத் தொடங்கினான். “இத நீங்க காதல்னு சொல்றீங்களா? நீங்க ரெண்டு பேரும் நாசமா போங்க. நீங்க ரெண்டு பேரும் திரும்பி வரவே மாட்டீங்க, செத்துப் போவீங்க,“ என்று கத்தினான். இந்தப் பையனைப் பற்றி கற்பனை செய்து பாருங்கள்.

நகரத்திலிருந்து வெளியேறுவதற்கு முன்பாக அவளை கடையில் நிறுத்தச் செய்து மூன்று பாட்டில்கள் சாம்பெய்ன் வாங்கிக் கொண்டேன். பைபர், நல்ல தரமான சரக்கு. பிளாஸ்டிக் தம்ளர்கள் வாங்குவதற்காக இன்னொரு இடத்தில் நிறுத்தினோம். பிறகு கோழி வறுவல் ஒரு டப்பா வாங்கிக் கொண்டோம். புயல்மழைக்கு நடுவே சாம்பெய்ன் குடித்துக் கொண்டு ரேடியோவில் இசையைக் கேட்டுக்கொண்டு நாங்கள் பிராங்க் மார்டின் விடுதிக்குப் புறப்பட்டோம். அவள் காரை ஓட்டினாள். நான் ரேடியோவை திருகிக்கொண்டு சாம்பெய்னை கோப்பைகளில் ஊற்றியபடி இருந்தேன். அந்தப் பயணத்தின்போது நாங்கள் ஒருவிதமான கொண்டாட்டத்தை மேற்கொள்ள முயற்சித்தோம். ஆனால் நாங்கள் இருவரும் வருத்தத்துடனும் இருந்தோம். கோழி வறுவல் இருந்தது, ஆனால் நாங்கள் எதையும் சாப்பிடவில்லை.

அவள் வீட்டுக்கு பத்திரமாகத் திரும்பியிருப்பாள் என்றே நினைக்கிறேன். அவள் திரும்பாமல் போயிருந்தால் எனக்கு தகவல் வந்திருக்கும். ஆனால் அவள் என்னை அழைக்கவில்லை. நானும் அவளை அழைத்து பேசவில்லை. தன் உடல்நிலைப் பற்றிய தகவல் ஏதேனும் அவளுக்குத் தெரிந்திருக்கக்கூடும், அதற்கு பிறகு அவள் அதைப் பற்றி கேள்விப்படாமலும் இருந்திருக்கலாம். தவறாகவும் சொல்லப்பட்டிருக்கக் கூடும், அது வேறு யாரோ ஒருவருடைய பரிசோதனை அறிக்கையாகவும் இருக்கலாம். ஆனால் என்னுடைய கார் அவளிடம் இருக்கிறது. அவளுடைய வீட்டில் என்னுடைய பொருட்களும் உள்ளன, நாங்கள் மறுபடியும் சந்திப்போம் என்று எனக்குத் தெரியும்.

மதியஉணவு நேரத்தில் இங்கே ஒரு பழைய மணியை ஒலிக்கச் செய்வார்கள். நானும் ஜேபியும் கிழடுகளைப்போல நாற்காலிகளிலிருந்து மெதுவாக எழுந்து உள்ளே சென்றோம். முன் வராந்தாவில் குளிரடிக்கவும் தொடங்கியிருந்தது. நாங்கள் பேசிக்கொண்டிருக்கையில் எங்களது சுவாசம் எங்களிடமிருந்து புகையாய் மிதந்து போனது.

புத்தாண்டுக்கு முந்தைய நாள் காலையில் எனது மனைவியிடம் தொலைபேசியில் பேச முயன்றேன். பதில் இல்லை. ஒன்றும் பிரச்சினையில்லை. அது பிரச்சினையாக இருந்தாலும் நான் என்ன செய்ய முடியும்? சில வாரங்களுக்கு முன்னால் தொலைபேசியில் பேசிக்கொண்டபோது ஆளுக்கு ஆள் திட்டிக் கொண்டோம். அவளை நான் கெட்டவார்த்தையில் திட்டினேன். “மூளை கெட்டவன்“ என்று சொல்லிவிட்டு போனை வைத்துவிட்டாள்.

ஆனால் இப்போது அவளிடம் பேசவேண்டும் எனக்கு. என்னுடைய பொருட்களுக்கு ஏதாவது ஏற்பாடு செய்யவேண்டும். அவளுடைய வீட்டிலும் என்னுடைய பொருட்கள் கொஞ்சம் இருந்தன.

இங்கே இருப்பவர்களில் ஒருவன் அடிக்கடி பிரயாணம் செய்பவன், அவன் ஐரோப்பாவுக்கும் மத்திய கிழக்கு நாடுகளுக்கும் பயணம் செல்வானாம். என்னவோ, அப்படித்தான் அவன் சொன்னான். வியாபாரம் என்றான், குடிப்பழக்கத்தை அவன் கட்டுப்பாட்டுக்குள்தான் வைத்திருக்கிறான் என்றும் தான் ஏன் பிராங்க் மார்டினில் இருக்கிறேன் என்றே தெரியவில்லை என்றும் அவன் சொன்னான். ஆனால் இங்கே எப்படி வந்துசேர்ந்தான் என்பது அவனுக்கு நினைவில்லை. நினைவில்லாததைப் பற்றி சொல்லி அவன் சிரித்தான். “மறதி என்பது யாருக்கும் வரும்“ என்றான். “அது ஒரு விஷயமேயில்லை“, அவன் போதையிலிருக்கவில்லை, அவன் சொல்ல இதை நாங்கள் கவனித்துக்கொண்டிருந்தோம். “மறதி என்பது பெரிய விஷயம் என்று சொல்வது கடுமையாக குற்றம் சுமத்துவதாகும்“. “அவ்வாறு பேசுவதென்பது ஒரு பெரிய மனிதனின் பெயருக்கு களங்கம் கற்பிப்பதாகும்“.ஐஸ் இல்லாமல், விஸ்கியோடு வெறும் தண்ணீரை மட்டும் கலந்துகொண்டால், அவன் ஒருபோதும் “மறதிக்குள்ளாவதில்லை“, அவன் சொன்னதுதான், மறதியாவதுமில்லை, குடிக்கும்போது சேர்க்கும் ஐஸ்கட்டிதான் இதற்கெல்லாம் காரணம், “உனக்கு எகிப்தில் யாரையாவது தெரியுமா?“ என்று என்னைக் கேட்டான். “அங்கே எனக்கு சிலரைத் தெரியும்“.

புத்தாண்டுக்கு முந்தைய நாள் இரவு சாப்பாட்டிற்கு பிராங்க் மார்டின் இறைச்சியும் வேகவைத்த உருளைக் கிழங்கும் பரிமாறினார். வேகவைக்காத காய்கறிகள். எனக்கு நல்ல பசியெடுக்கத் தொடங்கியது, காய்கறிகளை தின்றேன், தட்டிலிருந்த எல்லாவற்றையும் சாப்பிட்டேன், என்னால் இன்னும் சாப்பிட முடியும், டைனியின் தட்டை எட்டிப் பார்த்தேன். அட சண்டாளா, அவன் தட்டில் இருந்த எதையுமே தொடக் கூட இல்லை, அவனுக்குப் போட்ட கறித்துண்டு தட்டில் அப்படியே ஆறிக் கிடந்தது. டைனி பழைய டைனியாக இல்லை. பாவிப்பயல், இன்றைக்கு ராத்திரி வீட்டுக்குப் போய்விடலாம் என்று திட்டமிட்டிருந்தான். பாவம், தனக்குப் பிடித்த உடைகளையும் செருப்பையும் அணிந்துகொண்டு மனைவியுடன் கைகோர்த்தபடி தொலைகாட்சி பார்க்கவேண்டும் என சொல்லியிருந்தான். இப்போது அவனுக்கு இங்கிருந்து போக பயம். என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. ஒரு முறை வலிப்பு வந்துவிட்டால் மறுபடியும் அது உனக்கு தொல்லை கொடுக்கும். அவ்வாறு நடந்ததிலிருந்து டைனி தன்னைப் பற்றி எந்த வேடிக்கைகளையும் சொல்லவில்லை. அமைதியாகவே தனக்குள் ஆழ்ந்து போயிருந்தான். கொஞ்ச நேரத்தில் அவனுடைய கறியை எடுத்துக் கொள்ளலாமா என்று நான் கேட்க அவன் தன்னுடைய தட்டை என் பக்கம் நகர்த்தினான்.

டைம் சதுக்கத்தில் புத்தாண்டு பிறக்கும் நேரம் வரையிலும் எங்களை தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை பார்க்கவிட்டார்கள். எங்களில் சிலர் இன்னும் கண்விழித்திருந்தோம். தொலைக்காட்சியை சுற்றிலும் உட்கார்ந்து திரையில் தெரிந்த கூட்டத்தை பார்த்துக் கொண்டிருந்தோம். அப்போதுதான் பிராங்க் மார்டின் தன்னுடைய கேக்குடன் உள்ளே வந்தார். கேக்கை எங்கள் ஒவ்வொருவருக்கும் காட்டினார். அந்தக் கேக்கை அவர் தயாரிக்கவில்லை என்று எனக்குத் தெரியும், அது மோசமான பேக்கரியில் செய்யப்பட்ட ஒன்று. இருந்தாலும் அது கேக், அதுவொரு பெரிய வெள்ளை நிறத்திலான கேக், கேக்கின் மேற்பக்கம் ஊதா வண்ணத்தில் எழுதப்பட்டிருந்தது, “புத்தாண்டு வாழ்த்துக்கள், ஒவ்வொரு கணத்தையும் அனுபவித்து வாழ்க“ என்று எழுதப்பட்டிருந்தது.

“எனக்கு இந்த கேக் மயிரெல்லாம் வேண்டாம்“ என்றான் ஐரோப்பாவிற்கும் மத்திய கிழக்கு நாடுகளுக்கும் பயணம் போனவன், “சாம்பெய்ன் எங்கே?“ என்று கேட்டுவிட்டு சிரித்தான்

நாங்கள் அனைவரும் உணவுக்கூடத்திற்குள் சென்றோம், பிராங்க் மார்டின் கேக் வெட்டினார். நான் ஜேபியின் அருகில் உட்கார்ந்தேன். ஜேபி இரண்டு துண்டு கேக்குகளைத் தின்றுவிட்டு கோக் குடித்தான். நான் ஒரு துண்டை தின்றுவிட்டு இன்னொன்றை பிறகு தின்னலாம் என்ற எண்ணத்துடன் கைதுடைக்கும் காகிதத்தில் சுற்றிக் கொண்டேன்.

ஜேபி சிகரெட்டை பற்ற வைத்துக்கொண்டான். அவனுடைய கைகள் இப்போது நடுங்காமல் இருந்தன. புதுவருடத்தின் முதல் நாளான நாளை காலையில் அவனுடைய மனைவி வருவதாக என்னிடம் சொன்னான்.

“பிரமாதம்“ என்றேன் நான். தலையாட்டினேன், விரலில் ஒட்டியிருந்த கிரீமை நக்கிக் கொண்டேன், “ரொம்ப நல்ல சமாச்சாரம் ஜேபி“ என்றேன்.

“உனக்கு அறிமுகப்படுத்துகிறேன்“ என்றான்

“அதற்காக நான் காத்திருக்கிறேன்“ என்றேன்

இரவு வணக்கம் சொல்லிக் கொண்டோம், புத்தாண்டு வாழ்த்துக்களைப் பரிமாறிக்கொண்டோம். நிம்மதியாகத் தூங்கவும் விழைந்தோம். என்னுடைய விரல்களைத் துடைத்துக் கொண்டேன், கை குலுக்கினோம்.

நான் மீண்டும் தொலைபேசிக்குச் சென்று ஒரு நாணயத்தைப் போட்டு என் மனைவியை அழைத்தேன். இந்த முறையும் யாரும் பதிலளிக்கவில்லை. காதலியிடம் பேசலாம் என்றெண்ணி அவளுடைய எண்ணை சுழற்றும்போதுதான் அவளிடம் பேச வேண்டாம் என்று எனக்குத் தோன்றியது. தொலைக்காட்சியில் நான் பார்த்துக் கொண்டிருந்த அதே நிகழ்ச்சியைத்தான் அவளும் ஒருவேளை தன் வீட்டில் பார்த்துக் கொண்டிருந்திருப்பாள்.அப்படியில்லாமலும் இருந்திருக்கலாம், எங்காவது வெளியில் சென்றிருக்கலாம், ஏன் அவள் அப்படி சென்றிருக்கக்கூடாது? என்னவோ அவளிடம் நான் பேச விரும்பவில்லை. அவள் சாதாரணமாகத்தான் இருக்கிறாள் என்று நான் நம்புகிறேன். ஆனால் அவளுக்கு ஏதாவது பிரச்னை என்றால் அதுகுறித்து நான் தெரிந்துகொள்ள விரும்பவில்லை. இப்போது வேண்டாம், எதுவாக இருப்பினும் இன்றிரவு அவளுடன் நான் பேசப் போவதில்லை.

காலையுணவுக்குப் பிறகு நானும் ஜேபியும் காபியை எடுத்துக் கொண்டு முன்வராந்தாவுக்கு வந்தோம், அவனுடைய மனைவிக்காக அங்கேதான் காத்திருப்பது என்று திட்டமிட்டிருந்தோம். வானம் தெளிந்திருந்தது. ஆனாலும் நல்ல குளிர் இருந்ததால் ஸ்வெட்டரும் மேற்கோட்டும் அணிந்திருந்தோம்.

“குழந்தைகளை அழைத்து வர வேண்டுமா என்று கேட்டான்“ என்றான் ஜேபி, “குழந்தைகளை வீட்டிலேயே விட்டுவிடச் சொன்னேன் நான், உன்னால் யோசிக்க முடிகிறதா? கடவுளே என்னுடைய குழந்தைகள் இங்கே வரவேண்டாம்,“

கரிவாளி ஒன்றை நாங்கள் சாம்பல் கிண்ணமாக உபயோகித்தோம். ஜேக் லண்டன் வழக்கமாக வசித்திருந்தப் பள்ளத்தாக்குப் பகுதியை நோக்கினோம். இன்னும் கொஞ்சம் காபியை குடித்திருக்கும்போது அந்த கார் சாலையிலிருந்துத் திரும்பி வாகனங்கள் நிறுத்துமிடத்தை அடைந்தது.

“அவள்தான்“ என்றான் ஜேபி, தன்னுடைய நாற்காலிக்கு அருகே கோப்பையை வைத்தான். எழுந்து படிகளில் இறங்கி காரை நோக்கிப் போனான்.

பிரேக்கை போட்டு இந்தப் பெண் காரை நிறுத்துவதைப் பார்த்தேன். ஜேபி கார் கதவைத் திறப்பதைப் பார்த்தேன். காரிலிருந்து இந்தப் பெண் வெளியே வருவதையும் அவர்கள் அணைத்துக் கொள்வதையும் பார்த்தேன். இருவரும் தழுவிக்கொண்டனர். நான் முகத்தைத் திருப்பிக் கொண்டேன். பிறகு நான் மீண்டும் அவர்களைப் பார்த்தேன். ஜேபி அவள் தோளில் கையை கோர்த்துக் கொண்டிருக்க அவர்கள் படிகளில் ஏறி வந்தனர். இந்தப் பெண் புகைப்போக்கிகளுக்குள் ஊர்ந்திருக்கிறாள், இந்தப் பெண் ஒரு முறை ஒருவனது மூக்கை உடைத்திருக்கிறாள், அவளுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள், ஏராளமான பிரச்சினைகளும், ஆனால் அவளது கைகளைக் கோத்திருக்கும் இந்த மனிதனை நேசிக்கிறாள். நான் நாற்காலியிலிருந்து எழுந்து கொண்டேன்.

“இவன் என்னுடைய நண்பன்“ என்றான் ஜேபி தன் மனைவியிடம், “டேய் இது ராக்ஸி“.

ராக்ஸி என் கைகளைக் குலுக்கினாள். உயரமாக, பார்ப்பதற்கு லட்சணமாக இருந்த அவள் நீல நிறத்தில் பின்னல் தொப்பியை அணிந்திருந்தாள். கோட்டும் வெள்ளை நிறத்தில் மொத்தமான ஸ்வெட்டரும் அடர் நிறத்தில் சட்டையும் போட்டிருந்தாள். அவளுடைய காதலனைக் குறித்தும் வெட்டுக் குறடு பற்றியும் ஜேபி முன்பொருமுறை சொன்னதை நான் நினைவுபடுத்திக் கொண்டவனாய் அவளுடைய கைகளைப் பார்த்தேன். சரிதான், அவளுடைய கைகளில் திருமண மோதிரம் எதையும் நான் பார்க்கவில்லை, அது எங்காவது துண்டுகளாகக் கிடக்கும். அவளுடைய கைகள் அகலமாக இருந்தன, விரல்களின் மூட்டெலும்புகள் தடித்திருந்தன. இந்த பெண் தேவைப்பட்டால் தனது முஷ்டியை உபயோகப்படுத்தக்கூடியவள்தான்.

“உன்னைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன்“ என்றேன், “ஜேபி நீங்கள் எப்படி அறிமுகமானீர்கள் என்றும் புகைப்போக்கிகளைப் பற்றியும் சொல்லியிருக்கிறான்“.

“ஆமாம் ஒரு புகைப்போக்கியில்“ என்றாள் அவள். அவளது கண்கள் என் முகத்திலிருந்து விலகி மீண்டும் திரும்பியது. அவள் தலையாட்டினாள். அவள் ஜேபியுடன் தனித்திருக்க ஆர்வமாயிருப்பதை நான் புரிந்துகொண்டேன். “அவன் உனக்கு சொல்லாதது ஏராளம் உண்டு“ என்றாள் அவள். “எல்லாவற்றையும் சொல்லியிருக்க மாட்டான் என்னால் உறுதியாக சொல்ல முடியும்“ என்றவள் சிரித்தாள். பிறகு, இனியும் அவளால் காத்திருக்க முடியாது, அவள் தன் கரத்தை ஜேபியின் இடுப்பில் கோர்த்துக் கொண்டு அவனது கன்னத்தில் முத்தமிட்டாள். அவர்கள் கதவை நோக்கிச் செல்லலானார்கள், “உன்னை சந்தித்ததில் சந்தோஷம்“ என்றாள் திரும்பிப் பார்த்தபடியே. “துப்புரவுத் தொழிலில் கைதேர்ந்த துப்புரவாளன் அவனே என்பதை உன்னிடம் சொன்னானா?“ என்றவள் அவளது கைகளை ஜேபியின் இடுப்பிலிருந்து இன்னும் கீழாக நகர்த்தினாள்.

“போலாம் ராக்ஸி“ என்றான் ஜேபி, அவனது கைகள் கதவின் கைப்பிடியைப் பற்றியிருந்தது.

“தனக்கு தெரிந்த எல்லாவற்றையுமே அவன் உன்னிடம் இருந்தே கற்றுக்கொண்டதாக சொன்னான்“ என்றேன்.

“நிச்சயமாக அது உண்மைதான்,“ என்றாள். திரும்பவும் சிரித்தாள், ஆனால் அவள் வேறு எதைக் குறித்தோ யோசிக்கிறாள் என்பது போல இருந்தது. ஜேபி கதவுக் குமிழைத் திருப்பினான். ராக்ஸி அவனுடைய கைமீது தன் கையை வைத்தாள். “ஜோ மதிய உணவுக்கு நாம் நகரத்துக்கு செல்ல முடியுமா? உன்னை எங்காவது சாப்பிட அழைத்துப் போக முடியுமா?“

ஜேபி தொண்டையை செருமிக் கொண்டான். “இன்னும் ஒருவாரம் ஆகவில்லை“ என்றான். கதவுக் குமிழிலிருந்து கையை எடுத்தவன் விரல்களை தாடையில் வைத்தான், “இன்னும் கொஞ்ச நாட்களுக்கு நான் இங்கிருந்து வெளியே போகாமல் இருக்க வேண்டுமென அவர்கள் விரும்புவார்கள் என்று நான் நினைக்கிறேன். நாம் இங்கேயே கொஞ்சம் காபி சாப்பிடலாம்“ என்றான்.

“சரிதான்“ என்றாள். அவளது பார்வை மீண்டும் ஒரு முறை என்னைத் தொட்டது. “ஜோவுக்கு இங்கே ஒரு நண்பன் கிடைத்திருப்பதில் எனக்கு மகிழ்ச்சி, உன்னை சந்தித்ததில் சந்தோஷம்“ என்றாள் மீண்டும்.

அவர்கள் உள்ளே நகரத் தொடங்கினார்கள், அவ்வாறு செய்வது முட்டாள்தனமானது என்று எனக்குத் தெரியும் ஆனாலும் அதை நான் செய்தேன், “ராக்ஸி“ என்று அழைத்தேன், வாசல் நிலையருகில் நின்ற அவர்கள் திரும்பிப் பார்த்தார்கள். “எனக்கும் கொஞ்சம் அதிர்ஷ்டம் வேண்டும்“ என்றேன் நான், “நான் விளையாட்டுக்குச் சொல்லவில்லை, எனக்கு ஒரு முத்தம் தரமுடியுமா?“

ஜேபி கண்களைத் தாழ்த்திக் கொண்டான். கதவு திறந்திருந்தபோதும் அவன் இன்னும் கதவுக் குமிழைப் பிடித்திருந்தான். கதவின் குமிழை முன்னும் பின்னுமாகத் திருப்பிக் கொண்டிருந்தான். அவனுக்கு தர்மசங்கடமாக இருந்தது. எனக்கும் தர்மசங்கடமாகத்தான் இருந்தது. ஆனால் அவளை உற்றுப் பார்த்துக் கொண்டேயிருந்தேன். அதை எவ்வாறு புரிந்துகொள்வது என்று ராக்ஸிக்குத் தெரியவில்லை. அவள் புன்னகைத்தாள், “நான் இப்போது புகைப்போக்கித் துப்புரவுத் தொழிலாளி கிடையாது“ என்றாள், “பல ஆண்டுகளாயிற்று, ஜோ உன்னிடம் சொல்லவில்லையா? , இருந்தாலும் உனக்கு நிச்சயமாய் முத்தம் தருகிறேன், கண்டிப்பாக, உன்னுடைய அதிர்ஷ்டத்துக்காக“,

அவள் முன்னகர்ந்து, உயரமான என் தோள்களைப் பற்றி, உதடுகளில் முத்தத்தைப் பதித்தாள், “எப்படியிருந்தது?“ என்று கேட்டாள்.

“நல்லாயிருந்தது“ என்றேன் நான்

“அதெல்லாம் ஒன்றும் இல்லை“ என்றாள் அவள். இன்னும் என் தோள்களைப் பற்றியிருந்தாள். அவள் நேராக என் கண்களைப் பார்த்துக் கொண்டிருந்தாள், “அதிர்ஷ்டம் வாய்க்கட்டும்“ என்றாள் அவள், பிறகு என்னை விடுத்து நகர்ந்து போனாள்.

“பால், பிறகு பார்க்கலாம்“ என்றான் ஜேபி, அவன் கதவை முழுக்கத் திறந்து விட அவர்கள் உள்ளே போனார்கள்.

முன்பக்கப் படிகளில் உட்கார்ந்த நான் சிகரெட்டை பற்றவைத்தேன். என் கைகள் செய்வதை கவனித்தபடியிருந்த நான் பிறகு தீக்குச்சியை ஊதி அணைத்தேன். என்னிடம் ஒரு சிகரெட் பெட்டி இருந்தது. இன்று காலை அதிலிருந்துதான் எடுத்து நான் புகைக்கத் தொடங்கினேன். இன்று காலையில் எனக்குக் குடிக்க ஏதாவது தேவையாக இருந்தது. மிகச் சோர்வாக இருந்தது. ஆனால் அதைப் பற்றி ஜேபியிடம் நான் ஒன்றும் சொல்லவில்லை. நான் என் மனதை வேறு எதிலாவது திசைதிருப்ப முயன்றேன். ஒருதடவை அப்படி செய்யவும் முடிந்தது.

புகைப்போக்கிகளை சுத்தப்படுத்துவது பற்றி யோசிக்கத் தொடங்கினேன். ஜேபியிடமிருந்து நான் கேட்டிருந்த எல்லா விஷயங்களையும் யோசித்தேன். ஆனால் ஏதோ காரணத்திற்காக திருமணம் முடிந்தவுடன் நானும் என் மனைவியும் வசிக்கத் தொடங்கின வீட்டைப் பற்றி யோசிக்கத் தொடங்கினேன். அந்த வீட்டில் புகைப்போக்கிக் கிடையாது. கருமமே, கூடாது, அதை எனக்கு இப்போது ஞாபகப்படுத்தியது எது என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் அந்த வீடு எனக்கு ஞாபகத்தில் இருந்தது. சில வாரங்களே அங்கிருந்தபோது ஒரு நாள் காலையில் ஏதோ சத்தம் கேட்டு நான் விழித்துக் கொண்டதும் நினைவில் வந்தது. அது ஞாயிற்றுக் கிழமை காலை நேரம், படுக்கையறைக்குள் இன்னும் இருட்டாக இருந்தது, ஆனால் படுக்கையறை ஜன்னல் வழியாக மங்கலான வெளிச்சம் உள்ளே வந்தது. நான் கவனித்திருந்தேன், வீட்டின் ஓரத்தில் எதையோ சுரண்டுவதை என்னால் கேட்க முடிந்தது, படுக்கையிலிருந்து எழுந்து ஜன்னலோரத்திற்கு வந்தேன்.

“கடவுளே“ படுக்கையில் எழுந்து உட்கார்ந்துகொண்டு முகத்திலிருந்து தலைமுடியை விலக்கியபடியே சொன்னாள் என் மனைவி. பிறகு அவள் சிரிக்கத் தொடங்கினாள். “அது வெண்டிருண்ணி“ என்றாள், “அவர்தான் இந்த வீட்டு சொந்தக்காரர், உன்னிடம் சொல்ல மறந்துவிட்டேன், இன்னிக்கு இந்த வீட்டுக்கு பெயிண்ட் அடிக்க வருவதாக அவர் சொல்லியிருந்தார், வெயில் வரதுக்கு முன்னாடி விடிகாலையிலேயே வர்றேன்னு சொல்லியிருந்தார், எல்லாத்தையும் சுத்தமா மறந்துட்டேன்“ என்றாள், இன்னும் கொஞ்சம் சிரித்தாள், “நீ வந்து படுப்பா, அது வீட்டுக்காரர்தான்“.

“இரு“ என்றேன் நான்.

ஜன்னல் திரையை விலக்கினேன், வெளியே முழுக்க வெள்ளை அங்கியை அணிந்த அந்த முதியவர் ஏணியை அடுத்து நின்றிருந்தார். மலைக்கு பின்னிருந்து அப்போதுதான் சூரியன் எழத் தொடங்கியிருந்தன. முதியவரும் நானும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டோம். அது வீட்டு சொந்தக்காரர்தான், சரிதான். அந்த முதியவர்தான் முழு அங்கியில் இருக்கிறார். ஆனால் அந்த அங்கி அவருக்கு தொளதொளவென்று இருந்தது. அவர் சவரம் செய்ய வேண்டியுமிருந்தது. தனது வழுக்கைத் தலையை மறைப்பதற்காக பேஸ்பால் தொப்பியையும் அணிந்திருந்தார். இவனைப் போல ஒரு கிறுக்குத்தனமானக் கிழவனை நான் பார்த்ததேயில்லை. அந்த நிமிடத்தில் நான் அவனாக இருக்கவில்லை என்ற நினைப்பை அடுத்து ஒரு சந்தோஷ அலை எனக்குள் எழுந்தது. நான் நானாக படுக்கையறைக்குள் என்னுடைய மனைவியுடன் இருக்கிறேன். அவர் தனது கட்டைவிரலை சூரியனை நோக்கி உயர்த்திக் காட்டினார். அவர் தன் நெற்றியிலிருந்து வியர்வையைத் துடைப்பது போல பாவனை செய்தார். அவருக்கு அவ்வளவு நேரமில்லை என்பதை எனக்குத் தெரிவிப்பது போலிருந்தது. அந்தக் கிழவன் முறுவலித்து சிரிக்கத் தொடங்கினான். அப்போதுதான் நான் நிர்வாணமாக இருப்பது எனக்கு உறைத்தது, கீழே குனிந்து என்னை நானே பார்த்துக் கொண்டேன். அவனை மறுபடியும் பார்த்துவிட்டு தோள் குலுக்கினேன், நான் புன்னகைத்தபடியிருந்தேன், அவன் என்ன எதிர்பார்த்திருப்பான்?

என் மனைவி சிரித்தாள். “வந்துரு“ என்றாள், “வந்து படு, இப்பவே, இந்த நிமிஷமே, இங்க வந்துரு“.

திரைச் சீலையை தளர்த்தினேன், ஆனால் ஜன்னலருகிலேயே நின்றிருந்தேன். என்னுடைய மனைவியின் குரலைக் கேட்டது போலவும் “போப்பா,, போய் படு, எனக்கு புரியது“ என்று சொல்வது போலத் தலையாட்டுவதையும் என்னால் பார்க்க முடிந்தது. அவர் தனது தொப்பியை இறுக்கிக் கொண்டார். பிறகு அவர் தனது வேலையைப் பார்க்கத் தொடங்கிவிட்டார். தனது வாளியை எடுத்துக்கொண்டார், ஏணியில் ஏறத் தொடங்கினார்.

இப்போது நான் எனக்குப் பின்னால் இருந்த படிகளில் சாய்ந்துகொண்டு கால்மேல் கால் போட்டுக் கொண்டேன். இன்றைக்கு மதியத்துக்கு பின்னால் என்னுடைய மனைவியுடன் பேச முயற்சிப்பேன். பிறகு என்னுடைய காதலிக்கு என்ன ஆனது என்று தெரிந்து கொள்ள அவளுடன் பேசுவேன். ஆனால் அவளுடைய வாய்துடுக்கு பையன் தொலைபேசியை எடுத்துப் பேசுவதை நான் விரும்பவில்லை. நான் பேச முயற்சிக்கும்போது அவன் தன் சொந்த வேலையாக எங்காவது வெளியில் போயிருக்க வேண்டும். ஜேக் லண்டனின் புத்தகங்களில் எதையாவது நான் படித்திருக்கிறேனா என்று நினைவுபடுத்த முயன்றேன். எனக்கு ஞாபகமில்லை, ஆனால் நான் உயர்நிலைப்பள்ளியில் படிக்கும்போது அவருடைய கதை ஒன்றை படித்த நினைவிருக்கிறது, “நெருப்பு மூட்டுதல்“ என்று கதையின் பெயர். யூகானிலிருக்கும் ஒரு மனிதன் கடுங்குளிரில் உறைந்து கொண்டிருக்கிறான். நெருப்பு எரியாமல் போனால் அவன் குளிரில் விறைத்து செத்துப் போகக்கூடும் என்றால் யோசித்துப் பாருங்கள். நெருப்பைக் கொண்டு அவன் தனது காலுறைகளையும் உடைகளையும் காயவைத்துக்கொண்டு தன்னையும் சூடாக்கிக் கொள்ள முடியும். அவன் நெருப்பை எரிய வைத்துக் கொண்டிருக்கும்போது என்னவோ நடந்துவிடுகிறது. மரத்திலிருந்து பனி நெருப்பின் மீது விழுந்துவிடுகிறது, அது அணைந்துபோகிறது, அதேநேரத்தில் வெப்பநிலையும் சரிந்துவிடுகிறது, இரவு கவிகிறது.

பையிலிருந்து சில நாணயங்களை எடுத்தேன். முதலில் என் மனைவியை அழைக்க முயல்வேன். அவள் பதில் சொன்னால் அவளுக்கு நான் புத்தாண்டு வாழ்த்துக்களை சொல்வேன். அவ்வளவுதான், நான் வேறு எதையும் பேசமாட்டேன், என் குரலை உயர்த்தமாட்டேன், அவளாக எதையும் ஆரம்பித்தாலும்கூட நான் பேச மாட்டேன். நான் எங்கிருந்து பேசுகிறேன் என்று அவள் கேட்பாள், அவளிடம் நான் சொல்ல வேண்டும். புத்தாண்டு சபதங்களைப் பற்றி அவளிடம் எதுவும் நான் சொல்லமாட்டேன், இதை ஒரு நகைப்புக்குரிய விஷயமாக ஆக்க முடியாது. அவளிடம் பேசி முடித்த பிறகு நான் என் காதலியை அழைப்பேன், இல்லை என் காதலியை முதலில் அழைத்துப் பேசலாம். அவளுடைய மகன் தொலைபேசியை எடுக்கக் கூடாது என்று நான் விரும்பினேன். அவள் பதில் சொல்லும்போது “கண்ணே, நான்தான்“ என்பேன்.