உழைப்பாளி எறும்பு : செதேஷ்வர் பூஜாரா

சில வருடங்களுக்கு முன்பு, ஒரு நாள் மும்பை வாங்காடே மைதானத்தில் கிரிக்கெட் பார்க்கப் போனேன். எந்த வருடம், என்ன பந்தயம், எந்தெந்த டீம், விளையாடியவர்கள் பெயர்கள் எதுவும் நினைவிலில்லை. மும்பாய்- சௌராஷ்ட்ரா அணிகளுக்கிடையான போட்டியாய் இருக்கலாம், இல்லை துலீப் கோப்பையோ? நிச்சமாய் தெரியவில்லை, கண்டுபிடிக்கமுடியும், ஆனால் அது காரியத்தைக் கெடுத்துவிடும்.

எனக்கு செதேஷ்வர் பூஜாராவின் பேட்டிங் நினைவிருக்கிறது. அவர் அடித்த ஸ்கோர் நினைவில்லை. ஐம்பதோ, நூறோ இருக்கலாம் – ஒரு தீவிர ரசிகர், வாங்காடேக்கு வாடிக்கையாய் வருபவர் ( பெயர் கௌடால்கர் என நினைக்கிறேன்), அவர் மைதானத்துக்குள் ஒடிப்போய் பூஜாராவைக் கட்டிக்கொண்டார். அது நினைவிருக்கிறது, ஆனால் பூஜாரா நிறைய ரன் எடுத்தாரா, ஆட்டம் இழந்தாரா, இழந்தார் என்றால் எப்படி என்பதெல்லாம் ஞாபகமில்லை.

வேறென்ன நினைவிருக்கிறது? ம்ம்ம். அன்று நான் கார்வாரே பெவிலியனுக்கு மேலுள்ள படிகளில் உட்கார்ந்து கொண்டு ஒரு புத்தகத்தைப் படித்துக்கொண்டிருந்தேன். எந்தப் புத்தகம் என்பது நினைவில்லை, அன்றைய வானிலை விவரங்கள் மறந்துபோய்விட்டன, வெய்யில் இருந்திருக்கும், காற்றில் பிசுபிசுப்பும் இருந்திருக்கும். டீ இடைவெளிக்குப் பின் கடல்காற்று வீசி இருக்கும். வாங்காடேயில் பெரும்பாலும் அப்படித்தானே.

மாட்சின் ஒரு கட்டத்தில் நான் லேசாய் தூங்கியிருந்திருப்பது நிச்சயம். உள்நாட்டுப் போட்டிகள் எனக்கு அப்படி ஒரு இனிமையான தூக்கத்தைக் கொடுக்கும். அதுவும் மதிய உணவுக்குப் பின் ஆட்டம் தொடர்கையில், ஆடுபவர்கள் எப்படி விழித்துக் கொண்டிருக்கிறார்கள் என்று வியப்பாய் இருக்கும்; தெர்ட் மேனிலோ, ஃபைன் லெக்கிலோ, டீப் பேக்வர்ட் ஸ்க்வயர் லெக்கிலோ இருக்கும் ஆட்டக்காரகள் அவ்வப்போது கொட்டாவி விடுவதும் காணக்கிடைக்கும். அடுத்தமுறை மேட்ச் பார்க்கப் போகும்போது இவர்களை மறக்காமல் கவனியுங்கள்.

அன்றைக்கு பூஜாரா அடித்த ஒரு ஸ்ட்ரோக்கும் எனக்கு நினைவில்லை. – ட்ரைவ், பன்ச், புல் என்று எதுவும் மனசைத் தொடவில்லை. ஒருதடவைகூட அன்று நிமிர்ந்து உட்கார்ந்து , கண்ணை அகல விரித்து, வாய்பிளந்து அந்த ஆட்டத்தை நான் கவனிக்கவில்லை… ‘ஆஹா’,  ‘சே சே’ எதுவுமே இல்லை. பூஜாராவின் மட்டையடிகளில் கவனமேற்படுத்தும் பேக்-லிஃப்ட்களோ, அதீத ஃபாலோ த்ரூக்களோ இல்லை. அவர் அன்று சிக்ஸரே அடிக்கவில்லை என்றுதான் நினைக்கிறேன். எவ்வளவு சாதாரணமான சிக்ஸாய் இருந்தாலும் ஒரு முதல் தர மேட்ச்சில் அடிக்கப்பட்ட சிக்ஸர் எப்படி மறந்துபோகும்?

பந்து அவர் மட்டையிலிருந்து அலறிக்கொண்டு வந்த சப்தமோ அல்லது சர்வதேச மைதானங்களை விட அமானுஷ்யமான உள்ளூர் மைதானங்களில் தெளிவாய் கேட்கும் மட்டையின் அதிரடியான ‘டொக்’ சப்தமோ எனக்கு நினைவில்லை. பிட்சின் இருமுனைகளிலும் இருந்த ஸ்டம்புகளுக்கிடையே ஒரு பரபரப்போ, நாலு ரன்கள் தூண்டும் கிளர்ச்சியோ எதுவும் இல்லை. அந்த மேட்சை பற்றிய என் நினைவுகள் அப்படித்தான் இருக்கின்றன.

அந்த மேட்சின் ஒவ்வொரு பந்தையும் நான் கவனிக்கவில்ல என்பது நிச்சயம்..நான் கிரிக்கெட்டை அப்படிப் பார்ப்பதில்லை. தனியாய் ஒரு மேட்சுக்குப்போனால் வழக்கமாய் ஒரு புத்தகத்தை படித்துக்கொண்டோ, செய்தித்தாளில் சுடோகுவோ குறுக்கெழுத்தோ போட்டுக்கொண்டோதான் பார்ப்பேன். சுற்றிலும் காதில் விழும் பேச்சுகள், கூட்டத்தில் கவனத்தைக் கவரும் விஷயங்கள், யாரோ ஒரு ஆட்டக்காரரைப் பற்றி வரும் தனித்த கமெண்டுகள், ஜோக்குகள், இவற்றில்தான் எனக்கு ஆர்வம். கிரிக்கெட் ஒரு பின்புலம்தான். அந்தப் பின்னணியில் அதுபாட்டுக்கு நடந்துகொண்டிருக்கும் வாழ்க்கை சுவாரசியமானது.

எனக்கு அந்த நாளைப் பற்றி நினைவிருப்பது இத்தனைதான்.

0-0-0.

பூஜாரா என்ற இந்த இளைஞரைப் பற்றி யோசித்துக்கொண்டிருக்கிறேன். இவர்மீது கவனம் செலுத்த எனக்குச் சில காலமாயிற்று. அவர் சடாலென்று எழும்பிப் பறப்பவரோ, அல்லது சிரமம் எடுத்து ஆடுபவரோ இல்லை. அவரிடம் கள்ளத்தனமும் இல்லை, அடாவடியும் இல்லை.. அவரிடம் இருப்பது ஒரு முழுமை. இவரை ஆட்டம் இழக்கச் செய்வது எதிர் அணிக்குக் கஷ்டமான வேலை. லீக் மேச்சுகளின் வழக்குப்பேச்சில் சொன்னால் அவர் ஒரு திடமான பேட்ஸ்மன்., ‘த்த்த்த்த்த்த்த்…திடம்” இந்தப் பதம் எத்தனை நீளமாகிறதோ அவ்வளவு கவனம் செலுத்தப்படவேண்டியவர் அவர் என்று அர்த்தம். இத்தகையவர்களுடன் பெரும்பாடு. அவர்களைத் திட்டியோ, எரிச்சலூட்டியோ ஒரு பயனும் இல்லை. முதல்நாளின் மூன்றாவது பகுதி ஆட்டத்தில் ஜேம்ஸ் ஆண்டர்ஸன் பூஜாராவை இடித்துப் பார்த்தார். தண்டம். இவர்களைக் கடுப்பாக்க முடியாது – ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே போகும் பந்தை நாள்முழுவதும் வேண்டுமானாலும் அவர்கள் சும்மாவே விட்டுக்கொண்டு இருந்துவிட்டு, அப்புறம் வரும் ஒரு சுலபமான பந்தை நாலு ரன்னுக்கு அடிப்பார்கள். இவர்களிடம் உள்ள பலவீனத்தையோ கண்டே பிடிக்க முடியாது. ஆமதாபாதில் ஆஃப் ஸ்டம்ப்புக்கு வெளியேவா? சரி. மும்பையில் எகிறும் பந்தா? அதுவும் சரி. என்று எல்லாவற்றையும் விளையாடுவார்கள்.

இது போன்றவர்களை நாமெல்லாம் கிரிக்கெட்டின் பல தளங்களிலும் பார்த்திருக்கிறோம்.பல ஓவர்களுக்குத் தடுத்துக்கொண்டே இருப்பார்கள், அப்புறம் ஒரு ஒற்றை ஓட்டம், அப்புறம் இரண்டு ஓட்டங்கள், அப்புறம் எதிரே பார்க்காதபோது ஒரு நாலு. உழைப்பாளி எறும்புகள் அரிசியை நிதானமாய் எடுத்துப் போய் போய் சேர்ப்பதுபோல இவர்களிடம் ஒரு நிதானமான, அமைதியான உழைப்பு. அவர்களை நீங்கள் சரியாய் கவனிக்க ஆரம்பிக்கும் முன் அவர்கள் முப்பது ஓட்டங்களை எட்டி விடுவார்கள். அப்படி அவர்கள் செட்டில் ஆனதும், உங்கள் கிரக சேர்க்கை சரியாய் இருந்தால், அவுட் ஆக்க ஒரு வாய்ப்பு கொடுப்பார்கள். அதைத் தவற விட்டீர்கள் என்றால் மும்பைப் போட்டியில் முதல்நாள் இங்கிலாந்துக்கு ஆனதுபோல், உங்களுக்கும் சனிதான்.

இந்திய உள்நாட்டுக் கிரிக்கெட்டின் சரித்திரத்தில் இதுபோன்ற பல பேட்ஸ்மென்களைப் பார்க்கலாம். இவர்களில் பலரும் முதல்தரப் போட்டிகளில் உழைப்பாளி எறும்பு வகையில் கைதேர்ந்தவர்கள்தான். புஜாராவுக்கு சீக்கிரமே கிடைத்துள்ள வெற்றி – இவர் இது வரை ஆடி இருப்பது 7 டெஸ்ட்கள்தான், இன்னும் வெளிநாடு எதிலும் பெரிய அளவில் அடிக்கவில்லை –   குறைவாய் பேசப்படும் எறும்பு வழி முறைக்கும் கிடைத்த வெற்றி.

இந்திய உள்நாட்டுப் போட்டிகள் பார்ப்பதில் கொஞ்சமே அனுபவம் இருப்பவர்கள் கூடச் சொல்லிவிடுவார்கள் – செதேஷ்வர் பூஜாராவால் ரன்கள் எடுக்கமுடியும். மழை நனைக்கும், தீ சுடும் என்பதுபோல எளிமையான உண்மை அது – புஜாரா ரன்கள் எடுப்பார்.

அவரைச் சுற்றி இருக்கும் கேள்விகள் பல உள்நாட்டு ரன் மெஷின்களை சுற்றி எழுப்பப்பட்டவையேதான். இவருடைய வெற்றியை இவர் அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்ல முடியுமா? இதே திடமான அணுகுமுறை சர்வதேச பௌலர்களிடம் பலிக்குமா? கடுமையான பிட்சுகளில், உலகத்தின் சிறந்த அணிகளுக்கு எதிரே பெரிய அளவில் ரன்கள் குவிக்கத் தேவையான மனப்பாங்கு இவருக்கு இருக்கிறதா?

இந்தக் கேள்விகளுக்கு இவர் ஓரளவுக்கு ஏற்கனவே பதில் கொடுத்துவிட்டார். புதிதாய் எதையும் முயற்சிக்காமலேயே இவர் இதை செய்துவிட்டார் என்பது நம் நாட்டின் பேட்ஸ்மென்களுக்கு சந்தோஷம் தரும் விஷயமாய் இருக்கும். அவர் இறக்கைகளை வளர்த்துக் கொள்ளவில்லை, தன் நகங்களைக் கூர்மையாக்கிக் கொள்ளவில்லை, செதிள்களை இணைத்துக் கொள்ளவில்லை.. இவற்றுக்குப் பதிலாய் அவர் செய்திருப்பது ஒரு விஷயம் – இதுதான் அவரை முதல் தர அளவில் ரன் எடுக்கும் பூதமாய் ஆக்கியதும் – நடந்திருக்கிறார். நிமிர்ந்து, நேராய், அளவுடன், அடக்கமாய் ஒர் அடி, அதன் பின்னால் இன்னோர் அடி, இன்னோர் அடி, அதன் பின்னால் இன்னொன்று…

இதில் கண்ணைப் பறிக்கும்படி எதுவுமே கிடையாது – நிச்சயமும், நம்பிக்கையும் நிறைந்த நடைப் பந்தயம் (walking) பார்வையாளர்களுக்கான விளையாட்டு கிடையாது. ஆனால் நடை என்பது திடமான விஷயம், மிக மிக திடமானது. தலைமுறை மாற்றத்திற்கான இடைவெளிக்கோட்டில் இருக்கும் ஒரு அணிக்கு இது சரியானபடி வேலை செய்யும்.

(இதன் ஆங்கிலவடிவம் யாஹூ கிரிக்கெட்டில் பதிப்பிக்கப்பட்டது.)

புகைப்பட உதவி : hindustantimes.com