ஆயிரம் தெய்வங்கள் – ஓடிஸ்ஸஸ் ஊர் திரும்பிய கதை

கிரேக்க ஓடிஸ்ஸஸ் லத்தீன் வழக்கில் யூலிஸ்ஸஸ் ஆயிற்று. ஆங்கில கவிஞர், டென்னிஸனா எபைரனா என்று சரியாக நினைவுக்கு வரவில்லை, யூலிஸ்ஸஸ் ட்ராயிலிருந்து ஊர் திரும்பும்போது  ஃபாசி  என்ற தீவில் போதை மயக்கத்தில் சிக்கிக்கொண்ட விவரத்தை மையமாக வைத்து ‘லோட்டஸ் ஈட்டர்ஸ்’ என்ற கவிதை எழுதியிருக்கிறார். நயமான கவிதை. இலியத் போர் முடிவுற்றபின் ட்ராயிலிருந்து ஓடிஸ்ஸஸ் தன் சொந்த தேசமான இதாகாவுக்குத் திரும்பிய கதை இலியத் காவியத்தின் தொடர்ச்சியாகக் கருதப்படுகிறது.

ஓடிஸ்ஸஸ் தன் வீரர்களுடன் ட்ராயிலிருந்து புறப்பட்டு வரும் வழியில் த்ரேஸ் தீவில் ஈஸ்மாரஸ் என்ற நகரைச் சூறையாடினான். அவனிடம் சிக்கிய அப்போல்லோவின் பூசாரி மாறானைக் கொல்லாமல், தப்பித்துச் செல்ல அனுமதிக்கிறான். உயிர் பிழைத்த மகிழ்ச்சியில் மாறான் பன்னிரண்டு மது ஜாதிகளை ஓடிஸ்ஸஸுக்குப் பரிசாக வழங்கினான். ஓடிஸ்ஸஸின் பயணம் மது ஜாடிகளுடன் தொடர்ந்தது. லோட்டாஸ் தீவைக் கண்டதும் அங்கு கப்பலை நிறுத்தினான். அந்தத் தீவில் உள்ள தாமரைக் கிழங்கைத் தின்றால் தீவை விட்டுச் செல்ல மனம் வராது. சுய நினைவை இழக்க வைக்கும் மயக்க சக்தி அந்தக் கிழங்குக்கு இருந்தது. ஆனால் ஓடிஸ்ஸஸ் வீரர்கள் அங்குள்ள தாமரை கிழங்குகளைத் தின்று தீராத மயக்கத்திற்கு ஆளாகின்றனர். ஓடிஸ்ஸஸ் அவர்களைச் சுயநினைவுக்குக் கொண்டு வருவதற்குள் அவனுக்குப் போதும் போதுமென்று ஆகிவிடுகிறது. ஒருவழியாக அவர்களுக்கு சுய நினைவு திரும்பியதும் பயணம் தொடர்ந்தது.

cyclops_poster

ஓடிஸ்ஸஸ் சிசிலி வந்தான். அங்கு சைக்லாப்ஸ் என்ற அரக்கனிடம் சிக்கிக் கொண்டான். சைக்லாப்ஸ் பிரம்மாண்டமான உருவம் படைத்தவன்.  அவனுக்கு நெற்றியில் ஒரே ஒரு கண் மட்டுமே இருந்தது. ஒரே வாயில் இரு வீரர்களை மென்று தின்றான். ஓடிஸ்ஸஸ் வீரர்களை சைக்லாப்ஸ் இவ்வாறு மென்று தின்று கொண்டிருந்தபோது மதியூகியான ஓடிஸ்ஸஸ் அவன்முன் மாறான் வழங்கிய மது ஜாடிகளை வைத்தான். அம்மதுவைப் பருகிய சைக்லாப்ஸ் மயக்கமடைந்த வேளையில் ஓடிஸ்ஸஸ் அவனது ஒற்றைக்கண்ணைத் தன் ஈட்டியால் குத்தி அவனைக் குருடாக்கி, கொன்று பழி தீர்த்தான். பயணம் தொடர்ந்தது.

ஓடிஸ்ஸஸின் கப்பல் ஏவலோஸ் வந்தது. ஏவலோஸ் வாயுகுமாரன். ஓடிஸ்ஸஸ் தன் தாய்நாடு இதாகா செல்லும்வரை புயல் ஆபத்து வராமல் இருக்க புயலை மடக்கி ஒரு பையில் போட்டு பரிசாக வழங்குகிறான் ஏவலோஸ். மற்ற வீரர்களுக்கு பைக்குள் புயல் மடக்கி வைக்கப்பட்டிருக்கும் ரகசியம் தெரியாது. ஏவலோஸின் ஆசையைப் பெற்று கப்பல் இதாகா நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது ஓடிஸ்ஸஸ் சற்றே கண்ணயர்ந்தான். அந்த வேளையில் அவனது வீரர்கள் ஆர்வ மிகுதியால் புயல் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் பையைத் திறந்து பார்த்தனர். அவ்வளவுதான். புயல் சீறிப் பாய்ந்து கப்பலை திக்குமுக்காட வைத்தது. திசைதெரியாமல் அலைபாய்ந்த கப்பல் புறப்பட்ட இடத்துக்கே திரும்பிவிட்டது..பழையபடி ஏவலோஸ் வந்தபோது வாயுகுமாரன் இரண்டாம் முறை உதவ மறுத்துவிடுகிறான். புயல் சென்ற வழியில் பயணத்தைத் தொடர்ந்த கப்பல் ஏயேயா தீவு சென்று சேர்ந்தது. அங்கே சர்கே என்ற மாயாவி இருந்தான். மனிதர்களை விலங்குகளாகவும் பரவைகளாகவும் உருமாற்றம் செய்யும் வித்தையை அறிந்து மக்களைத் துன்புறுத்துவதை வழக்கமாகக் கொண்டிருந்தான்.

கப்பலில் இருந்து இறங்கிய ஓடிஸ்ஸஸின் வீரர்களைக் கண்டதும் சர்கே அவர்களை அன்புடன் வரவேற்று உபசரித்தாள். அவள் அளித்த மதுவை அருந்தியதும் ஓடிஸ்ஸஸின் வீரர்கள் ஓநாய்களாகவும் ஆந்தைகளாகவும் மாறிவிட்டனர். தன்னுடைய வீரர்களை எல்லா இடத்திலும் தேடிப் பார்த்தும் அவர்களை எங்கும் காணவில்லை ஓடிஸ்ஸஸ். அவன் அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்து நின்றபோது அவன் முன் தோன்றினான் ஹெர்மஸ். சர்கேவின் சதியைப் பற்றிய உண்மைகளைக் கூறி ஓடிஸ்ஸஸ் எச்ச்சரிக்கப்பட்டான். சர்கே மனிதர்களை விலங்குகளாக மாற்றும் மந்திரவாதி என்பதைப் புரிந்துகொண்டதும் ஓடிஸ்ஸஸ் அவளைச் செயலற்றவனாக்க என்ன செய்யலாம் என்று கேட்கிறான். ஹெர்மஸ் போலி என்ற ஒரு அபூர்வ மூலிகையை வழங்கி அதை அவள் வழங்கும் மதுவில் கலந்துவிட்டால் அவளுடைய மந்திரம் பலிக்காது என்றும் அவள் ஓடிஸ்ஸஸுக்கு அடிமையாகி விடுவாள் என்று கூறுகிறார். தெய்வத்தின் அறிவுரையின்படி மூலிகையை மதுவில் கலந்துவிடுகிறான் ஓடிஸ்ஸஸ். தன்னுடைய மந்திரம் பலிக்காமல் செயலிழந்து நிற்கிறாள் சர்கே. அவளைக் கொல்ல வாளை ஓங்குகிறான் ஓடிஸ்ஸஸ். அஞ்சி நடுங்கிய சர்கே அவனுடைய வீரர்கள் அனைவருக்கும் மனித உருவுக்குத் திருப்புகிறாள். அவளுக்கு ஓடிஸ்ஸஸ் மீது காதலும் பிறக்கிறது. ஓடிஸ்ஸஸ் அவளை ஏற்றுக் கொள்கிறான். அவர்களது உறவில் மெல்கோனஸ் பிறந்தான்.

ஓடிஸ்ஸஸ் சர்கேவைப் பிரிந்து இதாகாவுக்குத் திரும்பும் நாளும் வருகிறது. அவன் பயணத்தைத் துவக்கும்போது ஓடிஸ்ஸஸைச் செல்லவிடாமல் தடுத்து சிம்மேரியன் நகரில் உள்ள தெரிஸ்ஸாயஸ் என்ற மந்திரவாதி குருவைச் சந்தித்து  அவர் அளிக்கும் அறிவுரைகளின்படி நடந்துகொள்ளச் சொல்கிறாள் சர்கே. தெரிஸ்ஸாயஸ் இனி நடக்க இருக்கும் ஆபத்துகளை எடுத்துக்கூறி அவனுக்குத் துணையாக சர்கேயையும் கப்பலில் அழைத்துச் செல்லுமாறு கூறவே சர்கேயுடன் ஓடிஸ்ஸஸ் பயணத்தைத் தொடர்ந்தான்.

sirens

கப்பல் சைரன் தீவை வந்து சேர்ந்ததும் பறவை வடிவில் உள்ள சைரன் பூதங்களின் ஆபத்தை அறிவுணர்த்தினால் சர்கே. சைரன் பறவைகள் பாடியே மனிதனைக் கொல்லுமாம். சைரன் பறவைகளின் பாடல்கள் மனிதர்கள் மனதில் மயக்கத்தை உண்டாக்கி நினைவைத் தடுமாற வைக்கும். சைரன் இசையைக் கேட்டதும் கடற்பயணிகளுக்குக் கப்பலில் இருந்து கடலுக்குள் குதிக்கும் ஆசை வரும். அவ்வாறு கடலில் குதிப்பவர்களை சைரன் பூதங்கள் கொன்று தின்று விடும். இசை தெய்வம் மெல்போமீனுக்கும் கடல் அசுரன் ஏக்கியோலஸுக்கும் பிறந்தவர்கள் சைரன்கள். இவை பாதி பெண்ணாகவும் பாதி பறவையாகவும் தோற்றமளிப்பவை. சைரன் தீவை நெருங்கியதும் ஓடிஸ்ஸஸ் தன் மாலுமிகள் சைரன் இசை கேட்க முடியாதபடி காதில் மெழுகை ஊற்றி அடைத்துவிடுகிறான். அவைகளைத் தப்பி த்ரினேகியாத் தீவுக்கு வரும்போது புதியதொரு ஆபத்தில் அவர்கள் சிக்கிக் கொள்கிறார்கள்.

அந்தத் தீவில் ஒரு அழகிய வெண்ணிறக் காளைமாடு மேய்ந்து கொண்டிருந்தது. அது சூரியனுக்குச் சொந்தமானது என்று புரியாமல் ஓடிஸ்ஸஸின் வீரர்கள் அதைக் கொன்று தின்று விட்டனர்.

சூரியன் சினத்துடன் இந்தக் குற்றத்தை ஸீயஸ்ஸிடம் முறையிட்டார். ஸீயஸ் அவர்களை தண்டிக்க ஒரு பெரும்புயலை ஏவினார். இதனால் கப்பல் கவிழ்ந்து ஓடிஸ்ஸஸ் தவிர அவனது வீரர்கள் அனைவரும் இறந்தனர். உடைந்த கப்பலின் ஒரு மரத்துண்டைப் பிடித்துக் கொண்டு ஓடிஸ்ஸஸ் உயிர் தப்பினாலும் அவனைத் துன்பம் தொடர்ந்தது. பத்து பகல்களும் பத்து இரவுகளும் ஏதோ ஒரு தீவில் ஒதுங்கிய அவன் மயக்கமுற்றான். காலிப்ஸோ என்ற பூதம் அவனைப் பிடித்து வைத்துக் கொண்டது. ஹெர்மஸ்ஸும் ஏத்தினாவும்அங்கு விரைந்து சென்று அவனைக் காப்பாற்றி ஃபாயேசியன் தீவுக்கு அனுப்பி வைத்தனர். அங்கிருந்து எந்தப் பிரச்சினையுமில்லாமல் ஓடிஸ்ஸஸ் இதாகா நோக்கிக் கிளம்பினான்.

330px-johnwilliamwaterhouse-penelopeandthesuitors1912

இலியத் போர் முடிந்து வெகு காலம் ஆகியும் ஓடிஸ்ஸஸ் ஊர் திரும்பாததால் அவனுடைய கப்பல் புயலில் சிக்கி அவன் இறந்திருக்கலாம் என்று முடிவு செய்து இதாகாவைச் சுற்றியுள்ள ஊர்களின் இளவரசர்கள் ஓடிஸ்ஸஸின் மனைவி பீனலோப்பை மறுமணம் செய்துகொள்ள முன்வந்தனர். இதனால் ஓடிஸ்ஸஸ் இதாகா திரும்பியபின்னர் அவன் தன் மனைவியைத் திரும்பப் பெறவும் போராட வேண்டியிருந்தது. கடல் பயணத்தில் அவன் அனுபவித்த கஷ்டங்களால் மாற்று உடையே இல்லாமல் இதாகா நகரில் ஒரு பிச்சைக்காரனைப் போல் அவன் அலைந்தான். கடும் எதிர்ப்புகளைத் தாண்டி அவன் தன் அரண்மனைக்குள் புகுந்தபோது அங்கே அரசர்கள் பீனலோப்பை மணம் முடிக்க பெரும் பிரயத்தனப்பட்டுக் கொண்டிருந்தனர். பீனலோப் மறுமணம் புரிந்து கொள்ளக் கட்டாயப்படுத்தப்பட்டாள் – ஆனால், கணவனை அவள் தன் விருப்பப்படி தேர்ந்தெடுத்துக் கொள்ள அனுமதிக்கப்பட்டாள். யாருக்கும் அடையாளம் தெரியாதவனாக இருந்த ஓடிஸ்ஸஸ் கூறிய ஒரு யோசனைப்படி இந்த சுயம்வரம் நடைபெற்றது.

இதாகா ராஜ்யத்தில் நாண் பூட்டப்படாத வில்லொன்று உண்டு. அதற்கு நாண் பூட்டி வளைப்பது ஓடிஸ்ஸஸ் ஒருவனால் மட்டுமே முடியும். எந்த இளவரசனால் இந்த வில்லுக்கு நாண் பூட்டி வளைக்க முடிகிறதோ அவனே ஓடிஸ்ஸஸின் இடத்தில் பீனலோப்பை மணம் புரியத் தகுந்தவன் என்று யோசனை கூறினான் ஓடிஸ்ஸஸ். இதை எல்லா இளவரசர்களும் ஏற்றுக் கொண்டனர்.  ஆனால் ஓடிஸ்ஸஸ் மட்டுமே அதைச் செய்ய முடிந்தது – மற்றவர்கள் அனைவரும் தோற்றனர். ஓடிஸ்ஸஸ் மட்டுமே அந்த வில்லை வளைத்து நாண் பூட்டி அதில் அம்பு எய்தான். இது தன் கணவன் ஓடிஸ்ஸஸ் அல்லாது வெறு யாராக இருக்க முடியும் என்ற மகிழ்ச்சி போங்க பீனலோப் அவனை ஆரத் தழுவிக் கொண்டாள். அதன்பின் அங்கிருந்த மற்றவர்களும் அவன் உண்மையில் யார் என்பதைப் புரிந்து கொண்டனர்.

சிறிது காலம் இதாகாவில் குடும்ப வாழ்க்கை நடத்திய ஓடிஸ்ஸஸுக்கு அதுவும் அலுத்துப் போய்விட்டது. அவன் மீண்டும் கப்பல் பயணம் மேற்கொண்டு எஃபைரஸுடன் போரிட்டு டைரேனியன் தீவுகளில் தன் உரிமையை நிலைநாட்டினான். விதிவசத்தால் சர்கே மூலம் பிறந்த டெலகொனஸ் எய்த ஒரு அம்பு ஓடிஸ்ஸஸைத் துளைத்து அவனைக் கொன்றுவிட்டது. அவனுக்கு அப்படிதான் சாக வேண்டும் என்று ஒரு சாபம் இருந்தது.