அவனி

இச்சிறுகதை எழுதிய கன்னட எழுத்தாளர் ‘வைதேஹி’ பற்றிய அறிமுகத்தையும், அவருடைய இரண்டு கவிதைகளையும் இதே இதழில் படிக்கலாம்: வைதேஹி – அறிமுகமும் கவிதைகளும்.

’இருந்தா இப்படி ஒரு ஆபீஸ்லே இருக்கணும்,’ என்று மனசில் சொல்லிக்கொண்டு நடந்தாள் அவனி. அகல அகலமாய் படிகள், என்ன மாதிரி கதவு! எத்தனை உயரம், எத்தனை அகலம்! ஒரே சமயத்திலே ஒரு சைனியமே உள்ளே போகலாம் என்று கொஞ்சம் அதிகமாகவே அதை மெச்சிக் கொண்டாள். கதவைத்தாண்டி உள்ளே வந்தாள். அங்கேயும் இங்கேயும் மூன்று சாண் உயரமுள்ள மனிதர்கள் நடமாடிக் கொண்டிருந்தார்கள். அவளைப் பார்த்ததும் வணக்கம் செய்தனர். ‘இவங்க அவங்களைச் சேர்ந்தவங்க,’ என்று கிசுகிசுத்துக் கொண்டார்கள். அவள் அவர்களுக்கு வணக்கம் சொல்லி, புன்னகைத்துக்கொண்டே முன்னே நகர்ந்து போகையில் மூலையில் கண்ணாடி சுவர்களும் கண்ணாடிக் கதவும் கொண்ட ஒரு அறையில் மேனேஜர் உட்கார்ந்திருப்பது தெரிந்தது. மேனேஜர் எழுந்து வந்தார். கதவு திறந்தது. ‘வாங்க, ’ என்று உள்ளே அழைத்தார். அவனிக்கு மிகப் பெரியதாய் இருந்த ஒரு நாற்காலியில் அவளை உட்காரவைத்தார். அவள் வந்த வேலை பற்றிய ஃபைலை வரவழைத்துப் பார்த்தார். ‘எல்லாம் விவரமாய் பார்க்கிறேன். இன்னும் ரெண்டு நாள் கழித்து வாருங்கள்,’ என்றார். வந்த வேலை முடிந்ததால் பேச்சு உலகவிஷயங்களுக்குத் திரும்பியது.

ஒரோர் விஷயமாய் ஒன்றிலிருந்து ஒன்று இழுத்து, பேச்சு எங்கெங்கோ போய்க் கொண்டிருந்தது. குதுப் மினாரில் மூச்சடைத்துப் போய் செத்துப்போனவர்கள் பற்றிய பேச்சும் வந்தது. ’டில்லியில் குதுப் ஒண்ணு எந்த வம்பிலும் மாட்டிக்கொள்ளாமல் இருந்தது. இப்போ அதுவும் ஆச்சு,’என்றாள் அவனி. ஆமாம் என்று நாற்காலியில் நன்றாய் நீட்டி உட்கார்ந்து மேனேஜர் சிரித்தார். தானொன்றும் இதை ஹாஸ்யமாகவோ, முரண்நகையாகவோ சொல்லவில்லையே, இவர் ஏன் சிரிக்கிறார் என்று அவனிக்குப் புரியாமல் கொஞ்சம் எரிச்சல் வந்தபோதும் மரியாதைக்காக சிரித்து வைத்தாள்.

ஒரு அரை மணி நேரம் போல அவர்கள் அப்படிப் பேசிக் கொண்டிருந்திருக்கலாம். பேச்சு சங்கிலி போல ஒரு விஷயத்திலிருந்து இன்னொன்றுக்குத் தாவி வார்த்தைகள் காற்றில் மறைந்துகொண்டிருந்தன.

வெளியிலிருந்து டப்டப் என்று கம்ப்யூடரில் ஒன்றன் பின் ஒன்றாய் சொன்னதைக் கேட்கும் சின்னக் குழந்தைகள் போல எழுத்துக்கள் நடந்துபோகும் காலடியோசை விடாமல் கேட்டுக்கொண்டிருந்தது.

மூன்று சாண் உயரமுள்ள ஒருவன் காப்பி கொண்டுவந்து வைத்தான். காப்பி குடிக்கையில் அவளுக்குத் தான் உட்கார்ந்திருந்த நாற்காலி கொஞ்சம் நெருக்கடியாய் இருந்ததுபோல் இருந்தது. ‘இதென்ன உங்க ஆபீஸில் சேர் எல்லாம் குறுகுமோ,’ என்று சிரித்துக்கொண்டே கேட்டாள். மேனேஜர் ‘அடேடே, இங்கே வந்த பின்னாலே நீங்க ஒரு சுத்து பெருத்து விட்டீங்களோ, என்னவோ!’ என்று சிரித்துக்கொண்டே வலப்பக்கம் பார்த்தார். குள்ளன் மறுபடியும் தோன்றினான். பாஸ் அவனியின் நாற்காலியை நோக்கிக் கையைக் காட்டியதும் அவன் குடு குடுவென்று வெளியே போனான். இன்னும் அகலமான நாற்காலி ஒன்றை அவனும் இன்னும் இரண்டு பேருமாய் தூக்கிக் கொண்டு வந்து அவனியை அதில் உட்காரும்படி கேட்டுக் கொண்டார்கள். இன்னும் கொஞ்ச நேரம் தாமதித்திருந்தால் ஒன்று அவனி நாற்காலியுடனேயே எழுந்திருந்திருக்க வேண்டி இருந்திருக்கும், இல்லை, அது உடைந்தே போயிருக்கும், அத்தனை நெரிசலாகி விட்டிருந்தது. அவர்கள் நாற்காலியைப் பிடித்துக்கொள்ள அவனி நிதானமாய் தன்னை விடுவித்துக் கொண்டு எழுந்து புது நாற்காலியில் உட்கார்ந்துகொண்டாள். அப்பாடா என்றிருந்தது. புது நாற்காலியைத் தந்தவர்கள் ‘தேங்க்யூ’ என்று சொல்லி பழைய நாற்காலியை எடுத்துப் போனார்கள்.

அந்தப் பெரிய நாற்காலியில் உட்கார்ந்த உடன் அவனிக்குக் தூக்கம் கண்ணை சுழற்றிக்கொண்டு வந்தது. அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் கொஞ்ச நேரம் பேசிவிட்டு இன்னும் இரண்டு நாட்கள் கழித்து வருகிறேன் என்று சொல்லி வெளியே வந்தாள். மேனேஜரும் அவளுடனே எழுந்து வந்தார். அவருடன் வாசல் வரையில் நடக்கும் வழி முழுவதும் அங்கு வேலை செய்பவர்கள் தம் வேலையை நிறுத்தி, எழுந்து வணக்கம் கூறினர். தன் பெயர், தன் பணி என்ன என்பதைச் சொல்லி அவனியின் கையைக் குலுக்கினர்.

ஒருவருக்கும் உடலில் வளர்த்தி இல்லை, பலமில்லை, எங்கெங்கெல்லாமோ கரைந்து போனவர்களோ என்று அவனிக்குத் தோன்றியது. தானே இத்தகைய தடைகள், கட்டுப்பாடுகள் இல்லாமல் இருப்பதாய் நினைத்துக்கொண்டு வெளியே வந்தாள். வாயில்வரைக்கும் வந்த மேனேஜர் கைகூப்பி ”என்ன வேண்டுமானாலும் வாங்க. கூச்சப்பட வேண்டாம்,’ என்றார். அவளும் ‘ஓ.கே. அவசியம் இருந்தால் கண்டிப்பாய் வருகிறேன்,’ என்றாள்.

***

அவனி வீட்டுக்கு வந்து சேர்ந்தாள். திரும்பிவந்ததுமே தூக்கத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் படுத்துவிட்டாள். எப்படிப்பட்ட தூக்கம்! தான் இருப்பதே தெரியாத தூக்கம். தான் என்பதையே மறந்த தூக்கம். நேரத்தைக் கணக்கு வைத்துக்கொள்ளவில்லை, கடிகாரத்துக்கு சாவி கொடுக்கவில்லை, தேதிகளையும் மாற்றவில்லை அவனி தூக்கத்தில் அமிழ்ந்து போனாள்.

d

பின் எப்போதோ விழிப்பு வந்தபோது கடிகாரம் நின்றுபோயிருந்தது. வெளிச்சம் அதிகம் என்று தூங்கும் முன்பு மூடிய ஜன்னலைத் திறந்து பார்க்கையில் அங்கு இருட்டி இருந்தது. முன்பு இருட்டாய் இருந்த எதிர்பக்க ஜன்னலிலிருந்து இளம் வெய்யிலின் இழைகள் தெரிந்தன. ‘இந்த சூரியனுக்கு வேறே என்ன வேலை – இந்தப் பக்கத்திலிருந்து அந்தப்பக்கம் அந்தப் பக்கத்திலிருந்து இந்தப்பக்கம் குதிப்பதைத்தவிர,’ என்று முணுமுணுத்துக்கொண்டே கட்டிலை விட்டு கீழே இறங்கக் காலை நீட்டினாள். தரை எட்டவில்லை.

’அடேடே, இதென்ன!’ என்றுகொண்டே நுனிவிரலால் துழாவிப் பார்த்தாள். தரை இல்லை! ‘என்ன இதெல்லாம்! யாரங்கே, கட்டிலுக்குக் கீழ் இருந்த தரையை யார் எடுத்துக்கொண்டு போனது?’ எனக் கத்தினாள். தன் கத்தலைத் தானே கேட்டாள். கங்கோள்ளி ஆற்றங்கரையில் நின்றுகொண்டு படகுக்காரனுக்காகக் கத்தியது போலிருந்தது. அப்படிக் கூவுவதும் நிஜத்தில் சந்தோஷமாய் இருக்கும். பாலம் கட்டியபின் அந்த சந்தோஷத்திலும் கல் விழுந்தது. அப்படிக் கூவும்போது சுற்றிலும் யாரும் இருக்கக் கூடாது. நதி ஆகாயத்தின் சேலையுடுத்தி வழுக்கிக் கொண்டு ஓடவேண்டும். தூரத்தில கடலின் அழைப்பு கேட்டுக் கொண்டிருக்க வேண்டும். சூரியன் எதிர் திசையில் நின்றுகொண்டு ‘இதோ நான் இப்போ கிளம்பிட்டேன், இன்னொரு நொடியில் புறப்பட்டேன்,’ என்று பயமுறுத்திக் கொண்டிருக்க வேண்டும். கொஞ்ச தூரத்தில் படகைச் செலுத்தும் படகுக்காரன் தெரியவேண்டும். அவனைப் பார்த்ததும் கூவவேண்டும். அவன் பதில் கொடுத்து படகைச் செலுத்தி வந்ததும் தோணியில் ஏறி ‘படகோட்டி, நீ விடு. நான் துடுப்பு போடுகிறேன் இங்கே,’ என்று சொல்லிப் படகைச் செலுத்திச் செலுத்தி கடலைச் சேர்ந்து….

கனவு, கனவினுள்ளே கனவு. அந்தக் கனவு, இந்தக் கனவு, எல்லாவற்றிலிருந்தும் விழிக்கும்போது, தரை காணாமல் போயிருந்தது மறுபடியும் நினைவுக்கு வந்தது.

‘தரை, ஹோய், யாரங்கே? தரை- எங்கே?’

‘கூச்சல் போடுவது யார், தரை எங்கும் போகவில்லை, அங்கேயேதான் இருக்கிறது. காலை சின்னதாக்கிக்கொண்டு தரைக்குக் கத்தினால்?’

’யார் அது? இத்தனை சத்தமாய் தன் வீட்டில் தானே பேசிக் கொள்ளுவது?’

‘இருக்கட்டும், இருக்கட்டும்,. தன் கால் சின்னது என்றவரா?’

காலைப் பார்த்தாள். ஒரு சாண் உயரம் இருந்தது. பொய்யோ? தொட்டுப் பார்த்தாள். ஆமாம். அளந்து பார்த்தால். முழுதாய் ஒரு சாண் கூட இல்லை. அளந்த கையைப் பார்த்துக்கொண்டாள். கட்டிலின் மேல் நின்றுகொண்டாள். எதிர் சுவரில் கண்ணாடி தரையிலிருந்து உத்தரம் வரை நின்றிருந்தது. அவனி அதில் ஒரு துளி இடத்தை மட்டுமே எடுத்துக் கொண்டு தெரிந்தாள். கட்டிலின் மேல் நாலு தரம் குதித்து குதித்து நடந்தாள். பள்ளியின் ஆண்டு விழாவில் தான் இன்னும் சில சிறுவர் சிறுமிகளுடன் குள்ளர் வேஷம் போட்டுக்கொண்டு ‘ லங்கு பிச்சாணா, லங்கு பிச்சாணா,’ என்று கீச்சுக்குரலில் பாடிக்கொண்டு கையையும் காலையும் குள்ளமாய்த் தெரியும்படி மடித்துக் கொண்டு ஓடியது திரும்ப நடக்கிறதோ? ‘லங்கு பிச்சாணா, லங்கு பிச்சாணா,’ என்று அவனியின் வாய் முணுமுணுத்தது. அன்றைப் போலவே இன்றும் கட்டிலையே மேடையைப்போல பாவித்துக் கொண்டு சுற்றி வந்தாள். களைத்துப் போய் நின்றாள். இடுப்பில் கையை ஏற்றி கண்ணாடியின் உள்ளே இருந்த உருவத்தை ‘ எந்த ஊரு?’ என்று கேட்டாள். உருவமும் அவளைப்போலவே ’எந்த ஊரு?’ என சப்தமே இல்லாமல் கேட்டது.

ஒரோரு சமயம் இப்படி இருப்பதும் ஜாலியாய் இருப்பது போல் இருந்தது. உயரமாய் இருந்து இருந்து சலித்துப் போய் விட்டது. இப்போது ஒரு மாற்றம். ‘நான் மாற்றத்தை வரவேற்கிறேன்’ என்று பெரிய சபையின் முன் சொல்லும் தோரணையில் சொன்னாள்.

அப்படியானால் ஆடைகள்?

அவை உடம்பின் நீள அகலத்துக்கு சரியாய் சேர்ந்துகொண்டிருந்தன. குட்!… இப்போ ஏதாவது செய்து கட்டிலிலிருந்து இறங்க வேண்டுமே.

ஒன் டூ த்ரீ….சின்னக் கைகளை சிறகு போல் உற்சாகமாய் ஆட்டிக்கொண்டு கீழே பறந்தாள். விழுந்தால் அங்கு தரை இருக்கத்தானே வேண்டும். அம்மா! உசிர் வந்தது. இனிமேல் எப்படியோ வாழ்ந்துவிடலாம் என்று உடம்பைத் தடவிக்கொண்டு எழுந்தாள்.

சமையலறைக்குப் போனால் அங்கு பிரம்மாண்டமான மனிதர்கள் நடமாடிக்கொண்டிருந்தார்கள். பெரிய அண்டாவில் காப்பி சூடாகிக்கொண்டிருந்தது. சுருட்டிக்கொள்ளும் கதவுகள் போல தோசைகள் தயாராகிக்கொண்டிருந்தன.

அவனிக்கு ராபின்ஸன் க்ரூஸொ, கலிவர், கடலோடி ஸிண்ட்பாட் எல்லோரும் நினைவுக்கு வந்தனர்.  தானும் அவர்கள் போல் ஒரு குழந்தைகளின் கதைக்கு மாறிவந்து விட்டோமோ என்று அவளுக்கு திகிலாயிற்று. படித்த கதைகளெல்லாம் வேகமாய் திரும்பிவருவது போல நடுங்கியது அவனிக்கு. என்னுடைய கதையில் இதெல்லாம் நடந்து கொண்டிருக்கிறது. நான் இவர்கள் கண்ணில் பட்டுக்கொண்டிருக்கிறேன்.

கண்ணில் பட்டதுமே ’ஏய் ஏய்’ என்று கத்திக் கொண்டு அவர்கள் தன்னிடம் வருவார்கள். சிவப்புக் கண்களை வெளிக்காட்டுவார்கள். அவர்களில் ஒருவன் தன்னை கட்டை விரலுக்கும் ஆள்காட்டி விரலுக்கும் நடுவே பிடித்துத் தூக்கி கடலைமாவில் தோய்த்து வாணலியில் இருக்கும் எண்ணையில் போடுவான், தான் சிவப்பாய் மொறுமொறுவென்று போண்டாவாகி யார் வயிற்றினுள்ளோ போய் ஜீரணமாகப்போகிறோம். அத்துடன் தன் கதை முடிந்தது.

ஐயோ. இங்கிருந்து தப்பித்துக் கொள்ளவேண்டும்.

தலையிலிருந்து உத்தரவு வந்ததும் அவனி ஓடினாள். எங்கே ஓடவேண்டும் என்றும் தோன்றாமல் ஓடி, ஓடி, ஓடினாள். ஓடி ஓடி அதே ஆஃபீஸை அடைந்தாள். அங்கே பார்த்தால், ஆஃபீஸ் வானத்தைத் தொட்டுக்கொண்டிருக்கிறது. ஒருதரம் எல்லாப் பக்கமும் பார்வையை ஓட்டினாள் அவனி. எல்லாம் மாறிப் போய்விட்டிருந்தது. தானே மாறிப் போய் விடவில்லையா, மற்றதெல்லாம் மாறக்கூடாது என்றால் எப்படி?

’வாழ்க்கை இருப்பதே மாற்றங்களால்தான்,’ என்று சொல்லிக்கொண்டு ’இனிமேல் பழக்கிக் கொள்ளவேண்டும்,’ என்று சொல்லிக்கொண்டு ஒரொரு படியையும் மூன்று மூன்று அடிகள் வைத்து முயற்சித்து ஏறி வாயிலை அடைந்தாள். கொஞ்ச நேரத்துக்கு முன் அந்தப் பக்கம் திறந்து ‘வருக வருக” என்பது போல் நின்றிருந்த அந்த பிரும்மாண்டக் கதவு இப்போது அவனியைவிட குள்ளமாகி அகலம் குறைந்து இருந்தது. கட்டடம் வானளவு வளர்கையில் அதன் வாயிலின் நிலைமை இப்படி ஆகவேண்டுமா? பக்கத்திலேயே காவல்காரன் பனைமரம் போல் உயரமாய் நினறிருந்தான். தான் இப்படி குள்ளமாகிருக்கும் போது அவன் ஏன் உயரமாகக் கூடாது. மூச்சை உள்ளே இழுத்து வெளியே விடுவதுபோல், இல்லையில்லை இது, ஒன்றுக்கொன்று சம்பந்தமில்லாத விகிதங்கள்.

ஒருதரம் அவன் முன்னால் நின்று அவனை தலையிலிருந்து கால் வரை பார்த்தாள். ‘இவன் என்ன பெரிய மனிதன் என்று இவனிடம் நான் உள்ளே போக உத்தரவு வாங்க வேண்டும்,’ என்று சொல்லி இரண்டு கைகளாலும் கதவைத் தள்ளினாள். அதுவும் அவளுக்கு ஒத்துழைத்து கொஞ்சம் கொஞ்சம் திறந்துகொண்டது. உள்ளே போனாள்.

அவனி அன்றைக்கு வெளியே வருகையில் வலுவற்று இருந்தவர்களெல்லாம் இப்போது நல்ல பலசாலியாய் இருந்தார்கள். எல்லோரும் பெரிய பெரிய இடங்களில் உட்கார்ந்து பெரிய பெரிய உருவத்துடன் பெரிய பேச்சுக்கள் பேசிக்கொண்டு பெரிய ஃபைல்களின் பின் மறைந்துகொண்டு பெரிய பேனாக்களால் என்னவோ எழுதிக் கொண்டிருந்தனர். என்ன எழுதிக்கொண்டிருக்கிறார்கள்? பெரிய பெரிய சூன்யங்களை, வேறே என்ன? என்று தன்னுள்ளே சிரித்துக்கொண்டு, நுனிக்காலில் நின்றுகொண்டு எட்டிப்பார்த்தாள் அவனி. ஒன்றும் தெரியவில்லை.

நிற்காமல் முன்னே நடந்தாள். எறும்பு சோர்வடையாமல் ஒரோரு அடியே வைத்து பல காதங்களை கடக்கும். ஆனால் ’ஆகச்சன் வைனதேயோபி பதமேகம் ந கச்சதி” (கருடன் தன் இடத்தை விட்டு நகராவிட்டால் ஒரு விரற்கடை கூட நகரமுடியாது) என்று என்றோ மறந்த சம்ஸ்கிருதப் பொன்மொழியை நினைவுபடுத்திக் கொண்டு சிரமப்பட்டு முயற்சி செய்து அடி அடியாய் நடந்து போனபோது முன்னே கண்ணாடிச் சுவர் ஆஃபீஸ் மூலை கண்ணில் பட்டது.

அப்பா! எப்படியோ மேனேஜரிடம் வந்து முட்டிக்கொண்டேன் என்று நீண்ட பெருமூச்சு விட்டாள். அங்கே பார்த்தால் அவர் பிரும்மாண்டமாய் எழுந்து உட்கார்ந்திருந்தார். ஆச்சரியத்திலிருந்து வெளிப்பட்டு அவனி கண்ணாடிக் கதவைத் தட்டினாள்.

‘என் நிலைமை எப்படி ஆகிவிட்டது பாருங்க. என்னை அந்த பெரிய நாற்காலியில் உட்கார வைத்தபோதே தூக்கம் வருகிறார்போல இருந்தது. விழிப்பு வந்தபோது இப்படி! ஏன் இப்படி ஆச்சு என்று கொஞ்சம் விசாரிங்க. இந்த வேஷம் கொஞ்ச நேரத்துக்கு சரி, நிறைய நேரம்…,’ வெளியிலிருந்தே இப்படிப் பேசிக்கொண்டிருந்தாள்.

அவருக்கு இது கேட்டிருக்கவில்லை. அங்கே இங்கே திரும்பவில்லை. இன்னும் யாரோ ஒரு பெரிய உருவத்துடன் பேச்சில் ஆழ்ந்திருந்தார். கண்ணடிக் கதவு திறக்கவில்லை. கதவைத் தட்டினாள். அது உடையவில்லை. சத்தமும் செய்யவில்லை. அதென்ன? தட்டிக் காதுகொடுத்துக் கேட்டாள். சத்தம் இல்லை. அது சத்தம் வரும் கண்ணாடி இல்லை. சத்ததை தடுப்பது. உடையக்கூடியதும் இல்லை. அது செய்யக்கூடியது உள்ளே இருப்பவரை காட்டுவது மட்டுமே என்றெல்லாம் புரிந்துகொண்டு தன்னை நிதானப்படுத்திக்கொண்டு குழம்பினாள். இன்னும் என்ன செய்வது?

தன்னிடம் சின்னதாகிவிட்டிருந்த பர்ஸிலிருந்து காகிதத்தையும் பேனாவையும் எடுத்து தன் நிலைமையைப் பற்றி ஒரு கடிதம் எழுதத் தொடங்கினாள்.

அவள் எழுதிக்கொண்டிருந்தபோது, அந்த ஆஃபீஸில் சிரிப்பு சத்தம் கேட்டது. எல்லோரும் எழுந்து அவள் பின்னே வந்து கொண்டிருந்தனர். ஒருவன் மெதுமெதுவாய் கள்ளன் போல் கையை நீட்டிக்கொண்டு அவளை நோக்கி வந்துகொண்டிருந்தான், அவன் யாரு? அவன்…ஓ.. அவனில்லையா? மேனேஜர் சைகை செய்ததும் வந்தவன், காப்பி கொண்டு வந்தவன்!, நாற்காலி கொண்டு வந்தவன்!

’கண்ணாடியின் கடைசிக் கதவை திறப்பா” என்று அவனி கத்திச் சொன்னாள். அது கேட்காததுபோல அவன் முன்னே முன்னே வந்துகொண்டிருந்தான். அந்த பெரிய பெரிய உருவங்களும் மர்மமான முறையில் நடந்து வந்துகொண்டிருப்பது தமாஷாக இருப்பதாய் கண நேரம் நின்று பார்த்தாள். ஆனால் அவர்கள் அப்படி நடந்து வந்துகொண்டிருப்பது தன் பின்னால்தான் என்று புரிந்ததும் சுறுசுறுப்பானாள் அவனி. கிட்டே கிட்டே வந்துகொண்டிருந்தவர்கள், வந்தே விட்டார்கள், அதில் முந்தி இருந்தவன் கையை நீட்டி இன்னும் என்ன இப்போ பிடித்திருப்பான், பிடி, பிடித்தே விட்டான் என்பதற்குள்….

சங் என்று சிரித்தாள் அவனி.. அவர்களின் காலினிடையே நுழைந்து, அந்தப்பக்கம் பாய்ந்து மறைந்து நின்றாள். அவள் இப்படி திடீரென்று பறந்து காணாமல் போவாள் என்று அவர்கள் யாரும் நினைத்திருக்கவில்லை. இத்தனை சீக்கிரம் எங்கே போனாள் என்று அவர்களெல்லாம் முன்னே பின்னே அங்கே இங்கே அவளைத் தேடிக் கொண்டிருக்கையில் அவள் மேஜை நாற்காலிகள் அடியில் மறைந்துகொண்டு ஊடே ஊடே ஒளிந்து வாசல்கதவு வரை வந்துவிட்டாள். கதவினிடையே புகுந்து வெளியே வந்து அங்கே சூரியனின் ஒளீயில் யாருக்கும் காணாமல் மறைந்தே போனாள்.

அப்படியே அவனி மறைந்து போனாள்.

உள்ளேயும் வெளியேயும் சூனியமாகிப் போனது.

அப்படியே சூனியம் படர்ந்தபோது தட் என்று காலிட்டு கும்மிருட்டு அதனை ஆக்ரமித்துக்கொண்டது.

நன்றி: கெண்டஸம்பிகே.

மொழிபெயர்ப்பாளர் குறிப்பு: அவனி என்றால் வடமொழியிலும், தூய தமிழிலும் பூமி என்று பொருள்.
சிந்தனை செய் மனமே என்ற பாடலில் வரும் ‘அந்தகன் வரும்போது அவனியில் யார் துணை’ என்ற வரி நினைவிற்கு வரலாம்.