அறிவியலும், சந்தை அறிவியலும்

சந்தை இலக்கியம் என்று சில பத்தாண்டுகளுக்கு முன் தமிழ் எழுத்துச் சூழலில் அறியப்பட்ட எழுத்துவகை இருந்தது நாமறிந்ததே. ‘சந்தை’, சமீபகாலமாக ‘வணிக’ அல்லது ‘கேளிக்கை’ என்று மாறியுள்ளது. வாசிப்பனுபவத்தில் அதற்கான தேவையும் பங்களிப்பும் இருந்தாலும், சந்தை இலக்கியத்தின் ரசனை என்பது வாசிக்கும் மக்கள் தொகையின் பொதுவான சராசரியைக் கவ்வி நிற்பது. சந்தை இலக்கியத்திற்கு விற்பனையே குறி. இதைப்போலவே ‘சந்தை அறிவியல்’ என்று ஒரு வகை உள்ளது. இன்று பரிமளிக்கிறது.

‘சந்தை அறிவியல்’ ஊடகச் செல்வாக்கினால் முக்கியமாக, ராக்ஷஸமாக வளர்ந்துவரும் இணையத்தினால், வளர்த்தெடுக்கப்பட்ட ‘பாப்புலர் சயன்ஸ்’ வகையின் வீழ்ச்சி. பாப்புலர் சயன்ஸ் என்பதைப் பரப்பறிவியல் (பொதுமக்களிடம் பரப்பும் வகையில் பகிரப்படும் அறிவியல்) என்றால், சந்தை அறிவியலைப் பரபரப்பு அறிவியல் எனலாம். இவ்வளவு நாள் மனித அறிவுக்கலனில் தொகுத்துள்ள அறிவியல் புரிதல்களை எதிர்த்தோ, அல்லது மாற்றியமைக்கும் வகையிலோ புதிய ஆராய்ச்சி முடிவுகள் வந்துள்ளதாக அறிவித்து பரபரப்பு ஏற்படுத்துவது. பலசமயம் சம்பந்தப்பட்ட விஞ்ஞானிகள் அப்படித்தான் கூறுகிறர்களா என்பதை சரிபார்க்காமலேயே. சிலசமயங்களில் சம்பந்தப்பட்ட விஞ்ஞானிகளும் பரபரப்பிற்கு பலியாவது துரதிருஷ்டம். விரைவான புகழுக்காகவோ, அல்லது தங்கள் ஆராய்ச்சி மான்யத்தை தக்கவைத்துக் கொள்ளும் நிர்பந்தங்கள் போன்றவைகளில் சிக்கியோ ஊடகங்களைத் திரட்டி, பிரஸ்-மீட் வைத்து விளம்பரம் தேட விழைகிறார்கள். கடந்த இரண்டு மூன்று வருடங்களில் இணையத்தில் பிரபல செய்திவெளியீட்டு நிறுவனங்களின் அறிவியல் செய்திகளைக் கவனித்துவந்தாலே இது தெரியும்.

செல்ஃபோனினால் சிட்டுக்குருவிகள் அழிவு; தேனீக்களும்தான்; மனித மூளையும் பாதிக்கப்படுகிறது; செவ்வாய் கிரகத்தில் தண்ணீர்; கொட்டாவி மூளையின் சூட்டைத் தணிக்கிறது; ஒளியை விஞ்சும் நியூட்ரினோக்கள்: கவுந்தார் ஐன்ஸ்ட்டைன்; கண்டுவிட்டோம் ‘கடவுள் துகள்’; ஆர்ஸெனிக்கை உண்ணும் பாக்டிரியா: உயிரியல் பாடப் புத்தகங்களை மாற்றியமைக்க வேண்டியதே; இப்படியாகப்பட்ட ‘அறிவியல் செய்திகள்’.

செல்ஃபோன் உபயோகம் நாளுக்கு நாள் அதிகரித்தபடியே இருந்தாலும், சிட்டுக்குருவிகள் திரும்பிவந்துவிட்டதாய் ஒரிரண்டு மாதங்கள் முன் செய்தி வெளியானது (டைம்ஸ் ஆஃப் இந்தியாவில்) உங்களில் அநேகருக்குத் தெரியுமோ? தெரியாதிருந்தால் வியப்பில்லை; ‘பரபரப்பிற்கு’ எதிராய் வரும் மறுப்புச் செய்திகளை, ஆதாரம் இருந்தாலும், அவ்வளவு விளம்பரப்படுத்தமாட்டார்கள். இதுவும் சந்தை அறிவியலின் அறிகுறி.

தேனீக்கள் அலைபேசியின் அலைகளினால் பாதிக்கப்படுகின்றன என்று இரண்டு வருடம் முன் (இந்தியாவிலிருந்து வெளிவரும் ஆராய்ச்சி சஞ்சிகையில்) வெளியான ஒரு ஆராய்ச்சியை, ஊடகச் செய்தியைக் கடந்து மூலத்தை — ஆராய்ச்சிக் கட்டுரையை — கவனித்து, வாசித்துப் பார்த்தேன். தேனீக்கள் வசிக்கும் கூட்டினுள் அலை பேசியைப் போட்டுவிட்டு, அதனைத் தொடர்ந்து ‘டாக்-மோடில்’, அதிர்வு நிலையில் (வைப்ரேட்-மோடில்), சுமார் ஒரு மணிநேரம் வைத்திருந்து, அதனால் தேனீக்கள் பரபரப்பாய் வெளியேறிவிடுகின்றன. அலைபேசியை அண்டவில்லை என்று ‘நிறுவியுள்ளார்கள்’.

‘டிகிரி படிப்பு’ இல்லாத எழுத்தறிவு மட்டுமுள்ள எளியோருக்கும் வாசித்தவுடன் அன்றாடத்துடன் விலகியுள்ள இந்த ‘ஆராய்ச்சி முடிவுகளின்’ நிதர்சனம் புலப்பட்டுவிடும். ஆனால், சார்ந்த ஊடகச் செய்திகள் தலைப்பிலேயே “செல்ஃபோனினால் தேனீக்களுக்கு ஆபத்து; விஞ்ஞானிகள் அறிக்கை” என்று வருகிறது. யாரைக் குறை சொல்வது?

சென்ற வருடம் (2011) வாராந்தரியில் “எச்சரிக்கை ரிப்போர்ட்” பகுதியில் செல்ஃபோனை காதில் வைத்துப் பேசுகையில் மூளை பாதிக்கப்படும் ‘அபாயத்தை’ப் பற்றி ஒருபக்கத்தில் (கலர்படங்கள் போக இருக்கும் இடம் மிகாமல்) சுருங்கச் சொல்லி விளக்கியிருந்தார்கள். தலையின் ஒரு பகுதியில் சிவப்பாய் வருமாறு கலரில் மனித முகமும் போட்டு, ஆராய்ச்சி முடிவுகள் இப்படித் தெரிவிப்பதாய் எழுதியிருந்தார்கள். கூடவே ஒரு மருத்துவரின் (அவர் படமும் உண்டு) பரிந்துரை. அலைபேசிகள் உபயோகத்தில் இருக்கையில் (பேசிக் கொண்டிருக்கையில்) மின்காந்தக் கதிரியக்க அலைகளை வெளிப்படுத்த வல்லன. அதனால் மூளைக்கு அருகில் காதில் வைத்துப் பேசினால், மூளை பாதிக்கப்படலாம். ட்யூமர் வருமா என்பதற்கு ஆதாரம் இல்லை. எதற்கும் எச்சரிக்கையாய் நாம்தான் குறைவாய் பேசவேண்டும், இப்படிப் பரிந்துரைத்திருந்தார்.

மேற்படி பத்தியை மீண்டும் வாசித்துவிட்டு யோசித்துப்பாருங்கள். எளியோரான நம் புத்திக்கு எட்டாத எந்த “புதிய ஆராய்ச்சி” விஷயத்தை இந்த ‘எச்சரிக்கை ரிப்போர்ட்’ அளித்துள்ளது? இதில் வாச்சாங்குளி மேட்டர், அந்தக் கலர் படம்தான். இன்ஃப்ராரெட் தெர்மோகிராஃப் கொண்டு செல்ஃபோன் பேசுகையில் முகத்தில்/மண்டையில் வெப்பநிலையைக் குறிக்கும் வகையில் எடுக்கப்பட்ட படத்தைக் கொண்டு மூளை ‘பாதிக்கப்படும்’ என்று சொன்னால் சரியான வாதமில்லை. பாதிப்பு என்றால் என்ன? பாதகமாகவா, சாதகமாகவா? பாதகம் என்றால் மூளை அல்லது அதன் எப்பகுதி என்னவாகும்? மின்காந்த அலைகளினாலா? இயக்கம் மாறுபடுமா? இதை ஓரிரு டிகிரி அதிகமாகும் வெப்பநிலையைக் கொண்டு எவ்வாறு கணித்தார்கள் (ஏழெட்டு டிகிரி அதிகரித்தால் ஆளே அம்பேல்)? வெப்பநிலையால்தான் என்றால், வெந்நீரில் தலைக்கு குளித்தாலும் மூளை பாதிக்குமா? இப்படியெல்லாம் கேட்கப்போனால், கேள்விகளே அச்செய்தியின் அளவை விட நீண்டு விடுகின்றன. தொகுத்துக் கேட்டு பிரசுரமாக்குவதற்குள் அடுத்த வாரம், வேறு ஒரு ‘எச்சரிக்கை’ வெளிவந்துவிடுகிறது.

cell

சரி, நிசமாகவே செல்ஃபோனை மூளைக்கருகில் அதிக நேரம் வைத்திருந்தால் கேடா என்றால், அவ்வகை முடிவுகள் கொண்ட ஒரு ஆராய்ச்சிக் கட்டுரையை சென்றவருடம் (2011) வாசித்தேன். கூடவே “செல்ஃபோன்கள் மூளையின் இயக்கத்தைப் பாதிக்க வல்லவை” என்கிற வகைத் தலைப்பின் கீழ் ’சந்தை அறிவியல்’ செய்தியும் வெளியாகி -யிருந்தது. பார்த்தவுடன் எரிச்சலூட்டும் தலைப்பு (மூளையை பாதிக்காத மனிதச் செயல்பாடு எது? கையை ஆட்டினாலும், காலை ஆட்டினாலும்-தான் மூளை ‘பாதிக்கப்படும்’). ஆராய்ச்சிக் கட்டுரை மூலத்தை வாசித்துப் பார்த்தேன். காதின்மேல் இருத்திக்கொண்டு செல்ஃபோனில் பேசினால், காதுப் பகுதியின் அருகாமையில் மூளையினுள் வெப்பநிலை உயருவதாய் நிறுவியிருந்தார்கள். அடடா, சரியாக இருக்கிறதே என்று மேலும் துழாவினால், பரிசோதனையில் செல்ஃபோனை ‘டாக்-மோடில்’ காதிற்கருகில் தொடர்ந்து ஐம்பது நிமிடம் பிடித்துக்கொண்டிருந்தால் இவ்வாறு மூளை சூடாகிறதாம். “கைவலிக்காதோ?” என்று ஒரு கேள்வி தோன்றினாலும், நான் கேட்க நினைத்தது: “ஒருவன் ஐம்பது நிமிடம் தொடர்ந்து செல்ஃபோனில் பேசினால், அது மூளை இருப்பவன் செய்யும் செயல் என்று நிரூபிப்பதற்கே ஆதாரம் கேட்கவேண்டுமே; (கெட்ட வார்த்தையை நிரப்பிக்கொள்ளுங்கள்…), பின் அவனுக்கு இருப்பதாய் சந்தேகப்படும் அம்மூளை ஆராய்ச்சி நிரூபணத்தில் சூடானால் என்ன, சுக்கலாயிரமாய்ச் சிதறினால்தான் என்ன?”

ஆனாலும் இவ்வகை ‘சந்தை அறிவியல்’ செய்திகளைத் தொடர்ந்து உள்வாங்கும் நாம், செல்ஃபோன் பேசுவதினால் உண்மையில் நமக்கு எவ்வளவு, எப்படி ஆபத்து, எது பாதுகாப்பான செயல்பாடு என்றெல்லாம் அறிந்துகொள்ள மெனக்கெடுவதில்லை (நானும் இக்கட்டுரையில் எழுதப்போவதில்லை). செல்ஃபோனினால் மூளைக்கு ஆபத்து என்கிற ஒற்றைவரி பயம் மட்டும் நமக்குள் தங்கிவிடுகிறது. நாலுபேரை அலைபேசியில் கூப்பிட்டு, அலறி அங்கலாய்த்துக்கொள்கிறோம்.
இது சந்தை அறிவியலையும் கடந்த மந்தை அறிவியல்.

*

ஒளியின் வேகத்தை விட அதிகமான வேகத்துடன் பயணம் செய்யும் நியூட்ரினோக்கள் உள்ளன என்று தடாலடியாக 2011இல் ஒரு செய்தி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது நினைவிருக்கலாம். ஓபெரா (OPERA) என்றழைக்கப்பட்ட இப்பரிசோதனையில், ஏற்பாட்டின்படி ஐரோப்பாவில் இரண்டு நகரங்களுக்கிடையே பூமிக்கடியில் பயணம் செய்த நியூட்ரினோக்களின் வேகத்தை அளப்பதற்கு பௌதிகப் பேராசிரியர்கள் ஆராய்ச்சியாளர்கள், பொறியியலாளர்கள் அடங்கிய குழு சில வருடங்களாய் முயன்று வந்தது. ஓபெரா குழுவின் ஒரு பிரிவு பரிசோதனை முடிவுகளை நவம்பர் 2011-இல் வெளியிட்டது. சற்று அவசரமாக. வெளிவருகையிலேயே இம்முடிவுகள் அவசரமானவை என்று கருதி ஓபெரா பரிசோதனையில் உடன் வேலைசெய்த சில விஞ்ஞானிகள் குழுவாய் இம்முடிவுகளின் வெளியீட்டில் தங்கள் பங்கு வேண்டாம் என்று ஒதுங்கிவிட்டனர். தொடர்ந்து, நியூட்ரினோக்கள் அதியொளித் துகள்கள் (super luminary particles) என்பது நிரூபிக்கப்பட்டுள்ளபடியால், பிரபஞ்சத்தில் எப்பொருண்மையும் ஒளியைவிட வேகமாய் பயணம் செய்யாது என்கிற ஐன்ஸ்ட்டைனின் சித்தாந்தம் மாறுதலுக்குட்படுத்த வேண்டியது அவசியமாகிறது என்று செய்தி வெளியானது.

d11a02_4

தமிழில் கூட, அறிவியல் அதன் செயல்பாடு, வாசகரின் புரிதலை மேம்படுத்த ஏதாவது அறிவியல் உபஅங்கங்களின் விளக்கங்கள் என்று எந்த ஒரு உருப்படியான அறிவியல் கட்டுரையும் எழுதாதவர்களும், ஐன்ஸ்ட்டைன் தூக்கியடிக்கப்பட்டு விட்டதாகவும்,“மாற்றம் என்பது மானுட தத்துவம்” என்று அன்றே பாரதிதாசன் சொல்லி விட்டாராக்கும் என்றும் எழுதிச் சென்றார்கள். அறிவுத் துறைகளில் முக்கியமானதாய் ஏதாவது முன்னேற்றங்கள் உலகில் நிகழ்கையில் சட்டென தனக்கும் அது புரிந்து தெரிந்து செரித்துவிட்டதுபோல் ‘சர்வக்ஞராய்’ கருத்து சொல்வது சிலரின் இயல்பு.

என்னதான் பொதுமக்களிடம், முன்பு எப்போதுமில்லாத வகையில், உடனுக்குடன் பல அறிவியல் தளங்களில் நடக்கும் ஆராய்ச்சி முடிவுகளைக் கொண்டு சேர்க்கிறது என்றாலும், இவ்வகை மிகைகளும் சார்ந்த மீள்-மிகைகளும் சந்தை அறிவியலின் முக்கியமான இடர். கை சொடுக்கும் நேரத்தில் ஒற்றை வரிச் செய்தி மிகைகளை வாசித்துத் ’தெளிந்து’ தீர்க்க தரிசன மதிப்பீடுகளை கிடைக்கும் இடத்தில் (இணையத்தில்) அரைபண்டித அறைகூவலாய் அழற்றுவதும் தவிர்க்க இயலாது.

அறிவியல் சிந்தையின்படி எந்தச் சித்தாந்தமும், கருதுகோளும், கட்டமைப்பும் எதிர் ஆதாரங்களுடன் மறுக்கப்படக் கூடியதே. ஐன்ஸ்ட்டைனும் விலக்கல்ல. ஆனால் சித்தாந்தங்களின் திறனுக்கும் பொது அம்சத்திற்கும் ஏற்ப எதிர் ஆதாரங்களும் அவ்வளவு வலுவானதாக அமையவேண்டும். அப்போதுதான் மாற்றுச் சித்தாந்தம் பற்றி யோசிக்கத் தேவையேற்படும். இதைத் தினந்தோறும் அறிவியல் பழகிவரும் (ஆண்டாள் பொறுத்துக்கொண்டால்: ‘உண்ணும் சோறும், பருகும் நீரும், தின்னும் வெற்றிலையும், அறிவியலே’ என்று பழகிவரும்) விஞ்ஞானிகள் அறிந்திருப்பவர்களே. அவர்கள் ‘சந்தை அறிவியல்’ கூவி விற்பதை எல்லாம் உடனடியாக ஏற்றுக்கொண்டு ‘அப்படியே சாப்பிட மாட்டார்கள்’.

இந்த “ஒளியை விஞ்சும் நியூட்ரினோ” சோதனை முடிவுகளை 2011-இல் வெளிவந்தவுடனேயே “இது சந்தேகக் கேஸ், மேலும் பரிசோதனைகளைச் சரிபார்த்தால் இம்முடிவுகளின் துல்லியத்தில் சந்தேகம் வரும், ஐன்ஸ்ட்டைனை அவ்வளவு எளிதில் அகற்றமுடியாது” என்று சில பௌதிக ஆய்வாளர்களின் கருத்துகளையும், வலைதளங்களில் எழுதிய விளக்கங்களையும் ஊடகங்கள் பொருட்படுத்தவில்லை. தொடர்ந்து பரிசோதனைகளின் முடிவுகளைச் செப்பனிட்டதில், இயந்திரத்தில் ஒரு இடத்தில் ஃபைபர் ஆப்டிக் கேபிள்கள் சரியாகச் சொருகப்படவில்லை. அதனால், நியூட்ரினோக்களின் பயணத்தில் 60 நேனொ செகண்ட் ரத்து செய்துகொள்ளவேண்டுமா அல்லது கூட்டிக்கொள்ளவேண்டுமா என்பது சரிவரத் தெரியவில்லை என்று அறிந்துகொண்டனர். முன்னர் ஒளியை விஞ்சும் வேகம் என்று குறிப்பிட்டதே இப்படி ஒளியின் வேகத்தைவிட நேனோசெகண்ட் பொழுதுகளினால் ஏற்பட்ட வேக வித்தியாசத்தை வைத்தே என்பதால், அம்முடிவுகள் துல்லியத்தில் வழுவின.

இதனால், சில மாதங்கள் கழித்து, பிப்ரவரி 2012இல் அதே விஞ்ஞானிகள் குழு புதிய முடிவுகளைச் சரிபார்த்துவிட்டு, ஆமாம், முன்னர் வெளியிட்ட முடிவுகளில் சில தோராயச் சுழிப்புகள் (ரவுண்டிங் ஆஃப்) நேர்ந்துவிட்டது; அதனால் அறிவித்ததில் பிழை. பயணம் செய்த நியூட்ரினோக்களின் வேகம் ஒளியின் வேகத்தைவிட அதிகமா என்பது திட்டவட்டமில்லை. அடுத்த சுற்றுப் பரிசோதனைகள் தேவை. இப்போதைக்கு ஐன்ஸ்ட்டைனின் சித்தாந்தத்திற்குப் பங்கமில்லை- இப்படி அறிவித்தார்கள். ‘சந்தை அறிவியல்’ பெரிதாகக் கண்டுகொள்ளவில்லை. அதற்குள் வேறு பரபரப்பான அறிவியல் விஷயங்களுக்குக் கடந்து சென்றுவிட்டது.

மேலே குறிப்பிட்ட தமிழ் எழுத்தின் அரைப்பண்டிதர்களும் சளைப்பதே இல்லை. நியூட்ரினொ பற்றிய புதிய முடிவுகளைக் கண்டு கொண்டார்களோ இல்லையோ, அதற்குள் வேறு விஷயத்திற்குத் தாவி விட்டார்கள். உதாரணமாக, 2012-இற்கான பாண்டித்ய வெளிப்பாடாய் சமீபத்தில்கூட -– இருபது வருடமாய் பௌதிகம் சார்ந்து பயிற்சி, ஆய்வு மற்றும் ஆசிரியத்துவம் செய்துவருவோருக்கும் சட்டென்று புரிபடாத — “கண்றாவித் துகள்” பற்றி எளிதாகத் தங்கள் தீர்ப்புகளையும், தீர்க்க தரிசனங்களையும் இணையத்திலும், அரசியல் சஞ்சிகைகளிலும் எழுதிப் போகிறார்கள் (அறிவியலுக்கு என்று பிரத்யேகமாக சஞ்சிகைகள் வைத்துக்கொள்வது நம் பாரம்பர்யத்தில் தழைப்பதில்லை). மக்கள் காசு கொடுத்து வாங்கிப் படிக்கிறார்கள்.

gron457l

மற்றொரு ‘சந்தை அறிவியல்’ உதாரணம், 2010இல் வெளிவந்த ஃபெலிஸா-வுல்ஃப் சைமன் மற்றும் குழுவினரின் ‘ஆர்ஸெனிக் பாக்டீரியா’ ஆராய்ச்சி முடிவுகள். இதைப் பற்றி “மாற்று உயிர்” என்கிற தலைப்பில் முன்னரே சொல்வனத்தில் சில கட்டுரைகள் எழுதியுள்ளோம். இவ்வாராய்ச்சி முடிவுகள் வெளிவருகையிலேயே எதிர் குரல்களும் துறை விஞ்ஞானிகளிடையே கிளம்பின. தற்போது ஜூலை 2012-இல் வெளிவந்துள்ள புதிய ஆராய்ச்சி முடிவுகள் ஆர்ஸெனிக் பாக்டிரியா அவ்வகையில் ஆர்ஸெனிக்கை மரபணு வரை கொண்டு சென்று ‘உணவாகக்’ கொள்ளும் வகையில் செயலாக்கவில்லை என்று கண்டுள்ளது. ஃபெலிஸா குழுவினரின் மாற்று உயிர், ஆர்ஸெனிக் பாக்டிரியா பற்றி 2010-இல் தடபுடலாய் செய்திகள், பேட்டிகள், படங்கள் என்று வெளியிட்ட ஊடகங்கள், மறுப்பாய் இரண்டு ஆராய்ச்சி முடிவுகள் வெளிவந்தும், (ஓரிரு செய்திக் குறுங்கட்டுரைகள் தவிர்த்து) அதிகம் அவற்றை பிரபலப்படுத்தவில்லை. மாற்று உயிர் பற்றிய ஆராய்ச்சி இனியும் தொடரும். ஆனால் சார்ந்த “ஆர்ஸெனிக் பாக்டிரியா” ஆராய்ச்சியோ துரதிருஷ்டவசமாக, சந்தை அறிவியலில் சிக்கிக் கொண்டது. இதற்கு ஒரு பெருங்காரணம் நாஸா (NASA)-தான்.

ஆர்ஸெனிக் பாக்டீரியா ஆராய்ச்சி விஷயத்தில் நாஸாவிடம் ஆராய்ச்சி மான்யம் பெறும் சில விஞ்ஞானிகள் உட்பட பலர் நாஸாவைச் சாடியதற்குக் காரணம், நாஸாவும் தெரிந்தே ஊடக மிகையை உபயோகித்ததனால். திட்டவட்டமாக நிரூபிக்காத ‘முதல் சுற்று’ முடிவுகளையே ஊதிப் பெரிதாக்கி பரபரப்பான அறிவியல் செய்தியாய் ‘ப்ரஸ் மீட்’ வைத்து வெளியிட்டது. துறையில் ஆராய்ச்சி செய்யும் விஞ்ஞானிகளிடையே அறிவியல் விவாதங்களாகத் தொடர வேண்டியது, முதல் கட்டத்திலேயே துரதிருஷ்ட வசமாக இவ்வாறான அதிக விளம்பரத்தினால் தரம் குறைந்த சர்ச்சையாக உருமாறியது. இது புரிகிறதோ, தெரிகிறதோ, எதற்கும் நம் கருத்தையும் சொல்லி வைப்போம், ஆக்கத்தை எதிர்க்க முடியவில்லையெனில் ஆளை அடிப்போம், அது என் ஜனநாயக உரிமை என்கிற இணைய கலாச்சாரத்தின் இன்றைய பரிணாமம். எதிர்பார்க்கக் கூடியதே.

சம்பந்தப்பட்ட விஞ்ஞானிகளும், முக்கியமாக ஃபெலிஸா-வுல்ஃப் சைமன், விளம்பரப் பிரியர்கள், விஞ்ஞானத்தை முறைப்படி அணுகாதவர்கள் என்று விமர்சிக்கப்பட்டார்கள். ஆராய்ச்சி முடிவுகளின் மீது சக விஞ்ஞானிகளின் சந்தேகங்களின் தாக்கத்தில் கொஞ்சம் கொஞ்சமாய் ஃபெலிஸாவின் தரப்பின் நம்பகத் தன்மை குறைந்து போய், மேலும் பரபரப்பாய் “நீ பெரியவனா நான் பெரியவனா” என்கிற ரீதியில் சண்டை. சிண்டுகள் முடியப்பட்டு, சில மாதங்களில் தூக்கி வைத்த நாஸாவே, ஃபெலிஸாவைக் கை கழுவிவிட்டது. முத்தாய்ப்பாய், அவர் செய்துவந்த ஆராய்ச்சி வேலை பறிபோன பரிதாபம் சந்தை அறிவியலின் லீலை. இந்த விவகாரம் பற்றி விரிவாக “ஆர்ஸெனிக் பாக்டீரியா தற்காலிக அடக்கம்” என்கிற கட்டுரையில் வாசிக்கலாம்.

அறிவியலின் ராணி என்றழைக்கப்படும், முடிந்தவரை தருக்கங்களாய், தியரம்-ப்ருஃப் என்று ஆராய்ச்சிகளை வெளிப்படுத்தும் கணிதத்தையும் ‘சந்தை அறிவியல்’ விட்டுவைக்கவில்லை. உதாரணமாய், கணிதத் துறையில் ஒரு அங்கமாய், பாய்மங்களின் (fluids) செயல்பாடுகளை விளக்கும் நேவியர்-ஸ்டோக்ஸ் (நேவியர்-இசுடோக்சு என்றும் எழுதலாம்) நுண்கணிதச் சமன்பாட்டிற்குப் பொதுத்தீர்வு காண்பதென்பது “மிலென்னியம் ப்ராப்ளம்” பட்டியலில் ஏழில் ஒன்று. பொதுத்தீர்வு காண்பவருக்கு கிளே கணிதவியல் நிறுவனம் மில்லியன் டாலர்கள் பரிசு வழங்கும். 2006இல் இவ்வகைத் தீர்வைக் கண்டுபிடித்துவிட்டதாய் அமேரிக்காவின் லீஹை பல்கலைக் கழகத்திலிருந்து( Lehigh University) பென்னி ஸ்மித் என்கிற பெண் பேராசிரியர்/கணிதவியலாளர் தன் ஆராய்ச்சிக் கட்டுரையின் முன்வடிவத்தை ஆராய்ச்சியாளர்கள் பகிர்ந்துகொள்ளும் இணைய-ஆவணப்பெட்டகத்தில் வெளியிட்டார். வந்தது வினை.

இணைய-விளம்பரம் சில மணிநேரங்களில் வெடித்து பூதாகாரமாகி, இன்னமும் சக ஆராய்ச்சியாளர்கள் சரி தவறு என்று பரிந்துரைக்காத அந்த ஆராய்ச்சி முடிவுகளைப் பற்றி அவரிடம் பேட்டி கண்டு, அவரும் அசட்டுத்தனமாய் சற்றே மிகையாய் பேட்டி கொடுத்தார். ஒரு சில வாரங்களில் அந்தத் தீர்வில் தவறு இருப்பது (ஆவணப்பெட்டகத்தில் வாசித்த சககணிதவியலாளர்களால்) கண்டறியப்பட்டு, அவர் அக்கட்டுரையை வாபஸ் பெற்றுக் கொண்டார். இது ஆராய்ச்சியாளர்களிடையே சகஜம். தவறுகள் இருக்கலாமோ என்றுதான் முன்வடிவை பொதுப்பெட்டகத்திலும் வைத்திருந்தார் (யாராவது தவறுகளைச் சுட்டுவார்கள் என). ஆனால், எதிர்பாராமல் இலவசமாய் கிடைத்த கூடுதல் இணைய-விளம்பரத்தினால் மனங்குறுகிப் போனார். இணையத்தில் உலவும்/மேலோட்டமாய் வாசிக்கும் பலர் அனுதாபக் கடிதங்கள் எழுதியே அவரை வெறுப்பேற்றி விட்டனர்.

சமீபத்தில் (2011) கூட கணினித் துறை-கணிதம் சார்ந்த “P=NP? ருசு” எனப்படும் (இது மற்றொரு ‘மிலென்னியம் ப்ராப்ளம்’) அடிப்படைக் கேள்விக்கு விடை கண்டுவிட்டதாய் இந்திய வம்சாவளி அமெரிக்கர் வினய் தியோலலிக்கர் தீர்வு ஒன்றை வெளியிட்டார். சில நூறு பக்கங்களைக்கொண்ட இத்தீர்வு பெரும் பரபரப்பை இணையத்தில் ஆராய்ச்சியாளர்களிடையே, அவர்களது வலைப்பூக்களையும் செய்திகளையும் வாசித்துவரும் பொதுவாசகர்களிடையே ஏற்படுத்தியது.

இதற்குக் கிடைத்த ஊடகமிகை விளம்பரத்தைக் கண்டு கணினி-கணிதத்துறை பேராசிரியர் ஸ்காட் ஏரன்ஸன், “இத்தீர்வு நிச்சயம் தவறானது; சரியானது என்று நிரூபணமானால், மில்லியன் டாலர் பரிசுடன் என் சொத்து முழுவதையும் அன்னாருக்குக் கொடுக்கிறேன்” என்று பகிரங்கமாய் தன் வலைப்பூவில் எழுதிவைத்தார். எதிர்பார்த்ததைப் போலவே, இவ்வகை ‘மிகை எதிர்வினை’யினால் மூலச்செய்திக்கு அதிகவிளம்பரமே கிடைத்தது.

சில மாதங்களில் ஆர்.ஜே.லிப்ட்டன் போன்ற ஓரிரு கணினி-கணிதவியலாளர்கள் மேற்படித் தீர்வில் முன்பிழைகள் இருப்பதைச் சுட்டிக்காட்டி, மொத்தக் கட்டுரையையும் பிழைத்திருத்தம் செய்வது வீண் என்று விலகிவிட்டனர். வெளியிட்டவரோ கட்டுரையை பொதுத்தளத்தில் இருந்து வாபஸ் பெறுவதாய் இல்லை. இழுபறி. சொத்தை அடமானம் வைத்தவர், வேறு யார் சரி தவறு என்று நிரூபித்தாலும் அவர்களுக்கும் இதே பரிசு என்று மறுஒலிபரப்பு செய்துவிட்டு, சாத்தியப்படும் வேறு ஆராய்ச்சி ஜோலிகளை கவனிக்கப் போய் விட்டார். இணையமிகையும் வேறு ஆளைப் ‘போட்டுத் தள்ள’ப் போய்விட்டது.

அறிவியல் துறைகளில் இப்படி அடிக்கடி ‘சந்தை அறிவியலில்’ மாட்டிக்கொண்டு விழி பிதுங்குவது சைக்காலஜி, சார்ந்த பிஹேவியரல்-சைக்காலஜி போன்றவைகளே. அதுவும் ‘டயட்-கட்டுரைகள்’ அறிவியல் எழுத்தின் டாப்-டென் மோசடிகளின் உறைவிடம். சாம்பிளுக்கு: காபி குடித்தால் உடலுக்கு நன்மை, உடலுக்குத் தீமை, இதயம் பலவீனப்படும், இதயம் வலுப்பெறும், இப்படி எதிர்நிலையான முடிவுகளுடன் வருடாவருடம் புருடாக்கள். மெக்டானால்ட்ஸில் டபுள் லேயர் சீஸ்-பர்கரையும், கூடவே கவனமாய் ‘டயட்-கோக்’கையும் மனத்தில் எவ்வித முரணுமின்றி ஆர்டர் செய்யும் ‘பகுத்தறிவான’ அமேரிக்கர்களுக்கென்றே எழுதப்படுபவை இவை. சமீபத்தில்தான் இவற்றை நாம் ஆங்கில நாளிதழ்களின் உப அவஸ்தைகளாய் இறக்குமதி செய்யத் துவங்கியுள்ளோம்.

முத்தாய்ப்பாய் சென்ற வருடம் படைப்பூக்கம் எப்படித் தோன்றுகிறது என்பதை சைக்காலஜி, நியூரோசயன்ஸ், சமூக அறிவியல் என்று பல துறைகளின் ஆராய்ச்சி முடிவுகளைக் கலந்தாலோசித்து ஐயம்திரிபற நிறுவுவதாக வெளிவந்த ‘இமாஜின்’ என்கிற ஜோனா லெஹரரின் புத்தகம். பெஸ்ட்-ஸெல்லர் தகுதி பெற்ற இப்புத்தகத்தின் உள்ளடக்கத்தின் ஓட்டைகளைச் சாடி பல விஞ்ஞானிகள் நியூயார்க் டைம்ஸ், கார்டியன் போன்ற நாளிதழ்களில் எழுதிவிட்டனர். சமூக அறிவியல் என்றால் ஏதோ பௌதிகம் போன்ற கறார் கணித மாதிரிகள் இல்லாதிருக்கலாம். ஆனால் செயல்-விளைவு போன்ற தொடர்புகளும் இல்லாமலா ஆராய்ச்சிகள் நடைபெறும் என்கிற விமர்சனத்திலிருந்து, புத்தகத்தில் வந்துள்ள பாப் டிலன் எப்படிப் பாட்டெழுதுகிறார் என்கிற ‘படைப்பூக்க இயக்கத்தின்’ கருத்துகளெல்லாம் லெஹரரின் படைப்பூக்கத்தின் சான்று என்பதுவரை. புத்தகம் தொடர்ந்து அமோகமாக விற்பனையாகிறதாம்.

தமிழிலும் மார்க்கெட் இருப்பதாய் நாம் சரியான தருணத்தில் கிளப்பி விட்டால், வரும் 2013 புத்தகக் காட்சியில் ‘துரிதப் பிரசுரமாய்’ மொழியாக்கப் புத்தகம் வெளிவரலாம். ரிஸ்க் எடுத்து தமிழில் அறிவியல் புத்தகங்கள் பிரசுரிக்கும் பதிப்பாளர்களும் காசுபார்க்கவேண்டுமல்லவா.

*

aton1554l

அனைத்து அறிவியல் ஆராய்ச்சி முடிவுகளும் முதலில் சக ஆராய்ச்சியாளர்களுடன் பகிர்ந்துகொள்ளும் வகையில் அத்துறை சார்ந்த சஞ்சிகைகளில் (மட்டும்) வெளிவரும். இன்றும் அப்படித்தான். அதிர்ச்சியான, கிளர்ச்சியான புதிய முடிவுகள் வெளிவருகையில், ஆராய்ச்சி சஞ்சிகைகளை வாசிக்கும் விவாதிக்கும் அறிவியலாளர்களிடையே மட்டுமே சர்ச்சை கிளம்பும். “சங்கறுப்ப தெங்கள் குலம் சங்கரனார்க் கேது குலம்” என்று நெற்றிக் கண்ணைத் திறந்தாலும் கேட்பார்கள். அவர்களே மேலும் ஆராய்ச்சிகளின் மூலம், புதிய முடிவுகளைப் பரிசீலித்து, மீண்டும் அவ்வகை ஆராய்ச்சி சஞ்சிகைகளிலேயே தங்கள் முடிவுகளைக் கட்டுரைகளாய் வெளியிட்டு, சந்தேகங்களை ஓரளவு தீர்த்துக் கொள்வார்கள். புதிய அறிதல்களில் ஓரளவு சமநிலை கிட்டிய பிறகே, தற்காலிக சமாதானக் கொடி பறக்கவிடப்பட்டு, புதிய அறிவியல் கூற்றுகளாக அம்முடிவுகள் பிரச்சார அல்லது பரப்பறிவியல் புத்தகங்கள் மற்றும் செய்திகளில் வெளிவரும்.

இது இணையம் வளரும் வரையில் இருந்த நிலை. கடந்த இருபது ஆண்டுகளில் நிலைமை மாறிவிட்டது. அமைப்பிற்கு எதிராய் அல்லது அதைக் கேள்வி கேட்கும் வகையில் ஆராய்ச்சி முடிவுகள் வெளிவருகையில் தடபுடலாக ஊடகங்கள் (தாங்கள் போனால் போகட்டும் என்று வைத்திருக்கும் அறிவியல் பக்கங்களில்) பிரசுரிப்பார்கள். ஆனால், இம்முடிவுகள் மறுதலிக்கப்படுகையில் அதே அளவு பிரஸ்தாபங்கள் இருக்காது. அதற்குள் விஷயம் அலுத்துவிடும். இல்லை, வேறு பரபரப்பு விஷயத்திற்கு ஊடகங்கள் தாவியிருக்கும். அறிவியலையும் தகவலாய் அணுகிச் செய்திகளாய் ஆக்கி, பரபரப்பு பிரச்சாரம், பண்டம், விற்பனை, வியாபாரம், என்று ஊடகங்கள் களமிறக்குவதால் ஏற்படும் வினை இது. அதனாலேயே, அறிவியலை ஆராய்ச்சி நடக்கையிலேயே, தற்கால ஊடகங்கள் “சுருக்கமாக, சுவையாக” பொதுமக்களுக்கு எடுத்துச் செல்ல முனைகையில் இவ்வகை சிக்கல்கள் ஏற்படுகிறது.

ஆராய்ச்சிகள் இப்படித்தான் நடக்கும் என்பதை உணர்ந்து கொள்ளும் பக்குவத்துடன் இந்த “சந்தை அறிவியல்” செய்திகளை அணுகினால் சுவாரசியமாக இருக்கும். இல்லையேல், அறிவியல் சிந்தையின் பேரிலேயே சந்தேகமும், உவர்ப்பும் ஏற்படும். முன்னதை விட பின்னதுதான் அதிகம் நடக்கும் என்பதை மனித இயல்பிலிருந்து அறியலாம். சந்தை அறிவியலில் பகிரப்படும் ஒரு விஷயத்தின் உண்மை நிலை என்ன என்பதை எப்படி அறிவது? நேரடியாக ஆராய்ச்சிக் கட்டுரையைப் படித்துப் பார்த்துத் தெளிவதுதான் சிறந்த வழி. இல்லையேல் சம்பந்தப்பட்ட விஞ்ஞானிகள், அத்துறை வல்லுநர்கள் என்று யாரேனும் அவற்றை வாசித்து அறிவியல் எது, அவியல் எது என்று விளக்குவது மட்டுமே வழி. பல நேரங்களில் அவர்கள் தங்கள் துறைத் தேர்ச்சிக்கேற்ப, துறைப்பரிச்சயம் உள்ளவர்களுக்கு மட்டுமே அதிகம் புரியுமாறு விளக்குவார்கள்.

இதனால் ஆய்வாளர்களுக்கும் அத்துறையில் தேர்ச்சியற்ற சக மனிதர்களுக்கும் ஏற்படும் இடைவெளியில் (அதாவது, கிடைச்ச கேப்பில்), அறிவியல் இயங்கும் விதம் பற்றி சுத்தமான அக்மார்க் அறியாமையுடன், அரைப் பண்டிதர்கள் “சந்தை அறிவியல்” செய்திகளின் நுனிப்புல் மேய்ச்சல்களைச் சாதகமாக உபயோகித்து, “பாத்தியா, நாந்தான் சொல்றேனே, இந்த அறிவியலே எப்போதும் இப்படித்தான்; இப்படிம்பாங்க, அப்படிம்பாங்க; மொத்ததில் இவங்களுக்கே ஒண்ணும் புரியலே,” என்கிற வகையில் எழுதுவார்கள். கொசுறாக எந்த நிரூபணத்திற்கும் உட்படுத்தவேண்டிய கட்டுப்பாடும், தேவையும் இல்லாத தங்கள் கருத்துக்களையும் ஏதோ ஆய்ந்தறிந்த ஆழ்ந்த உண்மைகள் போல இணைத்துவிடுவார்கள்.

உதாரணம் வேண்டுமென்றால்: “என்ன பெரிய மெடிக்கல் அட்வான்ஸ், மருந்து மாத்திரை எல்லாம் வேண்டிகெடக்கு; அறிவியல் மருந்துகளை கண்டுபிடிக்க கண்டுபிடிக்க, அம்மருந்திற்கு அப்பாற்பட்ட புதிய வியாதிகள் தோன்றிக்கொண்டே இருக்கும். ஐம்பது வருடம் முன்னால் யாராவது கான்சர் பற்றி கேள்விப்பட்டிருக்கிறோமா, இருபது வருடம் முன்னால் யாராவது எய்ட்ஸ் பற்றி கேள்விப்பட்டிருக்கிறோமா. எல்லாம் கடவுள் ஏற்பாடு,” என்றெல்லாம் எழுதுகிறார்கள்.

ஆனால், கான்சர் எனும் நோய் மூவாயிரம் வருடம் முன்னர் பிரமிட் கட்டிய எகிப்தியர் காலத்திலிருந்தே இருந்துள்ளது என்பதைச் சமீபத்தில் அ-படைப்பிலக்கியத்திற்கு புலிட்ஸர் பரிசு வென்ற எம்பெரர் ஆஃப் மேலடிஸ் (Emperor of Maladies) என்கிற  ‘பாப்புலர் சயன்ஸ்’ வகைப் புத்தகத்தில்  இந்தியப் பெயருடைய (அமெரிக்க டாக்டர்) சித்தார்த் முக்கர்ஜி ஆதாரங்களுடன் எழுதியிருக்கிறார். இதை மேற்படி பண்டிதரிடம் குறிப்பிட்டால் “ஆமாம், எல்லாத்துக்கும் ஒரு ஆதாரம் கேளு; நிரூபணவாதமே மனத்தை உழப்பும் வீண்வாதம்… நம் முன்னோர்களுக்கு கான்சர் இருந்ததாக உனக்குத் தெரியுமா; இருந்திருந்தால், அன்றே சரகர் போன்ற மகாவைத்தியர்கள் ஆயுர்வேதத்திலேயே மருந்து கண்டு…” இப்படி அடுத்த தேசியவாத அரணிற்குள் நழுவிவிடுவார். போகிறபோக்கில் எதிர்வினையாற்றும் நம்மையும் சரகர் மற்றும் ஆயுர்வேதத்திற்கு எதிரிபோல் திரித்துவிடுவர். பேசித் தீராது இவ்வகை நோய்கள்.

முக்கியமாக, அறிவியலில் பொய்யாக்க முடிந்த (falsifiable) கூற்றுகளை முன் வைக்கிறார்களே (அதனால் தானே அவ்வப்போது அடி வாங்குகிறார்கள்); இதேபோல், தங்கள் ‘பண்டிதக் கருத்துக்களும்’ பொய்யாக்க முடிந்த கூறுகளினால் ஆனவையா, இல்லை “இவை நான் சொல்வதால் உண்மை” என்கிற வகைக் கருத்துக்களா என்பதை வகுக்க மாட்டார்கள். யோசித்தாலும், வெளியே சொல்லாமல் உணர்ச்சிப் பிழம்பாய், ரிட்டோரிக்கலாய், எழுதிக் குவிப்பார்கள்.

எந்த அறிவியல் கருத்தும் பொய்யாக்கத்திற்கு (falsification) உட்பட்டது. இது அறிவியல் சிந்தையின் முக்கியமான அங்கம். தனிச்சிறப்பும். ஊடகமும் அதன் மிகையும் தோன்றாக் காலந்தொட்டே, அறிவியல் இப்படித்தான் இயங்குகிறது. இயங்கவேண்டும். இப்படி பொய்யாக்க முடியாத கருதுகோள்கள், அறிவியல் பிடிமானம் இருந்தாலும், சரி தவறு என்று நிரூபிக்க முடியாததால் (சோதித்துப் பார்க்க அவ்வகைக் கூறுகளே இல்லாததினால்), சித்தாந்தமாய் சிலகாலம் சிலிர்த்துவிட்டுச் சிதிலமடைந்துவிடும்.

இயற்கையைத் தெளிந்துணர அறிவியல் ஒரு அறிதல்முறை மட்டுமே, அது ஒரு கட்டமைப்பு மட்டுமே என்பதுபோல் ஒரு கற்பிதம். மற்ற அறிதல் முறைகளிலிருந்து முக்கியமான வேறுபாடு, அறிவியல் பொய்யாக்கத்திற்கு உட்பட்டது. மாற்றுச் சித்தாந்தத்திற்கும், முடிவுகளுக்கும் ஏற்ப தன் அறிதல்களை புதுப்பித்துப் பகுத்துக் கொள்ளும், தொகுத்துக் கொள்ளும். நிரூபணமற்ற தருக்கங்களினாலான ‘அறிதல்களை’ கட்டிக் காத்துக் கொண்டு, நிரந்தரமாக அதிகார அல்லது மேட்டிமை வீம்பு பிடிக்காது. நிலையானதைத் தெளிந்தறிய, நிலையற்ற நித்யத்தில் நெடுங்காலம் நிற்கத் தயங்காது.

சந்தை அறிவியல் அனைத்தும் சிந்தை அறிவியல் ஆகா.

*****

[பின்குறிப்பு: இக்கட்டுரையில் குறிப்பிட்டுள்ள சாதக பாதக அறிவியல் செய்திகளுக்கு ஆதாரமான தரவுகள்/சுட்டிகள் என்று நான் உபயோகித்தவற்றை, வழக்கமாய் செய்வதுபோல, இம்முறை கொடுக்கவில்லை. பட்டியல் நீளம் என்பது ஒரு காரணம். வாசகர்கள் இக்கட்டுரை உள்ளடக்கத்தின் நம்பகத்தன்மையைச் சந்தேகித்தால் (நிச்சயம் செய்யுங்கள்), இணையத்திலேயே அனைத்து தரவுகளையும் பெற்றுக்கொள்ளலாம். எனக்கும் எழுதலாம். சந்தை அறிவியலில் இருந்து விடுபட இவ்வகைச் சந்தேக சிறு மெனக்கெடல்கள் நம் அனைவருக்கும் அவசியம்தானே.]