வாசகர் மறுவினை

news-events

தோழர் தி.க.சி அவர்கள் சோவியத் நாடு நாளிதழில் பணியாற்றிக் கொண்டிருக்கும்போது எப்போதாவது செல்வதுண்டு. அம்பையைச் சேர்ந்த ருஷிய மொழி ஆசிரியர் நீலகண்டன் (மறைந்து விட்டார்) அவர்களுடன் சற்றுநேரம் பேசிக்கொண்டிருந்து விட்டு வருவேன். ஒரே பை,.. வேட்டிமுனையைப் பிடித்தபடி தோழர் தி.க.சி அவர்கள் காலாற நடந்தே பொதுவாக பேருந்து நிறுத்தத்துக்கு வருவார், அனாவசியமாக ஆட்டோவில் ஏறமாட்டார். சிகரம் செந்தில்நாதன் உற்ற நண்பர். இருவருமே பேசப்போன இடத்தில் பயணச் செலவுக்கு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் அளிக்கும் பயணப்படியை வாங்க மறுத்துவிடுவார்கள். புது எழுத்தாளர்களையும் புதுப் பத்திரிகைகளையும் பாராட்டி முதலில் வருவது தி.க.சி அவர்களின் கடிதம்தான்! வீட்டில் தோழர் தி.க.சி. கடிதம் எழுதுவதை எடுத்து சொல்வனத்தில் பதிந்தது நேரில் பார்ப்பதுபோன்று இருந்தது. திரு. வெங்கட் சாமிநாதன் அவர்களை நான் நேரில் சந்தித்துப் பேசியது த.மு.எ.க.சங்கம் தென் சென்னை அலுவலக ஊழியர் கிளை சார்பாக தேனாம்பேட்டை ‘பெபி’ சங்கம் நரேஷ்பால் மையத்தில் இயக்குனர் ராகேஷ் ஷர்மாவின் ”பைனல்- சொலூஷன்” ஆவணப் படத்தின் திரையிடலின் போதுதான். கூட்டத்துக்குத் தலைமை நான். முதலில் அரங்கத்துக்கு வந்தவர் அவர்தான். தினமணியில் செய்தி பார்த்துவிட்டு வந்திருந்தார். மூத்த விமரிசகர் என்ற முறையில் அவரை வரவேற்று அமரச் சொன்னேன். இடம் கொள்ளாத கூட்டம்! படம் முடிந்தபின் அவருடன் பேசிக்கொண்டபடியே டி.எம்.எஸ் பேருந்து நிறுத்தம் வரை சென்றபோது “ஒங்க ஆட்கள் எல்லாம் என்னெப் பத்தி கன்னா பின்னான்னு பேசீருப்பாங்களே” என்றார். “கருத்துரீதியான விமரிசனம் வேறு தனி நட்பு வேறு” என்றேன். அவர் கருத்து ஏதும் சொல்லவில்லை.

ஆர்.குமரகுருபரன்

“ஒரு மாபெரும் தேடல்” நூல் விமர்சனம் பற்றி:

நீங்கள் எடுத்துப் பேசும் பொருள் தமிழ் மொழியில் அதிகப் புழக்கம் இல்லாதது. எல்லா பொருளியச் சிந்தனைகளையும் ஆங்கிலத்தில்தானே நாம் வெளிப்படுத்துகிறோம்! ஆனால் இதனை மிக அழகாகத் தமிழில் கையாண்டுள்ளீர்கள். பல புதிய மொழிபெயர்ப்புக்களைக் கற்றுக்கொண்டேன். “முதலாளித்துவம்” என்ற பயனீடு பொருத்தமற்றது என முன்பே அறிந்து கொண்டு “மூலதனத்துவம்” எனப் பயன்படுத்தி வந்தேன். உங்கள் “முதலியம்” மேலும் பொருத்தம். இன்னும் பல அரிய புதிய சொற்களைக் கற்றுக்கொண்டேன். நல்ல மொழிபெயர்ப்புக்கு அகராதிகள் துணை அதிகம் கிடைப்பதில்லை. ஆகவே உங்கள் சொந்த உருவாக்கம் பல என எடுத்துக் கொள்ளுகிறேன்.  பாராட்டுக்கள்.

சரி, pursuit தேடலா? ‘பின்பற்றுதல்’ என்ற பொருள் இல்லையா? உங்கள் மொழிபெயர்ப்பு தமிழுக்கு ஏற்றதாக இருக்கிறது. எனினும் துல்லியம் குறைவது போன்ற தோற்றம். (இதை மயிர் பிளக்கும் வேலை என எடுத்துக் கொள்ளுங்கள்.)

ஆமாம், அயின் ராண்ட் பற்றிய குறிப்புக்கள் இதில் இல்லையா? வலது சாரிகளின் ஆன்மீகத் தலைவராயிற்றே! தற்காலத்தில் Milton & Thomas Friedman வரை புத்தகம் நீளவில்லையோ? தமிழில் ஒரு அறிவார்ந்த கட்டுரை படிக்கும் உணர்வைத் தந்தமைக்கு நன்றி.

ரெ.கார்த்திகேசு

Dear Sir

In the latest issue of Solvanam, both the short stories Appa (R Prabhu) and Parisu(Ganesh Venkat) are very good. Both leave a lump in the throat at the end. Well written. Parisu, especially weaves beautifully the historical facts into the story.

What to say about Suka? (Moothor). Suka, First of all you are a very very good Rasikan. Very few people can have such Rasanai. Secondly you have the ability to express your Rasanai in such beautiful language to make the reader feel exactly how you feel. Your punch lines coming at the end are the last ball sixers.

I am not much aware of Tamil Ilakkiyam and writers. Still I have heard about Thi.Ka. Si. Only now I came to know that Vannadasan Annachi (Agam Puram) is the son of Thi.Ka.Si. Hmmmm… Now I understand. Pulikku Pirandhadhu Poonaiyaguma. And Vannadasan’s preface to your Thayar Sannidhi where he calls you Pavi. Vashishtar vaayal Brahmarishi.

Suka, you are one of the wonderful writers today. You are also in great company. Nanjil Nadan, Jeya Mohan, Bharati Mani, Vanna Dasan……

I think very few people have written about their native places like you have written about Thirunaveli.

(Now tell me secretly – Did Venkat Swaminathan sir really ask you about the toilet in Thi. Ka. Si’s home?)

Continue to write and make the readers nostalgic and happy.

Suka, YOU ROCK.

Ambudan
S. Ganesh

சொல்வனம் 75 மற்றும் 76 இதழ்கள் நன்றாக வந்துள்ளன. ஹென்றி ஜேம்சின் நாவல்களை க.நா.சுவின் தமிழாக்கத்தில் படித்தபோது அவருடைய தமிழ்நடை எனக்குச் சற்றும் பிடிக்கவில்லை. விறுவிறுப்பாக இருக்கவில்லை. பிறகு அவருடைய பொய்த்தேவு படித்தபோது அவரது நடை மிகவும் வித்தியாசமாக இருந்தததைக் கண்டேன். அது ஒரு நல்ல நாவல் எனக் கருதுகிறேன். ஒருவன் வாழும்போது கௌரவிக்கப்படாமல் இறந்தபின் அவன் புகழ் பாடுவதில் பெரிதாய் என்ன பயன்? அது ஒருபுறமிருந்தாலும் இன்னொருபுறம் சொல்வனப்பதிவுகள் எதிர்கால இலக்கிய வாசகர்களுக்கு உதவக்கூடும்.

76வது இதழ் பற்றி. சதுரங்கக் கவிதை, சரக சம்ஹிதை,கூகிள் கார்கள்,விடியோ இணைப்பு, நாஞ்சில் நாடனின் கட்டுரை போன்ற அம்சங்கள் நன்றாக வந்திருந்தன. தேடலும் உழைப்பும் தெரிகிறது. வாழ்த்துக்கள்.

நன்றி
அன்புடன்
லாவண்யா

உள்ளங்கையில் உலகம் – ச.திருமலைராஜன்

மிகப் பிரமாதமான கட்டுரை…

கட்டுரை ஆசிரியருக்கு என் வாழ்த்துகள்.

மணி ராமலிங்கம்

சென்ற இதழில் நரோபாவின் ‘சரக சம்ஹிதை‘ பற்றிய கட்டுரை ஆயுர்வேதம் பற்றி மட்டுமல்லாமல் மருத்துவம் பற்றிய ஒரு மிக ஆழமான, அகன்ற பார்வையை அளித்தது. மிக எளிமையான சரளமான நடையில் மிகவும் பெரிய விஷயங்களைத் திறந்து காண்பித்து விட்டார் கட்டுரையாசிரியர். மனிதனின் ஆதாரமான உண்மை உடல், அதன் பின் தான் வேறெந்த சிந்தனையுமே எனும்போது ஒரு மருத்துவராக உடலை எப்படி அணுகுவது என்பதை சரக சம்ஹிதை மூலம் அவர் திறந்து காட்டிய விதம் மிகவும் முக்கியமான ஒரு பார்வையை இன்றைய மருத்துவ முறைகளால் குழம்பியிருக்கும் தலைமுறையினருக்கு அளிப்பதாய்ப் பட்டது. சமநிலையும் சரளுமும் நிறைந்த இக்கட்டுரைக்காக மனமார்ந்த நன்றிகளைப் பதிவு செய்து கொள்கிறேன்.

– சி.சு.

திருமலை ராஜன் எழுதிய “உள்ளங்கையில் உலகம்” (http://solvanam.com/?p=22221) கட்டுரை கூகிளின் முக்கியமான புதிய முயற்சியை அழகாக விவரித்தது.

திருமலை கூகிள் மேப் என்ற பயன்பாட்டு இணையதளம் மற்றும் அதன் தாக்கங்களை எழுதியிருந்தார். ஆனால், மிக முக்கியமான தானியங்கி காரின் தாக்கத்தைப் பற்றி அதிகம் சொல்லவில்லையோ என்று தோன்றியது.

இன்று, உலக பொருளாதாரத்தின் மிக முக்கிய அளவுகோலாக கார் தொழில் உள்ளது. சமீப பொருளாதார வெற்றி நாடுகளான அமெரிக்கா மற்றும் ஜப்பானின் வெற்றியில் கார் நிறுவனங்கள் மிகப் பெரிய பங்கு வகித்துள்ளன. ஃபோர்டையோ, டயோட்டாவையோ விட்டு விட்டு அமெரிக்க/ஜப்பானிய பொருளாதார வெற்றியைப் பற்றி பேச முடியாது. இன்றைய போட்டியாளர்களான சைனா மற்றும் இந்தியா கார் தொழிலில் முன்னேறத் துடிக்கிறார்கள்.

அதை விடுங்கள். வட அமெரிக்க வாழ்க்கை முறைக்கே அடிப்படை கார்தான். புற நகர் புறங்களின் (GM Country) அமைப்பு மற்றும் நெடுஞ்சாலைகள் கார்களுக்காகவே உருவானவை. புறநகர் பகுதிகளில் கார் இல்லாமல் வாழ்வது என்பது நினைத்துகூட பார்க்க முடியாத ஒன்று.  ஒரு 120 ஆண்டுகளாக மனித முன்னேற்றம் மற்றும் கலாச்சாரத்துடன் இணைந்த விஷயம் இந்த கார் என்ற பொறியியல்/பொருளாதார வெற்றி.

கூகிளின் நோக்கம் மிக நல்ல நோக்கம். ஆனால், அதன் தாக்கம் இணையத்தைவிட பெரிய தாக்கமாக மேற்குலகில் இருக்கும் என்று தோன்றுகிறது.  மேற்குலகினர் “கார்” என்ற ஒன்றில்லாமல் சிந்திக்கவே தயங்குவார்கள். கூகிளின் நோக்கப்படி எதிர்காலத்தில் நிகழ்ந்தால், இதோ சில அதிரடி மாறுதல்கள் நிகழ வாய்ப்புள்ளது:

1. சொந்த கார் என்று ஒன்றுமே இருக்காது. எல்லாம் வாடகைக்கு கிடைக்கும் போக்குவரத்து கருவிகளாகிவிடும்.

2. கார் காப்பீடு என்ற தொழில் சரித்திரமாகிவிடும்

3. ஒருவரின் சமுதாய ஸ்டேடஸ் வேறு விஷயங்களால் கணிக்கப்படும் – அவரிடம் உள்ள கார்களினால் அல்ல

4. ஆஸ்பத்திரிகளில் சிகிச்சைத் தரம் முன்னேறும். ஏனென்றால், சாலை விபத்து என்ற மனித சமாச்சாரம் சரித்திரமாகிவிடும்.

இதைப் பற்றி நண்பர் ஒருவரிம் சொன்னதில், அவர், “அய்யோ சாமி, நினைத்தாலே கலக்குகிறது” Truly life changing.

இதற்கு பல முட்டுக் கட்டைகள் இருந்தன, இருக்கும். ஆனால், இந்த முயற்சியில் கூகிள் வெற்றி பெற்றால், உலகின் மிக பிரமாதமான தொழில்நுட்ப கம்பெனியாகிவிடும் என்பதில் சந்தேகமில்லை.

நன்றி

ரவி நடராஜன்