தமிழின் முக்கியமான கவியாளுமைகளில் ஒருவரான எஸ்.வைத்தீஸ்வரன் எழுதியிருக்கும் இச்சிறுகதை, மலையைக் கூறு போட்டு வெட்டித் தின்று கொண்டிருக்கும் இக்காலத்திற்கு பொருத்தமான ஒன்றாக இருக்கிறது.
அந்த மலைகள் என்னை என்னவோ செய்தன. தினம் தினம் செய்து கொண்டிருக்கின்றன. அவைகளை தூரத்திலிருந்து பார்க்கும் போதெல்லாம் ராம லட்சுமணர்கள் மாதிரி, இரட்டையானைக் குட்டிகள் மாதிரி, வானை முட்டிக் கொண்டு நிற்கும் காளைக் கொம்புகள் மாதிரி இன்னும் என்னவெல்லாமோ தோன்றி மறையும். சில சமயங்களில் அவைகள் மனதில் விபரீதமான பாலுணர்ச்சிகளைக் கிளறி விடுவதையும் நான் உணர்கிறேன். அமானுஷ்யமான உருவத்தில் ஒரு அழகுப் பெண்ணை எதிரே கண்டு அணைத்துக் கொள்ள சக்தியற்றுத் தவிக்கும் வேதனை அந்த மலைகளைப் பார்க்கும் போது எனக்கு ஏற்படுவது உண்டு. அவைகள் வெறும் மலைகள் தான் என்று தட்டிக் கழிக்க நான் ஒரு போதும் விரும்பியதில்லை.
உச்சி வெய்யிலில் ட்ரங்க் ரோடில் இரண்டு மூன்று பர்லாங்குகள் நடந்து போய் ஒரு குறிப்பிட்ட ஆலமர நிழலில் நின்று கொண்டு அந்த மலைகளைப் பார்ப்பது எனக்கு அன்றாடப் பொழுதுபோக்கு. லாரிகளின் ஓயாத பாய்ச்சல்களால் கிளம்பிக் கண்களை வருத்தும் புழுதியையும் பொருட்படுத்தாமல் மலைகளைப் பார்த்துக் கொண்டு நிற்பது நாட்பட நாட்பட எனக்கு தீராத போதைப் பொருளாக மாறி அவை என்னைச் சாலையில் நட்டு நிறுத்தின. இனி அவைகளைப் பார்க்காமல் என் பகல் வேளைகள் நகராது.
ஆபீஸில் சின்னச் சேருக்கும் மேஜைக்கும் நடுவில் உடம்பைப் புதைத்துக் கொண்டு கணக்கைப் புரட்டி வார்த்தையைப் புரட்டிக் காலத்தைக் குப்பையடித்து விட்டு உணர்வு செத்த பகலில் பசியும் இழந்து சோகை பிடித்த மனத்துடன் கூட்டங் கூட்டமாக ஹோட்டலை நோக்கி நகரும் பிராணிகளில் நானும் ஒருவன். ஆனால் நடுப்பகல் என்னைப் பேயாக்கி விடும். உடம்பை உலுக்கிக் கொண்டு என் பசியைத் தேடிக் கொண்டு டிரங்கு ரோடில் தலைதெறிக்க ஓடுவேன்; லாரிகளுடன் போட்டி போட்டுக் கொண்டு…. என் பசியைத் தேடியவாறு…
ஆலமரத்து நிழலில் நின்று கொண்டு பார்த்தால் என் பசிகள் பச்சைப் பசேலென்று கண்களுக்குத் தெரியும்…உயிரைத் தொடும்.. பைல்களின் கனத்தை உதைத்தெறிந்து விட்டு அந்த மலைகள் என் மனத்தை எட்டி அடைத்துக் கொள்ளும். உயரமும் அகலமுமாய் மனசு விரிய விரிய சிசு துள்ளும் வயிறாய் எனக்குப் பெருமிதமும் கர்வமும் ஊற்றெடுக்கும். பசி பிறக்கும். அந்த மலைகளைச் சுற்றி அரணாக்கயிறு மாதிரி கட்டிக் கொண்டிருக்கும் ரயில் தண்டவாளங்களில் சில வேளைகளில் சிவப்பு ரயில் பெட்டிகள் பொன்வண்டுக் கூட்டங்கள் மாதிரி நகர்ந்து மறைவதைக் காணும் போது எனக்கு ஏதோ ஆங்கிலப் படக்காட்சிகள் நினைவுக்கு வரும்.
இன்றும் அப்படித்தான்…ஆலமரத்து நிழலில் நின்று மலைகளைப் பருகிக் கொண்டிருந்தேன். சிப்பாய் ரெக்ரூட்டுகள் கூட்டங் கூட்டமாக மலைச் சாரலில் குப்புறப் படுத்துக் கொண்டு துப்பாக்கி சுட்டுப் பழகிக்கொண்டிருந்தார்கள். மலையின் அடிவாரங்களில் சற்றைக் கொருதரம் மண் அலைகள் குபீர் குபீரென்று எழும்பி மடிவதையும் ,தோட்டாவின் சப்தங்கள் சற்று லேட்டாக என் காதுகளில் வந்து விழுவதையும் அனுபவித்துக் கொண்டிருந்தேன்.
மலைக்கு முன் மனிதர்கள் கும்பிட்டு விழுந்து சக்தியைவேண்டித் தவிப்பது போல் பட்டது எனக்கு.. எனக்கு மலையைத் தொடவேண்டும் போல் இருந்தது. ஏதோ இனமறியாத பயமோ கூச்சமோ என்னை இத்தனை நாட்களாக அதனிடம் நெருங்கவிடாமல் தடுத்து நிறுத்தி விட்டதாக எனக்குத் தோன்றியது. சிப்பாய்களின் துப்பாக்கிகள் எனக்கு அந்த உணர்வை போக்கித் துணிவைக் கொடுத்தன. நான் மலையை நோக்கி மெள்ள மெள்ள நடந்து போனேன். டிரங்க்ரோடைவிட்டு குறுக்கே பள்ளத்திலிறங்கி புல்வெளிகளைக் கடந்து ரயில்கேட்டைத்தாண்டி நடந்தேன். பரந்த நீலவெளியில் மலைகள் நீண்டு அகன்று படர்ந்து கொண்டே வந்தன. ரோமங்கள் மாதிரி மலை மேனியில் புற்களும் தாவரங்களும் தெளிவு படலாயின. மலையினுச்சியில் சிவப்பு வெள்ளைப் பட்டையிட்ட சின்னக் கோயில் சுவரும் யாரோ புடவை உலர்த்திய மாதிரி தெரிந்தது. சிப்பாய்கள் சுட்டு விட்டு துப்பாக்கிகளை மடக்கிக் கொண்டிருந்தார்கள். சிலர் உச்சிவெய்யிலைப்பார்த்துக் கொண்டு பூட்ஸுகளைக் கட்டிக் கொண்டிருந்தார்கள். சிலர் என்னை உற்றுப்பார்த்து விட்டு மெல்ல சிரித்தார்கள். நான் அவர்களை, அவர்கள் சிரிப்புகளைக்கடந்து மலைப் பாதையில் நகர்ந்து கொண்டிருந்தேன். அவர்கள் சிரிப்பும் பேச்சும் மெல்ல மெல்லக் குறைந்து அடங்கிக் கொண்டிருந்தன.
மலைகளையும் என்னையும் தவிர வேறு யாரும் அங்கிருப்பதாகத் தெரியவில்லை. அந்த விரிந்த மைதானத்தில் மலைகளின் இடைவெளிகள் கொல்லன் துருத்தியாகக் காற்றை ஒரே திசையில் பாய்ச்சிக் கொண்டிருந்தன. அதன் வேகத்தில் நான் லேசாகி காற்றாடி வாலாகத் தள்ளாடினேன். தன் முயற்சியற்று காற்றோடு காற்றாகத் தள்ளாடுவது மனதிற்கு பேரனுபவமாக இருந்த்து.
யாரோ என்னைக் குழந்தையாக்கித் தொட்டிலாட்டுவது போல்…
மலையை “அம்மா” வென்று கூப்பிட வேண்டும்போல் இருக்கிறது..
மலைகள் விசுவரூபம் எடுத்து என் முன்னால் நின்றன. .
எனக்குக் கொள்ள முடியாத நிறைவு. நான் மலையைக் கிட்ட நெருங்கி விரல்களால் மெல்லத் தடவினேன். மணப்பெண்ணைத் தொடுவது மாதிரி. அதன் மீது வளர்ந்து கிடக்கும் இலைகளையும் புற்களையும் இங்குமங்கும் வாரி இறைத்தேன். நெஞ்சையும் காதையும் அதன் மீது வைத்துக் கொண்டு உற்றுக் கேட்டேன். முதுகை அதன்மீது சாய்த்துக் கொண்டு கண்ணை மூடிக் கொண்டு மல்லாந்து கிடந்தேன்.
கர்வம். மயக்கம். தள்ளாமை. ஆனந்தம். துக்கம் எல்லாமே கலந்து நெஞ்சை மத்தாகக் கடைந்தன.
சற்று நேரம் பொறுத்து கண்ணை மெள்ளத் திறந்து பார்த்த போது என்னை வெறும் நீலவானமும் வெற்று வெளியும் சுற்றிக் கொண்டிருந்தன. வெகு தூரத்தில் சிப்பாய்க் கூட்டங்களும் ஆலமரங்களும் ட்ரங்க் ரோடும் ஒன்றோடொன்று குழம்பி பதினெட்டாவது செஞ்சுரி இயற்கை வண்ண ஓவியமாக மங்கி மக்கலாக மாறிக்கொண்டிருந்தன.
நான் மலையை விட்டு நகர்ந்து காற்று வந்த திசையை நோக்கிக் குதித்து நடந்தேன். நிர்ஜனமான அந்த சமவெளியில் உரக்கத் தொண்டை கிழிய குரல்போன போக்கில் கத்தினேன். ஒலியை மனம் போன போக்கில் வளைத்து இறக்கி ஏற்றி விடுதலையாகக் கூவினேன். தெரிந்த ராகங்களும் போட்ட தாளங்களும் என்னை எள்ளளவும் கட்டுப் படுத்தவில்லை. புதுப்பாட்டுப் பிறந்தாலும் பிறக்கட்டும், புதுத் தாளம் சேர்ந்தாலும் சேரட்டும் எனக்கு எதுவும் அக்கறையில்லை. பாய்ந்த மலைக்காற்று வெள்ளத்தில் என் ஒலித் துளிகள் சின்ன சின்ன மலர்களாக மிதந்து மிதந்து மௌனத்தில் மறைந்து கொண்டிருந்தன. நான் மேலும்மேலும்பாடிக் கொண்டே [ இல்லை கத்திக் கொண்டே] காற்றை எதிர்த்து நடந்து கொண்டிருந்தேன். சற்றே என் ஓசையை நிறுத்தி விட்டு மௌனத்தை உற்றுக் கேட்ட போது ஏதோ சதங்கை ஒலிகள்….. மெள்ளக் காதில் விழுந்தன. ஜன சஞ்சாரமற்ற அந்த பிரதேசத்தில் சதங்கை ஒலிகள் எனக்கு நிதானிக்க முடியாத புதிராக இருந்தன.
வெறும் வெட்டிப் பிரமைகளை மனதில் வளர்த்திக் கொண்டு பறப்பதில் எனக்கு விருப்பமில்லை. மலைக்குப் பின்புறம் காட்டு வெளியிலே ஏதோ மோகினிக் கூட்டமோ வன தேவதைகளோ காலில் சலங்கை கட்டிக் கொண்டு நடனம் பயின்று என்னை மயக்கி அழிக்க சதி செய்து கொண்டிருப்பதாக கற்பனை செய்து என்னை ஏமாற்றிக் கொள்ள எனக்கு விருப்பமில்லை. ஆனாலும் அவைகள் – அந்த சப்தங்கள் – சதங்கைகள் தான். நடை பயிலும் சின்னக் குழந்தைகளின் காலில் ஒன்றாகக் கட்டிக் குதிக்கவிட்ட மாதிரி இன்பஓசைகள் என்னைக் குழப்பதில் ஆழ்த்தின.
நான் மூச்சிரைக்க மேடேறி சப்தம் வந்த திக்கை நோக்கி விரைந்தேன்.அநேகமாக மலையின் உச்சியையே அடைந்து விட்டேன். ஓசைகள் கணீர் கணீரென்று இன்னும் தெளிவாக பலமாகக் கேட்டன. பாதை முடிந்து விட்டது . பாதை முடிந்து ஆளுயரப் பாறைகள் வழி அடைத்துக் கொண்டு விட்டன மலையின் மறு பக்கம் செங்குத்தாக கூர்மையாக சரிந்திருந்திருந்தது. பாறையின் மேல் மெள்ளக் கையூன்றி ஏறித் தலை தூக்கி மலையின் மறு பக்கம் எட்டிப் பார்த்தேன். மறு கணமே திக்கென்று அதிர்ச்சியுற்று தலையைப் பின்னுக்கு இழுத்துக் கொண்டேன். ஒரே கணத்தில் அந்தப் பள்ளத் தாக்கில் சுமார் நூறு பேர்களை ஒருங்கே கண்ணுற்ற போது மனம் வெலெவெலத்தது.
நூறு பேர்கள் – ஆதற்கு மேலுமிருக்கும். சில நிமிஷங்கள் என் கண்களையே நம்பமுடியவில்லை. ஜன சஞ்சாரமே அற்ற அந்த மலைப் பிரதேசத்தில் தனியாக வெகுதூரம் நடந்து விட்ட பிறகு அந்த திடீர் பள்ளத் தாக்கில் அவ்வளவு மனிதர்கள் எதிர்ப்பட்டது எனக்கு ஏதோ மாய உலகத்தை நினைவு படுத்தியது. ஆனால் சிலகணங்கள்தான். நன்றாக உற்றுப் பார்த்த போது அந்தக் கூலிகள் மடுவில் நின்று சம்மட்டிகளைக் கொண்டு பாறைகளைப் பிளந்து கொண்டிருப்பது தெரிந்தது. ஒரு இருநூறு கரங்கள் ஆயுதமேந்தி ஒய்வு உளைச்சலின்றி மலையை – மலைப் பாறைகளை மாறி மாறித் தாக்கிக் கொண்டிருந்தார்கள். ஏதோ கடிகார அசைவுகள் போல் அவர்கள் இயக்கம் சீரான வெறியுடன் இயங்கிக் கொண்டிருந்தது. அவர்கள் அடித்த அடியில் அங்கே என் மலைகள் துகள் துகளாகச் சிதைந்து கொண்டிருந்தன. மலைக்குப் பின் ஒளிந்து கொண்டு இத்தனைக் கூட்டங்கள் மாசக் கணக்காக வருஷக் கணக்காக மூர்க்கமாக மெள்ள மெள்ள மலையைக் குடைந்து கொண்டிருக்கிறார்கள். காசம் பற்றிய மார்க்கூடாக மலை முதுகு மெலிந்து திடமிழந்து இருள் செதிலாக மாறிக் கொண்டிருக்கும் விபரீதத்தைக் கண்டு என் கண்களில் நீர் துளிர்த்தது. இது சதி – மனித ஜாதியின் வழக்கமான பெரும் சதி—- நான் கேட்ட ஒலிகள் சலங்கை ஒலியல்ல..சம்மட்டி ஒலிகள். அடங்காப் பசியுள்ள மிருகங்களின் வெறித் தாக்குதகள்.
சூரியன் உச்சியை விட்டு சற்று இடப்புறமாக சரிந்து கொண்டிருந்தான்.
“பூ…ம் “ என்று திடீரென்று பள்ளத் தாக்கின் ஆழத்திலிருந்து நீண்ட சங்கொலி வெளியெங்கும் பரவியது.. நான் அமைதியற்றவனாக மீண்டும் பள்ளத் தாக்கை எட்டிப்பார்த்தேன். சிறு சிறு மனிதக் குஞ்சுகள் கலைத்து விட்ட எறும்புக் கூட்டங்கள் மாதிரி கலைந்து கொண்டிருந்தன. பிறகு கூடி ஒரு சாரியாக நகர ஆரம்பித்தன. அவர்களின் பேச்சொலிகளின் கடைசி எழுத்துக்கள் மட்டும் என் காதோரம் பட்டு நகர்ந்து போயின. பள்ளத்தை விட்டு அவர்கள் மெதுவாக ஒற்றைப் பாதையின் வழியாக மேலேறிக் கொண்டிருந்தார்கள் என் திசையை நோக்கித் தான் வந்து கொண்டிருந்தார்கள். அவர்களில் சிலர் பெண்கள்..அவர்களில் சிலர் குழந்தைகள் கூட…
மேலேறி நெருங்கி வர வர அவர்களின் பழுப்பான ஆடைகளும் பரட்டையாகக் காற்றில் அலையும் கேசங்களும் கருப்பு உடல்களும் தெளிவாகிக் கொண்டு வந்தன. தோளில் தொங்கிய சோற்றுக் கலயங்கள் கூடவே தலையாட்டிக் கொண்டு வந்தன.
அந்தக் கூட்டத்தில் முதலில் ஒரு கிழவன் ஆடி அலுத்து நடந்து வந்து கொண்டிருந்தான். நான் நின்று கொண்டிருந்த திசையை நோக்கி நெருங்கி வந்து மெதுவாக வந்து கொண்டிருந்தான். என்னைக் கடந்து சென்ற போது பல்லற்ற வாயை விரித்து என்னைப் பார்த்து சிரித்துக் கொண்டே பாதையின் மறு புறம் இறங்கினான் அவன் காய்ந்த வழுக்கைத் தலைக்கு மேல் சும்மாட்டில் ஒரு சின்ன மலைக் குஞ்சு உட்கார்ந்து கொண்டிருந்தது.
கிழவன் பின்னால் ஒரு இளம்பெண் நடந்து போனாள்..பிறகு ஒரு வாலிபன் நடந்து போனான் அவன் பின்னால் ஒரு சிறுவன். ஒவ்வொருவரும் ஒரு சின்ன “மலையைத் தோளிலோ தலையிலோ சுமந்து கொண்டு அரிசியேந்தும் எறும்புகளாக நகர்ந்து கொண்டிருந்தார்கள் கடைசியில் ஒரு குழந்தையுமொரு சின்னக் கல்லை சுமந்து கொண்டு கோவணத்தோடு பாதையின் சரிவிலிறங்கி ஓடியது.
எல்லோரும் போய் விட்டார்கள். அவர்கள் சென்ற திசையை சற்று நேரம் பார்த்தவாறு நின்றிருந்தேன். எந்த எதிர்ப்பையும் காட்டாமல் அதே பெருந்தன்மையுடன் நின்று கொண்டிருக்கும் அந்த மலையைப் பார்த்து பெருமூச்சு விடுவதைத் தவிர எதுவும் செய்ய முடியாதவனாக நின்றேன். மலையைத் திருடிப் பிழைக்கும் மனித ஜாதிகளுள் நானும் ஒருவன் தானே! இது உண்மை. எனக்கும் பசித்தது. இதுவும் உண்மைதான்.
நான் சாலையைக் கடந்து சிற்றுண்டி சாலையை நோக்கி நடந்தேன்.