மக்கள் மைய அமைப்புகள்
மெகா ஸ்டோர்களும், உலகளாவிய மளிகைக் கடைகளும் பொருளாதார ஊக்கத்துக்கு வழி என்று, இந்திய அரசைத் தற்போது ஆக்கிரமித்துள்ள ‘சுதந்திரச் சந்தை’ வாதிகள் தினம் செய்திகளைப் பொதுவெளியில் வீசி விடுக்கிறார்கள். அவை வெறும் கருத்துகளாக இருந்தால் அபாயம் குறைவு. அவை காரியங்களாக, அரசுடைய நடவடிக்கைகளாக, நம் பொருளாதாரத்திற்கு உலை வைக்கும் செயல்களாக இருக்கையில், நாம் ஏன் இப்படி எதையும் தாமதமாகவே கற்கிறோம் என்று யோசிக்க வேண்டி இருக்கிறது. உலகெங்கும் இன்று தோற்றுக் கொண்டிருக்கும் பொருளாதாரங்கள், தேங்கி நிற்கும் பொருளாதாரங்கள், இப்படி ராட்சத நிறுவனங்களை நம்பித் தம் மக்களை, சமூகங்களைக் கைவிட்டு விட்டு, இன்று அந்த நிறுவனங்களை ஆளும் சிறு கூட்டம், தன் நலனை மட்டும் பார்த்துக் கொண்டு, பரந்த மக்கள் சமுதாயங்களின் நலன்களைக் காற்றில் பறக்க விட்டு விட்டதைக் கவனிக்காது, மறுபடி அந்த நாடுகள் செய்த அதே தவறுகளைத் தாமும் செய்யத் துணிவதுதான் என்ன ஒரு மூடத்தனம்? இங்கே ஜெர்மனியோ, தன் தூரங்களில் ஆழ்ந்திருக்கும் சிற்றூர் வெளிகளில் பெருநிறுவனங்கள் அழிப்பை நடத்துகின்றன என்பதை உணர்ந்து, காலியாகி வரும் சிற்றூர்களில் மக்களை இடம் பெயர்ந்து போகாமல் அங்கேயே வாழும் வகையில் நிறுத்தி வைக்கவென, கிராமப்புறங்களும், சிற்றூர்களும் தொடர்ந்தியங்கும் வகையில் மறுபடி சமூக மையக் கடைகளை ஊக்குவிக்கத் துவங்கி இருக்கின்றது. இது ஏதோ ஜெர்மனியின் கிருஸ்தவ ஜனநாயகம் என்ற கருத்தியலை முன்வைக்கும் வலதுசாரி முதலிய மைய அரசால் ஊக்குவிக்கப்படும் நடவடிக்கை அல்ல. இது அம்மக்களே முனைந்து தம்மைக் காக்க எடுத்துள்ள நடவடிக்கை என்று தெரிகிறது. இந்திய மக்கள் தம் எதிர்காலத்தைப் பாதுகாக்க, தம் நலன்களின்பால் இத்தனை கவனமாக இருந்தால், பன்னாட்டுப் பெரு நிறுவனங்கள் இந்திய வர்த்தகத்தை ஒழித்து நம் சிற்றூர் வாழ்வை, கிராமப்புறங்களில் வாழும் மனிதர்களின் நலன்களை ஓரம் கட்டாமல் பார்த்துக் கொள்ள முடியும்.
காந்தியமோ, ஜே.ஸி.குமரப்பாவோ, சிறு நிறுவன, சிறு அமைப்பு மையப் பொருளாதாரமோ அப்படி ஒன்றும் பிற்போக்குவாதமல்ல. மக்கள் மைய அமைப்புகளே இறுதியில் வாழ்க்கையை வளமாக்கும் என்பதை ஜெர்மனியர் அறியத் துவங்கியுள்ளனர் என்பது கொஞ்சம் மகிழ்ச்சியூட்டும் செய்தியே.
http://www.spiegel.de/international/business/village-stores-experience-a-renaissance-in-germany-a-861859.html
அறிவியல் வழி கலை
கலைப் படைப்புகள் கற்பனையில் உருவாகின்றன என்றும் அறிவியல் கண்டுபிடிப்புகள் யதார்த்தத்தில் உருவாகின்றன என்றும் நாம் நம்புகிறோம். கலைத்துறையில் செய்யப்படும் பரிசோதனை முயற்சிகள் புதிய புனைவு வடிவங்களை உருவாக்குகின்றன, அறிவியல் துறையில் மேற்கொள்ளப்படும் பரிசோதனைகள் பழைய பிழைபுரிதல்களைக் களைந்து புதிய உண்மைகளை வெளிப்படுத்துகின்றன. இவை இரண்டுக்கும் இடையே ஒரு பெரிய இடைவெளி இருப்பதாக நாம் நினைக்கிறோம். ஆக, அறிவியல் வேறு, கலை வேறு என்று நாம் எங்கே எப்படி பிரித்தாலும், கவனமாக யோசித்தால் இரண்டிலுமே புலன்களுக்கு அப்பாற்பட்ட விஷயங்களைப் பற்றிய சிந்தனைக்கும் கற்பனைக்கும் இடமிருக்கிறது என்பதை நாம் அறியலாம். அந்தக் கற்பனையே மானுட சமுதாயத்தை அடுத்தடுத்த காலகட்டங்களுக்கு உகந்ததாக ஆக்குகிறது.
இந்த அதிசய உலகின் புதிர்களே அறிவியலுக்கும் கலைக்கும் பேசுபொருளாகின்றன. அறிவியல் அளிக்கும் விளக்கங்களை முழுமையாக்கி, அவற்றைத் திருத்தி விரித்து உணர்த்தும் தன்மை கொண்ட ஆய்வு வடிவமாகவும் கலை இருக்க முடியும் என்கிறார் ஜோவோ ரிபாஸ். இவர் அமெரிக்காவின் மாஸசூஸட்ஸ் மாநிலத்தில் உள்ள கேம்ப்ரிஜ் நகரில் இருக்கும் எம்.ஐ.டி லிஸ்ட் காட்சிக்கலை மையத்தில் தற்போது அமைக்கப்பட்டுள்ள ‘தி ஹோலோசீன்’ கலைக்கண்காட்சியின் பொறுப்பாளர் . விவரங்களுக்கு இங்கே பாருங்கள்.
http://www.newscientist.com/blogs/culturelab/2012/10/beyond-the-boundaries-of-science.html
நிஜமாகும் அறிவியல் புதினங்கள்
கடந்த நூற்றாண்டில் விஞ்ஞானம் கடந்திருக்கும் பாதை அதற்கு முற்பட்ட நூற்றாண்டுகளில் வினோத கற்பனை என்று நினைக்கப்பட்ட பலவற்றையும் அன்றாட உபயோகக் கருவிகளாய் மாற்றிவிட்டது. இத்தகைய கற்பனைக் கனவுகளைக் கண்டவர்கள் விஞ்ஞானிகள் மட்டுமே அல்ல. எழுத்தாளர்களும் கலைஞர்களும் தம் படைப்புகளில் இத்தகைய பல முன்னேற்றங்களுக்கு முன்னோடியான சிந்தனைகளை கற்பனை செய்திருக்கிறார்கள் உதாரணமாய் எச் ஜி வெல்ஸ் என்ற ஆங்கில எழுத்தாளரின் அறிவியல் புதினங்களில் கற்பனையாய் விவரிக்கப்பட்ட ராக்கெட், அணு சக்தி போன்றவை இன்றைய நிஜங்கள். ஸப்மரீனைக் கண்டுபிடித்த ஸைமன் லேக் என்பவரோ, தான் இதை உருவாக்க ஈர்க்கப்பட்டதற்குக் காரணம் ஜூல்ஸ் வெர்ன் எழுதிய 20 தௌஸண்ட் லீக்ஸ் அண்டெர் த ஸீ என்ற புத்தகம் தூண்டிய ஆர்வம்தான் என்றார். ஹெலிகாப்டரை வடிவமைத்த ஐகோர் ஸிகோர்ஸ்கியும் இதே எழுத்தாளரின் இன்னொரு புதினமாகிய க்லிப்பர் ஆஃப் தெ க்லௌட்ஸ் என்ற நூலைச் சிறு வயதில் படித்ததுதான் தனக்கு உந்துசக்தியாய் இருந்தது என்று சொல்கிறார். இவர் அடிக்கடி சொல்வது வெர்னின் புத்தகத்தில் வரும் ஒரு வாக்கியம்: ‘ஒரு மனிதனின் கற்பனையில் தோன்றும் எதையும் இன்னொரு மனிதனால் நிஜமாக்க முடியும்.’
இவ்வகையில் அறிவியல் புதினங்களில், கற்பனையில் உதித்து பின்னால் 10 அறிவியல் கண்டுபிடிப்புகளானவை:
http://www.smithsonianmag.com/science-nature/Ten-Inventions-Inspired-by-Science-Fiction.html?c=y&page=1&navigation=previous#IMAGES
சவுதியில் தொழிலாளர்கள் – ஒரு ரகசியத் திரைப்படம்
இஸ்லாமிய மதத்தில் விதிக்கப்பட்டுள்ள நெறிக்கு எதிரானது என்று 1970லிருந்து சவுதி அரேபியாவில் சினிமா தயாரிப்பும், திரைக் காட்சிகளும் தடைசெய்யப்பட்டுள்ளன. 2006 ல் ஜெட்டாவில் நடந்த திரைப்பட விழாவின்போதும் திரைப்படங்கள் தூதரகங்களில் பணி புரிபவர்களுக்கு மட்டுமே அனுமதிக்கப்பட்டன. 2009ல் சினிமாவுக்கு எதிரான மதக் கட்டளை (ஃபத்வா) அறிவிக்கப்பட்டதால் திரை அரங்குகள் கட்டுவதும் தடை செய்யப்பட்டது.
இத்தகைய சூழலில் ஒரு மாதத்துக்கு முன், தேர்ந்தெடுத்த சுமார் 60 பார்வையாளர்களுக்கு செல்ஃபோன் மூலம் தகவல் பரப்பி, ரகசியமான ஒரு இடத்தில் ரெட் வேக்ஸ் ரகசிய சினிமா என்ற குழு தயாரித்த ஒரு படம் அபா என்ற நகரத்தில் திரையிடப்பட்டுள்ளது. (ரெட் வேக்ஸ் என்பது சவுதி அரசாங்கம் தடை செய்யும் ஆணைகளின் மீது அடிக்கும் சிகப்பு வண்ண மெழுகைக் குறிக்கும்.) சவுதியில் ஒரு பெரிய கட்டுமானத்தில் வேலை செய்ய வந்திருக்கும் புலம் பெயர்ந்த வேலையாட்களின் நிலை பற்றியது இந்தப்படம். இஸ்லாமிய நீதிமுறையில் செயல்படும் சவுதி அரேபியாவில் இத்தகைய மீறல்களுக்கு கடும் தண்டனை உள்ள நிலையில் இது மிக தைரியமான ஒரு நடவடிக்கை. திரைப்படங்கள் இஸ்லாமிய வழிமுறைக்கு எதிரானவை அல்ல என்கிறார்கள் இதன் தயாரிப்பாளர்கள்.
கருத்துக் கட்டுப்பாடு (சென்ஸார்ஷிப்) கடுமையாய் உள்ள இரான் போன்ற நாடுகளிலும் இரானியத் தயாரிப்பாளர்கள் வேறு நாடுகளில் திரைப்படங்களை உருவாக்கி உலக அரங்கில் அவை காட்டப்படுவது பல வருடங்களாய் நடந்து வருகிறது. சமுதாய, அரசியல் மற்றும் கருத்து மாற்றங்களுக்கு ஒரு கருவியாய் தயாரிக்கப்படும் இத்தகைய திரைப்படங்கள் உலகப்பட விழாக்களில் பெரிதும் விவாதிக்கப்படுகின்றன. இரானியர்களுக்கு இவற்றின் தகவல் கூடக் கிட்டுவது அரிது. மாறாகச் சில இயக்குநர்கள் நீண்ட காலச் சிறைத் தண்டனையில் வாடுவதே சகஜம். அல்லது நாடு கடந்து ஓடித்தான் வாழ வேண்டி இருக்கிறதாம்.
http://www.guardian.co.uk/world/2012/oct/15/saudi-secret-cinema-red-wax