பெட்டிக்கடை நாரணன்

தமிழ்க் கவிதையுலகில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்திய இக்கவிதை 1959-ஆம் ஆண்டு சி.சு.செல்லப்பாவின் ‘எழுத்து’ பத்திரிகையில் வெளியாகியது. இதைக் குறித்து சென்ற இதழில் வெளியாகியிருந்த கட்டுரையில் திரு.வெங்கட் சாமிநாதன் “ ந.பிச்சமூர்த்தியின் ”பெட்டிக்கடை நாரணன்” என்ற கவிதை எப்போதோ நாற்பதுகளில் வெளியாகி மறக்கப்பட்ட கவிதை திரும்பப் பிரசுரமானது. நாற்பதுகளில் எந்த விளைவையும் ஏற்படுத்தாத அந்தக் கவிதை, எழுத்து பத்திரிகையில் (1959) – இல் பிரசுரமானதும் உடனே அடுத்த எழுத்து இதழ்களில் பசுவய்யா, தி.சொ வேணுகோபாலன், க.நா.சு. (அவரது மிகச் சிறந்த கவிதையான தரிசனம்) என ஏதோ இதற்காகவே காத்துக் கொண்டிருந்தது போல ஒரு கவிஞர் கூட்டமே பிச்சமூர்த்தியின் கவிதை தந்த ஆதர்சத்தில் கவிதைகள் எழுத ஆரம்பித்தனர்.” என்று சொல்கிறார்.

pichchamoorthy

தான்சாக மருந்துண்ட
தவசிகளைக் கண்டதுண்டோ?
ஊண்சாக,
உயிர் இருக்க
உலவுபவர் சித்தரன்றோ?
நான் யாரு?
சித்தனா தவசியா?
பிழைக்கச் சொத்தெதுவும்
பாட்டனோ வைக்கவில்லை.
அழைத்து வித்தை ஏதும்
அப்பனோ வைக்கவில்லை.
இதற்காக
ஆண்டவன் கொடுத்த மூளை
அடுப்படிப் பூனையாமா?

நீண்ட விழியாள் துணையால்
குங்குமத்தைத் தண்ணீரோடு
குலுக்கிக் கலர்கள் செய்தேன்.
தங்காமல் உப்பைப் போட்டு
தனியான சோடா செய்தேன்.
ஏழைக் கென்றிரங்கி
எளிதான விலையில் விற்க
கருவாடு போன்ற வாழைப்
பழங்களும்,
புகையிலைக் காம்பும்
பீர்க்கன் இலையைப் பழிக்கும்
வெற்றிலையும், வெட்டுப்பாக்கும்,
சின்னப்பயல்களுக்கென்று
பலூனும்,
பெப்பர்மெண்டும்,
பெரியவர்களுக்கென்று
நெய்ப்பொடியும்,
லேகா மருந்தும்
வகையாகச் சேர்த்துவைத்தேன்.

நாரணன் பெட்டிக்கடையின்
நாமமே பரவலாச்சு.
இன்று கடன் இல்லை என்ற
எச்சரிக்கை எதிரே இருக்கும்
என் பேச்சு தேனாய்ச்சொட்டும்
குழைவிலே வாங்குவோர்கள்
வண்டாகி, பின்னர்
வாடிக்கைக்காரர் ஆக
ஆண்டிரண்டோடும் முன்னே
தத்வங்கள் பொய்க்கக்கண்டேன்.
பல தத்வங்கள் கவிழக்கண்டேன்
உயிரற்ற ஜடத்தில் பெருக்கம்
உண்டாகதென்ற கொள்கை
பொய்ப்பதை நானே கண்டேன்.

இருபது ரூபாய் முதலே
இருநூறாக மாறி
ஏற்றம் எனக்களிக்க
உருமாலை வாங்கிக்கொண்டேன்
ஓராளென ஆகிவிட்டேன்.
உருமாலை நாராயணனாய்
உருமாறி உயர்ந்தபின்னர்
அகமடியர் தெருவில் சின்ன
அங்கையற்கண்ணி மளிகைக்
கடையொன்று வைத்துவிட்டேன்.
சம்பளத்தை அள்ளிவீசச்
சுரங்கம் சுரக்கவில்லை
தோதாகப் பொடிப்பையன்கள்
சம்பளமில்லாதுழைக்க,
தொழிலிலே தேர்ச்சிகொள்ள,
முன்வந்து தொங்கவில்லை,
எனவே,

கோழியுடன் எழுந்திருந்து
கோட்டானுடனே துயிலும்
கோலமே வாழ்க்கை ஆச்சு
சரக்கோ கொஞ்சம்.
எட்டுமணி நேரம்
தட்டாது விற்றால்
தட்டில் மிச்சம்
தங்கி இருக்குமா?

இப்படிக்கிருக்க
எலிவேறு இரவில்
இராஜ்யம் வகித்தால்
என் உருமாலை மட்டும்
கிழியாமல் போகுமா?
போனாலும்
நீண்ட விழியாளின் அருள்
நீங்கவில்லை,
முதலுக்கும் மோசம்
மருந்துக்கும் காணோம்.

மண்ணெண்ணை பங்கீடு
வந்தது அருளால்
மண்ணெண்ணை வர்ணம்
இரண்டுதான் என்றாலும்,
மஞ்சளும் வெளுப்பும்
என்றாலும் பலபேர்கள்
கறுப்பென்று கதறினர்.
தம்படி நாணயம்
இல்லாமல் போனதும்
முதலுக்கு மோசம்
அணுகாத வேலியாய்,
உயிருள்ள அரணாய்
உவந்திட முளைத்தது
அங்கயற்கண்ணி
அடிகளே சரணம்!

தம்பிடி மிச்சத்தைக்
கேட்பவரில்லை,
சில்லரைப் போருக்கு
வருவோரும் இல்லை;
அங்கயற்கண்ணியின்
அலையோடும் அருளால்
எண்ணைக்குப் பின்னர்
அரிசிக்கும் பங்கீடு
தானாகத் தங்கம்
தடத்தில் கிடைத்தால்
ஓடென்றொதுக்க நான்
பட்டினத்தாரா?

மீன்கொத்தி ஒன்று
உள்ளே இருந்தால்
பங்கீட்டுக்கடை ஒன்று
பட்டென்று வைத்தேன்;
பணக்காரன் ஆனேன்.
பங்கீட்டுக் கடைகளால்
பணக்காரர் ஆனதால்
பாவம் என்றேதேதோ
பேப்பரில் வந்தது.
பாவமொன் றில்லாவிட்டால்
பாருண்டா?
பசியுண்டா?
மண்ணில் பிறப்பதற்கு
நெல் ஒப்பும்போது
களிமண்ணில் கலந்திருக்கு
அரிசி மறுப்பதில்லை.

நக்ஷத்திரம் போல,
நல்முத்துப் போல,
சுத்தமாக அரிசி விற்க,
பங்கீட்டுக்கடை என்ன
சல்லடையா?
முறமா?
நெல்மிஷினா?
பலகைக்காரியா?
மூட்டையைப் பிரிக்கு முன்னர்
முந்நூறு பேரிருந்தால்
சலிப்பதெங்கே?
புடைப்ப தெங்கே?
புண்ணியம் செய்யத்தான்
பொழுது எங்கே?
அங்கயற்கண்ணியின்
அருளென்ன சொல்வேன்
பங்கீடு வாழ்க!
பாழ்வயிறும் வாழ்க!

(பங்கீட்டுமுறை அமுலில் இருந்தபோது எழுதப்பட்ட கவிதை)