கிருஸ்த்மஸுக்குப் பிறகு மூன்றாவது நாள்

courtesy : http://www.danhaskett.co.uk/weekly

டானல்ட் ஈஃபா, ஆறுவயது முடிந்து மூன்று மாதங்களான பையன், மூன்றாம் அவென்யுவும் 37ஆவது தெருவும் சந்திக்கும் தெரு முனையில் நின்று கொண்டிருந்தான், கோபமாக இருந்த அவனுடைய அப்பா ஹாரி, ஒரு மணி நேரத்துக்கு முந்தி, ஒரு நிமிஷம் அங்கே காத்திருக்கச் சொல்லி விட்டு, உடம்பு சரியில்லாமல் இருமிக் கொண்டும், அழுது கொண்டும் படுக்கையில் படுத்திருந்த ஆலிஸுக்கு ஏதோ வாங்குவதற்காக அந்தக் கடைக்குள் நுழைந்திருந்தார். ஆலிஸுக்கு மூன்று வயதாயிற்று, அவள் இரவு பூரா எல்லாரையும் தூங்கவிடாமல் செய்திருந்தாள். டானல்டின் கோபம் கொண்ட அப்பா ஹாரி அந்த சத்தத்தைக் கொஞ்சமும் விரும்பவில்லை, அம்மாவைத்தான் இதற்குக் குறை சொன்னார். அம்மாவின் பெயர் மேபெல். ‘ஹாரி ஈஃபாவை மணக்குமுன் நான் மேபெல் லூயிஸா அட்கின்ஸ் ஃபெர்னாண்டஸாக இருந்தேன்,” சமையலறையில் இருந்த உடைந்த ஜன்னலைச் சீர் செய்ய வந்த ஒரு ஆளிடம் அவனுடைய அம்மா சொன்னதை அந்தப் பையன் கேட்டிருந்தான். “என் புருசன் பகுதி-இந்தியன் அவர் அம்மா வழியில், நானும் பகுதி-இந்தியன் என் அப்பா வழியில். ஃபெர்னாண்டஸுங்கிறது ஸ்பானிஷோ, மெக்ஸிகனோ, ஆனாக்க இந்தியன் இல்லை, ஆனால் என் அப்பாவும் பகுதி இந்தியனாகத்தான் இருந்தார், எப்படியுமே. நாங்க எப்பவுமே அவங்க மத்தியிலே இருந்ததில்லெ, பார்த்துக்குங்க, பகுதி இந்தியர்கள் பலபேர் அப்படிப் போய் வாழறாங்க இல்லியா, அதுமாதிரி செய்யல்லெ.  நாங்க எப்பவுமே நகரங்களிலேதான் இருந்திருக்கோம்.”

பையன் ஓவரால் அணிந்திருந்தான். அவனுடைய அப்பாவுடைய கட்டம் போட்ட மேல் அங்கி (கோட்) ஒன்றையும் போட்டிருந்தான்.  அவன் அப்பா வளர்ந்து அந்தக் கோட்டைப் போட முடியாமல் போன பின்பு இவனுக்கு வந்திருக்க வேண்டும், அது மட்டும் சரியாகப் பொருந்தினால் இவனுக்கு நல்ல மேல் கோட்டாக இருந்திருக்கும். அதன் கைகள் பையனுக்காக வெட்டப்பட்டிருந்தன, ஆனால் வேறேதும் செய்யப்படவில்லை. பைகளெல்லாம் அவனுக்கு எட்டாத தொலைவில் இருந்தன, அதனால் பையன் கைகளைத் தேய்த்துக் கொண்டுதான் அவற்றைச் சூடுபடுத்திக் கொண்டான். காலை பதினோரு மணி ஆகியிருந்தது இதற்குள்.

டானல்டின் அப்பா அந்த இடத்துக்குள் போயிருந்தார், சீக்கிரமே அவர் வெளியே வந்து விடுவார், அவர்கள் வீட்டுக்கு நடந்து போவார்கள்,  கொண்டு வந்ததில் கொஞ்சத்தை அம்மா ஆலிஸுக்குக் கொடுப்பாள்- பாலும், மருந்தும்- அவள் அழுவதையும் இருமுவதையும் நிறுத்துவாள், அம்மாவும் அப்பாவும் சண்டை போடுவதை நிறுத்துவார்கள்.

அது ஹாகர்டியின் கடை. தெரு மூலையில் அதன் நுழைவாயில் இருந்தது. இன்னொரு வாயில் பக்கத்து வாட்டுத் தெருவிலிருந்தது. ஹாரி ஈஃபா கடைக்குள் நுழைந்து ஐந்து நிமிடங்களில், 37ஆவது தெருவிலிருந்த மற்ற வாயில் வழியே வெளியே போயிருந்தான். அவன் தன் பையன் தெருமுனையில் நிற்பதை மறக்கவில்லை, அவனிடமிருந்து கொஞ்ச நேரம் விடுபட்டுப் போயிருக்கத்தான் விரும்பினான், மற்றவர்களிடமிருந்தும் விடுபட்டு இருக்க விரும்பினான்.  அவன் ஒரே ஒரு வாய் ரை மதுவை, அதுவே என்ன விலை, குடித்திருந்தான், அவ்வளவுதான். அது கால் டாலர் ஆகி விட்டிருந்தது, ஒரு சின்ன வாய் ரை மதுவுக்கு அது ரொம்பவே விலையதிகம். அந்த மதுவை ஒரே வாயில் விழுங்கி விட்டு, அந்த இடத்தை விட்டு அவசரமாக வெளியேறி, நடந்து போய் விட்டான், கொஞ்ச நேரம் கழித்துத் திரும்பி வந்து அந்தப் பையனை அழைத்துக் கொண்டு, சாப்பாட்டு சாமான்களையும், மருந்தையும் வாங்கிக் கொண்டு வீட்டுக்குப் போய், அந்தப் பெண்ணின் வியாதிக்கு ஏதும் செய்ய முடியுமா என்று பார்க்கத் திட்டமிட்டிருந்தான், ஆனால் எதனாலோ தெரியவில்லை, அவன் நடந்து போய்க் கொண்டே இருந்து விட்டான்.

கடைசியில் டானல்ட் அந்த இடத்துக்குள் நுழைந்தான், அவன் இது வரை பார்த்த எந்தக் கடையையும் போல அது இல்லை என்று அறிந்தான். வெள்ளை மேலங்கி அணிந்த ஒரு மனிதன் இவனைப் பார்த்தான், சொன்னான், “நீ இங்கே வரக்கூடாது. வீட்டைப் பார்க்கப் போ.”

“என் அப்பா எங்கே?”

”இந்தப் பையனோட அப்பா இங்கே இருக்காரா?” அந்த மனிதன் உரக்கக் குரல் கொடுத்தான், அங்கே இருந்த எல்லாரும், ஏழு பேர், திரும்பி டானல்டைப் பார்த்தனர். ஒரு கணம்தான் பார்த்தனர், உடனே தங்கள் பானத்தைப் பார்க்கத் திரும்பிக் கொண்டனர், பேச்சைத் தொடர்ந்தனர்.

“உன் அப்பா இங்கே இல்லை,” அந்த மனிதன் சொன்னான், “ அது யாராக இருந்தாலும்.”

“ஹாரி,” டானல்ட் சொன்னான். “ஹாரி ஈஃபா.”

“ எனக்கு ஹாரி ஈஃபான்னு யாரையும் தெரியாது. இப்ப நீ வீட்டைப் பார்க்கப் போ.”

“அவர் என்னை வெளியிலே ஒரு நிமிஷம் இருன்னு சொன்னாரே.”

“ஆமாம், அது எனக்குத் தெரியறது. அதென்ன, இங்க நிறைய ஆட்கள் ஒரு வாய் குடிக்க வந்து விட்டுப் போய் விடுகிறார்கள். அதைத்தான் அவரும் செய்திருப்பார்னு நான் நெனக்கிறேன். அவர் உன்னை வெளியிலே காத்திருக்கச் சொன்னால், நீ அதைச் செய்யறதுதான் நல்லது. நீ இங்கே காத்திருக்க முடியாது.”

”வெளியில ஒரே குளிரா இருக்கே.”

“ வெளியில குளிரா இருக்குன்னு எனக்குத் தெரியும்,” அந்த பாரைக் கவனிக்கிற அவன் சொன்னான். “ஆனாக்க நீ இங்கே இருக்க முடியாது. உங்க அப்பா சொன்னபடி வெளில காத்திரு, இல்லே வீட்டுக்குப் போ.”

“எனக்கு எப்படின்னு தெரியாதே,” அந்தப் பையன் சொன்னான்.

“உனக்கு வீட்டு முகவரி தெரியுமா?”

அந்தப் பையனுக்கு அந்தக் கேள்வியே புரியவில்லை என்பது தெளிவாகவே, பாரைக் கவனிப்பவன் வேறு விதமாக அந்தக் கேள்வியைக் கேட்டுப் பார்த்தான்.

“உன்னோட வீட்டு எண்ணும், தெருவோட பெயரும் தெரியுமா?”

“இல்லை. நாங்க நடந்து வந்தோம். ஆலிஸுக்கு மருந்து வாங்க வந்தோம்.”

“அது எனக்குத் தெரியறது,” அந்த பார்க்காரன் பொறுமையாகச் சொன்னான். “எனக்கு வெளியில் குளிராக இருக்கிறதுங்கிறதும் தெரியும், ஆனால் நீ இங்கே இருந்து வெளில போய்த்தான் தீரணும். சின்னப் பையன்கள் இந்த இடத்துக்குள்ள வர்றதை என்னால அனுமதிக்க முடியாது.”

அறுபது வயதுக்காரன் போல இருக்கிற, நோயாளி போலத் தோற்றமளித்த ஒரு நபர், நிறையவே போதை மயக்கத்திலிருந்தவன், பாதி செத்தாற்போல இருந்தவன், தன்னுடைய மேஜையிலிருந்து எழுந்து பாரைக் கவனிக்கிறவனிடம் நெருங்கினான்.

“இந்தப் பையனுக்கு வழி தெரியும்னாக்க, நான் இந்தப் பையனை அவன் வீட்டுக்குக் கொண்டு விடுவதற்குத் தயார்.”

”போய் உக்காருய்யா,” பார்க்காரன் சொன்னான். “பையனுக்கு வழி தெரியாது.”

“ஒருவேளை அவனுக்குத் தெரியுமோ என்னவோ,” அந்த நபர் சொன்னான். “எனக்குமே குழந்தைகளெல்லாம் இருந்தாங்க, தெருவில நிக்கறது ஒரு சின்னப் பயலுக்கு நல்லதில்ல. அவனை வீட்டுக்குக் கொண்டு போய் அவன் அம்மாவிடம் விடத்தான் நான் விரும்பறேன்.”

“எனக்குத் தெரியறது,” பார்க்காரன் சொன்னான். “ ஆனாக்க போய் சும்மா உக்காரு.”

“மகனே, நான் உன்னை வீட்டுக்குக் கொண்டு போய் விடறேன்,” அந்தக் கிழவன் சொன்னான்.

“உக்காருன்னு சொன்னேன்ல,”பார்க்காரன் கிட்டத் தட்ட கத்தினான், கிழவன் ஆச்சரியத்தோடு திரும்பிப் பார்த்தான்.

“நீ என்னை என்னன்னு நெனச்சுகிட்டிருக்கே, இல்ல கேக்கிறேன்?” என்று மென்மையாகக் கேட்டான். “பையன் பயந்து இருக்கான், குளிரா வேற இருக்கு, அவனுடைய அம்மா அவனுக்கு வேணும்.”

“தயவு செய்து போய் உக்கார்றியா?” அந்த பார்க்காரன் சொன்னான். “ எனக்கு இந்தப் பையனைப் பத்தி எல்லாம் தெரியும். அவனுடைய அம்மா கிட்டே வீட்டிலெ கொண்டு விடறத்துக்கு ஏத்த ஆசாமி நீயில்லெங்கிறதும் தெரியும்.”

“யாராவது அவனை வீட்டிலெ அவன் அம்மாகிட்டே கொண்டு போய் விடணும்தானே?” அந்தக் கிழவன் மெதுவாகச் சொன்னான். பின் ஏப்பம் விட்டான். ஒரு மாதிரி நொய்ந்து போய், திட்டுத் திட்டாக உப்பியிருந்த ஒரு ஆடை அணிந்திருந்தான். அதை ஒரு கருணை அமைப்பு அவனுக்கு தானமாகக் கொடுத்திருந்தது அந்த பார்க்காரனுக்குத் தெரியும். அந்த மனிதனிடம் இன்னொரு முப்பது அல்லது நாற்பது செண்ட்கள் ஒரு பியருக்குக் கொடுக்க இருந்திருக்கலாம். அதுவுமே அனேகமாக ஏதோ பிச்சை எடுத்துதான் அவனுக்குக் கிட்டியிருக்கும்.

“கிருஸ்த்மஸ் ஆகி மூன்றாம் நாள் இன்னிக்கி,” அந்தக் கிழவன் மேலும் பேசினான். “கிருஸ்த்மஸ் ஆகி அத்தனை நாட்கள் கூட ஆகி விடவில்லை, அதுக்குள்ளேயே ஒரு சின்னைப் பையன் வீட்டுக்குப் போக உதவ மறுக்கிற அளவுக்கு நமக்கு அது மறந்து போய் விட எந்த நியாயமும் இல்லை.”

”அங்கே என்ன நடக்குதுப்பா?” தன்னுடைய நாற்காலியிலிருந்தபடி இன்னொரு வாடிக்கையாளர் கேட்டார்.

“ஒண்ணுமில்லீங்க,” பார்க்காரன் சொன்னான். “இந்தப் பையனோட அப்பா அவனை வெளியில் காத்திருக்கச் சொல்லி இருக்கிறார், அவ்வளவுதான்.” அந்தப் பார்க்காரன் டானல்ட் ஈஃபாவைப் பார்க்கத் திரும்பினான். “உனக்கு வீட்டுக்குப் போக வழி தெரியாதுன்னா, உன் அப்பா சொன்ன மாதிரி வெளியில காத்துக்கிட்டிரு, சீக்கிரமே அவர் திரும்புவார், உன்னை வீட்டுக்கு அழச்சுகிட்டுப் போவாரு. இப்ப நீ வெளியில போய் நில்லு பாப்பம்.”

பையன் அந்த இடத்தை விட்டுப் போனான், முன்னால் ஒரு மணி நேரத்துக்கு மேலாக எங்கே நின்றானோ, அங்கேயே போய் நின்றான். அந்தக் கிழவன், பையன் பின்னாலே போகத் துவங்கினான். பார்க்காரன் நின்றவிடத்திலிருந்து தன் முன்னாலிருந்த அந்த மேஜையிலிருந்து ஒரு வீச்சில் வெளியே வந்தான், வீசித் திறந்து கொண்டிருக்கும் வாயில் கதவுகளருகே அந்தக் கிழவனைத் தோளைப் பிடித்து நிறுத்தினான், திருப்பினான், அவனுடைய நாற்காலியைப் பார்க்க அவனை நடத்திப் போனான்.

”இப்ப நீ உக்காரு,” அவன் மென்மையாகச் சொன்னான். “அந்தப் பையனைப் பத்திக் கவலைப்பட நீ ஆளில்லெ. உன்னுடைய கவலையை உன்னோட வச்சுக்க. அவனுக்கு ஏதும் ஆகிடாம நான் பாத்துக்கிறென்.”

“நீ என்னெப் பத்தி என்ன நெனச்சுகிட்டிருக்கிறே, கேக்கறேன்லெ சொல்லு?” என்று மறுபடியும் சொன்னான் அந்தக் கிழவன்.

திறந்து மூடி ஆடும் கதவுகளருகே நின்று தெருவை மேலும் கீழும் பார்த்த பார்க்காரன், குள்ளமான, கனமான ஐரிஷ்காரன், தன் 50களில் இருப்பவன், திரும்பினான், அப்புறம் சொன்னான்,”சமீபத்துல எப்பவாவது கண்ணாடியில உன்னெப் பாத்துகிட்டிருக்கியா? ஒரு சின்னப் பையன் கையைப் பிடிச்சுகிட்டு அடுத்த தெரு மூலை வரை கூடப் போக முடியாது உன்னாலெ.”

”ஏன் முடியாதாம்?” கிழவன் கேட்டான்.

“ஏன்னாக்க, பாக்கிறத்துக்கு ஒரு சின்னப் பையனோட அப்பா மாதிரியோ, தாத்தா போலவோ, ஒரு நண்பன் போலவோ, இல்லை வேறு யாரைப் போலவோ நீ இல்லை.”

”எனக்கும் குழந்தைகள் எல்லாம் இருந்திருக்காங்க,” கிழவன் ஒலி தேய்ந்த குரலில் சொன்னான்.

“எனக்குத் தெரியும்,” பார்க்காரன் சொன்னான். “ஆனால் பேசாம உக்காரு. சில பேர் குழந்தைகளிடம் அன்பாக இருக்க அனுமதிக்கப்படுவாங்க, வேற சிலருக்கு  அந்தக் கொடுப்பினை இல்லை, அவ்வளவுதான்.”

அவன் ஒரு பாட்டில் பியரை எடுத்துக் கிழவனின் மேஜைக்கு எடுத்துப் போய், அவனுடைய காலி கிளாஸ் அருகே வைத்தான்.

“இந்தா, ஒரு பாட்டில் பியர் நான் கொடுத்ததா வச்சுக்க,” அவன் சொன்னான். “உன்னெ மாதிரி வயசானவங்க கிட்டெ பரிவா இருக்க எனக்கு எப்பவோ ஒரு தடவை அனுமதிக்கப்படறது, நீயும் பாரை நடத்துகிறவங்க கிட்டெ எப்பவாவது ஒரு தடவை பரிவா இருக்கிறது அனுமதிக்கப்படறது, ஆனாக்க அப்பா எங்கெயோ அக்கம்பக்கத்திலெ போயிருக்கிற சின்னப் பையன் கிட்டே அன்பா இருக்க உனக்கு அனுமதி இல்லைன்னுதான் வச்சுக்கணும். சும்மா அமைதியா இருந்துக்கிடு, பியரெக் குடி.”

”எனக்கு உன்னோட குப்பை பியர் ஒண்ணும் வேண்டாம்,” கிழவன் சொன்னான். “உன்னோட குப்பை சலூன்ல என்னை நீ ஒரு கைதியா வைக்க முடியாது.”

“அந்தப் பையனோட அப்பா வர்ற வரைக்கும் சும்மா பேசாம உக்காந்திரு, அவர் வந்து அவனை வீட்டுக்கு அழச்சிட்டுப் போனப்புறம் இங்கெருந்து எத்தனை வேகமா உன்னாலெ பிச்சுக்கிட்டுப் போக முடியுமோ அத்தனை வேகமாப் போயிடலாம்.”

“எனக்கு இங்கேருந்து இப்பவே போகணும்,” கிழவன் சொன்னான். “இந்த உலகத்தில யார் கிட்டெருந்தும் அவமரியாதை எதையும் நான் வாங்கிக் கட்டிக்கத் தேவை இல்லை. நா யாருங்கிறதைப் பத்திக் கொஞ்சம் சொன்னேன்னா, நீ இப்படி எங்கிட்டெ பேசமாட்டேங்கிறது எனக்குத் தெரியும்.”

“சரிய்யா,” பார்க்காரன் சொன்னான். விஷயம் கை மீறிப் போகாமல் பார்த்துக் கொள்ளவே அவன் விரும்பினான், அவனுக்கு அங்கு ஏதும் தகராறு ஏற்படுவதில் விருப்பமில்லை, அந்தக் கிழவனைக் கொஞ்சம் பேச விட்டால், அந்தப் பையனுக்கு உதவுவதிலிருந்து அவன் கவனத்தைத் திருப்பி விடலாம் என்று நினைத்தான். “நீ யாருன்னு கொஞ்சம் சொல்லு பார்ப்போம், அப்புறம் ஒரு வேளை நான் உங்கிட்டெ இத்தனெ நேரம் பேசின மாதிரி எல்லாம் பேச மாட்டேனோ என்னவோ.”

”நிச்சயமா மாட்டேன்னுதான் சொல்வேன்,” கிழவன் சொன்னான்.

பார்க்காரன் அந்தக் கிழவன் பியரைப் பாட்டிலில் இருந்து எடுத்துத் தன் கிளாஸில் ஊற்றத் தொடங்கியதைப் பார்த்து திருப்தியானான். கிளாஸிலிருந்து மூன்றில் ஒரு பகுதியைக் கிழவன் அருந்தியதைப் பார்த்துக் கொண்டிருந்தான், கிழவன் அப்போது சொன்னான், “என் பேரு அல்கெய்லர், ஆமாம் தெரிஞ்சுக்க.”

அவன் இன்னும் கொஞ்சம் பியரைக் குடித்தான், பார்க்காரன் அவன் மேலே பேசுவதற்காகக் காத்திருந்தான். இப்போது பார் மேஜையின் ஒரு கோடி அருகே அவன் நின்றிருந்தான், தெருவில் நிற்கிற பையன் மீது ஒரு கண் வைத்திருக்க ஏதுவாய். அந்தப் பையன் தன் கைகளைத் தேய்த்து விட்டுக் கொண்டிருந்தான், ஆனால் அவன் இன்னும் சரியாகத்தான் இருந்தான். மிகவும் கஷ்டமான காலங்கள் பலவற்றைத் தாண்டியதால் அவன் வலுப்பட்டவனாகத் தெரிந்தான், அப்பாவுக்காகத் தெரு முனையில் கொஞ்ச நேரம் நிற்பது அவனுக்கு அத்தனை கடினமானதாக இராது.

“அல்கெய்லர்,” கிழவன் மறுபடி சொன்னான், இப்போது கொஞ்சம் சன்னமாகப் பேசினான். பார்க்காரனுக்கு கிழவன் பேசியது சரியாகக் கேட்கவில்லை, ஆனால் அதொன்றும் பெரிய விஷயமில்லை, ஏனெனில் கிழவன் இனிமேல் சரியாகி விடுவான் என்பது இவனுக்குத் தெரிந்திருந்தது. அவன் மறுபடி தன்னுள்ளே முழுதுமாக ஒடுங்கிக் கொண்டிருந்தான், அதுதான் அவன் இருக்க வேண்டிய இடமும்.

அந்த சலூனுக்கு, ஒரு வாரமாக நண்பகல் நேரத்தில் வருவதை வழக்கமாக்கிக் கொண்டிருந்த ஒரு பெண்மணி வாரில் கட்டிய ஒரு, நரி-வேட்டை நாய்க் கலப்பின நாயோடு வந்தவர் கேட்டார், “ முன்வாசலருகே ஒரு சின்னப் பையன் குளிரில் நிற்கிறான். இப்ப, யாரோட பையன் அவன்?”

அந்தப் பெண்மணி தன் பொய்ப்பற்களைக் கெட்டியாகக் கடித்துக் கொண்டு அங்கிருந்தவர்களை நோட்டம் விட்டார், அவருடைய நாய் அவரின் கால்களைச் சுற்றித் துள்ளி நடமிட்டது, அந்த இடத்தின் கதகதப்புக்குச் சுதாரித்தபடி.

“அவன் எல்லாம் சரியாத்தான் இருக்கான்,” பார்க்காரன் சொன்னான். “அவனுடைய அப்பா ஏதோ வேலையாக எங்கோ போயிருக்கிறார். இன்னும் ஒரு நிமிஷத்தில் வந்து விடுவார்.”

”அப்படியா, ஒரு நிமிஷத்தில அவர் வர்றதுதான் நல்லது,” என்றார் அந்தப் பெண்மணி. “எனக்கு யாரையாவது சுத்தமாப் பிடிக்காதுன்னா, அது இந்த மாதிரி ஒரு பையனைத் தெருல நிறுத்தி வச்சுட்டுப் போற அப்பாக்களைத்தான்.”

”அல்கெய்லர்,” கிழவன் திரும்பியபடி உரக்கச் சொன்னான்.

“எங்கிட்ட என்னய்யா சொன்னே, குடிகாரச் சோம்பேறி?” அந்தப் பெண் கேட்டார். அவருடைய நாய் கிழவனை நோக்கி நகர்ந்தது, கட்டிய வாரை இறுக்கி இழுத்தபடி, பல தடவை குரைத்தது.

”அது ஒண்ணும் இல்லீங்க,” பார்க்காரன் மரியாதையோடு சொன்னான். “அவர் தன்னொட பேரைத்தான் சொல்றாரு.”

“அதானெ. வேறெதையும் அவன் சொல்லாம இருக்கிறதுதான் நல்லது,” அந்தப் பெண்மணி, தன் பொய்ப்பற்களை இறுகக் கடித்தபடி சொன்னார்.

நாய் சற்று நிதானம் பெற்றது, ஆனாலும் அறை உஷ்ணத்தால் கொஞ்சம் ஆட்டம் போட வேண்டியிருந்தது அதற்கு. குளிர் காலத்தில் அதன் மீது அந்தப் பெண்மணி எப்போதும் கட்டி விடும் ஒரு மேலங்கியை அந்த நாய் அணிந்திருந்தது, அதன் கால்களுக்கு அந்த அங்கியால் ஒரு பயனுமில்லை, ஆனால் அதிகமாகக் குளிரால் பாதிக்கப்பட்டவை என்னவோ அந்தக் கால்கள்தாம்.

பார்க்காரன் அந்தப் பெண்மணிக்கு ஒரு க்ளாஸில் பியரை ஊற்றினான், அவள் குடிக்கத் துவங்கினாள், பார் மேஜையருகே நின்றபடி. இறுதியில் அவள் அங்கே இருந்த ஒரு முக்காலி மீதேறி அமர்ந்து ஓய்வாக இருக்கத் தீர்மானித்தாள், நாய் குதிப்பதை நிறுத்தி அந்த இடத்தைப் பார்க்கத் துவங்கியது.

பார்க்காரன் அல்கெய்லருக்கு இன்னொரு பாட்டில் பியரைக் கொண்டு போனான், ஏதும் பேசாமல். ஒரு தடவை பார்க்கக் கூட இல்லை, இருவரும் இப்படி நடந்து கொண்டு பொழுதைக் கழித்து விடலாம் என்று உடன்பட்டது போலிருந்தது.

முப்பத்தி ஐந்து வயது மதிப்பிடத் தக்க ஒரு மனிதர், அவருடைய நறுவிசாகக் கத்திரிக்கப்பட்ட மீசையும், முகமும் கொஞ்சம் பழகியதாகத் தெரிந்தன, 37ஆவது தெருவாயில் வழியே உள்ளே வந்தார், ஒரு விரல்கடை அளவு பர்பன் மதுவைக் கேட்டார், அது துரிதமாக ஊற்றித் தரப்பட்ட பின்னர், பார்க்காரன் அவரிடம், வேறு யாருக்கும் அது கேட்காதபடி அடக்கிக் கொண்ட சன்னமான குரலில் கேட்டான்,            ”வாசலில் நிற்கிற அவன் ஒருக்கால் உம்முடைய மகனாய் இருக்குமா, அல்லது இல்லையா?”

அந்தச் சிறு க்ளாஸைத் தன் உதடுகளுக்கு உயர்த்தி,  அதைப் பார்த்தார் அவர், ஆனால் அந்தக் கேள்வியைக் கேட்டதும், இப்போது அந்தக் க்ளாஸிலிருந்து பார்வையை அகற்றிக் கொண்டு பார்க்காரனைப் பார்த்தார், பின் அந்த மதுவை வேகமாக விழுங்கினார், ஒரு வார்த்தை கூடப் பேசாமல் அந்தப் பையனைப் பார்க்க முன்புறக் கண்ணாடி ஜன்னலுக்குப் போனார். கடைசியாக பார்க்காரனைப் பார்க்கத் திரும்பினார், தலையை மறுத்து அசைத்தார். இன்னொன்று வேண்டுமெனக் கேட்டார், அதைப் பெற்றுக் குடித்தார், பின் வெளியே போனார், அந்தப் பையனைத் தாண்டிப் போனார், அவனைக் கவனிக்கக் கூட இல்லை.

இரண்டாவது பாட்டில் பியரைக் குடித்தபின் அல்கெய்லர் தன் நாற்காலியிலேயே கோழித் தூக்கம் போடத் துவங்கினார். நரி-வேட்டைநாய்க் கலப்பு நாயை வைத்திருந்த பெண்மணி பார்க்காரனிடம் தன் நாயைப் பற்றி ஏதோ சொல்லத் துவங்கினார்.

”டிப்பியை அவன் வாழ்நாள் பூராவும் நான் தான் வைத்திருந்தேன்,” அவர் சொன்னார். “இந்த மொத்தக் காலமும் நாங்கள் சேர்ந்தேதான் இருந்திருக்கிறோம். ஒவ்வொரு நிமிஷமும்.”

நல்ல ஆடைகள் அணிந்த, முப்பது வயதுக்குக் கீழான வயதிருக்கும் ஒரு மனிதர் பனிரெண்டடித்து பதினைந்து நிமிடங்கள் கழித்து வந்தார், ஜானி வாக்கர் கருப்பு லேபில் மதுவை ஐஸ்மீது ஊற்றி, கொஞ்சம் தண்ணீரையும் கூடவே கொடுக்கச் சொல்லிக் கேட்டார். ஆனால் சீக்கிரமே சிவப்பு லேபலுக்கு மாறிக் கொண்டார், அந்த பானத்தைக் குடித்து விட்டுக் கேட்டார், “டெலிவிஷன் எங்கே இருக்கு?”

“எங்களிடம் அது இல்லை.”

“டெலிவிஷன் இல்லையா?” என்று உற்சாகமாக அந்த மனிதர் கேட்டார். “என்ன மாதிரி பார் இது, சொல்லுங்க? நியுயார்க்கில இப்படி டெலிவிஷன் இல்லாம ஒரு பார் இருக்கிறது எனக்குத் தெரியாமல் இருந்தது. இங்கே இருக்கிறவர்கள் எதைத்தான் பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள், சொல்லுங்க?”

“எங்க கிட்டே இருக்கிறதெல்லாம் ஒரு ஃபோனோக்ராஃப் மட்டும்தான்.”

”அப்படின்னா சரி, இருக்கட்டும்,” என்றார் அந்த மனிதர். “அவ்வளவுதான் உங்க கிட்டெ இருக்குதுன்னா, அவ்வளவுதான் இருக்கு. உங்களுக்கு என்ன கேட்கப் பிடிக்கும்?”

“உங்களுக்கு என்ன வேணுமோ அதைக் கேளுங்க.”

அந்த எந்திரத்தில் இருந்த பல இசைத் தட்டுகளைப் பற்றி அந்த மனிதர் படித்தார், பிறகு சொன்னார்,” அப்ப பென்னி குட்மேன் வாசிக்கிற ஜிங்கிள் பெல்ஸ் கேட்கலாமா?”

“உங்களுக்குப் பிடிச்சதை வையுங்க,” பார்க்காரன் சொன்னான்.

“அப்ப சரி,” அவர் சொன்னார், ஒரு நிக்கல் காசை (5 செண்ட்) அந்தத் துளையில் போட்டார். “ஜிங்கிள் பெல்ஸ்தான் இப்ப.”

எந்திரம் வேலை செய்யத் துவங்கியதும், அவர் பார் அருகே மறுபடி அமர்ந்து கொண்டார், பார்க்காரன் இன்னொரு தடவை ரெட்லேபல் மதுவை ஐஸ் மீது ஊற்றிக் கொடுத்தான். “இது ஜிங்கிள் பெல்ஸ் இல்லியே, இது வேறேதோ.”

“நீங்க தப்பான நம்பரை அமுக்கியிருப்பீங்க.”

“சரி போகட்டும்,” அந்த மனிதர் சுமுகமாகச் சொன்னார், “பரவாயில்லை. ஒண்ணும் ஆகி விடவில்லை. அதுவும் ஒண்ணும் மோசமான இசையாவும் இல்லை, பாருங்க.”

அந்தப் பையன் மறுபடி உள்ளே வந்தான், ஆனால் எந்திரம் போட்ட இரைச்சலால் பார்க்காரன் அந்தப் பையனிடம் வெளியே போகச் சொல்வதற்குப் பெரிய குரலில் கத்த வேண்டி இருந்திருக்கும், எனவே அவன் அந்தப் பையன் அருகே போனான், அவனை மறுபடி தெருவில் அவன் நின்ற இடத்தில் விட்டு விட்டு வந்தான்.

” என்னோட அப்பா எங்கே?” டானல்ட் ஈஃபா கேட்டான்.

“அவர் இப்ப வந்திடுவார். நீ இங்கெயே இரு.”

இது இப்படியே போய்க் கொண்டிருந்தது, இரண்டரை மணி ஆகிற வரை, அப்போது பனி பொழியத் துவங்கியது. ஒரு நல்ல தருணத்தில் பார்க்காரன் வெளியே போய் அந்தச் சிறுவனை உள்ளே அழைத்து வந்தான். சமையல் உள்ளுக்குப் போய் பையனுக்குச் சாப்பிடப் பொருட்களை எடுத்து வரத் துவங்கினான். பாருக்குப் பின்னே, பிறர் பார்வை படாத இடத்தில், ஒரு பெட்டி மீது பையன் அமர்ந்திருந்தான், இன்னொரு பெட்டி மீது சாப்பாட்டுப் பொருட்களை வைத்துக் கொண்டு சாப்பிட்டான்.

சாப்பிட்ட பிறகு பையன் தூங்கி விழத் தொடங்கினான், அதனால் பார்க்காரன் சில காலியான பியர் பெட்டிகள் மீது படுக்க அவனுக்கு ஒரு இடம் தயார் செய்து கொடுத்தான். தன்னுடைய மேல் கோட்டு ஒன்றை மெத்தை போல விரித்து, சலவைத் துணிகளிலிருந்து சில மேலங்கித் துணிகளை எடுத்துக் கொடுத்து, எல்லாவற்றுக்கும் மேல் தெருவில் தான் அணியும் ஒரு கோட்டு ஒன்றை மேலே மூடிக் கொள்ளக் கொடுத்தான். பையனை உள்ளே அழைத்து வந்ததிலிருந்து அவனும், பையனும் ஒரு வார்த்தை கூடப் பேசிக் கொள்ளவில்லை. உறங்கப் போகவிருக்கும் தருணத்தில், நீட்டிப் படுத்திருந்த பையன், கொஞ்சம் சிரித்தது போலிருந்தான், அதே நேரம் அழவும் செய்தான்.

காலையில் மது அருந்த வருபவர்கள் போய் விட்டிருந்தார்கள். அல்கெய்லரும் அந்த நாயோடு வந்த பெண்மணியும், நரி-வேட்டை நாய்க் கலப்பு நாயும் போய் விட்டார்கள். இப்போது வாடிக்கையாளர்கள் மாறி இருந்தனர், பையன் உறங்கியபடி இருந்தான்.

ஐந்தடிக்க கால் மணி இருக்கையில் பையன் விழித்து எழுந்தான். ஒரு சில வினாடிகள் கழித்து பார்க்காரனை அவன் நினைவு கூர்ந்தான், இப்போதும் அவர்கள் பேசவில்லை. அவன் ஏதோ தன் வீட்டில் இருந்த படுக்கையில் இருந்து எழுந்தது போல எழுந்து உட்கார்ந்தான், அப்புறம் கண்களைத் திறந்தபடியே ஒரு பத்து நிமிடம் கனவு கண்டாற் போலிருந்தான், பிறகு இறங்கினான்.

இப்போது வெளியில் இருட்டி இருந்தது, புயலடித்தால் எப்படி பனி பொழியுமோ அதுபோல பனி கொட்டியது. கொட்டும் பனியைக் கொஞ்ச நேரம் பையன் பார்த்திருந்தான், பிறகு திரும்பி பார்க்காரனைத் தலையுயர்த்திப் பார்த்தான்.

“என் அப்பா திரும்பி வந்தாரா?” அவன் கேட்டான்.

“இன்னும் இல்லை,” பார்க்காரன் சொன்னான்.

அவன் மண்டி இட்டு அந்தப் பையனிடம் பேசினான்.

“இன்னும் சில நிமிஷங்களில் இங்கே என் வேலை  முடிந்து விடும். அப்புறம் நீ பார்க்கிற போது, உன் வீடு எங்கே இருக்கிறது என்று எனக்குக் காட்ட முடியும்னா, நான் உன்னை உன் வீட்டுக்கு அழைத்துப் போகப் பார்ப்பேன்.”

“என் அப்பா திரும்பி வரவேயில்லியா?”

“இல்லை. அவர் வரவேயில்லை. ஒரு வேளை எங்கே உன்னை விட்டுட்டுப் போனோம்னு அவர் மறந்து போயிட்டாரோ என்னவோ.”

“அவர் என்னை இங்கதானே விட்டாரு,” பையன் சொன்னான், ஏதோ அதை மறப்பது முடியவே முடியாத விஷயம் என்பது போலிருந்தது அது. “இங்கே முன் வாசல்லதான்.”

“எனக்குத் தெரியும்.”

பாரை இரவில் கவனித்துக் கொள்பவன்  சமையலறையில் இருந்து வெளியே வந்தான், வெள்ளைக் கோட்டு ஒன்றை அணிந்திருந்த அவன் பையனைக் கவனித்தான்.

“அவன் யாரு ஜான்? உன்னோட பையன்கள்லே ஒர்த்தனா?”

“ஆமா,” பார்க்காரன் சொன்னான். இன்னொரு பார்க்காரனிடம் என்ன நடந்ததென்று சொல்ல ஆரம்பிக்க அவனுக்கு விருப்பமில்லை.

“அந்த கோட்டு அவனுக்கு எங்கேயிருந்து கிடைச்சது?”

பையன் முகம் சுளித்தான், தரையைப் பார்த்தான்.

”அது என்னோட பழைய கோட்டுகளிலெ ஒண்ணு,” பார்க்காரன் சொன்னான். “அவனுக்கே ஒண்ணு இருக்கு, ஆனா இதைப் போட்டுக்கத்தான் அவனுக்கு இஷ்டம்.”

பையன் பார்க்காரனை திடீரென்று தலையுயர்த்திப் பார்த்தான், அவனுக்கு ஒரே ஆச்சரியம்.

“ஆமாமில்லெ, பசங்களே இப்பிடித்தான் இருக்காங்க, ஜான்,” இரவு நேர பார்க்காரன் சொன்னான். “ அப்பாக்களை மாதிரியே இருக்கணும்னு எப்பவும் ஆசைப்படுவாங்க.”

“ரொம்ப சரியாச் சொல்ற.” மற்றவன் சொன்னான்.

அவன் தன் வெள்ளை மேல் கோட்டைக் கழற்றினான், இருந்த தெருக் கோட்டை அணிந்து கொண்டான், அதன் மேல் தன்னுடைய மேல் கோட்டைப் போட்டுக் கொண்டான், பையனைக் கையில் பிடித்துக் கொண்டு கிளம்பினான்.

“குட் நைட்,” என்றான், இரவு பார்க்காரனும் அதே பதில் சொன்னான், அந்தப் பையனோடு அவன் தெருவில் போனதைப் பார்த்தான்.

அவர்கள் மூன்று தெருக்களைத் தாண்டும்வரை மௌனமாக நடந்தார்கள், பிறகு அங்கிருந்த ஒரு பலபொருள் கடை (மருந்துக் கடை என அழைக்கப்பட்டது அந்தக் காலத்தில்) ஒரு மேஜையருகே அமர்ந்தார்கள்.

“சாக்லேட்டா, வனிலாவா?”

“எனக்குத் தெரியாது.”

“ஒரு சாக்லேட், ஒரு வனிலா ஐஸ்க்ரீம் சோடா,” பார்க்காரன் அந்த சோடா இறக்குபவனிடம் சொன்னான், அந்த பானங்கள் மேஜையில் வைக்கப்பட்ட பின்னர், பார்க்காரன் வனிலா பானத்தைக் குடிக்க ஆரம்பித்தான். பையனும் மற்ற பானத்தைச் சரியாகவே குடித்து வைத்தான், அவர்கள் மறுபடி பனிப் பொழிவில் இறங்கி நடக்கவாரம்பித்தார்கள்.

“இப்ப நீ எந்தப் பக்கம் குடி இருந்தேன்னு நினவு படுத்திச் சொல்லு பார்ப்பம். உன்னால் அதைச் செய்ய முடியுமா?”

“எந்தப் பக்கம்னு எனக்குத் தெரியாதே.”

பனி நடுவே அந்த பார்க்காரன் நின்றான், அடுத்து என்ன செய்வதென்று யோசிக்க முனைந்தான், ஆனால் அதொன்றும் சுலபமாக இல்லை, அவனுக்கு எதுவும் புலப்படவில்லை.

“அப்ப சரி,” அவன் கடைசியில் சொன்னான், “இன்னிக்கு ராத்திரி என்னோட பிள்ளைகளோட இருப்பியா நீ? உன்னால அது முடியுமா? எனக்கு ரெண்டு பையங்க, ஒரு சின்னப் பொண்ணு இருக்காங்க. ராத்திரி தூங்கறத்துக்கு உனக்கு ஒரு இடம் தயார் செய்து கொடுக்கறோம், நாளைக்கு உன் அப்பா வந்து உன்னை அழைச்சுகிட்டுப் போவார்.”

”அவர் வருவாரா?”

“நிச்சயமா வருவாரு.”

மௌனமான பனியில் அவர்கள் நடந்தார்கள். அந்தப் பையன் அழத் துவங்கியது அந்தப் பார்க்காரனுக்குக் கேட்டது. பையனைத் தேற்ற அவன் முயலவில்லை, ஏனெனில் அவனைத் தேற்ற ஏதும் வழியில்லை. பையனோ முழுக்க உடைந்து போய்விடவும் இல்லை, அவன் மெல்ல அழுதான், தன் நண்பரோடு நடந்தபடியும் இருந்தான். அவன் அன்னியர்களைப் பற்றிக் கேட்டிருந்தான், எதிரிகளைப் பற்றிக் கேட்டிருந்தான், இரண்டு பேரும் ஒரே வகை என்று நம்புபவனாக இருந்தான், ஆனால் இங்கே யாரோ ஒரு புது நபர், முன்னே பின்னே அவன் பார்த்திராதவர், அன்னியராகவும் இல்லை, எதிரியாகவும் இல்லை. என்ன இருந்தாலும் அவனுடைய அப்பா கூட இல்லாமல் அதெல்லாம் படுமோசமாகத் தெரிந்தது.

பனி மூடிய சில படிகள் மேலேறிப் போகத் துவங்கினர், அப்போது அந்தப் பையனின் நண்பர் சொன்னார்,”இங்கேதான் நாங்க குடி இருக்கோம். நாம கொஞ்சம் சூடா ஏதும் சாப்பாடு சாப்பிடலாம், அப்புறம் நாளைக் காலை வரைக்கும் நீ படுத்துத் தூங்கு, அப்புறம் உன் அப்பா வந்து உன்னை அழச்சுகிட்டுப் போவார்.”

“அவர் எப்போ வருவார்?” பையன் கேட்டான்.

“காலையிலெ.” அவனுடைய நண்பர் சொன்னார்.

அவர்கள் அந்த வீட்டின் ஒளியில் நுழைந்தபோது, பார்க்காரன் கவனித்தான், பையன் அழுவதை நிறுத்தியிருந்தான். ஒருவேளை அவனுடைய மிச்ச வாழ்நாளுக்குமாய் அழுவதை நிறுத்தி விட்டானோ என்னவோ.