உதயன் வாஜ்பாயி – அறிமுகமும், கவிதைகளும்

_mg_23171960-இல் பிறந்த உதயன் வாஜ்பாய், ஒரு இந்தி மொழிக் கவிஞர், கட்டுரையாளர், சிறுகதை மற்றும் திரைக்கதை ஆசிரியர். இதுவரை இரண்டு கவிதைத் தொகுதிகளும், ஒரு சிறுகதைத் தொகுப்பும், இன்னும் பலவகையான ஆக்கங்களும்  வெளியிட்டிருக்கிறார்  அவற்றில் மீட்டெடுக்கப்பட்ட நாட்டார்கதைகளின் தொகுப்பும், திரைப்பட இயக்குனர் மணி கவுல்-உடனான நீண்ட உரையாடல்கள் தொகுதியும் அடங்கும். இவருடைய படைப்புகள் வங்காளம், தமிழ், ஒரியா, கன்னடம், ஆங்கிலம், பிரெஞ்சு, போலிஷ் மற்றும் பல்கேரிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. அவர் போபாலில், காந்தி மருத்துவக் கல்லூரியில் உடல் தொழிவியல் ( Physiology ) துறையில் பயிற்றுவிக்கிறார்.

ஆக்டாவியோ பாஸ், போர்ஹேஸ், தாதேயூஷ் ரோஸாவிக், செக்காவ் போன்ற பலரது படைப்புகளையும் இந்தியில் மொழிபெயர்த்திருக்கிறார். இந்தியாவிலும், வெளி நாடுகளிலும் பல விழாக்களுக்கு அழைக்கப்படிருக்கிறார். சமீபத்தில் மாஸ்கோவில் நடந்த நாட்டார் கற்பனை பற்றிய கருத்தரங்கிற்கும், 2007-இல் பாரீஸ் சர்வதேசப் புத்தக விழாவிற்கும் அழைக்கப்பட்டிருந்தார். இந்திய அரசின் சீனியர் ஃபெல்லோஷிப் (1994 -96), கிருஷ்ண பால்தேவ் விருது(2001), ராஜா நிறுவன விருது (2003) மற்றும் பல விருதுகளைப் பெற்றிருக்கிறார்.

வருகை

“நாம் ஒரு வீடு செய்வோம், நிறைவாய் இருப்பதாக,” அவள் சொன்னாள், இல்லை ஒருவேளை எனக்கு அப்படித் தான் கேட்டது. அன்று எனக்கு ஜுரம், அன்றைய வேலைகளால் அவள் களைத்துப் போனாள்.

அவள் நெற்றியிலும் மழையிலும் கருமை படர்ந்தது.

நாங்கள் சண்டையிடுவதைப் பார்த்திருக்காத ஒரு விருந்தாளியும் இல்லை.

“நாம் ஒரு வீடு செய்வோம், நிறைவாய் இருப்பதாக,” அவள் திரும்ப திரும்பச் சொல்லிக்கொண்டிருந்தாள்.

அடுப்பில் தண்ணீர் தேவையின்றி கொதித்தது.

இரயில் வருவதற்கு இன்னும் சற்று நேரம் இருந்தது.

தெருக்களில், குடிகாரர்கள் சம்பந்தமின்றி முணுமுணுத்தார்கள். பிச்சைக்காரர்கள் நகரத்தின் ஓரங்களில் தூங்கியிருந்தார்கள். ஒரு எட்டுக்காலி கரிய வேப்பமரத்தில், இரவைப் பின்னியது.

சமையலறையிலிருந்து அவள் குரல் வந்தது,”இங்கே பாருங்கள்,இங்கே பாருங்கள்! சுவரிலிருந்த செத்த பல்லி திரும்பவும் நகர்கிறது! எழுந்திருங்கள், எழுந்திருங்கள், நம் சுவர்களில் இன்னும் பாசியும் ஒட்டடையும் படிந்திருக்கின்றன!”

சீதையின் கண்ணீர்

நான் வீட்டிலிருந்து தனியே, தூரமாக செல்வது அப்பாவிற்கு பிடிப்பதில்லை. அவர் எனக்கொரு சைக்கிள் வாங்கித் தருகிறார், ஆனால் அதை எங்கும் ஓட்டிச் செல்ல அனுமதிப்பதில்லை.

ஒவ்வொரு சமயம், பாட்டியின் வேலையாள் தாத்தாவிடமிருந்து பணம் திருடுகிறான். தாத்தா அதைப் பார்த்தும் பார்க்காததுபோல, தன் வயோதிகத்தின் படகைச் செலுத்துவதில் மும்மரமாகிறார்.

அம்மா ரொம்பக் கொஞ்சம் பணத்தைக் கொண்டு வீட்டை நடத்த முயல்கிறார். பாதையைக் கடக்க, திரும்ப திரும்ப ராமசரிதமானஸ் படிக்கிறார்.

பின், எதிர்பாராத ஒரு நாள், சீதை அசோகவனத்தில் அமர்ந்திருக்க, அவள் கண்ணிலிருந்து சொட்டிய கண்ணீரில், அப்பாவின் வாடிய முகம் தெரிந்தது.

மிருதுவான ஏதோவொன்று

கவிதையிலும் வலியிலும் வாழும்போது நாம் உலகை மிக உன்னிப்பாக கவனிக்க ஆரம்பிக்கிறோம் .உதாரணம், பொழுது சாய்ந்த பின், போக்குவரத்து இரைச்சல் மட்டுமில்லை, பரந்துவிரிந்த மிருதுவான வலை என மின்மினிகளின் சத்தமும் உன் செவிகளைத் தப்புவதில்லை. அந்த வலையில் எங்கோ மாட்டிக்கொண்டிருக்கும் தவளையின் க்ரிக்-க்ரிக் சத்தமும் மிகத் தெளிவாக, தன் ஊர்தியிலிருந்து இறங்கி தன் அரண்மனைக்குள் நுழையும் ராஜகுமாரியைப் போல உன் செவிகளில் நுழையும். நான் எப்பொழுதும் உணர்ந்திருக்கிறேன், கவிதையிலும் வலியிலும் வாழும்போது, நான் உலகை இன்னும் உன்னிப்பாகக் கவனிக்கிறேன். அது ஏனென்றால், ஒருவேளை உலகம் கவிதையின் அல்லது வலியின் இழைகளால் நெய்யப்பட்டிருக்கிறது.அல்லது இரண்டாலும். இல்லை, ஒருவேளை இரண்டாக தெரிந்தாலும், அவை ஒன்றுதானோ. இல்லை அதுவும் அல்லாமல், உன் கிசுகிசுப்பைப் போல் மெல்லியதாய், கருமையில் போர்த்தப்பட்டு, அவ்விரவு ஜன்னலில் இருந்து இறங்கிய ஒன்றாகவும் இருக்கலாம்.

ஜனவரி 4, 1960

ஜனவரி நான்கு, ஆயிரத்து தொள்ளாயிரத்து அறுபது மிக அருகில் இருந்த சமயம் ஒன்று இருந்தது. எனக்கு வேண்டும்போது கையை நீட்டி அதைத் தொட முடிந்தது. மைதானத்தில் விளையாடிக்கொண்டிருக்கும் போது, வகுப்பில் கரும்பலகையை வெறித்துப் பார்த்திருக்கும் போது, இரவில் மெத்தையில் சுருண்டு படுத்திருக்கும் போது, அது எங்கோ என்னருகில் துடித்துக்கொண்டிருப்பதை என்னால் உணர முடிந்தது. ஒவ்வொரு சமயம், அது எனக்கு மிக மிக அருகில் இருப்பதுபோல, நினைத்தால், முயன்றால், எனக்கு பின்னிருந்து அதை எடுத்து எனக்கு முன்னால் கொண்டுவந்து வைத்துவிடலாம் போல இருக்கும். பின் ஒரு சமயம் வந்தது, அத்தேதி மௌனமாக பின்னகர்ந்தது, இங்கில்லாமல் போனது.எங்களுக்கிடையேயான தொலைவு பல உயிர்களாலும் பல இறப்புகளாலும் நிரப்பப்பட்டது. பின், அது முழுமையாக மறைந்துபோனது, ஏதோ அது இதுவரை இல்லாமலே இருந்தது போல. அந்த நொடியில் நான் உணர்ந்தேன், நான் எந்த ஒரு குறிப்பிட்ட தேதியிலும் பிறக்கவில்லை. நான் எப்போதுமே, இந்த அண்டத்தின் ஒரு மூலையில் இருந்திருக்கிறேன். பஞ்சபூதங்களும் என்னை உருவாக்கவில்லை, ஆனால் அத்தனை நாட்களாக என்னிடம் தொத்திக்கொண்டிருந்த அத்தேதியை உருவாக்கின, அவை பூக்களாக, காற்றாக, நெருப்பாக, நீராக, ஆகாயமாகக் கரைவதற்கு வெகு முன்பாகவே.

ஆறுதல்

நான் ஒரு நாள் இருக்க மாட்டேன் என்ற எண்ணம் எனக்கு அத்தனை ஆறுதலளித்தது, நான் அதன்பின் இல்லாமல் இருக்க தொடங்கிவிட்டேன். இப்போது, என் வீட்டின் முன் நிற்கும் மரம், நான் இறந்தபின் வெயில் பட்டுக்கொண்டிருக்கும் மரம். இப்போது, நான் செல்லும் ஒவ்வொரு பயணமும் நான் இறந்தபின் செல்லும் பயணம். எனது இந்த உடல் நான் இறந்தபின் என் நினைவில் ஒட்டியிருக்கும் ஒரு சிறு துகள் மட்டுமே. அண்டவெளியின் பரப்பில் சிக்கியிருக்கும் இந்த பூமி, என் இறப்புக்குப்பின் பிழைத்திருக்கும் பூமி, நான் இறந்ததும் என் மகன்கள் கிரிக்கெட் விளையாடிக்கொண்டிருக்கும் பூமி; நீ ஏதோ ஒரு மொட்டைமாடியில் என்னுடைய திரும்புதலுக்காக காத்திருக்கும் பூமி.