உலகம் யாவையும்
சொட்டும்
ஒவ்வொரு மழைத்துளியும்
உனக்கொரு பிரபஞ்சம்,காற்றிலாடும்
இலைப் பச்சை ஒவ்வொன்றும்
உனக்கொரு
ரகசிய சங்கேதம்,மஞ்சள் சதுரங்களை
தரையில் இறைக்கும் சூரியக் கற்றைகள்
உன் கைவசமாகா
மாயக் கரங்கள்,செவிப்புலன் ஈர்த்து
உனைத் துள்ளவைக்கும்
இசையலை ஒவ்வொன்றும்
உனக்கொரு தீராத புதிர்,கண்ணெதிரில்
தினம் தினம்
புதுக்காட்சி தந்துஉன் கையில் உடைபட்டு உருளும்
இவ்வுலகம்உனக்கொரு விளையாட்டு பொம்மை.
இரவின் திவலைகள்
முடிவற்ற பெருநதி மீது
அலையும் சிறு மரத்துண்டோ நான்?தொடுவான் தொலைவில்
நொடிப்பொழுதுமின்றி
மறையும் விண்மீனும் நானோ?ஏதுமின்மையின்
கால்தடங்கள் கவனமின்றி நகரும்இவ்விரவின்
திவலைகளினூடே
பெருகி நிறையும்
நினைவுகளைக் கண்டு அஞ்சாதே.விடிந்த பின்
எப்போதும்
இரவின் திவலைகளுக்கு
இடமில்லை எங்கும்
இம்மியளவும்.
உடன் நடக்கும் நீ
விநோதமான பாதை அது,
மூர்க்கம் உலராத வெயில் போர்த்தி
நீண்டும் நெளிந்தும் போகிறது,தொலைவானில்
வட்டமிட்டுப் பறக்கிறது கழுகுக்கூட்டம்,இதோ உடன் நடக்கும் உன் முகம்
நான் முன்பு அறியாதது,
இப்பாதையில் என்னுடன்
எது வரையிலும்
உடன்வருவாய் என்றும் தெரியாது,பாதங்களைத் தடுமாற்றி
நடை சிதைக்கும் நன்னிலம்,
முகம் அறைந்து விரட்டும் ஈனக்காற்று,
நல் வருகையல்ல உமது
என
எச்சமிட்டுப் பறக்கிறது அண்டங்காக்கை,இருவரும் நடக்கிறோம்,
இன்னுமொரு தப்படியில்
கண்ணிவெடிகள் நம்மை சிதறடிக்கலாம்
வெட்டவெளிகள் கைநீட்டி
மார்நோக்கி துப்பாக்கிகளை நீட்டலாம்
உள்ளதனைத்தும் களவாடப்படலாம்,
அல்லது
இதுவொன்றுமே நிகழாமல் போகலாம்
நீயும் நானும்
இப்பாதை கிளை பிரியும் தொலைவு வரை
இப்படியே நடக்கலாம்,இப்போதைக்கு
உடன் நடந்து செல்கிறோம்,நீயும் நானும்.