மனிதர்கள் தங்களுக்குள் செய்திகளை பரிமாறிக்கொள்ள உதவியாக மொழிகள் உருவாகத் தொடங்கின. கணக்கற்ற மொழிகள் இருந்தாலும் உலகில் பிரதானமான உபயோகத்தில் இருப்பது ஆங்கிலம் என்று சொல்லலாம். சீன மொழியும், ஸ்பானிஷ் மொழியும் ஆங்கிலத்தை விட அதிகமாகப் பேசப்படும் மொழிகள் என்றாலும் உலகின் பல நாடுகளில் ஆட்சி மொழியாகவே இருப்பதால் ஆங்கிலத்தின் முக்கியத்துவம் மிக அதிகமாக இருப்பதில் ஆச்சரியமில்லை. குறிப்பாக ஆங்கிலேய ஆட்சியின்கீழ் நூற்றாண்டுகளாக இருந்து வந்த இந்தியாவில் ஆங்கிலம் தெரியாதவர்கள் அறிவே இல்லாதவர்கள் என்ற எண்ணம் வலுப்பட்டும் விட்டது. ஆங்கிலம் சரியாக வராத காரணத்தால் படிப்பை பாதியில் நிறுத்தியவர்களும் பொறியியல் கல்லூரி வரை வந்துவிட்டு பின் அம்மொழி தரும் அழுத்தம் தாங்காமல் தற்கொலை செய்துகொண்டவர்களும் உண்டு. ப்ளஸ் டூ வரை தமிழ் மீடியத்தில் படித்துவிட்டு கல்லூரிகளில் ஆங்கிலத்தை எதிர்கொண்டு வெல்பவர்கள் குறைவே. அதேபோல் அந்நிய மொழி பேசப்படும் பிரதேசங்களுக்கு தொழில் நிமித்தமாகவோ சுற்றுலாவுக்காக என்றோ செல்பவர்களுக்கும் மொழி வித்தியாசமான அனுபவத்தைத் தரும்.
மொழி தரும் அழுத்தம் பற்றிய முழு நீளத் திரைப்படம் இதுவரை வெளியாகவில்லை என்று சொல்லலாம். கற்றது தமிழ் படத்தில் தமிழ் கற்றவன் படும் அவஸ்தைகள் பேசப்பட்டன என்றாலும் ஆங்கிலம் தெரியாமல் அம்மொழி புழங்கும் இடங்களில் சங்கடத்தை எதிர்கொள்ளும் எளியவர்களின் வலி சினிமாவில் பெரிதாகப் பதிவாகவில்லை. இந்திய வணிக சினிமாவின் நாயகன் அவ்வளவாக ஆங்கிலம் அறியாதவன் அல்லது நன்கு படித்துவிட்டு தகுதிக்கு குறைவான வேலை பார்ப்பவன். அவனுடன் மோதி பின்னர் காதல் வயப்படும் நாயகிகள் ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்தில் படிப்பை முடித்துவிட்டு பல வருடம் கழித்து கிராமம் திரும்பியவர்கள். திமிரான அவள் நாயகனை அவமானப்படுத்த அவன் அறியாத ஆங்கிலத்தில் பேசி இகழ்வதும், நாயகன் ஒரு கட்டத்தில் பொறுக்கமாட்டாமல் திக்கித் திணறியோ அல்லது அவன் படித்தவனாக இருக்கும்பட்சத்தில் நாயகியை விட சரளமான ஆங்கிலத்தில் பேசியோ ரசிகர்களின் கைத்தட்டையும், நாயகிகளின் காதலையும் ஒரு சேரப்பெற்று விடுவான். ஆனால் அதற்கு பிறகு காதலியும், அவனும் கவிதை மொழியில் காதல் புரியத் தொடங்கி விடுவார்கள் என்பதால் ஆங்கிலத்தின் அச்சுறுத்தல் இருக்காது. பிரிட்டிஷ் ஆட்சி காலம் தொடர்பான திரைப்படங்களிலும் பரங்கியர்கள் தடுமாறியாவது தமிழில்தான் பேசுவார்கள். இந்நிலையில் ஆங்கிலம் தெரியாத ஒருவர் படும் சிரமங்களை வைத்து முழுநீளப் படமாக வெளிவந்திருக்கிறது இங்க்லீஷ் விங்க்லிஷ். தெற்கில் பெரும் வெற்றி பெற்று வடக்கில் வாகை சூடிய நடிகை ஸ்ரீதேவி பல வருடங்களுக்குப் பின்னர் நடித்திருக்கும் படம், சீனி கம் மற்றும் பா படங்கள் மூலம் ஹிந்தியில் அழுத்தமாக முத்திரை பதித்த இயக்குனர் பால்கியின் தயாரிப்பு என்று நிறைய எதிர்பார்ப்புகளுடன் வெளியாகி இருக்கிறது படம்.
இரு குழந்தைகளின் தாய். வசதியான வீட்டில் மருமகள் என்றாலும் ஆங்கிலம் சரளமாகப் பேசவராத அதற்கான தேவையும் இல்லாத சராசரி இந்திய குடும்பத் தலைவி. ஆங்கிலம் நுனிநாக்கில் பேசும் கார்ப்பரேட் கணவனும் ஆங்கில மீடியத்தில் படிக்கும் பதின்வயது மகளும் அந்த எளிய பெண்ணின் தவறான ஆங்கில உச்சரிப்பை கேலி செய்பவர்கள். அவளால் சிறப்பாக லட்டு மட்டும்தான் தயாரிக்க முடியும் என்று நினைக்கும் கணவன் பேச்சால் அடிக்கடி புண்படும் அவளுக்கு, திடீரென்று அமெரிக்காவுக்கு, அதுவும் தனியே போக வேண்டும் என்ற நிர்ப்பந்தம். எளிய இந்தக் கதையை தெளிவான திரைக்கதை மூலம் பலப்படுத்தி இருக்கிறார் இயக்குனர் கவுரி ஷிண்டே.
பால்கியின் மனைவியான கவுரியும் விளம்பர உலகில் இருந்து வந்தவர்தான் என்பது காட்சியமைப்பு மற்றும் குடும்பத்துக்குள் நடக்கும் உற்சாகமான உரையாடல்கள் மூலம் நன்கு தெரிகிறது. விளம்பரங்கள் பெரும்பாலும் தனி நபர் என்பதையும் தாண்டி குடும்பம் முழுமைக்குமான தயாரிப்புகள் பற்றிய கருத்தாக்கங்களை பெரும்பான்மையான நடுத்தர மக்களிடம் சென்று சேர்க்கும் ஊடகம் என்பதால் அதில் நன்கு பழகிய பால்கியாலும் அவரது மனைவி கவுரியாலும் தாய் – மகள், கணவன் – மனைவிக்கு இடையேயான உரையாடல் மற்றும் உடல்மொழி இவற்றை உருவாக்குவதில் சிறப்பாக செயல்பட முடிகிறது. உண்மையில் பால்கியை விடவும் கவுரி இந்த ஏரியாவில் எளிதாக ஸ்கோர் செய்கிறார். தான் பால்கியை விட நல்ல இயக்குனர் என்று ஒரு நேர்காணலில் கவுரி சொல்லியிருக்கிறார். இந்தப் படத்தின் கதையும் கூட தாயான எளிய மராத்தி பெண்ணிடம் ஒரு மகளாக தான் நடந்துகொண்ட விதத்தை பின்புலமாகக் கொண்டது என்கிறார் அவர். முதல் தலைமுறையாக உயர்கல்வி பெறுபவர்கள் அல்லது ஆங்கிலக் கல்வி பெறுபவர்கள் அவ்வளவு படிப்பறிவில்லாத தங்கள் அன்பான பெற்றோர்களை பல சந்தர்ப்பங்களில் ஏதாவது ஒரு விதத்தில் காயப்படுத்தி இருப்பார்கள். சற்றே முதிர்ச்சியடைந்த பின்தான் தங்கள் தவறு தெரியவரும். கவுரிக்கும் தன் தாயை ஆங்கிலம் தெரியாத காரணத்துக்காக காயப்படுத்தியதை பற்றிய குற்ற உணர்வு இருந்திருக்கிறது. அந்தக் குற்றவுணர்வின் திரைமொழிதான் இங்க்லீஷ் விங்க்லிஷ்.
படத்தின் நாயகியான ஸ்ரீதேவி மிக அருமையான தேர்வு என்று சொல்வதெல்லாம் சம்பிரதாயமான வார்த்தையாகி விடும். கிட்டத்தட்ட அரைநூற்றாண்டு திரை அனுபவம் கொண்ட அவருக்கு இந்தப்படம் சிறப்பான மீள்வருகைதான். அவருக்கு ஐம்பது வயதாகப் போகிறது என்கிறது விக்கிப்பீடியா. நடிகையின் உண்மையான வயது என்பது இந்தியத் திரையுலகில் ஒரு கற்பனைப் பதம்தான். ஏனென்றால் இருபதின் இறுதியைத் தொட்டு விட்டாலே முன்னணி நடிகைகளுக்கு அக்கா, அண்ணி வேடங்களுக்கான காஸ்ட்யூமை தயார் செய்துவிடும் இந்தியத் திரையுலகம். குறிப்பாக தமிழில் அவ்வாறுதான் நிகழ்கிறது. ஒரு காலத்தில் நாற்பது வயதில் பத்மினியால் தில்லானா மோகனாம்பாள் நடிக்க முடிந்தது. தற்போதைய ரசிகர்கள் நடிகைகள் கட்டுடல் கொண்ட இளம் பெண்களாகவே இருக்க வேண்டும் என்ற விருப்பம் கொண்டவர்கள் என்பதால் நடிகைகளுக்கு தங்கள் வயதை குறைத்து காட்ட வேண்டிய அவசியம். நடிகர்கள் தங்கள் வயதை குறைத்துக் காட்டுவதை கண்டித்து கரகாட்டக்காரனில் கவுண்டமணி கலகக் குரலே எழுப்பி இருப்பார். சமீபத்தில் டைம்ஸ் ஆப் இந்தியா இதழின் சினிமா பக்கத்தில் வெளியான கட்டுரை ஒன்று ஹிந்தி சினிமாவின் தற்போதைய முன்னணி நடிகைகளான கரீனா கபூர், ராணி முகர்ஜி போன்றவர்களின் சமீபத்திய படங்களில் தங்களை நிலை நிறுத்திக்கொள்ள படு கவர்ச்சியாக நடித்து தங்கள் திறமையைக் காட்ட முயல்கின்றனர் என்று குறிப்பிட்டிருந்தது. காரணம் முப்பதுகளின் மத்திக்கு போய் விட்டால் கதாநாயகி அந்தஸ்து இங்கே தகர்ந்து விடும். வயது அத்தனை முக்கியம் இங்கே. ஹாலிவுட்டில் அவ்வாறு இல்லை. அங்கே முப்பதை கடந்த நடிகைகள் கோலோச்சி வருவது நாம் அறிந்ததே. இங்கே கதைக்கு தொடர்புடைய நாயகிகளை வைத்து மட்டும் சினிமாவை சந்தைப்படுத்த முடியாது என்பது மற்றொரு உண்மை. சேனல்களில் இருபத்தி நாலு மணிநேரமும் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் பாடல்கள்தான் படங்களின் விளம்பரப் பணியை சிறப்பாகச் செய்கின்றன. அதில் இடுப்பசைவுடன் நாயகியின் நடனம் அவசியம் என்பதால் சற்று வயது முதிர்ந்த நடிகைகளுக்கு அங்கு இடம் இல்லை. நடிகைகளும் அங்கே விட்ட இடத்தை நெடுந்தொடர் நாயகி வேடங்கள் செய்வதன் மூலம் மீட்டெடுத்துக் கொள்வது வேறு விஷயம்.

இத்தனை வருடங்கள் கழித்து திரும்பவும் நடிக்க வரும் நட்சத்திர நடிகையான ஸ்ரீதேவி தன் வயதுக்கும் திறமைக்கும் உரிய பாத்திரம் கிடைத்திருப்பதில் அதிர்ஷ்டசாலி என்றே சொல்ல வேண்டும். ஏனென்றால் ஒரு காலத்தில் இந்தியத் துணைக் கண்டத்தை தன அழகியப் பல்வரிசை சிரிப்பு மற்றும் அசத்தும் நடனம் மூலம் கட்டிப்போட்டிருந்த மாதுரி தீட்சித்தின் மீள்வருகைப் படமாக வெளியான ‘ஆஜா நாச் லே’ படு தோல்வி அடைந்தது. அவர் அதில் இளம் வயதுத் தோற்றத்தில் வருவது போன்ற காட்சிகள் ரசிகர்களால் ஏற்கப்படவில்லை. ஸ்ரீதேவி இதில் கவனமாக நடுத்தர வயது குடும்பப் பெண்ணாகவே வந்து தோல்வியை தவிர்த்திருக்கிறார். ஆச்சரியம் என்னவென்றால் இத்தனை நாள் நடிக்காமல் இருந்துவிட்டு புதிதாக நடிக்கும் படத்தில் காதல் காட்சிகள், நடனம் போன்ற தன் பிரசித்தி பெற்ற ஏரியாக்கள் இல்லாமல் இருந்தாலும் இயல்பான நடிப்பால் நம்மை கட்டிப் போடுவதுதான். உச்சரிப்பு சரியில்லாமல் ஜாஸ் டான்ஸ் என்று சொல்லிவிட்டு மகளிடமும் கணவனிடமும் கேலிச் சொற்களை வாங்கிக்கொண்டு தன் குடும்பப் பொறுப்பை ஆற்றாமையோடு தொடரும் காட்சியே ஸ்ரீதேவி இந்தப் படத்தின் முதுகெலும்பு என்று சொன்னது. திரைக்கதை தெளிவாகி விட்டதால் ஸ்ரீதேவிக்கு திரையில் தனது பாதை எங்கு செல்கிறது என்பதில் குழப்பம் இருந்திருக்காது.
பையன் வேண்டுகோளுக்கு இணங்கி மைக்கேல் ஜாக்சன் ஸ்டெப் ஆடிவிட்டு அது ஒரு விஷயமே இல்லை என்பது போல் இயல்பாக நடந்து செல்லும் காட்சியில் அவர் ஆடாத நடனமா என்று நினைக்கத் தோன்றுகிறது. அதே போல் முதல் முறை அமெரிக்காவுக்கு விமானப் பயணம் என்பதால் தடுமாறும் அவரிடம் பக்கத்து சீட் காரரான அமிதாப் (தமிழில் அஜித்) ஆங்கிலப் படத்தை தமிழில் ‘மொழியாக்கம்’ செய்து விவரிக்க அங்கு நடைபெறும் சின்ன கலாட்டாவை கண்டு ஆச்சரியமும் சிரிப்பும் பொங்க தன் முகத்தை ப்ளாங்கெட்டால் மூடிக் கொள்ளும் காட்சியில் அந்தக் கண்கள் மொத்த உணர்வையும் காட்டி விடுகின்றன. மூன்றாம் பிறை ஸ்ரீதேவிதான் உடனே நினைவுக்கு வந்தார்.
ஒரு வணிகப்படமாகவே வெளியாகி இருந்தாலும் சில முக்கியமான சேதிகளை இயல்பாக முன்வைக்கிறது இங்கிலீஷ் விங்க்ளிஷ் . பெற்ற குழந்தைகளாலேயே அவ்வப்போது அவமானப்படுத்தப்படும் பெற்றோர்கள் (ஸ்ரீதேவி சொல்வது போல் முக்கியமாக – தாய்) மனதில் ஏற்படும் வலி, ஆங்கிலம் சரியாகத் தெரியாதவர்களுக்கு உறவினர் மற்றும் நட்பு வட்டாரத்தில் ஏற்படும் அவமானங்கள், ஆங்கிலம், அறிவியல் பாடங்கள் போன்ற ஏதோ சில விஷயங்களில் தோல்வி அடைந்தவர்கள் அதில் மீண்டும் வெற்றிபெற உதவும் தனிப் பயிற்சி நிலையங்களின் மதிய நேர வாழ்க்கை, வேலைக்கு அல்லது பயிற்சிக்கு செல்லும் குடும்பப் பெண்கள் எதிர்கொள்ளும் எதிர்பாரா மையல்கள் என்று பல விஷயங்கள் இந்தப் படத்தின் ஓட்டத்தில் மெல்லிய இழைகளாக தொடர்கின்றன. சிவந்த மண்ணுக்கு பிறகு வெளிநாடுகளில் படமாக்கப்படும் படங்களில் அந்த நாட்டை பற்றிய பிரமிப்பு இருக்கும். நாங்கள் இருப்பது வெளிநாடாக்கும் என்ற பாவனை நடிகர்களிடம் இருக்கும். பிறகு உலகமயமாக்கலுக்கு பிறகு வெளியான படங்களில் காரியாப்பட்டி கதாநயாகன் காதல் வந்தவுடன் விசா பாஸ்போர்ட் இன்றி கனடா சென்று வெள்ளைக்காரப் பெண்களுடன் நடனமாடுவது வழக்கமாகி விட்டது. இந்தப் படம் முதல் தடவை அமெரிக்கா செல்லும் பெண்ணின் பிரம்பிப்பை அழகாகக் காட்டியிருக்கிறது. இயக்குனர் அதற்காக பெரிதாக நம்பியிருப்பது அழகாக விரிந்து ஆச்சர்யம் காட்டும் ஸ்ரீதேவியின் கண்களை. கவுண்ட்டரில் இந்திய ரூபாய்களை அமெரிக்க டாலர்களாக மாற்றும் காட்சி ஒரு உதாரணம். கத்தையாக இந்திய ரூபாய்களை கொடுக்கும் ஸ்ரீதேவிக்கு அதற்கு பதிலாக மிகச் சில அமெரிக்க டாலர் நோட்டுகளை தரும்போது உலகப் பொருளாதாரம் தெரியாத ஸ்ரீதேவி கேள்விக்குறியுடன் அதை வாங்கிக்கொள்வார். பல விஷயங்களை எளிதாக உணர்த்தும் புத்திசாலித்தனமான காட்சியமைப்பு.
அமெரிக்க ரெஸ்டாரன்ட் ஒன்றில் ஒரு காஃபி வாங்கும்போது ஆங்கிலம் சரியாகப் பேச முடியாமல் அவஸ்தைப்படும் ஸ்ரீதேவி ஒரு கட்டத்தில் பதட்டம் அதிகரித்து அங்கிருந்து வெளியே ஓடி வரும்போது பரிதாபத்தை ஏற்படுத்துகிறார். பிறகு ஆங்கிலம் பயிற்றுவிக்கும் ட்யூஷன் சென்டர் ஒன்றுக்கு செல்வதும் அங்கு வெவ்வேறு பிரதேசங்களில் இருந்து வந்து தங்கள் வாழ்க்கையை அமெரிக்காவில் நிலைப்படுத்தவென்ற ஆசையுடன் ஆங்கிலம் கற்க வந்திருக்கும் மனிதர்களை சந்திக்கிறார். அவரது ஆங்கில ஆசிரியர் ஒரு ஓரினச் சேர்க்கையாளர். வெளிநாட்டு பெண்ணை மணக்கும் ஆவலுடன் ஆங்கிலம் கற்க வந்திருக்கும் பாகிஸ்தானி கார் டிரைவர், மென்பொருளில் நல்ல தேர்ச்சி இருந்தும் ஆங்கிலம் சரியாக பேசவராமல் சக ஊழியர்களின் கேலிக்கு உள்ளாகும் தமிழ் மென்பொருள் பொறியாளன் என்று வித்தியாசமான மனிதர்கள். ரெஸ்டாரண்டில் அவருக்கு உதவிய பிரெஞ்சுகாரரும் அந்த வகுப்பில் இருக்கிறார். எல்லோருக்கும் ஒரே நோக்கம் ஆங்கிலம் கற்பது. நடுவில் அந்த பிரெஞ்சுக்காரர் மெல்ல ஸ்ரீதேவி மீது மையல் கொள்வதும் ஒரு கட்டத்தில் ஸ்ரீதேவிக்காகத்தான் வகுப்புக்கு வருவதாக சொல்வதும் எதிர்பாராத சுவாரஸ்யம். பெரும்பாலான காட்சிகள் அந்த ஆங்கில வகுப்பறையில் நடந்தாலும் சலிப்பு ஏற்படுத்தவில்லை. மெல்ல மெல்ல ஆங்கிலம் கற்கும் ஸ்ரீதேவிக்கு தன ஆங்கில அறிவை எப்படியாவது மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற முனைப்பு ஒரு பக்கமும் இந்தியாவில் விட்டு வந்த தன் குடும்பத்தின் நினைவு ஒருபக்கமும் அழுத்த தடுமாறினாலும் அவரது சகோதரியின் மகள் அவருக்கு ஆறுதலாக இருக்கிறார். நிறைய ஆங்கிலப் படங்களை வாங்கித் தந்து பார்க்க வைக்கிறார். ஆங்கிலத்தில் தன் சித்திக்கு ஏற்படும் சந்தேகங்களைத் தீர்த்து வைக்கிறார். இடையில் பிரெஞ்சுக்காரரின் மெல்லிய காதல் தொந்தரவு வேறு. அவரது ஆங்கில வகுப்பின் கடைசி நாளில்தான் ஸ்ரீதேவியின் சகோதரியின் மகளுக்கு திருமணம். அன்று வகுப்பில் மாணவர்கள் ஆளுக்கு ஐந்து நிமிடம் ஆங்கிலத்தில் உரையாற்ற வேண்டும். எளிய படத்துக்கு எளிய க்ளைமாக்ஸ்தான் பொருத்தம் என்ற புரிதல் கொண்ட இயக்குனர் இறுதிக் காட்சியை மெல்லிய உணர்ச்சி கொண்ட சிறப்பான காட்சியாக உருவாக்கி இருக்கிறார்.
திருமணத்தின் போது நடக்கும் விருந்தின்போது அமெரிக்க மணமகனின் தந்தை “இனி உங்கள் பாடு. இனியாவது என்னையும் உன் அன்னையையும் தனியாக விட்டு விடு. இனிமேல்தான் நாங்கள் ஒருவர் மீது இருவர் கவனம் செலுத்த வேண்டும்” என்று வேடிக்கையாகப் பேச, கடைசியாக ஸ்ரீதேவியை பேச அழைக்கிறார் அவரது சகோதரி மகள். வழக்கம்போல் தன் மனைவிக்கு ஆங்கிலம் தெரியாது என்று தன்னை பேச அனுமதிக்காத கணவனிடம் ஸ்ரீதேவி கேட்பார் ” May I?”. பிறகு வாழ்க்கையில் தம்பதிகள் ஒருவரையொருவர் எவ்வாறு பபுரிந்துகொள்ள வேண்டும் என்று மணமக்களுக்கு சொல்வது போல் கணவனுக்கும் மறைமுகமாக சொல்கிறார். அந்தக் காட்சியில் தெளிவாக காட்டப்படுவது பேசும் மொழி அல்ல சொல்லப்படும் விஷயம்தான் பிரதானம் என்று. வழக்கமான சினிமா பாணியில் சரளமாக ஆங்கிலம் பேசி விடாமல் எளிய ஆங்கிலத்தில் அந்த உரையை நிகழ்த்தியதும் கூடியிருக்கும் உறவினர்கள் மட்டுமல்லாமல் தாங்களாகவே அந்த திருமணத்துக்கு வந்திருக்கும் ஆங்கில வகுப்பு மாணவர்களும் ஆசிரியரும் அடையும் சந்தோசம் அளவற்றது. நிறைவான அந்தக் காட்சியில் ஸ்ரீதேவியின் கணவரும் மகளும் ஆங்கிலம் தெரியாது என்று தாங்கள் இகழ்ந்த ஸ்ரீதேவி முன்பு நெகிழ்வுடன் தலைகுனிகிறார்கள். தன்னை காதல் தொந்தரவு செய்த பிரெஞ்சுக்காரரிடமும் தன்னை உணர வைத்ததற்காக நன்றி சொல்லும் பெருந்தன்மைக்கார ஸ்ரீதேவி அன்பாலும் அறிவாலும் விஸ்வரூபம் எடுக்கிறார்.
படத்தில் அனைவரும் சிறப்பாகவே நடித்திருக்கின்றனர். ஸ்ரீதேவியின் கணவனாக வரும் அடில் ஹுசைன் நல்ல தேர்வு. நன்கு படித்த கணவன் எளிய மனைவி மீது காட்டும் மென்மையான ஆக்கிரமிப்பை தன் புனிசிரிப்பு மிகுந்த முகத்தின் மூலம் காட்டுகிறார். அமெரிக்காவில் வசிக்கும் ஸ்ரீதேவியின் மூத்த சகோதரியாக வரும் பெண்மணியும் நல்ல தேர்வு. சரஸ்வதி வித்யாலாவில் படித்த, ஆங்கிலத்தில் ஒரு வார்த்தை கூட அறிந்திருக்காத தன் சகோதரி கணவனை இழந்தும் அமெரிக்காவில் ஒரு உயர்ந்த பொறுப்பில் இருந்து மகள்களை படிக்க வைத்திருப்பதை ஸ்ரீதேவி பாராட்டும் காட்சி எளிய இந்திய குடும்பங்களில் இருந்து வெளிநாடுகளில் வேலை பார்ப்பவர்களுக்கு தங்கள் குடும்ப உறுப்பினர்களை நினைவுப்படுத்தி இருக்கும். அதே போல மெல்லிய காதலுடன் புன்னகையுடன் ஸ்ரீதேவியை சுற்றி வரும் பிரெஞ்சுக்காரர் மெஹ்தி நெபு அருமையாக நடித்திருக்கிறார். மெட்ரோ ஸ்டேஷனில் ஸ்ரீதேவி போலவே தலையை ஆட்டிப் புன்னகைக்கும்போது ரசிக்க வைக்கிறார். முக்கியமாக ஸ்ரீதேவிக்கு ஆறுதலாக இருக்கும் அவரது சகோதரி மகள் ப்ரியா ஆனந்த் பாந்தமான நடிப்பை தந்திருக்கிறார், தேவ் டியில் இளமையான இசை தந்த அமித் திரிவேதி இந்தப் படத்தின் நிறத்தை சரியாகப் புரிந்துகொண்டு முதிர்ச்சியான இசை தந்திருக்கிறார்.
நேர்கோடான எளிய திரைக்கதை மூலம் படத்தை வெற்றி பெறச் செய்திருக்கும் கவுரி ஷிண்டே பெண் இயக்குனர் என்ற சலுகையெல்லாம் எத்ரிபார்க்காமல் ஒரு அழகான வணிகப் படம் தந்திருப்பது வரவேற்புக்குரியது. பால்கி வீட்டில் இனி தான்தான் வெற்றிகரமான இயக்குனர் என்று பேச முடியாது. இப்போதைக்கு கவுரயின் கைதான் ஓங்கியிருக்கிறது.