ஹிரோஷிமா, என் காதலே!

ஹிரோஷிமா, என் காதலே! (1959) – Hiroshima Mon Amour
இயக்குநர்: ஆலென் ரெனெய்(ஸ்) – Alain Resnais
திரைக்கதை, வசனம்: மார்கரைட் த்யூராஸ்

ஹிரோஷிமா- அழிவின் குறீயீடு

hiroshima-cloud-300

ஆகஸ்டு 1945 யில் விஞ்ஞானிகள் என்ற பெயரில், சில இருண்ட நகைச்சுவையாளர்கள் உலகத்தின் விளிம்பில் உதிர்த்த ஒரு ‘சிறு பையனும்’, ஒரு ‘குண்டு ஆளும்’ முதல்-உலகை வாட்டிக் கொண்டிருந்த உலகப் போரை ஒரு முடிவுக்குக் கொண்டு வந்தன. உலகமே ஒரு கணம் ஸ்தம்பித்தது. சூரியன் நேரடியாக மேற்கில் உதித்தது, அது கடந்து செல்லவேண்டிய தீவு மட்டும், பூமியின் கிழக்கு மூலையில், ஒரு மாபெரும் காளான் குடையின் கீழ் மனிதனால் கைவிடப்பட்டுக் கிடந்தது.

குடை விரிக்கப்பட்ட கணம், ஹிரோஷிமா நகரமே நொடியில் ஆவியான கணம், பொசுங்கும் மக்கள் உலகமே அழிந்து விட்டது என்று நினைத்துக் கொண்டனர். ஆனால் சில தினங்கள் சென்றபின்னும் பிழைத்திருந்தவர், அந்நகரின் இடிபாடுகளூடே உயிரின் க்ஷீணத் துடிப்புகளைக் கேட்கத் துவங்கினர். மீட்பு நடவடிக்கைகளை கவனிக்க ஆரம்பித்தனர். ஆனாலும் தாம் உயிர் வாழ முடியுமென்ற நம்பிக்கை வர்வில்லை; அந்த விஷச் சாம்பலில் இனிமேல் எந்தத் தாவரமும் விளைய சாத்தியமில்லை என்ற வதந்திகள் வலுப்பெற்ற நேரம், திடீரென்று அதன் இடிபாடுகளூடே புதிய புல் முளைக்கத் தொடங்கியது, வண்ண மலர்கள் இதழ் விரித்தன. உயிர் மீண்டும் உத்வேகம் பெற்றது…

அதே புல்லிலிருந்து தொடங்குகிறது ஆலென் ரெனெய்ஸின் ‘ஹிரோஷிமா, மொன் அமோர்’. அந்தப் புல் விளைந்த சாம்பல் மணலில் பொதிந்திருந்த உயிரின் சலனம், மணற்துகள் மின்னப் புணரும் இரு தேகங்கள். இது தான் முதல் காட்சி. தனது ‘ஹிரோஷிமா குறிப்பேடுகளில்’ கென்ஃஜாபுரோ ஓயி (Kenzaburō Ōe) சொல்கிறார்: “It takes a person of extra-ordinary care and insight to watch for any abnormality in the green grass even while it grows abundantly and healthily.” – “பசும்புல் எத்தனை செழுமையாகவும், ஆரோக்கியமாவும் வளர்ந்தாலும், அதில் ஏதேனும் திரிபு இருக்கிறதா என்பதைக் கண்டுகொள்வது அசாதாரண அக்கறையும், அகநோக்கும் கொண்ட மனிதரால்தான் இயலும்”

1958இல் ரெனெய்ஸிடம் ஹிரோஷிமாவில் அணு-ஆயுத சிதைவைப் பற்றிய ஒரு ஆவணப் படம் எடுக்குமாறு வேண்டுகோள் வைக்கப்பட்டது. அவரது சரிதையாளர் ஜான் மொனாகோவின் வார்த்தைகளில், “அவரது பணி அசாத்தியமானது, ‘திரையாக்கமுடியாத ஒன்றைத் திரையாக்கம் செய்வது- ஒரு “பொய் ஆவணத்தை” உருவாக்குவது”. அதை விரும்பாத ரெனெய்ஸ், தன் கூட்டு எழுத்தாளரும் நாவலாசிரியருமான மார்கரைட் த்யுராஸுடன் விவாதித்து ஒரு தீர்மானத்தை அடைந்தார்: படம் பல்வேறுபட்ட கோணங்களையும், எண்ணங்களையும் படக் கோவை மூலமும், காட்சிக் கட்டமைப்பு மூலமும் உருவாக்கும்; அதன் மூலம், ஒரே தருணத்தில் அந்தரங்கமானதும், இதிகாசமானதுமான, தனி மனிதர் சார்ந்ததும், பிரதிநிதித்துவம் வாய்ந்ததுமான, ஒரு ஆவணத்தை அமைக்க முடிவெடுத்தனர்.

போர் மற்றும் அழிவு ரெனைஸ் ஏற்கனவே கையாண்ட விஷயங்கள் மட்டுமல்ல, அவர் மீண்டும் மீண்டும் தேர்ந்த பேசு-பொருட்கள். குறிப்பாக ஹிரோஷிமாவிற்கு நான்காண்டுகள் முன்பே எடுக்கப்பட்ட ‘இரவும், பனியும்’ (Night and Fog) , நாஃஜி யூத ஒழிப்பைப் பற்றிய ஆவணப் படம் . அதில் எந்தப் புனைவும் இல்லை. அதன் வரிகளை எழுதி, படத்திலும் குரல் கொடுத்தவர், நாஃஜி வதைக் கூடத்திலிருந்து மீண்டு வந்த ஃப்ரெஞ்சுக் கவிஞர் ஜான் கேரோல். அதில் ரெனெய்ஸ் ஃப்ரென்சு மீட்புப் படையினரால் படமாக்கப்பட்ட கருப்பு-வெள்ளைக் காணொலிகளையும், கவனிப்பாரற்று பசுமை படர்ந்து கிடந்த ஆஸ்விச் வதைக் கூடத்தின் ஈஸ்ட்மேன் வண்ணப் படச்சுருளையும் கோர்த்த கருணையற்ற காட்சிகளை, மனதைப் பிசையும் கவித்துவத்தோடு தொகுத்திருந்தார். அப்படம் வதைக் கூடங்களை நினைவாக உருவகிக்கவில்லை – மாறாக, பார்வையாளரைப் பார்த்து கேள்வி கேட்கும் குரூர நிகழ்காலமாக நடந்ததை ஆஜர்படுத்தியது, ஒரு மறுக்கியவியலா நிகழ்வாக அக்காட்சிகளைப் பதிவு செய்தது.

அப்படத்தின் கடைசி அத்தியாயமான ‘யார் பொறுப்பாளி?”யில் கேரோல் பேசும் இறுதி வரிகள் ஹிரோஷிமா படத்திற்கும் அடியெடுத்துத் தருவன. வதைகூடத்தையொட்டிய பாசி படிந்த குளத்தின் மேல் கேமெரா படர, கேரோலின் சொற்கள்: “இந்தக் குளத்தின் பனித்த நீர் அருகிலுள்ள கூட்டுக் கல்லறைகளின் குழிகளை நிரப்புகிறது; சில்லிட்ட சகதி நீர் ; நமது நினைவைப் போலவே கலங்கிய நீர்… போர், துயிலில் ஆழ்கிறது, ஆனால் அதன் ஒரு கண் என்றும் திறந்தே வைக்கபடுகிறது… நம்மில் யார் விழித்திருப்போம், இந்த விசித்திரக் கண்காணிப்பு கோபுரத்தில், நமது புதிய கொலைஞர்களின் (executioners) வருகையை எச்சரிக்க; அவர்கள் முகங்கள் உண்மையில் நம்மிலிருந்து வேறுபட்டனவா?”

அந்த உறங்கும் போரின் உறங்காக் கண்ணே ஹிரோஷிமாவையும் பார்வைட்டபடியிருக்கிறது. எனவேதான் ஆஸ்விச்சைப் போலல்லாமல் ஹிரோஷிமாவில் ஒரு மனித-மைய அடைப்புக்குள்ளிருந்து நமது பொறுப்புணர்வையும், பிரக்ஞையையும் ஆராய முடிவெடுத்தார் ரெனைஸ். மனிதர்கள் தனியராகவும், கூட்டாகவும் சிக்கியிருக்கும் காலம் என்ற மாயவலையின் கண்ணிகள்: நினைவும், மறதியும். மாபெரும் நாகரிகங்களும் கலாசாரங்களும்கூட தேர்வு செய்து பதப்படுத்திக் கொண்ட நினைவுகளால்தான் எழுப்பப்பட்டுப் பேணப்படுகின்றன. ஆனால் அதனால், சரித்திரமும் நினைவும் ஒன்றாகி விடுமா?

மீண்டும் கென்ஃஜாபுரோவின் குறிப்பேட்டிலிருந்து: “நாம் இயல்பாகவே நமது சொந்த அவலங்களை முடிந்தமட்டில் விரைவில் மறக்க முயல்கிறோம், அது தீவிரமானதோ அற்பமனானதோ எதுவானாலும் (தெருமுனையில் முகம் தெரியாதவர் நம்மைப் பார்த்து முகம் சுளித்தல் போன்ற அற்ப நினைவுகள் உட்பட). நமது நாளைகளுக்குள் இவற்றைக் கடத்திக கொணராமல் இருக்க முயல்கிறோம். எனவே நமது முழு மானுட இனமும் ஹிரோஷிமாவை, மானுட அவலத்தின் அதிகபட்ச எல்லையை, முற்றிலும் நினைவிலிருந்து வெளியேற்ற முனைவதும் விசித்திரமல்ல.” அதே நேரம் வெஞ்சினம் தோற்றவனின் இரகசிய ஊக்கி. வஞ்சிக்கப்பட்ட மக்கள், தங்கள் புண்களின் வலியை விசை போல தேக்கி வைத்து, எதிர்பாராத கணங்களில் பழியாகப் பீறிட்டு வெடிப்பதும் உண்டு. அதற்குக் காரணம், தனது துயரைப் பொதுமைப்படுத்தாமல் தனக்கு மட்டுமே உரியதாக அடைகாக்கும் மானுட இயல்பு. அந்நேரங்களில்தான் நினைவும், மறதியும் வாழ்வா, சாவா என்ற கேள்வியாக மனிதனை எதிர்கொள்கின்றன.

நினைவும் மறதியும் – ஒரு தொடர் கதையாடல்

hiroshima_mon_amour_1959

‘ஹிரோஷிமா, என் காதலே’வின் கதா-நாயகர்கள் அப்படிப்பட்ட விசை ஏந்தியவர்கள். அதை என்ன செய்யப் போகிறார்கள் என்பதே படத்தின் கதை. ஃப்ரென்சு நடிகை ‘அவள்’ மற்றும் ஜப்பானியக் கட்டடக்கலை நிபுணன் ‘அவன்’, இருவரும் முதலில் அடையாளமற்ற வெறும் தேகங்களாகத் திரையை நிறைக்கிறார்கள், இரு குரல்களாக ஃப்ரென்சு மொழியில் ஒலிக்கிறார்கள். அவனது உடலில் புதைந்த அவள், ஹிரோஷிமாவின் அவலங்களை நுணுக்கமாக நினைவுக் கூர்கிறாள், அவன் அவளது நினைவுச் சித்திரத்தை மறுக்கிறான் ; அவள் ஒவ்வொறு குரூரமாகத் தான் கண்டதைச் சொல்கிறாள், அவளது நினைவைப் போல அவை மின்னுகின்றன- உண்மையான ஆவணப் படங்கள், நடிக்கப்பட்ட நகல்கள், அருங்காட்சியகத்தின் அடுக்கிய புகைப்படங்கள், சிதறிய இருப்பிடங்கள், வளைந்த உலோகங்கள், காயங்களால் சிதைந்த உடல்கள், சீழ் வடியும் பிளந்த உடலங்கங்கள், இமைக்குள் வெந்த கண், உதிர்ந்த கேசம், திரிபுகளுடன் பிறந்த குழந்தைகள், அவற்றைத் தாங்கிய தாய், நினைவகங்கள், பரிசுக் கடைகள், அணுச் சுற்றுலா பேருந்தில் சிரித்த முகத்துடன் ஒலிப்பெருக்கியில் பயணிகளை வரவேற்கும் பெண ; ‘நீ இவையெதையும் காணவில்லை… நீ இதற்காக ஏன் கண்ணீர் வடிக்க வேண்டும்?” என்ற அவன் குரல் அவள் ஊடுருவ யத்தனிக்கும் நினைவுகளின் கதவுக்குத் தாளிடுகிறது.

அன்று அவர்கள் பிரிய வேண்டும். போருக்குப் பிந்தைய இந்நாட்களில் அவள் ஹிரோஷிமாவின் நினைவிற்காகத் தயாரிக்கப்படும் ஒரு ஆவணப் படத்தில் நடிக்க அந்நகரத்திற்கு வந்துள்ளாள். மீண்டும் தனது இனிய கணவன், குடும்பத்துக்குத் திரும்ப வேண்டும். அவனும் அப்படியே; மனைவி சில தினங்களில் சுற்றுலாவிலிருந்து திரும்புவாள், வாழ்க்கை மீண்டும் சீராகிவிடும். இதற்கிடையில் ஏற்பட்ட இந்த தவிர்க்கவியலாத வசீகரத்தின் காரணத்தை இருவரும் தங்களுக்கிடையே தேடுகின்றனர்; ஒருவரது நினைவினுள் பரிச்சயமில்லாத மற்றவர் ஊடுருவ முயல்வதன் மூலம், தங்கள் பகிரவொண்ணா அந்தரங்க நினைவுகளை இருவருக்கும் பொதுவாக்கிக் கொள்வதன் மூலம். ஹிரோஷிமா எரிக்கப்பட்ட தினம், அவன் இராணுவப் பணியில் வேறெங்கோ இருத்தப்பட்டான். அவனது குடும்பம் மட்டும் ஹிரோஷிமாவில் சிக்கியது. அச்சமயம் அவனது எதிரி தேசத்தில், ‘நுவெர்(ஸ்)’ என்ற சிற்றூரில், அவள் வேறொரு எதிரியின் காதலால் சிதைந்து கிடந்தாள்.

படம் ஹிரோஷிமாவின் ஆவணங்களுக்கும், இவர்களது காதல் கதைக்கும் இடையே ஊசலாடியபடி ஒரு கதையுச்சத்தை அடைகிறது. இருக்கவும் முடியாத, மறக்கவும் முடியாத இப்பிணைப்பின் அழுத்தத்தால் ஒரு புதைந்த நினைவு அவள் மனதின் ஆழத்திலிருந்து மேலே தள்ளப்படுகிறது: அவளது முதற்காதல். அவனது அதீத ஆர்வமும் உந்துதலும் அவளை அக்கதையைப் பேச வைக்கிறது: நுவெர்ஸில் போரின் மனவெழுச்கிகள் பொங்கிய காலத்தில், அவள் ஒரு இளங்கன்னி; ஒரு ஜெர்மானியப் போர் வீரனை இளமையின் தூய்மையுடனும் உக்கிரத்துடனும் காதலித்திருந்தாள். அதற்காக பெற்றோராலும், ஊராராலும் ஒடுக்கி அவமதிக்கப்பட்டிருந்தாள்; அவளது காதலன் சுட்டுக் கொல்லப்பட்டபின் மனம் பித்தாகி மீண்டவள்.

அதை நினைவில் புதைத்து முன்னகர்ந்ததால்தான் இன்று அவளுக்கென்று ஒரு குடும்பம் இருக்கிறது. ஆனால், ‘அவனை’க் கண்டதும், தனது முதற் காதல் அவளைத் தொற்றிக் கொள்கிறது; அதன் நினைவை என்ன செய்வது? அது அவள் வாழ்வைச் சிதைக்கக்கூடும். அது அவன் இதுவரை தனக்கென்று கட்டியெழுப்பிக் கொண்டிருந்த அவனது வாழ்வையும் சிதைக்கக்கூடும். இருவரும் மரணத்தைக் கடந்து வந்தவர்கள், இன்று மீண்டும் தாம் தப்பிய அந்த இரகசிய மரணத் தருணத்தை ஒருவரில் ஒருவர் தரிசிக்கின்றனர், மீண்டும் ஒரு அசாத்தியக் காதலில் விழுகின்றனர். முன்பொரு முறை மரணம் அவர்கள் வீட்டைத் தொட்டபோது தமக்கு மட்டும் வாழ்வு பரிசாக அளிக்கப்பட்டமையால், தாங்கள் இதுநாள்வரை ஏந்தியிருக்கும் குற்ற உணர்வை மறுபரிசீலனை செய்யும் தருணத்தில் இருத்தப்படுகின்றனர்.

அவன் அவனாகவும், அவள் அவளாகவும் புழுங்கும் வரையில் அச்சிதைவைத் தவிர்க்க முடியாது. நினைவுகளில் கலந்துள்ள வலியையும், இன்பத்தையும் பிரிக்க முடியுமா? அவற்றை நினைவுச் சின்னங்களாக்கினால்? அவற்றின் தனிமனித சோகத்திலிருந்தும் மீட்கவியலா இருளிலிருந்தும் அதன் அடையாளத்தை மட்டும் சுத்திகரித்துப் பிரித்தெடுக்க முடியுமா? பொருளை சிதைக்காமல் அதை அதுவாகவே முழுவெளிச்சத்தில் நிலைநிறுத்த முடியுமா? ரணங்கள் வெறும் குறியீடுகளானால்?

இப்படத்தில் இறந்த காலமும் நிகழ் காலமும் ஒன்றினுள் ஒன்று பின்னிப் பிணைந்துள்ளன. நினைவுகளுக்கும் அனுபவங்களுக்கும் தனிச் சொந்தம் கொண்டாடத் துடிப்பவர்களே அதைப் பிறர் மீது சுமத்தவும் செய்கின்றனர். அவள் அவனது அனுபவங்களை, ஹிரோஷிமாவின் நினைவுகளைத் தனதாக்கிக் கொள்ள முயல்கிறாள்; ஹிரோஷிமாவின் இறந்தகாலத்தைத் தன் நிகழ்காலமாக அனுபவிக்கிறாள், அந்த அனுபவத்தையே தனது நுவெர்ஸ் அனுபவமாக மொழிபெயர்க்கிறாள். அவன் அவள் கடந்து வந்துள்ள நுவர்ஸைத் தனது நிகழ்காலத்தோடு கோர்க்கிறான், அவளது ஜெர்மானியக் காதலனாகத் தன்னை அடையாளப்படுத்திக் கொள்கிறான். ஹிரோஷிமாவின் நினைவை அவளுக்கு மறுக்கிறான். என்றாலும் தானே அவளது ஹிரோஷிமாவாகிறான்.

காலத்தைப் போலவே மனிதர்களும் தனியர்களாகவும் கூட்டாகவும் ஒருவருள்ளொருவர் ஊடுபாவுகின்றனர். நினைவென்னும் சூட்சும வெளியின் பரிமாணங்களில் காலமும் மக்களும் எல்லைகளற்ற கூட்டாகின்றனர். வஞ்சிக்கப்பட்டவரும் வஞ்சனையாளரும் ஒருவரையொருவர் தானாக அடையாளம் கண்டு கொள்ளும் ஒரு கண்ணாடிக் கூட்டினுள் உழல்கின்றனர். ஆரம்பத்தில் அவன் அவளைத் தனது சொந்த ஹிரோஷிமா அனுபவங்களுக்குள் அனுமதிப்பதில்லை, ஆனால் அவள் அத்துமீறலாக அல்லாமல் ஒரு மருந்தைப் போல் அனுமதிக்கப்பட்ட அளவுகளில் அதைப் பருகப் பருக அவன் தணிகிறான். பதிலுக்கு அவள் தனக்குள் அடைகாத்து வைத்திருந்த நுவெர்ஸை அவன் விலையாகப் பெற்றுக் கொள்கிறான். இருவரும் தங்கள் பாத்திரங்களை விரித்துக் கொள்கிறார்கள் – ஒருவரையொருவர் நோக்கி, சமூகம் நோக்கி, சரித்திரம் நோக்கி, இறுதியில் பிரபஞ்சம் நோக்கி.

நினைவுகள் கதைகளாகின்றன, இசையாகின்றன. விடுதலைக்கான சாத்தியம் பிறக்கிறது. அசாத்தியங்களுக்கும் முடிவின்மைகளுக்கும் ஒரு அர்த்தம் கிடைக்கிறது. மார்கரெட் துராஸின் இலக்கிய வரிகளைச் சுற்றிப் பல்வேறு கோணங்களில் வைக்கப் பட்ட கண்ணாடிகள் போல மின்னுகின்றன ரெனை(ஸி)ன் பிம்பங்கள். கதைகளும் அர்த்தங்களும் அவற்றுக்கான சாத்தியங்களும் பலவாகப் பெருகிப் பரிணமிக்கின்றன.

கல்லறை மலர்கள்- பெருங்காவியங்கள்

alain-resnais

ஆலென் ரெனெய்(ஸ்)

ஆனால் ஏன் இந்தக் கொடூரக் கதைக்கு இப்படியொரு கவியுருவம் தர வேண்டும்? அதுவும் ஒரு வகையில் உண்மையை மென்மைப்படுத்துவதாகாதா?

உண்மையில் அப்படியொரு தரப்பும் இருக்கிறது. புகழ் பெற்றக் கலை-விமர்சகர் தியோடர் அடோர்னோவின் ஒரு மேற்கோள் கலை-வட்டாரங்களில் பெரும் அங்கீகாரம் பெற்றது: “to write poetry after Auschwitz is barbaric’- ஆஸ்விச்சைத் தொடர்ந்தும் கவிதை இயற்றப் படுமானால், அது காட்டுமிராண்டித்தனம்.

ரெனைஸின் கவித்துவம் வாய்ந்த கலை, இந்த மன-நிலையைத்தான் எதிர்கொள்கிறது. மானுட நாகரிகத்தின் ஒரு மாபெரும் வீழ்ச்சித் தருணத்தில் மனிதனால் தன் கண்ணியத்தைக் காத்துக் கொள்ள என்னதான் செய்ய முடியும் என்ற கேள்விக்கு ஒரு விடையாகக்கூட ‘ஹிரோஷிமா- மோன் அமோரை’ப் பார்க்கலாம்.

எண்ணிப் பார்த்தால் மனித இதிகாசத்தின் எல்லா பெருங்காப்பியங்களும் பெருந்துயரங்களே, பேரழிவுகளைப் பாடும் கவிதைகளே- மஹாபாரதமோ, சிலப்பதிகாரமோ, ஓடிஸ்ஸியோ, கில்கமேஷோ எல்லாமே பேரிழப்பை உள்ளடக்கியவையே. ஆனால் அவற்றைக் கவிதையாகப் பாடுவதேன்? குரூரக் காட்டுமிராண்டித் தனத்தாலா? களித்திருந்த இரு கிரௌஞ்சப் பறவைகளுள் ஒன்று வேட்டையில் கொல்லப்பட்டபோது, துயருண்ட அதன் துணையின் ஆன்மாவிலிருந்து எழுந்த நாதமே வால்மீகி இராமாயணத்தின் அடிநாதமாயிற்று. என்றால், துயரமும் அவ்வளவு அழகானதா? ஆனால் அநீதியும், அழிவும் கோரமானவைதானே?

உலகத்தின் எத்தனையோ மாபெரும் கூட்டுப் படுகொலைகளால் மனம் பேதலித்த சமூகங்கள் இன்னும் அவற்றின் நினைவால் துன்புற்றுக் கிடக்கின்றன. தமக்கு நிகழ்ந்த பேரழிவை அர்த்தப்படுத்திக் கொள்ள முடியாமல் திணறுகின்றன. மறுப்புகளையும், இருட்டடிப்புகளையும், பழி சுமத்தல்களையும் நாடுகின்றன. இந்தியா போன்ற பின்-காலனீய நாடுகள் மீட்கவியலா மறதியின் பிடியில் சோர்ந்து கிடக்கின்றன. இன்னமும் தனது தொலைந்த அடையாளங்களைச் சேகரிக்கும் பொருட்டு நினைவுத் துணுக்குகளை அகழ்ந்து அடுக்கும் வேலையில் ஈடுபட்டுள்ளன.

சரித்திரமும் நினைவும் கலங்கியிருக்கும் மானுடக் கதைகள் பற்றிய ஒரு சிந்திக்கவைக்கும் நூலை எழுதிய ஃபிலிப் கௌரெவிச் (Philip Gourevich) சொல்கிறார்: “நமது சமீத்திய வரலாற்றில் நிகழ்த்தப்பட்ட மாபெரும் அரசியல் குற்றங்கள் பல நினைவின் பெயரால் நிகழ்த்தப்பட்டவையே.” ( இந்தத் தலைப்பிற்கு மிகவும் சம்பத்தப் பட்ட நேர்காணல் இது.

நினைவை சுத்திகரிக்க, நினைவுக்கு ஏற்புடையதாக்கிக் கொள்ள, நமக்கு அழகிய வடிவங்கள் தேவைப்படுகின்றன. அழிவின் கோர முகத்தையும், துயரின் தூய கண்ணீரால் கழுவிக் கரைக்காவிட்டால், நம்மால் எந்த நினைவையுமே தாங்கி வாழ முடியாது. மரணம் என்ற சர்வ நிச்சயத்தை நோக்கிச் செல்லுந்தோறும், வாழ்வின் அர்த்தத்தை வாழ்வதன் மூலம் மட்டுமே உருவாக்கிக் கொள்ள முடியும். மரணமே அனைத்துமானால், வாழ்க்கை என்று ஒன்று தேவையே இல்லையே. ஆனால் மரணத்தை மறந்தோ மறுத்தோ வாழ்வது பேதைமை, அதிலும் போர், கூட்டுக் கொலை போன்ற மனிதனால் உருவாக்கப் பட்ட நிலையின்மைகளை எப்படி அர்த்தப் படுத்திக் கொள்வது? அந்த உண்மையை மனித மூளை உணரும் கணம் பயங்கரமானது;

மனித மனதில் உறங்கும் காதல் விழிக்க வேண்டும் என்றால் மீண்டும் மீண்டும் போர் வேண்டுமா? அவள் சொல்கிறாள்: “நீ என்னை அழிக்கிறாய்; நீ எந்தன் நன்மை… நான் களவிற்கும், பொய்களுக்கும், மரணத்திற்கும் பசித்திருந்தேன்; அமைதியாக, எல்லையற்ற பொறுமையின்மையோடு காத்திருந்தேன்… நீ என்னை அழித்து உருமாற்று; காலம் மட்டுமே கடந்து செல்லும், நல்ல மனசாட்சியோடு, நன்மதிப்புகளோடு விடை-பெறுவோம், மெல்ல நம்மைப் பிணைப்பது எது என்பதை அறிய மறப்போம், அதன் பெயரின் சுவடும் நினைவிலிருந்து அழியும்”.

அந்தப் பெயரற்ற சுவடைக் காக்கத்தான் கலையிலக்கியம், தத்துவம், சமயம் இவையெல்லாம் மனிதனுக்குத் தேவைப்படுகின்றன. நினைவும் மறதியும் சரியான கலவையில் சேர்க்கப் பட்ட மருந்தாகத்தான் மனிதன் கலையை நுகர முடியும். நமது கூட்டு நனவிலிக்கு ஏதோ ஒரு வடிவில் சுத்திகரிப்பும், பேயோட்டமும் தேவைப்பட்டுக் கொண்டே இருக்கின்றன.

ரெனெய்ஸின் இப்படத்திலும் ஒரு பேயோட்டம் நிகழ்கிறது, ரெனெய்ஸ் சினிமாவைத் தத்துவம் நோக்கி விரிக்கிறார், இலக்கியத்தால் எழுப்புகிறார், கலையில் வார்க்கிறார். ப்ரூஸ்த், ஷோபென்ஹோவர், பெரெக்ஸொன் இவர்களது வரிசையில் தனது சினிமாவை வைக்கிறார்; சினிமாவையும் சிந்தனையும் ஒன்றாக்க முயல்கிறார்.

ஜீரணிக்க முடியாத நினைவுகளை மீண்டும் மீண்டும் அருந்திக் கொதித்தெழும் வஞ்சிக்கப்பட்ட இனங்களும், வீழ்ச்சிகளையும் அவமானங்களையும் மட்டும் நினைந்து, பாடங்களை மறந்து போர்க்களத்தில் உறைந்திருக்கும் நாகரிகங்களும், இன்னும் இதைப் போன்ற நினைவுச் சிக்கல்கள் மண்டிய பிற மக்களும் பாடித் தீர்க்க வேண்டிய காவியங்களுக்காக நோய் மண்டிய இந்த உலகம் ‘எல்லைற்ற பொறுமையின்மையோடு அமைதியாகக் காத்திருக்கிறது.

(தொடரும்)

One Reply to “ஹிரோஷிமா, என் காதலே!”

Comments are closed.