இதே இதழில் வெளியாகியிருக்கும் கட்டுரையில் திரு.வெங்கட் சாமிநாதன், தி.ஜானகிராமன் எழுதிய இக்கட்டுரையைப் பற்றிக் குறிப்பிட்டிருக்கிறார். இலக்கிய வட்டம் இதழில் வெளியாகியிருக்கும் இந்த அரிய கட்டுரையை சொல்வனம் வாசகர்களுக்காக மீள்பிரசுரம் செய்கிறோம்.
மீண்டும் ஒருமுறை சொல்லிக்கொள்ளலாம். தமிழ்நாட்டையும், கர்நாடக சங்கீதம் வழங்கிவரும் பகுதிகளையும் பற்றித்தான் நமக்குத் தெரியும். மற்ற இசைகளிலும் நாடுகளிலும் நாம் இப்போது காண்கிற செய்திகளை ஒரு சமயம் காணமுடியும். ஆனால் நமக்கு இதைப் பற்றித் தெரியாது.
வீணையைத் தவில் போலவும், தவிலை மிருதங்கம் போலவும், வாய்ப்பாட்டை நாகஸ்வரம் போலவும் வாசிக்கிறவர்கள் சிலர் தமிழ்நாட்டில் இருக்கிறார்கள். ஒரு பிரபல வைணிகர் பல துறைகளில் தேர்ந்தவர். ஆனால் அவர் வீணையைக் கேட்கும்போது மீசை முளைத்த பெண் பிள்ளையைப் பார்ப்பது போலிருக்கிறது. ஆண்களுக்குச் சரிநிகர்தான் பெண்களும். அவர்களும் குதிரை ஏறலாம். ஆனால் மீசை முளைத்தாலோ வளர்ந்தாலோ நமக்கு அருவருப்பு வருகிறது; பயம் கூட உண்டாகிறது. வீணை இசையில் மிடுக்கு இருக்கலாம். வீர நடை இருக்கலாம். இன்னும் சாதாரணமாகச் சொல்லப்போனால் வீணை எழுப்பும் ஒலி நகார மகாரம் ஓங்கிய மென்மை வாய்ந்திருக்க வேண்டும் என்றே எதிர்பார்க்கிறோம். டடட்டா டடட்டா காட்டுப்பூனை மந்த்ரஸ்தாயியில் உறுமும் ரகாரம் நிறைந்த சுரசுரப்பு – இவை எல்லாம் வெளிப்படும்போது நல்ல காதில் நாராசம் பாய்கிறது. ஆனால் இப்படி ஆகாத்தியம் செய்பவர்களை மேதைகள் என்று வர்ணிப்பது சகஜமாகிவிட்டது. மேதைக்கும் பைத்தியத்துக்கும் இடையே எல்லைக்கோடு மங்கலாக இருக்கும் என்று சொல்கிறார்கள். இந்த மேதைகள் எங்கு நிற்கிறார்கள் என்று சந்தேகம் வந்துவிடுகிறது.
வீணைமேதை மட்டுமில்லை. தமிழ்நாட்டுப் புல்லாங்குழல் மேதை ஒருவர்கூட இப்படி அட்டகாசம் செய்து வருவதையும் பார்க்கிறோம். ஜிலுஜிலுவென்று மத்தியம காலத்தில் துள்ளும் கிருதிகளை வாலில் தகரம் கட்டி மூன்றாம் கால வேகத்தில் விரட்டியும் ஓட்டியும் வாசிக்கும் தன்னிகரற்ற மேதை இவர். இந்த மேதைகள் செய்யும் காரியத்தைப் பார்க்கும்போது, தெருவோடு சிவனே என்று போகிற பெரியவரை கல்லைவிட்டு அடித்துச் சிரிக்கும் சிறுபிள்ளையின் நினைவு வருகிறது நமக்கு. உணர்வின் அமுதத்தில் அமிழ்ந்து திளைத்த தியாகையர் போன்ற கீர்த்தனை பிரம்மாக்களின் பாடல்களின் காலப்பிரமாணம் தானாக அமைந்தது. பொருளோடும் அனுபவத்தோடும் ரச வெளிப்பாட்டோடும் இழைந்தது. அந்த நடையின் வேகத்தை இந்த மேதைகள் ஏன் மாற்ற வேண்டும்? வேண்டுமானால் சொந்தமாக ஏதாவது இயற்றி விட்டுப் போகட்டுமே.
நம்முடைய வீணை மேதை எழுப்பும் ஓசைகளைப் பற்றிப் பேசும்பொழுது ஒரு நண்பருக்கு உடன்பாடு இல்லை. வீணை ரொம்ப மென்மை கொண்ட வாத்யம்தான். ஆனால் வாசிப்பது ரொம்ப கஷ்டம். விரல் பள்ளம் விழுந்து காய்த்துவிடும். ரொம்பச் சிரமம் என்றார். உண்மைதான். பெண் மென்மை நிறைந்தவள். ஆனால் அவளைத் திருப்திப்படுத்த ஒரு ஆணின் ஆண்மை வேண்டியிருக்கிறது. அவருடைய பெண்மையின் அழகும் ஆற்றலும் பொங்கச் செய்ய ஒரு ஆணின் ஆண்மை தேவையாகத்தான் இருக்கிறது. கஷ்டம்தான். தம்பட்டம் அடிப்பது கஷ்டமல்ல. மெதுவாகத் தட்டினாலே ஓசை காதைப் பிளக்கும். எளிதில் தேர்ச்சியும் அடையலாம். வீணை வாசிப்பது கஷ்டம்தான். அரக்கத்தனமில்லாத நாசுக்குத் தெரிந்த ஆண்மைதான் அதற்குத் தேவை. அரக்கத்தனம் செய்தால் வீணை அரக்கியைப் போலக் கத்தும்; ஒப்பாரி பாடும், தொம்பச்சி தெருவில் நின்று போடுவதுபோல் கூப்பாடு போடும்.
மேதைகள் என்று சொல்லிவிட்டுப் போகட்டும். அவர்கள் செய்யும் ஆகாத்தியங்களைச் சோதனைகள் என்று வேறு சொல்லத் தொடங்கும்பொழுதுதான் நாம் எங்கே வாழ்கிறோம் என்ற பிரமை வந்துவிடுகிறது. வீணையைத் தவில் போல வாசிப்பது ஒரு சோதனையா? மத்தியம காலக் கிருதியை நாலுகளை சவுக்கத்தில் பாடுவது ஒரு சோதனையா?
பிக்காஸ்ஸோவையே சாப்பிட்டுவிடுகிற பிரம்ம ராட்சதர்கள் இந்த மாதிரி ஓவியத்திலும் இலக்கியத்திலும் தோன்றியிருக்கிறார்கள். சோதனைகளெல்லாம் – அது இலக்கியத்திலோ, ஓவியத்திலோ, இசையிலோ – ஒரு தவிர்க்க முடியாத தேவையின் பயன், அடக்க முடியாத உத்வேகத்தின், உணர்வின் வெளிப்பாடு என்று இவர்களுக்கு நீங்கள் சொல்லுங்கள். சோதனைக்காகச் சோதனை செய்யும்பொழுது பிள்ளையார் குரங்காக ஆகிறார்.
இலக்கிய வட்டம் இதழ் 6: 31.1.1964