வாசகர் மறுவினை

dual-screen-wallpaper-36

அன்புள்ள ஆசிரியருக்கு,

நரோபாவின் சொல்வன புத்தக அறிமுகங்களைப் படித்து வருகிறேன். அருமையாக எழுதுகிறார். அதுவும் இந்த இதழில் தரம்பாலின் ”காந்தியை அறிதல்” கட்டுரை மிக நேர்த்தியாக எழுதப்பட்ட ஒன்று. புத்தக அறிமுகம் என்பது மேற்கோள்களின் குவியல்களல்ல, ’அந்தப்புத்தகம் மாதிரி இருந்தது, இந்தப்புத்தகம் மாதிரி இருந்தது’ என்று தன் மேதாவிலாசத்தைக் கடைவிரிக்கும் விஷயமுமல்ல அது. ஒரு புத்தகத்தின் நேர்மையான விமர்சனம் என்பது, அந்தப்புத்தகம் எவ்விதத்தில் தன்னுடன் உரையாடியது, தன் எண்ணங்களைப் பாதித்தது, தன் பார்வைக்கோணத்தை மாற்றியமைத்தது என்பதையெல்லாம் பேசுவது. அந்த வகையில் நரோபாவின் புத்தக அறிமுகங்கள் தனித்தன்மையுடன் பிரமாதமாகவும் நேர்த்தியாகவும் அமைந்துள்ளன. அவருக்கு சிறப்பான புத்தக அறிமுகங்களுக்கு என் வாழ்த்துக்களும் நன்றிகளும்.

அருணகிரி

அன்பு ஆசிரியருக்கு,

இன்று வெளியான சொல்வனத்தில் க.நா.சு. பற்றிய கட்டுரைகள் அனைத்தையும் ஒரே மூச்சில் படித்து விட்டேன். மைத்ரேயன் கட்டுரை படித்தவுடன் என் கண்களில் நீர் வழிந்தது. மிக நன்றாக எழுதி இருக்கிறார். அந்த தஞ்சை பிரகாஷ் மேற்கோள்கள் மிக அருமை. என்ன ஒரு ஆளுமை.

ஏதோ ஒரு ஓரத்தில் வெயில் நுழைய முடியாத சிறு துவாரத்தின் வழியே இலக்கிய உலகைப் பார்க்கும் என்னைப் போன்ற பாமர வாசகனுக்கும் ஒரு முறை க.நா.சு வைப் பார்க்கும் மற்றும் பேசி கேட்கும் வாய்ப்பு கிடைத்தது. அந்த நினைவு இருட்டு அறையின் ஒரு மூலையில் சிறிய வெளிச்சமாக என் நினைவில் இன்றும் இருக்கிறது. அதை ஒரு முறை என் தளத்தில் பகிர வேண்டும்.

எந்த எதிர் பார்ப்பும் இல்லாமல் நீங்கள் சொல்வனம் மூலம் செய்து கொண்டிருக்கும் சேவை மென்மேலும் தொடர என் வாழ்த்துக்கள்.

-பாஸ்கர் லக்ஷ்மன்

Job Well Done. it has been great pleasure reading this edition of Solvanam.

Thanks
Ram

அன்பு ஆசிரியருக்கு,

எல்லைகளுக்கு அப்பால் – குல்திப் நய்யார் சுயசரிதை கட்டுரை சுவாரசியமாக இருந்தது. மிகப் பெரும்பாலான வடஇந்திய அறிவுஜீவிகள்/பத்திரிக்கையாளர்களுக்கு இலங்கைப் பிரச்சினையைக் குறித்த அக்கறையின்மை ஒருமாதிரி நமக்கு தெரிந்ததுதான்.இதை இந்த கட்டுரையும் வெளிப்படுத்துகிறது.

//ஒரே சமயத்தில் தமிழனாகவும் இந்தியனாகவும் இருக்க நாம் கொடுக்கும்’ சிறு விலைகளில் ஒன்று போலும்//

சரியாக சொல்லியிருக்கிறார், கட்டுரையாளர்.

லஷ்மண் – இந்திய கிரிக்கெட்டிற்கு கிடைத்த அற்புதம். அவரைப் பற்றிய இந்தக்கட்டுரையை மிக ஆவலுடன் வாசித்தேன். ஆசிரியர் ஏமாற்றவில்லை.

//ட்ராவிட் திணறிக்கொண்டிருந்தார் – சாதாரணத் திணறல் இல்லை காப்பியத்திணறல்.//

அற்புதம்!

//அவரது கவர் ட்ரைவ்கள் அவருடைய பேட்டைப் பிய்த்துக்கொண்டு வந்தன. அந்த வீச்சுகளில் ஒரு அபாரமான புத்துணர்ச்சி இருந்தது. புத்தம் புதிய கரன்ஸி நோட்டுக் கற்றையை எண்ணுவது போல சரக் சரக் சரக் என்று இருந்தது//

புன்னகைக்க வைக்கும் உவமைகள்…

தமிழில் இந்த மாதிரி விளையாட்டுக்கட்டுரைகளை வேறு எங்கும் எழுதுகிறார்களா, தெரியவில்லை. விளையாட்டு இலக்கியம் என்று ஒன்று இருந்தால் அதை இந்தக்கட்டுரையை முதலில் பரிந்துரைப்பேன்.

சொல்வனத்தில் விளையாட்டிற்கு என (கிரிக்கெட் மட்டுமல்ல) ஒரு பகுதி இருப்பது மிகவும் வரவேற்கத்தக்கது.

நீல் ஆர்ம்ஸ்ட்ராங் – ஒரு நினைவஞ்சலி::நல்ல கட்டுரை, நிறைய விஷயங்களை ஆசிரியர் அவருக்கே உரித்தான பாணியில் சுவாராசியமாக சொல்லியிருக்கிறார்.

இந்த இதழ் ஒரு கா.நா.சு பொக்கிஷ இதழ்தான், சந்தேகமில்லை. அத்துடனே நிறுத்திவிட்டு மற்ற வழக்கமான பகுதிகளை அடுத்த இதழில் கொடுத்திருக்கலாம். ஏனெனில் இந்த இதழ் இரு வருட கலைமகள் தீபாவளி மலர்களை சேர்த்து பைண்ட் செய்த கனம் கனக்கிறது! பேப்பர் ப்ரிண்ட் செய்யத்தேவையில்லைதான், அதற்காக இப்படியா!

சிவா கிருஷ்ணமூர்த்தி

dual-screen-wallpaper-37