நாகரஹாவு

அண்டை கிரகத்தினரான எலிகள் பூமியில் மனிதர்களை குடிவைத்து பரிசோதனை செய்வதாய் டக்லஸ் ஆடம்ஸ் என்ற ஆங்கில எழுத்தாளரின் காமெடி நாவலில் வரும். நாய்களைப் பற்றியும் எனக்கு அதே சந்தேகம்தான். பின் எப்படி, எல்லாப் பாடும் பட்டு நாம் வீட்டை வாடகைக்கோ இல்லை கட்டியோ முடித்து நிம்மதியாய் குடி இருக்கலாம் என்று வந்தால் வாலைக் குழைத்து குழைத்து , நக்கி, பாவமாய் பார்த்து நம்மை மயக்கி நம்முடன் குடியேறி விடுகின்றன. அப்புறம், வீட்டைத் தமதாக்கிக் கொண்டு நமக்கே தெரியாமல் நம்மை ராஜ்ஜியம் செய்கின்றன.

எங்கள் வீட்டில் ஒன்று போதாதென்று ரெண்டு தோட்டத்தில் புல் போட்டால் அதில் பிரண்டு அதைக் கடித்துப் போட்டு மண்ணைத் தோண்ட ஆரம்பித்துவிடும். ரெண்டே நிமிஷத்தில் ஒரு அடிக்குத் தோண்டி விடும். இந்த அழகில் எனக்கு தோட்டத்தில் கறிகாய் போடும் ஆசை வந்து தொலைக்கலாமா? வந்தது. பாத்தி எல்லாம் கட்டி கத்தரி, வெண்டை, கொத்துமல்லி, குடமிளகாய் என்று போட்டு அவை செடியாகி வரும்வரை நாய்களை அங்கே போகாமல் இருக்க பழக்குவதற்காக 15 நாட்களுக்கு ‘நோ’ ‘நோ” என்று சொல்லிக் கொடுத்துக்கொண்டிருந்தேன். பின்பக்கம் போனாலும் செடிகளைச் சுற்றிப் போக ஆரம்பித்தன. ‘சொல்லிக் கொடுத்தால் புரிகிறது. புத்திசாலிகள்தான்’ என்று சந்தோஷமாயிற்று. கறிகாய் வளர்க்கும் யோசனை முன்பே வராமல் போச்சே என்று கிலோ கிலோவாய் நான் விளைக்காது வீணாய் போன கத்தரி, கீரையை நினைத்து வருத்தப்பட்டேன். அதற்கு இரண்டு நாளைக்குப் பின்பு இரண்டும் எதையோ துரத்துகிறேன் என்று செடிகள் மேலெல்லாம் ஓடி குதித்து தோட்டமே துவம்ஸம்.

எடுத்தேன் ஒரு பிரம்புக் குச்சியை. ரெண்டையும் துரத்திப் பிடித்து அடிக்கக் கோலை ஓங்கினால் மனசு வந்தால்தானே. ”பாவமாய் தரையில் படுத்து ஸாரி சொல்கிறமாதிரி பார்த்தால் மனிதர்கள் உலகத்தில் தண்டனையிலிருந்து தப்பிவிடலாம்” என்று சொல்லித்தான் அண்டை கிரகத்திலிருந்து நம் மேல் ஏவி இருக்கிறார்களோ என்னவோ!

குச்சியை தூர எறியப்போன போது வேலி போடும் யோசனை வந்தது. இன்னும் இத்தனை பிரம்புக் குச்சிகளை வாங்கி பெயிண்ட் எல்லாம் அடித்து செடிகளைச் சுற்றி வேலியை முக்கால்பாகம் கட்டி முடிக்கையில் கயிறு தீர்ந்து போச்சு.

“இரும்மா. அன்னிக்கு நீ தூக்கிப் போடுன்னு கொடுத்த கய்று கொஞ்சம் அந்தபக்க அலமாரி உள்ளே சுருட்டி வெச்சேன். எடுத்தாரேன்” என்று போனாள் என் வீட்டில் வேலை செய்யும் எல்லம்மா. சமயம் கிடைத்த போதெல்லாம் என்னை மட்டம் தட்டி தன் சாமர்த்தியத்தைத் தானே புகழ்ந்துகொள்வதில் அவளுக்கு ஒரு சந்தோஷம்.

‘அம்மா. இங்கே கொஞ்சம் வா. இங்கே என்ன வந்து உக்காந்திருக்குது பாரு.’

‘என்ன. நீ சேத்து வெச்சிருக்கிற பாட்டில், பால்கவர் எல்லாத்துக்கும் எலி , பெருச்சாளி எல்லாம் வரும். கயிறை எடுத்துண்டு வா. அப்புறம் வந்து பாக்கறேன்.’

‘இங்கே வந்து பாரு. என்ன வந்திருக்குன்னு.’

அங்கே போனால் தாம்புக்கயிறு மொத்தத்தில் சுருட்டிக்கொண்டு சுவாதீனமாய் அலமாரிக்குள்ளே ஒரு பாம்பு. சாம்பல் கலரில் கருப்புப் புள்ளிகளுடன் நாலு ஐந்தடி நீளம்.

cobra

சமையல்கட்டை அடுத்து பாத்திரம் தேய்க்க என்று இருந்த இடத்தில் சோப்பு, சபீனா எல்லாம் வைத்துக்கொள்ளும் அலமாரி அது. 4 அடி முன்னால் இடப்பக்கம் திரும்ப தீர்மானித்திருந்தால் சமையல் அறைக்குள்ளே வந்திருக்க வேண்டியது.

உடம்பெல்லாம் சில்லென்று நடுங்கியது. சமையலறை உள்ளே புகுந்து முதலில் அந்தப்பக்கக் கதவைப் போட்டேன். முன்னே இருந்த நாய்களை உள்ளே கொண்டு வந்துவிட்டு எல்லமாவையும் உள்ளே கூப்பிட்டால் வரமாட்டேனென்று அங்கேயே இரண்டடியில் நின்றுகொண்டு அதனுடன் பேச ஆரம்பித்துவிட்டாள்.

‘அம்மா, நேத்து நாக பஞ்சமி உனக்குப் பால் வைக்கலை. பேஜார் பண்ணிக்காதே பேசாமே வந்த வழியே போய்டு. இன்னிக்கு வந்து புத்துலே பால் ஊத்தறேன். நல்ல அம்மா இல்லே நீ. வந்துடும்மா’

நாகம்மாவோ, நாகராஜாவோ தெரியாது, அசையாமல் அவளைப் பார்த்துக்கொண்டிருந்தது. இதற்குள் எனக்குக் கொஞ்சம் நடுக்கம் நின்று, மூளை வேலை செய்ய ஆரம்பித்தது.

‘எல்லம்மா. உரக்கப் பேசி அதை பயப்படுத்தாதே. பக்கத்து வீட்டில் கட்டிட வேலை செய்யும் பையன்களில் யாரையாவது கூப்பிட்டு அதைவெளியே அனுப்பிவிடப் பாரு. விஷம் இல்லாத பாம்பாய்தான் இருக்கும். பக்கத்திலே தோண்டுகிறார்கள் இல்லையா அதான். இல்லையானா நேத்து மஞ்சள் குங்குமம் என்று புத்தினுள்ளே கொட்டியதிலே வெளியே வந்து பத்திரமாய் இங்கே உக்காந்து விட்டதோ என்னமோ’ என்றேன்.

ஏதோ என் நல்ல காலம் எல்லம்மா நான் சொன்னதை கேட்டுக்கொண்டு பக்கத்து ப்ளாட்டில் வேலை செய்யும் பையன்களைக் கூப்பிட்டாள். இரண்டு இளவயது பையன்கள் வந்தார்கள். நேரே அலமாரிப்பக்கம் போய் ஒரு கோலால் தட்டியதும் சரேல் என்று படத்தை விரித்தது பாம்பு.. ‘ஐயோ நாகராவு நாகராவு’ (நாகரஹாவு – நாகப்பாம்பு) என்று அலறிக்கொண்டு ஓடி வந்தனர் இரண்டு பேரும். பாம்பு மீண்டும் அலமாரிக்குள்ளே படுத்தது.

இப்போ பார்த்து வீட்டு மனிதர் டூரில். யாரைக் கூப்பிடுவது என்று கூடத் தெரியவில்லை. போதாக்குறைக்கு நாய்களுக்கும் வெளியே என்னமோ நடக்கிறது என்று புரிந்துபோக வெளியே விடச்சொல்லி ஒரே கூச்சல். வெளியே கட்டிப்போடவும் பயம். எங்காவது பாம்பு வந்து இவற்றைக் கடித்துவிட்டால்? கட்டாமல் விடவும் பயம். நேரே அலமாரியிடம் போய் அதை வம்புக்கு இழுத்து சண்டை ஆகும். இதற்கு நடுவில் எல்லம்மா மீண்டும் அதனிடம் பேசப்போய்விட்டாள்.

‘பேசாமே வந்த வழிய போயிடு. உன்னை யாரும் ஏதும் செய்யமாட்டாங்க.’

அது கடுப்பாகி இவளைக் கடித்து வைத்தால்? இவளை வேறு தூக்கிக்கொண்டு ஆஸ்பத்திரிக்கு ஓட வேண்டும். உயிருக்கு ஏதானும் ஆகி வைத்தால். என்ன செய்வது என்று யோசிக்கக்கூட என்னால் முடியவில்லை. தலை பயங்கரமாய் வலித்தது. பூஜை அறைக்குப் போய் விபூதியை எடுத்து நெற்றியில் தடவிக்கொண்டேன். ’சுப்ரமணியா, என்ன தப்பு செய்திருந்தாலும் மன்னித்து விடு. இதைப் போகச் சொல்லு’ என்று வேண்டிக்கொண்டேன்.

சட்டென்று நினைவு வந்தது. பேபரில் வந்த கட்டுரையிலிருந்து பாம்பு மீட்பாளர் (ஸ்னேக் ரெஸ்க்யூவர்) நம்பரை எடுத்து வைத்தது. தேடி எடுத்துக் கூப்பிட்டேன்.

’இன்னும் 20 நிமிடத்தில் வருகிறேன் மேடம். பாம்பைக் கலவரப்படுத்தாமல் அது நகர்ந்தால் எங்கே போகிறது என்று மட்டும் கவனித்துக் கொண்டிருங்கள். பிடித்தால் 600 ருபாய். இல்லாவிட்டால் 350’ என்றார்.

அவர் 6000 என்று சொல்லி இருந்தாலும் பேரமா பேச முடியும்?

அந்த இருபது நிமிடங்களில் பக்கத்து வீட்டில் வேலை நின்று போய் அத்தனை ஆட்களும் இங்கே வேடிக்கை பார்க்க வந்துவிட்டனர். ரோட்டில் போவோரும் இந்தக் கூட்டத்துடன் சேர்ந்துகொள்ள வாசல் முழுவதும் ஒரே கூட்டம். ‘நாகப்பாம்பு இல்லை, சாதா எலி தின்னும் பாம்புதான்’ என்கிறான் ஒருவன். அது படம் எடுத்ததைப் பார்த்த இருவரும் ஐந்து விரல்களையும் அகல் விரித்து அதன் படம் எப்படி இருந்தது என்று விவரித்துக்கொண்டிருந்தார்கள். மறுபடியும் படம் எடுக்குமா என்று ஆசையாய் சிலர் பார்த்துக்கொண்டிருந்தார்கள் காம்பௌண்டுக்கு வெளியே ஜாக்கிரதையாய் நின்றுகொண்டு. செல்போனை வைத்து சிலர் படம் எடுத்துக்கொண்டிருந்தார்கள். பாம்பு இவர்களை லட்சியம் செய்யாததுபோல் இருந்தாலும் இவர்கள் போடும் சப்தத்தில் வெளியே கிளம்பி விடப்போகிறதே என்று எனக்குக் கவலை. கந்தர் சஷ்டி கவசம் சொல்ல ஆரம்பித்தேன்.

500

திடீரென்று எதோ சலசலப்பு. எல்லம்மா அவசரமாய், ‘அம்மா பாத்ரூம் ஜன்னலை மூடும்மா, ஜன்னல் மேலே ஏறுதும்மா’ என்கிறாள். அப்புறம் உற்றுப் பார்த்துவிட்டு ‘இல்லைம்மா, அங்கியேதான் இருக்குது’ என்கிறாள். இத்தனை ரகளையில் எனக்கு நெஞ்சு படபடத்து நெற்றியெல்லாம் வேர்க்கிறது. இதற்கு நடுவே நாய்களை அடக்க நான் பட்ட பாடு வேறே. ’ஓ’ என்று கத்தினால் கொஞ்சம் உடம்பு ஒரு நிலைக்கு வரும்போல இருந்தது. முன்பக்க ஜன்னலைத் திறந்து வாசலில் இருந்த கூட்டத்தைப் பார்த்துக் கத்தினேன் ’தயவு செய்து கூச்சல் போட்டு கலாட்டா பண்ணாதீர்கள். அது பயந்து வெளியே வந்தால் எல்லோருக்கும் கஷ்டம்.’ ஒரு பத்து பேர் தலையாட்டிவிட்டுக் கலைந்து போனார்கள். கொஞ்சம் பேச்சு சப்தம் குறைந்தது.

சொன்னபடி இருபது நிமிடங்களில் வந்து சேர்ந்தார் பாம்பு மீட்பாளர். இந்தப் பகுதிகள் முன்பு வனாந்திரமாய் இருந்ததினால் பாம்பு நடமாட்டம் அதிகம். முதலில் குடியிருப்புகள் இங்கு வந்தபோது பாம்புகளை அடித்துக் கொன்று கொண்டிருந்தனர். பின்பு வன இலாகா இத்தகைய ஊழியர்களின் போன் விபரங்களை விளம்பரப்படுத்தி அவற்றை மீட்டுச் சென்று காட்டில் விடும் ஏற்பாட்டைச் செய்தனர். பாம்பு பிடிப்பவர்கள் என்று இருந்த பெயரை பாம்பு மீட்பவர்கள் என்றும் மாற்றினார்கள். பெயரை மாற்றினால் என்ன மக்களின் மனசு மாறி விடுமா என்ன?

வந்தவர் கூட்டத்தைப் பார்த்து ‘எங்கே’ என்றார். எல்லோரையும் விலகச் சொல்லி விட்டு காம்பௌண்ட் உள்ளே வந்து நேரே அலமாரியிடம் போனார். ஒரு நடுக்கம் இல்லை, சலனம் இல்லை. கையிலிருந்த ஒரு கோலால் அலமாரியைத்தட்ட அது வெளியே வந்தது. ஒரு பாட்டிலை அதன் முன் காட்ட சமர்த்தாய் உள்ளே போய் உட்கார்ந்துகொண்டது. பாட்டிலை மூடி விட்டு “ஆகோயித்தம்மா’ என்றார். மொத்தம் 3 நிமிஷம்.

என்ன வகை பாம்பு என்று கேட்டேன். ’ஸ்பெக்டகில் கோப்ரா’ என்றார். தலையில் நாமம் இருக்குமே அதுவா என்று சைகையில் கேட்டேன். ’ஆமாம்’ என்றார். கிருஷ்ணன் காளிங்கனின் மேல் கால் வைத்ததினால் அதற்குக் கிடைத்த அடையாளம் அந்த நாமம் என்பார்கள். எண்ணிக்கையில் குறைந்து வரும் எண்டேஞ்சர்ட் வகை!

கூட்டம் “தொரசி, தொரசி” (காட்டுங்கள்) என்று அவரை சூழ்ந்து கொண்டது. கண்ணாடி பாட்டிலுக்குள் இருப்பதை ஆர்வமாய் பார்ப்பார்கள். வெளியே பார்த்துவிட்டால் கல்லால் அடிப்பார்கள். நல்ல வேளை, இதை காட்டுக்கு நல்லபடியாய் அனுப்ப முடிந்ததே என்று கொஞ்சம் சந்தோஷமாய் இருந்தது. அதற்குத்தான் என் வீட்டைத் தேடி வந்ததோ, சுவாமிமலை முருகா என்று எங்கள் குலதெய்வத்தின் பெயரைச் சொல்லிக் கொண்டேன்.

ஜன்னலை விட்டு நகர்ந்து பணம் எடுக்க உள்ளே போனேன்.

“மேடம் கொஞ்சம் வரீங்களா, ஒரு ஸைன் வேண்டும்” என்றார்.

’ஒரு நிமிடம். இவற்றைக் கட்டிவிடுகிறேன் ’ என்று நாய்களைப் பிடித்துக் கொண்டு வெளியே வந்தேன்.

‘ஐயோ.நாயா. கட்டுங்கள். கட்டுங்கள்’ என்று கேட்டுக்கு வெளியே ஓடினார் கையில் பாம்பு பாட்டிலைப் பிடித்துக்கொண்டே.