சிற்றிலக்கியங்கள் எனப்படும் பிரபந்தங்கள் – பகுதி – 16

player

பிரபந்தம் எனில் நன்கு கட்டப்பட்டது என்று பொருள். கட்டப்படுவது என்பது இலக்கண வரையறைகளால் இறுக்கமாகச் செய்யப்படுவது என்று பொருள்கொள்ளலாம். பந்தம் என்றால் கட்டு என்றுதானே அர்த்தம். மேலும் அளவில் சிறியதானது. இவற்றைத்தாம் நாம் சிற்றிலக்கியங்கள் என்றோம் இதுகாறும். வட்டார அளவில், கடவுள் மீதும், மன்னர்கள் மீதும், வள்ளல்கள் மீதும், தலைமக்கள் மீதும் அவர்களைப் போற்றியும் விதந்தும் துதித்தும் பெருமை பேசியும் சிறப்புகள் ஏற்றியும் மேல்நிலை ஆக்கியும் பிரபந்தங்கள் பாடப்பட்டன.

‘பிள்ளைக்கவி முதல் புராணம் ஈறாகத்
தொண்ணூற்றாறு எனும் தொகையதான’

என்று பிரபந்தங்கள் தொண்ணூற்றாறு என்கிறது பிரபந்த மரபியல் நூலின் முதல் சூத்திரம் எனும் தகவல் கிடைக்கின்றது. பன்னிரு பாட்டியல், பிரபந்தங்கள் 62 வகை என்றும், வெண்பாப் பாட்டியல் 53 வகை என்றும், நவநீதப் பாட்டியல் 45 வகை என்றும் கூறுகின்றனர். எனக்கு எல்லாமே தகவல்கள்தாம். நான் நேரடியாக எந்த நூலையும் கண்ணுறவில்லை.

ஆனால் தமிழ் ஆய்வாளர்களும் அறிஞர்களும் சிற்றிலக்கிய வகைகளை நெறிப்படுத்துவதன் இயலாமை பற்றிப் பேசுகின்றனர். திட்டவட்டமான வரையறை சாத்தியமில்லை போலும்.

ஆற்றுப்படை நூல்கள் அனைத்துமே சிற்றிலக்கிய மரபு என்கின்றனர் அறிஞர்கள். அந்தக் கணக்கில் திருமுருகாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, பொருநராற்றுப்படை யாவும் சங்க இலக்கியங்களினுள் அடைபட்ட சிற்றிலக்கியங்கள் ஆகும்.

ஆற்றுப்படை நூல்கள் நான்கும் பத்துப்பாட்டு நூல்களினுள் வருபவை.

மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் செய்தது திருமுருகாற்றுப்படை. நூல் முழுக்க நேரிசை ஆசிரியப்பா, 317 அடிகள். முருகனிடம் ஆற்றுப்படுத்தும், வழி சொல்லி அனுப்பும் நூல் இது. இதற்குப் ‘புலவராற்றுப் படை” எனும் பெயரும் உண்டு.

முடத்தாமக் கண்ணியார் எனும் பெண்பாற்புலவர் பாடியது பொருநராற்றுப்படை. பத்துப்பாட்டு பாடிய எட்டுப் புலவர்களில் இவர் ஒருவரே பெண்பாற்புலவர். கவனிக்க வேண்டியவர். கவனித்துக் கொள்க. இதுவும் நேரிசை ஆசிரியப்பா, 248 அடிகள். பரிசில் பெற வேண்டி, பொருநர்களை கரிகால் பெருவளத்தானிடம் ஆற்றுப்படுத்தும் நூல். பொருநன் என்ற சொல்லுக்கு திறமையான போர்வீரன் என்று பொருள். இவ்விடத்து, பொருநர் என்பவர் களத்து மேட்டில், போர் முகத்தில், திருவிழாக்களில் வேடமணிந்து ஆடிப் பாடுகிறவர்கள்.

பாணர் எனப்படுபவர் இசைவாணர்கள். வாய்ப்பாட்டு, தோல்கருவி, துளைக்கருவி, நரம்புக்கருவி என இசைப்பவர். யாழ் இசைப்பவர் யாழ்ப்பாணர். திருநீலகண்ட யாழ்ப்பாணர் எனும் சிவனடியார் உங்களுக்கு நினைவுக்கு வரலாம்.

சிறுபாணாற்றுப்படை யாத்தவர் இடைக்கழி நத்தத்தனார். 268 அடிகளில் நேரிசை ஆசிரியப்பா. ஒய்மா நாட்டு நல்லியக் கோடனிடம் சிறு பாணர்களை பரிசில் பெற ஆற்றுப்படுத்துவது இந்நூல். இங்கு நினைவில் கொள்ள வேண்டியது – சிறிய யாழை இசைப்பவர் சிறுபாணர்கள். பெரிய யாழ், பேரியாழ் இசைப்பவர் பெரும்பாணர்கள். தவிர்த்து, சிறுபாணர், பெரும்பாணர் என்பது சாதிப்பிரிவு என்பதல்ல.

கடியலூர் உருத்திரங் கண்ணனார் இயற்றிய நூல் பெரும்பாணாற்றுப்படை. நீங்கள் நினைப்பது சரிதான். இதுவும் நேரிசை ஆசிரியப்பா. 500 அடிகள். மேற்சொன்ன ஆற்றுப்படை நூல்களில் அளவிற் பெரியது இந்நூல். தொண்டைமான் இளந்திரையனிடம் பரிசில் பெற பெரும்பாணர்களை ஆற்றுப்படுத்தும் நூல் இது.

ஒரு சுவாரசியத்துக்காக, பொருநர் ஆற்றுப்படை நூலில் இருந்து சிலவரிகள்:

குறிஞ்சி பரதவர் பாட, நெய்தல்
நறும் பூங்கண்ணி குறவர் ஆட;
கானவர் மருதம் பாட, அகவர்
நீல் நிற முல்லைப் பல் திணை நுவல;
கானக் கோழி கதிர் குத்த,
மனைக் கோழி தினைக் கவர;
வரை மந்தி கழி மூழ்க,
கழி நாரை வரை இறுப்ப;

இது நேரிசை ஆசிரியப்பா. இலகுவான வெளிப்பாட்டு முறை. எதுகை, மோனை எனக் கடும் நெருக்கடிகள் இல்லை. அதனால்தான் க.நா.சு. சொன்னார், நவீனக் கவிதை வந்து சேரவேண்டிய இடம் சங்கப் பாடல்கள் என. எளிமையான ஓசை நயம் கவனியுங்கள். சிறிய பயிற்சி உடையவருக்கு உத்தேசமாகப் பொருள் புரியும். என்றாலும் தெளிவாகத்தான் புரிந்து கொள்வோமே!

நெய்தல் நில மக்களான பரதவர், குறிஞ்சிப்பண் பாடினர். குறிஞ்சி நில மக்களான குறவர், தலையில் நெய்தல் நறும்பூங்கண்ணி சூடினர். முல்லை நில மக்களான கானவர், மருதப் பண்ணைப் பாடினர். மருதநில மக்களான அகவர் என்னும் உழவர், நீல நிற முல்லைக் கொடி படர்ந்த காட்டு வனத்தைப் புகழ்ந்தனர். முல்லை நிறத்துக் கானக்கோழி, மருத நிலத்து நெற்கதிர்களைக் கொத்தின. மருத நிலத்து வீட்டுக் கோழிகள் குறிஞ்சி நிலத்துத் தினை கவர்ந்தன. மலைக் குரங்குகள், நெய்தல் நிலத்துக் கழிகளில் மூழ்கி நீராடின. நெய்தல் நிலத்துக் கழிகளில் திரியும் நாரை, மலைகளில் சென்று தங்கின.

வாசித்துத் தீராது நமக்கு வாழ்நாளில்.

பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் அனைத்துமே சிற்றிலக்கிய மரபைச் சார்ந்தவை என்கிறார்கள். அவ்வாறாயின் – திருக்குறள், நாலடியார், பழமொழி நானூறு, நான்மணிக் கடிகை, இன்னா நாற்பது, இனியவை நாற்பது, கார் நாற்பது, களவழி நாற்பது, ஐந்திணை ஐம்பது, ஐந்திணை எழுபது, திணைமொழி ஐம்பது, திணைமாலை நூற்றைம்பது, திரிகடுகம், ஆசாரக்கோவை, சிறுபஞ்சமூலம், முதுமொழிக் காஞ்சி, ஏலாதி, கைந்நிலை எனும் பதினெட்டு நூல்களும் சிற்றிலக்கிய மரபின எனலாம்.

மாதிரிக்காக, கைந்நிலை பற்றிய தகவல்களை மட்டும் பார்ப்போம். மொத்தம் அறுபது பாடல்கள். அவற்றுள் பதினேழு பாடல்கள் எவராலும் பொருள் காண முடியாத அளவில் சிதைந்து போயுள்ளன. நூல் மொத்தமும் நேரிசை, இன்னிசை வெண்பாக்கள். இயற்றியவர் பெயர், தெய்வாதீனமாக அறியக் கிடைக்கிறது. மாறோக்கத்து முள்ளிநாட்டு நல்லூர்க் காவிதியார் மகனார் புல்லங்காடன்னார்.

எவ்வளவு நன்றாக இருக்கிறது பெயரை வாசிக்க? கண்டிப்பாக இது புனைபெயர் இல்லை. செம்புலப் பெயல் நீரார், விட்ட குதிரையார் என்பல போலப் பாடல்களிலிருந்து அடையாளமாக ஆளப்பட்டதும் அல்ல. ஆசையாக நானும் சொல்லிப் பார்த்துக் கொள்கிறேன் – நாஞ்சில் நாட்டு வீரநாராயணமங்கலத்து ஒரேர் உழவர் கணபதியாபிள்ளை மகனார் நாஞ்சில் நாடனார். ஆகா! ஆனந்தமாக இருக்கிறது.

ஐந்திணைகளான குறிஞ்சி, பாலை, முல்லை, மருதம், நெய்தல் எனும் வரிசைக் கிரமத்துப்படி, திணைக்குப் பன்னிரண்டு பாடல்களாக, ஆக அறுபது பாடல்கள். என்ன செய்வது, எல்லாம் தமிழன் கொடுப்பினை என்றாலும் பாலைத் திணையில் ஒரு பாடலை பார்ப்போம்.

’சுறா எறி குப்பை சுழலும் கழியுள்,
இறா எறி ஓதம் அலற இரைக்கும்
உறா அ நீர்ச் சேர்ப்பனை உள்ளி இருப்பின்
பொறா அ என் முன்கை வளை.’

காமம் மிக்க கழி படர்க் கிளவி இது என்கிறார் உரையாசிரியர். தலைவி, தோழியிடம், காமம் மிகுந்து, தலைவனின் பிரிவு ஆற்றாமையால் பேசுவது.

சுறா மீன்கள் வெகுண்டு மோதி, அதனால் அடி வாங்கிய மீன் குவியல்கள் சுழல்கின்ற கழி நிலத்துள் அலையானது இறாமீன்களை வீசி எறிந்து அலறி இரையும். என்னை வந்து கூடாத தலைவனையும் பிரிவையும் எண்ணி என் முன்கை வளைகள் நழுவி விழுகின்றன என்பது பொருள்.

குறிப்புப் பொருள்: சுறா மீன்கள் கொண்டு வந்து எறியும் குப்பை சுழல்கின்ற கழி போல, தலைவனிடம் இன்பம் துய்த்து நான் இல்லத்துள் சுழல்கின்றேன். சுறாமீன்கள் இறாமீன்களை எறிந்து ஆரவாரம் செய்வதை ஒத்து பெண்டிர் என்னை அலர் தூற்றுகின்றனர் என்பது.

ஒரு பதிப்பில் சுழலும் கழியுள் என்பது சுழலும் சுழியுள் என்றிருக்கிறது. இது நம் தமிழ்த் தொண்டு.

அடுத்த பாடலும் மிகச் சிறப்பான பாடல்.
‘தாழை குருகு ஈனும் தண்ணம் துறைவனை
மாழை மான் நோக்கின் மடமொழி! – நூழை
நுழையும் மடமகன் யார்கொல்? என்று அன்னை
புழையும் அடைத்தாள் கதவு.’

இரவுக் குறிவைத்த தலைமகன் சிறைப் புறத்தானாக நிற்க, தலைமகட்கு தோழி சொல்லுவாளாய், படைத்த மொழிந்தது. இரவுக் குறியில் தலைவியைப் புணர வந்த தலைவன், வேலிக்கு வெளியே நிற்கிறான். அப்போது தோழி, தலைவிக்குச் சொல்வது போல, கற்பனையாகக் கூறுவது:

மாம்பிஞ்சு போன்றும் மானின் விழி போன்றும் கண்களை உடைய மென் மொழியாளே! தாழை மரமானது குருகுப் பறவை போன்று வெண்மையான தாழம்பூ மடல்களை விரிக்கும் குளிர்ந்த அழகிய நீர்த்துறையை உடைய நம் தலைவனை யாரென அறியாமல் நம் தாய் ஏசுகிறாள். புறக்கடை வாயில் வழியில் தினந்தோறும் வீட்டில் புகுந்து செல்லும் மட மகன் யார்கொல் என்று. மேலும் கதவில் இருக்கும் சின்னஞ்சிறு துளைகளைக் கூட அடைத்துப் பூட்டி விட்டாள் என்பது பாடலின் பொருள்.

தலைவிக்குச் சொல்வது போல, தோழி தலைவனுக்குக் கூறுவதாக அமைந்த பாடல் இது. தலைவி வெளியே வர இயலாது. எனவே அவளை முறைப்படி மணந்துகொள்வதைத் தவிர வேறு வழியில்லை என்று தலைவனுக்கு உணர்த்துவது.

இவைதாம் சங்கச் செய்யுளின் நுட்பம். மேலும் இந்தப் பாடல் மூலம் இரண்டு அற்புதமான சொற்களுக்கு அறிமுகம் ஆகிறோம். மாழை – மாம்பிஞ்சு, மா வடு, நூழை – புறக்கடை வாசல். ’தாழை குருகு ஈனும்’ எனும் தொடர் எனக்கு அற்புதமாகப் படுகிறது.

எது எவ்வாறாயினும் சிற்றிலக்கியங்கள் 96-ன் உள்ளும் தலையாயவை என்று ஆற்றுப்படை, அந்தாதி, மாலை, பதிகம், கோவை, உலா, பரணி, கலம்பகம், பிள்ளைத்தமிழ், சதகம், தூது, மடல், பள்ளு, குறவஞ்சி எனும் பதினான்கைச் சொல்கிறார்கள். அவற்றுள்ளும் இதுகாறும் நாம் சிலவற்றைப் பார்த்திருக்கிறோம்.

nanjil-nadan-portrait’வேலையற்ற நாசுவன் கழுதையைப் போட்டு சிரைத்தானாம்’ என்று பழமொழி ஒன்றுண்டு. நண்பர்கள் சிலர் சொன்னார்கள், எனதிந்த அரைவேக்காட்டுக் கட்டுரைகள் பற்றி. சும்மா இருத்தலே சுகம் என்றாலும் சும்மா இருக்க முடியவில்லை. ஏதோ ஒரு உந்துதலில் ‘செந்தமிழ் காப்பியங்கள்’ என்றொரு கட்டுரை எழுதி, சிறு காப்பியங்களை விட்டு வைப்பானேன் என்று, ‘ஐஞ்சிறு காப்பியங்கள்’ எழுதி, அதுபோல் சிற்றிலக்கியங்கள் பற்றியும் எழுதத் துணிய, அது நாஞ்சில் பிடித்த புலிவால் ஆயிற்று. வாலை விட்டு விட்டால், புலி அடித்துத் தின்றுவிடும் என்பதால், வாலை விடாமல், அது இழுத்த இழுப்புக்கு எல்லாம் ஓடிக் கொண்டிருந்தேன். அல்லது ஆங்கிலத்தில் சொல்வது போல, bear hug. அதற்காக ஆயுளுக்கும் வாலைப் பிடித்துக் கறங்கிக் கொண்டிருக்க முடியுமா? எனவே ‘சிற்றிலக்கியங்கள் எனும் பிரபந்தங்கள்’ எனும் இந்தத் தொடருக்கு இது இறுதிக் கட்டுரை.

பிரபந்தங்கள் தொண்ணூற்றூ ஆறு எனும் அறுதிப் பட்டியலை யார் வரையறுத்தார்கள் என்ற தகவல் என்னிடம் இல்லை. சதுரகராதி தொகுத்த வீரமாமுனிவர், இந்தப் பட்டியலைத் தொகுத்திருக்கிறார். அவர் குறிப்பிடாத மேலும் சில சிற்றிலக்கியங்களை இலக்கண நூல்கள் குறிப்பிடுகின்றன. இந்த 96 பட்டியல் எங்கே கிடைக்கும் என நான் அலைந்தவாறு இருந்தேன், சந்தைக்குப் போன நாய் போல. தமிழ்நாட்டுப் பாடநூல் கழகம் தயாரித்து வழங்கியுள்ள மேல்நிலை இரண்டாம் ஆண்டு தமிழ்ப்பாடநூல் அந்தப் பட்டியலை எளிதாகத் தந்தது. அந்தப் பட்டியலை, ஒரு பதிவு கருதி இங்கு எடுத்தாள்கிறேன்.

1. சதகம்
2. பிள்ளைத் தமிழ்
3. பரணி
4. கலம்பகம்
5. அகப்பொருள் கோவை
6. ஐந்திணைச் செய்யுள்.
7. வருக்கக் கோவை
8. மும்மணிக் கோவை
9. அங்க மாலை
10. அட்ட மங்கலம்
11. அநுராக மாலை
12. இரட்டை மணிமாலை
13. இணை மணிமாலை
14. நவமணி மாலை
15. நான்மணி மாலை
16. நாம மாலை
17. பல சந்த மாலை
18. கலம்பக மாலை
19. மணிமாலை
20. புகழ்ச்சி மாலை
21. பெரு மகிழ்ச்சி மாலை
22. வருத்த மாலை
23. மெய்கீர்த்தி மாலை
24. காப்பு மாலை
25. வேனில் மாலை
26. வசந்த மாலை
27. தாரகை மாலை
28. உற்பவ மாலை
29. தானை மாலை
30. மும்மணிக் கோவை
31. தண்டக மாலை
32. வீர வெட்சி மாலை
33. வெற்றிக் கரந்தை மஞ்சரி
34. போர்க்கு எழு வஞ்சி
35. வரலாற்று வஞ்சி
36. செருக்கள வஞ்சி
37. காஞ்சி மாலை
38. நொச்சி மாலை
39. உழிஞை மாலை
40. தும்பை மாலை
41. வாகை மாலை
42. வதோரண மஞ்சரி
43. எண் செய்யுள்
44. தொகை நிலைச் செய்யுள்
45. ஒலியல் அந்தாதி
46. பதிற்று அந்தாதி
47. நூற்று அந்தாதி
48. உலா
49. உலா மடல்
50. வள மடல்
51. ஒரு பா ஒரு பஃது
52. இரு பா இரு பஃது
53. ஆற்றுப்படை
54. கண்படை நிலை
55. துயில் எடை நிலை
56. பெயர் இன்னிசை
57. ஊர் இன்னிசை
58. பெயர் நேரிசை
59. ஊர் நேரிசை
60. ஊர் வெண்பா
61. விளக்க நிலை
62. புற நிலை
63. கடை நிலை
64. கையறு நிலை
65. தசாங்கப் பத்து
66. தசாங்கத் தயல்
67. அரசன் விருத்தம்
68. நயனப் பத்து
69. பயோதரப் பத்து
70. பாதாதி கேசம்
71. கேசாதி பாதம்
72. அலங்காரப் பஞ்சகம்
73. கைக்கிளை
74. மங்கல வள்ளை
75. தூது
76. நாற்பது
77. குழமகன்
78. தாண்டகம்
79. பதிகம்
80. சதகம்
81. செவியறிவுறூஉ
82. வாயுறை வாழ்த்து
83. புறநிலை வாழ்த்து
84. பவனிக் காதல்
85. குறத்திப் பாட்டு
86. உழத்திப் பாட்டு
87. ஊசல்
88. எழுகூற்றிருக்கை
89. கடிகை வெண்பா
90. சின்னப் பூ
91. விருத்த இலக்கணம்
92. முது காஞ்சி
93. இயன்மொழி வாழ்த்து
94. பெரு மங்கலம்
95. பெருங்காப்பியம்
96. சிறு காப்பியம்.

மேற்கண்ட தொண்ணூற்று ஆறினுள், வகை மாதிரிக்காக, ஒரு நூலைப் பற்றியேனும் சிறு குறிப்பாவது நான் தந்திருக்க வேண்டும். இவற்றில் இலக்கணம் என்ன, பாவினம் என்ன, தன்மை என்ன, யார் மேல் இயற்றுவது எனும் கேள்விகளுக்குக் என்னிடம் விடை இல்லை. ஆய்வறிஞர்கள் தேடலாம்.

நமக்கென்ன பல்கலைக்கழக மானியமா வருகிறது! பல்கலைக் கழகங்களோ புளித்த காடியில் புழங்கிக் கொண்டிருக்கின்றனர்!நாமென்ன மகாமகோபாத்யாய உ.வே.சாமிநாத அய்யரா, சி.வை.தாமோதரம் பிள்ளையா? எனவே அந்த நச்சுப் பரிசோதனைக்கு நம்மை ஆட்படுத்திக்கொள்ள விருப்பமில்லை. மேலும் பணிகள் பல காத்தும் கிடக்கின்றன.

பிரபந்தம் எனும் சொல் வடசொல் எனச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. பெருங்காப்பியங்களின் உறுப்பாக அமைந்தவை பிற்காலத்தில் தனித்தனி இலக்கிய வகையாக உருவாகி, சிற்றிலக்கியங்கள் எனப் பெயர் பெற்றதாகக் கூறுகிறார்கள்.

மிகப் பிற்காலத்தில் செல்வாக்குப் பெற்றிருந்த இலக்கிய வகைகள் இவை என்பது ஆங்காங்கே நாம் கூறிவந்துள்ள புலவர்கள் பற்றிய காலம் குறித்த குறிப்புகள் உணர்த்தும். காலம்தான் பிற்காலமே ஒழிய, பாடிய புலவர் அனைவரும் தமிழ் செய்யுள் இயற்ற யாப்பு வல்லமை பெற்ற பளுவன்களாக இருந்துள்ளனர். திறமையான புலவர் ஒருவர் முதலில் ஒரு சிற்றிலக்கிய வகை பாடினார் எனில், பின்னால் பாடிய புலவர் அனைவருமே சலிக்கும் அளவுக்கு முதலில் பாடியவரை ஒற்றி எடுக்க முயன்றுள்ளனர். தனித்துவமும் ஆளுமையும் கற்பனை வளமும் தீவிரமும் உடைய சில புலவர் மட்டுமே அதில் அற்புதமான வெற்றி பெற்றுள்ளனர். மற்றவை எல்லாம் வகைக்கு ஒன்று வாசித்தால் போதும் என்ற அளவிலேயே உள்ளன. என்றாலும் ஒற்றி எடுத்துப் பாடிய புலவர்களின் இலக்கன ஆளுமை, செய்யுள் இயற்றும் திறன், மொழி வளம் இவற்றை நாம் குறைத்து மதிப்பிடுவதற்கு இல்லை.

என்றாலும் இந்த இரண்டாம் நிலைப் புலவர்களின் வர்ணணைகள், உவமைகள் யாவும் திகட்டும் அளவுக்குத் திரும்பத் திரும்பப் பேசப்படுகின்றன. இதனாலேயே பல சிற்றிலக்கியங்கள் முக்கியத்துவம் இழந்து போகும்; கால வெள்ளம் கரையேற்ற இயலாது போகும். தமிழனின் பொறுப்பற்ற தன்மையையும் சுயநலத்தையும் மூடத்தனத்தையும் அலட்சியத்தையும் வென்று தகுதியான சில காலம் கடந்தும் வாழும். மற்றவை நூலகங்களில் மட்கி மடியும். இதில் வருத்தப்பட்டு என்ன ஆகப்போகிறது?

‘உலா’ பாடும்போது, கடவுளைப் பாடினாலும் குறுநில மன்னரைப் பாடினாலும் நிலக்கிழாரைப் பாடினாலும் பெண்களையும் அவர்தம் ஏழு பருவத்தையும் எழு பருவத்தார் முலைகளையும் தொடைகளையும் பாடுவேன் என்று அடம் பிடிக்கும் தமிழ் புலமை மீது நமக்கு அருவருப்புத் தோன்றுகிறது. இது அழகைப் பாடுவது பற்றிய அருவருப்பு இல்லை, நோக்கம் பற்றியது.

பெரும்பாலும் பாடப்படுவோர், வயோதிகம் கொண்டு எழுந்து நடமாட இயலாத, ஆண்குறி என்ன என்று எழுந்து நின்று கேட்காத, கிழட்டு மனிதர்களாக இருந்திருக்க வேண்டும். அவர்களுக்கு நீலப்படம் காட்டப் பாடி இருக்கிறார்கள் பல புலவர்களும்.

சிறு அந்தரங்க சபையினரின் கிளுகிளுப்புக்காகப் பலவும் இயற்றப்பட்டுள்ளன போலத் தெரிகின்றன. அச்சுப் பதித்த மஞ்சள் புத்தகங்கள் வராத நிலையில், நீலப்படங்கள் தோன்றியிராத காலத்தில், செயலற்றுப் போன வயோதிகம் அசை துப்பும் பருவத்தில் குறுநில மன்னர்களையும் ஜமீன்தார்களையும் பாளையக்காரர்களையும் புலவர்கள் புகழ்ந்ததன் நோக்கம், தங்கம், வெள்ளி, நிலம் என்பது தெளிவு. இது ஒரு அவலம். அந்த அவலம் ஒருவகையில் இன்றைய தலைவர்களை சுயநலத்துக்காகவும் தரகுக்காகவும் புகழ்வதற்கு ஒப்பானது.

சிற்றிலக்கியங்களைத் தீர்மானமான வடிவ இலக்கணங்களுடன் அனைவருமே பாடியுள்ளனர். எனினும் மீறல்களும் இல்லாமல் இல்லை. படைப்பிலக்கியம் என்பதே மீறல்தானே!

(அடுத்த இதழில் நிறைவுறும்.)

player