கவிதைகள்

chess-homepage

பிறந்தநாள் வாழ்த்து
– சிவா கிருஷ்ணமூர்த்தி

நுரை புருவம் சுருக்கி
இடுங்கிய கண்களும்
இதற்காகவே வெட்டிய நடுங்கும் நக விரல்களுமாய்
குட்டி நோக்கியாவின் பொத்தானை நசுக்கி நசுக்கி
ஆர்ய வைத்திய சாலை எண்ணெய் வாசனையுடன்
வந்த எஸ்ஸெம்எஸ்தான்
கிடைத்த பரிசுகளிலேயே அபாரமானது
என்பது என்றாவது பேரனுக்குத் தெரியுமா?

—oOo—

காத்திருப்பு
– ச.அனுக்ரஹா

பகல் ஒரு பூச்சியாகி
கிரீச்சிட்டுக்கொண்டிருக்கிறது.
வேட்டைக்கார நட்சத்திரங்களும்
கிழக்கு வானிற்கு
வந்துவிட்டன.
நேரம், என்
விழிப்பைப்போல
நிலைத்துவிட்டது.
மிகவும் மெதுவாக,
நேர்கோட்டில்
சென்றுகொண்டிருந்த அது
நட்சத்திரங்களுக்கு
மிக அருகில்
செல்லும்போது,
என் எண்ணங்களை
சோழிகள் போல
சிதறடித்துச் செல்கிறது.
இந்த இரவு முடியும்
இன்னொரு உலகில்
நீ இன்னும்
வந்துகொண்டிருக்கிறாய்.

—oOo—

தீரா வண்ணத்தில் ஒரு மலரின் உருவம்
– தேனு

சுளீர் சுளீர் என இரைந்து கொண்டிருந்த
அறையின் மையத்தைச்
சுற்றிலும் நீண்டிருந்த கட்டங்கள்…
அழகானதொரு விளித்தலில்
பூதாகரமாய் துவங்குகிறது
களமறியாதோர் ஆட்டம்…

நகர்தலென்பது ஒரு அடியே எனினும்
தன்னைச் சுற்றிலும்
அரணமைத்துக் காத்திருக்கும்
உருவ பொம்மைகளின் வீழ்ச்சியிலும்
நிறையவில்லை
ஊன விழிகளால் காணத்தகும் இருள்.

உணர்ச்சி மிகுதலில்
காய்கள் வெள்ளையாயும் கருப்பாயும்
எதிரிலிருக்க சில்லு சில்லாய்
வெட்டி வீழ்த்தி நகர்கிறாள்
சதுரங்க விதிகளை
அடுத்தடுத்து உடைத்து.

கட்டங்களின் நிறம் அழிந்து
வாழ்க்கைச்சதுரங்கம் கனக்க,
சிகப்பு சாயத்தில் குளித்து
கருப்புமல்லாது வெள்ளையுமல்லாது
தனித்து நிற்கிறாள்
சதுரங்க ராணி.

chess-banner-600