ஆயிரம் தெய்வங்கள் – மரக்குதிரையும் ட்ரோஜன் படுகொலையும்

பகுதி 26

மரக்குதிரையும் ட்ரோஜன் படுகொலையும்

trojan_horse_400px

இலியத் போர் முடிவு மகாபாரதப் போர் முடிவு போல் உள்ளது. எவ்வாறு குருக்ஷேத்திரப் படுகொலைகள் விதியின் விளையாட்டு என்று போதிக்கப்படுகின்றனவோ, அவ்வாறே ட்ரோஜன் படுகொலைகளும் பேசப்படுகின்றன. ராமாயணத்தின் வரும் விபீஷணனைப் போன்றவர் இலியத்தின் ஹெலனஸ். இவன் உருவாக்கிய மரக்குதிரை இவனது குலத்தையே பூண்டோடு அழித்தது.

மாபெரும் மரக்குதிரையைச் செய்து அதை ட்ராய் கோட்டைக்குள் உள்ள எத்தினா கோயிலுக்கு வழங்குவதாக பொய்யுரைத்து அக்குதிரைக்குள் ஆயுதமேந்திய கிரேக்க வீரர்கள் ஒளிந்துகொண்டு, மிகவும் தந்திரமாக கோட்டை கதவைத் திறந்து ட்ரோஜன்களைக் கொல்லும் திட்டத்தை ஹெலனஸ் வழங்கினான். மனைவி ஹெலனை இழந்த மெனலாஸும் பாரிசின் மரணத்துக்குப்பின் அதே ஹெலனை மனைவியாக அடைய முடியாத ஹெலனஸும் நண்பர்களாகினர். இதுதான் விதி.

மரக்குதிரையைச் செய்து முடித்ததும் தாங்கள் போரில் தோற்றுவிட்டது போல் நடித்து அந்த மாபெரும் மரக்குதிரையை கடற்கரையில் விட்டுவிட்டு கப்பலில் ஏறிக் கொண்டு தங்கள் சொந்த ஊருக்குத் திரும்புவதாக நடித்தனர். சைனான் என்ற கிரேக்க ஒற்றன் மட்டும் தனித்து விடப்பட்டான்.

ட்ராய் கோட்டைக்கு வெளியே ஆடுகளை மேய்த்துத் திரிந்த இடையர்கள் சைனான் மீது சந்தேகம் கொண்டு மன்னனுடைய படைவீரர்களிடம் அவனை ஒப்படைத்தனர். ட்ரோஜன் வீரர்கள் சைனானை நையப் புடைத்து உண்மையை வரவழைக்க முயன்றனர். “நீ ஏன் கிரேக்கர்களுடன் திரும்பிச் செல்லாமல் இங்கு ஒளிந்து திரிகிறாய்?” என்ற கேள்விக்கு அவன் தன்னை ஏத்தினா தேவதைக்கு பலி கொடுக்க கிரேக்கர்கள் முடிவு செய்ததால் தான் தப்பி வந்து விட்டதாகப் பொய்யான விளக்கமளித்தான். “ஏன் இவ்வளவு பெரிய மரக்குதிரை செய்தார்கள்?” என்ற கேள்விக்கு ட்ரோஜன்கள் நம்பக்கூடிய மற்றொரு பொய்யுரையும் செய்தான். ஒடிஸ்ஸே ட்ராய் கோட்டைக்குள் புகுந்து ஏத்தினா சிலையைத் திருடியதால் தெய்வ குற்றத்துக்கு ஆளாகிவிட்டதால் அக்குற்றத்துக்குப் பரிகாரமாக குருமார்களின் யோசனைப்படி இந்த பெரிய மரக்குதிரையைச் செய்து ஏத்தினாவுக்கு அர்ப்பணிக்க முடிவு செய்தான் என்று சொன்னான் சைனான். ஆனால் அதை எடுத்து ட்ராய் கோட்டையில் உள்ள ஏத்தினா ஆலயத்தில் வைத்துவிட்டால் ட்ராய் கோட்டையை வெல்ல முடியாது என்று கருதி கடற்கரையில் குதிரையை வைத்துவிட்டு கிரேக்க வீரர்கள் கப்பலேறிச் சென்று விட்டதாகவும் விளக்கம் அளித்தான் அவன்.

சைனான் கூறுவது உண்மை அல்லவென்று அப்போல்லோ கோயில் பூசாரி லாவோக்கூன் தன் ட்ரோஜன் தளபதிகளிடம் கூறினான். மரக்குதிரையைக் கோட்டைக்குள் கொண்டு வந்தால் ஆபத்து என்று அறிவுறுத்திய லாவோக்கூன் எதுவும் பரிகாரம் செய்யலாம் என்றும் ஒரு யோசனை கூறினான். அதன்படி அப்போல்லோ தெய்வத்துக்கு யாகம் நிகழ்த்தப்பட்டது. ஆனால் அப்போல்லோ தெய்வமோ கிரேக்கர்களை ஆதரித்ததால் வேண்டுமென்றே கடலிலிருந்து இரண்டு அசுரப் பாம்புகளை ஏவிவிட்டு லாவோக்கூனையும் அவன் மகனையும் கொன்றது. இந்தக் காட்சியைக் கண்ட ட்ரோஜன் மன்ன ப்ரையம் பயந்து நடுங்கி மரக்குதிரையை ட்ராய் கோட்டைக்குள் செல்ல அனுமதித்தான். அம்மாபெரும் மரக்குதிரை தேரை ட்ரோஜன் வீரர்களே கோட்டைக்குள் இழுத்துச் சென்றனர். ட்ராய் கோட்டை வாயிலைவிட உயர்ந்ததாக நிர்மாணிக்கப்பட்ட அந்த மரக்குதிரை தேர்போல கோட்டை வாயிலை இடித்த வண்ணம் உள்ளே கொண்டு செல்லப்பட்டு, ஏத்தினா ஆலயத்துக்கு வெளியே நிறுத்தப்பட்டது.

நள்ளிரவில் அங்கு வந்த சைனான் மரக்குதிரையின் கதவுகளைத் திறந்து கிரேக்க வீரர்களை விடுவித்தான். வெளியே வந்த கிரேக்க வீரர்கள் ஒரு குழல்விளக்கு மூலம் கடற்கரையில் நின்றுகொண்டிருந்த கப்பலுக்கு சமிக்ஞை காட்டினர். நிஜக்குதிரையில் ஏறிவந்த கிரேக்க வீரர்கள் கோட்டைக்குள் நுழைந்து உறங்கிக் கொண்டிருந்த ட்ரோஜன் வீரர்களைக் கொன்று குவித்தனர். வஞ்சனையால் வென்ற கிரேக்கர்கள் செய்த படுகொலைகளை பாண்டவர்களுடன் ஒப்பிட முடியாது. ஒருகால் பாரதப்போரின் இறுதிக் கட்டத்தில் அசுவத்தாமனின் கொடூரமான பாண்டவப் படுகொலைகளுடன் வேண்டுமானால் ஒப்பிடலாம். நல்ல வேளையாக சுபத்ராவின் வயிற்றில் இருந்த பரீட்சித்தை பகவான் காப்பாற்றினார். இலியத் கதையிலும் அவ்வாறே ட்ராய் மன்னன ப்ரையாமின் மாப்பிள்ளை பாலிமென்ஸ்டர் மட்டுமே உயிர் தப்புகிறான்.

ட்ராய் அரண்மனைக்குள் நுழைந்த ஸ்பார்ட்டா மன்னன் மெனலாஸ் தனக்கு துரோகம் இழைத்த ஹெலனை வெட்ட வாளை ஓங்கியபோது அங்கே மின்னலென வந்த ஆஃப்ரோடைட் என்ற அழகு தெய்வம் ஹெலனைக் காப்பாற்றி தன்னுடன் அழைத்துக் கொண்டதாகவும் ஒரு கதை உண்டு.

ட்ராய் கோட்டைக்குள் புகுந்த
கிரேக்க வீரர்களின் கொலைவெறி தொடர்ந்தது. நியோட்டாலமஸ் மன்னன் ப்ரையாமைக் குத்திக் கொன்றான். தன்னைக் காப்பாற்றிக் கொள்ள மாப்பிள்ளை பாலிமென்ஸ்டர் கிரேக்கர்களுடன் சேர்ந்து கொண்டு பாரிஸின் தம்பியைக் கொன்றான். எஞ்சியிருந்த ஒரு வாரிசையும் கொன்றமைக்காக கிழட்டு ராணி ஹெக்குபா பாலிமென்ஸ்டரின் விழிகளைத் தோண்டி எடுத்தாள். கல்லால் அடிபட்டு ஹெக்குபா இறக்கிறாள். ப்ரையாமின் மகள் கஸாந்திரியாவைக் கொல்ல மனம் வராத ஆகாமெம்னான் அவளைத் தன் மனைவியாக்கிக் கொள்கிறான். ஆனால் அக்கிலஸ் விரும்பிய பாலிசேனாவை அக்கிலஸ் கொல்லப்பட்ட அதே இடத்தில் நிறுத்திக் கொலை செய்கிறான் ஆகாமெம்னான். ஹெக்டாரின் மனைவி ஆக்ரோமேக்கை நியோடாலமஸ் கொன்றான். ஹெக்டாரின் மகனை ஓடிஸ்ஸஸ் கொன்றான்.

ட்ராய் கோட்டை சூறையாடப்பட்டது. பொக்கிஷங்களையும் ஆபரணங்களையும் பங்கு போட்டுக் கொள்வதில் கிரேக்கர்கள் தங்களுக்குள் சண்டை போட்டுக் கொண்டனர். இதில் முக்கியமாக அக்கிலஸின் கவச குண்டல ஆயுதங்களைப் பங்கு பிரிப்பதில் ஒடிஸ்ஸஸுக்கும் அஜாக்ஸுக்கும் கடுமையான மோதல் ஏற்பட்டு இருவரும் கட்டிப்பிடித்து அடித்துக் கொண்டனர். இறுதியில் அக்கிலசின் தாய் தெத்தீஸ் முடிவை ட்ரோஜன் பிணைக்கைதிகள் முன்வைத்தாள். இருவரில் யார் போரில் வல்லவன் என்று கேட்டபோது ஒடிஸ்ஸஸ் என்று பதில் வரவே அவனுக்கே அந்த ஆயுதங்கள் வழங்கப்பட்டன. தோல்வியுற்ற அஜாக்ஸ் குடிவெறியில் கிரேக்கர்களுக்கு உணவு வழங்கும் சமையல்காரரைக் கொன்று விடுகிறான். காலையில் புத்தி தெளிந்ததும் தன்னைத் தானே நொந்து கொண்டு தற்கொலை செய்துகொள்கிறான் அவன்.

ட்ராய் வீரர்கள் – ,மன்னர் வாரிசுகள் படுகொலை செய்யப்பட்டவுடன், அதாவது கிரேக்க வெற்றியுடன் கதை முடிந்தபாடில்லை. இலியத்தின் இறுதி கட்டம், “மீட்சி”. ஏறத்தாழ மகாபாரதத்தின் சாந்தி பர்வம் போல் சுவையான கதை. பாவத்தின் சம்பளமாக பழிதீர்த்துக்கொண்ட கிரேக்க வீரர்களுக்கு ஏற்பட்ட பின்வினைகளை மீட்சி அல்லது மீட்பு விவரிக்கும். சமேத்ராஸ் தீவில் டார்டனஸ் ட்ராய் கோட்டையை நிர்மாணித்துவிட்டு அதற்கு, “குற்றங்களின் குன்று” என்று பெயர் சூட்டியபோதே அதன் எதிர்காலம் விதியால் நிர்மாணிக்கப்பட்டது என்று மீட்பில் உணர்த்தப்படுகிறது.

ட்ராய் படுகொலைக்கு பதிலடி பாசிடானின் மகன் நாப்னையஸ் வழங்கினான். ஜேசன் பயணித்த ஆர்கொஸ் கப்பலில் மாலுமியாக இருந்த நாப்னையஸ் ஜெசனின் வெற்றிக்கு உதவியவன். நாப்னையஸ் மகன் பாலமிடாஸ். ஒடிஸ்ஸஸ் தன் நண்பனாக இருந்த பாலமிடாஸ் மீது, புனிதமான ஆலயப் பொருட்களைத் திருடிச் சென்றதாக பழி சுமத்தினான் – சக கிரேக்க வீரர்கள் பாலமிடாஸைக் கல்லால் அடித்துக் கொன்றனர். தன் மகனின் மரணத்துக்கு பழி தீர்க்க நாப்னையஸ் துடித்தான்.

ட்ராய் வெற்றிக்குப்பின் கிரேக்க வீரர்கள் கப்பல்களில் தாயகம் திரும்பிக் கொண்டிருந்தனர். கப்பல்கள் யூபோயோ தீவுக்கு வந்தபோது நாப்னையஸ் நள்ளிரவில் தன் நண்பர்களுடன் கப்பல்களைத் தீயிட்டுக் கொளுத்தினான். அவற்றில் இருந்த கிரேக்க வீரர்களும் எரிந்து சாம்பலாயினர். ஆனால் மெனலாஸ், அகமெம்னான், ஒடிஸ்ஸஸ் மூவரும் ட்ராயில் தங்கிவிட்டதால் உயிர்தப்பினர். அவர்களை விதி வேறுவிதமாக தண்டித்தது.

ட்ராய் இளவரசி கஸ்ஸந்திராவின் மயக்கத்தில் இருந்த கிரேக்க தளபதியும் ஸ்பார்ட்டா மன்னனுமான அகாமெம்னான் போர் முடிந்தபின்னும் தாயகம் திரும்பாத காரணத்தைப் புரிந்து கொண்ட க்ளைமென்ஸ்ட்ரா தன் கணவன் அகாமெம்னானைக் கொல்லத் திட்டமிட்டாள். அவள் மாபெரும் சாகசக்காரி. அகாமெம்னான் காவலுக்கு வைத்த கிழவன் டிமிடோகஸ்ஸை ஏமாற்றிவிட்டு ஆர்கோஸ் மன்னன் எஜிஸ்தஸுடன் உறவு கொண்டிருந்தாள். அகாமெம்னான் ஸ்பார்ட்டா திரும்பியதும் க்ளைமென்ஸ்டிரா பிரிந்த சோகத்தை மனத்தில் காட்டிய வண்ணம் உட்புறம் ஊசிகள் பொருத்தப்பட்ட ஒரு மேலங்கியை வழங்கி அதை அணியச் சொன்னாள். அதை அணிந்து கொண்டதும் அவனது உடலில் ஊசிகள் குத்தின. அதை அவன் கழட்டி எறிய சிரமப்பட்ட வேளையில் வாளை வீசி அகாமெம்னான் தலையை வெட்டி வீசினாள்.

அகாமெம்னான் மகன் ஒரஸ்டஸ் குழந்தை. அக்கா எலக்ட்ரா அவனை ரகசியமாக வளர்த்தாள். அவன் பெரியவனானதும் அப்போல்லோவின் அருள் பெற்று எஜிஸ்தஸையும் துரோகமிழைத்த தாயையும் கொன்றுவிட்டு தெய்வங்களிடம் மன்னிப்பு கோரினான். அவன் கேட்டது இதுதான், “சகோதரக் கொலைகளுக்கு முற்றுப்புள்ளியே இல்லையா?”

இலியத் காவியத்தின் முடிவுக்கு வருமுன் அதன் துவக்கத்தை நினைவில் கொள்வோம். இலியத் காவியத்தின் கரு, சகோதரக் கொலைகள். அக்கேயனின் முன்னோர்களில் பிலாப்ஸ் நற்குணம் வாய்ந்த எலிஸ் மன்னன். கொடுங்கோலன் ஒயிநாமஸ் ரத ஓட்டம் என்ற பெயரில் இளைஞர்களைக் கொன்று வந்தான். ரத ஓட்டத்தில் வென்றால் இளவரசி ஹிப்போத்மியா. தோற்றால் மரணம்.ஹிப்போத்மியா தன் காதலன் பிலாஸ் வெற்றிபெற தன் தந்தையின் ரதத்தின் கடையாணியைக் கழட்டி மெழுகிலான கடையாணியைச் செருகினாள். கொடுங்கோல் மன்னன் கொல்லப்பட்டான். பிலாப்ஸ் – ஹிப்போத்மியாவுக்குப் பிறந்த அட்றீயஸும் தையிஸ்டஸும் ஓயாமல் சண்டை போட்டதால் பிலாப்ஸ் வெறுப்புற்றான். ஒருமுறை இருவருமாக இணைந்து தங்கள் ஒன்றுவிட சகோதரன் கிரிகிப்ஸைக் கொன்றபோது, “நீங்கள் பரம்பரை பரம்பரையாக சண்டை போட்டு செத்து ஒழியுங்கள்,” என்று சாபமிட்டதை தெய்வங்கள் ஆமோதித்தன. தேவசபையில் நீதிபதியாக விளங்கிய ஏத்தினா பிலாப்ஸின் சாபத்தை இதர தெய்வங்களின் பரிபூரண சம்மதத்துடன் திரும்பப் பெற்றாள்.

இத்துடன் இலியத் நிறைவு பெறுகிறது. மீண்டும் ஒடிஸ்ஸே தொடங்குகிறது. தான் செய்த அக்கிரமங்களுக்கு ஒடிஸ்ஸே பெற்ற தண்டனைகள் சுவாரசியமானவை. அவற்றை அடுத்த இதழில் கவனிப்போம்.