ராஜ் என்று எங்களால் அழைக்கப்படும் ராஜேஷ் படேல் கென்யாவில் பிறந்து இடி அமீன் காலத்தில் நாடு துரத்தப்பட்டு லண்டனில் வந்து குடியேறியவர்.கென்யாவில் அவர் இருந்தது அதிகபட்சம் ஐந்து வயது வரை தான். அதன் பின் முழுவதும் லண்டன் வாசம். அவரது தந்தை பிறந்த ஊரான சூரத்தை அவர் எப்பொழுதாவது செல்லும் இந்திய விடுமுறையில் காண்பதுடன் சரி. ஆனாலும் அவர் தன்னை ஒரு குஜராத்தியாகவே உணர்ந்து வாழ்ந்து வந்தார்.பேச்சு,நடை, உடை, பாவனை எல்லாம் ஒரு குஜராத்தி தான். நாற்பது வருடங்களுக்கு மேல் இங்கிலாந்தில் வாழ்ந்து, சைவ உணவை உண்டு, குஜராத் சென்று ஒரு பெண்ணைத் தேடிப் பிடித்து மணந்து,கோட்டும்,தொப்பியும் அணிந்து,ரோட்டில் தெரிந்தவர் யாரவது எதிர்பட்டால் அந்த தொப்பியை தூக்கி முன்னால் குனிந்து முகமன் கூறி,உடனே பருவ நிலையை பற்றியோ அல்லது ஃபுட்பால் பற்றியோ பேசத் தொடங்கும் ஆங்கிலோ குஜராத்தி. அவரது முன் வழுக்கையும், உருண்டையான உருவமும், தங்கச் சட்டம் உள்ள கண்ணாடியும் அவருக்கு எந்த ஒரு தமிழ் படத்திலும் கௌரவ வேடத்தை ஈட்டி தந்து விடும். என்ன உயரம் சற்றே கம்மி. நாலரை அடி.
இந்தியாவில் இருந்து ஒரு ஐ.டி கம்பனியின் மூலமாக லண்டனில் ஒரு செல்ஃபோன் கம்பெனியில் ப்ரோக்ராமிங் வேலைக்கு அமர்த்தபட்டிருக்கும் எனக்கும், என் போன்ற இன்னும் ஒரு நான்கு பேருக்கும் அவர் தான் மேலாளர். அந்த செல்ஃபோன் கம்பனியின் மிக முக்கியமான பொறுப்பில் அமர்த்தப்பட்டு இருந்தார்.அந்த கம்பனியின் மேல் மட்டத்துடன் பேசி, அவர்களின் தேவையை அறிந்து எங்களிடம் சொல்ல, அதை நிரலிகளாக மாற்றி தரும் பொறுப்பு எங்களுடையது. அவர் சொல்வதை நாங்கள் அப்படியே இந்தியாவில் என் போன்று இருக்கும் என் போன்ற சிலருக்கு அனுப்பி அது அங்குள்ளவர்களால் வடிவமைக்கப்பட்டு இங்கு திரும்பி வரும். திரும்ப வரும் நிரலிகளை சரி பார்த்து அதை அந்த செல் போன் கம்பனியின் இயங்கு தளத்தில் பொருத்தி,அவர்களுடைய வலைதள சேவையை மேம்படுத்துவது எங்கள் பொறுப்பு. இங்கு இருக்கும் ஒருவருக்கு சென்னையில் ஐந்து பேர் வீதம் என்று கணக்கு. சென்னையில் இருப்பவர்களுக்கு சம்பளம் குறைவு. ஆகவே செல்ஃபோன் கம்பெனிக்கு லாபம் அதிகம். இங்கு இருப்பவர்களுக்கு சம்பளம் அதிகம். ஆனால் லண்டன் கிளையிலும் சிலர் இருந்தே ஆக வேண்டும். இல்லையேல் வேலை நடக்காது.
ராஜ் கீழே இரண்டு வெள்ளையர்கள் வேலை செய்து வந்த போதிலும் அவர் மதியம் எப்பொழுதும் எங்களுடனே சாப்பிட வந்தார். ஒவ்வொரு மதியமும் சரியாக ஒரு மணிக்கு எங்கள் மேஜை அருகே வந்து ‘கமான் இட்ஸ் லஞ்ச் டைம்,’ என்று முட்டியை மடித்து, தொந்தியை அசைத்து அவர் சொல்வது எங்களுக்குச் சிரிப்பை வரவழைப்பதாகவே இருந்தது. சோனலும்,ராதிகாவும் அந்த அசைவிற்கு ஒவ்வொரு முறையும் தேவைக்கு அதிகமாக சிரிப்பது போல் தோன்றும். சோனல் பஞ்சாபை சேர்ந்தவள். மிடுக்கும், தோரணையும் கூடியவள். ராதிகாவின் கணவர் லண்டனில் மேற்படிப்பு படித்து வந்தார். அதற்கான பணம் ராதிகாவின் லண்டன் வேலையில் இருந்து சென்று கொண்டிருந்தது. ஆக ராதிகா லண்டனில் இருந்து சம்பாதித்தாக வேண்டிய கட்டாயம்.எங்கு உடனடியாக இந்தியா அனுப்பி விடுவார்களோ என்ற நிரந்தர அச்சத்தில் வாழ்பவள். அதனால் அவள் சற்று அதிகமாக சிரித்து ராஜை மகிழ்விக்க நினைத்ததில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை.
ராஜ் உடனான இந்த மதிய உணவு பரஸ்பரம் இந்தியா பற்றியும் இங்கிலாந்து பற்றியும் ஒருவருக்கொருவர் தகவல்களை பரிமாறிக்கொள்ளும் ஒரு நிகழ்வாகவே இருந்தது. இந்தியா ஷைனிங் என்பது அவர் அடிக்கடி உபயோகிக்கும் ஒரு தொடர். ’நீங்கள் ஏன் இந்தியாவில் ஒரு வியாபாரம் தொடங்க கூடாது? இங்க வந்து ஏன் கஷ்டப்பட வேண்டும்’ என்ற கேள்விக்கு நாங்கள் தினந்தோறும் பதில் சொல்லிக் கொண்டிருந்தோம்.எங்கள் உரையாடல்கள் எப்பொழுதும் அவரை மையம் கொண்டதாகவே இருக்கும். ஒன்று, அவர் வயதின் காரணமாக அவருக்கு அந்த முக்கியத்துவம் இருந்தது. இரண்டாவது, எங்கள் நிறுவனத்திடம் எங்களைப் பற்றிப் புகார் கூறி, எங்களை மறுபடி இந்தியாவிற்குக் கூட அனுப்பும் சக்தி அவருக்கு இருந்தது என்றும் நாங்கள் அறிந்திருந்தோம். என்னுடன் வந்த பழனிச்சாமி திடீரென்று ஒரு நாள் திரும்ப அனுப்பபட்டான். அதற்கு ராஜ் தான் காரணம் என்று ராதிகா என்னிடமும் சோனலிடமும் சொல்லிக் கொண்டே இருப்பாள். அதன் பின் ராஜின் நகைச்சுவைகளை அவள் இன்னும் அதிகமாக சிரித்து வியந்தது போல் தோன்றியது. அவள் பயம் அவளுக்கு. ராஜ் என்றும் போல் இருந்தார். தொந்தியை அசைத்து, முட்டியை மடக்கி, இட்ஸ் லஞ்ச் டைம் என்று.
அவருக்கு மூன்று பெண்கள். பதினான்கு, பத்து மற்றும் எட்டு வயதுகளில். எனக்கு பெண் குழந்தை பிறந்த போது மிகுந்த மகிழ்ச்சியுடன் வாழ்த்து சொன்னார். பெண் குழந்தை ஒரு வரம் என்று அவ்வபோது என்னிடம் மட்டும் சொல்லிவிட்டு போவார் .ஒரு முறை ஆபிஸ் பார்ட்டியில் அவர் பெண்களை பார்த்தேன். இருவர் மட்டுமே அன்று இருந்தனர். அவர்கள் அப்பா சொல்வதற்கெல்லாம் எதிர்ப் பேச்சு பேசியபடியே. ”அது அப்படி இல்லை, அம்மா,” என்று இவரும் எடுத்துச் சொல்லிக் கொண்டிருப்பார். இரண்டாவது குழந்தை எப்போது என்று எப்போதாவது என்னிடம் கேட்பார். பின்னர், சீக்கிரம் ஒன்று பெற்று கொள்,உங்கள் காலத்திற்குப் பின்னும் உன் பெண்ணிற்கு ஒரு துணை வேண்டாமா என்பார். இந்தியாவா, இங்கிலாந்தா என்ற பேச்சு வரும் போதெல்லாம், அவர் என்னை உன் பெண்ணிற்கு விவரம் தெரியும் முன் இந்தியாவிற்குச் சென்று விடு என்பார். “இதோ பார். நீ எவ்வளவு முயற்சி செய்தாலும் இவர்கள் உன்னை ஒரு சக ப்ரிட்டிஷ்காரனாக ஏற்று கொள்ளப் போவதில்லை. இவர்கள் கண்ணில் எப்போதும் நீ ஒரு மூன்றாம் உலக நாட்டுக்காரன் தான். உன் பெண்ணின் நிலையை யோசித்துப் பார்த்தாயா? நம் குழந்தைகள் இரு பக்கத்திலும் இல்லாமல் ஒரு நிரந்தர ஊசலில்தான் இருந்து கொண்டிருக்- கிறார்கள். என் போன்றவர்களின் பெரிய பயம் என்ன என்று உனக்கு தெரியுமா என்று அந்த சாப்பாட்டு மேஜையில் சற்றே முன்னே வந்து என் கண்களைப் பார்த்து கேட்டார். என் பெண் ஒரு ஆங்கிலேயனையோ ஒரு ஆப்பிரிக்கனையோ மணம் செய்து கொண்டு விடுவது தான். அதையே நான் என் வாழ்க்கையின் பெரிய பயமாக நினைக்கிறேன். அந்த நாளும் அந்த வார்த்தைகளும் நெடு நாட்கள் வரை என் நினைவில் இருந்து மறைந்து போயிற்று. பின் பல வருடங்கள் கழித்து அவர் முதல் பெண் ஒரு பிரிட்டிஷ் பாக்கிஸ்தானியனை திருமணம் செய்து கொண்ட செய்தி கேள்வி படும் வரை.
இந்தப் பேச்சுக்கள் நடந்து பின் சில மாதங்கள் கழித்து ராதிகாவின் பொறுப்பில் இருந்த ப்ரொஜெக்டில் பெரிய குளறுபடி ஒன்று ஏற்பட்டு அதனால் எங்கள் நிறுவனத்திற்கும் அந்த செல் ஃபோன் கம்பனிக்கும் பெரிய இழப்பு ஏற்பட்டது. ராதிகா முகம் சில நாட்களுக்குப் பேய் அறைந்தது போல் இருந்தது. அந்த தவறுக்கு அவள் இந்தியாவிற்கு மீண்டும் அனுப்பப்படுவாள் என்று பரவலாக பேசப்பட்டது. ராஜ் எங்களுடன் மதிய உணவிற்கு வருவதை நிறுத்தினார். மிகுந்த சோர்வுடன் சென்று கொண்டிருந்த தினங்கள் அவை. குறிப்பாக ராதிகாவிற்கு.
அந்த நாட்களில் ஒரு மழை நாள் இரவில், அருகில் இருந்த ஒரு பப்பில் நாங்கள் கூடும் ஒரு வாய்ப்பு அமைந்தது. எங்களுடன் சேர்த்து மற்ற டீமில் இருந்த சிலரும் வந்திருந்தனர். சில வெள்ளையர்களும். அன்று பீரும் வைனும் விஸ்கியும் வழிந்தோடியது. சோனல் அவள் அளவில் நிறுத்தி கொண்டாள். நான் ராதிகாவை கவனித்து கொண்டிருந்தேன். அவள் அமர்ந்திருந்தது ராஜின் மிக அருகே. நிறைய குடித்து கொண்டிருந்தாள்.எனக்கும் சற்று அதிகமாகி விட்டது. அந்த இருட்டிற்க்கும் மிதமான வெளிச்சத்திற்கும். ஆமாம், நான் பார்ப்பது சரிதானா. ராதிகா ராஜ் அருகில் அமர்ந்து அவர் காதுகளில் சென்று மெதுவாகப் பேசிக் கொண்டிருந்தாள். அவள் முழங்கைகள் ராஜினுடயதை அவ்வபோது உரசி சென்றன. தலையை உதறினேன். அவர் சொல்லும் நகைச்சுவைக்கு அவர் முகத்தின் மிக அருகே சென்று சிரித்தாள். அவள் கை எங்கே? ராஜ் தொடை கால்களிலா இருக்கிறது? என்ன செய்கிறாள் இவள்? நான் சோனலை பார்த்தேன். அவளும் புரிந்தது போல் என்னை பார்த்தாள். ஒன்று போதை அதிகமாயிருக்க வேண்டும் இல்லை அவள் இந்திய போவதைத் தள்ளி வைக்க ராஜ் மூலமாக எதோ முயற்சி செய்கிறாள். அடிப்பாவி. உனக்கு ஏன் இப்படி. நீ என்ன செய்கிறாய். உன் பணத் தேவை, நீ இங்கு இருந்து ஆக வேண்டிய கட்டாயம் நான் அறியாதது இல்லை. வேலைக்கு சென்று எங்களைப் படிக்க வைத்தாள் என் அம்மா. காலை ஏழு மணிக்கெலாம் பேருந்து பிடிக்க ஓடுவாயே…இரவு ஏழு மணிக்கு திரும்பி வந்து சமைத்து, சுத்தம் செய்து, பாடம் சொல்லி கொடுத்து, பின் மறுநாள் காலையில் ஐந்து மணி..இப்படியாக எத்தனை வருடங்கள். எத்தனை மேலாளர்கள்..எவ்வளவு அவமானங்கள்.தாயே நீ என்ன செய்கிறாய்..
இப்படியாக சென்று கொண்டிருந்த எதோ ஒரு கணத்தில் ராஜ் “சரி நாம் இதோடு முடித்துக் கொள்ளலாமா என்று எல்லோரையும் நோக்கி சத்தமாக கேட்டார். இதற்குள் ராதிகா சற்றே அதிகமாகி நிலை தவறி அவர் தோள்களில் முழுவதுமாக சாய்ந்து விட்டாள். அப்போது ராஜ் டீமில் வேலை பார்த்த வெள்ளையன் ஒருவன் அருகே இருப்பவர்கள் மட்டும் கேட்குமாறு அசிங்கமாக எதோ சொல்ல, ‘வாயை மூடு’ என்ற அவரது குரல் அந்த சூழலின் சத்தத்தை மீறி ஒலித்தது. பின் அவர் ராதிகாவை வீட்டிற்கு கொண்டு செல்லும் படி சோனலிடம் சொன்னார். நாங்கள் நால்வருமாக அருகில் இருந்த பஸ்ஸ்டாண்ட் வரை நடந்து சென்றோம். ராஜ் அவருடைய சின்ன உருவத்தால் ராதிகாவைக் தாங்கி கொண்டு கால்களை இழுத்து இழுத்து சென்று கொண்டிருந்தார். ராதிகாவால் சில அடிகளுக்கு மேல் நடக்க முடியவில்லை. எங்களை டாக்ஸி பிடித்து கொண்டு வர சொல்லி அவர் ராதிகாவை அங்கு இருந்த ஒரு இருக்கையில் அமர்த்தி கொண்டார்.நாங்கள் அலைந்து திரிந்து டாக்ஸி கொண்டு வர அரை மணி நேரம் மேல் ஆனது. நாங்கள் வரும் போது தூரத்திலிருந்து முழுவதும் இருட்டு நிறைந்த அந்த சூழலில் இவர்கள் இருக்கையின் மேல் மட்டும் ஒரு விளக்கு இருந்தது. அவள் முற்றிலும் நினைவில்லாமல் ராஜின் மடி மீது படுத்து கொண்டிருந்தாள். அவர் அவள் உச்சந்தலையில் கை வைத்தவாறு வானத்தில் அண்ணாந்து பார்த்து உட்கார்ந்திருந்தார்.சோனல் என்னை பார்த்து புன்னகைத்தாள். நாங்கள் ஒரு தந்தையை கண்டு கொண்டிருந்தோம்.